“ஐயா ……..!”
‘……………….’
‘ஐயா:……….. ஐயா…………!’ தொடர்ந்து யாரோ கதவைத் தட்டுகிறார்கள்.
வேலாயுதர் விழித்துக் கொண்டார். படுக்கையிற் கிடந்தபடியே கைகளை நீட்டிச் சோம்பல் முறித்துக் கொண்டு வெறுப்போடு கதவின் பக்கம் நோக்குகிறார். மூலையில் சிறிதாக எரிந்துகொண்டிருந்த விளக்கின் வெளிச்சம் கதவின் மேல் மங்கலாக விழுந்து சிதறுகின்றது.
எங்கோ சாமக் கோழி கூவும் ஓசை காற்றினில் தேய்ந்து ஒலித்தது.
‘இந்த நேரத்திலை யார் கதவைத் தட்டிறது?’ மனதில் எழுந்த கேள்வியில் சினங் குழைகின்றது.
அவர் மறுபக்கம் திரும்பிப் படுக்கிறார். பிய்ந்த பாயில் கிளம்பியிருந்த ஓலைமுனை அவரது சுருங்கிய முதுகில் கீறி நோவைக் கொடுத்தது. அதைத் தன் நீண்டு வளைந்த நகத்தினால் கிள்ளி எறிகிறார்.
முட்டியில் புடம்போட்டு வைத்திருந்த இலைச்சாற்றின் நெடி காற்றுடன் கலந்து இலேசாக அவ்விடத்தில் பரவுகின்றது. அதனை நன்றாக மூக்கினால் உறிஞ்சி நுகர்கிறார். அந்த நெடி அவருடைய சுவாசத்துடன் கலந்து இரத்த நாளங்களிற் செறிய, தேகத்தில் புதிய தெம்பு உண்டாகிறது. கடந்த ஐம்பது வருஷங்களுக்கு மேலாகத் தினமும் இந்த நறு மணத்தை அனுபவித்துங்கூட அதில் அவருக்கு அலுப்புத் தட்டிவிடவில்லை.
“ஐயா ! விஷகடி வேலாயுதர் வீடு இதுதானே ….. கதவைத் திறவுங்கோ” வெளியில் இருந்து கிளம்பிய குரலில் அவசரம் தொனிக்கிறது.
கைத்தடியை எடுப்பதற்காகப் பக்கத்தில் ஆராய்கிறார் விஷகடி வேலாயுதர். இது அவருடைய பெயரல்ல. வேலாயுதபிள்ளை என்பது தான் அவரது தாய் தந்தையர் சூட்டிய பெயர். அது ‘விஷகடி வைத்தியர் வேலாயுதபிள்ளை’யாகி, ஊரார் வாயில் சிதைந்து ‘விஷகடி வேலாயுதரா’ கியது.
புன்னாலைக்கட்டுவனில் உள்ள பெரிய மனிதர்களுள் வேலாயுதரும் ஒருவர். அவருடைய வைத்தியத் திறமைதான் அவருக்கு மதிப்பைக் கொடுத்துப் பெரிய மனிதராக்கியது. எந்தப் பெரிய விஷந்தீண்டினாலும் வேலாயுதரிடம் போனால் குணமாக்கி விடலாம். அவருடைய மந்திரங்களுக்கும் மருந்துகளுக்கும் அவ்வளவு சக்தி!
வைத்தியத்திற்காக மட்டும் சனங்கள் அவரிடம் வருவதில்லை. சிலர் தங்களுடைய கஷ்டங்களைக்கூறி ஆறுதல் பெற வருவார்கள். சிலர் ஆலோசனைகள் கேட்க வருவார்கள். சிலர் தமக்குள் நடந்த பிணக்குகளுக்குத் தீர்வு காண வருவார்கள்.
வேலாயுதர் வலதுபுறம் பார்வையைச் செலுத்துகின்றார். அவருடைய மகன் சுந்தரம் படுக்கும் இடம் காலியாகக் கிடந்தது. மூலிகைகள் வாங்குவதற்குப் பக்கத்து ஊராகிய சுன்னாகத்திற்குப் போனவன் இன்னும் திரும்பவில்லை.
‘நாளைக்குக் காலைமை தான் வருவான்போல கிடக்கு’ வேலாயுதர் தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறார்.
இந்தத் தள்ளாத வயதில் அவருக்குத் துணையாக அவருடைய மகன் சுந்தரம்தான் இருந்தான். அவனைத் தவிர, இனத்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதற்கு வேறொருவரும் இருக்கவில்லை.
சுந்தரம் தந்தையின் தொழிலுக்குப் பெரிதும் உதவியாக இருந்தான். மூலிகைகள் சேகரிப்பது, குழைகளைத் துவைப்பது, இடிப்பது, சாறுகள் பிழிவது, எண்ணெய்கள் வடிப்பது, கழிம்புகள் தயாரிப்பது எல்லாமே அவன்தான்.
கதவு படபடவென்று வேகமாகத் தட்டப்படும் ஓசை கேட்கிறது.
“ஐயா ! ஆருக்கோ பாம்பு கடிச்சுப் போட்டுது. பிள்ளையார் கோயிலடியிலை விழுந்து கிடக்கிறான். வந்து பாருங்கோ.”
வேலாயுதரின் மனதின் ஒரு பகுதி கடமையுணர்ச்சியால் விரிவுகாண்கின்றது. தடியை ஊன்றி மெதுவாக எழுந்தார். தேகம் சிறிது தள்ளாடுகின்றது. மங்கலாக எரிந்துகொண்டிருந்த விளக்கைத் தூண்டிவிடுகின்றார். வெளிச்சம் குடிசைக்குள் பரவுகின்றது.
கதவின் தாழ்ப்பாளை நீக்குவதற்காகக் கையை உயர்த்து கின்றார். நினைவுகள் மடைதிறந்துவிட்ட நீர் போலப் பெருகிவரச் சம்பவக் குமிழிகள் தோன்றி உடைந்து, மனதின் விரிவு கண்ட பகுதியை மூழ்கடித்து அழிக்கின்றன. அவரை அறியாமலே கைதாழ முகத்திலே வெறுப்புணர்ச்சி இழையோடுகின்றது, அவர் கதவைத் திறக்கவில்லை. திரும்பி வந்து பாயில் விழுகின்றார்.
“நுரை நுரையாய் வாயாலை கக்கிறான்; சாகப் போறானய்யா…..” குரலைத் தொடர்ந்து பலமாகக் கதவு தட்டப்படும் ஓசை.
வெறுப்புடன் கதவை நோக்கினார் வேலாயுதர் . எப்பொழுது தான் வெளியில் நிற்பவன் போகப்போகின்றானோ என்பதுபோல் இருந்தது அந்தப் பார்வை.
“நல்லாய்த் தட்டட்டும்; கையுளைஞ்சாத் திரும்புவினம்தானே”. வேலாயுதர் முணுமுணுக்கின்றார்.
வெளியில் நிற்பவன் கதவையுடைத்து விடுபவன் போலத் தட்டிக் கொண்டிருந்தான். வேலாயுதத்திற்கு ஆத்திரத்தால் தேகம் நடுங்கியது.
“யாரெண்டாலும் செத்துத் துலையட்டும் ; நான் வரமாட்டேன்” வெறி பிடித்தவர் போலக் கத்திய வேலாயுதருக்கு மூச்சு வாங்கியது. நெஞ்சுக்குள் இலேசாக நொந்தது. மெதுவாக நெஞ்சைத் தடவிவிட்டார்.
யார் வேலாயுதரா அப்படிச் சொன்னார்? அல்லும் பகலும் பிறருக்காக உழைப்பவரா அப்படிச் சொன்னார்? பொதுநலத்தில் மகிழ்ச்சி காண்பவரா அப்படிச் சொன்னார்? தன்னிடம் வருவோருக்கு ஆறுதல் மொழி கூறி அன்புடன் வைத்தியம் செய்பவரா அப்படிச் சொன்னார்? எத்தனையோ உயிர்களுக்கு வாழ்வளித்த வேலாயுதரா அப்படிச் சொன்னார்?….
அவருடைய மாற்றத்தைக் கண்டு அதிசயிப்பது போல இவ்வளவு நேரமும் மெதுவாக ஊர்ந்துகொண்டிருந்த வாடைக் காற்று வேகமாக ஓடி இரைந்து கொண்டிருந்தது.
வெளியில் நிற்பவனின் கெஞ்சலும், மன்றாட்டமும், அழுகையும் பயனற்றுக் காற்றில் தோய்ந்து மறைந்தன. கதவைத் தட்டிய அவனது கைகள் ஓய்ந்திருக்க வேண்டும். நிசப்தம் நிலவியது.
வேலாயுதர் உன்மத்தம் கொண்டவர் போல் கதவையே நோக்கியவண்ணம் இருந்தார். அவரது நெஞ்சத்தில் பழைய நிகழ்ச்சியொன்று சுழன்றுகொண்டிருந்தது.
சிலநாட்களுக்கு முன்பும் நடுநிசியில் யாரோவந்து கதவைத் தட்டினார்கள். விழித்துக் கொண்ட வேலாயுதர் இன்றுபோலச் சினக்கவில்லை. அமைதியாகக் கதவைத் திறந்தார். வெளியில் ஒருவன் பதறிய வண்ணம் நின்றுகொண்டிருந்தான். வேலாயுதர் முன்பு அவனைப் பார்த்ததில்லை, யாரோ பிற ஊரவனாக இருக்கவேண்டும்.
“என்ரை மோனுக்கு ஏதோ காலிலை கடிச்சுப்போட்டுது; அவனாலை நடக்கேலாது; நீங்கள்தான் காப்பாத்த வேணும்.”
வேலாயுதர் ஒருகணம் கூடத் தாமதிக்கவில்லை. உடனே மருந்துப் பையை எடுத்து எல்லாம் சரியாக இருக்கின்றதா என்று கவனித்தார். இல்லாத மருந்துகளை எடுத்துப் பையில் வைத்துக்கொண்டு அவனைப் பின் தொடர்ந்தார்.
“ஐயா ! சுறுக்காய் வாருங்கோ”.
வேலாயுதர் அமைதியாகச் சிரித்தார்.
“பயப்பிடாதையப்பா, உன்ரை மோனைக் காப்பாத்திறது என்னுடைய பொறுப்பு”.
வேலாயுதருடைய சொல்லில் நம்பிக்கை ஏற்படாதவன்போல அவன் பதறிக்கொண்டிருந்தான். அவனது தோற்றத்தில் பிரதிபலித்த புத்திரபாசத்தை வேலாயுதரால் நன்றாக உணர முடிந்தது. அவர் தன்னால் இயன்றவரை வேகமாக நடந்து கொண்டிருந்தார். அந்த அகால வேளையில் ஒரு மைலுக்கு மேல் நடக்கவேண்டியிருந்தது.
விஷந்தீண்டப்பட்டவனைக் கவனித்தார் வேலாயுதர். அவன் சிறுவனாக இருந்தான். தேகம் சிறிதாக நடுங்கிக் கொண்டிருந்தது. விழிகள் இமைக்குள் செருகிப்போயிருந்தன. நாக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்தது.
காலில் சிறிதாக ஏதோ காயம். அதில்தான் விஷம் தீண்டப் பட்டிருக்க வேண்டும்.
அச்சிறுவன் இடையிடையே முனகிக்கொண்டிருந்தான்.
உடம்பில் இன்னும் விஷம் பரவிவிடவில்லை என்பதை வேலாயுதருடைய வைத்திய அறிவால் அறிந்துகொள்ள முடிந்தது. அதிர்ச்சியால் தான் சிறுவன் அவ்வாறு மயங்கியிருக்கவேண்டும். தாமதித்தால் விஷம் தேகத்தில் பரவி விடக்கூடும். வேலாயுதரின் முகத்தில் நம்பிக்கையொளி பரவியது. அவரால் சிறுவனைக் காப்பாற்றிவிட முடியும்.
தனது கைப்பையை ஒரு பக்கத்தில் வைத்துவிட்டுச் சிறுவனின் அருகில் அமர்ந்தார். மெதுவாக விஷந்தீண்டிய காலைத் தூக்கித் தனது மடியில் வைத்து விட்டுத் தன் இஷ்ட தெய்வத்தைச் சிறிது நேரம் பிரார்த்தனை செய்தார். பின்பு மெதுவாகக் காலைத் தடவிக் கொண்டே மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்கினார்.
அவரது மந்திர உச்சாடனம் உச்ச ஸ்தாயியை அடைந்த பொழுது சிறுவன் கண்விழித்துப் பார்த்தான். அவனது முகத்தில் தாங்க முடியாத வேதனையின் சாயல் படிந்திருந்தது.
வேலாயுதர் தொடர்ந்து மந்திரத்தை உச்சரித்துக் கொண்டி ருந்தார். சிறுவனுக்கு வேதனை குறைந்ததாகத் தெரியவில்லை. பச்சிலை மருந்துகளை அவனது காலில் ஊற்றி நன்றாகச் சூடுபிறக்கும் படி தேய்த்தார். விஷத்தையிழுக்கும் காந்தக் கல்லைக் கடிவாயில் வைத்தார். ஏதேதோ கழிம்புகளைப் பூசினார். தனக்குத் தெரிந்த வைத்திய முறைகள் எல்லாவற்றையுமே கையாண்டு பார்த்தார். சிறுவனுடைய வேதனையை மட்டும் அவரால் குறைக்க முடியவில்லை. அவன் உயிர் போகப் போகின்றவன் போலக் கத்திக் கொண்டிருந்தான்.
வேலாயுதருடைய முதிர்ந்த விஷவைத்திய அனுபவத்தில் அவர் ஒரு நாளும் இவ்வளவு கஷ்டப்பட்டதில்லை. எந்தப் பெரிய விஷத்தையும் நொடிப் பொழுதில் நீக்கக் கூடியவர் இன்று தோல்வி கண்டு விட்டாரா? அவருடைய மனதில் இனம் புரியாத பதகளிப்பு மேலோங்கி நின்றது, வாய் வேகமாக மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
திடீரென்று சிறுவன் எழுந்து உட்கார்ந்தான். வேலாயுதருடைய மடியில் இருந்த காலை உதறி விட்டுச் சிரித்தான். வரவர அவனது சிரிப்பு அதிகமாகிக் கொண்டே வந்தது. கடைசியில் பேய் பிடித்தவன் போலச் சிரிக்கத் தொடங்கி விட்டான்.
வேலாயுதர் திகைத்துப் போனார். இவனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா? விஷம் அதிகமாகத் தேகமெல்லாம் பரவி மூளையையும் தாக்கி விட்டதா? அவருடைய வைத்தியத் துறையில் அன்றுதான் தோல்வியா?
சிறுவன் எழுந்து வேகமாக ஓடத் தொடங்கினான். அவனைத் தொடர்ந்து அவனது தந்தையும் ஓடினான். ஸ்தம்பித்துப் போயிருந்த வேலாயுதர் தனது சுயநிலைக்கு வரச் சிறிது நேரம் பிடித்தது.
மெதுவாக எழுந்து வீட்டை நோக்கி நடந்தார். அவரது உள்ளத்தில் பலவித உணர்ச்சிகள் தேங்கி நின்றன. தனது குடிசையை அடைந்த பொழுது அங்கே அவர் கண்ட காட்சி………
மருந்துப் புட்டிகள் உடைந்து கிடந்தன. ஏட்டுச்சுவடிகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. மூலையில் அவருடைய பார்வை திரும்பியது. ஆயுட்காலம் முழுவதும் உழைத்துச் சேகரித்த பணம் முழுவதும் திருட்டுப் போய் விட்டது. தலையில் கைவைத்தபடியே அவர் கல்லாய்ச் சமைந்துபோய் இருந்தார்.
தன்னுடைய மகன் ஊரில் இல்லாத நேரத்தில் தன்னைத் தந்திரமாக வெளியே அழைத்துச் சென்றுவிட்டு வீட்டில் களவாடிய திருட்டுக் கூட்டத்தில் மட்டும் வேலாயுதருக்கு வெறுப்பு ஏற்படவில்லை. மனித இனம் முழுவதையுமே அவர் வெறுத்தார்.
‘இந்தக் காலத்திலை ஒருதருக்கும் நன்மை செய்யப்படாது. நன்மை செய்தவனுக்கு நாசந்தான் செய்வினம். நன்றி கெட்ட மனிசர்’ மனதில் எழுந்த நினைவுகளால் அவர் பொருமினார்.
வேலாயுதர் புரண்டு படுக்கின்றார். மன உளைச்சலின் வேதனையை அவரால் தாங்க முடியவில்லை. “நான் ஒரு வைத்தியனுடைய கடமையிலிருந்து தவறி விட்டேனோ?” இதயத்தின் அடியிலிருந்து எழுந்த கேள்வி குமைந்து திரண்டு மனக்கதவை மோதிக் கொண்டிருந்தது.
அவர் அப்படி நடந்து கொண்டது சரியா? வாழ்வுக்காகத் தவிக்கும் உயிர் அவருக்கு என்ன தீங்கு இழைத்து விட்டது? தீமை செய்தவனுக்கும் நன்மை செய்யும் அவரது உள்ளம் எங்கு மறைந்து விட்டது? யாரோ அவருக்கு இழைத்த தீங்குக்காக யாதொரு குற்றமும் அறியாத இன்னொரு உயிருக்குத் தண்டனையா? ஏன் அவருடைய புத்தியே மழுங்கி விட்டதா?
வாழ்வுக்கும், சாவுக்கும் இடையில் ஊசலாடிய உயிர் அவரது வரவுக்காக ஏங்கியேங்கி ஓய்ந்திருக்குமோ? அப்படி நடந்திருந்தால்….. இறக்கும் தருணத்தில்கூட அவரைத்தான் அந்த உயிர் நினைத் திருக்கும்.
அந்த உயிரை நம்பி யார் யார் வாழ்கின்றார்களோ? அதன் பிரிவால் யார் யார் கலங்கப் போகின்றார்களோ? எந்தக் குடும்பம் சீரழியப் போகின்றதோ? வேலாயுதருடைய இதயம் கசங்கிக் கொண்டிருந்தது.
வேலாயுதர் தெருவில் நடந்து கொண்டிருக்கின்றார். அவரைக் காண்பவர்கள் ஏன் மறுபக்கம் முகத்தைத் திருப்பிக் கொள்ளு கின்றார்கள்? அவரைக் காணும் போது மரியாதையோடு வணக்கம் தெரிவிப்பவர்கள் ஏன் இன்று கொலைகாரனைப் பார்ப்பதுபோல் வெறுப்போடு பார்க்கின்றார்கள்? அவரைக் காணும்போது அன்புகனிய மனம் நிரம்பிச் சிரிப்பவர்கள் இன்று ஏன் காறி உமிழ்கின்றார்கள்? கம்பீரமாக அரச நடைபோட்டுச் செல்லும் வேலாயுதர் இன்று கூனிக்குறுகி நடக்கிறார். நினைவுப் புழுக்கள் அவரது மனதைக் கடித்து ஈய்க்கின்றன.
சிறிது சிறிதாக அவரது மனம் அமைதியடைகிறது. நிதானத்துடன் எழுந்து முன் கதவுத் தாழ்ப்பாளை நீக்கி வெளியே வருகிறார். கடமையுணர்ச்சியால் அவரது மனம் விரிவு காண்கிறது.
பிள்ளையார் கோயிலடியை நோக்கி அவரது கால்கள் நகர்கின்றன.
அங்கே – அவரது மகன் சுந்தரம் அரவு கடித்து இறந்து வெகு நேரமாகிவிட்டது.
-வீரகேசரி 1964