(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அவன் ஒரு பொழுது கழிவதற்குமுன் வெய்யிலும் வியர்வையும். ஒரு பொழுதென்றால் அரைப்பிறப்பு மாதிரி, அரை வாழ்க்கை மாதிரி, அரை இறப்பு மாதிரி. ஊர் வெய்யில் வெக்கையிலும் குண்டுகள் விழுந்து, நிலம் குழி பாய்ந்து, சனங்கள் அல்லோலகல்லப்பட்டு உயிரையும் உயிர் நாடிகளையும் அவனிவனிடமெல்லாம் விழுந்து மாய்ந்து நிலை நிறுத்தித் தலையை நிமிர்த்த முன்னர் – ஒரு பொழுது கழிந்தே போய்விட்டது. இப்போது குளிர். இந்த ஆற்றங்கரை.
அவள் இடையில் பட்டாம்பூச்சிகளின் வண்ண இறக்கைகள் தோரணதாரணம். புழுவாயிருந்ததில் இருந்து பறக்கத் தொடங்கும் வரையிலான நடுவிலிருக்கும் பிராண முயற்சி யில் பொழுது கழிந்து போகிறது. போய்விட்டது. பட்டாம்பூச்சிகள் புதுக் காட்டில், புது மலர்களில் இறங்கியாயிற்று. அவன் பட்டாம்பூச்சியா? அவ்வளவு மென்மை உங்களுக்கு இருப்பதாக யார் சொன்னார்கள்?
அவள் குறுகிய காலத்தில் நடந்து போன பரிணாம மாற்றத் தைச் சொல்ல முயற்சிக்கிற யத்தனத்தில் வெறுமே எழுகிற ஒப்புவமை. அவன் உண்மைகள் யாவுமே ஒப்புவமைகள் தான். ஒப்புவமை சொல்லும் போது சரியாகச் சொல்ல வேண்டும். பட்டாம்பூச்சிகள் மட்டுமில்லை. குரங்குகள், தேவாங்குகள், யானைகள், காண்டாமிருகங்கள், புலிகள், கழுதைப் புலிகள், சிங்கங்கள், குதிரைகள், கழுதைகள் எல்லாம்தான் வந்து புதுக் 370 காட்டில் இறங்கியிருக்கின்றன.
அவள் மனிதனுக்கு யாரையாவது கேவலப்படுத்தத் தோன்றும் போதெல்லாம் எழுகின்ற மிருகப் பெயர்கள். சித்திரம் வரைய வைத்திருக்கிற வண்ணக் குப்பிகள் மாதிரி. மிருகங்கள் நல்ல வண்ணங்களில்லை என்று தீர்மானம் ஆகிவிட்டது. அவன் சிலவேளைகளில் பலஸ்தீனியன், சோமாலியன், ருவாண்டன், தமிழன், குர்த் மற்றும் தென் அமெரிக்கன்! கையில் ஒரு கண்ணாடியுடன் மேலே இருந்து பார்த்தால் யார்யாரென்று தெரியவில்லை. இந்த விவரணைக்கெல்லாம் கண்ணாடி எதற்கு? இது இந்த ஆற்றின் நீரோட்டத்தை நதிமூலத்திலிருந்து விவரிக்கிற மாதிரியான விவரணை இல்லை. ஆற்றின் கரையில் இருந்து கொண்டு ஆற்றின் ஓட்டத்திற்கு லம்பமான ஒரு கற்பனைக் குறுக்குக் கோட்டைத் தாண்டும் நீரோட்ட விவரணை. நீர்த் துளிகள் எந்தத் திசையில் எவ்வளவு வேகத்துடன் ஓடுகின்றன என்கிற விவரணை.
அவள் குறுக்குக் கோட்டை எங்கே கீறுவது?
அவன் இங்கேயும் கீறலாம் அங்கேயும் கீறலாம். இப்போது இங்கே கீறினால், இந்த நேரத்தில் இங்கே நடப்பதுதான் தெரியும். இப்போது அங்கே கீறினால், இந்த நேரத்தில் அங்கே நடப்பதுதான் தெரியும். இங்கேயும் அங்கேயும் வெவ்வேறு நீர்த் துளிகள். இந்த இடம் அந்த இடமில்லை. இங்கே இப்போதிருப்பது நேரக்கோட்டில் முன்னர் அங்கே இருந்தது.
அவள் நேரத்துக்குக் கோடு கீறலாமா? ஆறு எப்படி ஓடுகிறது?
அவன் ஒரு நீர்த் துளி முன்னாலிருக்கிற நீர்த் துளியை, அது மெதுவாகப் போகப்பார்த்ததென்றால், பின்னால் இருந்து தள்ளுகிறது. முன்னால் போவதை ஆற்று மணல் தடுத்திருக்கலாம். பின்னால் இருந்து தள்ளுவதற்கு ஒரு கூட்டமே இருக்கிறது. எல்லாம் சரிவினால் ஏற்படும் தோற்றப்பாடுதான். சரிவான பாதையும் புவியீர்ப்பும் சேர்ந்தால், நீர்த் துளியின் வாழ்க்கை ஓட்டந்தான். தறிகெட்ட ஓட்டம்.
அவள் தள்ளுகிறதென்ன? தள்ளப்படுகிறது என்ன? பொழுது கழிந்துவிடுகிறது. அவன் புவியீர்ப்பில் சேர்ந்து விழுவது ஊஞ்சலாடுவதைப் போல். நீர்த் துளிகள் ஒன்றாகவும் போகின்றன. தெறித்துப் பிரிந்தும் போகின்றன.
அவள் சிறு துளி பெரு வெள்ளமாய்ச் சேர்வது தனித்தனி யாகவா அல்லது மனமார ஒன்று சேர்ந்தா? அவன் எல்லோரும் ஆதிகாலம் தொட்டு அடிபட்டுக்கொண் டத்துதான். நேரக்கோடு மனக்கோடு. நேரக்கோடு போடும் வித்தை தெரிந்து விட்டால் பின்னென்ன? வடகோடிங்குயர்ந்தென்னே சாய்ந்தா லென்னே வான் பிறைக்குத் தென்கோடுதான்.” பின்னால் போகும் நீர்த் துளி, ஓட்டப்பாதையென்று ஒன்றிருந்தால் நேரக்கோட்டிலும் பிந்தியதுதான். அதுதான் விதி! நான் எனக்குத் தெரிந்ததைச் சொல்லிவிடுகிறேன். நேரக் கோட்டைப் பிடித்துக்கொள். பிடித்தாயென்றால் முன்னாலும் தெரியும் பின்னாலும் தெரியும்.
அவள் நேரக்கோடு மனவிளையாட்டு. பாதி உடலியல், மறுபாதி இவ்வுலகைக் கொள்ளும் சகல பெளதிகமும்தான். அவன் உடலியல் என்று சும்மா விட்டுவிட்டால், அதுவும் பெளதிகமாய்ப் போய்விடும். விடமுண்டும் சாகாமலிருக்கிற நிலை உன் கையிலேயே இருக்கிறது.
அவள் இல்லை! இல்லை! உயிர் இருக்கிறதா இல்லையா? அவன் உயிர் இருக்கிறது என்று யோசிப்பவர்களுக்குப் பாதியாவது நேரக்கோடு போடத் தெரியும்.
அவள் கிடங்குகளில் ஒன்றாயிருந்தோமே. உயிர் தப்பி னோமே. நேரக்கோடு போடத் தெரிந்ததா?
நேரக்கோடெது? குறுக்குக் கோடெது? அவன் ஆற்றின் கரையோரமாக நடந்து வரும்போது பொழுதும் கழியும், ஆங்காங்கே குறுக்குக் கோடும் போட்டுக்கொள்ளலாம்.
அவள் அதை விடு. ஒரு பொழுதிற்கு முன்னர்…? அவன் குறுக்குக் கோடுகள் பற்றி உன்னிடம் ஒருநாள் சொல் லத்தான் போகிறேன்.
அவள் கூட இருக்கும் பிக்கல் பிடுங்கல்களுக்கும் சொல்லிப் பார்ப்போமா? அவன் சரி, தாளத்தைப் போடு! நேரக்கோடு தெரியவரும்.
அவள் ஓர் ஆவர்த்தனமாவது முடிந்தால் தானே போடலாம். அவன் வக்கிரநடையில் உனக்கு ஆவர்த்தன முடிவு தெரியவில்லை. நன்றாகக் கவனி.
அவள் மணிக்கூட்டின் கைகள் போலச் சுற்றினபடியே இருந்தால் முடிவென்ன? இறுதியென்ன? அவன் தாளம் தொடரும்..
சுகமான விவாதத்திற்குப் பின்னால் வெளியே உண்மையான உலகம். இருள். கசப்பு, வெறுப்பு நீ வந்து அமைந்ததற்கும் இருபொழுதிற்கு முன்னால் நடந்தது காரணமாகுமா?
அப்போதுதான் இருள் கவிந்தது. கையிலிருந்த வாழ்க்கைக் கடிவாளம் தொலைந்தும் போனது. தொலைந்துபோனதும் தெரியாத ஒரு பருவம். அதற்குப் பிறகு எங்கோ முடியுமாக அமைந்துபோன ஒரு சூழல்.
அவள் என்ன பிலாக்கணம்? நடக்க வேண்டியதெல்லாம் நடந்து கொண்டுதானே இருக்கிறது? அவன் எல்லாம் நடக்கிறதுதான். ஆனால், மற்றவர்கள் என்னை விட சந்தோஷமாக இல்லையா?
அவள் இல்லை, இல்லை… எல்லோருக்கும் வாழ்க்கைக் கடிவாளம் ஒரு நேரக்கோட்டின் ஒரு புள்ளியில் தொலைவதுதான். அவன் அந்த இருளுக்குள் போகமாட்டேன். உன்னிடம் சொல்லமுடியாத மன அறை உள்ளே இருக்கிறது.
அது பலவித வண்ணங்களும், நல்ல வாசனைகளும், மதுர இசையும், நல்ல அழகான பெண்களும், அறிவுபூர்வமான விவா தங்களும், கடவுள் வந்தும் போயும் கொண்டிருக்கிற உலகம். எல்லா சுகமான விஷயங்களும் அங்கே உண்டு. வக்கிரம் இல்லை. நடைபேதங்கள் குறுகிய காலச்சக்கரத்துள் அமைந்து போன லயமான உலகம். ஒளியோ ஒளி!
அவள் பார்த்தாயா? எனக்கே சொல்லமாட்டேன் என்கி றாய். சந்தோஷமாக இருந்தால் சரி. எனக்கு எல்லாம் தெரியும். தொலைந்துபோ! அவன் குறுக்குக் கோட்டில் நீர்த் துளிகளுக்கு நடப்பதைப் பார்.
அவள் நீர்த் துளிகள் கற்பனா சக்தி இல்லாதவை. அவன் ஆ! அங்கேதான் நிறுத்திக்கொள் என்கிறேன். உன் பிலாக்கணமும் தேவையில்லாதது. அளவில்லாத சந்தோஷம் அடைய முடியும். ஆனால், நேரக் கோட்டில் பின்னால் போகாதே. குறுக்குக் கோட்டை ஆதியில் கீறாதே. சந்தோஷம் என்னோடேயே முடிந்துவிடும். அது உண்மை யாகிவிடாது. எதுவும் உண்மையாவதற்கு இரண்டு பேராவது வேண்டும். இருள் பாதியில் உள்ள தொடர்புகள் இந்த சந்தோஷத்தை அடைய விடா.
அதற்குத்தான் சொல்கிறேன். நேரக்கோட்டைப் பிடித்துக்கொள். நேரக்கோட்டைப் பிடிப்பது, பின்னால் போவதற்கல்ல. குறுக்குக் கோடு கீறுவது நேரக் கோட்டின் முன்பாதியிலல்ல.
அவள் என்னதான் நடந்தது? சொல்லித் தொலையேன். அவன் நேரக்கோட்டில் பின்னால் போய் ஆற்றங்கரையில் ஒரு குறுக்குக்குக் கோடு போட வேண்டும். அதற்கு சக்தி நிறைய வேண்டும். சிறுவயதில் எல்லாமே பெரிதா அல்லது வீடு உண்மையாகவே பெரிதா. ஞாபகமில்லை. ஒரு சமையல்காரன். அதற்குமேல் என்னத்தைச் சொல்ல? இப்போது கனடா. அதற்கு முன் கொழும்பு.
அதற்கு முன் யாழ்ப்பாணம். தையிலிருந்து வைகாசிவரை வெளியில் காற்று வீசாது. மின் விசிறியும் மாமர நிழலும் ஓரளவில் உதவி. யுத்தம் வந்ததன் பின்னர் ஒன்றும் ஞாபகமில்லை. சமையல்காரனை மறக்க முடியாது.
அவள் அதை எத்தனைதரம் சொல்வாய்? அங்கே யுத்தத்தில் அவதிப்பட்ட பெண்களைவிடவா உனக்கு ஏதாவது நடந்தது?
தற்குறித்தனம் கொள்ளாதே! அவன் நினைவுகள் போகவில்லையென்றால் நான் என்ன சொல்ல முடியும்? அங்கே இருந்த வெய்யிலும் வெக்கையும் வியர்வையும்…இப்போது குளிர். வீட்டில் என்ன குளிர்? வெளியில் தான். வீட்டில் தர்க்கச் சூடும் பிள்ளைகளை அடக்கும் யுத்தச் சூடும் தனி.
தற்குறித்தனம் எனக்கு வந்து அமைந்து போனது அந்த பலாத் காரத்தினால் தான். சமையல்காரனைவிட இன்னொருத்தன் இருந்தான். சமையல்காரன்தான் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறான். வீட்டில் ஒருத்தரும் இல்லாத நேரத்தில் நடந்த பலாத்காரம். அந்த விவரம் எல்லாம் கேட்காதே. வயது பதின்மூன்றா பதிநாலா? ஞாபகமில்லை. அந்தச் சமையல் காரனுக்குக் காதல் விவகாரங்களும் இருந்தன. காதல் கடிதம் எழுதுவது, சமிக்ஞைகள் செய்வது, பெண்களைத் துரத்துவது இதெல்லாம் வேறு நடந்தது. நாய்களுக்கு முறுக்கேறுவதில்லையா? அது மாதிரி . தற்குறித்தனம் இதனால் மட்டும் வருமா? அன்றிலிருந்து எனக்கு நடந்த மாற்றங்கள் இன்றுதான் புரிந்த மாதிரி இருக்கிறது. தாளம் பிசகிவிட்டது.
அவள் உன்னுடைய தோல்விகளையெல்லாம் வெகு சுலபமாக தருக்கப்படுத்திக்கொள்கிறாய். நீ ஒரு கையாலாகாத மனிதன். தாளத்தில் நடைமாற்றம் தெரியவில்லையா உனக்கு?
அவன் உனக்கு எத்தனைதரம் விளங்கப்படுத்துவது? நான் அப்படி ஆக்கப்பட்டிருக்கிறேன். என்னை விளங்கிக்கொள்ள நீ தெண்டிப்பதில்லை. என் மன அறைக்கு நான் ஓடுவது அதனால் தான். தாளம் முற்றாகவே தவறிப்போனால் இப்படி ஓடத்தான் வேண்டும்…
அவள் நீ அங்கு ஓடுவது தெரியும். ஆனால், நான் – இந்தப் பூமியில் காலை ஆழவே ஊன்றியிருக்கிறேன். உனக்கு, வேலைக்குப் போய் வந்து சம்பளத்தை என்னிடம் கொடுப்பதைத் தவிர என்ன தெரியும்? இந்தக் குடும்பம் ஓடுவது என்னால். ஆற்று ஓட்டம் உன் கவலை. இந்தக் குடும்பம் ஓடுவதைப் பற்றி நான் வெறுமே கவலைப்படுவ தில்லை. ஆற்றின் ஓட்டத்தை இயக்கும் ஈர்ப்புச் சக்தி மாதிரி நான். நான் நேரக்கோடு போடுவதில்லை. நான் ஆற்றின் கரையில் நின்று பார்க்கும் மனிதனும் இல்லை.
வெட்டிப்பேச்சு எனக்குத் தேவையில்லை. அவன் ஏன் திரும்பவும் உலகுச் சாக்கடையில் காலை வைக் கிறாய்? திரும்பி இங்கே வா. இது ஒரு மாயக் கம்பளம். எங்கும் போகலாம். ஈர்ப்புச் சக்தியால் நடக்கும் எல்லாவற்றையும் பார்க்கலாம்.
அவள் இதுதான் உன் பிரச்சினை. மாயக் கம்பளத்தில் போவது, உனக்கு நடந்ததற்கு முன்னரே உனக்கிருந்த பழக்கம். திரும்பியும் சொல்கிறேன். நீ ஒரு கையாலாகாத மனிதன். அவன் நீ தனியே இருந்துகொள். நான் போகிறேன்.
அவள் உன்னால் போக முடியாது. உனக்கு அதற்கு சக்தியில்லை . அவன் சக்தி இல்லை என்று சொல்லாதே. எல்லாம் மன விளையாட்டு என்று தெரிந்த பின், நான் போவதால் வரும் விளைவுகளின் வெறுமையை உணர்ந்து, அதைச் செயல்படுத்த முனைவதில்லை. அவ்வளவுதான். எனக்குச் சக்தில்லையென்று சொல்கிற உனக்கு ஒரு பெண்ணின் மென்மை கிடையாது என்று சொல்லட்டுமா?
அவள் எனக்கு மென்மை இருந்தால், உன் வாழ்வில் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டாய். அவன் என்ன தூரம் வந்திருக்கிறேன்? என்ன வாழ்வு? கண்ணாடியும், தூரதரிசனமும், விண்ணையும் மண்ணின் துகள்களையும் பார்க்கக்கூடிய சக்தி நசிவினால் வந்தவைதான். சக்தியும் சக்தியின்மையும் உன் பிரமை. உன் பெண்மைத்தனத்தின் பிரகடனம். இந்த வாழ்க்கையின் இருத்தலே அசைக்கமுடியாத நிலை. மற்றவையெல்லாம் வெறும் சக்கைதான்.
அவள் சரி . வீட்டிற்குப் போவோம். சாப்பிடாமல் இருப் பாயா? பிள்ளைகளுடன் பேசாமல் இருப்பாயா? அவன் உன்னை எங்கு முதலில் பார்த்தேன்? எப்படி எங்கள் கல்யாணம் நடந்தது? இதெல்லாம் உனக்கு ஞாபகமிருக்கிறதா?
அவள் அதுவா முக்கியம்? எப்படி என்னை அடக்கப் பார்த்தாய்? எப்படி என் வாழ்க்கை நசிந்துபோனது?
எனக்கு ஒரு விடிவுமில்லை. அதுதான் முக்கியம். அவன் இதற்குத்தான் சொல்கிறேன் என்னைக் கல்யாணம் செய்வதற்கு முன் இருந்த உன் நிலையை யோசித்துக்கொள் என்று.
அவள் உன் சவுகரியம் போல வாழ்க்கையின் விபரங்களுக் குள்ளும் தத்துவப் போர்வைகளுக்குள்ளும் போய்வந்து கொண்டிருக்கிறாய். அவன் நீ முற்றாகவே உன் சுயத்தில் மூழ்கியிருக்கிறாய். ஏன் நீ, உன் வாழ்வில் என்னால் அமைந்து போன மேன்மைகளை எல்லாம் சிறுமைப்படுத்தி, நான் கொடுமைப்படுத்துகிற மாதிரி சொல்லிக்கொண்டேயிருக்கிறது மனநோய் இல்லையா? தத்துவப் போர்வைகளுக்குள் என்னால் போக முடியுமானதென்பதால் தான் இந்த வாழ்க்கை ஓடுகிறது.
அவள் இந்த வாழ்க்கை ஓடுவது என் நிதர்சனப் போக்கினால் தான். உன் தத்துவத்தினால் என்று சொல்லாதே! அவன் என் வாழ்க்கையைப் பற்றிச் சொன்னேனே, உன் வாழ்க்கையைப் பற்றி எப்போவதாவது சொல்லியிருக்கிறாயா?
அவள் உனக்குக் கேட்கிற தைரியம் வந்த அன்று சொல் கிறேன். அவன் இப்போது கேட்கவில்லையா? நீ சொல்லமாட்டாய். எனக்குக் கேட்கத் தைரியம் இல்லையென்று சொல்கிறாயே, உனக்கு உண்மை பேசத் தெரியுமா?
நீ எல்லோரையும் ஆட்டிவைக்கப்பார்க்கிறாய்.
அவள் உனக்குக் கற்பனை கூடிவிட்டது. எனக்கு உன்னுடனான வாழ்விற்கு முன்னர் கதையொன்றும் இருந்ததில்லை. அவன் இந்தக் கதையை நான் நம்பத் தயாரில்லை. ஆனால், இப்போது இந்த வாழ்க்கையில் நீ என்னுடன் இருப்பதைப் பற்றிக் கவலைப்படுவதுதான் தருக்கபூர்வமானது.
அவள் உன் சந்தேகங்களெல்லாம் உன் கையாலாகாத் தனத்தின் பிரகடனங்கள். அவன் அப்படியிருந்தால் எனக்குக் கோபம் வந்திருக்கும். இப்போதான வாழ்க்கை ஓட்டம் மட்டுமே உண்மையானது.
இந்த ஆற்றைப் பார். இந்தக் கோட்டிலிருந்து நூறு அடி எதிரோட்டமாகவும், நூறு அடி கீழோட்டமாகவும் தான் உன்னால் பார்த்துக்கொள்ள முடியும். இந்தக் குறுக்குக் கோட்டில் ஓடும் ஓட்டம்தான் நிதர்சனம். இதற்கு மேலான உண்மைகளைப் பற்றிச் சொல்வதெல்லாம் வெறும் கதைகள் தான். நீ என்னோடு வாழ்கிற வாழ்க்கைதான் நிதர்சனம். எவனோ…
அவள் அங்கேயே உன் வாயைப் பொத்திக்கொள். வெறெவனும் என் வாழ்வில் குறுக்கிட்டதில்லை. அவன் இதனால்தான் எனக்கு நடந்ததைப் பற்றி உணர்வுச் சிலிர்ப்பொன்றும் உனக்கில்லாமல் இருக்கிறதோ தெரியவில்லை. நீ என் மனைவியென்று, உன்னிடம் சொல்லி ஆறுதல்படவும் முடியாமல் இருக்கிறது.
அவள் இவ்வளவு பேசுகிறாயே, என் தூய்மையையெல்லாம் உன்னை மாதிரியானவனிடம் பறிகொடுத்துவிட்டேன் என்று எப்போதாவது புலம்பியிருக்கிறேனா? தூய்மை பெண்களுக்கு மட்டும்தானா? அந்த மாதிரி ஏதாவது சொல்லிவிடுவேனோ என்று பயந்துதான் என் முன் வாழ்க் கையை ஆராயப்பார்க்கிறாய். நீ ஒரு களங்கப்பட்டவன் என்று சொல்லியிருக்கிறேனா? உன் மனக்கோட்டில் இருந்து அந்த சம்பவத்தைக் களைந்துவிடு. நீ எனக்குச் சொல்கிறாயே இந்த ஆற்று ஓட்டத்தை இந்தப் புள்ளியிலிருந்துதான் பார்க்கமுடியும் என்று. அதை நீயும் செய்யேன். அவன் மனதில் ஒரு வடு. அதற்கு மருந்து உன் அன்பில் தான் இருக்கிறது. நீ அதைக் கொடுக்க மறுக்கிறாய்.
அவள் மனப்புண்களுக்கெல்லாம் மருந்தை வெளியே தேடாதே! புண்படக்கூடிய மனமுள்ள ஆண்களுடன் பெண்கள் வாழமுடியாது. அவன் என்னால் எதுவும் செய்யமுடியாது என்று வேறு சொல்லிக்கொள்கிறாயே.
அவள் உன்னைத் தூண்டவும், உன் பலகீனத்தினால் என் வாழ்க்கையில் வரும் நசிவை எதிர்கொள்ளத் தேவையான சக்தியைச் சேகரித்துக்கொள்ளவும்தான். அவன் நான் பலகீனமானவன் என்று நீ சொல்வது உன் மனதில் தான் இருக்கிறது. என் மனப்பலத்தினால் தான் இவ்வளவு தூரம் வாழ்க்கையில் ஓடி வந்திருக்கிறோம். மனத்தைப் புண் படுத்தக்கூடிய பெண்களுடன் ஆண்கள் வாழமுடியாது. அது பலகீனமில்லை. உன்னை உதாசீனம் செய்தபடி வாழ்க்கையை நடத்தும் மனப்பாங்கு எனக்கில்லை. அது என் கலாசாரம்.
அதைப் பலகீனம் என்று சொல்லாதே.
அவள் என்னை உதாசீனம் செய்தபடி நீ நடந்து கொள்வது கூடத் தெரியாமல் இருக்கிறாய் நீ. அவன் உனக்குத் தற்குறித்தனம் இல்லையா?
அவள் தற்குறித்தனம் அமைவதற்கு வாழ்க்கையில் ஏதாவது நசுக்கள் நடந்திருக்க வேண்டும் என்றால், அது உன்னைக் கல்யாணம் பண்ணிக்கொண்டதுதான். என்னை முற்றாக நீ அழித்துவிட்டாய். அவன் என்னைப் பலகீனமானவன் என்று சொல்கிறாயே. என்னதான் நீ என்னை ஆட்டிப்படைத்தாலும், நீ என்னை அழித்துவிட்டதாக நான் ஒருபொழுதும் சொன்னதில்லை.
அவள் முட்டாளே! நான் உன்னை அழித்துவிடவில்லை. அவன் அடி முட்டாளே! நானும் உன்னை அழித்துவிடவில்லை .
அவள் அப்படியென்றால் அது கவலையாக இருக்கிறதா? அவன் நீ சும்மா திட்டாதே.
அவள் நீ சும்மா திட்டாதே. அவன் இப்படியே விவாதம் செய்தால் எப்படி? வா வீட்டிற்குப் போவோம்.
அவள் உனக்குத் துணிவு வந்துவிட்டதா? அவன் சக்தி … சக்தியென்றோது… போகலாம் வா
அவள் ம்ம்… ம்ம்ம்…. எங்கேயிருந்து, எங்கே கொண்டுவந்து விட்டிருக்கிறாய்! தாள நடையை மாற்றிவிட்டாய். ஆவர்த்தனத்தை முடி….. அவன் நீ பட்டாம்பூச்சியாய் ஆரம்பித்துப் புழுவாய் மாறப் பார்க்கிறாய்.
அவள் நீ குறுக்குக் கோட்டைப் போட்டபடி ஆற்றின் அழகை விட்டுவிட்டாய். தாளத்தையும் முடிக்கக் கஷ்டப் படுகிறாய். அவன் என்ன செய்யலாம்?
அவள் பேசாதே ! வா போகலாம். என்ன செய்தாலும், எது எப்படிப் போனாலும் எதுவும் முடிந்து போகாது.
ஆறு நின்றாபோய்விட்டது? அவன் முடிவாக என்னதான் சொல்லப்போகிறாய்?
அவள் நான்தான் முடிவு சொல்ல வேண்டுமா? ஏன், நீ சொல்லேன்? அவன் இந்த உலகத்தை ஒருகணம் மறந்துவிட்டு, கண்ணை மூடிக்கொண்டபடி உன் மனதில் நான் இருக்கும் இடத்தைச் சொல் பார்க்கலாம்.
அவள் கண்ணை மூடிக்கொண்டால் என்ன, திறந்திருந்தால் என்ன, என் மனதில் நீ இருக்கும் இடம் நல்லதுதான்.
என் மனம் முழுவதும் நல்ல இடந்தான். அவன் அப்படியானால், ஏன் என்னைச் சபித்தபடி இருக்கிறாய்?
அவள் என்னைச் சபிக்காதே என்றுதான். அவன் உன் மனதில் என்மேல் அன்பு இல்லை.
அவள் உன் மனதில் தான் ஈரம் இருக்கிறதாகத் தெரிய வில்லை . உனக்கிருக்கும் அன்பு எதுவும் உன் குடும்பத்தில் இருக்கிறதாகத் தெரியவில்லை . அவன் நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்?
அவள் சந்தோஷமாக இருக்கப் பாரேன். அவன் அதற்குத்தான் உன் உதவி வேண்டும். நான் மட்டும் சந்தோஷமாக இருந்தால், அதைப் பற்றியும் குறை சொல்வாய்.
அவள் இதுதான் உன் முன்னால் வைக்கப்படுகிற விடுகதை என் உதவி எதுவும் இல்லாமல் எனக்கு சந்தோஷம் வரப் பண்ணுவாயா? அவன் பார்த்தாயா? இதைத்தான் சொல்கிறேன். எனக்கு உதவும் யோசனை உனக்கில்லை.
அவள் இங்கே இந்த ஆற்று ஓட்டத்தைப் பார். நீர்த் துளிகள் ஒன்றுக்கொன்று உதவி செய்து கொண்டா ஒன்றாக ஓடுகின்றன? அவன் ஆவர்த்தனத்தை நீ முடி…
அவள் நான் தான் முதலில் உன்னை முடிக்கச் சொன்னேன். தொடங்கினாய், முடி…அவன் முடிப்பதற்கு மாயக் கம்பளத்தில் ஏறி மனதின் சுகமான இடங்களுக்கெல்லாம் போய்வர வேண்டும். ஆனால், நீ ஏற மறுக்கிறாய். அது ஒன்றுதான் வழி.
அவள் ஏறி எங்கே முதலில் போவது? அவன் இந்த ஆற்றங்கரையெல்லாம் தாண்டி, மனக் குறுக்கல்கள் எதுவுமில்லாத இடமாக, யாரும் எதுவும் எங்களைக் கேட்காத படியான சூழலுக்குப் போவோம்.
அவள் ஏன் அவ்வளவு தூரம்? உனக்கு நடந்தையெல்லாம் மறந்து, நான் வைத்திருக்கும் அன்பைப் பாரேன். அவன் என்ன சொன்னாய்? என்ன சொன்னாய்? ஓ!! காதலோ காதல்…!
அவள் மிகவும் உணர்ச்சியடையாதே! வா, போகலாம்.
இந்த ஆறு எங்கோ கடலில் சேரத்தான் போகிறது. அவன் வா, ஒரு பொழுது போயேவிட்டது.
– 17.11.2001