கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 7, 2023
பார்வையிட்டோர்: 1,480 
 

(1922ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

I

“என்னைக்கேட்டால், சிவனே யென்று விஜயனுக்கு ஜானகியைக் கொடுத்து விடலாம். நல்ல பிள்ளை, யோக்கியன், புத்திசாலி, குலம் கோத்திரம் விசாரிக்கவேண்டியதில்லை.”

“சரிதான்! சொத்துமில்லை, ஒன்றுமில்லை. சோற்றுக்குத் தாளம் போடுகிறான். ஒரு வேலைக்கும் லாயக்கில்லாமல், ஏதோ, அவன் வாத்தியார் சிபார்சு செய்தாரேயென்று அவனை நம்ம கோபுவுக்கு படிப்புச் சொல்லிக்கொடுக்க வைத்துக்கொண்டிருக்கிறேன்; இந்த வேலைக்கு வந்திருக்கிறான். அவனுக்கா ஜானகியைக் கொடுக்கிறது? நல்ல வான் கிடைக்காதா என்ன? வீரனூர் ஐயாசாமி ஐயர் பிள்ளைக்கென்ன; நல்ல சொத்து படித்து வருகிறான். இந்த வருஷம் பீ. ஏ. யில் பாக்கி தேறி விடும். பிறகு வக்கீல் பரீக்ஷைக்கு வாசிக்க உத்தேசமாம்…”

“நன்றாகச் சொன்னீர்கள். அவன் நடத்தை கொஞ்சமும் சரியாக இல்லையாம். ஒரு நாடகக் கொட்டை, ஒரு ஆட்டம் பாக்கி கிடையாதாம். தேவடியாள் வீடே கதியாகக் கிடக்கும் அவனுக்கு நம்ம குழந்தையைக் கொடுத்து அவள் தினம் கண்ணும் கண்ணீருமாக இருக்க விடவா, அவளை இத்தனை நாள் அருமையாக வளர்த்தேன். அது ஒரு போதும் கிடையாது. நானிருக்கிறவரையில் அந்த இடம் வேண்டாம். வேறு எதாவது ஒரு இடம் பாருங்கள்”.

“நான் எந்த இடம் பார்த்தாலுந்தான் உனக்கு ஸம்மதமில்லையே.”

“நீங்கள் பார்க்கிற இடம், படிப்பிருந்தால் சொத்தில்லை; சொத்திருந்தால் படிப்பில்லை இந்த இரண்டு மிருந்தால் நடத்தை சரியாக இல்லை. அல்லது வ்யாதி ஏதாவது இருக்கிறது. அதற்கு நான் என்ன செய்கிறது.”

“என்னவோ, பார்ப்போம். இன்னும் எங்கேயாவது வரனிருக்கிறதா என்று பார்ப்போம்.”

“விஜயனுக்குக் கொடுத்தா லென்ன?”

“அதென்ன, அவன் விஷயத்தில் அவ்வளவு மும்மரமாயிருக்கிறாய்?”

“என்னவோ, அவனுக்குக் கொடுத்தால் நம்ம குழந்தை சௌக்கியமா யிருக்குமென்று தோன்றுகிறது. அவன் வியாஜ்யம் ஜயிக்குமென்று நீங்கள்தான் சொல்லுகிறீர்களே? ஸொத்தில்லையென்று ஏன் சொல்லுகிறீர்கள்?”

“ஜயித்த பிற்பாடல்லவா அந்தப்பேச்சு – அது வரையில் அவன் ஏழைதானே. மேலும் ஏழையாயிருக்கிறவன் அந்தஸ்தாய் வளர்ந்த நம்ம குழந்தையை சரியாக வைத்துக் கொள்வானா?”

“அவனுக்குக் கோபமென்பதே கிடையாது. வந்து ஏழெட்டு மாஸமாகிறதே. ஒரு நாளாவது, கோபுவையாவது ஜானகியையாவது சீ! என்று சொன்னதே கிடையாது. ஜானகி தான் ஸதா அவனை ‘சீண்ட்ரம்’ செய்கிறாளே ஏதாவது முகம் கடுத்துப் பார்க்கிறதுண்டா. அவள் என்ன செய்தாலும் சும்மா இருக்கிறான். அவளும் விஜயனென்றால் அவ்வளவு உயிராயிருக்கிறாள். என்னவோ இரண்டு பேருக்கும் தான் முடி போட்டிருக்கிறதென்று நிச்சயமாய்ச் சொல்லுவேன்.”

“அவனுக்குக் கல்யாணம் செய்துகொள்ள இஷ்டமா? இப்போது வேண்டா மென்று சொல்லலாமே.”

“இரண்டுபேரும் ஒருவருக் கொருவர் ரொம்ப பிரியம். அது நிச்சயமாகச் சொல்லலாம். அதைப் பற்றி சந்தேகம் வேண்டாம். ஜானகிக்கு இஷ்டமா என்று கேட்டு, வேண்டுமானால், சொல்லுகிறேன்.”

“சரி, யோசித்துச் சொல்லுகிறேன். பிற்பாடு பேசிக் கொள்வோம்.”

II

விஜயராகவன் ஒரு பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவன். தனது தந்தை சிறு வயதிலேயே இறந்து போகவே, தாயார் அவனுடன் பிறந்தகம் போய் இருந்து வந்தாள். ஸொத்துக்கள் வியாஜ்ய விவகாரத்தில் அகப்பட்டு விட்டன. அவைகள் அவனுக்குக் கிடைக்குமென்பது கூட ஸந்தேகமாகி விட்டது, அவனது சிற்றப்பன் பெரியப்பன்மார்கள் அவனை மோசம் செய்ய எண்ணியிருந்தார்கள். தனது தாய் மாமன் வீட்டில் வளர்ந்து வாசித்து, மேலே வாசிக்க முடியாமல், தன் உபாத்தியாயர் சிபார்சால் ராமபத்ரய்யருடைய வீட்டில் அவரது பையனுக்குக் படிப்புச் சொல்லிக் கொடுக்க அமர்ந்து கொண்டான். விஜயன் தனது குணத்தாலும் நடத்தையாலும் அவ்வீட்டிலுள்ள எல்லாரையும் ஸந்தோஷப்படுத்தி வந்தான். மற்றவர்களைக் காட்டிலும், ஜானகிதான் அவனிடத்தில் அதிக பிரீதியாக இருந்தவள். எப்படியோ அவளுக்கு அவனிடத்தில் ஒரு வித வாத்ஸல்யம் உண்டாயிற்று. முதலில் கல்யாணி அம்மாள் வாலிபனிடம் பிரியமாக இராவிட்டாலும், நாள் செல்லச் செல்ல அவனிடம் நல்லெண்ணம் உண்டாயிற்று. ஜானகி யவனிடம் அதிகமாக விளையாடி அவனைப் பலவிதத்தில் தொந்தரை கொடுத்தாலும் அவன் ஒன்றுக்கும் அசையாமல் சற்றும் கோபம் கொள்ளாமல், அவள் அவ்விதம் தொந்தரை கொடுப்பதையே ஸந்தோஷமாக ஏற்றுக்கொண்டு, அவளை உத்ஸாகப் படுத்தி, “படுத்தும் குணமுள்ள ” அவளை பணிவுள்ளவளாகச் செய்ததையும், மற்ற எவர்கள் பேச்சையும் கேட்காத ஜானகி விஜயன் சொன்னால் மாத்ரம் கேட்பதையும் கண்டு, இருவருக்கும் கல்யாணமாகிவிட்டால் தன் பெண் ஸௌக்யமாயிருப்பாள் என்று எண்ணினாள் கல்யாணியம்மாள். அதற்காக அவனது குலங் கோத்திரங்களையும் அறிந்து கொண்டாள், ஏற்ற வரனென்று தீர்மானித்தாள் வியாஜ்யம் ஜயிக்கக்கூடியதென்றும் தெரிந்து கொண்டாள். எப்படியோ புருஷனுக்கு உபதேசம் செய்து அவரை அரைகுறை யாகவாவது இணங்கச் செய்தாள். தன் பெண்ணுக்கும் அவனைக் கல்யாணம் செய்துகொள்ள இஷ்டந்தான் என்று அறிந்து கொண்டாள். கல்யாணப் பேச்சு வந்ததும் ஜானகிக்கு சற்று நாணல் கோணல் ஏற்படலாயிற்று.

“ஜானகி, வா, இனிமேல் நீ என்னுடன் அதிகமாக விளையாடக்கூடாது, தெரியுமல்லவா?” விஜயனுக்கு இவ்விஷயம் சற்றுத் தெரியும்.

ஜானகி சற்று புன் சிரிப்புடன், முன்போல் தாராளமாகப் பேசாமல், மெதுவாய், “என்ன ஸமாசாரம்? ஏன்?” என்றாள், ஒன்றுந் தெரியாதவள்போல் பாசாங்கு செய்துகொண்டு.

“ஏன் தெரியாதா, என்ன? எல்லாம் நிச்சயமாகிவிட்டதே, எனக்கும் உனக்கும் கல்யாணமென்று. இனிமேல் நீ புருஷனுடன் அட்டஹாஸமாக விளையாடிச் சிரித்துப்பேசினால், பார்க்கிறவர்கள் கேலி செய்வார்கள். ஜாக்கிரதை!”

ஜானகி சிறிதுநேரம் பேசவில்லை. உண்மையில் அவளுக்கு அவனுடன் விளையாட கூச்சமாகவே யிருந்தது.

“உனக்கு சற்று துக்கமாகக்கூட இருக்கும். பணக்காரப் பெண்; உன்னை, ரொம்ப ஏழை, எனக்குக்கொடுக்க யோசித்திருக்கிறார்களே. அது வருத்தமாக இல்லையா? உன் தாயாருக்கு உன்மேல் சற்று கோபந்தான் என்று தோன்றுகிறது. நல்ல இடமெல்லாவற்றையும் தள்ளிவிட்டு, எனக்குக் கொடுக்கவேண்டுமென்று சொன்னாளாம். உன் அப்பா, விவரம் தெரிந்தவர்; நான் ஏழை என்பது தெரியும் ; அதனால் கூடா தென்றாராம். கடைசியில் அவரும் சரிஎன்று சொல்லிவிட்டா ராம். சீரும் சிறப்பாக வளர்ந்து ஒரு ஏழைக்கா வாழ்க்கைப் படப் போகிறாய். உன்னோடொத்த பெண்கள் பி.எ., எம். எ., வாசிக்கும் பிள்ளைகளுக்கு வாழ்க்கைப் பட்டிருக்க, நீ மாத்ரம் ஒரு ஏழைக்கு வாழ்க்கைப்படப் போகிறாயே.”

ஜானகி புன் சிரிப்புடன் சற்று தலைகுனிந்து சும்மாயிருந் தாள். பின்பு பேச்சை மறைக்க எண்ணி, “உங்களுக்கு உடம்பு சரிப்படவில்லை என்று சொன்னீர்களே. இப்போது எப்படியிருக்கிறது ?” என்று கேட்டாள்.

“இப்போது கேட்பதில் பயனென்ன கல்யாணமான பிறகு கேட்டால் ஏதாவது மருந்தாவது செய்து தரச்சொல்லுவேன். சமையல் என்ன செய்வ தென்றாவது சொல்லுவேன்.”

“இந்த விளையாட்டுப் போதும். உடம்பு எப்படியிருக் கிறது?!”

“அதைப்பற்றிச் சொல்லுவது உனக்கு இஷ்டமில்லையா, என்ன? இஷ்டமில்லாவிட்டால் வேண்டாம். எனக்கு உடம்பு சரியாகிவிட்டது. சுக்குப் போட்ட வெந்நீர் மாத்திரம் வேண்டும். கோபு எங்கே போயிருக்கிறான்?”

“கோவிலுக்குப் போயிருக்கிறான்.”

“சரி, நானும், சற்று வெளியில் போய் வருகிறேன். நீ தான் என்னுடன் முன்போல சரியாகப் பேசக்காணோம். இங்கே உட்கார்ந்திருப்பதைவிட வெளியிலாவது போய் வருவோம்”

“நான் ஒன்றும் சொல்லவில்லையே. என்னவோ அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இன்னும் ஒரு தீர்மானத்துக்கும் சரியா வரவில்லை, அப்பாவுக்கு இன்னும் ஸம்மதமில்லை.”

“ஏன் தீர்மானமாகி விட்ட தென்றவல்லவோ நினைத்தேன். அப்பாவுக்கு ஏன் இஷ்டமில்லை?”

“என் அத்தைக்கு மச்சினன் பிள்ளை ஒருவனிருக்கிறான்.பி.எ. வாசிக்கிறாராம். அவரை த்தேசித்திருக்கிறார்.”

“அப்பா! அது தான் சரி, நான் சொன்னபடியே, நல்ல பி.எ. வாசிக்கும் பையன், நிச்சயமாகி விட்டதா?”

“இன்னும், தெரியவில்லை. கடுதாசி எழுதியிருக்கிறார் அம்மாவுக்கு அது இஷ்டமில்லை.”

“ஏன்?”

“தெரியாது.”

“ஸொத்துண்டோ இல்லையோ?”

“ஸொத்து யதேஷ்டமாக உண்டு.”

“பின்னென்ன காரணம்?”

“தெரியாது.”

“உனக்கு இஷ்டந்தானே?”

ஜானகி பேசாமல் இருந்தாள்.

விஜயன் அவளை இனிவற்பறுத்திக் கேட்பதில் பயனில்லை யென்று எண்ணி, சம்பாஷணையை வேறு விதமாக மாற்றினான். ஆனால், அவன் அவளுடைய முக ஜாடையால் பந்துவைக் கல்யாணம் செய்து கொள்ள இஷ்டமில்லை யென்பதை மாத்திரம் கண்டு கொண்டான். அதோடு மாத்திரமல்ல. அவள் தன்னிடம் முன்னை விட அதிக வாஞ்சையாக இருப்பதாகவும் எண்ணிக்கொண்டான். முன் போல் அவள் தாராளமாகப் பேசாவிட்டாலும், முன் போல் அவள் குதூஹலமாக இராவிட்டாலும், அவள் ஸதா சற்று கவலை கொண்டவள் போலக் காணப்பட்டாலும், விஜயனிருக்கும்போது மாத்ரம் அவள் கவலையை ஒழித்து சற்று ஸந்தோஷமாகக் காணப்பட்டாள். இதை விஜயராகவன் நன்கு கவனித்து வந்தான்.

III

ராமபத்ரய்யருடைய தமக்கை லக்ஷ்மியம்மாளும் அவளுடைய மைத்துனர் பிள்ளை ஸீதாபதியும் வந்து நான்கு நாளாகிறது. கல்யாணியம்மாளுக்கு ஸீதாபதியை மாப்பிள்ளையாகக் கொள்வதில் சற்றேனு மிஷ்டமில்லை. அவன் பி. எ. வாசிக்கிறான் என்பதும் கெட்டிக்காரன் என்பதும் அவளுக்கு நன்றாகத் தெரியும். எம்.எ. யோ, பி. எல். லோ படிக்கப்போவது நிச்சயமென்பதும் தெரியும். ஸீதாபதி லக்ஷண முள்ளவன், ஜானகிக்கு ஏற்றவயதுள்ளவன், ஸொத்துமுண்டு, இதைவிட நல்லவரன் எங்கு கிடைக்கப்போகிறது? ஆனால், அவன் தாஹீ லோலன் என்று வதந்தியுண்டு. அதோடு அவனுடைய தாயார் முதல் நாட்டுப் பெண்ணைப் படுத்துகிறாள், என்று ஒரு அபவாதம் உண்டு. தான் அருமையாகப் பெற்று வளர்த்த ஒரே பெண்ணை தாஸீ லோலனுக்குக் கொடுத்து மாமியாரிடம் கஷ்டப்படும். படிக்கும் புருஷனுடைய ஆதரவு இல்லாமல் தவிக்கும்படிக்கும் விட கல்யாணிக்கு இஷ்டமில்லை. அதனால், லக்ஷ்மியம்மாள் என்ன சொல்லியுங்கூட, தன் புருஷன் என்ன சொல்லியுங்கூட அந்த ஸம்பந்தத்துக்கு சிறிதுகூடப் பிடிகொடுத்துப் பேசவில்லை. லக்ஷ்மியம்மாள் மாத்ரம் தன் தம்பியை தினம் “கரைத்து”க் கொண்டு வந்தாள்.

இன்னும் மூன்று நாள்களாயின. கல்யாணம் எவ்வழியிலும் தீர்மானமாகவில்லை. கல்யாணியம்மாள் முதலில் எண்ணின எண்ணத்தையே சாதிக்க விரும்புகிறாள். அவள் புருஷன் ஸீதாபதியின் மேல் அபிமானம் கொள்ளலானார். ஜானகிக்கு விஜயராகவன்மேல் அபிமானம் அதிகமாயிற்று. அப்படியே விஜயனுக்கும் ஜானகியின்மேல் அபிமானம் ஏற்பட்டது. அவளையே, கூடுமானால் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும். யிது சரிப்படாவிட்டால் பிரம்மசாரியாகக் காலம்கழிக்கவேண்டு மென்று தீர்மானித்துவிட்டான். ஸீதாபதியோ எப்படியாவது ஜானகியை “தட்டிக் கொண்டு” போய் விடுகிறதென்று ஸங்கல்பித்துவிட்டான். லஷ்மியம்மாள் தான் பிடித்த காரியத்தை சாதிக்காமல் விடுவதில்லை யென்று தீர்மானித்து விட்டாள்.

காலை பத்து மணியிருக்கும். விஜயன் தன் அறைக்குப் போய் தன் பெட்டியைத் திறந்து ஏதோ எடுக்கப் போனான். அப்போது ஸீதாபதி உள்ளே ஓடிவந்து, “அப்பா, விஜயராகவா, எனது கடிகாரத்தைக் காணோம், நீ பார்த்தயா? எனது பணப்பையையும் காணோம். எனது சட்டைப்பையிலிருந்தன” என்று கேட்டான்.

“நான் பார்க்க வில்லையே, எப்போது முதல் காணோம் ?”

“காலையில் சட்டையில் வைத்துவிட்டுப்போனேன். இப் போதுபார்த்தேன் காணோம்”.

“சட்டையை எங்கு மாட்டி யிருந்தாய்?”

“கூடத்தில் மாட்டிபிருந்தேன்.”

“நான் பார்க்கவில்லையே.”

“சரி” என்று சொல்லிக்கொண்டே ஸீதாபதி திரும்பினான். அப்போது விஜயராகவன், தன் பெட்டியைத் திறந்தான். திறந்ததும் போகத் திரும்பின ஸீதாபதி பெட்டி பக்கம் திரும்பி, பெட்டியைப் பார்த்து, “இதோ இருக்கிறமே, கடியாரமும், பர்ஸும் (பணப்பை)அட, பேஷ். இப்படியும் உண்டா? நன்றாயிருக்கிறது.” என்று சொல்லும் போது லக்ஷ்மியம்மாள் அவ்விடம் தோன்றினாள்.

“என்ன அகப்பட்டு விட்டதா?”

“ஆம், அகப்பட்டு விட்டது. இந்தப் பெட்டியில் இருந்தது. முதலில் கேட்டேன், தெரியவே தெரியாது என்றான். அப்போதே ஸந்தேகித்தேன். கேட்கும்போது பெட்டியைத் திறக்காமலிருந்தான். நான் போகத்திரும்பினதும் பெட்டியைத் திறந்தான். திரும்பிப்பார்த்தேன். கையுங் களவுமாக அகப் பட்டு விட்டான். பேஷ்! உங்கள் தம்பி நல்ல ஆஸாமியாக வாத்தியார் பார்த்தார். இன்னம் என்ன போயிருக்கிறதோ?”

இதற்குள் கூட்டங் கூடி விட்டது. ராமபத்திரய்யர், கல்யாணியம்மாள் இருவரும் வந்து விட்டார்கள்.

விஜயராகவன் ஒன்றும் பேசாமல் விழித்தான். களவுங் கையுமாகப் பிடிபட்ட பிறகு அவன் என்ன செய்ய முடியும்?

ராமபத்திரய்யர் நாலைந்து வீடு தள்ளிக் குடியிருக்கும் போலீஸ் ஸப்இன்ஸ்பெக்டருக்குச் சொல்லி யனுப்பினார். போலீஸ் ஸப் இன்ஸ்பெக்டர் வந்தார். விஷயங்களைச் சொல்லக்கேட்டுத் தெரிந்து கொண்டார்.

” என்ன, அப்பா, வந்த இடத்தில், உன்னை நல்ல ஸ்திதிக்குக் கொண்டு வர உத்தேசித்திருப்பவர் வீட்டிலா இந்தத் தொழில் செய்வது? கொஞ்சங் கூட நன்றாக இல்லையே. நீ ரொம்ப ஸாது, யோக்கியன் என்றல்லவா எண்ணியிருந்தோம். ஏன் இப்படி உனக்கு புத்திபோயிற்று. கடிகாரம் இல்லாமல் உனக்கு என்ன குறைவாகப்போயிற்று ? நீதானே அவைகளைத் திருடிவைத்துக் கொண்டாய் ?”

விஜயராகவன் சற்றுநேரம் பேசாமலிருந்தான். மறுபடியும் ஸப் இன்ஸ்பெக்டர் கேட்கவே, “கையும் களவுமாகப் பிடித்த பிறகு கூடவா, நான் ஆக்ஷேபிக்கவேண்டும். போதாத வேளை, இந்த மாதிரியாயிற்று. ஆனால் போதாதவேளை யென்றால் குற்றம் போய்விடுமா. அதன் பலனையும் அனுபவிக்க வேண்டாமா. ஆம், இந்தக் குற்றத்தை நான் ஏற்றுக் கொள்ளுகிறேன்.”

“சரி, இன்ஸ்பெக்டர்வாள், அவனை ஸ்டேஷனுக்குக் கொண்டு போங்கள், கம்ப்ளெய்ண்ட் எழுதிக்கொடுக்கிறேன்.”

ஸப் இன்ஸ்பெக்டர் சற்று தயங்கினார். விஜயன் பார்வைக்கு குற்றவாளியாகக் காணப்படவில்லை.

அந்த ஸமயம் ஜானகி அவ்விடம் வந்தாள். நடந்து கொண்டிருந்தவைகளை உடனே யறிந்து கொண்டாள். அவளுக்கு இன்ன செய்வதென்று தோன்றவில்லை. தனது பிரிய நண்பன் போலவும் ஸகோதரன் போலவுமிருந்து வந்த விஜயன் கடிகாரத்தைத் திருடியிருப்பா னென்று அவளுக்குத் தோன்ற வில்லை. என்ன காரணத்தாலோ இவ்விதம் அவன் மேல் குற்றம் ஏற்பட்டிருக்கிறதென்று தோன்றிற்று. அவஸரப்படாமல் இந்த விஷயம் ஆராய்ச்சி செய்யப்படுமானால், கடைசியில் அவன் நிரபராதியென்று ஏற்படுமென்று எண்ணினாள். ஆனால் விஜயன் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் விட்டால், அப்புறம் அவன் குற்றவாளியல்ல வென்று ஏற்பட்டாலும் அவமானம் போகாதே, தன் தகப்பனாரிடமும் தன்னிடமும் விஜயனுக்கு வெறுப்பு ஏற்படுமே என்று வருத்தப்பட்டாள்.

அவள் தன் தகப்பனண்டை போனாள்.

“அப்பா, அவஸரப்படவேண்டாம். இதில் எதோ சூது இருக்கிறதென்று தோன்றுகிறது.” என்று மெதுவாய்ச் சொன்னாள்.

“என்ன சூது? கையுங்களவுமாகப் பிடித்திருக்கிறபோது வேறு என்ன சாக்ஷி வேண்டும்?”

“திருடும்போதா பிடித்தீர்கள்?”

“திருடி வைத்திருந்தான். தன் பெட்டியிலிருந்து எடுக்கும் போது பார்த்து விட்டான் ஸீதாபதி.”

“ஸீதாபதியிருக்கும் போதா பெட்டியைத் திறந்தார்?”

“ஆமாம்.”

“அவரே திருடியிருந்து பெட்டியில் மறைத்து வைத்திருந்தால், ஸொத்துக்காரர் இருக்கும் போதா பெட்டியைத் திறந்து திருடின ஸொத்தைக் காட்டுவார்?”

அய்யர் யோசிக்கலானார். ஸப் இன்ஸ்பெக்டரும் இந்த சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டிருந்தார். அதனால் அவரும் சற்று யோசித்தார்.

“ஐயர்வாள், இதற்கு முன்னால் இவன் மேல் உமக்கு சற்றும் ஸந்தேகம் வந்ததில்லையே. வந்து ஒரு வருஷத்துக்கு மேலாகிறதே. இது வரையில் இவன் நடத்தையைப்பற்றி எப்போதாவது குறை கூற நேர்ந்ததோ. இது தான் முதல் தடவையோ? எப்போதாவது, எதற்காவது இவன் மேல் நீங்கள் ஸந்தேகப்பட்டதுண்டோ?”.

“இதுவரையில் ஒன்றுமில்லை.”

“அப்படி யிருக்க திடீரென்று இவன் இப்படிச் செய்யக் காரணமென்ன? இரண்டொரு வாரமாக நீர் உமது பெண்ணை அவனுக்குக் கொடுக்க உத்தேசித்திருக்கிறீர் அல்லவா? அப்படியிருக்க, அதுவும் மாப்பிள்ளையாகப் போகிற ஸந்தர்ப்பத்தில் தனது கௌரவத்தைக் குறைத்துக்கொள்வானா ? இது விநோதமாகத் தோன்றவில்லையா? உமது பெண் சொல்லுகிறபடி இதில் ஏதோ சூது இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.ஆகையால் சற்று யோசித்துச் செய்யும். நீர் கம்ப்ளெயண்ட் கொடுப்பதாயிருந்தால், நான் ஆக்ஷேபிக்க வில்லை. இருந்தாலும் அவஸரப்படுவது உசிதமல்ல.”

ஸீதாபதி, ஸொத்தைப் பறிகொடுத்தவனாதலால், கோபம் மேலிட்டு, ஸப் இன்ஸ்பெக்டரை ஆக்ஷேபித்தான். கையும் களவுமாகப் பிடித்த பிறகுகூட தயை தாக்ஷண்யமென்ன வென்று கேட்டான். தன் கடியாரம் நூறு ரூபாய் விலையுள்ள தென்றும்,பணப்பை விலையுயர்ந்த தென்றும், இதைக்கண்டு பிடிக்காவிட்டால், தான் பணத்துக்கு அதிகம் அல்லாடவேண்டியிருக்குமென்றும் சொல்லி, அவ்விதம் தன்னைக் கஷ்டத்துக்கு ஆளாக்கமுயன்ற விஜயனை இலகுவில் விடக்கூடாதென்று வற்புறுத்தினான்.

ராமபத்திர ஐயர் சற்று யோசித்தார். அப்போது வீடு கூட்டும் வேலைக்காரி, அங்கு நடக்கும் விஷயங்களைப் பற்றித் தெரியாதவள், அறையில் யார் இருக்கிறார்கள் என்பதைக்கூட கவனியாமல் “கடுதாசி ஒன்று கீழே கிடந்தது.” என்று சொல்லிக்கொண்டு அறைப்பக்கம் வந்தாள். போலீஸ் ஸப் இன்ஸ் பெக்டர் கதவண்டையிருந்ததால், உடனே கையை நீட்டி அதை வாங்கிக் கொண்டார். அதை வாசித்துப் பார்த்ததும் அவருக்குக் கோபம் உண்டாயிற்று. வேலைக்காரியைப் போகச் சொன்னார்.

“ஐயர்வாள். இந்த கடிதம் நல்ல வேளையாக இப்போது கிடைத்தது. இந்தக் கேஸ் இப்படியே நிற்கவேண்டியது தான். கடியாரம் திருடினது யார், ஏன் திருடினான், என்ற எல்லா விவரமும் இந்தக்கடிதத்தால் தெரிய வரும்.

“அப்பா, ஸீதாபதி இந்தக் கடிதம் உன்னுடையதுதானே. உனது நண்பன் எழுதினதுதானே. அவன் யோசனையைக் கேட்டுத்தானே விஜயன்மேல் பழி போட்டாய்? திக்கற்றவனாக ஒருவன் பிழைக்க வந்தால் அவன் வாயில் மண்ணைப் போட்டுக் கெடுக்கவா பார்த்தாய்?”

இவ்விதம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொன்னதும் ஸீதாபதிக்குக் கோபம் உண்டாயிற்று.

“என்ன இன்ஸ்பெக்டர்? தாறுமாறுமாக உளறுகிறீர். யார் என்ன செய்தது. நானா அவன் மேல் பழி சுமர்த்துகிறேன். என்ன கடிதம்? யார் எழுதினது? யாருக்கு வந்தது? என்னென்னவோ சொல்லுகிறீரே.'” என்று கேட்டான்.

“என்ன கடுதாசி, வாசியுங்கள்!” என்றார் அய்யர். கடிதம் இங்கிலீஷில் எழுதியிருந்தது.

ஸப் இன்ஸ்பெக்டர் கடிதத்தை வாசித்தார். யாவரும் திடுக்கிட்டார்கள்.

“அன்புள்ள ஸீதாபதி,

உன்கடிதம் கிடைத்தது. உனக்குப் போட்டியாயிருக்கிறவனை எப்படியாவது ஒழித்துவிட முயலவேண்டியது நியாயந்தான். ஏதாவது அல்ப திருட்டு முதலிய ஏதாவது பழி போட்டு, அவனை அயோக்கியன் என்று ஸ்தாபித்து விட்டால், பெண்ணுக்குத் தகப்பனாரும் அவர் மனைவியும் பெண்ணும் அவன் மேல் கொண்டுள்ள அபிமானத்தை ஒழித்து விடுவார்கள். அப்புறம் உன்னை விட தகுந்த வரன் வேறு யார் அவர்களுக்குக் கிடைக்கபோகிறான். அந்தவீட்டுக்குச் செல்வமாக இருக்கும் விஜயனைத்துரத்த இதைத்தவிர வேறு வழியில்லை. காரிய சித்தி சீக்கிரம் ஏற்படு மென்று நம்பியிருக்கும் உனது நண்பன்,
ரகுநாதன்.”

ஸப் இன்ஸ்பெக்டர் “ஹீதாபதி, நீ தான் என்னுடன் வா வேண்டும். விஜயன், நாங்கள் எப்போதும் எண்ணியிருக்கிற படி, யோக்கியன் தான். அய்யர்வாள் என்ன யோசனை ?”

“யோசனை யொன்று மில்லை. ஹீதாபதி இவ்வளவு அயோக்கியன் என்று நினைக்கவில்லை. அப்பா, இதோடு போதும். இப்பொழுதே, இந்த நிமிஷமே இந்த வீட்டை விட்டு, இன்னும் அரைமணியில் ரெயில் புறப்படுகிறது-அந்த வண்டியில் நீ ஊர் போகவேண்டும் போகாவிட்டால், உன் மேல் கேஸ் நடக்கவேண்டியது தான். ஏன் இப்படிச் செய்கிறேன் தெரியுமா. உன் பெரியப்பா அவ்வளவு கடுமையா என்று என்னைக் கேட்பார். அதற்காக உன்னை விட்டு விடுகிறேன். இன்ஸ்பெக்டர், நீரும் என் மேல் தயை செய்து, இதை இப்படியே மறந்துவிடவேண்டும்.

“அப்பா, விஜயா, உன் விஷயத்தில் நான் ரொம்பவும் கேட்டுக்கொள்ளுகிறேன். உன்னை அனாவசியமாகக் கோபித்துக் கொண்டேன். ஏதோ அவன் பந்து, வந்தான், சிபார்சுடன் வந்தான். அதனால் அவன் மேல் சற்று அபிமானம் ஏற்பட்டது. அதற்கு அவன் பாத்ரனல்ல. இனி நீ நம்ம வீட்டைச் சேர்ந்தவன், ஜானகி உன்னைச் சேர்ந்தவள். உனது வியாஜ்யத்தை முடித்து வைப்பது என்னைச் சேர்ந்தது. (இன்ஸ்பெக்டரைப் பார்த்து) இவன் இத்தனை நாளாக எங்கள் வீட்டில் வித்தியாஸ மில்லாமல் எனது புத்ரன்போலிருந்து கோபுவையும், ஜானகியையும் தன் தம்பி தங்கைபோல் பார்த்துவந்து ரொம்ப ஸாதுவாகத் தங்கக் கம்பியாக இருந்து வந்ததை லக்ஷ்யம் செய்யாமல் முன் பின் யோசியாமல் அவனை ஸ்டேஷனுக்குக்கொண்டு போகச் சொன்னேன். அதற்குப் பிராயச்சித்தம், ஏற்கனவே யோசித்ததுதான்; நடுவில் சற்று தயங்கினேன், ஜானகியை அவனுக்குக் கல்யாணம் செய்து வைத்து, அவனை நல்ல நிலை மைக்குக் கொண்டுவர வேண்டியது.”

“சரியான யோசனைதான். முன்பே நீங்கள் சொன்னது தானே.” என்றார் ஸப் இன்ஸ்பெக்டர்.

ராமபத்ரய்யர் ஸீதாபதியை வழியனுப்பப் போனார். போலீஸ் ஸப் இன்ஸ்பெக்டரும் கூடப் போனார். விஜயனும் ஜானகியும் தனிமையாக இருந்தார்கள்.

“நான் அப்போதே யோசித்தேன். ஏதோ அவனும் அத்தையும் குசுகுசு வென்று பேசிக்கொண்டிருந்தார்கள், ‘எப்படியாவது அவனை ஒழித்து விடுகிறேன்’ என்று. என்னவோ என்று ஸந்தேகமாயிருந்தது. அதனால்தான் அப்பாவை சற்று நிதானிக்கக் சொன்னேன்.”

“என்னவோ ஈசுவரன் புண்ணியத்தில் இன்று என்மானம் தப்பிற்று. நீ பரிந்து பேசினாய். அதோடு தர்க்கங் கூடச் செய்தாய். அதனால்தான் ஸப் இன்ஸ்பெக்டர் கூட யோசித் தார். உனக்கு என்ன பிரதி உபகாரம் செய்யப் போகிறேன் ?” என்று சொல்லிக் கொண்டே ஜானகியைப்பிடித்து அணைத்துக் கொண்டு கொஞ்சி விளையாடினான்.

“யாராவது வந்துவிடப் போகிறார்கள். அவன் போகிறதைப் பார்ப்போம். வாருங்கள்” என்று சொல்லி எழுந்தாள் ஜானகி.

– சிறுகதைகள், முதற் பதிப்பு: 1922, வி.நாராயணன் & கம்பெனி, மதராஸ்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *