வீண் வதந்தி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 3, 2024
பார்வையிட்டோர்: 455 
 
 

இந்த யுத்த காலத்தில் எத்தனையோ ஆச்சரிய சம்பவங்கள் நடைபெறுகின்றன. அப்படிப்பட்ட ஆச்சரியங்களில் சென்னைப் பட்டணத்தில் எழும்பூர் ‘ஸ்பர்டாங்க்’ ரோடிலிருந்த ஒரு வீடு ஒன்றரை வருஷ காலமாகப் பூட்டிக் கிடந்ததும் ஒன்றாகும். குடியிருக்க வீடு கிடைக்குமா என்று எத்தனையோ பேர் திண்டாடித் தெருவில் நிற்கும் இந்த நாளில் மேற்படி வீட்டுக்கு யாருமே குடிவராமல் இருந்தது பெரிய ஆச்சரியமே யல்லவா? இதற்குக் காரணம் ஒரு மர்மமாகவே இருந்தது. எத்தனையோ பேர் மேற்படி வீட்டைப் பார்க்க வருவதும் கட்டிடத்தின் அமைப்பையும், அதைச் சுற்றியிருந்த தோட்டத்தின் அழகையும் கண்டு மயங்கிப் போவதும், கடைசியில் ஏதோ ஒரு விஷயத்தைக் கேட்டு விட்டு, ”நமக்கு வேண்டாம் இந்த வீடு என்று சொல்லிவிட்டுப் போவதும் வழக்கமாயிருந்தது.

வீடு பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமாய் இருந்தது. சிமெண்டு கட்டிடம். கட்டிடத்தைச் சுற்றிப் பெரிய காம்பவுண்டு; காம்பவுண்டுக்குள்ளிருந்த வேப்ப மரங்களும், புஷ்பச் செடிகளும் முல்லைக் கொடிகளும் நந்தவனம் போல் காட்சி யளித்தன.

இந்த வீட்டுக்கு எதிரில் கூப்பிடு தூரத்தில் இன்னொரு வீடு இருந்தது. அதில் குடியிருந்தவர்களுக்குக் கூட இந்த வீட்டைப் பற்றிய மர்மம் வெகு நாள் வரை இன்னதென்று விளங்கவில்லை. அந்த எதிர்வீட்டுக் குடும்பத்தில் வயது வந்த பெண்கள் மூவரும், ஒரு சிறு பெண்ணும், அவர்களுடைய தாய் தகப்பனும் இருந்தார்கள்.


ஒரு நாள் சாயந்திரம் திடுதிப்பென்று, பூட்டியிருந்த வீட்டு வாசலில் ஒரு ‘டாக்ஸி’ வந்து நின்றது. எதிர் வீட்டில் கார் வந்து நிற்பதைக் கண்ட அந்தச் சிறு பெண் பத்மா ஆச்சரியம் தாங்காமல் தன் வீட்டுக்குள் ஓடிப்போய், “அம்மா, அக்கா, எதிர் வீட்டுக்கு யாரோ வந்திருக்கா!” என்று கண்களை அகல விழித்துக் கூறினாள்.

“எதிர் வீட்டுக்கா?” என்று ஆச்சரியம் தாங்காமல் கேட்டுக் கொண்டே பத்மாவின் தாயாரும் சகோதரிகளும் சமையல் கட்டிலிருந்து ரேழி அறை ஜன்னல் பக்கம் ஓடி வந்து எதிர் வீட்டைக் கூர்ந்து கவனித்தார்கள்.

‘டாக்ஸி ‘யிலிருந்து இளம் தம்பதிகள் இருவர் இறங்கிச் சென்றார்கள். அவர்கள் பின்னோடு ஒரு பெட்டி; ஒரு படுக்கை, ரயில் கூஜா, பழக்கூடை இன்னும் சில வெள்ளிப்பாத்திரங்கள் எல்லாம் கீழே எடுத்து வைக்கப்பட்டன. டாக்ஸியிலிருந்து இறங்கிய வாலிபன் நாகரிமாக இருந்தான். மணிபர்ஸைத் திறந்து ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து உரைவரிடம் கொடுத்தான். இதற்குள் அவனுடன் வத்திருந்த யுவதி வீட்டுக் கதவைத் திறந்தாள்.

ஜன்னலருகில் நின்றபடியே இதை யெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த சகோதரிகள், வந்தவள் கட்டிக் கொண்டிருந்த புடவையின் கலர், கையில் எத்தனை வளை, தலை வகிடு நேரா கோணலா, காலில் அணிந்திருந்தது ஸ்லிப்பரா, பூட்ஸா முதலிய நுணுக்கமான அத்தனை விவரங்களையும் அதற்குள் பார்த்து வைத்துக் கொண்டார்கள். டாக்ஸியிலிருந்து இறங்கிய சாமான்கள் என்னென்ன என்பதை ஒரு சகோதரி ஜாபிதா போட்டு வைத்துக் கொண்டாள். பழக்கூடையில் என்ன இருக்கலாம் என்று பத்மா யோசித்தாள். ஒன்றரை வருஷ காலமாய்ப் பூட்டிக் கிடந்த அந்த வீட்டைப் பற்றின மர்மமே சரியாய் விளங்காம லிருக்கும் போது, இந்தப் புதுத் தம்பதிகள் அதற்குக் குடி வந்திருக்கிற விஷயம் மேலும் அவர்களுக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணிற்று.

பத்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. இத்தனை நாளாக அவள் தினமும் பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் வராததுமாய், அம்மா கொடுக்கும் காப்பியை அருந்தி விட்டு எதிர் வீட்டுத் தோட்டத்தில் போய் ஆனந்தமாகப் பொழுதைப் போக்கி வந்தாள். அந்தத் தோட்டத்தில் அடர்ந்து வளர்ந்திருந்த பசும் புற்களின் மீது படுத்துக் கொண்டே வானத்தில் நட்சத்திரங்கள் தோன்றும் வரை விளையாடி விட்டு வீட்டுக்குத் திரும்பி வருவாள். ஒரு நாள் அவளுடைய தாயார் “அடி பத்மா, இனி நீ எதிர் வீட்டுத் தோட்டத்துக்கு விளையாடப் போனால் விளக்கு வைப்பதற்குள் திரும்பி வந்து விட வேண்டும்; தெரியுமா? அந்த வீட்டில் பிசாசு இருக்கிறதாம்” என்று பயமுறுத்தி வைத்திருந்தாள். அது முதல் பத்மா பிசாசுக்குப் பயந்து கொண்டு மஞ்சள் வெயில் மறையு முன்பே வீட்டுக்குத் திரும்பி வந்து விடுவாள்.

இப்படி இருக்கும் போது திடீரென்று அந்தப் பிசாசு இருக்கிற இடத்துக்கு யாரோ இளம் தம்பதிகள் குடி வந்த விஷயம் பத்மாவின் களங்க மற்ற இளம் மனதை என்னமோ செய்து கொண்டிருந்தது.


மணி ஒன்பது அடித்து வெகு நேரம் வரை பத்மாவின் சதோதரிகளுக்கு இருப்புக் கொள்ளவே இல்லை. ஜன்னலை விட்டு நகராமல் எதிர் வீட்டு விவகாரங்களையே சினிமா பார்ப்பது போல் இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வெகு நாளாய் அந்தகாரத்தில் கிடந்த அந்த வீடு இன்று மின்சார வெளிச்சத்தினால் பிரகாசமாய்க் காட்சி அளித்தது. வாசல் ஜன்னல்கள் இரண்டும் திரை போட்டு மூடியிருந்ததால் தம்பதிகளின் நடவடிக்கைகளைச் சரியாகக் கவனிக்க முடியவில்லை. இருந்தாலும் மெல்லிய திரைக்குப் பின்னால் அவ்விருவரு டைய நிழல் அடிக்கடி தென்பட்டன. அதற்கு மேல் சகோதரிகளால் ஒன்றும் கவனிக்க முடியவில்லை.

மறுநாள் சகோதரிகள் பொழுது புலர்வதற் குள்ளாக எழுந்திருந்து எதிர் வீட்டை கவனிக்க ஆரம்பித்து விட்டனர். பத்மாவுக்கு வந்திருப்பவர் களைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருந்தது. ஆனால், அம்மா அந்த வீட்டுப் பக்கம் இனி காலடி எடுத்து வைக்கக் கூடாது என்று கண்டிப்பாக உத்தரவு போட்டிருந்தாள். “அம்மாவுக்குத் தெரியாமல் எப்படிப் போவது? போனால் அம்மா கோபித்துக் கொள்வாளோ” என்று பயந்தாள். காலை மணி ஏழரை இருக்கும். மொட்டை மாடி மீது இருந்த கம்பிக் கொடியில் முதல் நாள் காரில் வந்த யுவதி உடுத்திக் கொண்டிருந்த மேக வர்ணப் பட்டுப் புடவை காயப் போட்டிருந்தது. இதை சகோதரிகள் மூவரும் கவனித்தனர். ஆனால் அந்த யுவதியை மட்டும் கண்ணில் காணவே யில்லை.

புதுத் தம்பதிகள் குடி வந்து வாரம் ஒன்று ஆகியும் அவர்களைப் பற்றிய விவரம் சகோதரிகளுக்கும் அவள் தயாருக்கும் தெரியவே யில்லை. பார்ப்பதற்கு நாகரிகத் தோற்றம் கொண்ட அவர்கள் கொஞ்சம் பணமுள்ளவர்கள் என்றும் தோன்றியது. அந்த யுவதி பட்டுப் புடவையைத் தவிர்த்து வேறு புடவை கட்டுவதில்லை என்பது தினம் ஒரு பட்டுப் புடவையாக மொட்டை மாடிக் கொடியில் உலர்ந்து கொண்டிருப்பதிலிருந்து தெரிந்தது. ஆனால், அந்தஸ்தான வாழ்க்கை நடத்தும் அந்த இளம் தம்பதிகள் வீட்டு வேலை செய்ய ஒரு வேலைக்காரியை அமர்த்திக் கொள்ளாததேன்? எல்லா வேலைகளையும் அவனே அல்லவா செய்து கொண்டிருக்கிறான்? சில சமயம் அவனே மேல் மாடியில் புடவைகளைக் கொண்டு போய் உலர்த்துவான். அக்கம்பக்கத்திலிருந்து யாராவது கவனிப்பார்களே என்ற சங்கோசமில்லாமல் துடைப்பத்தை வைத்துக் கொண்டு வாசல் வராந்தாவைப் பெருக்குவான். விறகுக் கட்டைகளை ஏதோ புஷ்பங்களை வாரிச் செல்வது போல் நினைத்துக் கொண்டு பெருமையோடு எடுத்துப் போவான்.

சகோதரிகளுடைய ஆச்சரியத்துக்கு இதெல்லாம் மேலும் மேலும் உரம் போட்டது போல் இருந்தது. அந்த யுவதி வாசல் பக்கம் வருவாளா, அல் லது ஜன்னல் பக்கமாவது வந்து எட்டிப் பார்ப்பாளா என்று சதா எதிர்வீட்டை கவனிப்பதிலேயே அவர்கள் பொழுதை வீணாக்கினார்கள். ஊரிலிருந்து வந்த அன்று காரிலிருந்து இறங்கி வீட்டுக்குள் சென்றவளை அப்புறம் கண்ணால் காண்பதே அரிதாகி விட்டது. இதில் ஏதேனும் இரகசியம் இருக்குமோ? எல்லாம் ஒரே மூடு மந்திரமாக இருக்கிறதே என்று சகோதரிகளும் அவர்களுடைய தாயாரும் வியந்தனர். தங்கள் வீட்டுக்குப் பால் கொடுக்கும். அதே பால்காரிதான் அவர்களுடைய வீட்டுக்கும் வாடிக்கை வைத்துக் கொண்டிருந்தாள். எனவே, சகோதரிகள் பால்காரி மூலம் விவரம் அறிய முயற்சி தொடங்கினர். பால்காரிக்கும் ஏற்கெனவே அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசை யிருந்ததால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த யுவதியின் வாயிலிருந்து வார்த்தைகளை வரவழைக்க மிகவும் பிரயத்தனப்பட்டாள்.

ஒரு நாள் பால்காரி சகோதரிகளிடம் வந்து, தினமும் அந்த அம்மாள். காலையில் எருமைப் பாலும் சாயந்திரம் பசும்பாலும் வாங்குவதாகச் சேதி சொன்னாள். இந்த விவரத்துக்கு மேல் பால் காரியால் ஒன்றும் கூற முடியவில்லை. இதிலிருந்து சகோதரிகள் என்னத்தை ஊகித்தறிவது?

“எந்த ஊர் என்று கேட்டாயோ?” என்று பத்மாவின் தாயார் ஆவலோடு விசாரித்தாள்.

“திருச்சினாப்பள்ளியாம்!’ என்று பால்காரி பதில் கூறினாள்.

“அவளுக்குத் தாயார், தகப்பனார் இருக்கிறார்களா ?”

‘அது எனக்குத் தெரியாதம்மா; கேட்டால் ஒன்றும் பதிலே பேசுவதில்லை. பேச்சு ரொம்ப ரொம்பக் கணக்காயிருக்கு” என்றாள் பால்காரி.

நாளடைவில் எதிர் வீட்டுத் தம்பதிகளின் மீது பத்மாவின் தாயாருக்குச் சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது. அதற்குத் தகுந்தாற்போல் இவளுடைய காதில் பராபரியாய் ஒரு சேதியும் விழுந்தது. அந்தச் சேதி இதுதான் :

“திருச்சினாப்பள்ளியில் ரங்கசாமி ஐயங்கார் என்றொரு ரிடயர்டு வக்கீல் இருக்கிறார். அவருக்கு இரண்டு பெண்கள். இரண்டு பெண்களும் காலேஜில் படித்தவர்கள். அந்தப் பெண்களில் ஒருவள் தான் இப்போது எதிர் வீட்டுக்குக் குடி வந்திருக்கிறாள். இவள் காலேஜில் வாசித்துக் கொண்டிருந்த போது ஒருவனைக் காதலித்துக் கொண்டிருந்தாள். அவனையேதான் – கல்யாணம் செய்து கொள்வேன் என்று பெற்றோரிடம் பிடி வாதம் பிடித்தாள். குலம் கோத்திரம் சரியாயில்லாதலால் அதற்கு இவளுடைய பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை. கடைசியாக இவள் ஒரு நாள் அவனுடன் புறப்பட்டு ஓடிவந்து விட்டாள். அதற்கப்புறம் இவர்களுடைய அப்பாவும் அம்மாவும் இவளுக்கு ஒரு முழுக்குப் போட்டு விட்டு ‘இனி இவள் முகத்தில் விழிப்பதில்லை’ என்று தீர்மானம் செய்து விட்டார்கள். அதனால் தான் இவள் அவனுடன் புறப்பட்டு கண்ணுக்கு மறைவாய் வந்து காலம் கழிக்கிறாள். அவனுக்கு ரேஸ் பைத்தியம், குடிப் பழக்கம் எல்லாம் உண்டு.”

இந்தச் சேதியை பத்மாவின் தாயாருக்கு அடுத்த தெருவிலிருக்கும் அவளுடைய சிநேகிதை சொன்னாளாம். அந்தச் சேதியை பத்மாவின் தாயார் தன்னுடைய பெண்களிடம் வந்து அஞ்சல் செய்தாள்.

“ஓகோ! அதனால் தான் அவள் அப்படி வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து கொண்டு அஞ்ஞாத வாசம் செய்கிறாளா? என்னடியம்மா என்று பார்த்தேன்!” என்றாள் ஒரு சகோதரி.

“சரிதான்; இருக்கும், இருக்கும். அவன் ரேஸுக்குத்தான் போகிறான். ரேஸ் நடக்கும் தினங்களிலெல்லாம் அவன் ஒழுங்காக டிரஸ் செய்து கொண்டு வெளியே கிளம்பும் போதே எனக்குச் சந்தேகம் தான்” என்றாள் இன்னொருவள்.

“அப்படியானால் மற்ற நாட்களிலெல்லாம் அவன் எங்கே போகிறான்?” என்று கேட்டாள் ஒருத்தி.

“அதுவா? குடிக்கப் போவான். இல்லாவிட் டால், எங்கேயாவது போய் கிளப்பில் சீட்டாடிக் கொண்டிருப்பான். யார் கண்டார்கள் ?” என்று மற்றொறாவள் பதில் கூறினாள்.

“ஆமாம்; உங்க அப்பா கூட அவனை ஒரு நாள் கிளப்பில் கண்டாராம். சற்று நேரம் அவனும் இவரும் உற்றுப் பார்த்துக் கொண்டார்களாம். ஆனால், ஒன்றும் பேசவில்லையாம் ” என்றாள் தாயார்.

“நீ சொன்ன கதை நிஜமாய்த்தான் இருக்கும் அம்மா! அவள் அவனை இழுத்துக் கொண்டு வந்தவள் தான் ” என்று மூன்று சகோதரிகளும் ஏகமனதாக முடிவுக்கு வந்து தங்கள் சந்தேகத்துக்கு ஒரு முத்தாய்ப்பு, வைத்தார்கள்.


பத்து வயதுகூட நிரம்பாத பத்மாவுக்குத் தன்னுடைய தாயாரும் சகோதரிகளும் பேசிக் கொண்ட விஷயம் இன்னதென்றே விளங்கவில்லை. அவள் உலகம் அறியாதவள் தானே? ஆனால், இவர்களெல்லாம் எதிர் வீட்டு மாமிப் பற்றி ஏதோ ஏளனமாகப் பேசிக் கொள்கிறார்கள் என்று மட்டும் தெரிந்து கொண்டாள்.

எப்படியாவது அவளுக்கு எதிர் வீட்டுக்குப் போய் அந்த மாமியுடன் பேசிவிட்டு வரவேண்டும் போலிருந்தது. ஒருநாள் யாருக்கும் தெரியாமல் அந்த வீட்டுக்குப் போனாள். வாசல் கதவருகில் போய் நின்றுகொண்டு கதவைத் தட்டலாமா என்று யோசித்தாள். மார்பு படபட வென்று அடித்துக் கொண்டது. இரண்டு தடவை மெதுவாகத் தட்டினாள். உள்ளே யிருந்து அவள் வந்தாள். வந்தவள் முத்துப் போன்ற தன் பற்களைக் காட்டிச் சிரித்து விட்டு குழந்தை பத்மாவின் கன்னத்தைக் கிள்ளி, “உள்ளே வா !” என்று அன்போடு அழைத்தாள். பத்மாவுக்கு லஜ்ஜை வந்து முகத்தைக் கவ்விக் கொண்டது. அந்த மாமியிடம் என்ன பேசுவதென்று தெரியவில்லை. திரும்பி ஓட்டமாய் ஓடியே வந்து விட்டாள். அப்புறம் இரண்டு மூன்று தடவை அடுத்தடுத்துப் போனாள். அவளும் பத்மாவுடன் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசிப் பார்த்தாள். பத்மா வீட்டுக்குத் திரும்பிச் செல்லும்போது குழந்தையிடம் ஏதாவது திண்பண்டம் கொடுத்தனுப்புவாள். அதையெல்லாம் பத்மா பாதி வழியிலேயே தீர்த்து விட்டு வந்து விடுவாள். வீட்டுக்கு எடுத்து வந்தால் அம்மா கோபிப்பாள் என்ற பயம்தான்.

பத்மாவுக்கு ஒரு நாள் அந்த [மாமி ‘யைப் பார்த்து ஒரு கேள்வி கேட்க வேண்டும் போலிருந்தது. அந்தக் கேள்வியை கேட்டே விட்டாள்.

“மாமி! உங்க அப்பா, அம்மா எங்கே? வரமாட்டாளா?” –

”வருவாளே!”

“எப்ப வருவா?”

” இன்றைக்குக் கூட வரலாம்.” யாரிடமும் அதிகம் பேசாத அந்த யுவதிக்கு பத்மாவிடம் பேசுவதில் மட்டும் தனிப்பட்ட உற்சாகம் இருந்தது.

அந்த அதிசய வீடு ரயில்வே லயனுக்குச் சமீபம் இருந்ததால் ஒவ்வொரு நாளும் போட் மெயில். வரும்போது அதை உற்றுக் கவனிப்பாள் அந்த யுவதி. ”ரயிலில் யாரைப் பார்க்கிறீர்கள் மாமி?” என்று பத்மா கேட்டால் “என் அப்பா அம்மா வருவாளா என்றுதான் பார்க்கிறேன் ” என்று பதில் கூறுவாள்.

அம்மாவுக்குத் தெரியாமல் பத்மா எதிர் வீட்டுக்குப் போய் வருவதை அவளுடைய சகோதரிகள் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தனர். பத்மாவின் மூலம் எதிர் வீட்டு விஷயங்களை கிரகிப்பதற்கு அது ஒத்தாசையா யிருந்ததால் அவர்கள் இதை அம்மாவிடம் சொல்லவில்லை. ஆறு மாத காலமாகியும், அந்த எதிர் வீட்டு யுவதியை அவளுடைய தாயாரோ தகப்பனாரோ யாருமே வந்து பார்க்கவில்லை. இதனால் அந்த யுவதியின் பேரிலிருந்த அவப் பெயர் ஊர்ஜிதமாகி, மேற்படி வதந்தி காற்று வாக்காகப் பரவ ஆரம்பித்தது.

அன்று வெள்ளிக்கிழமை. பத்மா அவர்கள் வீட்டுக்குப் போயிருந்த சமயம் கர்ப்பிணியா யிருந்த மாமிக்கு ‘வலி’ கண்டிருந்தது. துணைக்கு ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய புருஷனும் கிளப்புக்குச் சீட்டாடப் போயிருந்தான். பத்மா ஒன்றும் புரியாதவளாய் சிறிது நேரம் தவித்து விட்டு, பிறகு தெருக் கோடியிலிருந்த கிளப்புக்கு ஓட்டமும் நடையுமாய்ப் போய் அவனிடம் விஷயத்தைக் கூறினாள். சீட்டை அப்படியே போட்டு விட்டு எழுந்து வந்த அவன் கையோடு ஒரு நர்ஸைக் கூட்டிக் கொண்டு வந்தான். சாயந்திரம் மாமிக்குப் ‘பேபி’ பிறந்த சேதி பத்மாவின் வீட்டுக்குத்தான் முதலில் எட்டியது. மறுநாள் யாருமே எதிர் பாராத விதமாய் மற்றொரு சம்பவம் நடந்தது. அது எதிர் வீட்டுக்கு. அந்தப் பெண்ணினுடைய தாயார், தகப்பனார் வந்திருந்தது தான். அதைக் கண்ட பத்மாவின் தாயாருக்கும் சகோதரிகளுக்கும் திகைப்பா யிருந்தது.

“ஏதோ மாதிரி சொல்லிக் கொண்டார்களே? பின் எப்படி இவர்கள் வந்தார்கள்?” என்று யோசித்தார்கள். அன்று சாயந்திரமே இவர்களுடைய சந்தேகங்களுக்கும் குழப்பங்களுக்கும் எதிர் வீட்டுப் பெண்ணைப் பற்றிய வீண் வதந்திக்கும் ஒரு. முற்றுப்புள்ளி ஏற்பட்டது.

அந்தப் பெண்ணினுடைய தகப்பனார் பத்மாவின் தகப்பனாருக்கு மிகவும் வேண்டியவராம். பால் யத்தில் இருவரும் ஒரே வகுப்பில் படித்தவர்களாம். பத்மாவின் தகப்பனார் அவருடைய தலையைக் கண்டு விட்டு, “அடேடே’ என்று சொல்லிக் கொண்டே ஓடினார். போய் விசாரித்ததில் அந்தப் பெண் அவருடைய மூத்த பெண் என்றும், அவளுடைய புருஷன் ரேஸ் கோர்ஸில் 150 ரூபாய் சம்பளத்தில் வேலையிலிருப்பதாகவும், இத்தனை நாள் அவளுடைய தகப்பனாரும் தாயாரும் பூனாவில் இருந்த தங்கள் இரண்டாவது பெண் வீட்டிற்குப் போயிருந்ததாகவும், அந்தப் பூனா பெண்ணினுடைய பிரசவத்துக்கு ஒத்தாசையாயிருந்து விட்டு, பிரசவம் முடிந்து இப்போதுதான் மூத்த பெண்ணிடம் வந்ததாகவும் விவரம் தெரிந்தது. இந்தச் சங்கதிகள் அவ்வளவையும் பத்மாவின் தகப்பனார் தம் வீட்டுக்கு வந்து மனைவியிடமும் பெண்களிடமும் சாங்கோபாங்கமாய்க் கூறி முடித்தார்.

“அப்படியா!” என்று எல்லோரும் மூக்கில் விரல் வைத்து ஆச்சரியப்பட்டனர்.

” ஐயோ பாவம், வீணாகப் பழி சுமத்திக் கேலி செய்து கொண்டிருந்தோமே” என்றாள் ஒருவள்.

” அப்படியானால் இந்த வதந்தி. எப்படி வந்தது?” என்று கேட்டாள் இன்னொருவள்.

” அம்மாதிரி வேறு யாராவது ஒரு பெண் இருந்திருக்கலாம். அந்தக் கதையை இவள் மீது யாராவது சுமத்தி யிருக்கலாம் ” என்று கூறினார். தகப்பனார் .

”பின் ஏன் அவள் ஒருவரிடமும் பேசாமல் வீட்டுக்குள்ளேயே புகுந்து கொண்டிருந்தாள்? ஏன் வேலைக்காரி கூட வைத்துக் கொள்ளவில்லை?” என்று மற்றொரு சகோதரி இன்னொரு சந்தே கத்தை எழுப்பினாள்.

“அதுவா? அவளுடைய புருஷனுக்கு ‘ரேள் கோர்ஸில் உத்தியோகமானதால் சென்னைக்கு ரேஸ் வந்ததும் அவனையும் இங்கு மாற்றி யிருந்தார்களாம். சென்னையில் வீடு கிடைப்பது துர்லபமா யிருந்ததால் இந்த வீட்டை அமர்த்திக் கொண்டானாம். ஆனால் இந்த வீட்டில் பேய் பிசாசு’ என்று ஒரு வதந்தி பரவியிருந்ததால் அதைத் தன் மனைவியிடம் சொன்னால் எங்கே பயப்படுவாளோ என்று நினைத்தே அவளை யாரிடமும் பேசக்கூடாது என்று கண்டிப்பாக உத்தரவு போட்டிருந்தானாம். அவள் யாரிடமாவது பேசினால் யாராவது வீட்டைப் பற்றி அவளிடம் பிரஸ்தாபிக்க நேரிடலாம். கர்ப்பிணி யான அவள் யார் பேச்சையாவது கேட்டுக் கொண்டு அந்த வீட்டில் குடியிருக்கப் பயப் படலாம். வீடு கிடைப்பது அரிதாயிருக்கும் இந் நாளில் இந்த வீட்டை விட்டுவிட்டு வேறு எங்கு அவஸ்தைப்படுவது என்று எண்ணியே அப்படிக் கட்டுத் திட்டம் செய்து வேலைக்காரிகூட இல்லாமல் வைத்திருந்தானாம். அவனுக்கு இந்தப் பேய் பிசாசுகளில் கொஞ்சமும் நம்பிக்கை கிடையாதாம். அதனாலேயேதான் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டானாம். இதற்காகவே வேலைக்காரி செய்ய வேண்டிய வேலைகளை யெல்லாம் கூட தானே செய்து கொண்டிருந்தானாம்’ என்று சந்தேகங்களைத் தெளியச் செய்தார் தகப்பனார்.

இதைக் கேட்டு பத்மாவின் தாயாரும், சகோதரிகளும் தங்களுடைய தவறான அபிப்ராயத்துக்காக மிகவும் வருத்தப்பட்டனர். வீணான வதந்தியை நம்பி அந்தக் களங்கமற்ற இளம் தம்பதிகளின் வாழ்க்கையில் மாசு கற்பித்த பெருங் குற்றத்தை நினைத்து உள்ளூர மனம் புழுங்கினார்கள். அடுத்த வாரமே அந்தத் தம்பதிகள் ரேஸ் கோர்ஸ்’ முடிந்து ஊட்டிக்குக் கிளம்பிச் சென்றுவிட்டார்கள். அந்த வீட்டைப் பற்றிப் பரவியிருந்த வீண் வதந்தியும் அத்தோடு மறைந்தது. வேறு யாரோ புதுக் குடியும் வந்து விட்டனர்.

– வத்ஸலையின் வாழ்க்கை, முதற் பதிப்பு: 1949, வாடாமலர் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *