கதையாசிரியர்:
தின/வார இதழ்: தமிழ் முரசு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 2, 2024
பார்வையிட்டோர்: 689 
 
 

(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று மாலை மணி ஐந்து முதலே வானம் பிசு பிசுத்துக் கொண்டிருந்தது. கொட்டியபாடும் இல்லாமல் விட்டபாடும் இல்லாமல் சிறுசிறு மழைத் தூற்றல் இருந்து கொண்டே இருந்தது. தெருவில் ஜனநடமாட் டமே இல்லை. நீலவானமும் கும்மிருட்டாக இருட்டிக் கொண்டிருந்தது. எப்போது பெருமழை தொடங்கும் என்று யாராலும் கணிக்க முடியாத நிலை. மற்றவர் களைப் போல் நானும் மழைக்குப் பயந்து கொண்டு மரியாதையாக வீட்டில் புதைந்து கிடந்தேன்.

அப்போது இரவு மணி பத்தாகி விட்டது. என் அறை முழுவதும் ஒரே இருட்டாக இருந்தது. மின் விளக்குகள் அனைத்தையும் அணைத்து விட்டிருந்தேன். ஆமாம்; இந்தப் பூச்சிகளின் தொல்லை பொறுக்க முடி யாமல் விளக்குகள் அணைக்கப் பட்டிருந்ததனால் கருமை யிருள் படர்ந்திருந்த வீட்டுக்குள் குறுகுறுவென நீண்ட நேரம் அமர்ந்து கொண்டிருந்தது எனக்கு எப்படியோ இருந்தது. அமைதியற்ற நிலையில் நான் சாளரத்தைத் திறந்து கொண்டு பெரும் போக்காகத் தெருவில் கண் ணோட்டமிட்டேன். தெரு அமைதியாகத்தான் இருந் தது. ஆனால் தெருவிளக்குகள் ஒவ்வொன்றைச் சுற்றி லும் பூச்சிப் பட்டாளங்கள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன. மொத்தத்தில் எதுவும் தோன்றாத எனக்கு ஏற்பட்ட சலிப்பினால் நிலையில் விரல் நகங்களைக் கடித்துத் துப்பிக் கொண்டே படுக்கையில் சாய்ந்தேன்.

இரவு மணி பதினொன்று ஆகிவிட்டதை சுவர்க்கடி காரம் மணியடித்து உணர்த்தியது. தெரு விளக்கின் வெளிச்சம் ஊடுருவி என் அறையில் பாய்ந்திருந்தது. அந்த மங்கலான வெளிச்சத்தில் அந்தப் பெரிய புகைப் படம் என் கண்களில் பட்டது. ஒன்றிலும் நிலைகொள் ளாமல் இருந்த எனது சிந்தனை இப்போது அழகிரியின் நிழற்படத்தைச் சுற்றிச் சுழன்றது.

அழகிரி! ஆமாம். என்னுடைய ஆழ்ந்த அனுதாபத் திற்குரிய அழகிரி! நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்த என்னுடைய பால்ய நண்பன் அழகிரி! அவன் வாழ்க்கை வரலாற்று ஏடுகள் பக்கம் பக்கமாக என் அகக் கண்ணில் பளிச்சிட்டு நின்றன.

நானும் அவனும் ஒரே தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். ஒருமித்த வயதுடைய நாங்கள் இரு வரும் எப்போதும் இரட்டையர்களைப் போல இணை பிரியாது இருந்தோம். நானும் ஒரு தோட்டத் தொழி லாளியின் மகன். அவனும் அப்படித்தான். ஆனால் ஒரு பெரும் வித்தியாசம். வரவறிந்து செலவு செய்து குடும்பத்தைப் பொறுப்போடு கவனித்துக் கொள்ளும் திடசித்தம் உள்ளவரைத் தந்தையாகக் கொண்டவன் நான். வரவாவது செலவாவது? நாளைக்கு இருப்போம் என்பது என்ன நிச்சயம் என்ற போக்கில் வரவுக்கு மிஞ்சி செலவு செய்து வாழ்க்கையைத் துன்பமயமாக்கிக் கொண்ட பொறுப்பற்றவரைத் தந்தையாகக் கொண்ட வன் அவன்! வரவுக்கு மிஞ்சிய செலவு என்பது குடும்பத்துக்காக என்றிருந்து விட்டாலாவது பொறுத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். மயக்கத்துக்காக வரை யரையில்லாமல் செலவு செய்து பழக்கப்பட்டவர். யார் யாரோ எத்தனை எத்தனையோ சமயங்களில் அறிவுரை சொல்லி வந்திருக்கிறார்கள். அத்தனை அறிவுரைகளை யும் அவர் வேலைக்காட்டுக்குச் சென்று பால் மரம் வெட்டும்போது மட்டும் நினைத்துக் கொள்வார். வீட் டுக்கு வந்ததும் மறந்து விடுவார். வேலை முடிந்து வந்து கைகால்களைக் கழுவினாரோ இல்லையோ? மயக்கப் பொருள் கடையில் தான் இருப்பார். வெறும் வயிற்றில் கொஞ்சம் போட்டுக் கொண்டு வந்துதான் மத்தியான உணவையே உண்பார். மயக்கப் பொருள் என்றவுடன் பெரிதாக நினைத்து விடாதீர்கள். அதுதான் சம்சு- லாலாங் தண்ணி என்றெல்லாம் சொல்வார்களே அந்தக் கண்ணராவி எரிபொருள்தான். பகலெல்லாம் மயக்கம்; போதை – இரவெல்லாம் மிதக்கம். இப்படியாகக் குடும் பத்தை அலைக்கழித்துக் கொண்டிருந்தார். அவரைத் தன்னுடைய தகப்பன் என்று சொல்லிக் கொள்வதையே அவமானமாகக் கருதுகின்ற நிலைமைக்கு வந்து விட் டான், அழகிரி. அவன் படிப்புக்கு முத்தாய்ப்பு ஏற்பட விருந்தது. ஆமாம்; குடும்பம் வறுமையால் அல்லோல கல்லோலப் பட்டுக்கொண்டிருந்தது. வேறுவழி இல்லை- வகையுமில்லை. அழகிரி வெளிக்நாட்டு வேலைக்குப் போக முடிவு செய்து விட்டிருந்தான்.

நாங்கள் படித்துக் கொண்டிருந்ந அந்தத் தொடக் கப்பள்ளிக்கு அப்போது ஒரு புது ஆசிரியர் மாற்றலாகி வந்திருந்தார். அதுவும் எங்கள் வகுப்பாசிரியராகவே வந்தார். ஆசிரியர் மாற்றத்தில்தான் அழகிரியின் வாழ்க்கை மாற்றமே அமைய வேண்டும் என்பதுதான் ஆண்டவனின் தீர்ப்பாக இருக்கும்போது, எல்லாம் சொல்லி வைத்தாற்போல நடந்தது. எங்கள் வகுப்பாசிரியர் பள்ளிப் படிப்பு சொல்லித் தருவதோடு நில் லாமல் வாரத்திற்கொரு முறை அறநூல் என்ற, பாடத் தின்போது சமுதாயம், அரசியல், நாடு, மொழி, இலக்கியம் போன்ற துறைகளிலும் சிறிது ஆழச்சென்று கருத்துக்களைச் சொல்லுவார். அழகிரியின் வாழ்க்கை அமைப்பு படிப்படியாக ஆசிரியருக்குத் தெரிய வந்தது சொல்லொன்று செயலொன்று என்ற அமைப்பில் நிலவி வரும் உலகத்தில் பேச்சே தன் மூச்சாக இல்லாமல் பேச்சும் மூச்சும் செயலும் ஒன்றாகவே பரிணமிக்கும் பண்புடையாளர்கள் இல்லாமல் இல்லை. அந்த ஆயிரத் தில் ஒருவராக ஆசிரியர் மிளிர்ந்தார். ஆமாம்; அழகிரிக்கு அடைக்கலம் தந்து ஆளாக்க முன்வந்தார். அழகிரி, இனி நீ என் வீட்டிலேயே தங்கிக் கொண்டு படிக்கலாம். உன்னுடைய வாழ்க்கைச் செலவுகளை நான் கவனித்துக் கொள்கிறேன். நீ எதற்கும் கவலைப்படாதே; வாழ்க்கை யில் முன்னேறவேண்டும் என்ற ஒரே நோக்கோடு படித்து முன்னேற முயற்சி செய்” என்று ஆறுதல் கூறி அழகிரியை ஆசிரியர் அரவணைத்துக்கொண்ட காட்சி, மாணவர் களை நெக்குருகச் செய்தது. அன்றுமுதல் அழகிரி ஆசிரியரிடம் அடைக்கலமானான்-இல்லை; ஐக்கியமானான.

காலதேவன் உறக்கத்தில் இருப்பதாகத்தான் அழகிரி எப்போதும் என்னிடம் அங்கலாய்த்துக்கொள் வான். அழகிரியின் மனவேகத்தோடு காலதேவன் போட்டிபோட முடியவில்லை. யாருக்காகவும், எதற்கா கவும் காலதேவன் வேகமாகவோ மெதுவாகவோ செல் லாமல் ஒரே நிலையில் சென்று கொண்டிருக்கும் போது அழகிரிக்காக மட்டும் துரித நடை போடுவானா என்ன? திக்கற்றவருக்குத் தெய்வமே துணை என்றால் போக் கற்ற நிலையிலிருந்த அழகிரிக்குப் அழகிரிக்குப் புகலிடம் புகலிடம் தந்த ஆசிரியரும் இறைவனுக்கு இணை தானே! போராடிப் பெற்றான் புகழ்’ என்ற பொன்மொழிக்கிணங்க நாளொரு அறிவும் பொழுதொரு திருவும் பெற்று கல்வி கேள்விகளில் தேர்ச்சியுற்று அரசாங்க அலுவலகத்தில் உயர்பதவி பெற்றான் அழகிரி.

அழகிரியின் முன்னேற்றத்துக்கு நிலைகளனாக ஆசிரியர் மாற்றலாகி வேற்றூர் செல்ல நேரிட்டது. நிலையூன்றிக் கொள்ளும் நிலையடைந்து விட்ட அழகிரி யும் ஆசிரியரும் நிலைகுலைந்து நின்றார்கள். தம்பி உலகத்தில் வரவும் செலவும் இயல்புதான். ஆனால் வந்த தையும் சென்றதையும் சிந்தையில் நிலைநிறுத்தி வாழ்க்கைப் பாதையை அமைத்துக்கொள்ள முயற்சி செய். உன் குடும்பத்துக்கு உறுதுணையாய் இரு. உன் தந்தையாரையும் என்னால் இயன்ற அளவுக்குத் திருத்தி யிருக்கிறேன், வெறுக்காதே! விளக்கம் சொல்லித் திருத்து’ என்று சொல்லிப் பிரியாவிடை பெறும்போது விம்மலோடும், விக்கலோடும் விழிநீர்பொழிய விதிர்ந்து போய் நின்ற அழகிரி, ‘கோ’ வெனக் கதறிவிட்டான். ‘இன்றுபோல் என்றும் இருப்போம்’. துக்கம்தொண்டைக் குழியை அடைக்கக் கூறிவிட்டு ஆசிரியர் விருட்டென்று புறப்பட்டுப் போய் வண்டியில் ஏறிக்கொண்டார். நொடிப் பொழுதும் தாமதிக்காமல் சொல்லி வைத்தாற் போல வண்டியும் கரும்புகையை உமிழ்ந்துக் கொண்டு பறந்தது. கண்ணுக்கெட்டிய தொலைவுவரை ஆசிரியர் தம் கரம் அசைந்து கொண்டே இருந்தது அழகிரியைத் தேற்றி அழைத்துச் செல்ல எனக்குப் பெரும் பாடாகி விட்டது.

இயேசு, புத்தர், காந்தி, நேரு, கென்னடி ஆகிய அறிஞர் பெருமக்களின் கண்ணைக் கவரும் அமைப்பி லான வண்ணப் படங்கள் ஐந்துக்கும் கண்ணாடியிட்டு அணி செய்திருந்தேன். ஒவ்வொரு படமும் ஒவ்வோர் ஆண்டு காலண்டரிலிருந்து வெட்டியெடுக்கப்பட்டது. நிகழ்ச்சிகள் நேற்று நடந்தது போலிருக்கும்-நினைத் துப்பார்த்தால் ஐந்தாறு ஆண்டுகள் ஆகியிருக்கும். அது போல்தான் இந்த ஐந்து ஆண்டுகள், கடந்துவிட்டிருந்த போக்கும் எனக்கு விந்தையாகப்பட்டது. காலதேவன் இப்போது கொஞ்சம் வேகநடை போட்டுவிட்டானா என்றுகூட எனக்குள் நானே சிந்தித்துச் சிரித்துக் கொண்டேன்.

அன்று இரவு ஏழு மணியளவில் அழகிரி சோர்ந்து போய் சோகம் தாங்கிய முகத்தோடு வந்து கொண் டிருந்தான் அதிர்ந்துபோய் அவசரம் தாங்காமல் விபரம் கேட்டேன். “ஒரு பெரிய தவறு ஏற்பட்டுவிட்டது. ஆனால், அதற்கு நான் பொறுப்பாளியல்ல-இறைவன் என்னை மன்னிப்பானா?” என்று அழகிரி சித்தம் குழம்பிய நிலையில் கேட்டான். அலுவலகத்தில் ஏதா வதா? என்னால் எதையும் ஊகிக்க முடியவில்லை. அவனே தொடர்ந்து சொன்னான். “எனக்கு என் தகப்பனார் திருமணம் நிச்சயம் செய்துவிட்டார்— செய்தி கேட்டதும் எனக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இப்போது தவிர்க்க முடியாத நிலை, ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை” என்று சொல்லி விட்டுக் கலங்கினான்.

உள்ளபடியே எனக்கு சொல்ல முடியாத ஆத்திரம் தான், ஒன்றுமே இல்லாததை இவ்வளவு மிகைப்படுத்தி விட்டானே என்று. ஆசிரியரைக் கலந்து கொள்ளாமல் அப்பா தன் முனைப்பாகச் செய்துவிட்டார் என்பதிலே தான் அவனுடைய அங்கலாய்ப்பெல்லாம் என்பதை யறிந்து நான் உள்ளம் நெகிழ்ந்தேன். “இறைவன் என்னை மன்னிப்பானா…?” என்று, ஆசிரியர் மன்னிப்பாரா? கடவுள் மன்னிப்பாரா என்ற இரட்டைப்பொருள்படக் கூறி அவன் சிந்தை கலக்கமுற்றதைத் தெளிந்து, “நன்றிக்குவித்தாகிய” அழகிரியின் நல்ல உள்ளத்தை நான் நெஞ்சுக்குள் போற்றினேன். நானும் அழகிரியுமாகவே சென்று ஆசிரியரிடம் நடந்த விபரங் களை நானே எடுத்துச் சொன்னேன். “நலம் பல பெற்று என்றும் நீ சிறப்பாக வாழவேண்டும்” என்று ஆசிரியர் வாழ்த்துச் சொன்ன பிறகுதான் அழகிரிக்கு உயிரே வந்தது. என்று சொல்ல வேண்டும். அழகிரி யின் இந்தப் போக்கு மற்றவர்களுக்குப் பைத்தி யக்காரத்தனமானதாகத் தோன்றினாலும் எனக்கு அது ஆழ்ந்த நன்றியுணர்ச்சியாகப்பட்டது.

இரண்டு தினங்கள் முன்னதாகவே வந்துவிடுகிறேன் என்று சொல்லியிருந்த ஆசிரியர் இன்னும் வந்து சேர வில்லை. திருமண நிகழ்ச்சிகள் “ஜரூராக” நடை பெற்றுக் கொண்டிருந்தன. விடியற் காலை நான்கு மணிக்குத் திருமணம். திருமண வீடு ஒரே கோலாகல மாக இருந்தது. நடுச்சாமக் கோழி ஒன்று கூவி முடித்தது. அழகிரி அடிக்கடி என்னிடம் வந்து அலுத் துக்கொள்வான். அவ்வப்போது தோன்றிய சமாதானத் தைச் சொல்லியனுப்பி விடுவேன். அதன்வழி அவன் சமாதானப்பட மாட்டான் என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் ஒரு சங்கல்பம்தானே…? ஆறுதலாகச் சொல்லி வைப்பேன்? அவ்வளவுதான்.

சரியாக மணி பன்னிரண்டரைக்கு ஒரு மோட்டார் கார் ‘சர்ர்’ என்ற ஓசையுடன் வந்து நின்றது. எதிர் பார்த்துக்கொண்டிருந்த ஆசிரியர் எதிரில் வந்து நின்றார். மற்றும் நண்பர்கள் சிலரையும் அழைத்து வந்திருந்தார். “இன்றியமையாத நிலை” என்ற ஒரே சொல்லில் தவிக்கவிட்டதற்கான காரணத்தை அடக்கி விட்டார். அழகிரிக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. அவன் எவ்வாறெல்லாமோ உபசரிக்கத் தொடங்கி விட்டான்.

இன்னும் சில நிமிடங்களே இருந்தன. விடியற் காலை திருமணம் ஆனதால் கூட்டம் அவ்வளவாக இல்லை. “உறவும் நட்பும் சூழ” என்பதற் கொப்ப அணுக்கமானவர்கள் மட்டும் அங்கே சூழ்ந்திருந்தார்கள்.

கெட்டிமேளம் முழங்கிற்று; தாலிகட்டி விட்டான் அழகிரி. இருந்த கூட்டமும் குறைய ஆரம்பித்தது. திருமண சாங்கியங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. ஆசிரியரும் மற்றும் அவரது நண்பர்களும் நானும் அங்கேயே நின்று சாங்கியங்களைக் கவனித்துக் கொண் டிருந்தோம்.

ஒரு செப்புக் குடத்தில் நீர் நிறைந்து மிஞ்சியோ மோதிரமோ போட்டு ஏக காலத்தில் மாப்பிள்ளையும் பெண்ணும் கையை விட்டுத் துழாவி அந்தப் பொருளை எடுத்துவிட வேண்டும். பெண்ணும் பிள்ளையும் அறிமுகம் செய்வதற்காக அப்படியொரு நிகழ்ச்சியை நமது முன்னோர்கள் சம்பிரதாயமாகக் கொண்டார் களோ என்னவோ? இந்தத் திருமணத்திலும் எல்லா விதமான நிகழ்ச்சிகளும் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது, இந்த ஒன்று மட்டும் விடுபட்டு விடவா முடியும்? புரோகிதர் விதி முறைகளெல்லாம் சொல்லி போட்டி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

“படீர்…” என்று ஒரு சத்தம் கேட்டது. புரோகிதர் திருதிருவென விழித்துக் கொண்டு நொடிப் பொழுது நடுங்கிப் போய்விட்டார். ஆமாம் அவசரத்துக்கு என்றானதால் செப்புக் குடத்துக்குப் பதிலாக மண் குடத்தில் கணையாழியைப் போட்டு எடுக்கச் செய்ததில் ஏககாலத்தில் இரண்டு கரங்கள் போராடியதில் கைகள் தட்டுப்பட்டு மண்குடம் உடைந்து விட்டது… அவ்வளவு தான். உடனே புரோகிதரும் நிகழ்ச்சியைத் தொடராது மணமக்களை வாழ்த்தி அனுப்பிவிட்டார். நாங்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. புரோகிதர் மட்டும் நடக்கக் கூடாத ஒன்று நடந்து விட்டதைப் போன்று அமைதியின்றிக் காட்சியளித்தார். நாங்கள் சமாதானம் செய்தோம். பெண் வீட்டுக்காரர்களில் ஒருவர் அதுவும் ஓர் இளைஞர் மட்டும் அதைத் கவனித்திருந்து புரோகி தரை அணுகி விபரம் கேட்டார். அவரும் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். நாங்கள் அதிலெல்லாம் சிரத்தைகொள்ளவில்லை. காரணம் நம்பிக்கையில்லாத தாக இருக்கலாம். ஆமாம்; மீனவனுக்கு மிதப்பத்தில் தான் கண்ணோட்டம் இருக்கும். அது போல் பெண் வீட்டுக்கார அந்த இளைஞர் மட்டும் வெகுவாக விசாரித்துக் கொண்டிருந்தார்.

அழகிரிக்கு திருமணம் ஆகி மூன்று தினங்கள் ஆகி யிருக்கும். இன்னும் அவர்கள் இணை சேர்ந்து எங்கும் செல்லவில்லை. அதற்கான வாய்ப்பும் வரலில்லை. அலுவலகத்தில் ஓய்வு கிடைக்காதது ஒரு முக்கிய காரணமாக இருந்தது. அடுத்துவரும் வெள்ளிக்கிழமை தனிக்குடித்தனம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெறு வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. வியாழக்கிழமை காலை வேலைக்குப் போகும் போது மோட்டார் சைக்கிளில் போய்க்கொண்டிருந்தபோது அழகிரியை ஒரு பெரிய மர லாரி மோதிவிட்டதாக தகவல் வந்தது. சித்தம் குழம்பிய நிலையில் வைத்திய மனைக்குச் சென்று பார்த்தேன். அங்கே எல்லோரும் கண்ணீரும் கம்பலையுமாகக் காட்சியளித்தார்கள். அழகிரி செத்துப் போய்க் கிடந்த அலங்கோலக் காட்சியைத் தான் என்னால் பார்க்க முடிந்தது. இப்படித்தான் நடந்து முடிய வேண்டும் என்றிருக்கும் போது என்ன சொல்லி என்ன செய்வது? இறுதி யாத்திரைக்குப்பயணப்படுத்திக் கொண்டிருந்தார்கள் அழகிரியை. இடுகாட்டிலும் சாங்கி யங்கள் நடைபெற்றன. அங்கே ‘எனக்கு கல்யாணத் தன்னைக்கே தெரியும். குடம் உடைஞ்சதும் சாமியைக் கேட்டேன். அவரு சொன்னாரு பொண்ணாவது பிள்ளையாவது செத்துப் போயிடுவாங்கன்னு…’ என்று திருமண சமயத்தில் மண்குடம் உடைந்த போது புரோகிதரை அணுகி விபரம் கேட்டு கொண்டிருந் தானே அதே அந்த இளைஞன் சடங்குபூர்வ சரித்திரம் சொல்லிக் கொண்டிருந்தான். எனக்கு ஆத்திரம் தான்! இருந்தாலும் நம்மால் குழப்பம் வந்ததாக இருக்கக் கூடாது என்று அமைதியாக இருந்தேன்.

காலப்போக்கில் எந்த ரகசியமும் வெளிப்படத்தான் செய்கிறது. அழகிரியை மோதிய அந்த மர லாரியை ஓட்டியவனே அந்த இளைஞன்தான் என்று கேள்விப் பட்டபோது நான் அதிர்ச்சி அடைந்தேன்.

பெண்ணுக்குத் தாய் மாமனாம் அவன். அந்தப் பெண்ணைத் தான் திருமணம் செய்துகொள்ளக் கேட்ட போது மறுத்துவிட்டு அழகிரிக்குக் கொடுக்க முன் வந்தார்களாம். அந்தப் பெண் வாழ்வதை நான் பார்க் கிறேன்’ என்று வஞ்சினம் உரைத்தானாம். அவன் செய்த படுகொலைக்குச் சாத்திர சம்பிரதாயங்களைக் காரணம் காட்டி மறைத்து விட்டான். யாரிடமோ கொண்ட வெறித்தனத்துக்கு அழகிரி பலியாகிவிட் டானே என்று ஏங்கித் தவித்தேன். ஆண்டுக்கணக்கு ஆகி விடவில்லை; ஏன் ஒருமாதம்கூட ஆகவில்லை; ஒரே ஒரு வாரம் தான் ஆகிவிட்டிருந்தது. நின்று கொல்லும் தெய்வத்துக்குக்கூட நிலை கொள்ள முடியவில்லை போலும்.

அதே அந்த மரலாரி ஒரு பெரிய படுபாதாளத்துக் குள் விழுந்து அந்தஇளைஞன் உருக்குலைந்துபோனான். தகனத்துக்குக்கூட உடலின் கூட்டுப் பொருட்கள் கிடைக்கவில்லை என்று பரவலாகச் சொல்லிக் கொண் டார்கள். அது கேட்டு எனக்கு எந்த விதமான உணர்வும் தோன்றவில்லை.

அழகிரியின் வாழ்க்கை வரலாற்றுப் பாடத்தை மனக்கண்ணில் படித்து முடித்துவிட்ட அலுப்பில் நெட்டி முறித்துக் கொண்டே எழுந்தேன். மணி பன்னிரண்டரை ஆகிவிட்டிருந்தது. திறந்து கிடந்த சாளரத்தின் வழியாகத் தெருவைப் பார்த்தேன். தெரு விளக்கைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கான விட்டில் பூச்சிகள் ஆக்ரமித்துக்கொண்டிருந்தன. விளக்கைச் சுற்றிச் சுழன்று அந்த விளக்கிலேயே விழுந்து உயிர் விடும் “விட்டில் பூச்சிகளுக்கும்” தீமைகளையே செய்வ தோடு அந்த மாயை வடிவத்தையே வட்டமிட்டு அந்தத் தீமைகளாலேயே சுட்டெரிக்கப்படும் உருக்குலைந்த அந்த இளைஞன் போன்றோருக்கும் எனக்கு வேறுபாடு தெரியவில்லை. என்னையும் அறியாமல்”விட்டில் பூச்சி” என்று ஒருமுறை சொல்லி கொண்டேன்.

– தமிழ் முரசு, 06-03-1960.

– சிந்தனைப் பூக்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதற்பதிப்பு: 1988, விஜயா சபரி பதிப்பகம், சென்னை.

மு.தங்கராசன் தமிழகத்தின் திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்திலுள்ள தளுகை பாதர்பேட்டை என்ற ஊரில் 1934ல் பிறந்தார். இரண்டாவது வயதிலேயே தனது தாயை இழந்தவர், தந்தையோடு மலாயாவுக்கு வந்தார். ஜோஹூர் மாநிலத்திலுள்ள ‘நியூஸ்கூடாய்’ தோட்டத் தமிழ்ப் பள்ளியியில் ஆசிரியராக இருந்த தனது தந்தையிடம் தமிழ்க் கல்வியைக் கற்றார். 1955ல் ஆசிரியர் பட்டயம் பெற்ற இவர் உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளி உட்பட பல்வேறு பள்ளிகளில் தலைமையாசிரியராகவும் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1955ல் தமிழ்முரசில் பிரசுரமான…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *