விட்டுப் போன கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 9, 2024
பார்வையிட்டோர்: 128 
 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சுள்ளென்று என் உடலில் வெயில் உறைத்தது. ஜில்லென்று பச்சை ஜலம் காதிற்குள் இறங்கிற்று. கண் விழித்தேன். 

“காலையிலே ஒன்பது மணி வரையில் என்னடா தூக்கம்?” என்று தகப்பனார் டம்ளரும் கையுமாக நின்று மிரட்டினார். 

சூரியன் டம்ளர் தண்ணீரிலும் வானத்திலும் எரிந்து கொண்டிருந்தான். இரவு வைத்தலாந்தல் விளக்கு புகை சூழ்ந்து கிழப் பிராணன்போல் எதிரே துடித்தது. 

“எழுந்திரு, எழுந்திரு” என்று அதட்டவே எழுந் திருந்தேன். மார்பின் மீதருந்த பெரிய விக்கிரமாதித்தன் சரித்திரம் கீழே விழுந்தது. “முப்பத்து மூன்றாவது படிக்குக் காவலாகிய பெயரில்லாப் பதுமை சொல்லாத கதை” என்று ஆரம்பித்தேன். தகப்பனார் டம்ளரைக் கை நழுவ விட்டுத் திகைப்புடன் நின்றுவிட்டார். நான் அவருக்குச் சொன்ன கதைதான் இது: 

1 

தோசையைப் போல் சூரியன் உதயமான ஏழாவது நிமிஷத்தில், நானும் நீதி வாக்கிய மந்திரியாகிய நண்பனும் எழுந்து, தந்த சுத்தி ஸ்நானம் முதலியன செய்து, வழி படு கடவுளைத் தொழுது, காபி கிளப், வெற்றிலை பாக்குக் கடை இவைகளுக்கெனச் சாஸ்திரங்கள் விதித்திருக்கும் தான தருமங்கள் செய்து, முதலாம் நம்பர் வீட்டுக் காம் பவுண்டை அடைந்து, கேட்டுக்குள் நுழையும் தருணத் தில் கைகொட்டிக் கலீரென்று சிரித்த சத்தம் கேட்டு, கண்ணை விரித்துப் பார்த்தோம். கேட்டிலிருந்த பதுமை 
தலையை அசைத்து, கையைக் குறுக்கே நீட்டி, “எங்கே போகிறீர்?” என்றது. 

“வீடு பார்க்க.” 

”விலைக்கா?'” 

“வாடகைக்கு.” 

காம்பவுண்டுப் பதுமை கையைக் கொட்டிக் கன்னத் தில் வைத்துக்கொண்டு, “நில்லும், நில்லும், வீட்டுச் சொந்தக்காரருடைய முப்பத்திரண்டு குணாதிசயங்களில் பத்துக்கும் பழுதில்லாதவர் தான் இங்கே இருக்கத் தகுதி உடையவர். நீர் எப்படித் தகுதி உடையவராவீர்?” என்று வினவிற்று ? 

“வாராய் காம்பவுண்டுப் பதுமையே! உங்கள் எஜமானருடைய குண வல்லபங்கள் தான் என்ன?” என்றேன். 

“அப்படியானால் கேளும்.அவர் இன்ன ஜாதி யென்று யாருக்கும் தெரியாது. ஆனால் அவருடைய நீண்ட கூர்மையான மூக்கு உண்டான முகூர்த்தத்திலேயே பிசுனாரித்தன்மையும் பிறந்திருந்தது. குடியானவர்களும் தனதானிய லக்ஷ்மியைப் பூஜிப்பவர்களும் கீழே சிந்திக் கிடக்கும் நெல்லையும் அரிசியையும் ஒவ்வொன்றாகப் பொறுக்குவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இவர் அதற்கு மேல் பத்து மடங்கு. பிள்ளையார் எறும்பு மொய்க்கக் கூடாதென்று வேண்டிக்கொண்டு நொய் போடுவார்களே அவற்றை எல்லாம் நாள் முழுவதும் சலித்து, ஒண்ணரைச் சிராங்காய் நொய்யாவது இல்லாமல் வீடு வந்து சேரமாட்டார்.” 


இப்படி இருந்து வரும் நாளிலே, ஒரு நாள் ஊரெங் கும் அலைந்து திரிந்து, ஓர் எறும்புப் புற்றில்கூட நொய் காணாமல் சலித்து விசனத்தோடு வீடு வந்து சேர்ந்த போது நான் காவல் புரியும் இந்தக் கேட்டண்டை ஒரு  புற்றுத் தென்பட்டது. எறும்புகள் சாரிசாரியாக, வெள்ளை யாக வாயில் எதையோ கவ்விக்கொண்டு மோட்டை நோக் கிச் சென்று கொண் டிருந்தன. தான் வருந்தி வணங்கும் ஸ்ரீதேவியின் மாபெருங் கருணையை வியந்துகொண்டு எறும்புகளின் வாயிலிருந்த பொருளைச் செட்டியார் பிடுங்கப் போனார். 

‘செட்டுக்கும் எட்டாத செட்டியாரே, பராக்!’ என்றேன்.  

‘நீ யார்?’ என்றார். 

‘நான்தான் இந்தக் காம்பவுண்டு மூங்கில் கதவைத் த்து வரும் பதுமை. பொருள் விஷயத்தில் உங்களுக்கு இருக்கும் ஈடில்லாப் பற்றைக் கண்டு மோகித்துச் சம்பளம் இல்லாமல் உங்கள் வீட்டைப் பாதுகாக்கும் சேவகத்தை வலுவிலேயே மேற்கொண்டுள்ளேன். என் வார்த்தைக்குத் தயை கூர்ந்து, செவிசாய்க்க வேண்டும்’ என்றது பதுமை. 

அவர் தலை அசைத்தார். 

‘எறும்புகள் கொண்டுபோவது நொய்யல்ல. பாட்டி பழமொழிப் பிரசித்தமான எறும்பு முட்டை, ‘எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை உண்டு.’ மழையை எதிர்பார்த்து, நனையாத இடத்தில் முட்டை களைப் பத்திரப்படுத்துவதற்காக எறும்புகள் எடுத்துப் போகின்றன என்பதை அறியீரா?’ 

பதுமை சொன்னதை நம்பாவிட்டாலும் அதன் ஊழி யத்தை மெச்சியோ என்னவோ எறும்புகள் வாயிலிருக்கும் முட்டைகளை விட்டுவிட்டு, கொழுமுனைக் கம்பி கொணர்ந்து எறும்புப் புற்றை நொய்யரிசிச் சேமிப்புக்காகத் தோண்டினார். அவருடைய புத்தி நுட்பத்தைப் பாருங் கள் ! அரைச் சிராங்காய் குருணை புற்றின் அடியில் கிடைத் தது. அப்பேர்ப்பட்ட புத்தியும் யூகமும் இருந்தால் இங்கே நுழையலாம். இல்லாவிட்டால் இங்கே நுழையக் கூடாது” என்று பதுமை சொல்லி நிறுத்திற்று. 

அதற்கு நான், “என் குணத்தில் பத்தில் ஒரு பங்கு தான் உங்கள் முதலாளிக்கு இருப்பதாகத் தெரிகிறது. அவர் நெல், அரிசி நொய்யோடு சரி. நானா தெருவிலே கிடக்கும் ஒரு மிளகாய் விதைகூட விடாமல் பொறுக்கிப் பொடி செய்து, சூடு தணியக் கபாலத்தைலம் செய்து விற்பவனாயிற்றே, என்னிடம் அவர் ஜம்பம் சாயுமா?” என்றதும், காம்பவுண்டுப் பதுமை இருந்த இடம் தெரியாமல் ஒடுங்கிப் போயிற்று. 

இருந்தபோதிலும், பதுமையைக் கண்டு, கேட்ட திகைப்பைச் சமாளிக்க ஒரு சிமிட்டா பொடி நீதி வாக்கிய மந்திரியாகிய கெம்பனிடமிருந்து இரவல் வாங்கிப்போட்டுக் கொண்டு, வீட்டு வாசல் கதவண்டை போனேன். நீதி வாக்கிய மந்திரி, தோட்டம் என்று மங்கல வழக்காக அழைக்கப்பட்ட கட்டாந்தரையைச் சுற்றிப் பார்த்து வரு கிறேன் என்று போய்விட்டார். 

2 

வீட்டு வாசல் நிலையில் வலது காலை எடுத்து வைக் கப் போனபோது, “எங்கே போகிறீர்? நில்லும் என்ற சத்தம் கலீரென்ற சிரிப்பின் ஒலியுடன் எழுந்தது. நான் திடுக்கிடாமல் மரம்போல் நின்றேன். 

“அகோ வாரும் பிள்ளாய், வீடு பார்ப்பவரே! வீட் டின் தெய்வ வஜீகரம் மிகுந்த எஜமானரின் எண்திசை விரிந்த பிரதாபத்தைக் காம்பவுண்டுப் பதுமை சொல்லக் கேட்டும் நீர் இங்கே வந்து நுழைய முயலுவதன் துணிவை என்னென்று சொல்வது? அதை யோசித்தால் காட்டில் றித்த நிலவுபோலும், கடலில் பெய்த மழைபோலும் இருக்கிறது” என்று அதட்டிற்று. 

நெஞ்சின் ஒடுக்கத்திலிருந்த வார்த்தையைத் தேர் வடம் போட்டிழுத்து வெளியே கொணர்ந்து, “நீ யார்?” என்று கேட்டேன். 

“நான்தான் நிலைவாசல் பதுமை. எங்கள் எஜமான ருடைய திவ்விய மனோபாவத்தில் லக்ஷத்தில் ஒரு பங்கே னும் இருந்தாலன்றி இந்த வாசலுக்குள் நுழையக் கூடாது. இந்திர லோகத்திலிருந்த நானே இவருடைய குணாரவிந்தத்தால் இழுக்கப்பட்டு, பரவசமாகி, இவ ருடைய வாசலைப் பாதுகாத்து வருகிறேன் என்றால் நீர் எம்மாத்திரம்? நில்லும் நில்லும் ” என்று கீச்சுக் குரலில் கர்ஜித்தது. 

“வாராய், நிலைவாசல் பதுமையே! அவருடைய குணாரவிந்தத்தை விவரிக்க இயலுமா?” என்றேன். 

“ஆயிரம் நாப் படைத்த ஆதிசேஷனே தவிக்கும்போது பதுமையான தான் விவரிப்பது குலாப்ஜான் ருசியை வயிற்று வலிக்காரனும், குயிலின் குரலைச் செவிடனும் வர்ணிப்பது போலாகும். இருந்தாலும் சொல்லுகிறேன். ஒருமையுள்ள மனத்தோடு கவனியும்” என்றது. 

“எங்கள் எஜமானர் ஸ்ரீதேவியின் பேரில் அபார மோகம் கொண்டிருந்தார் என்று காம்பவுண்டுப் பதுமை சொல்லிக் கேட்டிருப்பீர். அதன் காரணமாக அவர் வீட் டிலிருந்த இரும்பு, பித்தளையைக்கூடத் தங்கமாக்கிவிட வேண்டுமென்று தவித்துக்கொண் டிருந்தார். அப்போது உலக யுத்தம் ஏற்படவில்லை. ஆனால் தங்கம் செய்யும் சாமியார் ஒருவர் வந்து சேர்ந்தார். எங்கள் முதலாளிக் குச் சமமானவராகச் சாமியார் இருந்திருப்பாரோ என்னவோ, வீட்டில் நசுங்கிய பித்தளைத் தாம்பாளங் களும், துருப் பிடித்த ஆணிகளும் தவிர வேறொன்றும் இல்லை என்று தெரிந்துகொண்டவுடனே பசையில்லாத வீடென்று மனத்தில் தீர்மானம் செய்துவிட்டார். ஆனால் வெளிப்படையாக, வேறு போக்குக் காட்டுவதற்காக, ‘வீட் டில் விளக்கு இல்லையே, என்ன செய்ய முடியும்?’ என்று வருந்தினார். 

‘தினம் மூன்று இலுப்பெண்ணெய் அகல்கள் எரி கின்றனவே’ என்று திகைத்துப் பேசினார் ஸ்ரீதேவி வங்கி ஷத்தில் மோகங் கொண்ட முதலாளி. 

‘விளக்கென்றால், குல விளக்கு, அதாவது குழந்தை. குழந்தைதான் ரசவாதத்தின் ரகசியம்’ என்று பிரும்ம ரகசியத்தை அம்பலமாக்குவது போன்ற குரலில் சாமியார் சொன்னார். 

அப்போதுதான் தனக்குக் குழந்தையில்லையே என்ற துயரம் ஸோப் நுரை போல் வீட்டுக்காரருக்கு எழுந்தது. பெண்ஜாதியுடன் ஒரு மகாமகம் குடித்தனம் செய்தும், புத்திரப்பேறு கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் உண்டாயிற்று, 

‘அப்படியானால் என்ன செய்யலாம்’ என்று கேட்க, ‘உம்முடைய மைத்துனனையேனும் வரவழைத்து வைத் துக் கொளளும், நான் பிறகு வருகிறேன்’ என்று சொல்லி விட்டு வந்த வழியே போய்விட்டார் சாமியார். 


அதன் பேரில் வீட்டுக்காரர் முகவஜீகரமுள்ள மனைவி யுடன் மந்திராலோசனை செய்து மைத்துனனைக் கூட்டிவர வேண்டுமென்று முடிவு செய்தார். 

மைத்துனன் வந்தான். அவன் எழு வயதுப் பயல். கருங் குரங்கைக் கற்பித்த வேளையில் அவனையும் கடவுள் சிருஷ்டித்திருந்தார். இருந்த போதிலும் எஜமான னுக்கு அவன்மீது கட்டுக்கொள்ளாத அன்பிருந்தது. ஏனென்றால் காலையில் எழுந்திருந்து கருங்குரங்கைப் பார்த்தால் கனகம் வந்தடையும் என்று சகுன சாஸ்திரங் கள் முறையிடுவதாகக் கேள்விப்பட்டிருந்தார். கருங் குரங்கானால் என்ன, அதற்கு ஒப்பான மைத்துனனாக இருந்தால் என்ன ? 

ஏழு வயதுப் பையன் என்றால் சும்மா இருப்பானா? வீட்டிலே வைக்கும் சாமான் ஒன்றாவது வைத்த இடத் தில் இருப்பதில்லை. சொம்பு தவலையண்டை யிருந்தால் பிறகு கேணிக்குள் தான் கிடக்கும். சாக்கில் நொய் இருந் தால் பிறகு வீடெங்கிலும் தோன்றும். இப்படிப்பட்ட அட்டகாசம் செய்து வந்தான். தவிர, பையன் புது யந்திர மானபடியினாலே அகோரமான பசி. எதுவாயிருந்தாலும் சரி, மிஷின் அரைத்துவிடும். அரிசி, வெல்லம், பயத்தங் காய் ஆணி முதலிய எதுவும் மிச்சம் இருப்பதில்லை. தமக் கை சம்மதியுடன் கால் பங்கு, சம்மதி இல்லாமல் அரைப் பங்கு, திருட்டுத்தனமாக ஒன்றரைப் பங்கு – இப்படி எல்லாப் பொருள்களையும் ஸ்வீகாரம் செய்துகொண் டான். முதலாளிக்கும் அவர் மனைவிக்கும் வருத்தம் என்ற நிலை தாண்டித் தொந்தரவு என்ற நிலை ஏற்பட்டது. 

இப்படி இருக்கும்போது ஒரு நாள் எஜமானன் மனைவியைப் பார்த்து, ‘முறக்குச் செய்து வை. தின்று ரொம்ப வருஷமாயிற்று’ என்றார்.காலையிலும் இரவிலும் கம்பஞ் சாதத்துக்குப் பிறகு அவருக்கு ஏதேனும் தீனி வேண்டும். தீனி என்று சொல்வது வறுத்த பயிறு மொச்சை, வேர்க்கடலை முதலியன. கடலை எண்ணெய்ப் பக்ஷணம் தின்று உண்மையிலே மூன்று வருஷமாவது இருக்கும். முறுக்குச் செய் என்று சொன்னதில் மனைவிக் குக்கூட வியப்பாயிருந்தது. ‘ரொம்ப அடாபிடியாகச் செய்துவிடாதே!’ என்று கணவர் செய்த எச்சரிக்கையை அநுசரித்து, செட்டாக இருபத்தைந்து முறுக்குச் செய்து வைத்தாள். 

முதல் நாள் இவர் ஒரு முறுக்குத் தின்றார். மறுபடியும் முறுக்கைப்பற்றிய நினைப்பு மூன்றாம் நாள் இரவு கம்பஞ்சாப்பாட்டுக்குப் பிறகுதான் உண்டாயிற்று.

‘பெண்ணே! இரண்டு முறுக்குக் கொடு’ என்றார். 

மனைவி உள்ளே போய்ச் சட்டியைத் திறந்து பார்த் தாள். காலணாவுக்குக் கிடைக்கும் நெய்ப் பொடி அளவு முறுக்குப் பொடி பாத்திரத்தின் அடியில் தூங்கிக்கொண் டிருந்தது. பனை ஒலை வீட்டில் நெருப்புப் பிடித்தாற்போல் அவளுக்குத் திகீரென்றது. முறுக்குத் தீர்ந்து போன வயிற்றெரிச்சலைக் கணவனிடம் கொட்டினாள். 

‘அவ்வளவு முறுக்கும் என்னவாயிற்று?’ என்று கேட்டார். 

‘நீங்கள் தின்றது ஒரு முறுக்கு, நான் தின்றது இரண்டு, தம்பி தின்றிருக்க வேண்டியது இருபத்து மூன்று.’ 

‘குருணி கறக்கற மாடானாலும் கூரையைப் பிடுங்கற மாடு உதவாது. பையனும் வேண்டாம், இரும்பு தங்க மாகவும் வேண்டாம். நாளைக்கே அவனை அனுப்பிவிட வேண்டும்’ என்று சத்தமிட்டார். 

‘ஏதோ குழந்தை என்றால் அப்படித்தான் இருக்கும்.’ 

‘நமக்கு அப்படி வேண்டாம்.’ 

‘அதனால்தான் கடவுள் நம்மை இப்படி வைத்திருக்கிறார்.’ 

‘ஒன்றும் குடி முழுகிப் போகவில்லை. விதைக் கோட்டையில் எலியை வைத்ததுபோலும், புதுத் தாளில் ஊதுவத்தியைக் கொளுத்தி வைத்ததுபோலும், கீரைப் பாத்தியில் பூச்சியை விட்டது போலும் போதும் போதும்’ என்றார். 

மறுநாள் பையனை ஊருக்கு அனுப்பிவிட்டார். 

இந்த மாதிரியான குணமிருந்தால் இந்த வாசற்படி யில் நுழையலாம், இல்லாவிட்டால் கூடாது” என்று நிலைவாசல் பதுமை சொல்லி நிறுத்திற்று. 

“பூ! இவ்வளவுதானே? அவராவது தீனிக்கு ஆசைப்படுகிறார். நான் சாப்பிடுவதே வாரத்துக்கு ஒரு தடவை தான் என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்துவிட்டேன். 

வீட்டுக்குள்ளே பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை. அறையா அடுப்பங்கரையா, ஒன்றையும் காணவில்லை. வெறும் கூடம், அங்குமிங்கும் தோண்டிக் கிடந்த கூடம். நான்பாட்டுக்குக் கூடத்தைக் கடந்து கொல்லை வாசலுக்கு வந்தேன். 

“இரண்டு பதுமைகளும் சொன்ன குணப் பிரதாபங் களைக் கேட்டிருந்தும், இங்கே வந்ததன் வயணமென்ன? நில்லும்.. நில்லும்..” என்றது கொல்லை வாசல் பதுமை. 

“வீடு பார்க்க வந்தேன்” என்றதும் குப்பைத் தொட்டியைக் குச்சியால் தட்டினதுபோல் ஒலிக்கச் சிரித்து, 

“எங்கள் எஜமானரைப்போல் பணம் சம்பாதிப் பதில் கருத்துடையவரானால் இங்கிருக்கத் தகுதியுண்டு, இல்லாவிட்டால் நடையைக் கட்டும்!” என்றது. 

“இருக்கட்டும், வாடகை என்ன?” என்றேன். 

“இருபத்தைந்து சொல்லி உங்களுக்காகப் பதினைந்து.” 

நான் நசுங்கின ஈயச் செம்பைப்போல் இளித்துக் கொண்டே, “இந்த வீட்டில் குடியிருக்க வேண்டுமென்றால், வீட்டுக்காரர், மாதம் அரை ரூபாயும் வெற்றிலை பாக்கும் கொடுத்து விளக்கேற்றிக்கொண்டிரும் என்று சொல்ல வேண்டியிருக்க, பதினைந்தா வேண்டும் ?” என்று கேட்டு விட்டுக் கொல்லை வாசல் வழியாகக் கம்பி நீட்டினேன். நீட்டும்பொழுது சூரியன் மேற்கே அஸ்தமானமாகி விட்டதால், சாயம் சந்திகூடச் செய்யாமல் விதிப்படி போஜனம் முடித்துத் தாம்பூலம் தரித்து எங்கள் வீட்டு அவரைப்பந்தலின் கீழ் மூட்டைப் பூச்சிக் கட்டிலில் கண்ணயர்ந்தேன்… 


“கதை வெகு நன்றாயிருக்கிறது, பல்லைத் தேய்த்து வா’ என்றார் தகப்பனார்.

– மோகினி (சிறு கதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1951, கலைமகள் காரியாலயம், சென்னை.

வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *