விட்டுக் கொடுப்பு…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 14, 2020
பார்வையிட்டோர்: 5,846 
 
 

காலை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, கணவன் ஆனந்த் அலுவலகத்திற்கு 8 .45 க்குப் புறப்பட்டுச் சென்றபிறகு எல்லா வீட்டு வேலைகளையும் மடமடவென்று முடித்துவிட்டு, சாப்பிட்டுவிட்டு நூலகப் புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தபோதுதான் வாசல் அழைப்பு மணி அடித்தது.

‘யாராக இருக்கும்..? ! ‘என்ற யோசனையில் கதவைத் திறந்தாள் ராதிகா.

வாசலில் அழகான பெண்.

“யார் நீங்க..? என்ன வேணும்..? “- ராதிகா கேட்டாள்.

“ஆனந்த் வீடுதானே..?”

“ஆமாம் !”

“நீங்க அவர் மனைவியா.. .? !”

”அ.. ஆமாம் !”

“உங்களிடம் நான் கொஞ்சம் பேசனும்..”

‘அறிமுகமில்லாதவளை எப்படி அழைத்துப் பேச..? ‘நினைக்க..

“நான் அவரோட வேலை பார்க்கிறவள். லட்சுமி. முக்கியமான விஷயம்….”

“சரி வாங்க…”துணிந்து சொல்லி திரும்பினாள்.

உள்ளே எதிரும் புதிருமாய் ஆளுக்கொரு நாற்காலியில் அமர்ந்தார்கள்.

“டீ, காபி..? “ராதிகா எழுந்தாள்.

“வேணாம். உட்காருங்க..”

அமர்ந்தாள்.

“சொல்லுங்க..? “ராதிகா லட்சுமியை ஏறிட்டாள்.

எதிரில் அமர்ந்திருந்த லட்சுமிக்குக் கொஞ்சமாய் கைகள் நடுங்கியது.

“என்ன..? “இவள் ஏறிட்டாள்.

“இவ்வளவுதூரம் தைரியமா வந்துட்டு… இப்போ என்னவோ உங்களை நேர்ல பார்த்ததும் கொஞ்சம் பயம், உதறல்… மேடம்.”

“கொஞ்சம் தண்ணி குடிச்சி ஆசுவாசப்படுத்திக்கிட்டு பேசுறீங்களா…?”

“வேணாம் மேடம். சொல்றேன். சேதி கேட்ட பிறகு நீங்க அதிர்ச்சி, ஆத்திரம் கூடாது.”

“காதலா…?”

லட்சுமி வியப்பு, திகைப்பாய் அவளைப் பார்த்தாள்.

“எப்படி மேடம் இப்படி சரியா சொன்னீங்க…? ஆனந்த் சொன்னாரா..? “கேட்டாள்.

“இல்லே..”

“பின்னே..??…”

“எனக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயம் இது ஒன்னாத்தான் இருக்க முடியும். ரெண்டு பேரும் ஒரே இடத்தில் ஒன்னா வேலை செய்யிறீங்க. உங்களுக்குள் இதைத் தவிர வேற என்ன இருக்க முடியும்..? மேலும்…ஒன்னும் ஒன்னும் ரெண்டுன்னு சொல்றது ரொம்ப சுலபமில்லையா… ?”

‘வந்த வேலை சுலபமாக முடிந்தது. அடுத்து…? ‘என்று லட்சுமி யோசிக்கும்போதுதான்….

“சரி. இதுக்கு நான் என்ன செய்யணும்….? “என்று கேட்டு ராதிகாவே விசயத்திற்கு வந்தாள்.

“உ… உங்க வாழ்க்கையோடு என்னையும் சேர்த்துக்கனும்…”

“புரியல…?!”

“அவர் என் கழுத்துல தாலி கட்ட சம்மதிக்கனும்…”

“சம்மதிக்கலேன்னா…?”

“நான் காலம் முழுதும் இப்படியே கன்னியா இருப்பேன்.!”

“பொய் !”

“சத்தியமா மேடம் ! நான் சொன்ன சொல் தவற மாட்டேன்.”

“அப்படியா…!? எத்தினி வருசமா காதலிக்கிறீங்க…?”

“ஒரு வருசமா காதலிக்கிறோம்..!”

“அவருக்குத் திருமணம் ஆச்சு என்கிறது உங்களுக்குக் காதலிக்கும்போது தெரியுமா..?”

“ம்ம்… சொன்னார்….”

“அதுக்கு அப்புறமுமா நீங்க அவரைக் காதலிச்சீங்க..?”

“ஆமாம்…!”

“விலகாம…. எப்படி இப்படி…?”

“தெரிஞ்ச ரெண்டு மூணு நாள்… ‘வேணாம். இவரைக் காதலிக்க கூடாது. இன்னொருத்தி வாழ்க்கையில் இடையில் புக கூடாது. ! ‘என்கிற குழப்பத்தில் இருந்தேன். மறுபடி… குணம் , மனத்துல இவர்தான் எனக்கேத்த கணவர்ன்னு தீர்மானிச்சு காதலிச்சேன்.”

“அவர் உன்னை காதலிச்சாரா …?”

“காதலிக்கலன்னு சொல்ல முடியாது. ஆனா…என் மனைவி சம்மதிச்சால்தான் நம்ம திருமணம்ன்னு சொல்லி என்னிடம் பழகினார்”

“இந்த ஒரு வருஷ காதல் பழக்க வழக்கத்திலேயே…நான் அவரை மறக்க முடியாது. என் குண,மனத்துக்கு ஏத்த ஆள். வாழ்ந்தால் அவரோடுதான் வாழ்வேன். இல்லே கன்னியாய் இருப்பேன்னு சொல்றீங்களே…எங்களுக்குத் திருமணம் ஆகி பத்து வருசம் குடித்தனம் நடத்தி, ரெண்டு புள்ளைங்களுக்கும் தாயாகி இருக்கேன். நான் எப்படி விட்டுக் கொடுப்பேன். கொடுத்தாலும் என்ன ஆவேன்னு யோசனைப்பண்ணிப் பார்த்தீங்களா…..?”

சரியான தாக்குதல் !

லட்சுமி பதில் சொல்லத் தெரியாமல் விழித்தாள்.

“நீயா அபகரிச்சுக்கிட்டாலும்… இல்லே அவர்… தானா உன்னிடம் வந்தாலும் நான் வாழாவெட்டியாய் வாழனுமா…? இல்லே தற்கொலை பண்ணிக்கவா…?”

“அக்கா…!!!…”லட்சுமி படீரென்று அலறினாள்.

“சரி விடு. நான் உன் மேல இரக்கப்பட்டோ, காதலை மதிச்சோ…உங்க திருமணத்துக்குச் சம்மதிக்கிறேன். அடுத்து.. எப்படி குடும்பம் நடத்தலாம்ன்னு யோசனை..?”

“நாம மூணு பேரும் ஒரே வீட்டுல ஒண்ணா வாழலாம் அக்கா..”

“அது சரி வருமா…? சரி படுமா…?”

“முடியும் அக்கா…! . இடையில் வந்த நான் வளைந்து கொடுத்துப் போனால் சாத்தியப்படும் !”

“முடியாது லட்சுமி. வாழும்போதுதான் அதன் வலி, வருத்தங்கள் தெரியும். எல்லாத்துக்குமே உன்னால வலைந்து, நெளிந்து போகமுடியாது !”

“முடியும் அக்கா. ! கண்டிப்பா அப்படி நடப்பேன். அப்புறம் நீங்களும் என்னை மாதிரி ஒரு பெண்தானே. என் வலி வருத்தம் தெரிந்து… அதிகம் கொடுமை படுத்த மாட்டீங்க. அனுசரித்து நடப்பீங்க என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு.”

‘சரி. இவளிடம் இவ்வளவு பேசியும்….. ஒரு முடிவோடு வந்திருக்கிறாள் ! ‘என்பது ராதிகாவிற்குத் தெளிவாகத் தெரிந்தது.

“சரி லட்சுமி ! நீ காதல் முறையில் பேசிட்டே.முடிவை சொல்லிட்டே. நான் அவர் என் கணவர் என்கிற முறையில் அவரோடு பேசி, கலந்து நாளைக்கு என் முடிவைச் சொல்றேன்.! “என்றாள்.

“சரிக்கா ! “- அவள் அகன்றாள்.

ராதிகா கண்களை மூடி நிதானித்தாள்.

தன் கணவன் ஆனந்த் இவளைக் காதலிக்கிறானோ இல்லையோ…ஒரு பெண்ணின் மனதில் ஆழமாய் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறான். – தெள்ளத் தெளிவாய் புரிந்தது.

சரி. ஒருவனுக்குக் ஒருத்தி என்று வாழ்ந்த எல்லோரும் எதைச் சாதித்து விட்டார்கள்..?

சிவனுக்கு… கங்கை, பார்வதி.! முருகனுக்கு… வள்ளி, தெய்வானை…!! இப்படி இன்னும் நிறைய தெய்வங்கள்.

இந்த தெய்வங்களும் , தெய்வ விக்கிரங்களும் எதைப் போதிக்கின்றன…? … விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் ஒருவனுக்கு இருவர் சாத்தியம் என்பதைத்தானே..!

பாஞ்சாலி .. பாண்டவர்களுடன் எப்படி வாழ்ந்தாள்..?

ஒருத்திக்கு ஒருவன் மாறி. ஐவர்..!!அவர்கள் அதிலும் ஆண்கள் !!

எப்படி வாழ்ந்தார்கள்..? எல்லாருமே வளைந்து, நெளிந்து, விட்டுக்கொடுத்து, அனுசரித்துப் போய்தானே வாழ்ந்தார்கள், வாழ்ந்திருப்பார்கள்….? ஆக விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் எதுவம் சாத்தியம் ! – ராதிகாவிற்கு மனம் தெளிவானது.

இரவு… முதலில் முரண்டு பிடித்த ஆனந்த்தோடு பேசி , சரி படுத்தி சம்மதம் பெற்றபிறகுதான் இவளுக்குத் தூக்கமே வந்தது.

காலை .

கண் விழித்து வாசல் தெளிக்க கதவு திறக்கும்போது.. காலடியில் நான்காக மடிக்கப் பட்ட தாள். கதவிடுக்கு வழியே உள்ளே வந்தது. எடுத்துப் பிரித்தாள்.

கடிதம் !

அன்பு அக்காவிற்கு….. வணக்கம்.

நான் உங்களிடம் பேசி திரும்பிய பிறகு நிறைய யோசித்தேன்.

பத்தாண்டு காலங்கள் மனைவியாக வாழ்ந்த தாங்களே வாழ்க்கையை விட்டுக் கொடுக்க முன் வரும்போது…ஓராண்டு காதலித்த நாம் ஏன் வீட்டுக் கொடுக்கக் கூடாது.? காதலைத் துறக்கக் கூடாது…? தோன்றியது. இது எனக்குச் சரியான முடிவாகவேப் பட்டது.

அதனால் வலிகள் மறந்து, மனம் சீக்கிரம் குணமாக…பார்வை, பழக்க வழக்கங்களைத் துண்டிப்பதுதான் சரி. அதற்குத் தொலைதூர பிரிவே சரி. அங்கு வேலை செய்வதே முறை – என்ற முடிவிற்கு வந்தேன்.

ஆகையால் வேலையைத் துறந்து வெகு தூரம் செல்கிறேன். என் கைபேசி எண்களும் மாற்றப்பட்டு விட்டன. தயவு செய்து தொடர்பு கொள்ள வேண்டாம்.

நன்றி .

அன்பு

லட்சுமி .

படித்து முடித்த ராதிகாவுக்கு இதயம் கனத்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *