இரத்த மாதிரியை பரிசோதித்து ராமச்சந்திரனுக்கு blood cancer என்று உறுதிப்படுத்திவிட்டார்கள். அதிகபட்சமாக இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தான் என்று அவனுக்கு நாள் குறித்து discharge செய்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். ராமச்சந்திரனுக்கு கல்யாணமாகி ஒரு மகளுண்டு ராமச்சந்திரனுக்கு அப்பா தவறிவிட்டாலும் அம்மா இருக்கிறாள். கூடப் பிறந்தவர்கள் ஒரு அக்கா மட்டுமே, அவள் கல்யாணமாகி திருச்சியில் வசிக்கிறார்கள். அம்மாவைப் பார்க்க அவ்வப்போது வந்து போவதுண்டு. என்ன அக்காவும், மாமனும் காசிலேயே கண்ணாய் இருப்பார்கள்.
அப்பா வச்ச அச்சகத்தைத்தான் ராமச்சந்திரன் நடத்தி வருகிறான். சீசனுக்கு ஏற்றபடி வரும்படி கூடும் குறையும். இப்ப இருக்கிறது சொந்தவீடுதான். கவனிப்பு இல்லாம தரிசா கிடந்த இரண்டு ஏக்கர் நிலத்தை விளைச்சலுக்கு தகுந்ததாய் மாற்றி கிரயத்துக்கு விட்டிருக்கான். இவன் சம்பாரிச்சான்னு சொல்லிக்கும்படியாய் ஒரு காலிமனை வாங்கி போட்டிருக்கான். அச்சகம் வீடு நிலம்னு சுத்திகிட்டு இருந்த ராமச்சந்திரன் வாழ்க்கையில இடிதான் விழுந்து போச்சி. சுதாரிக்காம வாயில ரத்தம் வர்ற வரையிலும் நாட்டு வைத்தியம் தான் பார்த்துகிட்டு இருந்திருக்காங்க. இப்ப ரொம்ப முத்திபோச்சின்னு டாக்டர்களும் கைவிரிச்சிட்டாங்க.
வீட்டுக்கு வந்தவுடன் ராமச்சந்திரன் ஆத்துப் பக்கம் சென்றுவிட்டான். கல்லை தண்ணீரில் தூக்கிப் போட்டபடி அவனுடைய சிந்தனைப் பறவை வானவெளியை வட்டமடிக்க ஆரம்பித்தது. இனிமேல் எப்படி வாழ்க்கையை எதிர்கொள்வது என யோசிக்க ஆரம்பித்தான். ஆசைகளை குழிதோண்டி புதைத்த பின்பு புலன்களின் வழியே வெளியே அலைந்து கொண்டிருந்த மனது உண்முகமாக திரும்பியது. தன்னையே சாட்சியாக பார்க்க ஆரம்பித்தான். நான் யார் என்று தன்னை தன்னுள் தேடினான். தானே கேள்வி கேட்டு தானே பதிலும் சொல்லிக் கொண்டான். எல்லோரும் சாகப் போகின்றார்கள் நாம கொஞ்சம் முந்திகிட்டோம் அவ்வளவு தான். வாழ்க்கைப் பயணத்துல உறவுகளையெல்லாம் விட்டுட்டு நான் மட்டும் தனியா விடைபெற்றுக் கொள்வது கொடுமையான விஷயம் தான். நாற்பது வருஷம்ங்கிறது கண்ணிமைக்கிற நேரத்துல ஓடிப் போய்ச்சி இல்ல. அழிஞ்சு போற உடலுக்குத்தான் எவ்வளவு ஆடம்பரம் தேவைப்படுது. புணுகும், ஜவ்வாதும் இந்த சாம்பலுக்குத்தாங்கிறது யாருக்காவது உரைக்குதா என்ன.
இன்னிக்கு வரை எனக்கு நடந்த ஒவ்வொரு நல்ல காரியத்திலேயும் அம்மா கூட நின்னு இருக்கா. இந்த வயசுலேயும் அவ என் கூட இருக்கிறதுக்கு நான் கொடுப்பினை செஞ்சிருக்கணும். சின்ன முள்ளுக் குத்துனாக்கூட நான் தாங்கமாட்டேன்னு அவளுக்குத் தெரியும். சின்ன வயசுல காட்டுல சுள்ளியைப் பொறுக்கிட்டு வந்து வெந்நீர் வச்சி தான் என்னைக் குளிப்பாட்டுவா. பள்ளிக் கூடத்துல மிஸ் எம்மேல கையை வச்சிட்டான்னு கோபப்பட்டா பாரு, அதுதான் முதல் தடவையா அவ கோபப்பட்டு நான் பார்த்தது. முந்தாணியில காசை மட்டுமில்ல எங்களையும் தான் சேர்த்து முடிஞ்சு வச்சிருந்தா. அம்மாக்கள் குழந்கைகளுக்காகவே கோயில் படியேறுகிறார்கள். குழந்தைகளுக்காகவே இறைவனிடம் பிச்சைக் கேட்கிறார்கள். தாய்மை அடைவதன் மூலம் பெண்கள் தெய்வமாக மாறிவிடுகிறார்கள். பெற்றெடுத்தவுடன் அவளுடைய உலகம் குழந்தைகளுக்கு மட்டுமானதாக மாறிவிடுகிறது.
அச்சகம் விலைக்கு வந்தபோது அதைவாங்க முகம்கோணாமல் அப்பாவிடம் தாலியை கழட்டிக் கொடுத்தாள் அடகு வைக்க. தீபாவளியன்று நாங்கள் புத்தாடை அணிந்து கொண்டிருக்க அவள் நைந்த புடவையுடன் பலகாரம் செய்து கொண்டிருப்பாள். இன்னும் அவள் கருவறையின் கதகதப்பு எனக்கு வேண்டியதாய் இருக்கிறது. தாய்மை தெய்வத்தைவிட உயர்ந்தது என்று எனக்கு இப்போதுதான் புரிகிறது. ஒருவனிடம் அன்பிற்காக மட்டுமே அக்கறை கொள்வது கடவுள் தன்மையைவிட உயர்ந்தது அல்லவா. இன்னும் அவள் கண்களின் மூலமாகத்தான் நான் உலகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவள் இல்லாதிருந்தால் வாழ்க்கைச் சகதியில் விழுந்து புரண்டிருப்போம் நாங்கள். பழிபாவத்துக்கு அஞ்ச வேண்டும் என்பதை அவள்தான் எங்களுக்கு கற்றுக் கொடுத்தாள்.
அம்மாக்களின் வாழ்க்கை கரிபடிந்த அடுக்களையில் ஆரம்பித்து அடுக்களையிலேயே முடிந்துவிடுகிறது. படியளப்பவளை ஏன் அன்னபூரணி என்ற பெண் தெய்வமாக்கினார்கள் இப்போது என்னால் உணரமுடிகிறது. அப்பா கிழித்த லெட்சுமணக்கோட்டை அம்மா தாண்டியதே இல்லை. எந்த முடிவையும் அப்பாவே எடுப்பார். தன்னை ஆலோசிக்கவில்லையே என்ற குறை அம்மாவிடம் இருந்ததாகவே தெரியவில்லை. அவளின் தியாகத்திற்கு விலையாக வேறென்ன என்னால் கொடுக்க முடியும். எங்களைத் தொந்தரவாய் அவள் எப்போதும் கருதியதில்லை. அவள் அப்பாவிடம் பஞ்சப்பாட்டு பாடி நாங்கள் பாரத்ததில்லை. தெய்வாம்சம் மிகுந்த பெண்கள் பணம் கொண்டுவந்தால் பல்லிளிப்பதும் இல்லாவிட்டால் எரிந்து விழுவதுமாக இருப்பார்களா என்ன? வாழ்க்கை கொடுத்தவனை கடவுளாக பார்க்கும் பெண்களை இந்தக்காலத்தில் தேடிப் பிடிக்க முடியுமா. அவள் மீது கொண்ட மதிப்பினால் தான் அப்பா சமையலைப் பற்றி எப்பவும் குற்றம் சொன்னதே இல்லை.
அப்பாக்கள் எப்பவுமே சைக்கிள் கற்றுக் கொடுக்கும்போது சிறிது தூரம் சென்ற பின் பிடியை விட்டுவிடுவார்களே ஏன்? தான் பின்னால் பிடித்துக் கொண்டு வருகிறேன் என்ற தைரியத்தில் அவன் ஓட்ட வேண்டும் என்பதற்காகத்தானே. பறவை தன் குஞ்சை கூட்டைவிட்டு கொத்தித் தள்ளும் கீழே விழுவதற்கு முன் சிறகடித்து பறக்க ஆரம்பித்துவிடும் அந்தக் குஞ்சு. அந்தக் குஞ்சு தாயான பிறகு தான் தெரிந்து கொள்ளும் தாய் தன்னை ஏன் கொத்தித் துரத்தினாள் என்று. அப்பா ஏதாவதொரு சிந்தனை ஓட்டத்தில் இருந்தாலும் எங்களைப் பார்த்தவுடன் அவர் முகத்தில் புன்னகை அரும்புவதை எப்படி என்னால் மறக்க முடியும். அவருக்கு ஏதாவது பலகீனங்கள் இருந்தால் குடும்பக் கப்பல் மூழ்கித்தான் போயிருக்கும். எங்களுக்கு எதிராக அவர் சிகரெட் குடித்ததே இல்லை. அப்பாவுக்கு அந்தப் பழக்கம் இருந்ததென்று அம்மா சொல்லித்தான் எங்களுக்கே தெரியும்.
வெண்ணிலா வீட்டில் வீடுகட்டி குடிபோகிறார்கள், தெய்வானை வீட்டுக்காரர் அவளுக்கு நாலு பவுன்ல நகை வாங்கி போட்டிருக்கிறார்- இப்படி அம்மா அப்பாவிடம் அக்கம் பக்கத்து சங்கதியை வாய் துடுக்காய் பேசியதே கிடையாது. அம்மா இதுவரை தனக்கென்று எதுவும் யாரிடமும் கேட்டதே கிடையாது. கொடுத்தது தப்படி என்றாலும் அதை வைத்தும் குடும்பம் நடத்த தெரிந்திருந்தது அவளுக்கு. அப்பா எம்டனாக இருந்தாலும் யாரிடமும் அவரை விட்டுக் கொடுத்து பேசமாட்டாள். அப்பா யாரிடமாவது ஏமாந்து வந்து நிற்பாரே ஒழிய அவர் யாரையும் ஏமாற்ற மாட்டார். எதற்கு ஆசைப்பட்டாலும் அதற்கு தனக்கு தகுதி இருக்கிறதா என தன்னைத் தானே கேட்டுக் கொள்ளும் ரகம் அவர். அப்பா இருந்தவரை எந்தக் கஷ்டங்களும் எங்களைத் தாக்கா வண்ணம் தடுப்புச் சுவராய் இருந்தார். இப்போது கூட அவர் வெளியூருக்கு சென்றிருக்கிறார் என்ற ஞாபகத்தில் தான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். இதோ எனக்கு நாள் குறித்துவிட்டார்கள். வெளியேறு வாசலை கடவுள் எனக்காக திறந்து வைத்துவிட்டார். என்னை அழைத்துச் செல்ல என் அப்பா ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்.
எனக்கு ஒரு துணை வேண்டும் என்பதற்காக அல்ல. அம்மாவுக்கு மருமகள் வேண்டும் என்பதற்காகத்தான் நான் விசாலாட்சியை கல்யாணம் செய்து கொண்டேன். இதை அவளிடம் தெரிவித்த போது “அதனால தான் அத்தைக்கு ஒருகுறையும் வைக்காம இன்னிக்கி வரை நடந்துகிட்டு வாரேன்” என்றாள். கல்யாணங்கிறது குதிரைக்கு கடிவாளம் போடுறமாதிரி. அக்கம் பக்கம் பாக்காம நேரா ஓடிகிட்டு இருக்கணும. இன்று வரை நாலு பேர் என்ன நினைப்பார்களோ என்றெண்ணித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இருட்டில் கல் என்று தண்ணீரில் தூக்கி எறிந்து கொண்டிருந்துவிட்டேன் விடிந்த போதுதான் தெரிந்தது அது வைரமென்று இப்பொழுது ஒரு வைரக்கல் தான் மீதமிருந்தது. வாழ்வும் அதுபோல் தானே. சர்க்காரின் சட்டம் கூட செல்லுபடியாகாத ஒரே இடம் சுடுகாடு தானே. பைபிளில் ஒரு வாக்கியம் வருமே உன்னுடையை தலைமுடி கூட எண்ணப்பட்டிருக்கின்றன என்று. ஏற்கனவே எழுதப்பட்ட விதிக்கு நானும் இரையாகப் போகிறேன். சதுரங்க காய் நகர்த்தலில் ஏதாவதொரு ராஜா கண்டிப்பாக வெட்டுப்பட்டுத்தானே ஆகவேண்டும். நடப்பதை தலைகீழாக நின்றாலும் நிறுத்த முடியாதல்லவா.
வாழ்க்கை சிலருக்கு வரமாகவும், சிலருக்கு சாபமாகவும் அமைந்துவிடுகிறது. எனக்கு வாய்த்தவள் அழுத்தக்காரி எதையும் சமாளித்துவிடுவாள். பூவும் பொட்டும் பறிபோய்விடுமே என்பதற்காகவாவது அவள் அழுது அரற்றத்தான் செய்வாள். இரவல் தந்தவன் கொக்கிப் போடும்போது சொந்த பந்தத்தைக் காரணம் காட்டியா தப்பிக்க முடியும். வாழ்க்கை ஆறு அடித்துச் செல்லப்படும் தூசி துரும்புகளைப் பற்றிக் கவலைப்படுமா என்ன. மேகங்கள் தன்னை இழப்பதில் சந்தோஷப்படலாம் ஆனால் மனிதன். மரணப்பாம்பு என்னை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக் கொண்டுள்ளது. மண்ணுடனான பிணைப்பை இறந்தபிறகும் விடமுடியாதல்லவா.
ஒருவர் இருப்பே இல்லாமல் போவதென்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய காரியமா. ஆட்டுவிப்பவன் தான்தோன்றி அல்லவா அவனுக்கு ஆசாபாசங்கள் புரியுமா என்ன. வியூகத்தில் சிக்கிய அபிமன்யூ நிலைதான் எனக்கு. இந்த கிழிந்த சட்டையை களைந்து எனது ஆன்மா புதிய சட்டையை அணிந்து கொள்ள தயாராகிவிட்டது. வாழ்க்கையின் போக்கு இப்படித்தான் செல்லுமென்று ஜோதிடத்தால் கூட கணிக்க முடியாது அல்லவா. உயிர் வெளியேறிவிட்டால் ஆணானாலும், பெண்ணானாலும் பிணம் தானே. வாழ்க்கையில் எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முடியாது தான். என் மூலம் பிழைக்க கற்றுக் கொண்டவர்களாவது என்னைப் பற்றி நினைப்பார்களா என்ன.
என் வீடேறி வந்த தெய்வத்திடம் எப்படி நான் விடைபெற்றுக் கொள்வது. அவளது தோழிகளிடம் அறிமுகப்படுத்துவதற்காகவாவது நான் தேவைப்படுவேன் அல்லவா. இந்தப் பாழும் உலகத்தில் அவளை அனாதையாக விட்டுப் போகிறேன் என நினைத்தால் எனக்கு அழுகை வருகிறது. மரணம் விடுதலையா கைவிலங்கா என்று யாரைப் போய் கேட்பது. எனக்குப் பின்னால் அவள் சிறகிழந்து நிற்கக்கூடாது அல்லவா. அவள் மாலை போடப்பட்டு சுவரில் மாட்டப்பட்டிருக்கும் எனது புகைப்படத்தை பார்க்கும் போதெல்லாம் என்ன நினைத்துக் கொள்வாள். அவள் மழலைக் குரலை மறந்து நான் போய் தான் ஆகவேண்டுமா. விதியின் கைகள் என் கழுத்தை இறுக்குகிறது. இந்த நினைவுகள் இறந்த பிறகும் எனக்கு சுமையாக கனத்துக் கொண்டுதான் இருக்கும்.
எவ்வளவு சொத்துபத்து இருந்தாலும் ஒருவனால் ஐந்து இட்லிக்கு மேல் தின்ன முடிகிறதா. அழகாயிருக்கிறேன் என்பதற்காக எப்போதும் நிலைக்கண்ணாடி முன் நின்றுகொண்டா இருக்க முடியும். அத்தியாவசிய செலவுக்காகத்தானே பணம் சம்பாதிப்பது. அக்கா பலனை எதிர்பார்த்து தான் எந்தக் காரியமும் செய்வாள். சொந்தமாக தொழில் செய்கிறான் ஃபாரினுக்கொல்லாம் ஏற்றுமதி செய்கிறான் என்று கூறித்தான் மாமனை அவளுக்கு கட்டி வைத்தார்கள். புக்ககம் புகுந்த பின்தான் சொன்னதெல்லாம் பொய் என அவளுக்கு தெரியவந்தது. அவன் சம்பாத்தியம் வாய்க்கும் வயிற்றுக்கும் சரியாய் இருந்தது. சுகபோகத்துக்கு ஆசைப்பட்டவள், ஆடம்பர வாழ்வுக்காக யாரை குழியில் தள்ளலாம் என சமயம் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு நான் இறந்தவிடுவேன் என்ற சேதி தேனாய் இனிக்கத்தான் செய்யும். இதோ எனது தேவஆட்டுக்குட்டியை நரிகளின் பாதுகாப்பில் விட்டுச் செல்கிறேன்.
மரணமென்பது மனிதனுக்கு தன்னோடு சம்மதப்பட்டது மட்டுமல்ல. அவ்வளவு சீக்கிரத்தில் அவனது நினைவுகள் முற்றிலும் அழியாது. வாழ்க்கை நாடகத்தில் எனது கதாபாத்திரத்தை நன்றாக செய்தேனா என்று கடவுளைத்தான் கேட்க வேண்டும். துயரக் கடவுளால் தான் மரணப் புத்தகத்தை எழுத முடியும். அற்புதங்கள் நிகழ்த்துவதற்கு இன்று இயேசு நம்மிடையே இல்லை. திருவிளையாடல் புரிவதற்கு இங்கு சிவனும் தவக்கோலத்தைக் கலைத்து எழுந்து வரப்போவதில்லை. மைதானத்தில் உதைபடும் கால்பந்தாய் விதி என்னை அங்கும் இங்கும் பந்தாடுகிறது. இந்தப் பாதை மரணவூருக்கு கொண்டுபோய் விடும் என்றால் நான் அதைத் தேர்ந்தெடுத்து இருப்பேனா. மழைத்துளி தோள் மீது பட்டவுடன் ராமச்சந்திரனுக்கு சிந்தனை கலைந்தது நினைவுப் பறவை மீண்டும் கூட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டது. மற்றவர்களுக்காக வாழ்ந்தது போதும் இனி இந்த இரண்டு மாதங்களாவது தனக்காக வாழ வேண்டும் என்று முடிவு செய்தவனாய் தெளிவான மனத்துடன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். வடக்குப் பக்கத்தில் பேரிகை போல் இடி முழங்கியது.
அருமையான எண்ண ஓட்டமுடன் கூடிய கதை; ஒவ்வொரு வாக்கியமும் படிக்கப் படிக்க மனதில் இறுகி, இலேசாக்குகிறது.
வாழ்த்துகள், மதியழகன்.