வீடு தேடி வந்த சக்தி

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மங்கையர் மலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 13, 2015
பார்வையிட்டோர்: 26,266 
 
 

“சுபா, இங்கே வா, இந்த வெற்றிலை, பாக்கு, பூ, ரவிக்கைத் துணி எல்லாம் வரிசையா, அழகா ட்ரேயிலே எடுத்து வை.”

“இதோ வரேம்மா!”

+2 படிக்கும் சுபா டீ.வி. யை அணைத்து விட்டு எழுந்து வந்தாள்.

காலை முதல் வித்யா இறக்கை கட்டிய மாதிரி பறந்து கொண்டிருந்தாள். இன்று சரஸ்வதி பூஜை. வித்யா வீட்டில் கொலு வைக்கும் பழக்கமில்லை. நவராத்திரி ஒன்பது நாளும் அம்மனுக்குப் பூஜை மட்டும்தான் செய்வாள். அவள் கணவன் சுந்தர் ஒரு வங்கியில் அதிகாரி. அடிக்கடி, ஊர் ஊராக மாறுவதால், சரஸ்வதி பூஜையன்று மட்டும் தெரிந்த பெண்மணிகளை அழைத்து மஞ்சள், குங்குமம் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தாள். கோவைக்கு வந்து மூன்று வருடங்களாகிறது. அடுத்த வருடம் எந்த ஊரோ? இங்கு சுந்தரின் அலுவலக நண்பர்கள், சுபாவின் சிநேகிதகள் மற்றும் தான் உறுப்பினராயிருந்த மாதர் சங்கத் தோழிகள் எல்லாரையும் அழைத்திருந்தாள்.

எதையும் அழகாக, பிறர் பாராட்டும்படி செய்ய வேண்டுமென ஆசைப்படுபவள் வித்யா. சிறு வயதில் அவள் தாய் வீட்டில் நவராத்திரியின் போது அவள் போடும் ரங்கோலியைப் பார்க்கவே அவ்வளவு பெண்களும் வருவார்கள். வித்யாவும் தினமும் ஒரு அலங்காரம் செய்து கொண்டு தெரிந்தவர், தெரியாதவர் எல்லாரையும் கூப்பிட்டு விட்டு வந்து விடுவாள். அந்த ஒன்பது நாட்களும் திருவிழா மாதிரி இருக்கும்.

திருமணத்திற்குப் பின்பு உடனே குழந்தைகள், ஊர் மாற்றம் என்பதில் அதற்கெல்லாம் நேரமேயில்லை. மகன்கள் அஜீத்தும், அமரும் வெளியூர்களில் படிக்கப் போய்விட, இப்பொழுது சுபா மட்டுமே அவர்களுடன்.

பழைய ஆசைகளும், ஆர்வமும் தலை தூக்க, சுவாமியின் முன்னால் நேற்று முதல் பார்த்துப் பார்த்து போட்ட ரங்கோலியில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி மூவரும் கொலு வீற்றிருந்தனர். அதைத் தவிர முத்தாலாரத்தி, நீர் கீழ் கோலம், படங்களில் சம்க்கி வேலை என்று தனக்குத் தெரிந்த அத்தனை கை வேலைகளையும் செய்து பூஜை அறையை மிக அழகாக அலங்கரித்திருந்தாள். எல்லாவற்றையும் எடுத்து ஒழுங்கு படுத்தி வைத்து நிமிர்ந்தவள், அவளையே பார்த்துக் கொண்டு நின்ற சுந்தரைப் பார்த்தாள்.

“என்ன அப்படிப் பார்க்கறீங்க? கோலம் எப்படியிருக்கு?”

“உன்னோட குறையாத அழகு மாதிரியே, உன் கோலம், கைவேலை இரண்டும் அப்படியே இருக்கே! அதை நினைச்சு நான் ரொம்பப் பெருமைப் படறேன் வித்து.”

“மம்மி! கோலம் சூப்பர்ப்! இத்தனை நாள் இந்தத் திறமையெல்லாம் எங்க மம்மி ஒளிச்சு வைச்சிருந்தே? என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் பார்த்து மூக்கில விரலை வைக்கப் போறாங்க பாரு. நீ ரங்கோலி காம்படிஷன்ல சேர்ந்தா ஃப்ர்ஸ்ட் ப்ரைஸ் உனக்குத் தான் கிடைக்கும். என்ன டாடி, நான் சொல்றது சரிதானே?”

குடும்பத்தின் ஆனந்தத்திற்கும், ஆதாரத்திற்கும் இந்தப் பாராட்டுக்கள் அவசியம் தேவைதானே?

“சரி, மணி மூணு ஆச்சு, நான்கு மணியிலிருந்து எல்லோரும் வர ஆரம்பிச்சுடுவாங்க. நான் இன்னும் சுண்டலும், கேசரியும் பண்ணணும். காப்பி குடிச்சுட்டு, ரெண்டு பேரும் போய் உங்க ஃப்ரெண்ட்ஸை வரவேற்கத் தயாராகுங்க.”

“சரி, எல்லோருக்கும் என்ன வச்சு கொடுக்கப் போறே? எங்கிட்ட காட்டவே இல்லையே?” சுந்தர் கேட்டான்.

“டாடி, அம்மா என்ன தெரியுமா வாங்கி வச்சிருக்காங்க? அழகான லேடீஸ் பர்ஸ். அதனாலதான் அம்மா கடைசி நாள் ப்ரோக்ராம் வச்சிருக்காங்க. இத்தனை நாள் யாரும் வச்சுக் கொடுக்காத புது அயிட்டம் கொடுக்கணும்கறதுதான் அம்மாவோட ஐடியா. அம்மா கொடுக்கும் பர்ஸ் கண்டிப்பா எல்லோருக்கும் பிடிக்கவும் பிடிக்கும். உபயோகமாகவும் இருக்குமில்லையா? நான் சொல்றது சரியா மம்மி?”

“ஏன் வித்து! அப்ப நீ பெருமைக்காகத்தான் இப்படிச் செய்யறியா? நவராத்திரியில் எல்லாப் பெண்களும் அம்பாளின் வடிவம் என்பதால்தான் அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ கொடுத்தால் பல மடங்கு பலன் உண்டுன்னு எங்கம்மா சொல்லுவாங்க. ஆனால், இந்த நாளில் இப்படிப் பெருமைக்காகவும், ஆடம்பரத்துக்காகவும் பண்றது சரியில்ல. பக்திதான் முக்கியமே தவிர படாடோபம் கூடாது.”

சுந்தரின் வார்த்தைகள் வித்யாவின் மனத்தில் சுருக்கென்று தைத்தன. அவள் மனத்தில் இருப்பதை அப்படியே சொல்லி விட்டானே? உண்மையில் வித்யாவுக்கு எல்லோரும் கொடுத்ததை விட விலை உயர்ந்த, வித்தியாசமான பொருளை வைத்துக் கொடுக்க வேண்டும் என்ற ஆசையால் நேற்று கடைத் தெருவில் பார்த்து பத்து கடை ஏறி இறங்கி, ஐம்பது ரூபாய் மதிப்புள்ள பர்சுகளை வாங்கி வந்திருந்தாள். இதுவரை யாரும் இவ்வளவு விலையுள்ள பொருள் கொடுக்காததால், கிளப்பில் இவள் மதிப்பு உயரும். அந்தத் தற்பெருமை அவள் மனத்தில் இருப்பதென்னவோ உண்மைதானே?

“மம்மி, எல்லாம் அடுக்கி ரெடியா வச்சாச்சு. வேறு வேலை இருந்தால் சொல்லு” சுபாவின் வார்த்தைகளில் சுய நினைவுக்கு வந்தாள் வித்யா.

“வாசலைப் பெருக்கி பெரிய கோலம் போடு. சௌந்தர்ய லஹரி கேசட்டை டேப்பில் போடு. டிரஸ் பண்ணிகிட்டு வந்து இந்தச் சுண்டலை பாக்கெட் பண்ணு.”

சுன்டல், கேசரியை சுவாமிக்கு நைவேத்தியம் செய்தாள். தானும் முகம் அலம்பி, பட்டுப் புடவை கட்டி டிரெஸ் செய்து வாசலுக்கு வந்தவள், வானம் ஒரேயடியாக இருட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

“மழை வந்து கொட்டும் போலிருக்கே” வித்யா சொல்லி முடிப்பதற்குள் சிறூ தூறலாய் ஆரம்பித்த மழை படபடவென்று பெரிதாகக் கொட்ட ஆரம்பித்தது. இப்போதைக்கு நிற்கும் போல தோன்றவில்லை. வானமும், பூமியும் ஒன்றாகி விட்டாற்போல அடை மழை.

வித்யாவின் மனதில் கவலை. ‘மழை இப்படிப் பெய்தால் யாரும் வர மாட்டார்களே? செய்து வைத்திருக்கும் சுண்டல், கேசரி வீணாகாதா, தன் பெருமையை யாருக்கும் தெரியப்படுத்த முடியாதே? இன்றுதான் நவராத்திரி கடைசி நாள். நாளை முதல் யாரும் கூப்பிட்டாலும் வர மாட்டார்கள். நவராத்திரியில் கொடுப்பதுதானே விசே ஷமும் கூட. சே, பாழாய்ப் போன மழை இன்றைக்குப் பார்த்து வரணுமா?’

கவலையோடு சோபாவில் அமர்ந்தாள்.

“டோண்ட் ஒர்ரி அம்மா! அரை மணியில் மழை விட்டால் எல்லாரும் வருவாங்க. டாடி! டீ.வி ல உங்க ஃபேவரிட் ஆக்டர் நடிச்ச சினிமா பார்க்கலாமா?”

அப்பாவும், பெண்ணும் கமலின் படத்தில் ஆழ்ந்து விட்டனர். சாதாரண நாளாயிருந்தால் வித்யாவும் அவர்களோடு சேர்ந்து பார்ப்பாள். ஆனால் இன்று பார்க்கும் மன நிலை இல்லை.

நான்கரை மணிக்கு ஆரம்பித்த மழை இரண்டு மணி நேரமாகியும் விட்டபாடில்லை. ஃபோன் மணி ஒலிக்க, சுந்தர் எடுத்தான். அவன் நண்பர் மழையினால் வர முடியாததற்கு ‘ஸாரி’ சொன்னதாகச் சொன்னான். தொடர்ந்து வரிசையாக சுபாவின் ஃப்ரெண்ட்ஸ், சங்க உறுப்பினர்கள் எல்லாருமே மழையைக் காரணம் காட்டி ‘ஸாரி’ சொல்லி விட்டார்கள். பாவம், பார்த்துப் பார்த்துப் போட்ட கோலமும், அருமையாகச் செய்த டிஃபனும்! வித்யாவுக்கு அழுகையே வந்து விட்டது.

திடீரென்று வாசலில் ‘கசமுச’வென்று பேச்சுக் குரல். சுபா வாசலில் போய்ப் பார்த்தாள். சில சித்தாள் வேலை செய்யும் பெண்கள் மழைக்கு ஒதுங்கியிருந்தார்கள்.

“யாரும்மா நீங்க? என்ன வேணும்?”

“கண்ணு, கொஞ்ச நேரம் இங்க ஒதுங்கி நின்னுட்டு போயுடறோம்மா. நாங்க பக்கத்து பில்டிங்ல வேலை செய்யறொம். நாளைக்கு ஆயுத பூஜைக்கு வேலை கிடையாது. அதனால சம்பளப் பணம் கொடுக்க நேரமாக்கிட்டாங்க. பாதி தூரம் வர்றப்ப மழை பிடிச்சுக்கிச்சு. நேரத்துக்கு வீடு போய்ச் சேரணுமுன்னு மழையை பார்க்காம நடந்தோம். தொப்பமா நனைஞ்சு போயிட்டோம். இனி நடக்க முடியாது தாயி. இங்கன கார் ஷெட்டுல கொஞ்ச நேரம் ஒதுங்கிட்டுப் போயிடறோம் தாயி.”

“இந்தச் சின்னக் குழந்தை கூடவா வேலை செய்வாங்க?” குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த இரண்டு பெண் குழந்தைகளைப் பார்த்து சுபா கேட்டாள்.

“இல்ல கண்ணு! வீட்டில பார்த்துக்க யாருமில்லாததால கூட கூட்டியாந்தோம்மா. புள்ளைங்க தலையைத் துவட்டு ஆயி.”

அந்தக் குழந்தைகளைப் பார்த்து பரிதாபப்பட்ட சுபா, உள்ளிருந்து பழைய துண்டுகளைக் கொடுத்துத் துடைக்கச் சொன்னாள்.

“சுபா, யாரு வாசல்ல? என்ன பேச்சுச் சத்தம்?”

“யாரும் இல்லம்மா, பக்கத்துல பில்டிங்ல வேலை செய்யறவங்க. பாவம் மழைக்கு நம்ப கார் ஷெட்டில ஒதுங்கியிருக்காங்க.”

“சரி, நீ உள்ள வா. எல்லாத்தையும் எடுத்து வை. இனிமே யாரும் வர மாட்டாங்க. மணி ஆயிடுச்சு.”

உற்சாகமாகப் பார்த்துப் பார்த்து எல்லாம் செய்த வித்யாவின் முகத்தில் ஏமாற்றம். வார்த்தைகளில் வாட்டம். பூஜையறைக்குச் சென்று கைகூப்பி கண்களை மூடி நின்றாள்.

‘தாயே, நான் பெருமைக்குச் செய்ததால்தான் இப்படி நேர்ந்ததோ? நல்ல நாளில் ஒரு பெண்ணுக்குக் கூட மஞ்சள், குங்குமம் கொடுக்க முடியாமல் செய்து விட்டாயே? இது என்ன சோதனை அம்மா? என் தற்பெருமைக்கு சரியான தண்டனை கிடைத்து விட்டது. எல்லாரையும் விட உசத்தியாக செய்ய வேண்டும் என்ற என் தவறை எனக்குப் புரிய வைக்கத்தான் இப்படிச் செய்தாயா? இந்த நவராத்திரியில் ‘நான்’ என்ற என் அகங்காரம் அழிந்தது. என்னை மன்னித்துவிடு தாயே’மனமுருக பிரார்த்தித்து நமஸ்கரித்து எழுந்தாள்.

வித்யாவின் வருத்தத்தைப் புரிந்து கொண்டான் சுந்தர்.

“வித்யா…நான் ஒண்ணு சொன்னால் கேட்பியா?”

“என்ன…சொல்லுங்க.”

நீ செய்திருக்கற சுண்டல், கேசரிய வாசல்ல இருக்கற பெண்களுக்கு கொடேன். இனிமேலும் யாரும் வருவாங்கன்னு எனக்கு தோணலை. இந்த நவராத்திரி நாள்ல எல்லாப் பெண்களும் சக்தியின் அம்சம்தான். இதில் ஜாதி, மதத்துக்கு இடமில்லை. வராதவர்களுக்காக வருத்தப் படறதை விட, வீடு தேடி வந்திருக்கும் பெண்களை சக்தியா நினைக்கலாமில்லையா?”

“மம்மி, இது குட் ஐடியா! டாடி சொல்றது ரொம்ப சரி. செய்த சாமானும் வீணாகாது. அவர்கள் வயிறும் நிரம்பும்.”

அசரீரி போல் அப்பாவும், பெண்ணும் சொன்னது சரியாகப் பட, வித்யாவும், சுபாவும் மளமளவென்று பேப்பர் தட்டுகளில் கேசரி, சுண்டலை அவர்களுக்குக் கொடுத்தனர். அந்தப் பெண்களின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி!

“சுபா, அந்த வெற்றிலைத் தட்டைக் கொண்டுவா. அவர்களுக்கெல்லாம் கொடுப்போம்.”

“மம்மி, என்ன சொல்றே? சுண்டல், கேசரி வீணாகாமல் கொடுத்தது சரி. ஆனால் ரவிக்கைத் துணி, பர்ஸ்… எதுக்கம்மா?”

“சுபா. இதுதான் அம்பாளின் திருவிளையாடல். நான் பெருமைக்காக உசத்தியா கொடுக்க நினைச்சேன். அது தப்புங்கறது புரிஞ்சு போச்சு. பாரேன், அவங்க சரியா ஒன்பது பேர் இருக்காங்க. கூட இரண்டு கன்யா பெண்கள். நான் சரசா, லல்லு பெண்களுக்கு வாங்கின இரண்டு கவுனும் அந்தக் குழந்தைகளுக்கு சரியா இருக்கும். என் மனசில இருந்த அழுக்கு போயிடுத்து. அவங்களை உள் வராண்டாவுக்குக் கூப்பிடு. கொடுத்துடலாம்.”

“மம்மி, யு ஆர் கிரேட்!” என்று சொல்லிக் கொண்டே சுபா அவர்களை வராண்டாவுக்கு அழைத்து வந்தாள். இருவருமாக வெற்றிலை, சீவலை அவர்களுக்குக் கொடுத்தனர்.

இதுபோன்ற உபசரிப்பை இதுவரை அறியாத அந்தப் பெண்கள் ஆன்ந்தத்தில் திக்கு முக்காடி விட்டனர்.

“மகாலட்சுமி மாதிரி இருக்கீங்கம்மா! உங்க கையாலே இதெல்லாம் வாங்கணுமுன்னுதான் அந்த மாரியாத்தா எங்களை இங்க ஒதுங்க வைச்சிருக்கா போல. நீங்களும், உங்க குடும்பமும் நல்லாயிருக்கணும் தாயி!’

வயிறும்,மனமும் நிறைந்து வாழ்த்தியவர்கள் அந்த எவர்சில்வர் குங்குமச் சிமிழையும், ரவிக்கைத் துணி, பர்சையும் தடவித் தடவிப் பார்த்துப் பூரித்துப் போனார்கள். அந்தக் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கோ அளவேயில்லை. ஈரமான துணிகளை அவிழ்த்து விட்டு, அந்தப் புதிய கவுனை அணிந்து கொண்டார்கள். அளவெடுத்து தைத்தாற்போல அழகாகக் பொருந்தியிருந்தன அவை. சீப்பு, வளையல், ரிப்பன், பொட்டு என்று கைக்கொள்ளாத சாமான்களுடன் அந்தக் குழந்தைகளின் முகத்தைப் பார்க்க வேண்டுமே?

இந்தப் பொருட்களைத் தன் தோழிகளுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் கொடுத்திருந்தால் கூட இத்தனை மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்திருப்பார்களா என்பது சந்தேகமே. தனக்கும் இத்தனை ஆனந்தம் கிடைத்திருக்காது என எண்ணியவள், தனக்கு தேவி கொடுத்த இந்த அனுபவத்திற்காக நன்றி சொன்னதுடன், அடுத்த ஆண்டு முதல் இது போன்ற பெண்கள், குழந்தைகளுக்கும் தாம்பூலம் கொடுக்க வேண்டும் என எண்ணிக் கொண்டாள்.

– செப்டெம்பர் 2000 ம் ஆண்டு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *