ஆபிசிலிருந்து சோர்வாக வீட்டிற்குள் வந்த அப்பா ராகவனை, வாசல் படியின் உள்ளே நுழைய விடாமல் …. இரு கைகளையும் குறுக்கே நீட்டி … மகள் அமுதா மறித்து நின்றாள்.
ராகவனுக்கு எவ்வளவு களைப்பாக இருந்தாலும், மகளின் மலர்ந்த முகத்தையும்,சுட்டித்தனத்தயும் பார்த்தால் போதும், மனசு உற்சாகமாகி விடும்.
“அப்பா .. இப்போ நான் ஒரு விடுகதை சொல்வேன். அதுக்கு நீங்க உடனே பதில் சொல்லணும். சரியா …?!”
என்று ஆர்வமாக கேட்ட மகளுக்கு, ராகவன் பதில் சொல்வதற்கு முன் … சமையல் அறையில் இருந்து, வேகமாக வெளியே வந்த அம்மா நந்தினி … மகளை அதட்டினாள்.
“அமுதா … என்ன அவசரம்? இப்படி அப்பாவை வாசலில் வச்சு குறுக்காட்டி கேட்கணுமா?! முதல்ல வழியை விடு . அவர் கை, கால் முகம் கழுவிட்டு , டிரஸ் மாத்திக்கிட்டு வரட்டும்.”
“பரவாயில்ல விடு நந்தினி . அவள் ஏதோ ஆர்வமா கேட்கிறா கேட்கட்டும்.”
என்று புன்னகையோடு சொல்லிக்கொண்டே ,அங்கே முன் அறையில் இருந்த நாற்காலியை இழுத்து போட்டு .. மகளின் முன்பு உட்கார்ந்தான்.
அம்மாவின் அதட்டலில் முகம் சுருங்கி போன அமுதாவின் முகம் , அவளின் அருகே அப்பா உட்கார்ந்ததும்… மறுபடியும் பிரகாசமானது.
ஒரு முறை எழும்பி குதித்து கைதட்டி சிரித்தாள். அவளின் மகிழ்ச்சியை பார்த்து ராகவன் சிரிக்க, அம்மாவை பார்த்து “வெவ்வே” என்று அமுதா பழித்து காண்பித்தாள்.
அமுதா..அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். அம்மா நந்தினி, வழக்கம் போல மாலையில் , மகளுக்கு தலையை அழகாக வாரி விட்டு , பூ வைத்து … பளபளப்பான முகத்தில் சிவப்பு நிறத்தில் பொட்டிட்டு, சிங்காரித்து இருந்தாள்.
“அதானே …உங்க பொண்ணு கிட்ட பேசுறதுன்னா, உங்களுக்கு சலிப்பு எல்லாம் பறந்துடுமே. பள்ளிக்கூடத்தில இருந்து வந்ததிலிருந்து இப்படித்தான்… எங்ககிட்டயும் ஒரு விடுகதைய சொல்லி உடனே அதுக்கு விடையை கேட்டு ஒரே தொல்லை பண்ணிட்டா ….
“பதில் தெரியலையா அப்ப ‘பாஸ்’ குடுங்கன்னு கையை நீட்டி எங்களை யோசிக்க விடாம அவசரப்படுத்தறா. பாஸ்ன்னு சொன்னதும் , அவளே விடையை சொல்லிட்டு, இந்த விடையை யாருக்கும் சொல்லக்கூடாதுன்னு ‘பிராமிஸ்’ பண்ணுங்கன்னு சத்தியம் வேற வாங்கறா. …ப்பா ..இவ ஆர்ப்பாட்டம் தாங்க முடியலை .!”
என்று நந்தினி சிரிப்போடும் சலிப்போடும் பேசினாள்.
“இந்த விடுகதை என்ன அவ்வளவு பெரிய இடியாப்ப சிக்கலா… அதெல்லாம் அவ அப்பனுக்கு தெரியும். அவன் அமுதாவோட தாத்தா மாதிரி கற்பூர புத்தி.. பட்டுனு விடையை சொல்லிடுவான்.”
என்று அந்த அறையின் மூலையில் உட்கார்ந்து இருந்த பாட்டி…’ராகவனின் அம்மா’ சொல்ல…
“ம்ம் ..அதையும் பார்த்துரலாம் … அப்பா.. இங்க பாருங்க ,, என் விடுகதையை கேட்டதும் உடனே பதில் சொல்லணும். இங்க யாருகிட்டேயும் கேட்க கூடாது. தெரியலன்னா ‘பாஸ்’ ன்னு என் கையை தொட்டு சொல்லணும் ..சரியா .?!.”
அபிநயத்தோடு பேசுகிற மகளை ..புன்னகையோடு பார்த்துக்கொண்டே… சரி என்பது போல ராகவன் தலையை ஆட்டினான்.
அமுதா அந்த விடுகதையை சொல்ல ஆரம்பித்தாள்.
“ஒரு மூன்று எழுத்து சொல்.! அந்த மூன்று எழுத்தையும் சேர்த்தால்.. அது ஒரு விலங்கு. நடு எழுத்தை நீக்கினால்.. அது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் விஷயம். முதல் இரண்டு எழுத்தையும் நீக்கி விட்டா, அந்த மூன்றாவது எழுத்து ஒரு தமிழ் மாதத்தை குறிக்கும். இப்ப சொல்லுங்க.
அந்த மூன்று எழுத்து சொல் என்ன ?!” மகளின் ஆர்வமான கேள்வியை விட அவளின் அழகு பேச்சை ரசித்துக்கொண்டு இருந்த ராகவன் ..
“அம்மாடியோவ் … ரொம்ப கஷ்டமான விடுகதையா இருக்கே.! செல்லத்துக்கு இந்த விடுகதையை யார் சொன்னாங்க ?!”
“அது என்னோட பிரண்டு கவிதாவோட அம்மா ஏதோ பத்திரிகையில் படிச்சதை அவளுக்கு சொல்லி, அவ எனக்கு சொன்னாப்பா “
“அப்படியா..இதுக்கு நான் கொஞ்சம் யோசிச்சுதான் பதில் சொல்ல முடியும். அப்பா போய், அம்மா கையால சூடா ஒரு டீ சாப்பிட்டுகிட்டே யோசிச்சு சொல்றனே.! “
“இல்லப்பா .. நீங்க பதில் சொல்லிட்டு தான் போகணும். அதுக்குள்ள.. நீங்க அம்மாகிட்டே கேட்டு சொல்லிட்டீங்கன்னா.. நா என்ன பண்றது. அதெல்லாம் முடியாது. இப்பவே சொல்லுங்க.. இல்ல ..தெரியலன்னா ..’பாஸ்’ குடுங்க “
என்று அமுதா வேகமாக கையை நீட்டிக்கொண்டே சொன்னாள்.
ராகவன் அவளுடைய அவசரத்தை ரசித்த படியே யோசித்தான்.
சட்ரென்று அவனுக்கு பொறி தட்டியது. அந்த விடுகதைக்கான விடை தெரிந்து விட்டது. உடனே கண்களை சுருக்கி, மகளை குறுகுறுவென பார்த்து சிரித்தான்.
அமுதாவிடம் ஒரு படபடப்பு தெரிந்தது. எங்கே அப்பா விடையை சொல்லி விடுவாரோன்னு பதட்டம் வந்து விட்டது.
“அப்..ப்பா ..விடுகதைக்கு விடை சொல்லறதை விட்டுட்டு இப்படியெல்லாம் சிரிக்கக்கூடாது. விடை தெரியுமா ..இல்ல ‘பாஸ்’ தரீங்களா ” என்று திரும்பவும் கையை நீட்டி கொண்டு அவசரப்படுத்தினாள் .
“அப்பா சிரிக்கறதை பார்த்தா …விடையை கண்டு பிடிச்சிட்டார் போலயே ?!” என்று நந்தினியும் குறுக்கிட்டு பேச…
“அதான் ..சொன்னேனே .. அவ அப்பன் மாதிரி ..கற்பூர …”
என்று அவள் பாட்டியும் பேச தொடங்க, பொறுமையிழந்த அமுதா…
“எல்லாம் பேசாம இருங்க ..அப்பாவுக்கு இன்னும் விடை தெரியல யாராவது அவருக்கு விடையை சொன்னா .. எல்லார்கிட்டயும் நான் “டூ” விட வேண்டி வரும் “..
அமுதா தன் சுட்டு விரலை காட்டி எச்சரித்தாள்.
அமுதாவின் குழந்தைதனமாக பேச்சை .. பார்த்த ராகவனுக்கு, அந்த பழைய நினைவுகள் கண்ணில் நிழலாடியது. அந்த கஷ்டமான நாட்களை இப்போது நினைத்தாலும், அவனுக்கு கண்கள் கலங்கியது.
ராகவனுக்கு திருமணமாகி, ஏறக்குறைய எட்டு வருடங்கள் கழித்துதான் அமுதா பிறந்தாள். ஆனால் அவள் பிறந்த போதே அவளின் எடை குறைவாக இருக்கு என்று ‘இன்குபேட்டரில்’ வைத்து பலநாட்கள் பராமரித்தார்கள். அதற்கு பிறகு நான்கு வயது வரையிலும் அவள் நடக்கவே இல்லை … கால்கள் சூம்பி போனது போல இருந்தது. ஆறு வயது வரை சரியாக பேச கூட வரவில்லை .”.ஊ..ஆ” என்று சப்தம் மட்டும்தான் கொடுப்பாள்.
இதனால் ராகவனும் நந்தினியும் மிக மனசு உடைஞ்சு போனார்கள். பல டாக்டர்களை பார்த்தார்கள். அவள் நலமாக, தெய்வங்களை வேண்டி கோவில் கோவிலாக சென்று வந்தார்கள். இதற்கிடையில் ராகவனின் அம்மா பல விதங்களில் வீட்டு
வைத்தியமும் செய்து பார்த்து.. பிறகு தான் அமுதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் வந்தது.
அமுதாவின் தோற்றமும் பேச்சும் இயல்பாக மாறிய பிறகுதான் … ராகவனின் குடும்பத்தில் எல்லோருக்கும் ஒரு நிம்மதி வந்தது.
“அப்..பா..” என்று அழைத்த குரல் கேட்டு பழைய நினைவுகளில் இருந்து மீண்ட ராகவன்,
“பாஸ்” என்று சொல்லி… ஆவலாக நீட்டிக்கொண்டிருந்த அமுதாவின் கையை தொட்டான் .
உடனே அமுதா மிக பெரிய வெற்றி அடைந்தவள் போல துள்ளி குதித்தாள்.
நந்தினியையும் …பாட்டியையும் பார்த்து ‘தோத்து போனீங்களா ” என்பது போல சைகை காண்பித்து விட்டு, கையை தட்டி கலகலவென சிரித்தாள்.
“அப்பா.. அதுக்கு விடை என்ன தெரியுமா .?!.
அந்த மூன்று எழுத்து விலங்கு ‘கழுதை ‘. அப்புறம் நடு எழுத்தை எடுத்துட்டா ‘கதை’ ன்னு வரும். கதை எல்லோருக்கும் பிடிக்கும் இல்லையா. கடைசியா வரும் ‘தை ‘ ன்னு எழுத்து ஒரு தமிழ் மாதம் .. எப்படி ?!”
அழகாக ஆடி .கையையும் ஆட்டி அமுதா சொல்ல…
எல்லோரும் சிரித்தார்கள்.
மகளின் சந்தோசத்தைப் பார்த்து சிரித்த ராகவன், அவள் கன்னத்தை கிள்ளி கொஞ்சி விட்டு… எழுந்து உள்ளே போனான்.
அவர் பின்னாடியே வந்த மனைவி நந்தினி …”உங்களுக்கு ஏற்கனவே விடை தெரியும் தானே ..?!” என்று கேட்டாள் .
“ஆமா நந்தினி .. நானும் அந்த விடுகதைக்கான விடையை கண்டு பிடிச்சிட்டேன்.
ஆனா அவதான் .. ‘பாஸ்’ குடுங்கன்னு கையை நீட்டிகிட்டு ஆர்வமா நிக்கிறாளே .. வேறு யாரும் விடையை சொல்லக் கூடாது. அவளே சொல்லணும் . அதில் அவளுக்கு ஒரு சந்தோஷம். குழந்தைகள்னா இப்படித்தானே இருப்பாங்க.
அவள் இப்படி சந்தோசமா பேசி சிரிக்கிறத தானே நாமளும் எதிர்பார்த்தோம். ” என்று ராகவன் மனம் பூரித்து சொல்ல ,
நந்தினியும் ஆமாம் என்பது போல தலையை ஆட்டி புன்னகை செய்தாள் .
– 22.05.2024, கல்கி ஆன்லைன் இதழ்.