வித்தைக்காரணல்ல!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 6, 2021
பார்வையிட்டோர்: 4,670 
 

நான் என் பாட்டிற்கு ரோட்டோரமாக எனது கணத்த பையை சுமந்தவாறு நடந்து கொண்டிருந்தேன். இன்றுதான் முதல் வகுப்பு சேர்ந்தேன், அங்கு செல்லும்போதே வீதிக் குழப்பமாக கிடந்தது, இப்போது வீடு திரும்புகிறேன் ஆனால் இப்போதும் ஒரே குழப்பம். அது ஓர் ‘Y’ வடிவ சந்து நான் நிற்பது அதன் காலில், இடப்புறமா? வலப்புறமா? ஆட்டோக் காரர் எவரையும் காணவில்லை, ஆனால் விசித்திரமாக இடது புறம் வெறுமையாக கிடந்தது; கடதாசி குப்பைகள் உருளுது – காற்றின் அலாவல் கேட்குது. வலதுபுறமோ சனநெறிசலோடு இருந்தது; ஏதோ பிரச்சனை போல் இருக்கிறது மக்கள் யாவும் கூடி நின்றனர் – 15 வயதிலிருந்த ஆர்வம் என்னவென்று போய் பார்த்துவிடலாம் என்று வலப்புறம் திரும்பினேன்.

ஒரு ஒன்றரை மணியிருக்கும், வெய்யோன் வெறித்தனமாக வாட்டியெடுக்கிறான். முதுகினில் தொங்கிய பையினுள் இருந்து தண்ணீர் போத்தலை எடுத்து தாகம் தணியும் வரை நன்கு மண்டினேன். கவனமாக அதை உள்ளே வைத்தேன் – ஏன் அதை கவனமாக உள்ளே வைக்க வேண்டும்? அது என் நெஞ்சத்திற்கு நெருங்கிய போத்தல்; போத்தலில்லை பிறந்தநாளிற்கு பரிசளித்தவளே நெருங்கியவள். அவளிடம் இதை தொலைக்கவோ உடைக்கவோ மாட்டேன் என சத்தியம் கித்தியம் எல்லாம் செய்து 2 நாள் தான் ஆகுது. ஒருவழியாக கூட்டத்தை நெருங்கியாச்சு.

இடிபட்டு அடிபட்டு ஒரு வழியாக கூட்டத்திற்குள் புகுந்து என்ன சந்ததி என்று பார்த்தேன். நடுவிலே ஒருவர் ; கருப்புத் தொப்பி அதுவும் வித்தைக்காரர் தொப்பி, செம்மஞ்சள் நிறத்தில் கோட்டு சூட்டு, கபில நிற சப்பாத்துக்கள், ஆனால் (இது கொஞ்சம் பெரிய ஆனால்) அவர் சற்று ஏழ்மையாக தோற்றமளித்தார். அவரது வெள்ளைக்காரர் போன்ற மஞ்சள் தாடி அலங்கரிக்கப் படவில்லை – சிகையோ அவருக்கு இருக்கவில்லை; நடுமண்டை சொட்டை – ஆடைகளில் சின்னச் சின்ன கீறல்கள், கிழிப்புகள்.

அவர் வித்தைக்காரர் என்பது மனிதர்களை கணிக்க மனிதர்களே வகுத்த திரிவிடயங்களிலுமிருந்து தெள்ளத்தெளிவாக தெரிந்திற்று.

முதலில் ஒருத்தரை சனக்கூட்டத்திலிருந்து அழைத்தார், அழைத்து கையில் ஒரு சிவப்பு நிறப் பஞ்சுப்பந்தை அளித்து அதனை நன்கு தொட்டுணர சொன்னார், பின் கையில் வாங்கி பந்தை இரு உள்ளங்கைகளில் வைத்து சற்று உருட்டி இரு கைகளையும் விரித்தார், இரண்டிலும் ஒத்த சிவப்பு நிறப் பந்துகள் வந்தன! (1 இலிருந்து எப்படி 2 வந்தது?) இரண்டாவதாக, உழுந்து வடை போல் நுண்ணிய வெண்ணிற இனிப்பை வெளியெடுத்தார், ஒன்றல்ல இரண்டு. இந்த இரண்டையும் ஒன்றாக பிணைத்துக் காட்டட்டுமா? சொல்லுங்க? என்று ஆரவாரம் இட்டார்.இரண்டு இனிப்புகளையும் அருகருகே கொண்டு சென்றார் – விடுக்கென்றார் – இரண்டும் பிணைப்புற்றது!

அவரது தொப்பியை கழட்டினார்,

“உலகிலேயே வேகமான மிருகம் ஒன்றை கொண்டு வரவா ஃப்ரெண்ட்ஸ்?” என்று கூறி தொப்பியிலிருந்து ஓர் ஆமையை வெளியெடுத்தார் (முயல் எடுத்து எடுத்து அலுத்துப் போயிருக்கும் போல்).

திடீரென திசைகாட்டி விரலால் என்னை காட்டி, சிறுவனே ஒரு பென்சிலிருக்கா? என்று என்னை கேட்க நானும் பின் பையை திறந்தேன், பென்சிலொன்று கொடுத்தேன். மீண்டும் என்னை கேட்டார்,

“ஏய்! தும்பி சாரி தம்பி. உம் பாக்குல ஒரு அழகான போத்தல் கிடந்துச்சுதில்ல? அதையும் கொஞ்சம் தா. திரும்ப தந்துடுவேன் யோசிக்காத தும்பி!”

நானும் தயக்கத்தோடு கொடுத்தேன்.

கையில் வைத்து பென்சிலை தடவிக் கொண்டே இருந்தார் சிட்டென்று பென்சிலை ஒரு இழுவை இழுத்தார். அது பெரிய இரும்புக் கம்பி ஆயிற்று! சனமெல்லாம் பீதியில் அலறிற்று அந்தளவு ஆக்ரோசமாக இருந்தது.

“ஹாஹாஹா! எவனும் ஓடாதீங்க! இந்த போத்தலுக்குல் ஆளுக்கு 10 ரூபா போட்டுட்டு போய் கிட்டே இருங்க. இல்ல…” என்றவாறு ஒரு வயதான பாட்டியிடம் திரும்பி பாட்டியின் முழங்கையில் இரும்புக் கம்பியை தைத்தார். பாட்டியிற்கோ பாடியெல்லாம் குருதி – எனக்கு பீதி மும்மடங்காயிற்று (உண்மையில் எல்லாருக்குமே அப்படித்தான்).

எல்லாரும் அவசரம் அவசரமாக பத்து ரூபாய் இட்டு தெறித்து ஓடினோம். அவ்வளவு நேரமும் அவன் அந்த பாட்டியிற்கு பான்டேஜ் போட்டுக் கொண்டிருந்தான்.

மீண்டும் ‘Y’ வழிச்சாலை இப்போது தான் நினைவு தீண்டியது என் போத்தல் அவனிடம். அட! அதில்தான் அவன் காசையே எடுத்துச் செல்லப் போகிறான்.முடிவெடுத்துவிட்டேன்! நான் அவனை பின்தொடர்ந்து எப்படியாவது அதை வாங்கியே ஆவேன் (வளரும் வாலிபத்தின் வீரப் பிரதாபங்கள் அப்படித்தான் இருக்கும்).

அவன் நடக்கும்போதே நல்ல கதியாகத்தான் நடந்தான். நடந்து சென்று ஒரு சந்தியில் இருத்தெரு மரங்களிடையே தனது சைக்கிளை ஓட்டி வைத்திருந்தான். அதை வெளியெடுத்து, என் போத்தலை ஒரு பிளாஸ்ற்றிக் பையிலிட்டு அதை அவனது சைக்கிளிலிருந்த கொக்கியில் மாட்டினான். அந்த துருப்பிடித்த சைக்கிளில் ஏறி மிதிக்கத் தொடங்கினான். நான் அவனை பின்தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் களைக்கத் தொடங்கி நின்றுவிட்டேன் அவன் நேராக மிதித்து மிதித்து செல்கிறான்

பாக்கெட்டிலுள்ள காசெல்லாம் நோண்டி எடுத்தேன். 120/= கிடந்தது. ஒரு ஆட்டோவை பிடித்துவிட்டேன் – ஏறி அவரிடம் பதற்றம் கலந்து சொன்னேன்,”அங்கிள், அந்த பைசைக்கிளில் போரானே அவனுக்கு பின்னுக்கு கொஞ்சம் ஸ்லோவா போங்களேன்”

போகிறான் போகிறான் நின்றபாடில்லை. மீட்டர் வேற 100/= வந்திற்று இன்னும் கொஞ்ச தூரம் தான் 20 சட்டென்று வந்துவிடும். க்க்கயீங்… என்று ஓர் சப்தம் – அவன் சைக்கிளில் கிறீஸில்லாமல் பிடித்த ப்ரேக்கின் சப்தம் தானது. ஆட்டோக் காரரிடம் 110/= ஐ எடுத்து நீட்டிவிட்டு அவசர அவசரமாக அவனை பின்தொடர்ந்து ஓடினேன்.

மனதில் ஆயிரம் எண்ணங்களின் ஓட்டம் – இப்போது எங்கே இருக்கிறேன்? – அவன் என்னையும் குத்தி விடுவானோ? – அதேமாதிரி போத்தலை வாங்கியிருந்தால் வேலை ஈஸியாக முடிஞ்சிறுக்குமே! – ஆக்சன் கிங்கெல்லாம் பார்த்து கைதட்டியிருக்ககிறேன் இப்பதான் விளங்குது அது முழுக்க சினிமா – சிறுநீர் கழிக்காத குறை அந்தளவு அச்சம் அகத்தே ஆட்கொண்டது.

அவன் மீண்டும் ஓர் சிறிய (ரொம்ப ரொம்ப சிறிய) மண் ரோட்டில் திரும்பினான். அதனுள் ஒரு 200 மீட்டர் நடந்திருப்போம் ஒருவழியாக அவன் ஓர் கதவை தட்டினான். கதவு திறந்தது. அவன் உட்சென்றான். அந்த வீட்டுக் கதவினருகே சென்று எட்டிப் பார்த்தேன். யாரோ ஒருவனிடம் இவன் என் போத்தலிலுள்ள காசை கொட்டினான் அவனோ இவனிற்கு எதோ பால்மா கொடுத்தது போல் கிடந்தது ஆனால் பேப்பரில் சுற்றி சிறியளவில் (ஒரு 90 கிராம்) கொடுத்தான். ஒருவேளை இது போதைப்பொருளோ? பெரும் விவகாரத்தில் மாட்டிவிட்டேன் என்று தோன்றியது. அவன் வெளியே வரத் திரும்பினான், நான் சட்டென்று அருகேயுள்ள மரத்தின் பின் மறைந்துவிட்டேன். என்னை சாடையாக பார்த்திருப்பான் போலும் வெளியே வந்து அங்குமிங்கும் எட்டி பார்த்தான். நல்ல காலம் தப்பித்தேன்!

இப்போது நடராசா பார்ட் 3. அதே மண் பாதை இன்னும் 300 மீட்டர். அவன் சைக்கிளை தள்ளியவாறு நடந்து கொண்டே இருக்கிறான். மனுசனா இவன்? என்று கேட்கத் தோன்றிற்று. ஓர் கதவினருகே நின்று சுற்றமும் கண்களால் சல்லடை சலித்தான். இப்போது அவன் நின்று கதவை தட்டவில்லை – திறப்பினால் திறந்தான். நானும் மெது மெதுவாக அந்த வீட்டின் கதவை நெருங்கினேன். கதவின் முன் ஒரு ஜன்னல், அதனூடு எட்டிப் பார்த்தேன். உள்ளே ஒரு அறைக் கதவு – பூட்டிக் கிடந்தது. உள்ளே ஒரு ஃபோட்டோ – அதில் அவனும் அவன் மனைவியும், ஒரு மகளும் என்று உத்தேசித்தேன். அந்த அறைக் கதவை திறந்ததும், “ஏஏஏஏஏஏய்!” ஒரு கதறல், உள்ளிருந்து வெளியே ஒருத்தி ஓடி வந்தாள் – ஒரு 14 வயசு இருக்கும். ஓடி வந்து அவன் சட்டைப்பையெல்லாம் கிழித்தாள். மிகவும் ஆக்ரோஷமாக இருந்தாள்.

“எனக்கு வேணும்டா! தாடா!”

“நில்லு செல்லம் தாரேன்” உறுதி – அந்த ஃபோட்டோ சிறுமிதான் இந்த பெண்.

வித்தைக்காரன் கண்களில் நீர் வழிய வழிய அந்த வெள்ளை மாவை எடுத்து நீட்டினான். அவள் ஆயிரம் ஆணைப் பசி மிக்கவள் போல் ஆக்ரோசமாக வாயிலிட்டாள் அந்த பவுடரை. அவன் சுவரை பார்த்து அழுதவாறு தன் தலையை அடித்துக் கொண்டு சுவரில் இரத்தச் சித்திரம் வரைந்தான்.

அவன் மகளின் நிலையறிந்த பின்னும் எனக்கு அந்த போத்தலை வாங்க மனமில்லை. பாதந்திருப்பி வீட்டை தேடி நடக்கத் தொடங்கினேன்.

வித்தைக்காரணல்ல! அவனொரு தந்தை!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *