நான் அவனிடம் காதல் வயப் பட்டபோது அவன் என்னோட நாட்டைச் சேர்ந்தவனா, என்னோட ஜாதியா, மதமா என்கிற அவனைப் பற்றிய உண்மைகள் எல்லாமே எனக்கு நன்கு தெரியும்.
தெரிந்துமே அவைகளைப் பற்றிய கவலைகள் ஏதுமின்றி அவனுக்காக மட்டுமே அவனுடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் மயங்கிக் கிடந்தேன். அப்போதைய நிலையில் எனக்கு அவனுடைய வஜ்ரம் போன்ற உடம்பும், அதன் மூலமாக அவன் செய்யும் விதவிதமான வித்தைகளும்தான் எனக்கு ஆசையாக இருந்தது. தினமும் அந்த வித்தைகள் எனக்குத் தேவையாக இருந்தது.
பல காரணங்களால் லிவ்-இன் உறவு முறிந்த ஒன்றரை மாதத்திற்குப் பிறகு அவனோட குழந்தையை நான் என் வயிற்றில் சுமக்கத் துவங்கினேன். அமாம் நான் கர்ப்பமாக இருந்தேன்.
என்னோட தோழிகள் நான் பைத்தியமாயிட்டேன்னு சொன்னாங்க. திருமணமாகாத இருபத்தியிரண்டு வயதுப் பெண்ணான நான் எனது வயத்துல வளர்ற குழந்தை எனக்கு வேணும்னு நினைச்சேன்.
நான் எனது அறிவை இழந்துட்டு வர்ற மாதிரி உணர்ந்தேன். ஏதோ தப்பு நடக்கப் போவதாக எனது உள்மனசு சொல்லியது. ஆனா, உண்மையிலேயே எனக்கு இப்ப நடந்ததை விடவா மோசமான ஒன்று இனி நடக்க முடியும்?
நான் ராபர்ட்டை சந்தித்தபோது என்னுடைய வயது இருபது. இந்தியாவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு சிறிய டவுனில் இருந்த கால் சென்டர் ஒன்றில் வேலைக்கு சேருவதற்காக அதனருகிலுள்ள ஒரு பெரிய நகரத்துல அப்பத்தான் நான் போய்க் குடியேறினேன்.
அங்குதான் ராபர்ட்டைச் சந்தித்தேன். ராபர்ட் ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவன். ஆப்பிரிக்கர்களுக்கே உரித்தான உயரமான கருப்பு நிறம்; களையான தோற்றம்; கவர்ச்சியான புன்சிரிப்பு… அவன் என்னை மிகவும் கவர்ந்து விட்டான்.
நாங்கள் உடனே நண்பர்களானோம். ஒருத்தர் மீது ஒருத்தர் உருகினோம். அப்புறம் காதலிக்கத் தொடங்கினோம். விரைவில் ஒன்றாகச் சேர்ந்து வாழவும் ஆரம்பித்தோம். நாங்கள் ஒருவரையொருவர் ரொம்ப நேசித்தோம்.
ஆனா திருமணம் செய்துக்கலாம்னு நினைக்கக்கூட எங்களுக்குத் தோணவில்லை. நாங்கள் எங்களது கனவுலகத்தில் எங்கள் எதிர்காலம் குறித்து சிந்தித்து திட்டமிடுவதுகூட நிஜ வாழ்க்கைக்குப் பொருந்தாதது போலவே தோன்றியது எங்களின் உறவைக் குலைத்த சந்தேகம் என்கிற கொடிய நோய்.
அவனுக்கு நிறைய நண்பர்கள். எங்களை அடிக்கடி வந்து சந்திப்பார்கள். அதனால் நானும் அவர்களுடன் நட்பாக இருந்தேன். சில காரணங்களால் ராபர்ட் என் மேல் சந்தேகப்பட ஆரம்பித்தான். அவனது நண்பர்களில் யாரோ ஒருத்தரோட நான் பிஸிகல் உறவு வச்சிருக்கிறதா சந்தேகப் பட்டான். இதனால் எங்களுக்குள் அடிக்கடி சண்டைகள், சச்சரவுகள் மூண்டன. அசிங்கமான வார்த்தைகள் வெடித்தன.
இறுதியாக நாங்கள் பிரிந்துவிட முடிவெடுத்தோம்.
அது எனக்கு கஷ்டமான காலம். நான் பலமணி நேரங்கள் தொடர்ந்து அழுத காலம். அது எனது வேலையையும் பாதித்தது. இதனால் என்னிடம் இருந்த வேலையும் போனது.
அவனுடன் வாழ்ந்த அந்தச் சின்ன வீட்டை விட்டும், அதன் தொடர்பான நினைவுகளை விட்டும் நான் வெளியேற விரும்பினேன். அதனால் எனது சொந்தக் கிராமத்துக்கே திரும்பிப் போயிடலாம்னு முடிவெடுத்தேன். நல்ல முடிவு.
ஆனால் என் மாதவிடாய் தள்ளிப்போனதும் எனது எல்லாத் திட்டங்களும் தவிடு பொடியாகின. அருகில் உள்ள மெடிகல் ஷாப் ஒன்றில் கர்ப்பப் பரிசோதனைப் பெட்டியை வாங்கி வந்து டெஸ்ட் பண்ணியதில் நான் பயந்தது நிஜமாகிவிட்டது. நான் கருவுற்றிருப்பது உறுதியானது.
ராபர்ட் மூலமாக நான் கருவுறுவது இது இரண்டாவது முறை. முதல் முறை அவன் கட்டாயப் படுத்தியதால் நான் கருவைக் கலைத்தேன். ஆனால் இந்த முறை என்னால் அது நிச்சயம் முடியாது.
நான் ராபர்ட்டைத் தொடர்புகொண்டு என்னை வந்து சந்திக்கும்படி சொன்னேன். வந்தான். நேருக்கு நேர் அமர்ந்துகொண்டு நான் கருவுற்றிருப்பதை அவனிடம் சொன்னேன். ஏன் நான் கவனமாக இல்லைன்னு என்னிடம் சண்டைக்கு வந்தான். கருவைக் கலைக்க நூற்றுக்கணக்கான நியாயங்களை என்னிடம் எடுத்துச் சொன்னான். இது என்னுடைய குழந்தைன்னு நான் எப்படி நம்புறதுன்னு கேட்டான். ஆனா நான் உறுதியா இருந்தேன்.
என்னுடைய முதல் குழந்தையை கருவிலேயே கலைத்தபோது, ஒரு கொலை செய்ததைப் போல் இருந்தது. எனது இரண்டாவது குழந்தையையும் கொல்ற அளவுக்கு எனக்கு துணிச்சல் இல்லை.
என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை. எனக்குத் திருமணமாகவில்லை. வேலையில் இல்லை. எல்லாத்துக்கும் மேலாக குழந்தையின் தந்தையும் அதைத் தன்னுடையதாக ஏற்கத் தயாரில்லை.
இப்படி இடி மேல் இடி விழுந்தாக்கூட என் மனசுல ஒரு நம்பிக்கை இருந்திச்சு. கடவுள் எனக்குப் புது வாழ்க்கை வாழ ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கார்ன்னு தோணுச்சு.
இப்போதுவரை என்னைக் கவனிக்க, என்மீது அக்கறை காட்ட யாருமில்லை. என் குழந்தையை என்னால் நன்றாக வளர்க்க முடியமான்னு எல்லாரும் சந்தேகத்தோடு கேட்டாங்க.
நான் முன்னேறிச் செல்ல வேண்டிய பாதை அவ்வளவு சுலபமானது இல்லைங்கறது எனக்குத் தெரியும். ஆனா இப்போ நான் பொறுப்பாக வாழறதுக்கு ஒரு காரணம் இருக்கு.
வயிற்றில் இருக்கும் என்னோட குழந்தைமீது எனக்கு இருக்கிற அதீத அன்பு, அதை பத்திரமா இந்த உலகத்துக்குக் கொண்டு வரணும்ங்கற உந்துதலை எனக்குள் ஏற்படுத்திடுச்சு.
எனக்கு ரொம்ப ரொம்ப பயமா இருந்திச்சு. ரொம்ப யோசித்து கடைசியா தைரியத்தை வர வழைச்சிகிட்டு ஊருக்குப் போய் எல்லா உண்மைகளையும் என் குடும்பத்தார்களிடம் போட்டு உடைச்சிட்டேன்.
அவனுடன் எனக்கிருந்த உறவு குறித்து அரசல் புரசலாக அவங்களுக்குத் தெரியும். ஆனா நான் கருவுற்று இருக்கிறேன்கிற செய்தியைக்கேட்டு கொதிச்சுப் போயிட்டாங்க.
திருமணமாகாத தாய் என்ற எனது பட்டத்தை ஏத்துக்கறது கூட அவர்களுக்குப் பெரிய கவலையா தெரியலை. ஆனா என்னோட ஜாதியையோ மதத்தையோ சேராத ஒரு கருப்பு நிறக் குழந்தைக்கு நான் தாயாகப் போகிறேன் என்பதுதான் அவர்களுக்கு மிகப்பெரிய கவலையா, அவமானமா இருந்திச்சு.
எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்னு நான் அவங்களை சமாதானம் செஞ்சேன். ஆனா இதப்பத்தி பேசறதை அவங்க நிறுத்தலை. இந்தக் கஷ்டமான நேரத்துல என்னுடைய தோழி ஒருத்திதான் தேவதை மாதிரி எனக்குப் பக்க பலமா இருந்தாள். மருத்தவமனைக்கு செக்கப் போக அவள்தான் எனக்கு அடிக்கடி ஸ்கூட்டியை தந்து உதவினாள். தவிர, ஒரு பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் விற்பனையாளராகவும் என்னைச் சேர்த்து விட்டாள்.
இதற்கிடையில் ராபர்ட் மீண்டும் வந்தான். இழந்த அன்பை திரும்பப்பெற முயற்சி பண்ணினான். ஆனால் நான் எனது முடிவில் தெளிவாக இருந்தேன்.
நான் பிரசவித்த நாளில் என் தோழி என்னை அதே ஸ்கூட்டியில் மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் போனா. சிசேரியன் மூலம் எனக்குக் குழந்தை பிறந்தது. மயக்கம் தெளிந்து நான் கண் விழிச்சுப் பார்த்தப்போ எனது மகன் என் தோழியின் மடியில் தூங்கிக் கொண்டிருந்தான்.
நான் ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்டேன். நாளடைவில் எல்லாம் சரியாகப் போய்விடும் என்கிற நம்பிக்கை எனக்குள் முளைவிட்டது. ராபர்ட் அன்று மாலை மருத்துவமனைக்கு வந்தான். குழந்தைக்கு முத்தம் கொடுத்துக் கொஞ்சினான்.
அவன் மகிழ்ச்சியடைந்ததைப் பார்த்து நான் ரொம்ப ஆச்சரியப்பட்டேன். ஆனா அவனோட குடும்பத்தார்கிட்டே சொல்ற அளவுக்கு அவனுக்குத் தைரியம் இல்லை. மறுபடியும் நாம சேர்ந்து வாழலாம் என்கிற எண்ணத்தை என்னிடம் வெளிப்படையா சொன்னான்.
நான் உறுதியா மறுத்துட்டேன். ராபர்ட்டை என்னால இதுக்கு மேலேயும் நம்ப முடியாது. எனக்குத் தெரியும், அவனுக்கு என்னுடைய நெகு நெகு உடம்பும் அதன் நெளிவு சுழிவுகளும்தான் வேண்டும். நானும் அதற்கு ஒரு காலத்தில் உடந்தையாக இருந்தவள்தானே!
சில நாட்களுக்குப் பிறகு என்னுடைய அம்மாவும் மாமாவும் என்னோட வந்து எனக்குப் பாதுகாப்பா வாழ ஆரம்பிச்சாங்க. இதற்கு மேலும் நான் தனியாக வாழப் போவதில்லை. அதற்கு அடுத்த ஆண்டு ராபர்ட் அவனோட சொந்த நாட்டுக்குப் கிளம்பிப் போய்விட்டான். அதன் பிறகு திரும்பவேயில்லை.
எனக்கு இப்போ இருபத்தியெட்டு வயசு. என் மகனுக்கு ஆறு வயசு. நான் ஒரு கஷ்டமான வாழ்க்கையை அனுபவிச்சுட்டேன். ஆனாலும்கூட எனது மகனை வளர்க்கும்போது, எனக்கு யானைபலமும், தைரியமும் பலமடங்கு அதிகரிப்பதை என்னால் உணர முடிகிறது.
எனக்கு திருமணமாகவில்லை என்பதையும், எனது மகன் லிவ்-இன் உறவால் பிறந்தவன் என்பதையும் எல்லார்கிட்டயும் சொல்றதுல எனக்கு தயக்கமே இல்லை. யாராவது அவனுடைய அப்பாவைப் பற்றிக் கேட்டால் அவனுடைய பெயருக்குப் பின்னால் ராபர்ட்டின் பெயரைச் சேர்ப்பதிலும் எனக்கு ஆட்சேபனை இல்லை.
என் தாயார் அவனை நன்கு வளர்க்கிறாள். நான் பகலில் எனது வேலையில் கவனம் செலுத்துகிறேன். இப்போது மாலை வேளைகளில் பார்ட்டிகளிலும், திருமணங்களிலும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளிலும் என் இனிய குரல் வளத்தால் பாடிக் கொண்டிருக்கிறேன். நன்றாகச் சம்பாதிக்கிறேன்.
என் மகனோட வருங்காலத்திற்காக நான் இப்போதிலிருந்தே சேமிக்கிறேன். அவன் திறமையான உற்சாகமான சிறுவன்.
ராபர்ட்டுடனான என்னுடைய உறவு முற்றிலுமாக அறுந்து போய்விட்டது. ஆனா எப்பவுமே அது எனக்குச் சிறப்பானதுதான். எப்படி வாழக்கூடாது என்பதை எனக்குக் கற்றுக் கொடுத்த உறவல்லவா அது?
இது எல்லாத்தையும் கடந்து மீண்டும் ஒரு புது வாழ்வைத் தொடங்க முயற்சிக்கிறேன். திரும்பவும் யாரையாவது காதலிக்க, திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன். ஆனா நான் எதுலயும் அவசரம் காட்டலை. அப்படி நடக்கனும்னு எனக்கு விதிப்பலன் இருந்தா அதுவும் நிச்சயமா நடக்கும்.
ஏனென்றால் என்னுடைய வாழ்க்கையில் இனி நான் இழப்பதற்கு ஏதுமில்லை! எல்லா விதமான கேவலங்களையும் பார்த்து விட்டேன்.
நான் இப்போது ஒரு அழகிய வித்தகி.