ஒல்லியான நடுத்தர வயது மங்கை டாக்டர் கல்பனா உறக்கத்திலிருந்து கண் விழித்தார். அருகில் மேசையில் இருந்த மொபைலில் நேரத்தைப் பார்த்தார். மணி இரவு எட்டு. எட்டு மணிக்கெல்லாம் தூங்குகிற ஆளா நான்? காய்ச்சலும் அசதியும் தூங்க வைத்து விட்டது. அவர் படுத்திருந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு அவரது மகள் ஒடிசலான பதின் பருவ மங்கை சுடரொளி அவர் அருகில் வந்தாள். தொட்டுப் பார்த்தாள். பேச முடியாதபடி தொண்டை கட்டியிருந்த கல்பனா, டெம்பரேச்சர் பார்க்கும்படி சைகை காட்டினார். சுடரொளி, அந்த அறையில் தெர்மா மீட்டரைத் தேடி எடுத்து அம்மாவின் அருகில் வந்தாள். அப்போது கனமான உடல்வாகு கொண்ட கல்பனாவின் கணவர், சிறிய தேக்கரண்டி வைக்கப்பட்ட கஞ்சிக் கிண்ணத்துடன் அறைக்குள் வந்தார். மனைவியிடம் கொடுத்தார். கல்பனா வாங்கிக் கொண்டார்.
‘என்னப்பா..கஞ்சி கொடுத்து அம்மாவுக்கு ஐஸ் வைக்கறியா’
சுடரொளி கேட்டாள். கல்பனா, கஞ்சியைப் பருகினார்.
‘நான் ஏன் ஐஸ் வைக்கறேன்..என்ன சொல்றே..‘ கேட்டார் மணிவண்ணன்.
‘சொல்றாங்க..ரெண்டு நாளா ஆஸ்ப்பிட்டல் ட்யுட்டிக்குப் போக முடியாம உடம்பு சரியில்லாம இருந்த அம்மாவை நான்தான் பார்த்துகிட்டேன். இன்னிக்கு நைட் வந்துட்டு கஞ்சி ரெடி பண்ணி அம்மாவை தாஜா பண்றே இல்ல..‘ என்று நிறுத்தி, அம்மாவையும் அப்பாவையும் பார்த்தாள் சுடரொளி.
‘டாடி நீ என்ன பண்ண..அம்மாவுக்கு இன்னொரு வீட்டுக்கு போய் வாழப் பிடிக்கலைங்கறதை எப்படியோ தெரிஞ்சுகிட்டு அம்மா கிட்ட நைசா பேசி வீட்டு மாப்பிள்ளையா இருக்கேன்..ஹவுஸ் ஹஸ்பெண்டு ஆக இருக்கேன்னு அம்மாவுக்கு வாக்குறுதி கொடுத்து கல்யாணம் பண்ணிகிட்டே..இப்ப நானும் தம்பி விவேக்கும் வளர்ந்தப்புறம் டிவி சீரியல்ல வில்லனா நடிக்கப் போய்ட்டே..சில நாள் விடியற் காலைல தான் வீட்டுக்கு வர.. இப்படித்தான் நீ, வீட்டு நிர்வாகத்தைப் பார்த்துக்க நான் இருக்கேன்னு சொல்லிட்டு அம்போன்னு விட்டுட்டு போயிட்டே..அம்மா, பாட்டியையும் பார்த்துகிட்டு எங்களையும் ஸ்கூலுக்கு அனுப்பிட்டு ட்யுட்டிக்குப் போறாங்க. ஒன்னால வந்த ஸ்ட்ரெஸ்னால தான் அம்மாவுக்கு பீவர் வந்துடுச்சு..‘
‘சுடர் என்ன சொல்றே அம்மா கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு தான் நான் நடிக்கற வேலைக்கு போனேன். அம்மா தான் மேனேஜ் பண்ணிக்கறேன்னு சொன்னா..ஸ்ட்ரெஸ்னால பிபி தான் வரும் நீ புதுசா காய்ச்சல் வந்திடுச்சுன்னு சொல்றே..‘
தந்தையும் மகளும் பேசுவதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் கல்பனா.
‘நோய் எதிர்ப்பு சக்தி போய்ட்டதால காய்ச்சல்…நீ அம்மாவுக்கு கொடுத்த வாக்கை மீறிட்டு வீட்ல இருக்கறது இல்ல..தாத்தாவும் ஒரு மாசமா பகல் நேரத்தில் வீட்ல இருக்கறது இல்ல..திடீர்ன்னு வீட்ல ஏதாவது வேலைன்னா எலக்ட்ரிசியன் பிளம்பர் வேணும்னா பாட்டி அக்கம் பக்கத்து வீட்ல இருக்கிறவங்க கிட்ட ஆளை வரவழைங்கன்னு சொல்றாங்க..மம்மி இவரை சும்மா விடாதே..ஊர்ல இருக்கிற அந்த தாத்தா வீட்டுக்கு போக சொல்லு. நமக்கு வேணாம்..‘ என்றாள் சுடரொளி .
‘என்னம்மா சுடர் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையே சண்டை வரவழைக்க ரொம்ப முயற்சி பண்றா மாதிரி தெரியுது..’ சொன்னார் மணிவண்ணன் .
‘ஆமாம். பாட்டியும் தாத்தாவும் சண்டை போட்டுக்கறாங்க தம்பி விவேக்கும் நானும் சண்டை போட்டுக்கறோம் இந்த வீட்ல நீங்க ரெண்டு பேரும் கோபமா கூட பேசிக்கறது இல்ல. எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து நீயும் அம்மாவும் சண்டை போட்டு பார்த்தது இல்லை, சண்டை வருமான்னு பார்த்தேன்…நீ சுதாரிச்சுட்டே..அம்மாவுக்கு பேச்சு வந்ததும் மறுபடியும் கலக முயற்சி பண்ணிப் பார்க்கறேன்’ என்றாள் சுடரொளி. அருகிலிருந்த தலையணையால் மகளை செல்லமாக அடித்தாள் கல்பனா .
கணவரைப் பார்த்து சைகையால் ஏதோ கேட்டார் கல்பனா. மணிவண்ணன் ஏதும் புரியாமல் விழித்தார்.
‘இது புரியலையா டாடி..இதுல நீ..காதலிச்சு கரக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டே இவங்கள..அம்மாவோட அப்பா..எங்க தாத்தா எங்கே போறாரு வராருன்னு துப்பறிய சொன்னாங்களே என்ன ஆச்சுன்னு கேட்கறாங்க மம்மி’ விளக்கினாள் சுடரொளி. கல்பனா தலையை அசைத்தார்.
‘அதுவா..எல்லாம் விவேக் போட்ட சவால்..போன மாசம், அவன் மொபைல் ல கேம் விளையாடும் போது மாமா, எக்சாம் இருக்கு விழுந்து விழுந்து படிக்காம ஏன் கேம் விளையாடறேன்னு கேட்டுட்டாரு..அவன் வாயை வெச்சுகிட்டு சும்மா இல்லாம துடுக்குத்தனமா நீ விழுந்து விழுந்து படிச்சு ஒரு எக்சாம் எழுதி பாஸ் பண்ணிக் காட்டு பார்ப்போம்ன்னு சொல்லிட்டான்.
இப்ப எல்லாம் லைப் இன்சூரன்ஸ் ஏஜன்ட் ஆவறதுக்கு.. முன் எல்லாம் லைப் இன்சூரன்ஸ் ஏஜன்ட்ன்னு சொல்வாங்க இப்ப லைப் இன்சூரன்ஸ் அட்வைசர் ன்னு பேரு அப்படி அட்வைசர் ஆகறதுக்கு ஆன்லைன் எக்சாம் பாஸ் பண்ணி ஆகணும் ஆர்வமுள்ளவங்களுக்கு லைப் இன்சூரன்ஸ் கம்பெனி, அதுக்கு பயிற்சி கொடுத்து எக்சாமுக்கு அனுப்பி வைக்கறாங்க . ஆன்லைன் எக்சாம் நடத்தற மையத்துக்கு போய் அவங்க கொடுக்கற சிஸ்டத்துக்கு முன்னாடி உக்காந்து தேர்வு எழுதிட்டு வரணும் அப்ஜெக்ட்டிவ் டைப் தான் . ஏஜ் லிமிட் இல்லை நிறைய சீனியர் சிட்டிசன்தான் எழுதறாங்க..லைப் இன்சூரன்ஸ் அட்வைசர் ஆகி கிளையன்ட் பிடிக்க முடியுதோ இல்லையோ, பேரன் விட்ட சவாலுக்காக விழுந்து விழுந்து படிச்சுட்டு இன்னிக்கு சென்ட்டருக்கு போய் எக்சாம் எழுதிட்டு வந்திருக்காரு அவரு .. ரிசல்ட் அப்பவே சொல்லிடுவாங்க..இப்ப ஒங்க தாத்தா வீட்டுக்கு வரும் போது தெரிஞ்சுடும் அவரோட ஆன்லைன் பரீட்சை ரிசல்ட் ‘ என்று முடித்தார் மணிவண்ணன் . கல்பனாவின் விழிகள் வியப்பில் விரிந்தன. அப்போது அந்த அறைக்குள் கையில் இனிப்புடன் கல்பனாவின் தந்தை ராஜேந்திரன் நுழைந்தார்.
கல்பனா கணவரைப் பார்த்தார்.
ராஜேந்திரன் ‘அம்மா இனிப்பு எடுத்துக்க’ என்று கல்பனாவிடம் நீட்டினார்.
சுடரொளி அதனை வாங்கிக் கொண்டாள். ‘அம்மாவுக்கு காய்ச்சல்..அவங்களுக்கு பதிலா நான் தம்பி அப்பா எல்லாரும் சாப்பிடறோம். எதுக்கு ஸ்வீட் ன்னு சொல்லுங்க.. நான் சொல்லட்டுமா இந்த வயசுல கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து லைப் இன்சூரன்ஸ் அட்வைசர் -க்கான ஆன்லைன் எக்சாம் எழுதி கலக்கிட்டிங்க விவேக் விட்ட சவாலை நிறைவேத்திட்டிங்க. கிரேட் தாத்தா நீங்க.. கிளையன்ட் பிடிக்க நீங்க ரொம்ப கஷ்டப்பட வேண்டாம். அப்பாவைப் பிடிங்க அவர் ஒரு பாலிசி எடுப்பாரு . சின்னத் திரை நடிகருங்க எல்லாரையும் ஒங்களுக்கு அறிமுகப்படுத்துவாரு..ஒங்களுக்கு வருமானம் கொட்டும்’ என்றாள் சுடரொளி. ‘இத்த்தூணுண்டு பொண்ணா இருந்துகிட்டு என்ன வேலை பார்க்கறே..என்னை விடுங்க. நான் வரலே இந்த ஆட்டத்துக்கு’ என்று கூறியபடியே அறையை விட்டு வெளியேறினார் மணிவண்ணன். கல்பனாவின் முகத்தில் புன்னகை.
குறிப்பு – சவால் என்பதை அடிநாதமாக கொண்டு சவால் கதைகள் 10 என்ற இந்த சின்னஞ்சிறு புனைகதைகளைப் படைத்துள்ளேன். இந்தப் புனைகதைகளில் , சமூக கதைகளில் விவரிக்கப்படும் சூழல்கள் , பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.