கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 28, 2024
பார்வையிட்டோர்: 734 
 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சின்னத்தம்பியா பிள்ளை குளித்துக்கொண்டிருந்தார். துவைத்துப் பிழியப்பப்பட்டிருந்த பள்ளியாடி புளியிலைக் கரை வேட்டி, கல் மீது பாம்புப் புணைபோலப் படுத்துக் கிடந்தது. மாடு குளிப்பாட்டும் பையன் கள் தேய்த்துத் தேய்த்துப் பசுமையாகிவிட்டிருந்த வைக்கோல் கத்தை யால் கை, கால், உடம்பு எங்கும் நன்றாகத் தேய்த்தார். ஐம்பது ஆண்டு களாக இதே பழக்கம். பங்குனி, சித்திரை வெயிலிலும் ஆனி, ஆடிச்சாரலி லும் அடிபட்டு, உரம் பெற்று, காய்ந்து சுருக்கம் விழுந்துவிட்ட உடம் புக்கு, வைக்கோல் கத்தையானால் என்ன? தேங்காய்ச் சவுரியானால்தான் என்ன?

இடுப்பளவு ஆழத்தில் நின்று அரையில் கட்டியிருந்த ஈரிழைத் துவர்த்தை முறுக்கிப் பிழிந்து, முதுகின் பின் பக்கம் வடம் போலப் பிடித்துக்கொண்டு, அழுத்தமாக முதுகைத் தேய்த்தார். அதையே மீண்டும் அரையில் கட்டிக்கொண்டு ஆனந்தமாக நீராடலானார்.

அச்சிற்றூரை வளைத்துக்கொண்டு ஓடும் ‘தேரேகால்’ அப்படி யொன்றும் அகண்ட காவிரி’ அல்லதான். என்றாலும் மணலை அரித்துக் கொண்டு பளிங்குபோல, நீர் சலசலவென்று எப்போதும் ஓடும். சுமார் இருபதடி அகலமே இருந்தாலும் கிழக்குத் தொடர்ச்சி மலையிலிருந்து இழிந்துவரும் பழையாற்றின் கிளையாதலின் ஆடைக்கும் கோடைக்கும் தண்ணீருக்குப் பஞ்சமில்லை. கிளை பிரிகின்ற இடத்தில், பழைய திருவிதாங்கூர் மூலம் திருநாள் மகாராஜா காலத்தில் கட்டப்பட்ட சுடுசெங்கல் சுண்ணாம்புக் காரைப்பாலத்தின் கீழ்தான் சின்னத்தம்பியா பிள்ளை மாத்திரமல்ல, கிராமத்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் எல்லோரும் குளிக்குமிடம். ஆனி, ஆடி அல்லது புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் பெய்யும் பருவ மழைகளில் இருகரையும் தொட்டுக் கொண்டு நுங்கும் நுரையுமாக, வாழை தாழைகளையும் அடித்துக் கொண்டு புரண்டோடும் செந்நிறப் புதுவெள்ளத்தில் சிறுவர்கள் பாலத் தின் மீதிருந்து குதிப்பார்கள். அல்லது கரைகளில் வளர்ந்து செழித்திருக் கும் புன்னை மரக் கிளைகளிலிருந்து ஊஞ்சலாடிக் கொண்டே பாய்ந்து விழுவார்கள். ஆனால் முட்டளவு வெள்ளமே ஒடும் இந்த மாசி மாதத்தில் அவ்விதம் குதித்தால் கீழே கிடக்கின்ற கற்கள், கால் முட்டியையோ மண்டையையோ பிளந்துவிடும் என்பது அனுபவபூர்வ மாக அறிந்த உண்மை.

அறுபத்தைந்து வயதான சின்னத்தம்பியா பிள்ளையின் விடலைப் பருவம் முதல், ஏன் அதற்கு முன்பு அந்தப் பாலம் தோன்றிய நாளிலி ருந்தே, பெரியவர்கள் பெருவெள்ளக் காலங்களில் சிறுவர்களை விரட்டி ஓட்டுவதும் அவர்களின்தலை மறைந்த பின்பு சிறுவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து விடுவதும் வேடிக்கையான ஒன்றுதான். ஆனந்தமான நீராட் டத்தைச் சின்னத்தம்பியா பிள்ளை முடிக்கும் தறுவாயில் இருந்தார். மாசி மாதத்தின் பதினொரு மணி வெயிலின் கடுமையும் புன்னை மரத்தின் தண்ணென்ற நறுநிழலும் சூடேறிவிடாத சலசலக்கும் தண்ணீரின் இதமும் யாரையும் மெய் மறக்கத்தான் வைக்கும்.

துவர்த்தைப் பிழிந்து ‘படார்படார்’ என்று உதறி தலையையும் உடம் பினையும் துவட்டிவிட்டு, அரையில் துவர்த்தை உடுத்து எழுந்து நின்றார். படிக்கட்டுகளின் மீதேறி, காலண்டர் தேதித் தாளில் மடித்துக் கொண்டு வந்திருந்த திருநீற்றினை இடது கையில் வைத்து வலது கையால் சில துளிகள் தண்ணீர் விட்டுக் குழைத்து, மூன்று விரல்களால் நெற்றி, தோள்கள், மார்பு, முழங்கைகள் என்று இட்டுக்கொண்டு, கைகளைக் கழுவி, ‘நமச்சிவாயம்’ என்றவாறு கிழக்கு நோக்கிக் கைகுவித்தார்.

கல்மீது துவைத்துப் பிழிந்து வைத்திருந்த வேட்டியை உதறி, தலைக்கு மேல் பட்டம் போலப் பிடித்துக்கொண்டு புறப்பட எத்தனித் தார்.

“என்ன அம்மாச்சா… இண்ணைக்கு பதினோரு மணிக்கே குளியல்?” என்றவாறு சங்கரலிங்கம் பிள்ளை ஆற்றில் இறங்கினார்.

சாதாரணமாக சின்னதம்பியா பிள்ளை இரண்டு மணிக்குத்தான் குளிப்பார். சாப்பாட்டுக்கு மூன்று மணி ஆகிவிடும்.

“இல்லேப்பா! அம்மாசியாச்சே இண்ணைக்கு! அவளுக்கு நேத்தை யிலேருந்து உடம்புக்குச் சுகமில்லே.இழுத்து மூடிக்கிட்டுப் படுத் திருக்கா. காலம்பற கஞ்சி வச்சேன். நார்த்தங்காயைத் தொட்டுக்கிட்டு குடிக்கச் சொல்லிவிட்டு குளிக்கவந்தேன். பழையது பானை நிறைஞ்சு கெடக்கு.நாளும் கிழமையுமா, விரதமும் அதுவுமா எப்படிப் பழையது சாப்பிடுகது? அதான் தாழக்குடி வரைக்கும் ஒருநடை போய்ட்டு வந்திரலாம்ணு பாக்கேன்.”

சங்கரலிங்கம் பிள்ளை பல் தேய்த்து நாக்கு வழிக்கும் அழகு, ஊர் அறிந்ததொன்று. குடலையே வெளியே இழுத்து விடுவதைப்போல இரண்டு விரல்களைத் தொண்டைவரை போட்டுத் தோண்டி எடுத்து விடுவார். ஏற்கெனவே பன்னிரெண்டு மணி வரை எதுவும் சாப்பிடாமல் வயிற்றைப் புரட்டிக்கொண்டுவரும் சின்னத்தம்பியா பிள்ளைக்கு, அந்தக்காட்சியைத் தாங்கும் திராணி இல்லாததால் மெதுவாக நடையைக் கட்டினார்.

பட்டம் பிடித்திருந்த வேட்டியின் நுனிகள் காற்றில் படபடக்க, தாழக்குடியை நோக்கிக் குறுக்கு வழியில் இறங்கினார். ஈர வேட்டி வெயி லின் கடுமையை வடிகட்டி, குளிர்ச்சியை அவருக்குத் தந்தது.

சின்னத்தம்பியா பிள்ளைக்கு இரண்டே பெண்கள்தான். அவர் கிராமத்திலிருந்து ஆறே பர்லாங் தூரத்தில் இருக்கும் தாழக்குடியில்தான் இரண்டு பேரும் வசதியாக வாழ்க்கைப் பட்டிருந்தார்கள். இங்கே நில புலன்களைக் கவனித்துக்கொண்டு பிள்ளைவாளும் மனைவியுமாக ‘முதியோர் காதல்’ நடத்திக்கொண்டிருந்தார்கள். தாழக்குடியை அடைந் ததும் சுக்காகக் காய்ந்துவிட்ட வேட்டியை இடுப்பிலும் இடுப்பிலிருந்த துவர்த்தைத் தோளிலுமாக இடம் மாற்றிக்கொண்டார். கிட்டத்தில் இருந்த மூத்த மகள் வீட்டை நோக்கி நடையை எட்டிப் போட்டார். மணி தான் பன்னிரண்டரையாச்சே! மூத்தவள் வீட்டினுள் நுழைந்து, “உஸ்ஸ்…… அப்பாடா…’ என்று பெருமூச்சு விட்டு விட்டு மேல் துண்டை விசிறிக் கொண்டு உட்கார்ந்தார்.

“இந்த வேனா வெயிலிலே இப்ப என்ன எடுக்க இப்படி வீசு வீசுன்னு ஓடி வாறே…?” மகள் உரிமையோடு கடிந்துகொண்டாள். “இல்லேம்மா… இண்ணைக்கு அம்மாசியாச்சா…”

“அம்மாசியானா என்ன? சாப்பிட்டாச்சுண்ணா படுத்து ஒரு உறக்கம் போடுகது. பிறகு வெயில் தாந்தப்புறம் வந்தாப் போச்சு! பேரப்பிள் ளையோ என்ன ஓடியா போறா?”

சின்னத்தம்பியா பிள்ளை ‘திருதிரு’ வென்று விழித்தார். மருமகன் வேறு வீட்டினுள்ளிருந்து எட்டிப் பார்த்தார்.

‘சரி! இனி எப்படி இவளிடம் அதுவும் மருமகப் பிள்ளையையும் வைத்துக் கொண்டு, வெட்கத்தை விட்டு ‘சாப்பிட வந்தேன்’ண்ணு சொல்வது?’

“இந்தக் கட்டைக்கு மழையானா என்னா, வெயிலானா என்னம்மா? கறுத்தாபோயிரப் போறேன்? ” முகத்தில் வந்த பசிக்களைப்பை விரட்டி விட்டு, பேரக் குழந்தைகளுடன் கொஞ்சுவதாகச் சற்று நேரம் பாவலா பண்ணினார்.

“சரிம்மா! தங்கச்சி வீடுவரைபோய்ட்டு வாறேன்” என்று சொல்லி விட்டு “கொஞ்சம் படுத்துக் கிடயேன், சாயங்காலமாப் போனால் போராதா?” என்ற மகளின் வேண்டுகோளையும் தட்டிவிட்டு தட்டாமல் என்ன செய்வது அடுத்த தெருவை நோக்கி நடந்தார்.

இளைய மகளின் வீட்டை நெருங்கும்போதே பிள்ளைவாளுக்குக் கொஞ்சம் ‘திக்கென்றுதான் இருந்தது. போவதற்குள் அங்கே எல்லோரும் சாப்பிட்டுவிட்டால் என்ன செய்வது ? எல்லோரும் சாப்பிட்டான பின்பா விரதச்சாப்பாடு சாப்பிடுவது? நல்ல வேளை! அவள் வீட்டில் அப்போது தான் இலை போட ஏற்பாடாகிக்கொண்டிருந்தது.

“வாப்பா…”இளைய மகள் ஒடிவந்தாள். சாப்பிடத் தயாராகிக் கொண்டிருந்த மருமகன் புன்னகைத்தார். வெண்டைக்காய் பொரியல் மணம் ‘கம்’ மென்று மூக்கில் தாக்கியது. மூன்று வயதுப் பேரன் ‘தாத்தா வந்தாச்சு! தாத்தா வந்தாச்சு” என்று குதித்தான். ஆனால் இந்த இன்பச் சூழலை ரசிக்கும் மனநிலை கிழவருக்கு இல்லை.

“அக்கா வீட்டுக்குப் போயிருந்தேயாப்பா?”

“ஆமா!”

“உங்கிட்ட எத்தனை நாள்ப்பா சொல்லுகது ? வந்தா நேரே இங்கே வாண்ணு! நீ பாட்டுக்கு அக்கா வீட்டிலே சாப்பிட்டுட்டு அப்புறமா இங்கே வாறே!”

“அதுக்கில்லேம்மா… அம்மாசியாச்சா… இண்ணைக்கு…!”

“அம்மாசியானா என்னா? நானுந்தான் குளிச்சு முழுகிட்டு உலை வைச்சேன்… உன் விரதத்துக்கு எங்க வீட்டிலே சாப்பிட்டா என்ன பங்கம் வந்திருமாம்? இனி இப்படி வா சொல்லுகேன்…”

அன்பில் விளைந்த கோபம் அவரை அதட்டியது. அடுக்களையில் காய்ந்த தேங்காய் எண்ணெயில் பப்படத்தைப் போட்டதால் உண்டான ‘சொர்…’ என்ற ஒலி.

கிழவருக்குத் தோன்றியது: ‘இன்னும் சாப்பிடலை’ண்ணு இவளிடம் சொன்னால் என்ன? என்ன இருந்தாலும் மகள்தானே! பெற்ற மகளிடமுமா கெளரவம் பார்ப்பது?

செருப்பால அடி. மருமகன் வேற இருக்கார். அப்படியென்ன பசி? மரியாதை கெட்ட பசி? அப்படி வயத்தை நிறைக்காட்டாத்தான் என்ன? மனம், வாதமும் எதிர்வாதமும் செய்தது. கிழவருக்கு அப்போதுதான் படீரென்று புத்தியில் உறைத்தது. ‘சே! எல்லாம் இந்தத் திருநீறால் வந்த வினை

ஆமாம், ஐம்பதாண்டுப் பழக்கம். குளித்துவிட்டுத் திருநீறணிந்து விட்டுதான் சாப்பிடுவார். நெற்றியில் துலங்கும் நீறுடன் அவர் வெளியே இறங்கிவிட்டால் பிள்ளைவாள் சாப்பிட்டாகிவிட்டது என்று பொருள். இது ஊர் மாத்திரமல்ல, அவரது உறவினர்களும் அறிந்ததொன்று. அது தான் இன்று அவரைக் காலைவாரிவிட்டு விட்டது.

“குடிக்கக் கொஞ்சம் வெந்நீர் குடும்மா” விரத நாட்களில் சாப்பாடாகி விட்டால், இரவு பலகாரம் வரை அவர் வெந்நீர்தான் சாப்பிடுவது. ‘சாப்பிட்டாகி விட்டது’ என்று நிச்சயமாக்கப்பட்டு விட்ட பிறகு அதிலிருந்து நழுவ முடியுமா? வெந்நீரை வாங்கிக் குடித்துவிட்டு பேரனின் கன்னத்தை ஒரு தட்டுத் தட்டிவிட்டு “சரிம்மா! கீழத் தெருவில் ஒரு ஆளைப் பாக்கணும். பாத்துட்டு வந்திருதேன். நேரமானா அவரு வெளியே போயிருவாரு” என்று சாக்குச் சொல்லிவிட்டு, ஒன்றரைமணி வெயிலில் வெளியில் இறங்கினார்.

வெயிலையும் பொருட்படுத்தாமல், வேகுவேகென்று முக்கால் மைல் நடந்து வீட்டினுள் நுழைந்து, அடுக்களைக்குள் புகுந்து, பானையிலிருந்த பழையதைப் பிழிந்து வைத்துவிட்டு ஊறுகாய் பரணியைத் தேடிய சின்னத்தம்பியா பிள்ளையை, போர்த்திக்கொண்டு படுத்திருந்த அவர் மனைவி, விசித்திரமாகப் பார்த்தாள்.

– தீபம், ஜூலை-1975. இலக்கியச் சிந்தனை பரிசு

நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன் எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை பிறந்த நாள் : 31 டிசம்பர் 1947 பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம் தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம், கன்னியாகுமரி மாவட்டம். தமிழ் நாடு – 629 901. முகவரி : G. Subramaniyam (NanjilNadan) Plot No 26, First Street, VOC Nager,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *