வீட்டில்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 4, 2021
பார்வையிட்டோர்: 2,472 
 

(2003 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தெப்பமொன்றில் இருந்தபடி கடற்காற்றை அனுபவித்துச் சூழலை வெறித்துப் பார்த்தான் பீட்டர். மஞ்சள் கிரகணம் கவிந்து, உறைக்கத் தொடங்கிய முன் காலைப் பொழுது, எதிலும் பிடிப்பற்ற ஒரு வெறுமை உணர்வு அடிமனதை நெருடியது. நீர்கொழும்பு கடற்கரை, எப்போதும் போல் இரைச்சலும் சந்தடியுமாக ஓசைகொண்டு ஒலித்தன. மீன் சந்தையும் சிறுசிறு கடைகளும், களைகட்டிப் போயிருந்தன. இவனுக்கு இவை பழகிப் போன எதிர்கொள்ளல் தான். என்றாலும் உற்சாகமூட்டும் சங்கதிகளாய் இல்லை.

இவனது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாலும் , கடற்கரையில் தான், இவனது பெரும்பொழுது கழியும். மீனவச் சமூகத்தின் வாழ்வு, தாழ்வையெல்லாம் நிர்ணயிக்கும் பிரதான தளம் கடல்தானே? முன்பெல்லாம் சிறுவர்களோடு சேர்ந்து, படகு தள்ளுவது, வலை மீன் பொறுக்குவது, மீன்களை துண்டாக்கி வெட்டிக் கொடுப்பது, போன்ற காரியங்களில் ஈடுபாடு மிகுந்திருந்தது.

கிடைக்கும் வேதனம் கம்மியென்றபடியினால், அவற்றை இப்போது நிராகரித்துவிட்டான். கல்வி அறிவு குறைந்த போதும், வம்சத் தொழிலிருந்து நீங்கி, வருவாய் தரக்கூடிய ஒன்றைப் பற்றிப் பிடிக்க வேண்டுமென்பது அபிலாஷை. வீட்டில் நிலவும் கடும் வறுமையும், மன அழுத்தங்களும், இவனுக்கு கசப்பானவையாகவே இருந்தன. கடற்காற்று சீதளக்குளுமையை முகத்தில் அழுத்திப் பதித்துவிட்டு விலகிச் சென்றது.

ஒவ்வொரு முறையும் புதிய பிறப்பெடுத்து வந்து தழுவிக் குதூகலிக்கும் காற்று, மனதிற்கு இதமளிக்கும். அதன் பிரக்ஞையை உணர்தலில் இவனுக்கு அலாதிப் பிரியம். பாதை நெடுகிலும் நீண்டு வளர்ந்திருந்த மரங்கள், அழகு காட்டின. தெருவின் முன்விழுந்து நீந்தும், மரநிழல் அசைவுகளை, பீட்டர் கூர்ந்து நோக்கினான்.

நிழல்கள் எவ்வாறு வெறுமனே அசையும்? ஆடியசைந்து பிம்பம் காட்டும் மரங்களின் நர்த்தனமின்றி மரங்களுக்கு ஆடியசையும் பலம், தன்னிச்சையாக வர, எவ்வாறு சாத்தியம்? ஆட்டுவிக்கும் மூலசக்தியே காற்றுத் தானே? காற்றையேன் யாரும் பெரிதாய் கணக்கிலெடுப்பதில்லை. வாயுவை உள்வாங்க மறுத்த எந்தத் தளத்திலும், மனிதனால் உயிர் வாழ்ந்திடல் இயலுமா? காற்றும், மின்சாரமும் மனிதனது அன்றாட வாழ்வில் எத்தனை நெருக்கமாய் இரண்டறக் கலந்துவிட்டன. ஒட்டியே வாழும், மனைவி மக்களின் உறவினைப் போல.

இடைவிடாது வீசிய காற்றின் எதிர் வேகத்தில் பீட்டர் மேனி சிலிர்த்தான். ஒரு ஆனந்த அனுபூதி, உடலெங்கும் தழுவிப் பரவும் சுகம். தலை நிமிர்த்தி நீளும் நேர்க்கோட்டை தரிசித்தான்.

இடப்புறத்தே பழைய ரெஸ்ட் ஹவுசும், கொட்டுவப்பிட்டிய விஸ்தாரமான விளையாட்டு மைதானமும், பாதையெங்கும், அடர்ந்து வளர்ந்து குளிர்மை கொட்டும் மரங்களும், வலப்புறம் – ஹைதர் கால, பழைய கட்டிடமான மீபுர சினிமா தியேட்டரும், மேட்டு நிலத்தில் உயர்ந்து தெரிந்த மாவட்ட நீதிமன்றமும், தொலைவில் – நீர்கொழும்பு சிறைச்சாலையின், பிறைவடிவ வாயிலும் இவனுக்குப் பரிச்சயமான காட்சிகள் தான் என்பது மட்டுமல்ல தினமும் காலாறச் சுற்றித் திரியும், நகரின் கேந்திரப் பிரசித்தி பெற்ற தளங்களும் தான். முன்னக்கரை களப்புக்கருகில் எழுந்தருளியுள்ள தனது இல்லமாகிய ஓலைக்குடிசையை ஒரு கணம் எண்ணித் துயருற்றான். கறையான் அரித்து இற்றுப் போயிருக்கும், ஓலைக் குடிலின் ஆயுள் நீண்ட காலங்களுக்குத் தாக்குப் பிடிக்கப் போவதில்லை என்ற உண்மை மனதை நெருடியது.

மழைக்காலங்களில் களப்பு நீர் பெருக்கெடுத்து ஓடும். இடுப்பளவு தண்ணீரில், வந்தது ஆபத்து என அந்தரத்தில் குடிசை தள்ளாடும். அதைத் திருத்திக் கட்டுவதற்கு ஏது பணம்? பதினான்கு வயது சிறுவனான பீட்டரின் தலையில், குடும்பச்சுமை கனத்து பூதாகரமாய் சங்கடப்படுத்தின. இவன் அவ்வவ்போது செய்து வந்த நிரந்தரமற்ற உபதொழில்கள் குடும்பத்தின் வயிற்று அக்கினியைத் தவிர்ப்பதற்கு போதுமானதாய் இருக்கவில்லை. வயதுக்கு வந்த அக்காள், அம்மா, தம்பி, பாட்டி, இவன் என ஐந்து ஜீவன்களின் வாழ்வு ஆட்டங்கண்டு கொண்டிருந்தது.

இவர்களை நிர்க்கதிக்கு ஆளாக்கிவிட்டு, எவளோ ஒருத்தியோடு ஓடிப்போன தந்தை ஜோசப்பை மனம் வெறுத்து திட்டித் தீர்த்தான். அவன் இவர்களுடன் ஒன்றியிருந்து உழைத்து வந்த காலங்களில் சாப்பாட்டுக்குப் பஞ்சமில்லாமலிமிருந்தது. அவன் அன்றாடம் கடலுக்கு மீன்பிடிக்கப் போய்வந்ததில், வீட்டுக்கஷ்டம் விலகியிருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன் ஜோசப் கற்பிட்டிக்குப் போனவன், இன்று வரை வீடு திரும்பவேயில்லை. எல்லா இடங்களிலும் விசாரித்துப் பார்த்ததில், எவ்விதத் துப்பும் கிடைக்கவில்லை . மிகச் சமீபத்தில் கிடைத்த செய்தி. மூன்று பிள்ளைகளுக்குத் தாயான ஒருத்தியோடு, மன்னாரில் அவன் கள்ளக்குடும்பம் நடத்துவதாக.

‘சோமால மாதாவே! எண்ட சிறுக்கி, சிறுக்கன்களுக்கு வஞ்சகம் செஞ்சிபோட்டு, இந்த நாய் ஒரு வேசத் தோரையோட, ஓடிப் பெயித்திட்டான். அவன் எண்ட கைக்கு கிடைக்கோணும், உத்தமயத்தானே, பாற மீனை வெட்றாப் போல அரிஞ்சி போடுவன்.’

கடுமையான கஷ்டங்களை எதிர்கொள்ளும் போது, மனம் வெதும்பி கணவன் ஜோசப்பை திட்டித் தீர்ப்பாள், தெரேசா. மகள் மேரிக்குப் பேசிவந்த திருமண ஏற்பாடு கூட இவர்களது பொருளாதாரக் கஷ்டத்தில் தூரவிலகிப் போயின. இந்த அவலங்களையெல்லாம் எண்ணி நெஞ்சுக்குள் காயப்பட்டவனாகத் தலையைக் குனிந்து பீட்டர் பெருமூச்சு விட்டான்.

திடீரென அவனருகில் ஒரு மெல்லிய நிழலசைவு.

“ஹலோ ஹவ் ஆர் யூ? ஐயேம் ஜோன்சன், பிரம் சுவிஸ்.”

இவன் தலை உயர்த்தி ஆச்சரியத்தோடு ஏறிட்டுப் பார்த்தான். நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒரு வெள்ளையன். கொலோன் வாசம் மணக்க, புன்முறுவல் பூத்தவாறு, அருகில் நின்றான். தோற்றத்தில் கனிவு துலங்கியது. கையில் கெமராவும் தோளில் பையுமாக, சிநேகபூர்வமாக இவனோடு உரையாடினான்.

“நீ ஏன் மகிழ்ச்சியாக இல்லை? என்ன கவலை? என்னால் உனக்கு உதவ முடியும். சுவிஸில் நான் ஒரு பிரசித்தி பெற்ற நட்சத்திர ஹோட்டலுக்கு உரிமையாளன். அதோ இருக்கும் பழைய ரெஸ்ட் ஹவுசில் ஒன்பதாம் இலக்க அறையில் தங்கியிருக்கிறேன். நீ எப்போது வேண்டுமானாலும் என்னை வந்து சந்திக்கலாம். ஸ்ரீ லங்காவில் இரண்டு மாதங்கள் மட்டுமே தங்கியிருப்பேன்.”

இவன் தனக்குத் தெரிந்த உடைந்த ஆங்கிலத்தில் விடை பகன்றான். தன் குடும்பம் மிகவும் கஷ்டத்தில் இருப்பதாகவும்,

ஏதாவது ஒரு தொழிலை, தேடிக் கொள்ள வேண்டுமென்றும், – தன் ஆதங்கத்தை அவனிடம் வெளிப்படுத்தினான். வெள்ளையன் மிகவும் அனுதாபப்பட்டவனாக, பையைத் தடவி, சொக்லட், பிஸ்கட், பக்கட்டுகளை அன்பளிப்பாக வழங்கிவிட்டு பர்ஸைத் திறந்து ஐநூறு ரூபாய் நோட்டையெடுத்து இவன் கையில் திணித்தான்.

பீட்டருக்கு ஆச்சரியமாக இருந்தது. வெள்ளையர்களில் இத்தனை இரக்க சுபாவமுள்ளவர்களும் இருக்கிறார்களா? என வியந்தான்.

“டியர் பிரன்ட், டோண்ட் ஒரி, இரண்டு மாதங்களுக்கு என்னிடம் உனக்கு வேலை இருக்கிறது. என்ன வேலையென்று தெரியுமா?”

உதட்டோரத்தில் புன்னகையைத் தவழவிட்டவாறு, பீட்டரின் தோற்றத்தை அர்த்த சிரத்தையோடு, கூர்ந்து பார்த்தான். அழுக்கேறிய கட்டைக் கால்சட்டை, ட்டீ சேர்ட், மேலுதட்டில் படர்ந்திருக்கும் மெல்லிய பூனை ரோமம், கூர்மையான தீட்சண்யமிக்க கண்கள், குழந்தைத்தனமான முகலாவண்யம், மீனவச் சிறுவரிடையே அபூர்வமாக காணப்படும் சிவந்த மேனி, வழவழப்பான கை கால்கள், அத்தனையும் அவனுக்கு வெகுவாகப் பிடித்திருந்தது.

“உன்னுடைய வேலை, தினமும் என்னோடு ஊர்சுற்ற வருவதுதான்! சாப்பாடு, சம்பளம், உடைகள், எல்லாம் நல்லபடியாக வழங்குவேன். நாளைக் காலை தவறாமல் என்னை வந்து சந்திக்கிறாய்! சம்மதம் தானே?”

இவன் மிகவும் திருப்தியடைந்தவனாக ஓ.கே. கூறி கைகுலுக்கி விடை பெறுகிறான். மறுநாட் காலை சந்திப்பு நிகழ்ந்தது. இருவரும் நண்பர்களாக ஒன்றாய் அமர்ந்து ஹோட்டலில் காலை உணவு முடித்து, பின் ஊர் சுற்றப் புறப்பட்டார்கள். வீட்டுக்கு பீட்டர் ஒரு வெள்ளைக்காரனோடு வருவதைக் கண்ணுற்று தாயும், சகோதரியும் பூரித்துப் போனார்கள். பீட்டருக்கு இனி நல்ல காலம் பிறந்துவிட்டதாக நம்பினார்கள்.

அந்த ஓட்டைக் குடிசையைக் கண்ணுற்ற ஜோன்சன், புஜங்களை அசைத்து, நெற்றியை உயர்த்தி, வெள்ளைக்காரப் பாவனையில் ஆச்சரியம் காட்டினான். வீட்டைத் திருத்த தான் உதவி செய்வதாக வாக்குறுதியளித்தான். திரேசா அவனுக்குப் பப்பாளிப் பழம் கொடுத்து அன்புடன் உபசரித்தாள். அவனுக்கு அக்காள் மேரியை பீட்டர் அறிமுகப்படுத்தினான்.

துடிக்கத் துடிக்க பிடித்த பென்னம் பெரிய சுறா மீனைப்போல பொழிவு காட்டி நின்ற, மேரியைப் பார்த்து குதூகலித்து, “வெரி நைஸ்” என்று பாராட்டினான் வெள்ளையன்.

இவர்கள் இருவருக்கிடையில் ஆத்மார்த்த நட்பு வளரலாயிற்று. எல்லா உல்லாசப் பிரயாணத்தளங்களுக்கும் ஜோன்சன், பீட்டரை கூடவே அழைத்துச் சென்றான். இப்போது பீட்டரின் நடவடிக்கைகளில் பாரிய மாற்றம் ஏற்பட்டிருந்தது.

வாசனைத் திரவியங்களை உடலெங்கும் பூசிக்கொண்டு அழகான உடையணிந்து சந்தோஷமாகத் தென்பட்டான். விஸ்கி, பியர், போதைப் பொருள் பாவனையில் மூழ்கிப் போனான். சிகரெட்டும் கையுமாக, சரளமாக ஆங்கிலம் பேசக் கற்றுக் கொண்டான்.

யாவும் ஜோன்சன் என்ற வெள்ளையனின் கடாட்சத்தில்தான். பீட்டரின் தாய் தெரேசா கைகளிலும், இப்போது நோட்டுக்கள் தாராளமாய் புளங்கவாரம்பித்தன. இவர்களது குடிசையும் சிறிது சிறிதாக, கற்களால் எழும்பி நின்றது. ஜோன்சன் வாக்குக் கொடுத்தபடி, ஒரு தொகைப் பணத்தையளித்து உதவினான். அவன் சுவிசுக்குத் திரும்பிச் செல்லும் நாளும் வந்துவிட்டது. ஓரிரு மாதங்களில் இவனை சுவிசுக்கு அழைப்பித்து, தன் ஹோட்டலில் தொழில் தருவதாக உறுதியாக கூறிவிட்டு, செலவிற்கு கொஞ்சம் பணத்தையும் கையில் கொடுத்துவிட்டு, அவன் விமானமேறினான்.

நண்பரின் பிரிவு பீட்டருக்கு கவலையளித்தாலும், சுவிஸ் பற்றிய கனவுகள், உணர்வுகளில் இனித்தன. மூன்று மாதங்கள் கடந்து விட்ட நிலையில், ஜோன்சனிடமிருந்து எவ்வித பதிலும் இல்லாமலிருந்தது. இவனுக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. அவன் கொடுத்துவிட்டுப் போன் தொலைபேசி நம்பரில் பலமுறை தொடர்புகொள்ள முயன்றான். அவனைப்பற்றிய எந்தவிதத் தகவலும் அறிய முடியாமலிருந்தது.

நீலப் போர்வையில் சமுத்திரம் படர்ந்து கிடந்தது. அலைகள் வெறிகொண்டு ஒன்றையொன்று துரத்திச் சென்றன. படகுகள் தூரத்தே கரும் புள்ளிகளாய் தேய்ந்து தொலை திசையில் மறைந்தன. பறவைகள் அடிவானுக்கும், ஆழிக்குமிடையில் சிறகடித்து, கீழ்நோக்கியும், மேல்நோக்கியும் அந்தரத்தில் பறந்தன.

இவன் ஆழியின் அற்புத விநோதங்களை எண்ணியவாறு, உடல் சோர்ந்து கரையில் அமர்ந்திருந்தான். ஜோன்சன் ஏன் ஏமாற்றினான்? என்பது இவனுக்கு விடை கிடைக்காத கேள்விக் குறியாய் இருந்தது. கற்பனைக் கோட்டைகள் இடிந்து தரைமட்டமாகிப் போனதில், பாதி இளைத்துப் பேயிருந்தான். வேளைக்குச் சாப்பிடமல் யாருடனும் கதைக்காமல், தனிமையிலிருந்து நீண்ட நேரம் சிந்திப்பவனாக, மாறிப் போயிருந்த மகனின் நிலைகண்டு, தாய் பதறிப் போனாள்.

ஆறுதல் கூறி இவனுக்குத் தன்னம்பிக்கையூட்ட அவள் பல முயற்சிகள் செய்தும், அவனில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

வருடங்கள் சில உருண்டோடிப் போயின. பீட்டர் நோய்வாய்பட்டு படுக்கையில் கிடந்தான். அடிக்கடி வாந்தி, தலைசுற்று, நினைவிழத்தல் போன்றவையால் துவண்டு போனான். திரேசா வைத்தியரிடம் அழைத்துச் சென்று, சிகிச்சைகள் பல செய்தாள். இவனைப் பிடித்து வாட்டும் நோய் என்னவென்று அறியாமல் மனம்நொந்து போனாள்.

கோயில்களுக்குச் சென்று, நேர்த்தி, பூஜைகள் பலவும் செய்து, இறைஞ்சினாள். எதுவும் மாற்றமில்லை. ஒரு நாள் நடு இரவில் அவனுக்கு கடுமையான வருத்தம் வந்தது. பீட்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

குருதிப் பரிசோதனையில் இவனுக்கு எச்.ஐ.வி. வைரஸ், கடுமையாக தொற்றியிருப்பதாக டாக்டர்கள் கூறினர்.

தனியறைக்குள் அப்புறப்படுத்தி வைத்து தீவிர சிகிச்சைகள் நடந்தன. இவன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். நோய் எத்தகையது? என்பதை நோயாளிக்கு அறிவுறுத்தப் பட்டதும், அதிர்ச்சியினால் துவண்டு போனான்.

தாயின் பாசமொழுகும் முகத்தை சோர்ந்த விழிகளால் வெறித்தான். ஜோன்சன் ஒரு எயிட்ஸ் நோயாளியா? என்ற கேள்வி மூளைக்குள் பொறி தட்டியது. அவனுடன் கூடிக் களித்த நாட்கள், பயங்கரக் கனவுகளாய் அச்சமூட்டின. இறுதியில் டாக்டர்கள் கையை விரித்தனர்.

மீண்டும் பொலிவிழந்த விழிகளால் தாயின் முகத்தை பரிதாபமாகப் பார்த்தான். இறுதி மூச்சை சங்கடத்துடன் உதிர்த்தான்.

தாயின் நெக்குருகும் ஒப்பாரி சத்தம், மருத்துவமனைச் சுவர்களில் மோதி எங்கும் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

– ஏப்ரல், 2003 – நிஜங்களின் வலி சிறுகதைத் தொகுப்பு , மீரா பதிப்பகம், முதற்பதிப்பு: 23.05.2005

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *