கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 18, 2014
பார்வையிட்டோர்: 8,142 
 
 

சாப்பாட்டுக்கோப்பை மேஜையில் வைக்கப்பட்ட சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். மனைவி குசினியை நோக்கிப் போய்க்கொண்டிருப்பது ‘இருளில்’ தெரிந்தது. மின்சாரம் இல்லாமற்போன பிரதேசத்தில் நெடுநாளாக இருந்த புண்ணியத்தில் இருளில் தெரியும் வல்லமையெல்லாம் வந்திருக்கிறதே என நினைத்தான்.

சத்தம் ஏற்படுத்தப்பட்டது அவனுக்காகத்தான். ‘சாப்பாடு வச்சிருக்கு…. வந்து சாப்பிடுங்கோ!’ எனச் சொல்வதற்குப் பதிலாகக் கையாளப்பட்ட உத்தி! அவன் சாப்பிடலாமா.. விடலாமா என்று யோசித்தான்.

சாப்பாடு இருட்டில் இருந்தது. அரிக்கன் லாம்பு வெளிச்சத்தில் படித்துக்கொண்டிருந்த பிள்ளைகள் அவனையும் சாப்பாட்டையும் மாறி மாறிப் பார்த்தார்கள். வீட்டிலுள்ள ஒரே விளக்கு அது. மண்ணெண்ணெய் விலையும் தட்டுப்பாடும் அதற்குமேல் அனுபவிக்க வைக்கவில்லை. பிள்ளைகள் ஒரு தீர்மானத்துக்கு வந்தவர்கள் போல விளக்கை எடுத்துவந்து சாப்பாட்டு மேஜையில் வைத்துவிட்டு அதனருகே அமர்ந்து படிப்பைத் தொடர்ந்தார்கள். ‘அப்பா….. வந்து சாப்பிடுங்கோ!’ என அவர்களும் மறைமுகமாக உணர்த்தியமாதிரி இருந்தது.

மத்தியானம்போல விறாந்தையில் நீட்டி நிமிர்ந்து படுத்திருந்தான். கை வறண்டு அன்றைய செலவுகளுக்கும் வகை புரியாதபோது அப்படி பிறேக்டௌன் ஆனவன்போலப் படுத்துவிடுவான். மனதைக் கொஞ்சம் இலகுவாக்கும் முயற்சி. இன்று அது முடியாத காரியமாயிருந்தது. காலையில் வெளியே போனபோது அவனைத் தேடிவந்த கடன்காரர் ஒருவர் ரோட்டில் வைத்தே பிடித்துவிட்டார்.

‘வேண்டின காசைக் குடுக்க வக்கில்லை…. உடுப்பும் போட்டுக்கொண்டு வெளிக்கிட்டிட்டீரோ… ஊர் சுத்த?”

பட்ட கடனும் வட்டியுமாக தொகை எக்கச்சக்கமாக ஏறியிருந்தது. அவன் எதையோ சொல்லிச் சமாளிக்க முயன்றான். சன்னதம் உச்சத்துக்கு ஏறியவர்போல அவர் ஆடினார்.

‘இண்டைக்கு இதுக்கு ஒரு முடிவு தெரியவேணும்?” நாலு பேருக்கு முன்னால் குனிந்த தலையை நிமிர்த்த முடியாமலே வீட்டுக்குத் திரும்பினான். முதுகுக்குப் பின்னால் சொல்வது கேட்டது.

‘இவங்களெல்லாம் ஒரு மனிசரெண்டு சீவிக்கிறாங்கள்…”

அந்த ஆள் எந்த நேரமும் வீடு தேடி வரலாம். என்ன செய்யலாம்? எப்படிக் கடனை அடைக்கலாம் எனத் தலையைப் போட்டுடைத்தவாறு கிடந்தபோதுதான் மனைவி வந்தாள்.

“இப்படிப் படுத்துக் கிடந்தால் என்ன செய்யிறது..?”

அவன் பேசாமலே கிடந்தான்.

‘என்ன நான் கேக்கிறன்… நீங்கள் காதிலை விழாதமாதிரிக் கிடக்கிறியள்?”

‘இப்ப என்ன செய்யச் சொல்லுறாய்?”

‘நேரம் என்ன தெரியுமோ…? பிள்ளையளும் பள்ளிக்கூடத்தால பசியோடை வருங்கள்…. எழும்பிப் போய் ஏதாவது சாமான் சக்கட்டைப் பார்த்து வேண்டி வந்தால்தானே சமைக்கலாம்!”

‘இதிலை நிண்டு விசர்க்கதை, கதைக்காமல்…. போ!”

அவள் போய்விட்டாள். அப்போது தொட்ட சூடு.

பிரச்சினைகளுக்கு அடிப்படை பணம்தான். எது வேண்டுமென்றாலும் அதுதான் தேவைப்படுகிறது. பணத்தைச் சம்பாதிக்க தொழில் தேவைப்படுகிறது. தொழில் சரியாக அமையாவிட்டால் தொல்லைகள்தான் மிஞ்சுகிறது.

கார் சாரதியாயிருந்து சிறுகச் சிறுக உழைத்தவன். ஓடிச் சம்பாதித்து குடும்பத்தை நடத்தியவன். நாட்டு நிலைமைகளும் எரிபொருள் தட்டுப்பாடும் காரைக் கட்டையில் ஏற்றிவிட்டன.

படித்துக்கொண்டிருந்த மகள் இடையில் நிறுத்தி, ‘அப்பா வந்து சாப்பிடுங்கோ!” என அழைத்தாள். வயதிற் குறைவானாலும் பெண் பிள்ளைகள் வீட்டின் தட்ப வெப்ப வித்தியாசங்களைத் துல்லியமாகப் புரிந்துகொள்கிறார்கள் போலிருக்கிறது!

மத்தியானம் சாப்பிடாதது. அதனால் மனைவியும் சாப்பாட்டிருக்கமாட்டாள். அவளுக்காகவேனும் சாப்பிட வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவளது கோபத்தையும் புறக்கணிப்பையும் தாங்கிக்கொண்டு சாப்பிடுவது கஷ்டமாயிருக்கும். வானம் உம்மென இருண்டு போனால் அது எப்போது வெளிக்கும் எனத் தவிப்பாயிருக்கிறது.

குடும்பம் பட்டினிப்படாமல் இருப்பதற்காக தான் செய்த தொழில்களை நினைத்துப் பார்த்தான். யாழ்ப்பாணத்திலிருந்து… மாங்குளம் வவுனியா வரை சைக்கிளில் சென்று இந்தப் பக்கம் இல்லாத பொருட்களைக் கொண்டுவந்து வியாபாரம் செய்திருக்கிறான். கட்டிய சுமையை கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டு மழை வெள்ளம் சேறு சகதியெல்லாம் சைக்கிளை உருட்டியவாறே வந்திருக்கிறான். உயிரைப் பணயம் வைத்து கடல் கடந்து செய்யும் வியாபாரம். ஆனால் பட்ட கஷ்டங்களுக்குப் பலன் கிடைத்ததில்லை. இந்தப் பக்கம் பொருள்களை வேண்டும்போது ‘ஏனப்பா இப்படி கொள்ளையடிக்கிறாய்?’ என்றுதான் கேட்பார்கள். அவர்கள் கையிலும் பணம் இல்லாத காரணமாயிருக்கலாம். பல தடவைகளில் பணத்தேவை நெருக்கும்போது கொண்ட முதலுக்கே நஷ்டத்துக்கும் கொடுத்திருக்கிறான் – ஒரு சேவையாக ஆவது இருக்கட்டும்!|

தொலைதூரம் சென்று விறகு வெட்டி வந்து வித்திருக்கிறான். பிறகு வெட்டுபவர்களின் தொகை கூடியபோது வெட்டிய விறகை வீட்டுக்கே கொண்டுவர வேண்டியிருந்திருக்கிறது. காரை ஹயரிங் விடுவது போல தூர இடங்களுக்குப் போக வேண்டியவர்களை சைக்கிளில் வைத்து ஓட்டியிருக்கிறான். இப்போது சைக்கிளில் செய்த சம்பாத்தியங்கள் முடங்கிப் போயின. ஸ்கூட்டர்கள் மண்ணெண்ணெயில் ஓடத் தொடங்கிவிட்டன. அவ்வப்போது கைகொடுத்த மனைவி மக்களின் நகை நட்டுக்களுக்கும் முடிவு வந்துவிட்டது. அடுத்து என்ன செய்யலாம் என சோர்ந்தபோது முடுக்கிவிட்டவள் மனைவிதான்.

‘சும்மா கிடக்கிற நிலங்களை குத்தகைக்கு எடுத்து தோட்டம் செய்தால் என்ன?” அவள் அப்படி அபிப்பிராயம் சொன்னதற்கக் காரணம் உண்டு. ஏற்கனவே பூங்கன்றுகளுடன் நட்டிருந்த காய்கறிச் செடிகள் வளர்ந்து நல்ல பலன் தந்திருந்தன. அவை கூட அவனுக்கு நல்லதொரு செய்தியைக் கூறின.

மண்ணும் வானமும் வஞ்சனை செய்யாது. எல்லா இடமும் பெய்கிற மழை வடக்குப் பக்கம் என்ற காரணத்துக்காக இங்கு மட்டும் பெய்யாமல் போகாது.

சில தெரிந்தவர்களிடம் நிலங்களை பெற்று மரவள்ளி குரக்கன் வாழை போன்றவற்றைப் பயிரிட்டான். பசளையிட்டு பாத்திகட்டி மழையில்லாதபோது மாய்ந்து மாய்ந்து தண்ணீர் இறைத்தான். பயிர்கள் வளர்வது மனதுக்குத் தெம்பாகவும் அவற்றுடன் பாடுபடுவது மனதுக்கு இதமாகவும் இருந்தது. அவை பயன்தரும் காலம் வரை பொறுத்திருக்கவேண்டும்.

பொறுமை என்பது ஒரு அளவுக்குத்தான் என்பது போல மகள் மீண்டும் தொனியை உயர்த்தினாள். ‘அப்பா! இப்ப வந்து சாப்பிடப் போறீங்களா இல்லையா?”

வழக்கமாக மனைவியும் பிள்ளைகளும் ஒன்றாக அவனுடன் அமர்ந்து சாப்பிடுவார்கள். அது சந்தோஷமாயிருக்கும். இப்படி மூட்டம் கவிந்து கொள்ளும் நாட்களில் அது சாத்தியமில்லை.

மகள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.. ஒரு முடிவு தெரியவேண்டும் என்பதுபோல. அவன் மறுகதை பேசாது எழுந்து சென்று வாயை மூடிக்கொண்டு சாப்பிட்டான்.

முற்றத்தில் இறங்கியபோது மனது சொன்னது.. ‘இனிச் சரிபட்டு வராது! அவசர நடவடிக்கையாக ஏதேனும் செய்தாகவேண்டும். எங்காவது வெளிநாட்டுக்குப் போய் உழைத்து வரலாம்.’ ஒரு நண்பன் உதவி செய்வதாகவும் சொல்லியிருந்தான்.

பஞ்சம் பிழைக்க வெளிநாடு போகவேண்டியதுதான். அந்த முடிவு நெஞ்சில் இன்னும் தவிப்பை ஏற்படுத்தியது. மனைவியையும் பிள்ளைகளையும் எப்படி கஷ்ட நிலையில் தனியே விட்டுப் போவது? அதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும் என்று தோன்றியது.

அலையும் மனதுடன் வாசல் வரை நடந்தான். கேற்றைத் திறந்து முன்னே வீதியைப் பார்த்தவாறு வாசற்படியில் அமர்ந்தான்.

நிலவு இல்லாத இரவு. உங்களுடைய வேலைகள் நடந்தால் என்ன கிடந்தால் என்ன என்பது போல இருளைக் கொண்டுவந்து மூடிவிட்டது இரவு. வீடுகளிலும் விளக்கில்லை. வீதிகளிலும் வெளிச்சமில்லை.

சனங்கள் இவை எதையும் சட்டை செய்யாதவர்கள் போல நடமாடிக்கொண்டிருந்தார்கள். லைட் இல்லாத சைக்கிள்கள் காற்றாகப் பறக்கின்றன. சூரியன் மறைந்துவிட்டாலும் நட்சத்திரங்களின் ஒளியில் அலுவல்களைச் செய்ய மனிதர்கள் பழக்கப்பட்டுவிட்டார்கள்போலும்! நட்சத்திரங்களின் ஒளி பூமியை வந்துசேர ஆண்டுக்கணக்கில் காலமெடுக்குமாம். இங்க நேரப்போகும் கதியை ஏற்கனவே அறிந்துகொண்டு புறப்பட்டு வந்தீர்களா..? நட்சத்திரங்களே.. உங்களுக்கு நன்றி.

‘என்ன… இங்க வந்து இருந்திட்டியள்…. நித்திரை எங்கை போச்சு?” மனைவி!

அவன் மௌனம் சாதித்தான்.

‘இதென்ன இருட்டுக்குள்ள இருந்துகொண்டு யோசினை?”

ஏதும் பதில் பேசாமலே எழுந்தான். பிறகு மென்குரலில் கேட்டான்..

‘நான் வேலைவெட்டி இல்லாமலிருக்கிறனெண்டுதானே உனக்குக் கோபம்?”

‘ஆர் சொன்னது…? நீங்கள் படுகிற கஷ்டம் எனக்குத் தெரியாதா?”

‘அப்ப எதுக்குக் கோபம்…. ஏசினத்துக்கா?’

“ நான் அப்படி கோபத்தைக் காட்டாட்டி நீங்கள் சாப்பிட்டிருப்பீங்களா…? என்னையும் சாப்பிடச் சொல்லிக் கூப்பிட்டிருப்பீங்கள்….. ஓராளுக்கு அரை வயித்துக்கே போதாது சோறு…. ரெண்டு பேரும் பங்கிட்டால் எந்த மூலைக்குக் காணும்?”

அவன் அதிர்ச்சியுற்றான். ‘நீ சாப்பிடயில்லையா?”

‘டயட்டிங்…! பொம்பளையள் மெலியிறத்துக்காக டயட் பண்ணுகினமாம்! இது நிர்ப்பந்திக்கப்பட்ட டயட்டிங்! இப்ப நான் மெலிஞ்சு அழகாயில்லையா?”

நெஞ்சில் குமுறலெடுத்த உணர்ச்சியை அடக்குவதற்கு சற்றுநேரம் வேண்டியிருந்தது.

‘நான் வெளிநாட்டுக்குப் போகலாமெண்டு நினைக்கிறன். ரெண்டு வருசத்துக்கு பல்லைக் கடிச்சுக்கொண்டிருந்துவிட்டு வந்தால் எல்லா பிரச்சினையளும் தீர்ந்திடும்.”

‘உங்களுக்கென்ன பயித்தியமா? இங்க எத்தனை லட்சம் சனங்கள் இருக்குது? அதுகளெல்லாம் செத்தா போகப்போகுதுகள்? அதுகளுக்குள்ள நம்பிக்கை உங்களுக்கில்லையா? எல்லாம் சரிவரும்… வாங்கோ!”

மனைவியுடன் வீட்டுக்குள் வந்தான்.

வீட்டிலுள்ள ஒரேயொரு விளக்கு தனது பணியைச் செய்து கொண்டிருந்தது. குறிப்பிட்டளவு இடத்துக்கு மட்டும் வெளிச்சம் காட்டும் விளக்கு. செய்யவேண்டிய கருமத்தை சரியாகக் காட்டுகிறது. அது போதாதா என்ன?

படுக்கையில் சாய்ந்தபோது மனது இலகு நிலையடைந்த உணர்வு தெரிந்தது. இருட்டில்… ஆதரவுடன் மனைவியின் கையைப் பற்றினான்.

அமைதியைச் சிதறடிப்பதுபோல் குண்டுச்சத்தம்!

குட்டிமகன் விழித்துக்கொண்டு சொன்னான்: ‘ஷெல் அடிக்கிறாங்கள்!”

ஏவப்பட்ட குண்டு எங்கு விழப்போகிறதோ.. யாரைப் பலியெடுக்கப்போகிறதோ என்ற நெஞ்சிடியுடன் ஜன்னற் பக்கம் பார்த்தான். வானளாவப் பளிச்சிட்ட வெளிச்சமும் நிலமதிரும் வெடிச்சத்தமும்.. அதனால் உறக்கம் கலைந்த பறவைகளின் குரலும் சிறகடிக்கும் ஓசையும் கேட்டன.

‘இப்ப நிறையப்பேர் விழிச்சிருப்பினம்… என்னப்பா?” என்றான் மகன்.

அவனுக்கும் அவ்வாறே தோன்றியது.

– வீரகேசரி 1994 – தெரியாத பக்கங்கள் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: பிப்ரவரி 1997, மல்லிகைப்பந்தல் வெளியீடு, யாழ்ப்பாணம்

விபரக்குறிப்பு இயற்பெயர்: சிவசாமி இராஜசிங்கம்புனைபெயர்: சுதாராஜ்கல்வி: பொறியியற் துறை, மொரட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை. தொடர்புகளுக்கு:முகவரி: சி.இராஜசிங்கம், (சுதாராஜ்)சீ கிறெஸ்ட் அபார்ட்மென்ட்,189/1, 6/1, மகாவித்தியாலய மாவத்த,கொழும்பு 13, இலங்கை. S.Rajasingham (Sutharaj)Seacrest Appartment,189/1, 6/1, Mahavithyalaya Mawatha,Colombo 13, Srilanka. தொலைபேசி: 0094 112380999 (இலங்கை)தற்போதைய தொலைபேசி தொடர்பு: 00218 913084524 (லிபியா) E mail: rajsiva50@gmail.comrajasinghamsivasamy@yahoo.com படைப்புகள்: (வெளிவந்த நூல்கள்) சிறுகதைத் தொகுப்பு பலாத்காரம் - தமிழ்ப்பணிமனை வெளியீடு -1977…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *