கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 7, 2018
பார்வையிட்டோர்: 12,627 
 
 

“”உங்க தம்பி துபாய்லேருந்து போன் பண்ணினார்” அலுவலகத்திலிருந்து அப்போதுதான் திரும்பியிருந்தேன். ஃப்ரெஷ் செய்து கொண்டபின் டி.வி.க்கு எதிரில் வழக்கமான இடத்தில் உட்காரும்போது லட்சுமி சொன்னாள். கையில் ஆவியுடன் காபி.

என்னைப்பற்றி – நான் ராமகிருஷ்ணன். ஆண்டு வருமானம் சில லட்சங்கள். ஒழுங்காக வரி கட்டும் தொழில் முனைவன். அழகான மனைவி லட்சுமி. செல்லக்குட்டி ஹரிணி – ஒரே மகள். ஐந்து வயது சுட்டிப் பயல்.

என் தம்பி ரமணி துபாயில் என்ஜினீயர். எப்போதும் வீட்டுக்குத்தான் ஃபோன் போடுவான். அலுவலகத்திற்கு ஃபோன் பேசக் கூடாது என்பது எங்களுக்குள் எழுதப்படாத ஒப்பந்தம்.

“”என்னவாம்?”

வீடுகாபி நன்றாக இருந்தது.

“”ஃப்ளாட் கட்டறவங்க அவரை அப்ரோச் பண்ணியிருக்காங்க போலிருக்கு. சூப்பர் பில்டர்ஸ் நம்ம வீட்டைக் கேக்கறாங்களாம். ரெண்டு பேருக்கும் தனித்தனியா 3 பெட்ரூம் ஃப்ளாட் தருவாங்களாம். கைலயும் ஒரு கோடி ரூபாய் போல கிடைக்குமாம். சீக்கிரமே கான்டாக்ட் பண்ணுவாங்களாம்” லட்சுமியின் தகவல்கள் எப்போதும் கச்சிஹதம்.

“”என்ன பண்ணலாம்?”

“”அக்கம் பக்கத்திலே எல்லா வீடும் ஃப்ளாட்டா மாறிடிச்சு. நம்மள மாதிரி ஒன்னு ரெண்டுதான் தனி வீடு. திருட்டு பயம் ஜாஸ்தி ஆயிட்டது. போன வாரம் அடுத்த தெருவிலே கத்தியைக் காட்டி நகையைப் பிடுங்கிட்டானாம். யோசிக்கலாம்னுதான் தோணுது”

பகல் பொழுதில் தனியாக இருப்பவள் அவள்தான். வாட்ச்மேன் இருந்தாலும் பயம் பயம்தான். அவளுக்கு ஓகே.

“”யோசிப்போம்”

ரிமோட் நியூஸ் சேனல்களை மேய ஆரம்பித்தது.

இந்த வீட்டை என் அப்பாதான் கட்டினார். இந்த இடம் அப்போது சென்னை நகரத்தின் விளிம்பில் – தற்போது மாநகர மையம். ஐந்து கிரவுண்ட். மேலும் கீழுமாய் ஒரே மாதிரி வீடுகள். பார்த்துப் பார்த்து ஆசை ஆசையாய்க் கட்டின வீடு.

ரமணி என்ஜினீயரிங் கிண்டியில் முடித்துவிட்டு துபாய் போய்விட்டான். நானும் என்ஜினீயர்தான். வெளிநாடு போக விருப்பமில்லை. மாமனாரின் பணம் மற்றும் நிர்வாகத்தில் ஸ்மால் ஸ்கேல் இன்டஸ்ட்ரியின் அதிபன்.

ஹரிணி – பல ஆண்டு பிரார்த்தனைகளின் பலன். சற்றே தாமதமான கடவுளின் பரிசு. செலவான வருஷங்களுக்கும் சேர்த்து டன் டன்னாய் மகிழ்ச்சி. ஐந்து கிரவுண்டு வீட்டின் அழகு ராணி.

வீட்டைவிட தோட்டத்தைப்பற்றி அதிகம் சொல்லியே ஆக வேண்டும். அப்பாவுக்குத் தோட்ட வேலையில் அதீத ஆர்வம் – வெறி – பைத்தியம். காம்பவுண்டை ஒட்டி நிழல் தரும் மரங்கள் – வேம்பு, மா, அசோகம் இன்ன பிற – அதன் பின் காய்கறிப் பாத்திகள் அவரை, தக்காளி, கத்தரி – பார்டர் கட்டுவதுபோல் பூச்செடிகள் – அதிலும் ரோஜாக்கள் பல நிறங்களில். பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

குழந்தைகள் விளையாட சிறிய பார்க் – ஊஞ்சல், சீசா, சறுக்கு மரம் – பாட்மின்டன் கோர்ட் – புல்வெளிகள் – ஒவ்வோர் அங்குலத்திலும் அப்பாவின் உழைப்பு தெரிந்தது. ஹரிணி பிறக்கும் முன்பே அவர் காலம் முடிந்தது.

ஏழெட்டு நாள்களுக்குப் பின் – சூப்பர் பில்டர்ஸ் ஃபேக்டரிக்கு வந்தார்கள்.

பேச்சுவார்த்தை சுமூகம் – எதிர்பார்த்தபடி – ரமணியும் கான்ஃப்ரன்ஸ் கால் மூலம் இணைந்தான். இந்த முறை மட்டும் ஆஃபீஸ் கால் அனுமதி. அடுத்த ஞாயிறு பில்டர்ஸ் வீட்டுக்கு வருவதாக ஏற்பாடு.

சனி, ஞாயிறு காலைகளில் மொட்டை மாடியில்தான் எனக்கும் ஹரிணிக்கும் வாசம். வெயில் நன்றாகச் சுடும் வரை உட்கார்ந்து இருப்போம். மரங்களின் நிழலில் குளுமை. விதவிதமான பறவைகள். அணில்களின் சப்தங்கள் இனிய ஸ்வரங்களில். கவலைகளே இல்லாத சந்தோஷ உலகம். “”அங்க பாருப்பா அணில் – பக்கத்திலேயே மைனா. இன்னிக்கு ராமுவைக் காணோமே? அதோ புதுசா அணில் குட்டி. பயந்துகிட்டே வருதுப்பா”

குழந்தை கைகொட்டி சிரித்தாள். அவள் கை கடலை மிட்டாய்க்கு அணில்கள் போட்டி போடும். தானியம், பிஸ்கட் எடுப்பதில் பறவைகளுக்குள் நட்புரீதியான போட்டி. ராமு, ராஜு, ரம்யா, கிச்சா என்று பெயர்கள் வேறு. எப்படித்தான் அடையாளம் தெரியுமோ? பெயர் சொன்னதும் அணிலோ, மைனாவோ குரல் கொடுத்துவிட்டு அருகில் வரும்.

அந்த காலைப்பொழுதுகள் மிகவும் ரம்யமானவை. ஹரிணியின் இடைவிடாத கேள்விகள் – எனக்குத் தெரிந்த பதில்கள் – சமாளிப்புகள் – மாய உலகில் நானும் அவளும்.

“”அவங்க வந்திருக்காங்க”

லட்சுமியின் குரல் இந்த உலகத்துக்கு அழைத்தது. ஃப்ளாட் பில்டர்கள் வருவதாகச் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

“”அவங்களை மேலே அனுப்பு. கூடவே காபி, பிஸ்கட்”

“”என்னப்பா?” ஹரிணி கேட்டது.

“”சொல்றேன் கண்ணம்மா”

காபி, பிஸ்கட் முடிந்தவுடன் அவர்கள் வீட்டின் சுற்றுப்புறங்களை மேலேயிருந்தே பார்த்தார்கள். முகங்களில் திருப்தி.

“”சார் எல்லாம் நல்லா இருக்கு. நாங்க நெனச்சதைவிட – அண்ணா நகர்ல 3 பெட்ரூம் ஃப்ளாட்ல ப்ராஜெக்ட் முடியற வரைக்கும் நீங்க தங்கலாம். வாடகை கிடையாது. எப்ப மூவ் பண்றீங்கன்னு சொன்னா அக்ரிமென்ட் போட்டு அட்வான்ஸ் கொடுத்திடலாம்”.

ஹரிணி குழப்பத்துடன் என்னையும் அவர்களையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்.

“”சீக்கிரமே சொன்னா வேலையை உடனே ஆரம்பிக்கலாம். எல்லா மரங்களும் தேவைப்படாது. நாலு மூலைக்கு நாலு மரம் போதும். செடி கொடி எல்லாம் வெட்டணும். லாண்ட்ஸ்கேப் பண்ணனும்”.

பேசிக்கொண்டே போனார்கள்.

ஹரிணி மடியிலிருந்து குதித்தாள்.

“”அம்மா”

அலறியபடி மாடிப்படிகளில் ஓடினாள். எனக்குச் சங்கடமாய் இருந்தது.

“”போன் பண்றேன்”

கீழே வந்தபோது குழந்தை லட்சுமியின் மடியில் – உடம்பு குலுங்க குலுங்க விம்மல் – ஒரே அழுகை.

“”என்ன ஆச்சு?”

“”ஒண்ணும் பேசமாட்டேங்கிறா”

ஹரிணியின் முதுகை மெல்லத் தடவிக் கொடுத்தேன்.

“”அழாதேடா செல்லம்”

“”உன்கிட்ட நான் பேச மாட்டேன்”

குரலில் ஆக்ரோஷம். சின்னக் குழந்தைக்கு இவ்வளவு கோபம் வருமா?

“”எங்கேப்பா போறோம்?”

“”அண்ணா நகருக்கு, புது வீட்டுக்கு, ஒனக்கும் புது ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க, ஸ்கூலும் பக்கத்திலேதான். ஜாலியா இருக்கும். சமாதானப்படுத்த முயன்றேன் – குரலில் ஒரு தணிவு – என்னை அறியாமலே.

“”சரிப்பா, நீ வேணா புது வீட்டை வச்சுக்கோ, எனக்கு புது ஃப்ரெண்ட்ஸ் வேணாம். இங்க இருக்கற பழைய ஃப்ரெண்ட்ஸ் – அணில், மைனா – கிளி எங்க போவாங்க? ராமுவையும் மத்தவங்களையும் யார் பாத்துப்பாங்க? அந்தக் குட்டி அணிலுக்கு பேர்கூட இன்னும் வைக்கல. நீ வேணா போ, நான் வரமாட்டேன். மரத்தை வெட்ட மாட்டேன்னு சொல்லு”

சட்டையைப் பிடித்து உலுக்கினாள்.

என்ன சொல்வது? எப்படிப் புரிய வைப்பது?

“பணத்தையும் வசதிகளையும் தேடிப் போகும்போது மற்ற விஷயங்கள் கண்களில் படாது’ அப்பா அடிக்கடி சொன்னது நினைவில் வந்தது. அவர் வியர்வை சிந்தி உருவாக்கிய தோட்டத்தை அழித்து புது வீடு தேவையா?

ஹரிணியின் ஃப்ரெண்ட்ஸ் பறவைகள், பிற ஜீவராசிகள் இந்த சென்னையின் கான்க்ரீட் காட்டில் எங்கே போகும்? வேறு இடம் கிடைக்குமா?

“ஏஸி இல்லாமலே வீடு ஜிலுஜிலுன்னு இருக்கே’

வீட்டுக்கு வரும் உறவினர்கள் சொன்னது உண்டு.

இதையெல்லாம் யோசிக்கவே இல்லையே!

என்ன காரியம் பண்ண இருந்தேன். வெட்கத்தில் தலை தாழ்ந்தது.

“”இல்லம்மா உன் ஃப்ரெண்ட்ஸ் எங்கேயும் போக வேண்டாம். அவங்க என்னிக்கும் எனக்கும் ஃப்ரெண்ட்ஸ்தான். நாம இங்கேயே இருப்போம்”

கண்ணீருடன் குழந்தையைக் கட்டி அணைத்துக் கொண்டேன். லட்சுமியும் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“”ஹாப்பி… ஹாப்பி” ஹரிணி கைகொட்டிச் சிரித்தாள்.

என் தம்பி நல்லவன். சொன்னால் புரிந்து கொள்வான்.

– ஆகஸ்ட் 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *