விளையும் பயிர்கள்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 1, 2018
பார்வையிட்டோர்: 6,464 
 
 

“அனு, அனு கிளம்பு சீக்கிறம், ராக்கி தூங்கும்போதே கிளம்பிடணும், அவ முழுச்சிகிட்டா இன்னைக்கி ஸ்விம்மிங் க்லாஸ் போறதே சிரமமாயிடும்.” என்று ஸ்கூல்லிருந்து வந்ததும் வராததுமாக அவரசரப்படுத்தினாள் ரேகா.

அவள் கவலையெல்லாம் அடுத்தவள் ராக்கி மூன்று வயதாகியும் வாய் திறந்து பேசாதது தான். மருத்துவரை அணுகிய போது, இதெல்லாம் ரொம்ப சாதாரணம், சில குழந்தைங்க ஆறு, ஏழு வயதுக்குக் கூட பேச ஆரம்பிப்பாங்க, என்றார்.

மூத்த மகள் அனுவை ஒரு ஸ்விம்மிங் சாம்பியனாக்க வேண்டும் என்பது அவள் நீண்ட நாள் ஆசை, கனவு, லட்சியம் எல்லாம். தன்னால் முடியாததை மகளை வைத்து சாதிக்க நினைத்தாள்.

“அம்மா ப்ளீஸ், இன்னைக்கு கண்டிப்பா போகணுமா, , செவ்வாய் கிழமை எனக்கு ட்ராயிங் காம்படிஷன், ஒரு ரெண்டே ரெண்டு நாள் லீவ் போட்டுடலாம், இன்னைக்கும் நாளைக்கும் கொஞ்சமாவது ப்ராக்டீஸ் செஞ்சாதான், அடுத்த நாள் நான் நல்லா வரைய முடியும்.” என்று தன் ஆவலை வெளிப்படுத்தி முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டு இறைஞ்சினாள் அனு.

“நோ வே, என் கிட்ட பர்மிஷன் கேக்காம உன்னை யார் ட்ராயிங் காம்படிஷனுக்கு பேர் கொடுக்க சொன்னது? நீ கட்டாயம் க்லாஸ் கட் பண்ணக்கூடாது.” தீர்மானமாக சொல்லி அவள் பதிலை எதிர்பார்க்காமல் விடுவடுவென நடந்தாள் ரேகா.

மேலும் ரேகாவுக்கு தனக்கு தெரிந்த நுணுக்கங்களை கூட அந்த ‘கோச்’ அனுவுக்கு சரியாக சொல்லித்தருவதில்லை என்று நீண்ட நாட்களாக எண்ணிக்கொண்டிருந்தாள். இத்தனைக்கும் ‘கோச்’ கணவர் கார்த்தியின் அலுவலக நண்பர்.

“என்னம்மா ஞாயிற்றுகிழமை கூடாவா கிளாஸ்?” என்ற மாமனாரைப் பொருட்படுத்தாமல் நடந்தாள் ரேகா. பின்னால் சென்ற அனு, “இல்ல தாத்தா

இது அம்மாவுக்காக ஸ்பெஷல் க்ளாஸ்!” என்று தாத்தாவுக்கு மட்டும் தெரியுமாறு லேசாக தலையில் அடித்துக்கொண்டாள்.

சரியான நேரம் பார்த்து, ராக்கி கண் விழித்து, பிடிவாதமாக அழுது அடம் பிடித்து அவர்களுடன் தொற்றிக்கொண்டாள்.

இரு சக்கர வாகனத்தில் செல்லும் வழியில் தன் உபதேசங்களை ஆரம்பித்தாள் ரேகா, “எடுத்த உடனே தண்ணில டைவ் அடிக்கக் கூடாது, காலை தான் முதலில் தண்ணீல விடணும். நம்ம உடம்போட வெப்ப நிலையும் தண்ணிரோட வெப்ப நிலையும் சமநிலை அடையும், அப்புறம் மெது மெதுவாகத் தான் நாம நீச்சல் பழகணும்… புரியுதா, உங்க கோச் சொல்றாறுன்னு நீ டைவ் பண்ணாதே, சரியா?

கவனம் முழுவதும் ட்ராயிங் காம்படிஷனில் இருந்ததால் அனு, எதுவும் பதில் பேசாமல் பொதுவாக “சரி” என்று மட்டும் சொல்லிவைத்தாள்.

“ ராக்கி, நீ அக்கா ஸ்விம் பண்ற வரைக்கும் அமைதியா வேடிக்கை பார், இல்லேன்னா ‘டாப்’ ல கேம்ஸ் விளையாடு, ஒ.கே, என்றாள்.எல்லாம் புரிந்தது போல் தலையாட்டினாள் ராக்கி.

நீச்சல் குளத்தை அடைந்ததும், நடக்கபோகும் விபரீதம் ஏதும் அறியாமல் ஓரத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்து “சொல்லு ஜான்சி, ரேகா தான் பேசரேன், இங்க என் டாட்டர் கூட ஸ்விமிங் கிலாஸ் வந்திருக்கேன், ஆமா, சின்னவ, ராக்கியையும் கூட்டிட்டு வந்துட்டேன், வீட்ல அவ ரவுசு மாமியார், மாமனாராலைத் தாங்கமுடியாது”. என்று மொபைல் காலில் கவனம் செலுத்தினாள்.

அம்மாவின் கவனம் மறைந்ததும் அனு வழக்கம் போல் அருகேயிருந்த ஏணியின் மீதேறி உற்சாகமாக டைவ் அடிக்க துவங்கினாள்.

சிறிது நேரத்தில் பொறுமை இழந்த ராக்கி, அனுவை வேடிக்கை பார்க்க துவங்கினாள். தானும் அது போல செய்ய நினைத்து, மெல்ல தத்தி தத்தி நடந்து சென்று அவ்வாறே அவளும் குதித்தாள். நீந்தத் தெரியாததால் மெல்ல மூழ்கத் துடங்கினாள். பின் தன் பிஞ்சு கைகளை உயர்த்தி ‘அம்மா’ என்று கத்தினாள். முதல் முறையாக குழந்தையின் குரல் கேட்டு மொபைலில் இருந்து கவனம் கலைந்து, ஆனந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு ரேகா வருவதற்குள், அனு அவளை மெல்ல தூக்கி குளத்திற்கு வெளியே எடுத்துச்சென்று மூக்கிலும், வயிலும் நீர் சென்று, தாங்கமுடியாமல் அழுது கொண்டிருந்த ராக்கியை தேற்றினாள்.

ஒரு விதத்தில் ராக்கி வாய் திறந்து பேசியது, ரேகாவை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. இருப்பினும் இரவு டாக்டரைப் பார்க்கும் வரை இருப்பு கொள்ளவில்லை ரேகாவுக்கு.

இரவு குழந்தையை பரிசோதித்த குடும்ப டாக்டர், “ஷி இஸ் பர்ஃபெக்ட்லி ஆல் ரை, தேவைப்பட்டா வீசிங்க் இருந்தா நைட், இந்த சிரப் மட்டும் ஒரு ஸ்பூன் கொடுங்க அப்புறம் ஒரு வழியா உங்க ரொம்ப நாள் கவலை தீர்ந்துச்சா?” என்றார்.

“ரொம்ப தாங்க்ஸ் டாக்டர்” என்று மகிழ்ச்சியுடன் அவரிடம் விடைபெற்றனர் இருவரும்.

முன் தினம் நடந்த விஷயங்கள் ரேகாவை லேசாக கலவரபடுத்தியிருந்தன. ரேகா அதை வெளிக்காட்டிக்கொள்ளாவிட்டாலும், கார்த்தி அவளை உணர்ந்திருந்தான். எனவே, அடுத்த நாள் ஸ்விம்மிங் கிளாசுக்கு கார்த்தியும் சேர்ந்து கொண்டான்.

நீச்சல் குளத்தை அடைந்ததும், கார்த்தி அருகில் இருக்கும் தைரியத்தில் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து ரேகா வழக்கம் போல் மொபைலில் கவனம் செலுத்தினாள்.

ஒரு ஓரமாக சென்று, தான் புதிதாக வாங்கிய மொபைல் போனில் படம் பிடிக்கத் துடங்கினான் கார்த்தி.

நீச்சல் குளத்திற்கு வந்ததிலிருந்து அனுவை கவனித்த ராக்கி, மெதுவாக சென்று, அருகிலிருந்த நீச்சல் பாலூன் ஒன்றில் தன் ஒரு காலை வைத்துக் கொண்டு அனு அருகில் சென்று குளத்தில் குதித்தாள். குளாத்திலிருந்த அனு, அவளை லாவகமாக பிடித்து அவளை அந்த பலூன் வளையத்தில் செலுத்தினாள். இதைப் படம் பிடித்துக்கொண்டிருந்த கார்த்தி செய்வதறியாது திகைத்தான்.

இருவரும் சிறிது நேரம் நீந்தி மகிழ்ந்தனர். அனு கார்த்தி எடுத்த வீடியோவை திரும்ப திரும்பக் காட்டுமாறு வற்புறுத்திக்கொண்டிருந்தாள்.

அடுத்த நாள் மாலை “அம்மா க்ளாசுக்கு போலாமா?” என்று குதூகலத்துடன் கேட்ட அனுவை ஆச்சரியமாக பார்த்தாள், ரேகா.

என்னம்மா வழக்கமா உங்கம்மா தான் உன்னை விரட்டுவா, இன்னைக்கு அதிசயமா நீயே அம்மாவை கூப்பிடுறே? ட்ராயிங் காம்படிஷன் என்னாச்சு? என்று கேள்வியுடன் பார்த்தார் தத்தா.

“நான் தான் தாத்தா ஃபர்ஸ்ட்” என்றாள் அனு உற்சாகத்துடன்.

“நிஜமாவா, எங்கே நீ வரைஞ்ச ட்ராயிங்கை காட்டு” என்றார் தாத்தா அவலுடன்.

“பாட்டி சொல்லித்தந்த மாதிரி தான் வரைந்தேன்’னு பையில் சுருட்டி வைத்திருந்த ஓவியத்தை மெதுவே திறந்து காட்டினாள், அனு. ஓவியத்தைப் பார்க்க ரேகாவும், பாட்டியும் ஆர்வத்துடன் சேர்ந்துகொண்டனர்.

அதில், முதல் நாள் நடந்ததை ‘விளையும் பயிர்கள்’ என்ற தலைப்பில் அழகான ஓவியமாகத் தீட்டியிருந்தாள். என்ன அந்த ஓவியத்தில் ரேகா அமர்ந்து மொபைலில் கவனம் செலுத்திக் கொண்டிருந்ததுதான் ஹைலைட்.

அனுவை சிறிது நேரம் முறைத்துப் பார்த்த ரேகா “உன்னை நான் ட்ராயிங் கிளாசிலையே சேர்த்துவிடறேன்” என்று சொல்லி மொபைல் ஃபோனில் எண்களை டயல் செய்து “சார் குழந்தையை ஸ்விம்மிங் கிளாசில சேர்க்கிறதுக்கு குறைந்தபட்ச வயசு எதாவது இருக்கா என்ன? ” என்று

‘கோச்’சிடம் விசாரித்துக்கொண்டிருந்தாள்.

பாட்டியும், தாத்தாவும் அர்த்தத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *