வித்தியாசமான மாமனார் வித்தியாசமான மகள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 25, 2022
பார்வையிட்டோர்: 7,621 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

செந்தில் யோசித்தான். மனைவியை வேலைக்கு அனுப்பலாமா? ஹைட்ரஜன் பலூன் களாய் உயரப் பறக்கும் விலைவாசியை அவள் உதவியுடன் எட்டிப் பிடிக்க வழி செய்து கொண்டால் என்ன?

பஸ் ஓடிக் கொண்டிருந்தது. மயிலைக்குப் போக வேண்டும்.

‘படவா ராஸ்கல் ஸார் அந்த மானேஜர்…ஆபீஸ் முடிஞ்சப்புறம் தான் ஸ்பொஷல் நோட்ஸ் தர்றானாம்…அதுவும் ஸ்டெனோ தான் இருக்கணுமாம்….’

நின்று கொண்டிருந்த இருவர் பஸ் குலூக்கலுடன் பேச்சையும் குலுக்கினர். பெண்கள் வரிசையில், ஈவ்ஸ் வீக்லியில் புதைந்திருந்த இரு விழிகள் உயர்ந்தன. ஸ்டார் அண்ட் ஸடைலில் இந்தி நடிகனின் பரந்த தோள்களையும், மீசை இல்லா வழுவழுப்பான முகத்தையும் ரசித்த இன்னொரு இளசு பெரு மூச்சு விட்டது.

‘ம்…இதெல்லாம் தெரித்திருந்தும் ஏன் ஐயா பெண்கள் வேலைக்கு அனுப்புகிறீர்கள்’ என்ற மௌன மொழியில் பேசினர்.

செந்தில் தலையை ஆட்டிக் கொண்டான்.

‘ஹூம்.. வேலைக்குப் போகிற பெண்கள் எல்லோரும் கெட்டவர்கள் அல்ல, கெட்டவர்கள் ஆக்குவதே ஆண்கள்தானே? ஒரு பெண் தானாகவா கெட்டுப் போக முடியும்? மனத்துக்குள் நிழற் போர்.

“ஓவர் டைம் ஒர்க் பண்ணினால் ரூபாய் தருவதாக இருக்கும் ஆபீஸாக இருந்தால்…பெண்களே அதிக நேரம் தங்கி வேலை செய்யக் கூடாதா?”

”ஓய் நீர் சொல்வதெல்லாம் அதீதக் கற்பனை. இவளோட அவன் தனியாப் பேசனும்.. அதான் சரி. நான் வரட்டுமா? நாளைக்கு வழக்கம் போல டெர்மினஸ்லே!”

செந்தில் தீர்மானம் செய்து கொண்டான். மீனா பட்டதாரி. டைப் அடிக்கத் தெரிந்தவள். டெலிபோன் ஆபரேட்டர் டிரெயினிங் எடுத்திருக்கிறாள். சரளமான இங்கிலிஷ்.

‘எஸ்… அவளை வேலைக்கு அனுப்பியே தீரவேண்டும். வீட்டில் குழந்தைத் தொல்லை இல்லை….முந்நூறோ, நானூறோ வரட்டுமே’

மயிலைக் குளக்கரையில் இறங்கிக்கொண்டான்.

வீட்டு வாசலில் புதிய காலணிகள் வரவேற்றன, ஓ! மாமனார் வந்திருக்கிறாரா?

உள்ளே நுழைந்தான். ஊஞ்சலில் மாமனார் அருகே மீனா காப்பித் தம்ளருடன் நின்றாள்.

“வாங்க மாப்பிள்கா! குட் நியூஸ்…! நான் வீட்டுக்கு வரும்போது மீனா கொல்லையில் இருந்தாள். தலையைப் பிடித்துக் கொண்டு….”

செந்தில் அதிர்ந்தான், இன்பச் செய்தி தான், இருந்தாலும் இவன் வேலைக்கு அனுப்பலாம் என்ற முடிவில் இருக்கும்போது….

சமாளித்துக் கொண்டான்.

“ஓ! அப்படியா மாமா!” என்றவன். மீனாவின் விழிகளைச் சந்தித்தாள். குறும்பு பனிச்சிட்டது. இவன் மனத்தில் முந்நூறோ, நானூறோ கொசம் கொஞ்சமாய்க் கரையத் தொடங்கியது.

நாற்காலியில் அமர்ந்தான்.

“என்ன பலத்த யோசம்?” – காப்பி யைக் குடித்துக் கொண்டே கேட்டார் முருகேசன்.

“…மீனாவுக்கு ஒரு வேலை கிடைக்கும் போல இருக்கு….இவளை வேலைக்கு அனுப்பலாம்னு இருந்தேன்…..” மெதுவாகப் பேசினான் செந்தில்.

மீனாவின் விழிகளில் ஆர்வம் மின்னியது. நைலக்ஸ் புடவை, ஹைஹீல்ஸ், கடிகாரம், தோளில் தொங்கும் பை, ஆபீஸிலிருந்தே டெலிபோனில் செந்திலுடன் பேச்சு…

“ரொம்ப நன்னாயிருக்கு. மீனா வேலைக்குப் போறதாவது?” முருகேசன் உரத்த குரலில் கேட்டார். எம்.பி. பதவிக்குப் போட்டி மறுதாக்கல் செய்யச் சொன்னது போல!

மீனாவின் கண்கள் மூடிக் கொண்டன. போச்சு எல்லாமே போச்சு. வழக்கமான மத்தியானத் தூக்கம். அம்மா பால், அம்மா, பேப்பர்… அம்மா பூ… மூணு முழம் தரட்டுங்களா…மளிகைக் கடை லிஸ்ட்.. சேசே!

“மீனாவை வேலைக்கு அனுப்பாதீங்க….அதுவும் இப்ப இருக்கிற நிலையிலே வேண்டவே வேண்டாம்.”

“மாமா, அவளும் சம்பாதித்தால் குழுந்தைக்கு நல்ல போஷாக்குத் தரமுடியுமோ?” செந்தில் சாதாரணமாய்ச் சொன்னான்.

“உங்களுக்குச் செலவுக்குப் பணம்தானே வேணும்?” முருகேசன் குரலில் உறுதி தொனித்தது.

செந்தில் மௌனமானான். மீனாவின் கனவுகள் கலைந்தன.

***

“இது நாலாம் மாசம்” என்றாள் மீனா.

“எதைச் சொல்றே? உங்கப்பா மாசா மாசம் முந்நூறு அனுப்பி வைக்கிறாரே. அதைச் சொல்றியா?” செந்தில் கேட்டான்.

“இரண்டும் தான். அதிலேயிருந்துதானே இதுவும் ஆரம்பித்து விட்டது.”

“மீனு…பெண்களக் கட்டிக் கொடுத்த பிறகு அவள், கணவன் ஆசைப்படிதானே இருக்கனும்…உன் அப்பா இருக்க விட மாட்டேங்கிறாரே?”

“என்னங்க பண்றது? நான் அவருக்கு ஒரே பொண்ணு. ஆபீசிலே போய் நான் கஷ்டப்படத்தை அவர் விரும்பல்லே.”

கட்டிலில் அவள் சற்றுப் புரண்டு படுத்தாள். சுழலும் மின்விசிறியைப் பார்த்தபடியே உறங்கிப் போனான்.

***

மறுநாள் ஆபீஸ் கேண்டீனில் –

“என்ன ஸார், ரொம்பக் குஷாலா இருக்கிறீங்க?” என்று அகௌண்டன்ட் ஆனந்தரங்கத்தைக் கேட்டான் செந்தில்.

“மகள் வந்துட்டுப் போனாள்” என்றார் வாயெல்லாம் பல்லாக.

“யாரு செண்பகமா? போன வருஷம் தானே கல்யாணம் கட்டிக் கொடுத்திங்க?”

“ஆமா. அவளேதான்… வேலைக்குப் போகிறாளே!”

“ஏங்க, மருமகப்புள்ளே ஒண்ணும் சொல்லலையா?”

“காப்பி சாப்பிடும்…. ஆறிடப் போறது. ம்… என்ன கேட்டீங்க… ஏன் மருமவப் புள்ளே தங்கமாச்சே! அவர் வற்புறுத்தித் தான் இவளை வேலைக்கு அனுப்பிச்சாராம்.”

செந்திலுக்கு என்னவோ போலிருந்தது.

அவர் தொடர்ந்தார்: ”என் பொண்ணு. நான் அவள் கல்யாணத்திலே பட்ட கடனைச் சொல்லியிருக்கு போலிருக்கு. என் மருமவப்புள்ளைக்குக் கஷ்டமா யிருந்திருக்கு. அதனாலே செண்பகத்தை வேலைக்குப் போகச் சொல்லியிருக்காரு. மாசா மாசம் இவள் சம்பளத்திலே வள்ளிசா இருநூறு கொண்டு வந்து கொடுத்திட்டுப் போகிறாள்.”

செந்திலுக்கு வயிற்றில் சங்கடம். காண்டீன் பஜ்ஜி. உள்ளத்தில் நெருடல்.

மனைவியை வேலைக்கு அனுப்பித் தந்தைக்குக் கடன் அடைக்க உதவும் மாப்பிள்ளை அங்கே.

பணம் போதாமல் பெண்ணை வேலைக்கு அனுப்பிவிடாதே. பிடி ரூபாய் என்று சொல்லும் என் மாமனார்….

செந்தில் தீர்மானம் செய்து கொண்டான். மாமனாருக்குக் கடிதம் எழுதிப் பணத்தை நிறுத்தச் சொல்லி… மீனாவைச் சமாதானப் படுத்தலாம்…. அவன் முகத்தில் தெளிவு பிறந்தது.

ஆனந்தரங்கம், செந்தில் நகர்ந்தவுடன், தம் சட்டைப் பையைப் பார்த்தார்.

உள்ளே மகள் கொடுத்துவிட்டுப் போன கவர் இருந்தது. எடுத்தார்: பிரித்தார், உள்ளே கடிதம்.

“அப்பா, நேரில் பேசக்கூட வெட்கமா யிருக்கிறது. என் கணவர் குதிரைப் பந்தயத்தில் குதிரையின் கால்களில் என் வளையல்களையும், சங்கிலியையும் மாட்டிவிட்டார். வீட்டில் ரொம்பக் கஷ்டம். இந்த அழகில் தான் முழுகாமல் இருக்கிறேன், ஏதாவது உதவி…அரிசியோ , பணமோ…”

ஆனந்தரங்கம் மனத்துக்குள் அழுதார். செந்திலிடம் ஏன் பொய் சொன்னோம் என்றிருந்தது அவருக்கு.

அந்தப் பொய் செய்த மாற்றம் அவருக்குத் தெரிய நியாயமில்லை தான்!

– 30-03-1980

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *