விமோசனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 11, 2024
பார்வையிட்டோர்: 172 
 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அங்கயற்கண்ணி அசையாமல் கற்சிலை மாதிரி தெருக் கோடியைப் பார்த்தவண்ணம் வாசலில் உட்கார்ந்திருந்தாள்: சூரியன் அஸ்தமனம் ஆகி மாலை வெளிச்சமும் மங்கிக்கொண்டே வந்தது. வெளிச்சம் குறையக் குறைய அவள் மனத்திலும் நம்பிக்கை யென்னும் வெளிச்சமும் குன்ற ஆரம்பித்தது. காரணம் வேலைக்குப் போன அவள் புருஷன் வெகு நேரம் ஆகி யும் வீடு திரும்பாதது தான். 

அவள் புருஷன் துரைசாமியோடு ஆலையில் வேலை செய்யும் தொழிலாளர்களெல்லாம் வீட்டுக்கு வந்துவிட்டனர். ஆனால் துரைசாமியை மட்டும் காணவில்லை. 

அங்கயற்கண்ணியின் கண்களில் நீர் மல்கியகியது.  

‘ஒரு வேளை மறுபடியும்..சீ! அப்படியும் இருக்குமா? …பின்னே இவ்வளவு நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு வராத காரணம்?’ 

இந்த நினைப்பு ஓட்டத்தில் எல்லையற்ற தூரம் பிரயாணம் செய்த அங்கயற்கண்ணி தன் நினைவற்ற சிந்தனாலோகத்தை அடைந்தாள். 


துரைசாமி ஓர் ஆலைத் தொழிலாளி. அவன் வீடு திரும்பும் நேரம் நெருங்கும் சமயத்தில், வீட்டு வாசலில் ஆவல் நிறைந்த கண்களோடு அவனுடைய அருமை மனைவி அங்கயற்கண்ணி காத்து நிற்பாள். அவனும் அடங்காத ஆர்வத்துடன், தன் ‘வழி மேல் விழி’ வைத்து நிற்கும் அங்கயற்கண்ணியையே பார்த் துக் கொண்டு வருவான். 

துரைசாமியின் சொற்ப சம்பளத்தைக் கொண்டு அங்கயற் கண்ணி மிகவும் சாமர்த்தியமாகக் குடித்தனத்தை நடத்திவந் தாள். துரைசாமி வீட்டுக் கவலையேயில்லாமல் ‘தான் உண்டு, தன் வேலையுண்டு என்று இருந்து வந்தான். இத்தகைய எளிய வாழ்க்கையிலும் அவர்கள் எவ்வளவு ஆனந்தமாய் இருந்தார்கள்! 

துரைசாமி தன் குடும்ப நிலையையும் பொருட்படுத்தாமல் குழந்தை முருகன் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து அவனைத் தன் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்து வந்தான். முருகனை நல்ல பையனாக, புத்திசாலிப் பையனாக, வளர்க்க வேண்டும் என்பது அவனது அத்யந்த ஆசை. அவனுக்குத்தான் சின்ன வயதில் படிக்க முடியாமல் போய்விட்டது. முருகனாவது படித்து முன்னுக்கு வரவேண்டும் என்பதில் அவனுக்கு இருந்த ஆசை கொஞ்ச நஞ்சமல்ல. 

முருகனுக்குப் பத்து வயது ஆயிற்று. படிப்பில் மிகவும் அக்கரையுள்ளவனாக விளங்கினான் முருகன். அவனுடைய நல்ல குணங்களைப் பற்றித் தன் நண்பர்கள் புகழ்ந்து பேசுவதைக் கேட்கும்போது துரைசாமி பூரித்துப் போவான். 

அங்கயற்கண்ணிக்கும் இது ஆனந்தமாகத்தான் இருந்தது. ஆனால் அவர்களது ஆனந்த வாழ்க்கை ஆண்டவனுக்கே பொறுக்க வில்லை போலும். குதூகலமாகச் சென்று கொண்டிருந்த அவர் களது வாழ்க்கைப் படகு நாளடைவில் தத்தளிக்க ஆரம்பித் தது. காரணம் துரைசாமி தன் குடும்பத்தினிடம் காட்டி வந்த அக்கறை குறைய ஆரம்பித்ததுதான். 

துரைசாமியின் இந்த விபரீதப் போக்கு வரவர அதிகமாகி வந்தது. ஆலையை விட்டவுடன் முன்பெல்லாம் நேரே வீட்டுக்கு வந்துகொண்டிருந்த துரைசாமிக்கு இப்போது வழியில் எவ்வ ளவோ காரியங்கள் இருந்தன. இரவு நேரங் கழித்துத்தான் அவனால் வீட்டுக்கு வர முடிந்தது. 

முன்பெல்லாம் துரைசாமி அன்பும் ஆதரவும் நிறைந்த குரலில் அங்கயற்கண்ணியையும் முருகனையும் அழைத்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைவான். அதற்கு நேர்மாறாக இப்பொழுது குனிந்த தலை நிமிராமல் விர்ரென்று உள்ளே நுழைந்தான். அவன் யாருடனும் ஒரு வார்த்தைகூடப் பேசு வதில்லை. சதா சர்வ காலமும் அவன் முகத்தில் வெறுப்பும் ஆத்திரமும் தாண்டவமாடின. உடம்பும் வரவர இளைத்துக் கொண்டே வந்தது. 

வீட்டுச் செலவுக்காக அங்கயற்கண்ணியிடம் கொடுக்கும் தொகையையும் அவன் வரவரக் குறைத்துக் கொண்டே வந் தான். கடைசியில் பணம் கொடுப்பதையே நிறுத்திவிட்டான்: இதனால் அங்கயற்கண்ணி அரும்பாடுபட வேண்டி வந்தது; குடும்ப நிர்வாகப் பொறுப்பு முழுவதும் அவள் தலையில் விழுந்தது; நாலு வீட்டில் வேலை செய்தும், ஆலைத் தொழிலாளர்களுக்குச் சாப்பாடு எடுத்துச் சென்றும் குடும்பத்தை நடத்த வேண்டி வந்தது. 

தன் குடும்பம் இவ்வளவு சீர்கேடான நிலையை அடைந்த தும் அவள் தன் புருஷன் மீது ஆத்திரம் கொள்ளவில்லை; அநு தாபமே கொண்டாள். அவனுக்கு உடம்பு சரியில்லாததனால் தான் இப்படியெல்லாம் நடந்து கொள்ளுவதாக அவள் நினைத் தாள். 


ஒரு நாள் துரைசாமி முருகனுக்கு ஒரு கண்டிப்பான கட்டளை இட்டான். ஊருக்கு வடக்குக் கோடிப் பக்கம் எந்தக் காரணம் கொண்டும் அவன் போகக் கூடாது என்பதுதான் அக் கட்டளை. ஏற்கெனவே பயந்த சுபாவமுள்ள முருகனுக்கு இம்மாதிரிக் கட்டளையும் பிறப்பித்து விட்டால் கேட்கவா வேண்டும்? 

இப்படியெல்லாம் நடந்து கொள்ளும் துரைசாமியின் புத்தி மாறாட்டத்துக்குக் காரணம் ஏதாவது தெய்வக் குற்றமாயிருக் குமோ என்று நினைத்து, அங்கயற்கண்ணி மாரியாத்தாளுக்குப் பொங்கலிட்டுப் பூசையும் போட்டாள். 

அக்கம் பக்கத்திலுள்ள பெண்களுக்கெல்லாம் அங்கயற்கண்ணியிடம் அளவு கடந்த அனுதாபம் உண்டாயிற்று. புருஷ னின் வழி தவறின நடத்தையின் உண்மையை அறியாத அவளது கள்ளங்கபடமற்ற சுபாவம் அவர்களுக்கெல்லாம் ஆச்சரியத்தை அளித்தது. 

ஆனால் துரைசாமியின் புத்தி மாறாட்டத்துக்கு உண்மை யான காரணம் இன்னதென்பதை அவளிடம் சொல்ல ஒருவரும் துணியவில்லை. அப்படியே அவர்கள் சொல்லியிருந்தாலும் அவள் நம்பியிருக்கமாட்டாள். புருஷனிடம் அவ்வளவு நம் பிக்கை அவளுக்கு. 

ஆனால் அந்த நம்பிக்கைக் கோட்டை அன்று மாலையே தகர்ந்துவிட்டது. அப்பொழுது ஆறு மணியிருக்கும்: துரைசாமியும் அவன் நண்பனும் ஏதோ பேசிக்கொண்டே வீட்டு வாசலுக்கு வந்தனர். 

துரைசாமியின் நண்பன் உரத்த குரலில், நாக் குழற “ஏய் துரைசாமி! நான் தாஜ்மஹாலை வாங்கப் போறேண்டா!” என்றான். 

அதற்குத் துரைசாமி, “போடா, முட்டாள்! நான் அதை விற்கப்போகிறதில்லை!” என்று உளறிக் கொட்டினான். 

இதைக் கேட்ட அங்கயர்கண்ணிக்குத் ‘திகீர்’ என்றது. “இந்தக் கொடிய பழக்கத்துக்கு நீங்கள் எப்படி ஆளானீர்கள்? கள்ளுக் குடிப்பது மகா பாவமில்லையா? நேற்றுக்கூட அந்தக் காங்கிரஸ்காரர் அப்படித்தானே பிரசங்கத்திலே சொன்னார்?” என்று கண்ணீர் பெருகக் கேட்டாள் அங்கயற்கண்ணி. 

துரைசாமி ஒரு அட்டகாசச் சிரிப்புச் சிரித்துவிட்டு, அவன் கிடக்கிறான், முட்டாள்! குடி வெறியிலே அப்படிப் பேத்தி யிருப்பான்! அதை நீ நீ பெரிசாச் சொல்ல வந்துட்டியே!” என்று சொல்லிக் கொண்டே நிற்கமுடியாமல் கீழே விழுந்து விட்டான். 

இந்தச் சமயத்தில் வெளியே சென்றிருந்த முருகன் ஓடோ டியும் உள்ளே வந்து, “அம்மா, அம்மா! இன்றைய தினம் நம்ம தெருப் பையன்களோடு நான் விளையாடப் போயிருந் தேன். ஊருக்கு வடக்குக் கோடிக்குப் போய் விளையாடினோம், அப்பா என்னை அந்தப் பக்கம் போகக்கூடாது என்று சொல்லி யிருந்தார். நான் ஆனமட்டும் அங்கே வரமாட்டேன் என்று சொன்னேன். பையன்களெல்லாம் ஒரேயடியாய்ச் சிரிக்க ஆரம் பித்துவிட்டான்கள். அங்கே ஒரு பெரிய கள்ளுக் கடை இருக் கிறது. உங்க அப்பன் தினம் அந்தக் கடைக்குத்தான் வந்து குடிக்கிறான்: அது உனக்குத் தெரியக்கூடாது என்று தான் உன்னை இங்கே வரக்கூடாது என்று அவன் சொல்லியிருக்கிறான்’ என்று ஒரு பையன் சொன்னான். அதற்கேற்றாற்போல் கொஞ்ச நாழிகைக்கெல்லாம் அப்பா கையிலே கள்ளுக் கலயத்தோடு தள்ளாடிக்கொண்டே அங்கு வந்தார். அவரைப் பார்க்க எனக் குப் பயமாயிருந்தது, அம்மா! ஓடி வந்து விட்டேன்!” என்று விம்மிக்கொண்டே முருகன் சொன்னான்; 

அங்கயற்கண்ணி இதைக் கேட்டதும் இன்னும் கதறி விட்டாள். 

குடி மயக்கந் தெளிந்து எழுந்த துரைசாமிக்குத் தன் மகனை யும் மனைவியையும் தலை நிமிர்ந்து பார்க்கவே உள்ளம் கூசியது. முழங்காலைக் கட்டிக்கொண்டு விசித்து விசித்து அழுதான். 

சிறிது நேரத்துக்குப் பிறகு, அவன் அங்கயற்கண்ணி யிடமும் முருகனிடமும் தான் கள்ளுக்கடைப் பக்கமே இனி மேல் போவதில்லையென்று ஆயிரம் சத்தியம் செய்தான். ஆனாலும் அங்கயற்கண்ணியின் மனம் சமாதானமடைய வில்லை; அவனைத் தினசரி சந்தேகக் கண்கொண்டே பார்த்து வந்தாள். 


“கண்ணு, ஏன் இப்படி மாமல்லபுரத்துச் சிலை மாதிரி உட்கார்ந்திருக்கே? ஏன் இந்தக் கண்ணீர்?” என்று சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய துரைசாமி கேட்ட பிறகு தான் அங்கயற் கண்ணி தன் சுய நினைவையடைந்தாள். 

உடனே அவள் கண்ணைத் துடைத்துக் கொண்டு, “ஒண்ணு மில்லே, வாங்க! வெகு நேரம் ஆகியும் இன்னைக்கு நீங்க வராம இருந்திடவே, எனக்குச் சந்தேகம் உண்டாகிவிட்டது. மறுபடி யும் ஒரு வேளை நீங்கள் அந்தப் பாழும் கடைப் பக்கம் போய் விட்டீங்களோ என்று தான்!” என்றாள்: 

“சீ இனிமேல் அந்தப் பக்கம் போவேனா! அப்படியே போவதாயிருந்தாலும் நம்ம ஜில்லாவிலேதான் அடுத்த வாரத் திலே இருந்து கள்ளுக் கடைகளை எல்லாம் மூடிவிடறாங்களே! அதனாலே இனிமே அதைப் பத்தி நீ கொஞ்சம் கூடப் பயப்பட வேண்டாம்!” என்றான் துரைசாமி உணர்ச்சி ததும்ப. 

“எல்லாம் அந்த மவராசன் காந்தி புண்ணியம்; அவரு நல்லாயிருக்கணும்!” என்றாள் அங்கயற்கண்ணி.

– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *