கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 22, 2024
பார்வையிட்டோர்: 2,602 
 
 

நாஞ்சிக்கோட்டை போஸ்டல் காலனியில் பிளம்பிங் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது யாரோ செல்லில் அழைத்திருந்தனர். கையில் பிவிசி பைப்பை ஒட்டும் சொல்யூசன் வைத்துக் கொண்டிருந்ததால், செல்லை எடுக்க முடியவில்லை.

அரை மணியில் வேலை முடிந்து, கையை நன்றாக கழுவி, தேங்காய் எண்ணெய் தேய்த்ததால் பிவிசி பைப்பை ஒட்டும் சொல்யூசன் சுத்தமாக போய்விட்டது. செல்லை எடுத்து பார்த்தேன். சிவகுமார் அழைத்திருந்தான், அழைத்தேன். உடனே எடுத்து விட்டான்.

என்ன கூப்டிருந்தியே, ஏதாவது செய்தியா…?

ஆமா, நடு அக்காவ மெடிக்கல்ல சேத்துருக்காங்க. ஐசியூல வச்சிருக்காங்க, நா இப்ப மன்னார்குடியில இருக்கேன், வர கொஞ்சம் லேட் ஆவும் போல. நீ பக்கத்துல இருந்தா போயி பாத்துட்டு சொல்லு.

ஏன்? என்னாச்சி? ரெண்டு மாசம் முன்னே போய் பாத்துட்டு பஞ்சாயத்து பண்ணிட்டு தான வந்தோமே, சரி உடனே போய் பாக்குறேன்.

நாஞ்சிக்கோட்டையிலிருந்து குறுக்கே நியூஹவுசிங் யூனிட் வழியாக புது பஸ்டாண்டு பின்புறம் சென்று மெடிக்கல் காலேஜ் வந்து சேர்ந்தேன். ஐசியூ எங்கே என விசாரித்து அங்கு போய் பார்த்தேன். ஐந்தாண்டுகளில் நிறைய மாற்றம், மொடிக்கல் காலேஜ் பெரிதாக விரிவடைந்திருந்தது. முந்நூறு படுக்கைகள் கொண்ட பெரிய கட்டிடமும் அதிலடக்கம்.

பெரியக்காவும் சின்னக்காவும் முன்பே வந்திருப்பார்கள் போல, வெளியே கண்களில் கலக்கமும் முகம் அழுகையை எதிர்பார்த்து இருந்தது…

விசாரித்த போது தூக்க மாத்திரை அதிகமாக சாப்பிட்டதால் விபரீதமாகி விட்டது. நடு அக்காவின் கணவரே ஆம்புலன்சில் அழைத்து கொண்டு வந்து சேர்த்ததாக சொன்னார்கள். டோஸ் அதிகமாகி விட்டதால் இதுவரை கண்விழிக்கவில்லை.

தலைமை மருத்துவர் வந்து பார்த்து விட்டு அவரின் ஆலோசனையின் படி சலைன் பாட்டிலில் மருத்துகள் கொடுத்து அக்காவின் உடலில் ஏறிக்கொண்டிருந்தது. அங்கு வேலை செய்யும் நண்பர் மூலம்…

ஆழ்ந்து விசாரித்ததில் பிழைத்து விடுவார், மூளை பாதித்து மனநிலை சரியாக இருக்காது என்றனர். இதை எப்படி சிவாவிடம் சொல்வது. வேறு வழி இல்லை, சொல்லித் தான் ஆக வேண்டும். நடு அக்காவின் கணவர் அங்கிருந்த பெரிய பெஞ்சில் அமர்ந்திருந்தார், என்னை பார்க முடியாமல் தலை குனிந்திருந்தார்.

நான் செல்லை எடுத்து சிவாவை அழைத்தேன். இரண்டாவது ரிங்கிலேயே எடுத்து விட்டான்.

டேய் எப்போடா தஞ்சாவூர் வருவ . பெரியக்காவும் சின்னக்காவும் இங்க தான் இருக்காங்க.

சரி நடு அக்கா எப்படி இருக்கு அத மொதல்ல சொல்லு , நா கிளம்பிட்டேன் பைக்குல வர்றேன்.

ம். ஒகே பாத்துவா. இங்க நிலவரம் சரியில்ல. பதட்டப்படாம வந்துரு. பாத்துக்கலாம் என்றேன்.

என்னடா சொல்ற ஒன்னும் பயப்படுற மாறி இல்லையே?

அப்படியெல்லாம் இல்ல, வந்துரு பேசிக்கலாம். கீழ மூணாவது கேட்டுகிட்ட நிக்குறேன். இல்லேன்னா வந்துட்டு போன் பண்ணு.

போனை கட் செய்து விட்டேன்.

இது போல ஆகுமென என்னைத் தவிர யாரும் எதிர்பார்க்கவில்லை. முன்பே ஒரு தடவை நான் சொல்லியிருந்தேன், அக்கா தற்கொலை செய்து கொள்வாள். அவளது நடவடிக்கை அப்படித்தான் இருக்கிறது, ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். அவள் கணவர் சரியாக பார்த்துக் கொள்ளமாட்டார்.

நாங்கள் பழகும் முன்பே சிவக்குமாரின் அக்காள்கள் மூவருக்கும் திருமணமாகியிருந்தது. நடு அக்காவிற்கு முதல் குழந்தை தவறிய இரண்டாண்டுக்கு பிறகு மீண்டும் கர்ப்பமாகியிருந்தார். மூவருமே அமைதியான, அழகான முகம் கொண்டவர்கள். அவர்களுடன் பழகும் யாரும் வெறுக்கவே முடியாத அளவுக்கு அன்பும் பாசமும் காட்டுபவர்கள். ஒரு தடவை நடு அக்காள் சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த நண்டின் தசைப்பகுதியை மட்டும் எடுத்து என்னை அருகே வரச் செய்து ஊட்டி விட்டிருக்கிறார். பல தடவை நீயும் என் சொந்த தம்பியைப் போலவே என எனது தலையில் தனது கையால் கோதுவார். அச்செயலை செய்யும் போது வெளிபடும் உள்ளன்பை சொல்ல வார்த்தைகள் இல்லை.

அவள் கணவர் பஞ்சாயத்தில் உதவியாளர் வேலை கூடவே சத்துணவு ஊழியர்களை கையாளும் பொறுப்பும் வழங்கப்பட்டிருந்தது. அதிகம் பெண்கள் புழங்கும் பகுதி என்பதால் எப்பொழுதும் யாராவது ஒரு பெண் அவரிடம் வேலை கேட்டோ, இடம் மாறுதல் குறித்தோ, அவர்கள் பகுதியில் ஏற்படும் இடர்கள் குறித்த புகார்களுடனோ வந்து காத்திருப்பது வழக்கம்.

அப்படி வரும் பெண்களில் பெரும்பாலும் கணவனை இழந்தவர்கள், கைவிடப்பட்டவர்கள், சரியான வருமானம் இல்லாதவர்கள். வந்து அவரிடம் வேலை கேட்டு மன்றாடுவதால் எப்பொழுதோ அவருள் விழித்துக் கொண்ட பெண் மோகம் கொண்ட மிருகம் அவ்வியாலாத பெண்களை தனக்கு சாதகமாக பயன்படுத்த ஆரம்பித்தார். நடு அக்காளுக்கு தெரியவர அப்பொழுதிலுருந்து இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டது. சில சமயம் பகலில் வீட்டிலேயே அவளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்து விட்டு, அழைக்கப்பட்டு வரும் பெண்களிடம் கூடினார். தூக்க மாத்திரை அதிகம் வழங்கப்பட்டதால் பிறந்த குழந்தை மூளை வளர்ச்சியில்லாமல் இருந்தது. மூன்று மாதததில் இறந்தும் விட்டது. மனதளவில் மிக அதிகம் பாதிகப்பட்டார்.

மேலும் தூக்க மாத்திரை வாங்கி வழக்கம் போலவே கொடுத்து ஏறக்குறைய பைத்திய நிலைக்கு கொண்டு வந்து விட்டிருந்தார். ஒரு கட்டத்தில் சிவா வீட்டிலும் என் வீட்டிலும் வைத்துக் கொண்ட போது தெளிவான சமயங்களில் நடந்ததை சொல்லி அழுவார் . கணவரை கூப்பிட்டு விசாரித்த போது அக்காள் மீதே குற்றம் சாட்டினார். அவர் கொடுத்து வந்த மாத்திரைகளை மருத்துவரிடம் காட்டி விசாரித்த போது அவர் செய்த செயலின் ஒட்டுமொத்த விளைவும் அக்காள் உடலில் மனதில் தெரிந்தது. உடல் பெருத்து, மனம் ஒரு நிலையில் இல்லாமல் இருந்தார். சமயங்களில் ஒரே இடத்தில் அமர்ந்து ஒரே பார்வையாக பார்த்துக் கொண்டிருப்பார்.

அப்பொழுதும் கணவரை விட்டுக் கொடுக்காமல் தான் பேசுவார். சரியாகி கணவர் வீட்டிற்கு கொண்டு விட்டு ஊரில் பஞ்சாயத்து வைத்து எச்சரித்து அவரை கணவர் வீட்டில் விட்டு வந்து ஐந்து வருடமாகிறது. அவ்வப்போது நேரிலும், போனிலும் பேசும்போது எதையும் வெளிகாட்டாமல் நன்றாக இருப்பதாக சொல்லுவார், நம்பினோம். இப்பொழுதோ ஐசியூவில்.

ஒரு மணி நேரத்தில் சிவா வந்து விட்டான். ஐசியூவில் உள்ளே அனுமதி மறுத்துவிட்டனர். மறுநாள் காலை தான் பார்க்க முடியும். மறுநாள் மதியம் கண்விழித்தார். யாரையும் அடையாளம் தெரியவில்லை. சிவா கதறிவிட்டான், மூன்று நாள் கழித்தே அடையாளம் கண்டு புன்னகைத்தார். சைகையால் அருகே அழைத்து என்னையும் என் சின்ன மகளையும் விசாரித்தார். நல்லவேளை எந்தவித பாதிப்பும் பெரிதாக இல்லை.

ஒரு வாரத்தில் டிச்சார்ஜ் செய்து விட்டனர். எனது விட்டிற்கு அழைத்து சென்று நன்கு பார்த்துக் கொண்டேன். எனது மனைவியும் ஒத்துழைத்ததில் மூன்று மாதத்தில் முற்றிலும் குணமாகி தெளிவாக பேசவும், பழைய அழகான பொலிவான முகக்களையும் வந்துவிட்டது.

கணவரை பார்க்க வேண்டும், பேசி வாழ்க்கையை இனிமேலாவது சரி செய்ய முடியுமா என்று கேட்க வேண்டுமென்றார்.

அழைத்தோம், வந்தார். சமதானம் பேசி, இனி இதுபோல நடக்காது திருத்திவிட்டேன், அக்காவை கண்ணுக்கு மேலாக பார்த்துக் கொள்வேன் என்றார்.

ஐந்து மாதம் எப்பிரச்சனையுமின்றி நன்றாக போனது. எனக்கும் சிவாவுக்கும் அக்காவை பார்க்கும் போதெல்லாம் மகிழ்வாக இருந்தது.

மாலை ஐந்து மணி இருக்கும் நடு அக்காள் செல்லில் அழைத்திருந்தார், எடுத்து சொல்லுக்கா? எப்படியிருக்க? என்று கேட்டேன்.

தம்பி மெடிக்கல் காலேஜிக்கு வா என்றார். குரலில் எவ்வித பதற்றமும் இல்லை.

நான் பதறி என்னாச்சிக்கா? அங்க எதுக்கு போன? உடனே வாரேன்.

சிவாவுக்கு தகவல் சொல்லிவிட்டு என்னாச்சோ என்ற பதற்றத்தோடு போய் சேர்ந்தேன்.

மூன்றாவது கேட்டுக்கருகிலிருக்கும் மரத்தடியில் நின்றிந்தார். வெற்றுப் புன்னகையோடு.

முகத்தில் தீர்மானமான முடிவு தெரிந்தது.

கணவரை சேர்த்திருப்பதாக சொன்னார்.

எனது தலையை கோதியபடி இனி உனக்கும் சிவாவுக்கும் தொந்தரவிருக்காது. கையிருந்த டிபன் பாக்ஸை திறந்து கொண்டே, அவன் திருந்த மாட்டான்யா. அதனால என்றபடி டிபன் பாக்ஸை காண்பித்தார். அதில் கணவரின் வெட்டப்பட்ட ஆண்குறி இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *