கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2017
பார்வையிட்டோர்: 8,074 
 

என்னதான் உடம்பைக் கட்டுக்கோப்பா வச்சாலும் வருசத்துல ஒருநாள் தீபாவளி வர்ற மாதிரி சீக்கு வந்துட்டுப்போகும் . ஆன அன்றைக்கு தலவலி , காய்ச்சல்,மூச்சுத்தினறலெனஅனைத்தும் ஒன்னு சேர தினறிப்போனேன். யாராவது என் தலையைப் பிடித்து விட்டால் நன்றாகயிருக்குமெனத் தோன்றியது.

வீடு சிறிய வீடென்றாலும் வீட்டைச் சுற்றிலும் தென்னை மரங்கள் சூழ்ந்திருக்கும்…. அன்று அவைகளின் ஓசையை யாரோ என் காதிற்குள் சிறிது மிளகாயப் பொடிகலந்து புனலின் வழியாக ஊற்ற கத்தினேன், கதறினேன், உடல் தூக்கி வாரிப்போட்டது.

தூக்கத்துக்கும் எனக்குமான போராட்டத்தில் நான் பலமுறை தோற்றிருந்தேன். பஞ்சாலைச் சங்கொலிப்பதற்குள்ளாகத் தூங்கிவிடுவதென்ற வைராக்கியமும் மீறிப்போய் மூன்றுமணிக்கு ஊதிமுடித்தது பஞ்சாலைச் சங்கொலி.

தூக்கம் வரவில்லை , துன்புறுத்தல் மட்டுமே தொடர்ந்து கொண்டிருந்து. அரைமயக்க நிலையில் நான் மௌனித்தருக்க….. திடீரென எதோஒரு தேவதை என் குரல் கேட்டு அருகில் வந்தது, வளையோசையை மட்டுமே கேட்கமுடிந்தது. அது கையை எடுத்து நெற்றியில் வைத்து ஏதேதோ மந்திர பரிபாலனங்களை உச்சரிக்க நான் அப்படியே முழுதாய் மயக்கமுறலானேன்.

இத்தனை மணிநேரப் போராட்டத்தை ஒரு நொடியில் வென்றெடுத்துவிட்டாளே இந்தத் தேவதை ……! என எண்ணிக்கொண்டே தூங்கிப்போனேன்.
எவ்வளவு நேரமாகத் தூங்கினேனெனத் தெரியவில்லை. தூங்கிக்கொண்டிருக்கும் போதே திடீரென பெரிய சத்தம் … அலறியடித்து எழுந்து பார்த்தால் மங்களம் மலங்க மலங்க விழித்துக்கொண்டு பரிதாபமாக நின்றுகொண்டிருந்தாள்.
“பாவா……..தெரியாம கை பட்டுடுச்சி பாவா……….” எனச் சொல்லிமுடிக்கும் போதுகூட விழுந்த வெங்கலச் செம்பு கதறிக் கொண்டிருந்தது…… கோபம் தலைக்கேறிக் கொண்டிருந்தது.

“ஏன்டி உன்னால உதவமுடிலனாலும் பரவாயில்ல உபத்திரம் பன்னாம இருக்க முடியாதா ?”
“பட்டிக்காட்டு நாயே வேல நீ செஞ்சி பார்த்தாத்தான தெரியும்….. அதோட வலியென்னனு….?” “நீயொரு அடுப்பு எலி அடுப்பக் கட்டிகிட்டுச் சாகவேன்டியதான ….?” “இங்க என்ன இதுக்கு வர்ற …….”
பளார் பளாரென விழுந்த அடியில் மங்களம் தடுமாறிக் கீழே விழுந்தாள்.ஆத்திரம் தீராமல் ஒரு உதை உதைத்துவிட்டுப் படுத்தேன்.

அன்று வேறு யாராக இருந்ததாலும் காலைக் கஞ்சியை அவங்க அப்பன் வீட்டுலதான் சாப்பிட்டுருப்பாங்க…..ஆனா என் மங்களம் வாரத்துக்கொருதரம் வாங்கித்தொலச்சாலும் வாய்பேச மாட்டா… !!!

தலையில் கட்டும்……. கையில் பிளாஸ்திரியுமாய் மங்களம் நிற்க, மகள் நியாயம் கேட்டு விளாசிட்டா விளாசி.

மயக்க நிலையில் பொலம்பறதப் பார்த்து அந்நேரத்துக்கு சாமியக்கும்பிட்டு திருநீறு பூசி, தைலந்தேச்சி விட்ருக்கா…. கூடவே ஒக்காந்திருக்க குட்டித்தூக்கம் போடும்போது கட்டிலிளிருந்த செம்பு…. மறந்துபோச்சு பாவம்….
அதுக்காக திட்டுவீங்களா…..இனிமே கைவச்சீங்க நடக்கறதே வேற”
பத்ரகாளியாய் அவள் நிற்க என் மனம் டி.என்.ஏயின் மகத்துவத்தை எண்ணிச் சிரித்தது.

பதினைந்து வருசமாச்சி….. ஆனா அவகிட்ட ஒரு சாரி கேட்கனும்னுகூட தோனல……
அதொன்னும் புதுசில்லையே எத்தன முறை திட்டிருப்பேன், அடிச்சிருப்பேன்…….அதனால அவளும் எதிர்பாக்கல. அவ மண்டை எத்தனைமுறை உடைந்திருக்கும்…….?!” ஒருவேளை அவளுக்கு வைத்தியம் பார்த்த கீழத்தெரு அங்கம்மா பாட்டி ஞாபகம் வைத்திருக்கலாம். ஞாபகங்கள் ஞாபகம் வைத்துக்கொள்ள இயலாத ஞாபகங்கள். அவளைப் பென்னென்று மறந்த தருனங்கள் இன்று ஆனென்றும் பாராமல் பிரிந்துபோகச் சொன்னது போலும்.

மஙகளம் படுத்திருந்த கட்டிலின் மேலிருந்த மாடாக்குழி விளக்கு செந்தீ குறைந்து கருந்தீப்பட்டு புகையைக்கிளப்பிவிட பழைய ஞாபகங்களின் நூலிலைகள் விடுபடத்தொடங்கின .

“கவர்மென்ட் வேலக்காரன், கலத்தூரு நாட்டாமன்னா……? கடவுள் என்ன கல்லாவா மாத்திருவான்……!!!?”
நிகழ்காலம் நினைவுக்குவர, அடிவயிற்றிலிருந்து ஏதோ கிளம்பி தொப்புளைக்கடந்து தொண்டையில் நிலைக்கத் தொடங்கியது. “மங்களம் விட்டுப்புட்டுப் போயிட்டல்ல…???”

“போடி போ……..”

தொண்டை கனத்தது ……மங்கலம்……தண்ண்ணீ…. எனக்குரலிடும் முன்பே…… பெரிய மகன் பாஸ்கர் வந்து நின்றான். தனியரையில் யாருடனோ பேசிக்கொண்டிருக்கிறானே..?!!!?? என என்னியவன் பாவம் அப்பா துக்கத்தில் புலம்புகிறான் என எண்ணியிருக்கக் கூடும்.

“வாங்கப்பா……”

அதற்குமேல் பேசமுடியாமல் அழுதுகொண்டே நின்றான்.

எல்லோர் முகத்திலும் அழுகை கரைபுரண்டோடும் அந்த உலகத்தை நம்ப முடியாமல்ப் பார்த்தேன்.

“மங்கலம் செத்துட்டாள்ல…?!!!?”

எனக்கு அழத்தோன்றவில்லை….. பட்டுச்சேலையுடுத்தி என்முன்னால் சாத்திவைத்திருக்கும் அவளை ஏன்டி செத்துப்போன….ஏன்டி செத்துப்போனனு….. பளார் பளாரென அறையவேண்டும் போலிருந்தது. நிற்க முடியவில்லை அருகிலிருந்த நாற்காலியை நகர்த்தி உட்கார்ந்தேன். நான் எப்படி இடுகாடு வந்தேன் இத்தனை நேரம் என்ன நடந்தது என எதையும் கேட்காதீர்கள் ஏனென்றால் அது எனக்குச் சுத்தமாக நினைவில்லை.
மண்ணுத்தள்ளிய எல்லோரும் அவளின் உடம்பில் மண்ணைத்தள்ள நான்மட்டும் அவளின் முகத்தில் வீசியெரிந்தேனாம்…….!!!!

“சொல்லாமப் போயிட்டாகன்னு வருத்தம்போல அய்யாவுக்கு…….” “பின்ன சூரியன் உத்தரவில்லாம சூரியகாந்தி இடம் மாறும்…… அய்யா உத்தரவில்லாம ஆத்தா செருப்புகூட நகராதய்யா……!!! கூட்டத்தில் யாரோ யாரிடமோ எதுகை மோனையுடன்கூற மற்றவர் எலலோரும் ஆமோதித்தார்கள் ஒருமனதாய்.

ஒரு நொடிப்பொழுதில் நிகழும் பலூன் வெடிப்பையும் மங்களத்தின் மரணத்தையும் எளிமையாக ஒப்பிட முடிந்தது. நடைமுறையிலில்லாத நடத்தையைக் கொண்டிருக்கும் என்னை எதனுடனும் ஒப்பிட முடியாமல் தினறியது ஊர்க்ககூட்டம் .

கிராமங்கறது மான அவமானங்களாலும் சடங்கு சம்பிரதாயங்களாலும் நிரம்பப்பெற்றது. இறந்தவங்க வீட்ல காசு இருக்கும் இல்லாமயும் இருக்கும் அதனால கட்டமொய்னு ஊர் வசூல் பன்னி அவங்க கைல கொடுக்கும், இதுல இருக்கவன் இல்லாதவன்ற கணக்கெல்லாம் கிடையாது .

ஊரே ஒன்னா சேந்தா பிரச்சனையும் ஒன்னா சேரும்ல அதுலயும்
அழகர் மகனுக்கு தண்ணியடிச்சிட்டா நியாயம் பேசனும்னு நாக்கு அரிக்கும்….. ஆரம்பிச்சுட்டான். மங்களம் அமங்களியா சாகல ஆனா நான் அமங்களம் ஆக்கப்படவுள்ளேன்னு எனக்கு தெரியாமப் போச்சு….

” ஏப்பா இத்தன நாளா நம்ம நாரயனன்தான் எல்லாக்காரியங்களையும் நாட்டாமங்கிற மொறையில செஞ்சிட்டு வந்தாரு இப்ப அவுக வீட்டம்மா தவறிட்டதால அவுக வீட்டாலுக யாராவது பொறுப்பெடுத்து நடத்தனும்னு கேட்டுக்குறேன்”

“அட ஆமாப்பா மனைவிய இழந்தவங்க மணவர ஏறக்கூடாதப்பா…” எனக்கூறி அவனுடைய சேக்காளியும் ஆரம்பித்தான்.

“ஊரு வழக்கம்தான் ஆனா இந்த நேரத்துல எப்புடிப்பா இதப்பத்திப் பேசுறது….?” ” வேனாம்பா அது நல்லாயில்ல…….” அண்ணன் மகன் வாய்போத்திப் பேசமுடியாமல் பேசிமுடித்தான்.

“இந்த நேரத்தல சொல்றது தப்புன்னாலும் அவரோட புள்ளக இருக்கம் போதே யாராவது ஏத்துக்கட்டும்….. இல்ல நம்ப ஊர்ல கலந்துபேசி யாராவது ஒருத்தரத் தேர்ந்தெடுக்கலாம்.”
“எட்டூரு சில்லாவுல இல்லாத வழக்கமா நாங்க சொல்றது…??!!” உன் சித்தப்பன சீன்டுறதில்ல எங்க எண்ணம் பத்துப்பேரு ஒக்காந்தாலும் தலமயில ஒருத்தன் ஒக்காரனுமில்ல இதுக்காக ஒரு…..

“நிறுத்துங்கப்பா….” அந்த நரைக்கிளம்பேசி முடிப்பதற்குள் எனக்குள்ளிருந்த அமைதி தறிகெட்டு வெளியேறியது.
“ஒங்க பாட்டுக்கு வாய்க்கு வந்ததப் பேசவேனாம் எனக்குந் தெரியும் உங்க நியாயமும் தர்மமும்… பொன்டாட்டி செத்துப்போனா…..நாராயணன் பொட்டைக் கோழியாயிருவன்னு பாத்தியா….!!!!?? இனிமே பஞ்சாயத்து கிஞ்சாயத்துன்னு எநதப்பயலும் என் படியேறாதிங்க……எவனவேனாலும் வச்சிக் கட்ட மொய்ய வசூல் பன்னு எனக்குத்தேவயில்ல….” தோளில் கிடந்த துண்டை விசிரியெறிந்துவிட்டு நடந்தேன்.

“அவரு அப்படித்தான்…. மொறப்பான ஆளப்பா யாருக்கு மடங்கிப்போனாரு..?” விடுங்கப்பா… கட்டமொய்யெழுதுற வேளையை ஆரம்மிங்கப்பான்னு வேளையப்பாக்க ஆரம்பிச்சது ஊர்க்கூட்டம்.
நியாயமும் தர்மமும் பேசிப்பழக்கப்பட்ட தனக்கு எப்படி அப்படி பேசமுடிந்ததென்பதை இன்றளவும் ஜீரணிக்க முடியவில்லை.

பெரிய நாட்டாமைப் பதவின்னு தூக்கிப்போட்டுட்டு போனாலும் சிங்கத்தோட பிடறி மயித்த அத்துவிட்டது போல உணர்ந்தேன். அதனாலதான் அப்படிப் பேசினேனோ…?!!?

நாட்டாம பதவின்னா என்ன….. நாட்ட ஆளுற ஆண்மைடின்னு மங்கலத்துக்கு விளக்கவுரை கொடுத்த வாய்வார்த்தைகள் இனி எதிரொளிக்க இடமில்லாமல் வரவேற்பறையில் எனக்காகத் காத்திருந்து காதிற்குள் நுழைந்தது. சுளீரென்று மீண்டும் தலை வலிக்கத்துவங்கியது..

முதல் நாள் கால்வாசிப்பேரும் இரண்டாம் நாள் பாதிப்பேரும், மூன்றாம் நாள் முக்கால்வாசிப்பேரும் , நாலாம் நாள் மகனும், ஆறாம் நாளில் மகளும் வரிசைப்படி ஊர்கிளம்ப எல்லோரும் ஒருமனதாய் “வீட்டுக்கு வாங்க…… ஒவ்வொரு வீட்லயும் ஒரு மாசம் இருங்க….. புடிக்கலியா ஒங்க மகன் வீட்லயேகூட இருங்க….. ஒங்களுக்கு இத்தன பேர் இருக்கோம்” என்ற வாரத்தைகளை கையில் தினித்துச் சென்றார்கள்.

யாரையும் நம்பிப்பொறக்கலடா இந்த சீனியப்பன் மகன்னு அன்னைக்கி அவங்க முன்னாடி சொன்ன வார்த்தைகளை இன்று அடிக்கடி சொல்லிக்கொள்கிறேன். ஆரம்பத்தில் மிகக் கர்வமாகவும் நாளாக நாளாகக் கடமையாகவும்…
மங்களம் இல்லாத நான் இனி எந்த மங்களகரமான நிகழ்வுகளையும் நடத்திவைக்க முடியாது.

பாவம்பா நம்ம நாட்டாமன்னு பேசிய ஊர்க்கூட்டம் பாவம்பா நம்ம பழைய நாட்டாமன்னு பாவப்படத் தொடங்கியது.

வீடு தன்னுடைய சந்தோச தருனங்களை கோயில் திருவிழாவுக்கு அடித்த வர்ணங்களின் மூலமும், ஓட்டின் கீழே மீதமிருந்த தோரணம் மூலமும் வெளிப்படுத்த முயன்றுகொண்டாலும் பார்ப்பவர்கள் எப்படியிருந்த வீடு இப்படி ஆயிருச்சேன்னு பாவப்பட்டுச் செல்லவே பாதை வகுத்துத் தந்தது.

அத்தனை அறையில் எங்கிருந்து பார்த்தாலும்
மங்களம் மோனோலிசா போல சிரிக்கிறாளா..? அழுகிறாளா…..? எனப் புரிந்துகொள்ள இடம்தராமல் புகைப்படம் மூலமாக என்னையே பார்த்துக் கொணடிருந்தாள்……
நீ இருக்கும்போதே நான் சாகனும் எனக்கான ஒருவாய்க் கஞ்சியை கடைசிவரை நீயிருந்து ஊத்தனும் அய்யா சரனம்னு எவன் வீட்டையும் மிதிக்கக் கூடாது” மங்களத்திடம் கடைசியாய்ப் படுக்கையில் சாய்ந்தபோது கூறியவார்த்தைகள்.

“சொந்தம், பந்தம் ,சுகம், மரியாதை என எல்லாம் போக இப்ப தனிமரமாயிட்டேன். சந்தோசமா…..?” என என்னையுமறியாமல் வார்த்தைகள் வெளியேறி புகைப்படத்தை நோக்கிப் பயனிக்கத்தொடங்கியது.

மங்களத்தின் இருப்பின்மையால் விளையும் தீமைகளை முதலில் அருதியிட்டுக்காண்பித்தவள் என் மாமன் மகள் மாதவிதான்.
தினமும் காலையில் வீட்டப் பெருக்கி வாசத்தெளிச்சி , கோலம் போட்டுக்குடுப்பா….. சமயல் செய்யலன்னா சாம்பார் தருவா……ஆனா இப்பல்லாம் அவள பாக்க முடியரதில்ல….. என்னன்னு கேட்டா ஊருப் பொம்பலைங்க தப்பா பேசுவாங்கனு சொன்னானாம் புருசக்காரன்…..!!!!

தெத்துப்பல்லும் கருத்த தேகமுமாய் பயங்கர பான்டயாத்திரிவா …. வயதுக்கு வந்ததுதான் தாமதம் புதுலாக்கிடி புது , புதுத்தாவனின்னு மின்னு மின்னுன்னு மின்ன ஆரம்பித்தாள். சூரையாடியாவது கட்டிக் கொள்ளவைக்கத் தவியாய்த் தவித்தவள்தான் இந்த மாமன் மகள். இன்னைக்கு ஏதோ ஊர் பேசுதாம்ல,.. விடுவனா நான்….!!!
புருசன் சொல்றானா….? இல்ல இவளே சொல்றாளா…..? எனக்குப் புரியவில்லை. இதை வளரவிட விரும்பவில்லை எனவே நேராக அவ புருசன் இருக்கும் போதே அவளப் பார்த்து…..
போடி இவளே சைக்கிள் கேரியர்ல ஒங்க அக்காவையும் முன்னாடி நீயும்னு ஊரையே அந்தப் பதினெட்டாம் வயசுல ரவுன்டடிச்சோமே அன்னைக்குச் செய்யத் தோனாதத இன்னைக்குச் செஞ்சிருவேனாக்கும்னு சொல்லி அவ மூஞ்சில காரித்துப்பிட்டுவந்தேன் . அதுக்கப்பறம் நானே கூட்டி நானே கழுவறதுன்னாயிப்போச்சி…..

மனுசன் மனைவியில்லன்னா என்னமாதிரி ஆக்கப்படுறான்றதுக்கு கடவுள் என்னைவச்சுத் திருவிளையாடுற மாதிரியிருந்தது. தலைவலி தலைகீழாகத் திருப்பிப் போட தலைவிதி தானாகப் புரியத்தொடங்க ஆரம்பித்தது.

படுத்தவுடன் உறங்கிப்போகும் நான் இப்போதெல்லாம் தெருக்கதவருகேயே உட்கார்ந்திருக்கிறேன். வாசற்பக்கம் வந்தாலே பல வாயிற்கதவுகள் நடுநிசி நாய்களைப் பார்த்தது போல நருக்கெனப் பூட்டிக்கொள்ளும்..

சிரிப்பதா…? அழுவதா..? இதே கதவருகே சிகரெட் புகைத்துக்கொன்டு எவ்வளவு நேரம் நின்றிருப்பேன் நான்….” திடீரென வெரிபிடித்துவிட்டதா எனக்கு…..?!!?”

இவ்வளவு இடைஞ்சல்களுக்கு இடையில்
எனக்கு ஓரளவுக்கு சிரிக்கக் கற்றுக் கொடுப்பவள் எதிர்வீட்டு நிலாக்குட்டிதான். ஐந்து வயதேயானாலும் அறிவாய்ப் பேசுவாள். அன்று வாசக்கதவருகே நின்று என்னையே பார்த்துக்கொன்டிருந்தாள்.

“நிலா என்னடா ஏன் அங்கயே நின்னுட்ட….??!!?” உள்ள வா தாத்தா உனக்கு என்ன வச்சிருக்கேன் பாரு என அவளுக்காகா வாங்கிவைத்த தேன் மிட்டாயத் தேட ஆரம்பித்தேன்.
தேன் மிட்டாய் என்பது வெரும் தேன் மிட்டாய்கள் மட்டுமல்ல என்னுடன் அவள் நீண்ட நேரம் விளையாட வேன்டுமென்பதற்கான வேண்டுதல் சீட்டு. ஐந்தாம் வகுப்புதான் படிக்கிறான்னாலும் பேச்சு அம்பதாவது படிக்கிறவ போல இருக்கும். சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு வாசற்கதவருகேயே நின்றாள் பின்பு சந்தேகமான குரலில் அந்தக்கேள்வியைக் கேட்டாள் .

“நீ நல்ல தாத்தாவா இல்ல கெட்ட தாத்தாவா ? ”

“ஏன்…..??!!!”

“நீ சொல்லு தாத்தா அதுக்கப்பறம் உள்ள வரேன்…”

“உனக்கெப்புடித் தோனுது ….?”

“நல்லவர்னுதான் நெனக்கிறேன்”

“பின்ன ஏன் இப்டிக் கேக்குறவ…?”

“இல்ல அம்மா ஓன் வீட்டுக்குப் போவக்கூடாதுன்னு சொல்லிருச்சு…… அவங்க போவக்கூடாதுன்னு சொன்னத உன்கிட்ட சொல்லக்கூடாதாம்…..” எனச்சொல்லி விரலைவைத்து உதடுகளைக் கூப்பி உஷ்ஷ்ஷென்றாள்…..

“அம்மா இப்ப வந்துரும் அவங்க வேலைக்குப் போனப்பறம் வரேன்… ” அவள் என்னிடம் பதிலெதிர்பார்க்கவில்லை.

என்னைக் கோபத்தோடு பார்க்காதவள் அவள் மட்டும்தான் ஆனால் இன்றோ உச்சபட்ச கோபத்தை எனக்குள் ஏற்படுத்திச் சென்றிருந்தாள்.

” ஏன்……?” “ஏன் ……? ” என்று ஆயிரம் முறை கேட்டுக் கொண்டேன்.
ஒரு வேலை இப்படியிக்குமோ…..? இல்ல அப்படியிருக்கமோ…..? ஒன்றும் புடிபடவில்லை.
ஆராய்ச்சியின் முடிவுகள் அன்றைய தினப்பத்திரிக்கையில் கிடைத்தது. அடப்பாவிகளா எப்புடியெல்லாம் யோசிக்கிறாய்ங்க….!
“மனைவி இறந்து போனா புருசன் வேற கல்யாணம் முடிச்சே தீரனுமா..?”

“ஏன் கைத்தடியூணாத கிழடங்க இருக்கவே கூடதா….?” அதிர்ச்சியில்லை ஆதங்கம்தான் தலைக்கேறியது.

“பேத்தி ஞாபகத்துக்காக எல்லாரையும் பேத்தியா நெனச்சது எவ்வளவு பெரிய தப்பு?” என என்னையே நொந்துகொண்டேன்.

விடிந்ததும் மூத்த மகனுக்குப் போன் போட்டேன்… நாளை வருவதாயும் சொல்லிவைத்தேன் . கண்டிப்பாக மகன்வந்து கூட்டிச் செல்வதாகக் கூறியிருப்பதால் மதியமே அவன் வரலாம் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன். மகனுக்குப் பதிலாக மகள் போனில் பேசினாள்.

அப்பா…. அப்பாவென அழுது தீர்த்துவிட்டடாள். ஒன்னுமில்லம்மா நான் நல்லாயிருக்கேன் நீ அழுகாத…என அவளைத் தேற்றுவதற்குள் போதுமென்றாகிவிட்டது.

“அப்பா… நாளைக்கு அண்ணன் வீட்டுக்குப் போறீங்களா…?”

“ஆமடா இங்க இருக்கவே புடிக்கல…அண்ணன் பேசுனானா….?”

” ஆமப்பா…..”

“அண்ணன் வீட்டுக்கு வேனாம்…. என் வீட்டுக்கு வாங்கப்பா அவரும் உங்கள இங்க வரச் சொன்னார்.”

“இல்லம்மா நான் பெரியவன் வீட்டுக்கே போறேன்…..” “சம்பந்தி வீட்ல அத்தன நாள் இருக்கறது கௌரவமா இருக்காது.”

” உங்களப்பத்தித் தெரியும்பா ஆனா அண்ணன் வீட்ல அவங்க மாமியாரும் இருக்காங்கலாம்….. சின்னண்ணன் வீட்ல அவனோட கொழுந்தியா ஏதோ படிக்கனும்னு தங்கியிருக்காளாம் ….. நீங்க இப்பப் போனா அவங்களுக்கும் கொஞ்சம் அசௌகரியமா இருக்கும்ல
அடுத்த மாசம் அவங்க போயிருவாங்க அதுக்கப்பறம் அங்க போங்கப்பா…..”

நான் நாப்பது வீட்டுக்குச் சாப்பாடு போடுவேனென கர்வமாகப் பேசியிருந்தாலும் தோற்று ஊரைவிட்டோடும் என்னைப் பிள்ளைகள் புரிந்துகொள்ளாதது ஆச்சர்யமாக இருந்தது.

எதிர்வீட்டு மல்லிகாவை, கொழுந்தியாவை, ஏளனமாய்ப் பார்த்த ஊர்க்காரர்களை ஏன் தள்ளி வைக்க நினைத்தேனோ அதே காரணம் என் பிள்ளைகளிடமிருந்து என்னைத்துரத்துகிறதோ…..?
கூலாங்கல்லெடுத்து கண்ணருகில் வச்சுப்பாத்தா பெரிய பாறைபோலத் தோன்றும் ஆனாலும் கூலாங்கல்லும் ஒருவகைச் சிறிய பாறைதானே.

“ஏம்மா…… எவ்வளவோ கஷ்டப்பட்டு படிக்கவெச்ச படிப்புல மாளிக மாதிரி வீடுகட்டிகிட்டு எனக்கொரு சின்ன எடங்கூட ஒதுக்க முடியலயா……?”.

“மங்களத்தை விட்டுட்டு என்னக் கடவுள் கூப்பிட்டுருக்கலாம் அவளாவது உங்க கூட சந்தோசமா இருந்தருப்பாள்ல….? சரி…. பரவாயில்ல உன்னோட அண்ணன்ககிட்ட சொல்லு அவய்ங்களும் ஆம்பளகதான்னு …… அப்ப அசௌகரியம் இருக்காதோ….? போனைத் துண்டிக்காமல் உடைத்தேயெரிந்துவிட்டேன்.

“மங்கள்ளளம்ம்ம்…….
எப்படியாவது கூப்பிட்டுக்க மங்களம் ……..”

உரக்கக் கத்தினேன். அறிந்தவரையில் அழாத நான் பிறந்த குழந்தைபோல் கதறியழுதேன்.
எவ்வளவு நேரமாக அழது புழம்பினேன்…… ?தெரியவில்லை….. என் கண்ணீரைக் கரையிட்டிருந்தால் ,மங்களத்தின் மாட்டிவைத்திருந்த புகைப்படத்தின் மார்புவரை சென்றிருக்கும்…!!
“சொந்த ஊருலயே கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதையில ஊர்வலம் வந்துட்டே உயிர்வாழுனும்னு சொன்னா எப்படியிருக்கும்….?” அப்படித்தானிருந்தது எனக்கும்.

கினற்றிலோ , ஆற்றிலோ விழுந்து தொலைத்தால் மங்களத்தையும் மகனையும் ஊர் கூடித்தூத்துமே என நானே விழுந்தேன் இந்த முதியோர் காப்பகத்தில்…..
இங்கே பரிமாறிக்கொள்ள எத்தனையோ விசயங்களிருந்தன . ஒருவரைப்பார்த்து ஒருவரைத் தேற்றிக்கொள்ள முடிந்தது . முக்கியமாகச் சொல்லவேண்டுமானால் எனக்குள்ளிருக்கும் திடகாத்திரமான இளம் விதவனை இங்கே யாருமே கண்டுகொள்வதில்லை….. அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது….

காப்பகத் தோட்டத்துல ஓடியாடி வேலசெஞ்சா காப்பித்தண்ணி குடுக்கவும் , காலுங் கையும் முடியாம கட்டுலுல படுத்தா கழுவி விடறதுக்கும் பொம்பலங்கதான் இங்கே எல்லாமே . இவர்களுக்கு மட்டும் பாலினம் பற்றிய புரிதல் பார்த்துப் பார்த்து பழக்கப்பட்டிருக்கிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *