அருணாசலம் விநாயகர் படத்தினை வணங்கிவிட்டு அருகில் உள்ள விபூதியை தன் நெற்றி நிறைய பூசிக்கொண்டு, மனைவி சிவசக்தியிடம் “சக்தி! நான் ஒர்க் ஷாப் போயிட்டு வர்றேன்” என்ற வழக்கம்போல் குரல் கொடுத்தார்.
“ஏங்க காபி கலந்து வெச்சிருக்கேன் குடிச்சிட்டுப் போங்க” என்று சிவசக்தி ஞாபகப்படுத்தினாள். காபியை அருந்திவிட்டு, வாசலில் நின்ற பழைய சைக்கிளை எடுத்துக்கொண்டு, ‘குமார் ஒர்க் ஷாப்’ நோக்கி அருணாசலம் கிளம்பினார். அருணாசலத்திற்கு வயது எழுபதைத் தாண்டியும், அவர் இன்னும் குடும்பத்திற்காக ஓயாமல் உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார். அருணாசலம் தான் வேலை பார்க்கும் ‘குமார் ஒர்க் ஷாப்பை’ அடைந்தவர் சைக்கிளை ஓரத்தில் நிறுத்தி விட்டு, தன்னிடம் உள்ள சாவியினால் ஒர்க் ஷாப்பினை திறந்து வைத்து விட்டு அங்குள்ள சுவாமி படங்களுக்கு எல்லாம் பூச்சரங்களைப் போட்டு விட்டு ‘அப்பனே முருகா’ என்று தனக்குள் கூறிக்கொண்டே ‘குமார் ஒர்க் ஷாப்பினை’ நடத்தும் பாலுவின் வருகைக்காக காத்திருந்தார். ஒர்க் ஷாப் நடத்தும் பாலு வந்தவுடன் எழுந்து சென்று ‘தம்பி வாங்க’ என்று முகமலர்ந்து வரவேற்று வழக்கம்போல் சுவாமி படங்களுக்கு அருகில் ஊதுபத்தியைக் கொளுத்தி வைத்தார். பாலுவும் சுவாமி படங்களுக்கு முன்பு நின்று வணங்கி விட்டு, அங்குள்ள நாற்காலியில் அமர்ந்தான். சிறிது நேரத்தில் ஒர்க் ஷாப்பில் வேலை பார்க்கும் ரமேஷ், ஓனர் பாலுவுக்கு வணக்கம் செலுத்தி விட்டு, நேற்று இரவு தான் விட்டுப்போன வேலைகளைத் தொடர்ந்தான்.
ஒர்க் ஷாப்பில் பழுது பார்ப்பதற்காக நேற்று இருசக்கர வாகனத்தினை விட்டுப்போன இளைஞன் ஒருத்தன்,” பாலு அண்ணாச்சி நம்ம வண்டி வேலை முடிந்து விட்டதா?” என்று கேட்டான். அப்போது இருசக்கர வாகனத்தினை பழுது பார்த்துக் கொண்டிருந்த ரமேஷ் பக்கத்தில் இருந்து, அவன் கேட்கும் ஸ்பானர்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்த அருணாசலத்தை அந்த இளைஞன் சம்பந்தமில்லாமல் ஏற இறங்கப் பார்த்தான். அவரின் நெற்றி நிறைய விபூதி, பஞ்சுபோன்ற நரைத்த தலைமுடி, வயதானவர் எனக் காட்டும் கைரேகைகள் போன்று அவரின் முகச்சுருக்கங்கள், தொளதொளக்கும் காக்கி பான்ட், அழுக்கடைந்த காக்கிச் சட்டையுடன் அருணாசலம் காணப்பட்டார்.
பாலு, அருணாசலத்தைப் பார்த்து “அருணா மாமா! வேலையெல்லாம் அப்புறம் பார்க்கலாம் முதலில் எங்க ரெண்டு பேருக்கும் டீ வாங்கிட்டு வாங்க” எனக் கூறினான்.
“என்ன பாலு அண்ணாச்சி! இந்தப் பெரியவர் உங்களுக்கு மாமாவா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.
“இல்லை நான் சிறுவனாகப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, அடிக்கடி ஏதாவது வேலையாக எங்க வீட்டுக்கு வரும் இந்தப் பெரியவர் அருணாசலத்தை எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் ‘அருணா மாமா’ என்றுதான் அழைப்பேன் “ என்று சிரித்துக் கொண்டே கூறினான்.
“சரி அண்ணாச்சி, இந்த வயதான பெரியவரை வைத்து என்ன வேலைதான் வாங்கறீங்க.” என்று கேட்ட இளைஞனுக்கு, ‘குமார் ஒர்க் ஷாப்’பில் அருணா மாமா வந்து சேர்ந்த விபரத்தினை கதைபோல் சுருக்கமாகக் கூறினான்.
பாலுவின் அப்பா சிதம்பரம், ‘குமார் ஒர்க் ஷாப்’ என்ற பெயரில் ஆரம்பித்தபோது, அருணாசலம் பதினைந்து வயது சிறுவனாக அவர் முன்னால் வேலைக் கேட்டு வந்து நின்றான். அவன் தன் குடும்பம் கஷ்ட நிலையில் இருப்பதாகவும் தன்னை படிக்க வைக்கக்கூட வீட்டில் வசதியில்லை என்றும் தனக்கு ஒர்க் ஷாப்பில் வேலை தந்தால் தன் குடும்பத்திற்கும் ரெம்ப உதவியாக இருக்கும் என்று அவரிடம் பணிவாகக் கேட்டான். சிதம்பரம் அந்தச் சிறுவன் அருணாசலத்தின் குடும்பப் பொறுப்புணர்ச்சியையும் பணிவுடன் அவன் தன்னை அணுகிய விதமும் சிதம்பரத்திற்கு மிகவும் பிடித்து விட்டது. அந்த சிறுவன் அருணாசலத்தை உடனே ஒர்க் ஷாப்பில் சேர்த்துக் கொண்டார். அவனுக்கு அப்போது வேலை எதுவும் செய்வதற்குத் தெரியாவிட்டாலும், ஒர்க் ஷாப்பில் சிதம்பரம் கூறும் சிறுசிறு வேலைகளை மனம் கோணாமல் பொறுமையுடன் செய்து வந்தான்.
அருணாசலம் வேலைக்கு வந்த ஒரு வருடத்திலே ஒர்க் ஷாப்புக்கு வரும் இருசக்கர வாகனங்களை பழுது பார்க்கும் வேலையினை நன்கு கற்றுக் கொண்டான். மேலும் அவன் ஓய்வு நேரங்களில் சிதம்பரம் வீட்டிற்குச் செல்வான். அப்போது சிதம்பரத்தின் மனைவி அருணாசலத்தை கடைக்குப் போய் வருவதற்கும் மற்றும் சிறுசிறு வேலைகளுக்கும் நன்கு பயன்படுத்திக் கொண்டாள்.
காலச்சக்கரம் சுழன்றது. அருணாசலத்திற்கு அவன் வீட்டில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வதை அறிந்த சிதம்பரம், அவனுடைய திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார். சிதம்பரம் வீட்டிற்கு அருணாசலம் வரும்போதெல்லாம் சிதம்பரத்தின் ஒரே மகன் பாலு “ அருணா மாமா வந்துட்டார்” என்று தனது அம்மாவிடம் மகிழ்ச்சியுடன் கத்திக் கூறுவான். பாலுவிடமும் அருணாசலம் அன்பாகப் பேசி சிரித்துப் பழகி வந்தார். அருணாசலத்தை சிதம்பரத்தின் குடும்பத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்து விட்டது.
அருணாசலத்திற்கு திருமணம் முடிந்து அடுத்துஅடுத்து சிவா, ராமு மகன்கள் பிறந்தார்கள். நீண்ட இடைவெளிக்குப்பின் மகள் ஜெயந்தி பிறந்தாள். அவர் ஒருவரின் உழைப்பாலே அவர் குடும்பம் ஓடியது என்பதை விட குமார் ஒர்க் ஷாப் சிதம்பரம் என்பவரின் உதவியாலே ஓரளவு ஓடியது என்றுதான் கூற வேண்டும். இந்நிலையில் சிதம்பரம் திடீரென்று மாரடைப்பினால் இறந்து விட்டார். அப்போது அவருடைய மகன் பாலுவுக்கு வயது முப்பது இருக்கும். ஒர்க் ஷாப் பாலுவின் நிர்வாகத்தில் வந்தது. பாலு சிறு வயதிலிருந்து அருணாசலத்தை ‘அருணா மாமா’ என்று அன்பாக அழைத்துப் பழகியதால் அவருடைய உதவியால் ஒர்க் ஷாப்பிணை தொடர்ந்து நடத்தி வந்தான். சிதம்பரம் உயிருடன் இருக்கும்போது அடிக்கடி அருணாசலத்தைப் பற்றி தன் மகன் பாலுவிடம் நல்லவிதமாக கூறியிருந்தார். எனவே ‘குமார் ஒர்க் ஷாப்பில்’ அருணா மாமாவின் பணியானது பாலுவின் நிர்வாகத்திலும் தொடர்ந்தது.
அருணாசலம் தன்னோட மகன்கள் சிவா, ராமுவையும் மகள் ஜெயந்தியையும் பள்ளிப்படிப்பு வரைக்கும் படிக்க வைப்பதற்கே அப்போது மிகவும் கஷ்டப்பட்டார். உரிய காலத்தில் மகள் ஜெயந்திக்கு கடன் வாங்கி, பாலுவின் உதவியுடன் திருமணத்தை முடித்தார். மூத்த மகன் சிவா பள்ளிப்படிப்பை முடித்து ஒரு மில்லில் வேலைக்குச் சேர்ந்தான். ராமுவும் பள்ளிப்படிப்பை முடித்து பெரிய ஜவுளிக் கடையில் வேலைக்குச் சேர்ந்தான். உரிய காலத்தில் அருணாசலம் மகன்கள் இருவருக்கும் திருமணம் முடித்து, அனைவரும் கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில்தான் வசித்து வந்தார்கள்.
அப்போதுதான் விதி விளையாடியது. மூத்த மகன் திருமணம் முடிந்து நல்லபடியாக அப்பாவுடன் சேர்ந்து குடும்பத்தை கவனித்து வந்தான். ஆனால் அவன் மூன்று மாதங்களிலே தன் மனைவியின் பேச்சைக் கேட்டு தனிக்குடித்தனம் சென்று விட்டான். அண்ணன் எவ்வழி அவ்வழி என்வழி என்பதுபோல் இரண்டாவது மகன் ராமுவும், தனியாகச் சென்று விட்டான். இரு மகன்களும் தங்கள் அப்பா அம்மாவைப்பற்றி கவலைப்படாமல், தங்கள் குடும்பத்தினை சந்தோசப்படுத்துவதிலே கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். மகன்கள் தனிக்குடித்தனம் சென்று விட்டதால் அருணாசலத்திற்கு தான் குடியிருக்கும் வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியவில்லை. அருணாசலம் அவ்வப்போது தன் குடும்பத்தையும் மகன்கள் பற்றியும் பாலுவிடம் கூறி வந்தார். அவருடைய நிலை அறிந்து பாலு தன் வீட்டிற்கு அருகில் இரு அறைகள் கொண்ட சிறிய வீட்டினை அவருக்கு குறைந்த வாடகைக்குக் கொடுத்தான். அருணாசலம் அங்கு சென்று மனைவி சிவசக்தியுடன் தனியாகக் குடியிருந்து வந்தார்.
மகள் ஜெயந்தியோ அப்பா அம்மாவை மிகவும் பாசத்துடன் உருகிப் பார்ப்பதுபோல், நடித்து அருணாச்சலத்திடம் அப்பா மிகவும் கஷ்டப்படுகிறார் என்று தெரிந்திருந்தும் ஏதாவது காரணத்தைக் கூறி கண்ணீர் வடித்து அவரிடம் பணத்தை அடிக்கடி வாங்கிச் செல்வாள். அவள் தன்னை அக்கறையுடன் பார்க்க வரவில்லை என்பது அவருக்குத் தெரிந்தாலும், அதனை வெளிக்காட்டாமல் சில நேரங்களில் தன் மனைவியிடம் மகள் ஜெயந்தி பற்றி கூறி புலம்புவார். வயதான காலத்தில் இருமகன்களும் தன்னைக் கவனித்துக் கொள்வார்கள் என்ற எண்ணத்தில் இருந்தார் அருணாசலம். மூத்த மகன் சிவா மில்லில் வேலை பார்த்தாலும் அவனும் அருணாசலத்திடம் அடிக்கடி வந்து ‘ அப்பா மகனை காலேஜில் சேர்க்கணும் பணம் வேணும்” ஏதோ ஒரு காரணத்தைக் கூறி அடிக்கடி பணம் வாங்கிச் செல்வான். அவர் தன்னிடம் பணம் இல்லையென்றாலும் ஒர்க் ஷாப் பாலுவிடம் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
தன் மகள் ஜெயந்தி வீட்டிற்கு வரும்போதெல்லாம் “ ஜெயந்தி உன்னோட அண்ணன்கள் ரெண்டுபேரும் அப்பாவிடம் வந்துதான் பணம் செலவுக்கு வாங்குறாங்க தவிர பணத்தை யாரும் திருப்பித் தர்தில்லே, எங்களைப்பத்தி கவலைப்படுவதும் இல்ல“ என்று சிவசக்தி புலம்புவாள். அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் அம்மாவிடம் ஆறுதல் கூறுவதுபோல் கூறி விட்டு, அம்மா பணம் எதுவும் வைத்திருந்தால் வாங்கிச்சென்று விடுவாள். ஒரு கவிஞர் கூறியதுபோல் “பால் குடித்த குட்டிகள் அவ்வப்போது முதியோர் இல்லத்தில் தாய் தந்தையரை எட்டிப்பார்த்து விட்டுச் செல்லும்“ என்பதுபோல்தான் அருணாசலத்தின் பெற்ற மகன்களும் மகளும் அவ்வப்போது அவரைப் பார்த்துச் சென்றார்கள்.
ஒருநாள் அருணாசலம் வீட்டிற்கு காலையில் வந்த மகன் ராமு “அப்பா உங்க பேத்தி சந்தியாவுக்கு வயித்திலே கட்டி வந்திருக்கு, அதை ஆப்ரேஷன் பண்ணி எடுக்கலேன்னா உயிர்க்கே ஆபத்தாம். அதற்கு ஐம்பதாயிரம் செலவாகும்னு டாக்டர் சொல்றாரு. நீங்கதான் உங்க முதலாளியிடம் சொல்லி ரூபாய் வாங்கிக் கொடுங்கப்பா“ என்று கேட்டான்.
“ராமு நீ சொல்வதைக் கேட்டு எனக்கும் வருத்தமாத்தான் இருக்கு. என்ன செய்வது என்று எனக்கும் புரியல்லே. இவ்வளவு பெரியதொகை முதலாளி பாலு கொடுப்பார்ன்னு எனக்குத் தோணலே. சரி பார்ப்போம்!” என்று அவனுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார். ஆனால் அவர் அன்று இரவு முழுவதும் தூங்காமல் புரண்டு கொண்டே இருந்தார். மறுநாள் காலையில் ஒர்க் ஷாப்புக்கு வரும் தனக்குத்தெரிந்த வாடிக்கையாளர்களிடம் பணம் கேட்டுப் பார்த்தார். அனைவரும் ஏதாவது ஒரு காரணம் கூறி ‘இல்லை’ என்று கை விரித்து விட்டனர்.
இதுவரை எட்டிக்கூட பார்க்காமல் இருந்த ராமுவின் மனைவி அடிக்கடி வீட்டிற்கு வந்து தன்னோட மகள் சந்தியா ஆப்ரேஷன் பற்றி, மாமா அருணாசலத்திடமும் அத்தை சிவசக்தியிடமும் புலம்ப ஆரம்பித்தாள். அவள் புலம்புவதைக் கேட்ட அருணாசலத்திற்கு ‘ இந்த உலகமே சுயநலத்தில்தான் சுழல்கிறதோ’ என்று தோன்றியது. அவர் பேத்தி சந்தியாவின் ஆப்ரேஷன் பற்றி கவலைப்பட ஆரம்பித்தார்.
அன்று செய்தித்தாளில் வந்த விளம்பரத்தை தற்செயலாகப் பார்த்த அருணாசலம் பேத்தியின் ஆப்ரேஷனுக்கு வழிபிறந்து விட்டது என்று மகிழ்ந்தார். செய்தித்தாள் விளம்பரத்தில் ‘உடல்நலமில்லாத எனது தந்தைக்கு அவசரமாக கிட்னி ஒன்று தேவைப்படுகிறது விருப்பமுள்ளவர்கள் உதவினால் அவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கமாகவும் அவருக்கு வேண்டிய மருத்துவச் செலவும் கொடுக்கப்படும்’ என்றிருப்பதைப் படித்துப் பார்த்தார். எனவே பேத்தியின் ஆப்ரேஷன்க்கு தனது கிட்னியை கொடுப்பது என்று அருணாசலம் தீர்க்கமான முடிவுக்கு வந்து விட்டார். கடவுள்தான் தன் பேத்திக்ககாக அந்த விளம்பரச்செய்தி உதவி செய்வதாக நினைத்துக் கொண்டார்.
அருணாசலத்திற்கு கிட்னி ஆப்ரேஷன் வெற்றிகரமாக தனியார் மருத்துவ மனையில் வைத்து முடிந்தது. மருத்தவ மனையில் இருந்த அருணாசலம் பணத்தை வாங்கி தன் மகன் ராமுவிடம் கொடுத்து பேத்தியைக் கவனிக்கும்படி கூறினார். மருத்தவமனைக் கட்டிலில் படுத்திருந்த அருணாசலத்தைச் சுற்றிலும் மகன்கள் மருமகள்கள் மகள் ஜெயந்தி ஆகியோர் நின்று கொண்டிருந்தார்கள். அருணாசலம் மனைவி சிவசக்தி அவர் கால்மாட்டில் கவலையுடன் உட்கார்ந்துகொண்டு இருந்தாள். ஒர்க் ஷாப் பாலுவும் அங்கு வந்திருந்தான். பாலு அனைவரையும் பார்த்து பொதுவாக “அருணா மாமா உங்களுக்காக ஓய்வில்லாமல் உழைத்து உங்களையெல்லாம் நல்ல நிலைக்குக் கொண்டு வந்துள்ளார். எனவே இந்த வயதான காலத்தில் அவரைக் கஷ்டபடுத்தாமல் உங்களில் யாராவது ஒருவர் உங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று அவரை நல்லபடியாகப் பார்த்துக் கொள்ளுங்கள்“ என்று கூறினான்.
ஒர்க் ஷாப் பாலு கூறியதைக் கேட்டதும் சிவா, ராமு இருவரும் தங்கள் மனைவிகளைப் பார்த்தனர். அவர்கள் இருவரும் கண்களால் ஜாடை காட்டினர். அதனைப்புரிந்து கொண்ட மூத்த மகன் சிவா “ நான் குடியிருக்கிற வீடு சிறிய வீடு அது அப்பாவுக்கு வசதிப்படாது. தம்பி ராமு வீடு வசதியாக இருக்கும். அப்பாவை அங்கு அழைத்துப் போவதுதான் நல்லது“ என்று கூறினான்.
சிவா கூறுவதைக் கேட்டவுடன் ராமு “அப்பாவும் நானும் சேர்ந்து இருந்தால் குடும்பத்துக்கு ரெண்டு வருஷத்துக்கு ஆகாதுன்னு சோதிடர் சொல்லியிருக்கார். அதனாலே அதுவரைக்கும் அண்ணன் சிவா வீட்டிலே அப்பா இருக்கட்டும்” என்று தட்டிக் கழித்தான்
கவலையுடன் உட்கார்ந்திருந்த சிவசக்தி, மகள் ஜெயந்தியை அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று ஆவலுடன் பார்த்தார். ஜெயந்தி சிரித்துக் கொண்டே “அம்மா நான் அப்பாவை அழைத்துப் போனால் உங்களுக்குத்தான் கவுரக்குறைச்சல் மாப்பிள்ளை வீட்டில் நீங்களும் அப்பாவும் இருப்பது நல்லதில்லை” என்று கூறி தன் அப்பாவின் குடும்ப கவுரத்தை தான் ஒருத்திதான் காப்பதுபோல் காரணம் காட்டித் தட்டிக் கழித்தாள்.
இவர்கள் பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஒர்க் ஷாப் பாலு அருணாசலத்தைப் பார்த்து “அருணா மாமா ,நான் படிக்கும்போது அடிக்கடி பள்ளியில் இருந்த ஆலமரத்தை உங்களிடம் காட்டி, அதன் விழுதுகள் பற்றி, உங்களிடம் கேட்டு இருக்கிறேன். அப்போதெல்லாம் நீங்கள் ஆலமர விழுதுகள் எல்லாம் பூமியைத் தொட்டு நன்கு ஊன்றி அந்த வயதான ஆலமரத்தை காற்று மழையிலிருந்து கீழே விழாமல் தாங்கி நிற்கும்னு, என்னிடம் நீங்கள் அடிக்கடி விளக்கிக் கூறி இருக்கிறீர்கள். ஆனால் உங்க குடும்பத்தின் நிலையையும் உங்கள் பெற்ற பிள்ளைகள் இப்போது கூறுவதைக் நான் கேட்கும்போது, விழுதுகளைத்தான் ஆலமரத்தின்வேர்கள் தாங்கி நிற்கும்போல் தெரிகிறது” என்று அருணாசலத்திற்கு மட்டுமல்ல அனைவருக்கும் ஒர்க் ஷாப் பாலு புரியும்படி கூறினான்.
அருணாசலத்திற்கும் அவர் மனைவிக்கும் புரிந்தது. ஆனால் அவர் பெற்ற மக்களுக்கு …..? ‘ஆல விழுதுகள் போல் ஆயிரம் உறவுகள் இருந்தும் என்ன…’ என்ற டி.எம்.எஸ் குரல் எங்கிருந்தோ ஒலித்தது.
– தினமணிக்கதிர் (நவம்பர் 2019)