விண்வெளியில் ஒரு நாள்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 28, 2024
பார்வையிட்டோர்: 6,704 
 
 

“அடேய்… எவ்ளோ நேரம் டா அந்த டிவியைப் பாத்துக்கிட்டே இருப்பே? சீக்கிரம் அடைச்சிட்டு, போ உன் வீட்டுப்பாடத்தைச் செய்!” என அம்மாவின் குரல் சமையல் அறையிலிருந்து ஆர்யனை நோக்கி வந்தது. ஆர்யனோ அம்மா சொல்வதை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுக் கொண்டிருந்தான். இன்னமும் தொலைக்காட்சியின் ஒலி அம்மாவின் காதுகளுக்கு எட்டியதால், அம்மா ஆர்யனை நோக்கி தனது நடையைக் கட்டினார். “நான் சொல்ற பேச்சே கூட மதிக்காமே மீறி படம் பார்த்துகிட்டு இருக்கே! அப்போ, நீங்க என்ன சொல்றது நான் என்னா கேக்குறது தானே நினைச்சிக்கிட்டு இருக்கே….! ஸ்கூல்லே ஏற்கனவே நீ சொல்ற பேச்சைக் கேக்க மாற்றேனு உன் மேலே கம்ப்ளைன்ட்!” என அம்மா தனது சொற்களை ஆர்யனை நோக்கி வீசிக்கொண்டிருந்தார். அம்மாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருப்பதைக் கவனித்த ஆர்யன், இன்று பள்ளியில் நடந்தச் சம்பவம் அம்மாவுக்குத் தெரியுமா தெரியாதா? அதனால்தான், அம்மா பொடி வைத்துப் பேசுகிறாரா என தனது மனதில் பல்வேறு கேள்வி அலைகளின் மேல் ஒரு படகில் சவாரி செய்துக் கொண்டே, தொலைக்காட்சியை முடக்கச் சென்றான்.

வெளியே யாரோ வாசல் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. ஆர்யனின் கண்கள் சுவற்றில் மாட்டியிருக்கும் கடிகாரத்தை உற்று நோக்கியது. கடிகார முள் ஆறு கடந்தது. அப்பா வேலை முடிந்து, அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் நேரம் இது. வீட்டினுள் நுழைந்த அப்பா ஆர்யன் வரவேற்பு அறையில், சொகுசு நாற்காலியில் அமர்ந்திருப்பதைக் கவனிக்கிறார். ஆர்யன் அப்பாவைப் பார்த்து புன்முறுவல் செய்கிறான். அப்பாவோ, ஆர்யனை நோக்கி விரைந்து வந்தார். ஆர்யன் பேசும் முன்பே, அப்பா “முளைச்சு மூனு இலை கூட விடல… இப்போதான் உனக்கு பதிமூனு வயசு! அதுக்குள்ள காதல் கேட்குதா?”, எனக் கூறிய அப்பாவின் வார்ப்பட்டை ஆர்யனின் தோலைப் பதம் பார்க்க ஆரம்பித்தது. “அப்பா…” என ஆர்யன் அழைத்தப்போது “நோரு மோய்…!” என அப்பா தெலுங்கு மொழியில், மருதாணி விழியோடு ஆர்யனைப் பார்த்து சத்தமாகக் கூறினார். அப்பா கடும் சினத்தில் இருப்பதை ஆர்யன் நன்கு அறிந்தான். ஏனென்றால், பிறப்பால் அப்பா ஒரு தெலுங்குக் குடும்பத்தைச் சார்ந்தாலும், ஆர்யனிடமும் அம்மாவிடமும் தமிழில் தான் பேசுவார். ஆர்யனின் அக்காள் மித்ரா, அப்பாவிற்கு ஈடு கொடுக்காவிட்டாலும் ஏதோ ஓர் அளவிற்குத் தெலுங்குப் பேசுவாள். அப்பா எப்போது எல்லாம் அதிக கோவப்படுகிறாரோ, அதிக உணர்ச்சி வசப்படுகிறாரோ அப்போது அவரின் தாய்மொழியில் தான் பேசுவார். அப்பா வாயை மூடு என தெலுங்கில் கூறியதும் வீட்டிலிருந்த அனைவருமே அப்பா மிகுந்த கோபத்தில் இருக்கிறார் எனப் புரிந்து கொண்டனர்.

ஆர்யனுக்கு அடியை விட, தன்னை ஒரு வார்த்தைக்கூட என்ன என்று கேட்காமல் அடித்ததுதான் இன்னும் அவனுக்கு வலியைத் தந்தது. பொதுவாகவே எல்லாருடைய வீட்டில் அப்பாவிற்குப் பெண் பிள்ளைதான் செல்லம். ஆர்யனின் வீட்டிலோ, அவன்தான் அப்பாவிற்கு மிகுந்த செல்லம். ஆர்யன் வைத்ததுதான் வீட்டில் சட்டம் என்று கூடச் சொல்லலாம். ஆர்யனும் அப்பாவும் நண்பர்கள் போல இருப்பார்கள். அவர்களின் இடையே அவ்வளவு நெருக்கம். ஆர்யன் தனக்கு என்ன சம்பவம் நேர்ந்தாலுமே, அவன் முதலில் தன் அப்பாவிடம்தான் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுவான்.

ஆர்யனின் தோலைப் பதம் பார்த்துவிட்டு, அப்பா அறைக்குச் சென்று கதவைப் படார் என மூடினார். ஆர்யனோ, யாரிடமும் பேசாமல் தன் அறைக்குச் செல்ல முற்பட்டான். அப்பா அடித்ததில் ஆர்யனின் மேனியில் ஆங்காங்கே சிவப்பு நிற தழும்புகள் பட்டைப் பட்டையாக இருந்தது. அவனின், நிறத்திற்கு அந்த தழும்புகள் இன்னும் எடுத்துக் கொடுத்தது. பள்ளியில் அதிக நேரம் காற்ப்பந்து விளையாடியதால், ஆர்யனின் கால்கள் வழுவிழந்து இருந்தன. மிகவும் கஷ்டப்பட்டு, மாடிப்படிகளில் மெதுவாக ஏறி அறைக்குச் சென்று தனது படுக்கையில் படுத்தான். உடலில் ஏற்பட்ட காயங்களின் வலியை மறக்க கண்களை இருக்க மூடி உறங்க ஆரம்பித்தான்.

வீட்டின் கடிகாரத்திலிருந்து எட்டு முறை மணி ஒலித்தது. இரவு உணவு, தயாராக சாப்பாடு மேசையில் இருந்தது. மதியம் ஆர்யனிடம் எறிந்து விழுந்த அம்மா, மனமிறங்கி அக்காவிடம் சொல்லி, ஆர்யனை உணவு உண்ண அழைத்து வரும்படி கூறினார் . மித்ராவும் ஆர்யனின் அறையை நோக்கிச் சென்றாள். அறைக் கதவு பூட்டப்படவில்லை. மித்ரா, அறையினுள் சென்று ஆர்யனை எழுப்பச் சென்றாள். ஆர்யனின் அறைக்கு யார்

சென்றாலும் அவர்களின் கண்கள் உற்றுநோக்குவது சுவரைத்தான். ஆர்யன் நன்கு வரையும் ஆற்றல் கொண்டவன். அவனது அரை சுவரில் அவனுக்குப் பிடித்த ஏலியன் பொம்மைகளை அழகாக வரைந்து வைத்திருப்பான். பிறகு, அந்தப் பொம்மைகளைச் சுற்றி சிறு சிறு நட்சத்திரங்களை அழகாக ஒட்டி வைத்திருப்பான். அந்த நட்சத்திரங்கள் அறை விளக்கு அணைத்ததும் இருளில் அழகாகப் பிரகாசிக்கும். ஏலியன் என்றால் அவனுக்கு அவ்வளவு பிரியம். அவன் கடையில் வாங்கும் முக்காவாசி பொருட்கள் அனைத்தும் ஏலியன் சமந்தப்பட்டவையாகத்தான் இருக்கும்.

“ஆர்யா… ஆர்யா…. டேய்.. தம்பி, எழுந்திரு!” என மித்ரா ஆர்யனின் உடலைப் போட்டு குலுக்கினாள். ஆர்யனும், முகத்தில் போர்த்தியிருந்த போர்வையை விளக்கிப் பார்த்தான். அப்போது, மித்ரா தன் கண்களைச் சுருக்கி ஆர்யனின் கன்னத்தில் காய்ந்திருந்த கண்ணீரின் தடத்தை உற்று நோக்கினாள்.” டேய்…ஆர்யா என்னடா அழுந்தியா? அப்பா அடித்தது ரொம்ப வலிச்சிசா…?” என கேட்டுக் கொண்ட அவனது கைகளில் உள்ள தழும்புகளை மெல்ல வருடி விட்டாள். “இல்லே.. இல்லே …எனக்கு வலிக்கலே …. எனக்கு இனிக்குது !” என ஆர்யன் நகைச்சுவையாகப் பேசி போலியாகச் சிரித்தான். “டேய்… எனக்கு தெரியும்! உனக்கு மதியைப் பிடிக்கும்னு!” என்றாள் மித்ரா. “மதியா… எந்த மதி? வானத்துலே இருக்குமே நிலா… அந்த மதியைச் சொல்றியா…?” என்று நக்கலாகச் சிரித்தான்.

“தயவு செஞ்சி… அந்த இளமதியை நிலாவோட சேர்த்து வெச்சி பேசாதே…! நிலாவோட கால் தூசிக்குக் கூட அது வராது…! அதுவும் அது மூஞ்சியும்… அது கலரும்! எப்படித்தான் உனக்கு அதுலாம் புடிக்குதோ …?” என மித்ரா ஆர்யனிடம் சூடான சட்டியில் உற்றிய எண்ணெய் போல கொதித்து எழுந்தாள். “உனக்குப் புடிக்கலெனா இப்டித்தா ஒரு ஆளைப் பார்த்து பேசுவியா? நான் என்ன இப்போ இளமதியை லவ் பண்றேன்னு உன்கிட்ட சொன்னெனா …?” எனக் கூறி சட்டென்று சிரித்து கொண்டிருந்த முகம் கொஞ்சம் கடு கடுவென மாறியது. “கடைசி வரைக்கும் யாரும் என்னையே புரிஞ்சிக்கல தானே ..! நான் என்ன சொல்ல வரேன்னு யாராவது இந்த வீட்டுல காது கொடுத்து கேட்டிங்களா ?, என் மேலே அவ்ளோதான் நம்பிக்கை தானே …!” என தனது மனக்குமுறலை மித்ராவிடம் கொட்ட ஆரம்பித்தான். “டேய் …. சாரி …செரி, இப்போ சொல்லு இன்னிக்கு ஸ்கூல்லே என்ன நடந்துச்சி..? ஏன் குரு டிசிப்ளின் அப்பாவுக்குப் போன் பண்ணி எதோ லவ் பிரச்சனைனு சொல்லி, அப்பவே நாளிக்கு ஸ்கூல்ளுக்கு வரே சொன்னாங்க..?” என மித்ரா கேட்டாள்.

ஆர்யனும் பள்ளியில் நடந்தச் சம்பவத்தை மித்ராவிடம் கூற ஆரம்பித்தான். ”இன்னிக்கு ஸ்கூல்லே ரேஹாட் டைம்க்கு நான் கான்டீன்லே உட்காந்திருந்தேன். என் மின்னுக்கு இளமதி வந்திச்சி. என்னாச்சினு தெர்லே, அது கையிலே வெச்சிருந்த பூக் கிழே விழுந்திருச்சி. நான் சத்தம் கேட்டுத்தான் பார்த்தேன். அப்போ இளமதி அதோட பூக் எல்லாமே எடுத்துகிட்டு இருந்திச்சி. அதோட பூக்லே ஒரு வெள்ளைப் பேப்பர் உழுந்ததை அது பார்க்லே. நான் பார்த்து, அந்தப் பேப்பரை கொண்டுப் போய் அதுகிட்ட கொடுத்தேன். அது என்னே பார்த்து முழிக்கும் போதேப நான் சுதாரிச்சிருக்கணும்!….” என ஆர்யன் கூறினான். அதற்கு மித்ரா “டேய் என்னடா ஆச்சி… அந்தப் பேப்பர்லே அப்படி என்னதான் இருந்திச்சி…?” என்று வினா எழுப்பினாள் .

அதற்கு ஆர்யன் “அந்தப் பேப்பர்லே ஐ லவ் யூ … ஐ வான்ட் டு கிஸ் யூ அப்டின்னு இருந்திச்சி” எனப் பதிலளித்தான். அதன் பின், இளமதிதான் அந்தக் காகிதத்தைக் கட்டொழுங்கு ஆசிரியரிடம் ஒப்படைத்திருக்க வேண்டும் என மித்ரா தானாகவே புரிந்துக் கொண்டாள். “அதுக்கே கொஞ்சமாவது இது லாஜிக்க்கா இருக்கா? நீ ஏன் அப்படி செய்யப் போறே அப்டின்னு அது யோசிச்சுப் பார்க்காதா….?” என மித்ரா எரிமலைப் போன்று கொந்தளித்தாள். அதற்கு, ஆர்யன் “நம்ம வீட்டுலே அப்பாவே என்னே புரிஞ்சிக்கிலே… இதுல இளமதி இப்படி செஞ்சதுலே எனக்கு ஒன்னும் பெருசா தெரிலே …!” என சோக கலந்த குரலில் ஒரு சின்ன புன்முறுவலோடு கூறினான்.

“மித்ரா ….மித்ரா … சாப்ட வா…யாரும் யாருக்காகவும் காத்திருக்க வேண்டாம்!” எனும் அப்பாவின் குரல் இவர்களின் அறைக்கு வந்தது. ஆர்யனும் தனக்குப் பசிக்கவில்லை என்றும், தான் கொஞ்சம் நேரம் அறையில் ஓய்வெடுத்து வருகிறேன் என்பதையும் மித்ராவிடம் தெரியப்படுத்தி அவளை இரவு உணவு உண்ண சொன்னான். மித்ராவும், ஆர்யனை மேலும் தொந்தரவு செய்ய விரும்பாததால், அவனின் பேச்சிற்கு இணங்க உணவு உண்ண கிழே சென்றாள்.

மணி பதினொன்னு ஆனது. ஆர்யனுக்குப் பசி மெல்ல வயிற்றைப் புரட்டியது. மீத உணவு குளிர்ப்பெட்டியில் அம்மா கண்டிப்பாக வைத்திருப்பார் என நன்கு அறிந்தான் ஆர்யன். அவற்றைப் சூடு காட்டி, சாப்பிடுவதில் அவனுக்குச் சோம்பல். அதனால், அவன் மித்ராவிடம் வீட்டின் அருகாமையில் உள்ள சீன உணவகத்திற்கு சென்று உணவை வாங்கிட்டு வருவதாகத் தெரியப்படுத்தினான். மித்ராவும் விரைவாகச் சென்று வரும்படி கூறினாள்.அம்மாவும் அப்பாவும் நன்கு உறங்கிக்கொண்டிருந்தனர். ஆர்யன் வீட்டின் பின்புறத்தின் வழியாக அந்த உணவகத்திற்கு தனது நடையைக் கட்டினான். அப்போது சாலையின் அருகே கண்ணைக் கூசும் அளவிற்கு ஒரு வெளிச்சம். அவன் பார்த்ததை அவனது இரு கண்களால் நம்பமுடியவில்லை.

வானத்திலிருந்து ஏதோ ஒன்று கீழே தரை இறங்குவதைப் பார்த்துக்கொண்டிருந்தான். அது பார்ப்பதற்கு எதோ ஒரு சிறிய வடிவிலான கப்பல் போன்று இருந்தது. ஆர்யன் தனது கண்களை தேய்த்து பார்த்தான். ஒரு தட்டைப் பாத்திரத்தில், அதன் மேல் ஒரு அரை வட்டம் வடிவிலான பாத்திரத்தைக் கவுத்து போட்டது போன்று இருந்தது. அந்த கப்பலைச் சுற்றி டிஸ்கோ விளக்கைப் போன்று மினு மினு வென்று எரிந்துக்கொண்டிருந்தது. ஆர்யன் சற்று அருகே சென்று பார்த்தான். அந்த கப்பலைப் பார்க்கும்போது தனக்கு நன்கு தெரிந்த ஒரு கப்பலை போன்று இருப்பதாக அவனது உள்ளுணர்வு அவனிடம் கூறியது.

இன்னும் கொஞ்சம் அருகே சென்று பார்த்தான். அவனது ஊகிப்பு சரியாக இருந்தது. அவனுக்கு மிகவும் பிடித்த ஏலியனின் கப்பல் அது. ஆர்யனுக்கு, அந்த கப்பலுக்குள் சென்று பார்க்க வேண்டும் என்று அவனின் மனம் குத்தாட்டம் போட்டது. சிறிது நேரம் கழித்து, அந்த கப்பலின் நுழைவாயில் திறந்தது. ஆர்யனுக்குக் கப்பலினுள் செல்லாமா வேண்டாவா என்று ஒரே சந்தேகம். இருந்தாலும், அவனது ஆர்வம் கப்பலுக்குள் சென்று பார்த்துவிட வேண்டும், இம்மாதிரியான வாய்ப்பு இனிமேலும் அவனது வாழ்வில் வராது என நன்கு புரிந்த அவன், கப்பலுக்குள் நுழைய ஆரம்பித்தான்.

அவன் கப்பலின் நுழைவாயை நோக்கி இரண்டு அடி எடுத்து வைத்திருப்பான். அதற்குள் கப்பலின் உள்ளிருந்து இரண்டு உருவங்கள் வெளியே வந்தது. அந்த உருவங்களைக் கண்டதும் ஆர்யனுக்குச் சமீபமாக சினிமாவில் வெளிவந்த அயாலன் எனும் திரைப்படத்தில் உள்ள ஏலியனைப் போன்று இருந்தது. ஆனால், திரைப்படத்தைக் காட்டிலும் ஆர்யன் நேரில் காணும் ஏலியன்கள் இன்னமும் அழகாக இருப்பதாய் அவன் உணர்ந்தான். அந்த இரு ஏலியன்கள் ஆர்யனைப் பார்த்து சிரித்து கை அசைத்தன. பின்பு, அந்த ஏலியன்கள் கைகளை ஆர்யனை நோக்கி அசைத்துக் கொண்டிருந்தன. ஆர்யன் அவைகள், தன்னை கப்பலுக்குள் வருமாறு கூறுகின்றன எனப் புரிந்து கொண்டு, கப்பலுக்குள் சென்றான்.

கப்பலின் உள்ளே சென்றதும், ஆர்யனுக்கு விண்வெளியில் இருப்பது போன்று ஓர் உணர்வைத் தந்தது. அந்த ஏலியன்கள் மனிதர்கள் போன்று ஏதும் மொழியில் பேசவில்லை. அவைகள், கை செய்கையின் மூலமே ஆர்யனிடம் தொடர்புக் கொண்டன. கப்பலின் உள்ளே, நேரத்தை செலவழித்துக் கொண்டிருந்த ஆர்யனுக்கு அப்போதுதான் சுயநினைவு வந்தது. தான், விரைவாக வீட்டிற்குச் செல்ல வேண்டும், இல்லையெனில் அப்பாவின் கோபத்திற்கு மீண்டும் தான் பலியாகக் கூடும் என்பதையும் நன்கு உணர்ந்து, தான் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதை ஏலியன்களிடம் கை செய்கையில் தெரிவித்தான்.

அதற்கு அந்த ஏலியன்களும், புன்முறுவலோடு ஆர்யனிடம் கைக் குலுக்கின. அப்போது ஆர்யன் அந்த ஏலியன்களின் கைகளில் ஒரு நட்சத்திர குறி இருப்பதைக் கவனித்தான். அந்த ஏலியன்கள் ஆர்யனிடம், எதை நினைத்தும் கவலைக் கொள்ள வேண்டாம் என்றும், எல்லாமே சரி ஆகிவிடும் என்பதை கை செய்கையில் ஆர்யனுக்குத் தெரியப்படுத்தி , கப்பலின் நுழைவாயிலைத் திறந்து விட்டன. கப்பலிருந்து வெளியேறிய ஆர்யன், அந்த ஏலியன்களுக்கு சிநேகமாக கை அசைத்துக் காட்டினான். அந்தக் கப்பலும், மறைந்து போனது.

ஏலியன்களைப் பார்த்த மகிழ்ச்சியில் ஆர்யனுக்கு வந்த பசிகூடப் போய்விட்டது. ஆர்யன், தனது நடையை வீட்டை நோக்கிக் கட்டினான். வீட்டிற்குச் சென்ற ஆர்யன், பூனைப் போல எந்த வித சத்தமும் எழுப்பாமல் தனது அறையை நோக்கி, சென்று படுக்கையின் மீது படுத்தான். சில நொடிகளில், அவன் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்று விட்டான்.

மறுநாள் விடிந்தது. காலைப் பள்ளிக்குத் தயாராக மித்ரா ஆர்யனை எழுப்ப அவனது அறைக்குச் சென்றாள். “டேய்… தம்பி எழுந்திரு. போ சீக்கிரமா எழுந்து குளிச்சிட்டு பசியாரு… நேத்து நைட் கூட நீ சாப்டவே இல்ல. நீ அப்டியே துங்கிட்டே …!” என மித்ரா ஆர்யனின் அறையில் கூவிக் கொண்டிருந்தாள். ஆர்யன் தூக்க கலக்கத்தில் இருந்து எழுந்து “நான் எங்க சாப்டாம இருந்தேன்… நான்தான் உன்கிட்டே சொல்லிட்டு சீன கடைக்குப் போனேனே…!” என கூறினான். “டேய்… என்ன தூக்கத்துல உளறுரியா ..? நீ எங்கேயும் போகல…! ரீல் விட்டது போதும்! போ குளிச்சிட்டு கிளம்பு” என மித்ராவின் பதில் ஆர்யனுக்குத் தான் நேற்றிரவு கண்டது ஏலியன் கனவு என உணர்ந்துக் கொண்டு, படுக்கையை விட்டு எழுந்து குளிக்கச் சென்றான்.

மணி ஏழு ஆகியது. மித்ரா மற்றும் ஆர்யன் வழக்கம் போல், அப்பாவோடு பள்ளிக்குச் சென்றுக்கொண்டிருந்தனர். பள்ளியை அடைந்தவுடன், அப்பா வாகனத்தை நிறுத்த நல்ல இடத்தை தேடிக்கொண்டிருந்தார். அப்போதுதான் ஆர்யனுக்கு நினைவு வந்தது. பள்ளியில் கட்டொழுங்கு ஆசிரியர், அப்பாவைப் பள்ளிக்கு வருமாறு கூறியிருந்ததை. பள்ளியின் அழுவலகத்தில் ஆர்யன், அப்பா, இளமதி, கட்டொழுங்கு ஆசிரியரைத் தவிர்த்து இன்னொருத்தன் அங்கு நின்றுக்கொண்டிருந்தான். அவன்தான் கபிலன். கட்டொழுங்கு ஆசிரியர் அப்பாவிடமும் ஆர்யனிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆர்யனுக்குத் தலைச் சுற்றிக்கொண்டிருந்தது. அவனுக்கு நடப்பது ஒன்றுமே புரியவில்லை. பிறகு, கட்டொழுங்கு ஆசிரியர் அப்பாவிடம், நடந்த அனைத்துப் பிரச்சனைக்கும் கபிலன்தான் காரணம் என்று தெரிவித்தார். கபிலனோ, நான்தான் இளமதிக்கு அவ்வாறு காகிதத்தில் எழுதி, அவளின் புத்தகத்தில் வைத்தேன் என்று கூறி தன் தவற்றுக்கு மன்னிப்புக் கேட்டான். அலுவலகத்தில் உள்ள கூட்டம் கலைந்தது. அப்பாவும், ஆர்யனைக் கட்டியணைத்து தான் செய்தது தவறு என்று கூறி கன்னத்தில் முத்தமிட்டார். பிறகு அப்பாவும், பள்ளியை விட்டு வேலைக்குக் கிளம்பினார்.

பள்ளி மணி அடித்தது. ஆர்யன் தனது புத்தகப்பையைத் தூக்கிக்கொண்டு வகுப்பறைக்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தான். ஆர்யன், நேற்று கண்ட கனவில் அந்த ஏலியன்கள் எல்லாமே சரியாகிவிடும் என்று கூறியது இன்று நடந்த சம்பவத்தை வைத்துதானா என்று மனதில் நினைத்துக் கொண்டே சென்றுக்கொண்டிருந்தான். அப்போது “ஆர்யன் … ஒரு நிமிஷம் நில்லுங்க !” எனும் ஒரு குரல் ஆர்யனின் செவிகளுக்குக் கேட்டது. ஆர்யனுக்கு அந்தக் குரல் மிகவும் பழக்கப்பட்டது போன்று தெரிந்தது. சட்டேன்று திரும்பிப் பார்த்தான். இளமதி புன்முருவலோடு ஆர்யனை நோக்கி வந்தாள். காலை கதிரவனின் ஒளி, அவளது கண்களில் பிரதிபலிப்பதை ஆர்யன் கவனித்தான். வழக்கத்திற்கு மாறாக, இளமதி ஆர்யனின் கண்களுக்குச் சற்று கூடுதலாக அழகாகத் தெரிந்தாள். ”சாரி ஆர்யன்…!” எனச் சிரித்துக்கொண்டே ஆர்யனுக்குக் கைக் கொடுத்தாள். இளமதியின் முகத்தை அப்போதுதான் அவன் அவ்வளவு அருகாமையில் பார்கிறான். ஆர்யனும் அவளுக்கு கைக் கொடுக்க நீட்டியப் போது, அவனது கையில் ஏலியன் கையில் இருந்த அந்த சிறு நட்சத்திர குறி இருப்பதைக் கவனித்தான்.

இளமதிக்குக் கைக் குலுக்கிவிட்டு, மீண்டும் தனது கையை உற்று நோக்கினான் ஆர்யன். அந்த நட்சத்திர குறி ஆர்யனின் கண் முன்னே மெல்ல மறைந்து போனது. ஆர்யனின் விழிப் பிதுங்க ஆரம்பித்தது. அவன் கண்டது கனவு அல்ல, அது நிஜம் என்று உணர்ந்தான்.

Print Friendly, PDF & Email

2 thoughts on “விண்வெளியில் ஒரு நாள்

  1. அன்புள்ள கதாசிரியருக்கு.
    கதை மிகவும் நன்றாக இருந்தது அதுவும் பல சொற்கள் தமிழில் விளையாடியது மிகவும் சிறப்பு .உண்மையில் கதையில் நிறைய திருப்பம் சந்தோஷத்தை தந்தது மிக நன்றி .இதுபோன்ற தமிழ் கதைகளை அனுப்பவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *