(1972ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வெளிக் கதவைத் திறந்துகொண்டு வீட்டின் உள்ளே யாரோ வந்தது போலிருந்தது. இவன் வெளி வராந்தாவில் சென்று பார்த்தபோது நாற்காலியில் ஜடை, முடி, தாடி, மீசை கோலத்துடன் ஒரு இளம் சுவாமியார் உட்கார்ந்து கொண்டிருப்பது தெரிகிறது. தூய வெண்மை சட்டை வேட்டியில் பொதிந்த மெலிந்த மஞ்சள் நிற உடம்பு, இடது கையில் ஒரு புத்தகம், வலது கையில் ஒரு குடை, உதட்டில் குறுநகை. மூக்குக் கண்ணாடிக்குள் தெரிந்த விழிகளை ஊடுருவிப் பார்த்தபோது அவர் இன்னாரென்று புரிந்து போய்விட்டது.
‘ஓ… இது… யாரு? சத்திய மூர்த்தி அல்லவா? என்ன? சுகம்தானா?’ என்ற கேட்டவாறு எதிரில் உட்கார்ந்தான். ‘உம் சுகம்தான்…’ என்று ஒலித்த சத்திய மூர்த்தியின் குரலில் ஒரு தெம்பு இல்லாதது போலிருந்தது.
‘ஆமா… நவீனன் சொல்லி லேசாக அறிந்தேன்… நீ இங்கிருந்து லிட்டரேச்சர் எம்.ஏ. பாசாகி சேலத்தில் ஏதோ ஒரு காலேஜில் இங்கிலீஷ் லெக்சரர் உத்தியோகம் கிடைச்சுப் போனது தெரியும். அதன் பிறகு என்ன நடந்தது?’
‘உனக்குத்தான் தெரியுமே! எனக்கு சின்ன வயசிலிருந்தே ஸ்பிரிச்சுவல் ஃபீல்டில் ஒரு ஈடுபாடு உண்டென்று!’
‘ஆமா…’
‘சேலத்தில் லெக்சரர் உத்தியோகத்தில் எனக்கு ஒரு பிடிப்பும் வரவில்லை. அந்த ஜோலியை ராஜினாமா செய்து விட்டு ஆர்.எஸ்.- எஸ்.ஸில் சேர்ந்தேன். அதன் செயலாளராக ஊரூராக அலைஞ்சு கொஞ்ச காலம் வேலை செய்தேன். ஏனோ அதுவும் எனக்கு ஒத்து வரவில்லை. கடைசியில்தான் ஸ்ரீபுரகோணம் ஆசிரமத்து சாமிகளிடம் வந்து சிஷ்யத்துவம் பெற்றேன். அதுவரை கிடைக்காத அமைதி இப்போதான் கிடைச்சுது.’
இவன் குழந்தைகள் மெல்ல வெளியே வந்து எட்டிப் பார்த்து விட்டு
‘அம்மா… பூச்சாண்டி… பூச்சாண்டி…’ என்று கத்தியவாறு வீட்டிற்குள் ஓட்டம் பிடித்ததைக்கண்டு சத்திய மூர்த்தி சிரித்தான். இவன் நாலு வயசு மகன் மட்டும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அடி மேல் அடி வைத்து இவன் அருகில் வந்து மூர்த்தியின் ஜடை முடியையும் நீண்ட தாடி மீசையையும் மிரண்டு போய் பார்த்தபடி நின்றான்.
‘தம்பி… வா பார்ப்போம்…’ என்று கறுத்த தாடியின் இடையில் வெண் பற்கள் பளிச்சிட மூர்த்தி அழைத்தபோது பையன் அப்பாவை கட்டிக்கொண்டு சிணுங்கத் தொடங்கிவிட்டான்.
‘டேய்… ஒண்ணுமில்லை… இந்தத் தாடி மாமா ரொம்ப சாது… ஒண்ணும் செய்ய மாட்டார்’ என்று இவன் மகனை ஆசுவாசப்படுத்தியும் அவன் பயம் தணிந்த பாடில்லை…
‘ஆமா, சாதாரணமாக சாமியார் ஆகும் முன் இன்ன சாமிகள் என்று பெயரை மாற்றி வைத்து கொள்வாங்களே…! நீ அப்படி ஒண்ணும் மாற்றிக்கல்லையா?’
‘அதுதான் காலேஜில் படிக்கும்போதே மாற்றியாகி விட்டதே!…’
‘ஆமா… ஆமா… சரிதான்…’ என்று இவன் சொல்லும்போது, அவன் அப்பா அம்மா வைத்த ராஜப்பன் நாயர் என்ற பெயரை அவனாகத்தான் மாற்றி இப்போதைய சத்திய மூர்த்தி என்ற பெயரைச் சூட்டிக்கொண்டான் என்பது இவனுக்கு ஞாபகம் வந்தது.
மூர்த்தி கையிலிருந்த புத்தகத்தை அந்த டீப்பாயில் வைத்தான்.
‘இது என்ன வேதாந்த புத்தகம்?’ என்று கேட்டவாறு இவன் கையில் எடுத்தான்.
‘இல்லை… இல்லை வேதாந்த புத்தகம் இல்லை… ஃபுரொபஸர் குருவிளையைப் பார்க்கப் போயிருந்தேன். பி.எஸ்.ஸி. வகுப்புக்காக அவர் எடிட் செய்து பிரசுரித்திருக்கும் கொஞ்சம் இங்கிலீஷ் மாடன் போயம்ஸ்…’
‘இப்போதும் லிட்ரேச்சரில் ஈடுபாடுண்டா?’ என்று இவன் கேட்கும்போது, ஒரு காலத்தில் பால் உணர்ச்சிகளை வைத்தே கால ரீதியில் திறம்பட ஆங்கிலத்திலும் தமிழிலும் மூர்த்தி எழுதிய கதைகளும் கவிதைகளும் இவனுக்கு ஞாபகம் வந்தது.
‘லிட்டரேச்சரிலுள்ள ஈடுபாடு அப்படி சீக்கிரத்தில் விட்டுப் போகக் கூடியதா?… இப்போது மறுபடியும் நான் தென்காசி பக்கத்தில் ஒரு காலேஜில் இங்கிலீஷ் ஃபுரொபஸர் உத்தியோகத்தில் இருக்கிறேன் என்பது உனக்குத் தெரியுமா…?’
‘அப்படி என்றால் உன் ஸ்பிரிச்சுவல் ஃபீல்ட்…?’
‘அதுக்காகத்தான் இந்த உத்தியோகத்தை ஏற்றுக் கொண்டேன். என் ஒருத்தன் வயிற்றுப்பாடு எப்படியும் கழியும். ஆனா தமிழ்நாட்டில் ஒரு மடமும் கோவிலும் கட்டணும்ண்னு என் குரு உத்தரவு போட்டிருக்கிறார். அந்த வேலையை நாம் துவக்கி வைத்து விட்டால், பிறகு கடவுள் முடித்து வைப்பார்… அதுக்குச் சுயமாய் உழைத்துக் கொஞ்சம் பணம் சம்பாதிக்கணும். அதுக்காகத்தான் இந்த வேலையை ஒத்துக்க அவர் என்னை உபதேசிச்சு அனுப்பி வைத்தார். இப்போ அங்கேதான் ஒரு வீட்டில் தனியாக வாசம். அடிக்கடி இங்கே ஆசிரமத்துக்கு வந்தும் போயும் இருக்கேன்.’
இவர்கள் பேச்சில் எந்த சுவாரஸ்யமும் தோன்றாமல் இவன் மகன் மடியிலிருந்து மெல்ல கீழே இறங்கினான். ‘டேய்… மாமாவுக்கு காப்பி…’ என்று விட்டு சுதாரித்துக்கொண்டு மூர்த்தியிடம் ‘இப்போ… சன்யாசி ஆன பிறகு காப்பி, டீ எல்லாம் குடிப்பதுண்டா…?’ என்று கேட்டான். ‘ஓகோ… அதிலொண்ணும் பத்தியமில்லை…’ என்று அவன் சொன்னபோது, மகனிடம் ‘அம்மாவிடம்போய் மாமாவுக்குக் காபியும் பழமும் வாங்கி வா பார்ப்போம்!’ என்றான்.
எங்கே சாமியார் தன்மீது பாய்ந்து விடுவாரோ என்று அஞ்சிய வாறு பையன் வீட்டினுள் சென்று மறைந்தான்…
‘பாத்ரூம் அங்கேதானே…’ என்று கேட்டவாறு மூர்த்தி எழுந்தான். இதற்கு முன்னால் இங்கே வீட்டிற்கு வரும்போதும் அவன் இதைத்தான் முதலில் விசாரிப்பது வழக்கம் என்பது ஞாபகம் வர ‘ஆமாம்…’ என்று அவன் சொன்னதும் மூர்த்தி குடையை மூலையில் சார்த்தி வைத்துவிட்டு, பக்கத்துக் கதவு வழியாகக் கொல்லையில் இறங்கிச் சென்றான். இவன் வீட்டிற்குள் எழுந்து சென்றபோது, ‘அந்தச் சுவாமியார் யாரு…’ என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் மாலதி. ‘பூச்சாண்டி சாமியாரா…’ என்று கேட்டார்கள் குழந்தைகள்.
‘அவனைத் தெரியாதா…? நம்ம சத்திய மூர்த்தி. முன்னால் அடிக்கடி இங்கே வருவான் அல்லவா…! ஓரிரு தடவை இங்கே சாப்பிட்டிருக்கிறானே…’
‘ஓ… அவனா… இவர்… இப்போ…?’
‘ஆமா… இப்போ… இப்படி.’
‘கல்யாணம்…’
‘செஞ்சுக்கலை… ம்… அவன் பாக்கியசாலி.’
‘ஆமா… உங்களுக்கு இப்போ அஞ்சாறு குறைஞ்சு போச்சு.’
‘சரி… சரி… சீக்கிரம் காப்பி கொண்டு வா…’ என்றுவிட்டு இவன் வெளி வராந்தாவிற்கு வந்தபோது மூர்த்தி நாற்காலியில் விச்ராந்தியாக சாய்ந்துகொண்டிருப்பது தெரிந்தது.
‘நீ ரொம்ப இளைச்சுப் போயிட்டே…! ஜடா முடியிலும் தாடி மீசையிலும் இருக்கும் செழிப்பு உடம்பில் காணல்லையே… ஏன்…?’
‘உயிர் வாழ மிகவும் அத்தியாவசியமான குறைந்த அளவுதான் நான் சாப்பிடுவது வழக்கம், அதுவும் சுயமாகத் தயாரிச்சு.’
காப்பியும் நேந்திர பழங்களும் வந்தன…
அவன் எடுத்துச் சாப்பிடும்போது இவன் கேட்டான்; ‘நீ உங்க அப்பா அம்மாவுக்கு மூத்த மகன் அல்லவா….?’
‘ஆமாம்… என் தங்கச்சி கோயம்புத்தூரில் டாக்டராக இருக்கிறாள். தம்பி என்ஜினியரிங் பாசாகிவிட்டு வேலைக்காக அலைந்துகொண்டிருக்கிறான்…’
‘உங்க அப்பா வேலையிலிருந்து ரிட்டயர் ஆகியிருப்பாரே…’
‘ரிட்டயராகி மூன்று வருஷம் ஆச்சு…’
‘நீ அப்பா அம்மாவைப் போய்ப்பார்ப்பதுண்டா…?’
‘நம்மால் யாரும் வருத்தப்படக் கூடாதுண்ணு என் குரு அடிக்கடி என்னை வீட்டுக்குச் சொல்லி அனுப்புவார்… நான் போய் அப்பாவையும் அம்மாவையும் பார்த்துவிட்டு அம்மா கையாலே ஒரு நேரம் சாப்பிட்ட பின் ராத்திரி படுக்க மறுபடியும் ஆசிரமத்துக்கு வந்துடுவேன்.’
‘மூத்த மகன் நீ மட்டும் இப்படி சாமியார் ஆகி விட்டதில் உன்னைப் பெற்றவங்களுக்கு வருத்தமில்லையா…?’
இப்போது அவன் சிரித்தான்.
‘இருக்கலாம்… ஆனா… அதைப்பற்றி நான் கவலைப்பட்டுக்கிட்டிருந்தால் என் வாழ்க்கை என்ன ஆவுது!’
‘உன் வாழ்க்கைக்கு கெடுதி விளைவிப்பதையா பெற்றவங்க செய்வாங்க…’
‘அதென்னவோ எனக்குத் தெரியாது. ஆனா என்னைப் பொறுத்த வரையில் பெற்றவங்களும் சுயநலக்காரங்கதான்… புதுமுக வகுப்பு பாசானபின் வேதாந்தம் படிக்கத்தான் எனக்கு ஆசை… ஆம், அவங்களுக்குப் பையனின் விருப்பு வெறுப்புக்களைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை… பணம் அதிகமாக சம்பாதிக்க முடியும். என்ஜினியரிங்குக்கு நான் திரும்ப வேணுமுண்ணு என்னை நிர்ப்பந்திச்சாங்க… அவுங்க சுயநலத்துக்காக என் வருங்கால வாழ்க்கையைப் பாழாக்க என்னால் முடியாது… அவரவர் துறையை அவரவர்தான் தேர்ந்தெடுக்கணும், அதில் தலையிட பெற்றோர்களுக்கும் உரிமை கிடையாது…’
‘தன் துறை எது என்று தேர்ந்தெடுக்கப் போதிய வயசு வராத காலத்தில் பெற்றோர்கள் அதுக்கு நமக்கு உதவி செய்தால், அதைச் சுயநலமுண்ணு எப்படி உதறித் தள்ளி விட முடியும்…? என்னைத்தான் எடுத்துக்கோயேன். முழு நேர எழுத்தாளனாக வேணுமுண்ணு எனக்குக் கொள்ளை ஆசையிருந்தது… என் அப்பா தலையிட்டதால் இப்போ ஒரு ஆடிட்டராக என்னால் முடிந்தது. பைத்தியக்காரத்தனமான என் ஆசையிலிருந்து என்னைக் காப்பாற்றிய என் அப்பாவுக்கு இந்த ஜன்மம் பூராவும் கடன் படாமல் இருக்க என்னால் முடியுமா…!’
‘அது உன் அனுபவம்… எனக்கு அப்படி அல்ல… கடைசியில் என்ஜினியரிங்குக்கும் வேதாந்தத்துக்கும் ஒரு மத்திய மார்க்கம் என்ற ரீதியில் தான் லிட்டரேச்சர் வகுப்பில் நான் சேர்ந்தேன்… இனியும் அவுங்க சந்தோஷத்துக்காகவென்று வீடு, கல்யாணம், குழந்தை குட்டிகள், வேலை முதலிய பாத்தியதைகளில் அகப்பட்டு உழன்று கொண்டிருந்தால் என் லட்சியம், சாந்தி இவையெல்லாம் என்ன ஆவது…?’
மேலும் இவ்விஷயத்தில் அவனிடம் வாதிட வேண்டாமென்று இவன் மௌனமானான்…
‘சரி… இன்று என்னமோ ஹர்த்தால்போல இருக்கு. பஸ், டாக்ஸி ஒண்ணும் ஓடல்லை. எனக்கு இப்போ ஆசிரமத்துக்குப் போகணும், இங்கேயிருந்து பத்து மைல் இருக்கு… நீ கார் வாங்கியிருக்கே இல்லே? நீயும் ஆசிரமத்துக்கு வந்து சுவாமியைத் தரிசித்தது போலவும் இருக்கும்…’
‘அதுக்கென்ன… போகலாமே.’
காரின் முன் ஸீட்டில் மூர்த்தியை உட்காரச் சொல்லிவிட்டுப் பக்கத்தில் உட்கார்ந்து இவன் காரை ஸ்டார்ட் செய்தபோது ‘நீதான் டிரைவ் பண்ணுகிறாயா…? டிரைவர் வச்சுக்கவில்லையா…?’ என்று கேட்டான் மூர்த்தி.
‘அதுக்கெல்லாம் உள்ள வக்கு இல்லை… ஆபீஸ் லோனில் வாங்கியது. மாசா மாசம் சம்பளத்தில் இருநூறு ரூபாய் ரிக்கவரி, தவிர மெயின்டனன்ஸுக்கு இருநூறு ரூபாயாவது வேணும். பெரிய கஷ்டமாக இருக்குது. இதை வாங்கினது அசட்டுத்தனம். எப்படியும் விற்று லோனை திருப்பி அடைச்சாத்தான் நிம்மதி…’
சந்தடி மிக்க நகரத்தின் தெருக்களை எல்லாம் கடந்து ஆள் அரவமில்லாத கட்டை ரோடு வழியாகக் கார் ஓடிக் கொண்டிருந்தது. முக்கிய வீதியைத் தாண்டி அகலம் மிகவும் குறைந்த பாதைகளை மூர்த்தி வழி காட்டிக் கொண்டிருந்தான். ஒளியும் இருளும் சங்கமிக்கும் த்ரிசந்தியா வேளையில் ஸ்ரீபுரக்கோணம் ஆசிரம நடையில் வந்து கார் நின்றது.
அந்தி பூஜை துவங்கும் நேரம்… இவனைப் பிரகாரத்தில் உட்காரச் சொல்லி விட்டு மூர்த்தி உள்ளே போனான். அங்கே முதல் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ஆசிரமத்தின் ஸ்தாபகரான ஹனுமான் சுவாமிகளின் திருவுருவப் படத்தையும் இரண்டாவது மண்டபத்தில் பிரதிஷ்டை பண்ணியிருந்த சாந்த மோகனமான சீதாராம விக்கிரகங்களையும் பார்த்தவாறே ஒரு மோன தவத்தில் மனத்தை அடக்கி நிறுத்த பிரயத்தனம் செய்துகொண்டிருந்தான் இவன்.
புஷ்பங்களைத் தொடுத்துக்கொண்டிருந்த சில கிராமத்துப் பெண்கள்… தீபாராதனை தொழ வந்திருக்கும் ஒரு சில பக்தர்கள்… மற்றபடி எந்த ஆள் அரவமும் இல்லை.
சற்று நேரத்தில் குளித்து இடுப்பில் ஒரு துண்டை மட்டும் உடுத்தி, சீதாராம கோவிலின் முன் சுடர் விட்டுக்கொண்டிருந்த குத்து விளக்கின் கீழே வந்து உட்கார்ந்துகொண்டு எழுத்தச்சன் ராமாயணத்தை ராகமாய் வாசிக்கத் தொடங்கினான் மூர்த்தி…
சுந்தர காண்டத்தின் கிளிப்பாட்டு வரி வடிவங்கள்…
பக்கவாட்டிலிருந்த குடிசைக்குள்ளிருந்து சுவாமிகள் வேகமாய் கோவிலுக்கு வந்தார்… இடுப்பில் கஷாயத் துண்டு… ஜடாமுடி, தாடி மீசை… கம்பீரமான தோற்றம்…
முதலில் அவருடைய குரு சுவாமிகளான அனுமான் சுவாமியின் சமாதியில் பூனை… தீபாராதனை… அடுத்தது சீதாராம ஆலயத்தில் தீபாராதனை… கற்பூரத் தட்டை உள்ளங்கையிலேந்தி தன் முகத்தின் நேர் காட்டியவாறு, ஜிகு ஜிகுவென்று மேலெழும்பிச் செல்லும் கற்பூர ஜ்வாலையின் ஆவியில் கரு விழிகள் இரண்டையும் மேலே நெற்றிப் பொட்டுக்குள் செருகி கால் விரல் நுனியில் அவர் நிற்கும் தோற்றத்தைப் பார்க்கையில் இவனுக்கு மயிர்க் கூச்செறிந்தது.
கற்பூர ஜ்வாலையைத் தொட்டு விழிகளில் ஒற்றி விட்டு நெடுஞ்சாண் கிடையாக அவர் பாதங்களில் விழுந்து வணங்கினான் இவன். கட்டி கற்பூரத்தை அள்ளி அள்ளி அவர் கையில் எரிந்து கொண்டிருக்கும் தட்டில் போட்டுக்கொண்டிருந்தான் ஒரு சீடன். யாகத் தீ போல் மேலெழும்பும் கற்பூர ஜ்வாலை இருந்த தட்டை கையில் ஏந்தி தாண்டவமாடத் தொடங்கினார் அவர். இவன் பக்கத்தில் வந்தபோது அந்தக் கற்பூரத் தட்டை இவன் கையில் தந்து விட்டு வாங்கினார் சுவாமிகள். ஒரே ஒரு கணம்தான்… ஆனால், அதற்குள் அந்தச் சூடு விறுவிறுவென்று இவன் உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை ஆரோகித்து அவரோகித்தது… அவர் இவனைக் கட்டிப்பிடித்து தன் ஜடாமுடியில் இவன் தலையைப் படார் படார் என்று மோதிக் கொண்டபோது அவர் சிரஸின் உஷ்ண சக்தி தன் உச்சிக் குழிக்குள் பீறிட்டுப் பிரவகிப்பது போல் ஓர் அலாதி அனுபவம்.
அந்த அனுபவத்தின் மாய மயக்கம் கலையும் முன் சுவாமிகளிடமும் மூர்த்தியிடமும் விடைபெற்றுக்கொண்டு காரில் வந்து உட்கார்ந்ததுதான் இவனுக்குத் தெரியும்… காரை ஸ்டார்ட் பண்ணி ஓரிரு மணி நேரம் ஒட்டியும் தனக்குத் தெரிந்த முக்கிய வீதிக்கு வந்து சேராமல் கார் வேறெங்கெங்கோ ஓடிக் கொண்டி ருப்பதுபோல் இவனுக்குப் பட்டது. வழி கேட்க பாதையில் யாரும் தென்படவுமில்லை. காரின் வெளிச்சம் தவிர ரோடில் வேறு ஒளி இல்லை. காரை நிறுத்தத் தோன்றவோ, முடியவோ செய்யாமல் வாயு வேகம், மனோ வேகமாக ஓடிக் கொண்டிருப்பது போலவும் ஒரு விசித்திர பிரமை…
இவன் சுய உணர்வு வந்து கண்ணைக் கசக்கியவாறு சுற்று முற்றும் மிரண்டுபோய்ப் பார்த்தபோது…
வெளுத்துக் கொண்டிருந்த கிழக்கின் ஒளியில் ஸ்ரீபுரக்கோணம் ஆசிரமத்தின் முன்னால் தன் கார் கிடப்பது போலிருந்தது அவனுக்கு.
– 22.10.1972
– சுதேசமித்திரன் 11.1972
– இரண்டாவது முகம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2012, கிழக்கு பதிப்பகம், சென்னை.