விலகிப்போன கடவுள்கள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 26, 2012
பார்வையிட்டோர்: 12,639 
 
 

கால் நனைக்க தாமிரபரணி, கை கழுவ பாபநாசம், தலை துவட்ட தென் பொதிகை, கன்னம் வருட நெல்மணிகள் என்று உலகத்தைப் பச்சை வண்ணமாக மட்டுமே உணர்ந்த ஒரு பெண்ணான எனக்கு சென்னை பிடிக்காமல் போனதில் அதிசயம் இல்லை.

இங்குள்ள கடவுள்களிடமும் என்னால் இயல்பாக இருக்க முடியவில்லை. சென்னையின் தெருவோரப் பிள்ளையாரிடம்கூட ஒட்ட முடியாமல்போனது எனக்கே எனக்கேயான வருத்தம்.

விலகிப்போன கடவுள்கள்நகரத்தில் எல்லா கடவுள்களும் அழகாகவும் பிரமாண்டமாகவும் இருக்கிறார்கள். ஆனால், பக்கத்தில் வரவழைக்கிற அந்நியோன்னியம் இல்லை என்று தோன்றியது தீர்மானமாக! இவர்களிடம் பவ்யம் தோன்றியது உண்மை. ஆனால், உரிமை வரவில்லை… கிராமத்துக் கடவுள்களிடம் வருவது போல!

ஊருக்குள் நுழையும்போது, மீசையின் நுனியில்கூட தெரியும் கம்பீரத்துடனும், தீட்டிய பளபளப்பில் மின்னும் அரிவாளுட னும் நிற்கும் சுடலைமாடன், அழுக்கேறிப்போன ஆறு கால் மண்டபத்தில் எண்ணெய்ப்பிசுக்கு பிடித்த கருவறையில் இருக்கும் பகவதி, மண் பூடத்தினால் மட்டுமே ஆன வனப்பேச்சி என்று அவர்களிடம் தோன்றிய சிநேக மும், பிரியமும், அன்பும், காதலும், கோபமும் நகரக் கடவுள்களிடம் ஏனோ வரவில்லை என்பது உண்மை. அவர்கள் எல்லாரும் எங்கள் ஊர் கடவுள்கள் என்பதைவிட, எங்களுக்கான கடவுள்கள்! பயத்தினாலோ, கடவுள் பக்தியினாலோ அல்லது எல்லாவற்றுக்கும் மிஞ்சிய சக்தி என்கிற பகுத்தறிவினாலோ வந்தது கிடையாது இந்த ஒட்டுதல். காரணங்கள் தெரியாவிட்டாலும் சிறு வயதிலி ருந்தே கேட்டும், பார்த்தும், அனுப வித்தும், தொட்டும் கடவுள்களைப் பழகியதால் உண்டாகியிருக்க லாம்.

நிலா பார்த்து வயிறு நிரம்பியதைவிட, சுடலையின் வீரப்பிரதாபங்களையும், வனப்பேச்சியின் அளவில்லா ஆங்காரத்தையும், பகவதியின் பரிசுத்தத்தையும் கேட்டுக் கேட்டு மனசு நிறைந்த நாட்கள்தான் ஏராளம். என் அழகு அம்மாச்சி, அம்மா, மான்விழிச் சித்தி, மாடத்தி பாட்டி, சுசிலா அத்தை, கலா மதினி, மாவடி பெரி யம்மா, கொளுந்து விழுந்தான் மலை, தெற்கு நாலாந் தெரு என்று சொந்தபந்தங்களில் தொடங்கி, ஆறு, மலை, ரயில்வே தண்ட வாளங்கள், ஏன் தெருவின் மூலை முடுக்குகளிடம்கூட ஊர்க் கடவுள் களைப் பற்றிய கதைகள் ஏராளம் இருந்தன.

கிராமத்துக் கடவுள்களைப் பற்றிய கதைகள் அங்குள்ள குழந் தைகளிடம்கூட உலவி வந்தன… சிறந்த கதைசொல்லியிடம் இருக் கும் கதைகளைவிட அதிகமாக! எந்நேரமும் கதைகள். கடவுள் களைப் பற்றிய கதைகள். காப் பாற்றிய வேடத்தில், பலி வாங்கிய கோபத்தில், மன்னித்து அருளிய மனோநிலையில் என்று ஏராள மான கதைகள்!

நானும் அப்படித்தான்… கண் விழித்து, பல் துலக்கி, குளித்து என என்னுடைய அன்றாட நிகழ்வுகளில்கூட கதை கேட்டுத்தான் வாழ்ந்திருக்கிறேன் சிறு வயதில். ஓர் ஆண்டு விடுமுறையின்இனி மையான பொழுதில், சேரன்மகாதேவியில் உள்ள அம்மாச்சியின் வீட்டுக் கூடத்தில், ஆச்சி யின் மடியில் படுத்தபடியே கேட்ட கதைகள் இன்னும் நினைவில் இருக்கின்றன, அட் சரம் பிசகாமல்! மனதில் பதிந்துபோன சுடலையின் ஒரு வீரப் பிரதாபக் கதை இதுதான்.

ஒரு பௌர்ணமி இரவு. நடு நிசி. நிலா, பகல் போல வெளிச் சம் அடிக்கிறது. ஒண்ணுக்கு இருப்பதற்காக வெளியில் வந்திருக்கிறார் ஏழுமலை மாமா. தூக்கக் கலக்கத்திலும் அதிவெளிச்சம் காரணமாகவும் விடிந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டார்.

குளிப்பதற்கு ஆட்கள் வருவதற்கு முன்னாலேயே ஆற்றுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டும் என்று யோசித்தவர், விடுவிடுவென்று வீட்டுக்குள் சென்று தூண்டிலை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.

வழியில் ஒரு சுடுகுஞ்சி கிடையாது. பொடிநடையாக ஆத்தங் கரைக்கு வந்துவிட்டார். சலனம் இல்லாத ஆற்றில் மெதுவாகக் கால் வைத்து நடந்து ஆழத்துக்குச் சென்றவர், உசந்த பாறை ஒன்றின் மீது ஏறி உட்கார்ந்து தூண்டிலைப் போட்டார். மீனுக்காகக் காத்திருக்கும் நேரத்தில் நொடிகள் நிமி டங்களாகி யுகங்களாகச் சென்றன, தனிமை காரணமாக. இருட்டின் ரீங்காரமும் காற்றின் மௌனமும் சில சமயம் தாழம்பூவின் அமா னுஷ்ய வாசனையும் அவரைத் தாண்டிச் சென்றன. தண்ணீரில் பௌர்ணமியின் தகதகப்பு!

சீராகச் சென்றுகொண்டு இருந்த கதையைச் சட்டென்று நிறுத்திய அம்மாச்சி, என் கண்களைப் பார்த்துச் சொன்னாள்… ”தண்ணிக்குள்ள நிலாவைப் பார்க்கக்கூடாது. ஏன்னா, மோகினி பிடிச்சுக்குவா!” தொடர்ந் தது கதை.

நேரம் ஆக ஆக, ஏழுமலை மாமாவுக்கு ஏதோ ஒன்று நெருடத் தொடங்கியது, இவ்ளோ நேரமாகியும் யாரும் குளிக்க வரவில்லையே என்று. நடுநிசியில் வந்துவிட்டோம் போல என்று உறைத்தது. திரும்பிச் செல்லவும் தைரியம் இல்லை. மீனும் கிடைத்தபாடில்லை. இப்படியாப் பட்ட அசௌகரியங்கள் தனக்கு நடந்தது இல்லையே என்று எண்ணும் போதே வயிறு கலங்கிவிட்டது அவருக்கு.

நினைவுகளுக்குத் தடை போடு வது போல தூரத்தில் ஒரு பெண் ணின் உருவம். அத்தனை அழகு, செக்கச்செவேலென்று! ‘ஏதோ பிராமணப் புள்ளை… அதான் இத்தனைச் செவப்பு!’ என்று நினைத்தார். அப்பாடா என்றிருந் தது மாமாவுக்கு. குளிக்க வரு கிறார்கள். அந்தப் பெண் ஆற்றின் கரையில் நின்றுகொண்டு, வரட் டுமா வரட்டுமா என்பது போல் இவரைப் பார்க்கிறாள். முகத்தில் புன்னகை விரிந்துகொண்டே செல்கிறது. மெதுமெதுவாக ஆற்றின் உள்ளே இறங்குகிறாள். நடக்கிறாளா இல்லையா என்பதே தெரியாமல் நகர்தல் மட்டுமே உணரப்படுகிறது.

மாமாவுக்கு வேர்த்து விறுவிறுக்க ஆரம்பித்தது. அது பெண்கள் வர முடியாத ஆழம். முங்கு நீச்சலில் முத்தெடுத்தவர் மட்டுமே தொடக்கூடிய ஆழம்! ஆற்றின் நடைபாதை கடந்து ஆழம் தொடங்கும் எல்லைக் கோட்டின் அருகே வந்து நின்றாள் அவள்.

சற்றுக் கிட்டத்தில் பார்க்க முடிகிறது. கண் கூசும் அழகு, மயக்கிப் பின்னால் இழுத்துச் செல்லும் அளவுக்கு. மாமா சில்லிட்டிருந்தார். இது பெண்ணில்லை. மோகினி! காப்பாற்ற யாரும் இல்லையா என்று வேண்டு தல்கள். மிக அருகில் செண்பகமும் தாழம்பூவும் கலந்த ஒரு மந்தகாச வாசம். ஆழத்தை எளிதாகக் கடந்து வருகிறாள். திடீரென்று ஒரு மாயஜாலம் நிகழ்ந்தது அங்கே! ஜல்ஜல்லென மணிச் சத்தம் குலுங்க, கால்சராய்கள் சரசரக்க, குல்லாயும் வேல் கம்புமாக கறுத்த, தடித்த உருவம் ஒன்று எதிர்கரையில் ஓடி வருவது தெரிகிறது மாமா வுக்கு.

இதைச் சொல்லும்போது, அம் மாச்சியின் கண்களில் ஆவேசம். தானே வேல் கம்புகளுடனும் கால்சராய்களுடனும் வந்தது போன்ற உணர்வு அவளுக்கு வந்திருக்க வேண்டும்.

போன உயிர் வந்துவிட்டது மாமாவுக்கு. மின்னல் வேகப் பாய்ச்சல். எதிர் கரைக்கும் ஆழத் துக்கும் இடையே நொடியும் அதிகம் என்பது போல், ஒரு பாய்ச்சல் பாய்ந்தது கறுப்பு உருவம். நினைவு கடக்கும் நேரத்தில், மாமாவின் விலா எலும்பைத் தட்டிச் சென்றது வேல்கம்பு.

அதன்பின் பெண்ணும் இல்லை, மாமாவுக்கு நினைவும் இல்லை. பாறையில் மயங்கிக்கிடந்தவரைக் காலையில் வீட்டுக்குத் தூக்கிக் கொண்டுவந்து போட்டார்கள். ஒரு வாரம் குறையாத காய்ச்சல். அதற்குள் ஊர் முழுவதும் பேச்சாகிவிட்டது. மோகினியிடம் இருந்து மாமாவைக் காப்பாற்றுவதற்காக வந்த கறுப்பு உருவம் சுடலைமாடன்தான் என்றும், அவர் ஏழுமலைக்கு மறு உயிர் அளித்திருக்கிறார் என்றும் மாய்ந்து மாய்ந்து சந்தோஷப்பட்டார்கள். மாமாவுக்குக் குணமடைந்து தெளிவானதும் கெடா, கோழி, ரம், பீர், சுருட்டு, மேளம், கரகாட்டம், பொங்கல், சினிமா, சவுக்கடி போட்டுச் சாமியாட்டம் என்று விதவிதமாகப் படையல் போட்டு, மினி கொடை ஒன்றையே நடத்தித் தூள் கௌப்பிவிட்டாராம்.

இந்தக் கதை கேட்ட நாள் முதல் எனக்குச் சுடலையின் மீது ஒரு மரியாதையும் பிரியமும் ஏற்பட்டது என்றால் மறுகேள்விக்கு இடமில்லை.

அம்மாச்சிக்கு அவ்வப்போது சாமி வரும்; அதுவும் பார்வதி அம்மன் வரும் என்பதே பல வருடங்களுக்கு எனக்குத் தெரியாது. மற்றவர்களைப் போல தெருவிலோ, கோயிலிலோ, ஏன் வீட்டில்கூட அவள் சாமியாடி நான் பார்த்தது இல்லை. ஒருமுறை எங்கள் கோயிலின் கொடை மிகச் சிறப்பாக நடந்துகொண்டு இருக்கிறது. சொந்தம், அக்கம்பக்கம், வெளியூர்க்காரர்கள் என்று அல்லோல கல்லோலம்! திடீரென்று, ஆச்சியைக் காணவில்லை.

வீடு பக்கம் என்பதால், அங்கு தேடிப் போனேன். வீடு பூட்டிக்கிடந்தது. பின்புறம் வழியாக அடுப்பறை பக்கம் சென்றேன். அதுவும் பூட்டிக்கிடந்தது. ஏதோ உள்ளுணர்வில், ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தால், ஆறடி உயர ஆச்சி கால் இரண்டையும் சுருட்டி, மூன்று அடி யாக மடங்கிப் படுத்திருந் தாள்.

கதவைத் தட்டிப் பார்த்தேன், உரக்கக் கத்திப் பார்த்தேன். அவள் எழுந்திருக்கவில்லை. வாசல் படியிலேயே உட்கார்ந்திருந்தேன். கொஞ்ச நேரம் கழித்து வெளியில் வந்தாள். வேர்த்து விறுவிறுத்திருந்தாள். மெதுவாக என் னருகில் உட்கார்ந்தாள். சிறிது நேரத்துக்கு எதுவும் இல்லை எங்களுக்கிடை யில். அப்புறம் அவளாகவே பேச்செடுத்தாள். ”சாமி வந்துருச்சு! அதான் அத் தனை பேருக்கு முன்னாடி இருந்தா அசிங்கமாயி டும்னு வீட்டுக்கு வந்துட் டேன்” என்றாள்.

”வீட்லயும் நீ சாமி ஆடலியே?” என்றேன்.

”ம்ம்… பார்வதியம்மன் நான் சொல்றதைக் கேப்பா. அதான் கதவெல்லாம் பூட்டிட்டு, உள்ளே படுத்துக்கிட்டு என்னை விட்டுப் போயிருன்னு இவ்ளோ நேரம் அவகிட்ட கேட்டுட்டிருந்தேன். நல்ல வேளை, ரொம்ப நேரம் இருந்து என்னை ஆட வெச்சு அசிங்கப்படுத்தி டாம, அமைதியா கொஞ்ச நேரத்திலேயே அம்மன் மலையேறிட்டா!” என் றாள்.

அதிசயமாக இருந்தது. பக்தன் சொல்வதைக் கேட்கும் சாமிகளும், சாமிகளுக்குக் கட்டளையிடும் பக்தர்களும் கிராமங்களில் மட்டுமே வாழ்கிறார்களோ என்று தோன்றியபோது… பார்வதியை மிகவும் பிடித்திருந்தது. அம்மாச்சி யையும்தான்!

இது போன்ற சம்பவங்கள் எல்லாம் ஒவ்வொரு முறை எனது முழு ஆண்டு விடுமுறையில் ஊருக்குச் செல்லும்போது மட்டுமே நிகழும். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக, கிட்டத்தட்ட ஓர் அமானுஷ்ய சம்பவம் என் அம்மா, அப்பாவுடன் எங்கள் வீட்டில் இருக்கும்போதும் நடந் தது. அது ஒரு பெரிய அக்ரஹார வீடு. முன் வாசலில் நின்றால், பின் வாசலில் என்ன நடக்கிறது என்பது தெரியாது. அவ்வளவு நீள…மான வீடு!

அப்பாவும் நானும் வெளியில் சென்றுவிட, அம்மா மட்டும் வீட்டில், பின்கட்டு சமையலறையில் வேலை செய்துகொண்டு இருந்தபோது, வீட்டு வாசல் முன் நின்று, ‘தாயோவ்… தாயோவ்..!’ என்று அத்தனைத் தெளிவான சத்தத்துடன் யாரோ கூப்பிட்டிருக்கிறார்கள்… ஐந்தாறு முறை. அம்மாவுக்குத் தூக்கிவாரிப் போட்டிருக்கிறது.

அம்மாவின் அப்பாவுடைய குரல் அது! பதறியடித்து ஓடிய அம்மா, அங்கு யாரும் இல்லாததைப் பார்த்து அதிர்ந்திருக்கிறார். ஒரு ஈ காக்கா இல்லை என்றவுடன் குழப்பமாகிவிட்டார். இருந்தாலும் தெருவில் இறங்கி, ‘ஐயா… ஐயா..!’ என்று தேடியிருக்கிறார். யாரும் இல்லை. அன்றைய நாள் முழுவதும் அம்மாவுக்கு மிஞ்சியது குழப்பம் மட்டுமே!

பின்னொரு நாள் அம்மாச்சி யின் ஊருக்குச் சென்றபோது, தாத்தா சொன்னார்… ‘அது நம்ம சுடலைதான். நீ எப்படி வாழ்க்கை நடத்துற, சந்தோஷமா இருக் கியான்னு பார்க்க உன் வீட்டுக்கு வந்திருப்பாரு!’ என்றவர், ‘தம் மக்கமார எல்லாம் சுடலை கண் கலங்காமப் பாத்துக்குவான். உம் மவ எந்தத் தூர தேசத்துல இருந் தாலும், அவளை சுடலை பாத்துக் குவான்’ என்ற ஜோசியக்காரரின் வாய்மொழியைச் சொன்னபோது, நம்ப முடியவில்லை. என்றாலும், நம்ப வேண்டியதாக இருந்தது. அம்மாவின் முகத்தில் பெருமை.

தன் குழந்தைகளை, அவர்கள் எந்த ஊரில் இருந்தாலும் சரி, தேடி வந்து பார்த்துவிட்டுப் போவது கிராமத்து கடவுள்கள் மட்டும்தானோ என்று அப்போது எனக்குத் தோன்றியது.

இப்படியாக… அம்மாவுக்கு, அப்பாவுக்கு, தாத்தாவுக்கு, பாட்டிக்கு, என் குடும்பத்தினருக்கு, என் ஊர் மக்களுக்கு என்று எல்லாரிடமும் சுடலையை, பார் வதியை, பகவதியை, வனப் பேச்சியைப் பற்றிய கதைகள் இருந்தன.

எனக்கும் ஒரு கதை இருக்கிறது. அம்பாசமுத்திரத்தில், ஊரின் ஓரத்தில் இருக்கிறது கூரை வேய்ந்த ஒரு சிறிய ராமசாமி கோயில். அதற்குள் இருக்கும் மண்பூட ராமசாமிக்கும் எனக்கும் ஒரு சண்டையும் ஒரு சமாதானமும் இருக்கிறது. ஆனால், அதை யாரிடமும் சொல்வதற்கில்லை. அது எனக்கும், என் ராமருக்கும் மட்டுமேயானது!

சென்னையில், ஒவ்வொரு மூலையில் இருக்கும் கடவுள்களி டமும், பிரமாண்ட கோயில்களில் அமர்ந்திருக்கும் கடவுள்களிடமும் கேட்பதற்கு என்னிடம் ஒரு கேள்வி இருக்கிறது. எனக்கு மட்டுமில்லை, கிராமங்களைவிட்டு நகரங்களுக்குப் புலம்பெயரும் அத்தனை பேரின் மனதிலும் இந்தக் கேள்வி உறுத்திக்கொண்டு இருக்கும் என்று நினைக்கிறேன்.

உங்களுக்கு ஏதாவது கதைகள் இருக்கிறதா பெரு நகரக் கடவுள்களே… சுடலை மாடனையும், வனப்பேச்சியையும், பகவதியும், பார்வதியையும் போல?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *