(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“என்ன நம்மிட ஊட்டுக்க கூட்டிக் கொண்டு காட்டுங்க மகள்.” தனது குடிசையின் முன்னால் போய்க் கொண்டிருந்த தன் மகள் பர்ஸானாவிடம் சல்மா தனது கோரிக்கையை முன் வைத்தாள். பர்ஸானாவோ பல முறை கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன அவ்வார்த் தையை வெறும் புலம்பல் என்று கருதியவளாய் அதற்கு எதுவித பதிலுமே கூறாது நடையைத் தொடர்ந்தாள். ஆனால், அந்த வீடோ, சல்மாவும் கணவனும் பர்ஸா னாவின் திருமணத்தின் போது அவளுக்கும் கணவனுக்கும் சீதனமாக வழங்கியதுதான். அப்படியிருந்தும் பர்ஸானா அவளின் அவ் வேண்டுகோளை கருத்திலே எடுத்துக் கொள்ளவில்லை.
சல்மா, தனது மகளின் இப்புறக்கணிப்பான போக் கை ஒருமாதிரியாகச் சமாளித்துக் கொண்டு குடிசைக்குள் அடங்கிக் கொண்டாள். என்றாலும் அவளின் ஆசை அடங்கவில்லை.
ஒரே வளவுக்குள் அவ்வீட்டின் பின்புறமாய் மூன்று நான்கு மீற்றருக்கு அப்பால் அமைந்திருந்த அக்குடிசைக் குள்ளேதான் அவள் உட்கார்ந்திருந்தாள். அவளின் பார் வையோ, விரிந்துகிடந்த அக்குடிசையின் கதவு வழியால் அவ்வீட்டையே ஊன்றி அவதானித்துக்கொண்டிருந்தது.
சல்மாவுக்கோ வயது எழுபது எழுபத்தைந்திருக் கலாம். அவள் அக்குடிசைக்கு வந்து ஏறக்குறைய ஐந்து வருடங்கள் ஆகின்றன. அவளால் எழுந்து நடமாடமுடி யாது. அதிகமான பொழுது படுக்கையிலும், இருப்பிலுமே கழிவதுண்டு. மிக அத்தியாவசிய தேவைகளுக்காக வெளி யிலே செல்லவேண்டியேற்பட்டால் மற்றவர் துணை தேவைப்படுகிறது. அவளுக்குள்ள ஒரேயொரு நோய் வயிற்றுப்போக்குத்தான். சில வேளைகளில் குடிசையிலே அவளது படுக்கையிலோ அல்லது தரையிலோ அவளையும் மீறிக்கொண்டு மலம் வெளியேறி மகளுக்கு வேலையை வைத்துவிடும். அடிக்கடி ஏற்படுகின்ற இவ்வயிற்றுப் போக்கினைக் குணப்படுத்த இயலாமற்போனதாலேதான் அவளுக்கென்றே அக்குடிசை உருவாக்கப்பட்டதும், அதிலே அவள் வாழ்ந்துவரவேண்டிய நிலை ஏற்பட்டதுமாகும்.
அவள் அக்குடிசைக்கு வருவதற்கு இரு வருடங்க ளுக்கு முன்பே அவளின் கணவன் இவ்வுலகிலிருந்தே விடைபெற்றுக்கொண்டான். அன்று முதல் அவள் தனது மகள் பர்ஸானாவின் பராமரிப்பிலும் வாழ்ந்து வருகிறாள்.
அவளின் வாசஸ்தலமாக விளங்கிய அக்குடிசையோ, சாதாரண ஒரு வீட்டின் ஓர் அறைக்குச் சமமானதுதான். சுவர்கள் கற்களினால் கட்டப்பட்டு, கூரை கிடுகுகளினால் வேயப்பட்டிருந்தது. தரைக்கு சீமெந்து இடப்பட்டிருந்தது. அக்குடிசையின் முன்பக்கக் கதவைத் திறந்துவிட்டதும் பார்வை வெளியே படக்கூடிய வகையிலே தரையில் போடப்பட்டிருந்த தும்பு மெத்தைதான் அவளது படுக்கை. பழுப்பு நிறமாக நிறம்மாறிப்போயிருந்த அம் மெத் தையிலே மிகவும் தொய்ந்து ஓரங்கள் பிய்ந்து போன ஒரு பாய் விரிக்கப்பட்டிருந்தது. அதிலே சல்மா கையை ஊன்றியவாறு உட்கார்ந்திருந்தாள். உடம்பெல்லாம் பட படவென்று நடுங்கிக் கொண்டிருந்தது. அவளின் உடலை மிகவும் நீண்ட நாள் உழைத்துக் களைத்துப்போன ஒரு சேலையும், ஒரு சட்டையும் மறைத்திருந்தன.
தற்போதைய நிலையில் தாயைத் தனது வீட்டுக்குள் நடமாட விடுவதுகூட பர்ஸானாவுக்கு கொஞ்சமும் விருப்பமாக இல்லை. தனது தாயின் வேண்டுகோளுக்கு இசைந்து அவளை வீட்டுக்குள் அழைத்துச் சென்று காட்டினால், அங்கு அவள் நிரந்தரமாகவே தங்கிவிடப் பிடித்துக்கொள்வாள். பின்னர் நிலைமையைச் சமாளிக்க முடியாமற்போய் அவளை வீட்டிலேயே வைக்க வேண்டி வந்துவிடும். அவ்வாறு அவளை வீட்டிலே வைத்து விட்டால் திடீர் திடீரென்று மலங்கழித்து விடுபவள் வீட்டுக் குள்ளும் அவ்வாறு நடந்துகொள்ளவேண்டி வந்துவிடும். அதனால் வீடு அசிங்கமாகிவிடும். எதற்கும் அவளை வீட்டுக்குள்ளே எடுக்காமலிருந்தால் நல்லது என்று ஏற் கனவே அவள் தனக்குள் முடிவு செய்திருந்தாள். அதனாலேயே தனது தாயின் கோரிக்கையை அவள் தட்டிக் கழித்துவந்தாள். இத்தனைக்கும் சல்மா, சாதாரணமான ஒருவளும் அல்லள். அவள் பர்ஸானாவுக்கு அவ்வீட்டைக் கொடுப்பதற்கு முன்னர் அவ்வீடு அவளின் ஆட்சியிலிருந்த போது அவள் அவ்வீட்டை உயிரைவிடவும் மேலாகப் பேணிவந்தாள். அவளின் கணவன் தனது மனைவியின் இந்த அதீத உணர்வுக்கு உடன்பாடு இல்லைதான். என்றாலும் அவன் அவளுக்கு இடையூறாகவும் அமைந்து விடவில்லை.
சல்மா அந்த வீட்டைப் பேணிய முறைக்கு அந்தக் கிராமத்தில் என்ன இந்த உலகத்திலேயே யாருமே நிகராகமுடியாது. ஆனால், அவளின் அந்த வீடு பெரிய மாளிகையென்றும் சொல்வதற்கில்லை. என்றாலும் மிகவும் குறைந்த தரத்தில் உள்ளது என்றும் கூறிவிடமுடியாது. பெரும்பாலும் ‘போடியார்’ மாரும், வணிகர்களும் நிறைந்த அந்தக் கிராமத்திலுள்ள சராசரி வீடுகளில் ஒன்றாகவே அது விளங்கியது.
அப்போது சல்மா. அவ்வீட்டில் பெண்கள் வீட்டுக் குள் நுழையும் கதவின் வெளிப்பக்கமாகவுள்ள படியிலே எப்பொழுதும் ஒரு வாளியிலே நீரை நிரப்பி, அதனுள்ளே ஒரு பாத்திரத்தையும் இட்டு வைத்திருப்பாள்.
வீட்டுக்குள் போகவரும் எந்தப்பெண்ணும் முதலில், வெளியே உள்ள அந்தப்படியிலே செருப்பைக்கழற்றி வைக்கவேண்டும். பின்னர், படியிலே வைக்கப்பட்டிருக்கும் நீரினால் கால்களைக் கழுவிக்கொள்ளவேண்டும். அதன் பின்புதான் அப்பெண் அவ்வீட்டுக்குள் நுழையலாம். ஆண்களைப்பொறுத்தவரையில் அவர்கள் வீட்டுக்குள் செல்லும் வழியும் வேறாகவிருந்தது. அவர்கள் கால்களை நீரினால் கழுவிக்கொண்டு உள்ளே நுழைவதை அமுல் படுத்துவதும் அவளுக்கு இயலாத காரியமாகவிருந்தது. ஆண்களுக்குரிய வழியில் அவர்களது செருப்புகளை மட்டும் படியிலே கழற்றிவைத்துவிட்டு உள்ளே நுழையும் முறை யைத் தனது கணவனைக் கொண்டு செயற்படுத்தி வந்தாள் அவள்.
ஒரு முறை ஒரு பெண், தான் காலில் அணிந்து வந்திருந்த செருப்பை கழற்றி வைக்காமலும், கால்களை நீரினால் கழுவிக் கொள்ளாமலும் திடீரென்று அவ்வீட்டி னுள்ளே நுழைந்துவிட்டாள். அவளுக்கு அவ்வீட்டிற்குரிய நடைமுறைகள் தெரியாது. அவ்வாறு உள்ளே நுழைந்த அவளைப் பார்த்ததும் சல்மா பதறிப் போனாள்.
“என்னகா செருப்போட ஊட்டுக்கவந்த. சீ… வெட்டயிலபோய் படியில் செருப்பைக் கழற்றிப் போட் டுட்டு, படியில ஒரு ஏனத்துக்க தண்ணி வச்சிருக்கன். காலயும் கழுவிக்கிட்டு உள்ளுக்கவா.”
“விஷயம் எனக்குத் தெரியா மகள், வந்திட்டன்.” வீட்டுக்குள் வந்தவள் திரும்பி வெளியே விடு விடு வென்று விரைந்து நடந்தாள்.
இன்னுமொரு முறை வேறொரு பெண் தனது கைக்குழந்தையோடு அவ்வீட்டிற்குள் வந்தாள். அவளோ. அவ்வீட்டு நிலைமையை ஓரளவு தெரிந்தவள். வீட்டுப் படியிலே செருப்பைக்கழற்றி வைத்துவிட்டு கால்களை நீரினால் கழுவிக்கொண்டு உள்ளே வந்தாள். வீட்டு நடை முறையை அனுசரித்துவந்த அவளைப் பார்த்ததும் சல்மாவுக்குச் சந்தோஷமாகவிருந்தது. அவளைக் கதிரை யிலே உட்காரவைத்து உரையாடிக் கொண்டிருந்தாள். இடை நடுவில் வந்திருந்தவளின் மடியிலிருந்து குழந்தை மெல்லக்கீழே இறங்கி சீமெந்துத்தரையில் விளையாடிக் கொண்டிருந்தது. திடீரென்று அக்குழந்தை அங்கு சிறுநீர் கழித்துவிட, அது தரையில் தேங்கி நின்றது. அதைப் பார்த்ததும் சல்மா துடித்துப்போனாள். தீயிலே மிதித்து விட்டவள் போல் துள்ளி எழுந்தாள்.
”சீ…! இந்தப் பிள்ளை மூத்திரம் உட்டுட்டுதே” என்று கூறியவளாக சமையல் கட்டுப்பக்கமாக ஓடினாள். ஒரு பாத்திரத்திலே நீர் அள்ளிவந்து சிறுநீர் தேங்கி நின்ற இடத்தில் ஊற்றி அதனைத் தும்புக்கட்டினால் வெளியிலே ஒதுக்கிவிட்டாள். பின்பு அவ்விடத்திலே சாக்கொன்றைக் கொண்டுவந்து போட்டாள். இந்த நடவடிக்கைகளைப் பார்த்ததும் வந்தவள் பயந்துபோனவளாய் தன் குழந்தையை அள்ளிக்கொண்டு ஒதுங்கி நின்றாள்.
“கொளந்தப் புள்ளக்கி என்ன தெரியும். மூத்திரம் உட்டுட்டுது. நான் வாறன்” என்று கூறியவளாய் வீட்டி லிருந்து வெளியே கிளம்பினாள்.
இவ்வாறாக மனிதத்தன்மையற்ற வகையிலே, மிக வும் பேணிப்பாதுகாத்துவந்த அவ்வீட்டிற்குள் இன்று சல்மாவினால்கூட போகமுடியாத நிலை வந்துவிட்டதே. அவ்வீட்டிற்குள்ளே இருந்துபார்க்க, உறங்கிப்பார்க்க முடியாவிட்டாலும் நடந்தாவது பார்க்கவேண்டுமென்ற ஆசை பெரிதாக வளர்ந்துகொண்டுவந்தது. இதனை உணரமுடியாத பர்ஸானா தனது தாயின் ஆசையைச் சாதாரணமாக உதாசீனம் செய்துவந்தாள். என்றாலும் அதனை விட்டுவிட சல்மாவின் மனம் சம்மதிக்கவில்லை.
சல்மாவின் நெஞ்சில் துன்பத்தின் தகிப்பு சற்று அதிகரிக்கவே அவள், தனது மகள் பர்ஸானாவின் வீட் டையே ஊன்றி அவதானித்துக் கொண்டிருந்த தன் பார்வையை வலிந்து இழுத்துக் கொண்டு படுக்கையிலே மெல்லச் சாய்ந்து கொள்கிறாள். சிறிது நேரத்தின் பின் அவள் மீண்டும் கைகளை ஊன்றியவாறு எழுந்திருந்தாள். பர்ஸானா தனது குடிசையின் முன்னால் எப்போது வருவாள் என்று எதிர்பார்த்திருந்தாள். வந்ததும், “மகள் பர்ஸானா நம்மிட ஊட்டுக்க என்னக் கொஞ்சம் கூட்டிக்கொண்டு காட்டுங்க. எனக்கு அதுக்க போறத்துக்கு மிச்சம் விருப்பமாரிக்கு’ என்றாள். அதனைக் கேட்ட பர்ஸானா ‘டக்’ கென்று நின்றாள். தனது தாயைக் கூர்ந்து பார்த்தாள். ‘உம்மா, அந்த பீட்டுக்க என்ன பொன்னாரிக்கு. போட்டுட்டு சும்மா இருங்க. உங்களால்தான் பெரிய கணகட்டா இருக்கு” என்று விட்டு அங்கிருந்து அகன்றாள்.
தனது விருப்பம் தட்டிக்கழிக்கப்பட, தட்டிக்க ழிக் கப்பட மேலும் அது மிகவும் ஆவேசத்தோடு வளர்ந்து கொண்டிருந்தது. பர்ஸானா அதனை எங்கே அறிவாள்? சல்மா மீண்டும் ஏமாற்றத்தோடு படுக்கையிலே சாய்ந்து கொள்கிறாள். அவளிடமிருந்து, ‘ம்..ஹு’ என்று நெடு மூச்சொன்றும் வெளிப்பட்டது.
அன்று முற்பகல் பத்தரை பதினொரு மணியிருக் கும். சல்மா திரும்பவும் தனது நடுங்குங்கரங்களை மெல்ல ஊன்றியவாறு படுக்கையிலே எழுந்திருந்தாள். தனது குடிசையின் வாசல் வழியே பார்வையைச் செலுத்தினாள். எவரின் நடமாட்டமும் அங்கு தென்படவில்லை. தனது மகளது வீட்டின் பின்பக்கக்கதவொன்று திறந்து கிடப்பது அவளின் பார்வையிலே பட்டது.
அவ்வீட்டினுள் சென்று நடந்து பார்க்கவேண்டு மென்ற ஆசை இப்போது பூதாகரமாக வளர்ந்து ஒரு வெறியாகவும் மாறிக்கொண்டிருந்தது. தனது மகள் அவ் வீட்டினுள் தன்னை அழைத்துச் செல்லமாட்டாள் என்ற எண்ணமும் கூடவே எழவே, மெல்ல எழுந்து சுவரிலே பிடித்துக்கொண்டு நடுங்கி நடுங்கி நடந்து வந்து குடிசைப்படியைத்தாண்டி வெளியே கால்வைக்க முயன்றாள். சரியாக நின்றுகொள்ள இயலாமல் தள்ளாடி குடி சையின் முன்பக்க ஓரமாகக் குவிக்கப்பட்டிருந்த ‘முண்டுக்கல்’ குவியலின் மேல் தெறித்து விழுந்தாள். ஒரு கல்லின் கூர் அவளது தலையின் பின் பக்கத்தைக் குத்திப் பிளந்துவிட, குருதி ஆறாய்ப்பெருக மயங்கிப்போனாள்.
நீண்ட நேரத்தின் பின், தைத்து முடித்த தனது சட்டையை அப்படியே தையல் ‘மெசினிமவுட்டு தற்செயலாக வீட்டின் பின்பக்கக் கதவு வழியாக வெளியே வந்த பர்ஸானா, தனது தாய் தரையிலே கற்குவியலின் பக்கத்தே இரத்தம் தோய்ந்த நிலையிலே மயங்கிப்போய்க் கிடப்பதைப் பார்த்தாள். பதறிப்போனாள்; ஓடோடிச் சென்று அள்ளி அணைத்தவளாய், “ம்மா.. என்ட உம்மா …” என்று வாய்விட்டு அழுதாள். அவ்வேளை கணவரும் வீட்டில் இல்லாததால், சில வினாடிகளிலேயே தன்னைச் சுதாரித்துக்கொண்டு செயலிலே இறங்கினாள். தன் தாயை விரைவாக அயலிலே வாழ்கின்ற தனது குடும்பத்தவர் ஒருவரின் துணையோடு ஊரிலுள்ள அர சாங்க மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சேர்த்தாள் விடயமறிந்து அவளின் கணவனும் உடனேயே அங்கு வந்து சேர்ந்தான்,
சல்மா. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது முதல் போதிய சிகிச்சைகள் செய்யப்பட்டும், ஏற்கனவே அதிக இரத்தம் வெளியேறிவிட்ட காரணத்தினால் அவளின் உயிரைக்காப்பாற்ற இயலாமற்போய்விட்டது.
அன்று பிற்பகல் நான்கு மணியளவில் அவளின் வெற்றுடல வீட்டுக்குத்திரும்பிவந்தது.
“உம்மாவ உம்மா இருந்த குடிலுக்கயே வைப்பம். வாற ஆக்கள வெளியிலயும், காணாட்டி நம்மிட ஊட்டுக் கயும் இருப்பாட்டுவம். பாக்கிறவங்க போய்ப் போய்ப் பார்க்கட்டும்.” பர்ஸானா தனது கணவனையும் முந்திக் கொண்டு இவ்வாறு கூறினாள்.
அதனைச் செவிமடுத்ததும், அவளது கணவனின் உள்ளத்திலே சற்று முன்புதான் முளைவிட்டிருந்த, ‘தனது மாமியின் மையித்தை தமது வீட்டிலே வைத்தால் என்ன? என்ற எண்ணம் அப்படியே கருகிப்போனது. தனது மனைவியின் நிலையை நன்கு அறிந்து வைத்திருந்த அவன் பேசாமல் அவளின் வார்த்தைகளுக்குக் கட்டுப் பட்டுக் கொண்டான்.
சிறிது நேரத்தில் சல்மாவின் ‘மையித்து’ அனைவ ரின் தரிசனத்திற்காகவும் குடிசையிலே போடப்பட்டிருந்த கட்டிலிலே வைக்கப்பட்டது.
இப்பணி மாலை ஐந்தரை, ஆறு மணி வரை தொடர்ந்தது. பின்னர், ‘மையித்தை’ அடக்கம் செய் வதற்கான அனைத்துப்பணிகளும் நிறைவேற்றப்பட்டு அது ‘சந்தூக்கிலே’ வைக்கப்பட்டது.
சல்மாவின் மையித்தை உள்ளடக்கிய அச் சந்தூக் கைத் தோள்களிலே தாங்கிய நான்கு நெருங்கிய உறவி னர்களும், அவள் இறுதியாக வாழ்ந்த குடிசையை விட்டு, அவள் உயிரைவிடவும் மேலாக நேசித்த -தற்போது அவளது மகளும், மருமகனும் வாழ்கின்ற வீட்டின் பக்கமாகவுள்ள பாதையிலே அடிபதித்தார்கள். அவர்களைத்தொடர்ந்து இனசனங்களும், அறிமுகமானவர்களும் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தனர்.
“என்டதங்கம்மா. எங்களவிட்டிட்டுப் போறிங்களா.. என்ட அல்லா…” பர்ஸானாவின் அழுகைச் சத்தம் பெரிதாக வெடித்துச் சிதறியது. அதனைக் கிஞ்சித்துமே கவனியாதது போல அந்த மையித்து தனது பயணத் தைத் தொடர்ந்துகொண்டிருந்தது.
அங்கு நின்ற சல்மாவின் உற்றார் உறவினர்களதும் மற்றும் அவளை நன்கு தெரிந்த சிலரினதும் விழிகளில் ருந்து கண்ணீர் சொரு சொரு வென்று பெருகி கன்னங் களை நனைத்துக்கொண்டிருந்தது.
– தினகரன் வாரமஞ்சரி , 1995 மார்ச் 19.
– காணிக்கை (சிறுகதைகள்), முதற் பதிப்பு : ஜனவரி 1997, இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம் வெளியீடு, இலங்கை.