விஜயதசமி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 9, 2024
பார்வையிட்டோர்: 136 
 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஏழை எச்சுமு (லக்ஷ்மி) என்ன செய்வாள்! அவள் தாயார் சின்னம்மாதான் என்ன செய்வாள்! கணவன் கிளப் வைத்துக் கடனாளியாகி இருந்த இடம் தெரியாமல் ஓடிப்போனதிலிருந்து அவல் இடித்து விற்பதும், மா அரைப்பதும், காலைக் காரியம், சமையல் முதலியவை செய்வதும் சின்னம்மாளுக்கு ஜீவனோபாயமாகிவிட்டன. பிரஸ்தாபிக்கும் காலத்தில், வக்கீல் வேதாந்தமையர் வீட்டில் சொல்ப சம்பளத்துக்குச் சின்னம்மா சமையல் செய்து வந்தாள். மாதச் சம்பளம் ஐந்து ரூபாய்; சாப்பாட்டுக்கே போதாது. அதில் வீட்டு வாடகை ஒன்றரை ரூபாய் கொடுத்தாக வேண்டும். 

இப்படிப்பட்ட நிலைமையில் நவராத்திரி வராவிட்டால் கல்லது என்று சின்னம்மா எண்ணியதில் பிசகென்ன? ஆனால் அதற்காக நவராத்திரி வராமல் நின்றுவிடுமா? 

நவராத்திரிப் பொம்மைக் கடைகளைப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்த எச்சுமு தாயாரைக் கேட்டாள்: “ஏம்மா, இந்த விசை நான் கொலு வெக்கப்போறேனே. வீட்டிலே நெறைய ஆறு தட்டு வெக்கப்போறேன்.சுண்டல் பண்ணித் தறயா நேவேத்தியத்துக்கு?” 

“பொம்மை ஏதுடி உனக்கு? உங்கப்பனுக்கு வீடு வேறே கட்டிவச்சு வாழறதோ? அதிலே வேறெ ஆறு தட்டு வெக்கப் போராளாம். பேச்சைப் பாரு; டில்லிபாச்சா பொண்ணாட்டமா!” என்று சீறினாள் தாயார் மன முடைந்து. 

பாவம் எச்சுமுவுக்கு இந்த இழவு வித்தியாசங்க ளெல்லாம் எப்படித் தெரியும்! 

“ஆனால் பொம்மை நேக்கு ஏன் இல்லே? அப்போன்னா நீ வாங்கிக் குடு” என்று எச்சுமு தாயின் முழங்காலைக் கட்டிக்கொண்டு கெஞ்சினாள். 

சின்னம்மா திரும்பத் தாயாகிவிட்டாள்; “அடி அசடு! அதுக்குப் பணம் வேண்டாமா? தாலிதானே இருக்கு; என்ன பண்ணச் சொல்றே ?” 

“ஒன் கிட்டெ ஏன் பணமில்லே ? எல்லார் கிட்டெயும் ரொம்ப ரொம்ப இருக்கே. வக்கீல் வீட்டு அம்மாமி கிட்டே நோட்டு நோட்டா, பணம் பணமா இருக்கே. கொஞ்சம் கேட்டு வாங்கேன்.” 

தாயாருக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. கண்களைக் கசக்கிக்கொண்டாள். “பாப்போண்டி” என்று தட்டிக் கழிக்கும் பல்லவியைக் கையாண்டுவிட்டு வெளியே போய்விட்டாள். 

தாய் வெளியே போன அடியோடு எச்சுமு வீட்டை விட்டுக் கிளம்பினாள். குதித்துக் குதித்துத் தன் சிநேகிதி வீடு ஒவ்வொன்றுக்குள்ளும் நுழைந்து மார்பைத் தட்டிக் கொண்டு குதூகலமாய்த்தான் அந்தத் தடவை நவராத்தி ரிக்கு ஆறுதட்டுப் பொம்மை வைக்கப் போவதாகப் பீற்றிக்கொண்டாள். 

நவராத்திரி முதல் நாள் அந்திப்பொழுதாகியும் வீட்டில் கொலு வைத்தபாடில்லை. எச்சுமுவுக்குத் துக்கம் குமுறிக்கொண்டிருந்தது. தாயுடன் சண்டைப் பிடித்தாள்; அழுதாள் ; பிடிவாதம் செய்தாள். பெண்ணை உடலுடன் சேர்த்து அணைத்துக்கொண்டு, தலை மயிரைத் தடவிக் கொடுப்பதைத் தவிரத் தாயினால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. அன்றைத் தினம் இரவு சாப்பிடாமல் வெறுந்தரையில் அழுதபடியே எச்சுமு தூங்கிவிட்டாள். 

சின்னம்மா வெகு நேரம் வரையில் கிணற்றங்கரையில் சோர்வடைந்து உட்கார்ந்திருந்தாள். “வக்கீல் வீட்டில் ஏதாவது பணம் கேட்டு வாங்குவோமென்றால், நவராத்திரியும் அதுவுமாகக் கொடுக்க மறுத்துவிடலாம். அல்லது, ‘வேலைக்கு வந்து அரை மாதங்கூட ஆகவில்லை. இப்போது முதல் பணத்துக்குப் பிடுங்கித் தின்கிறாள்’ என்று அவர் கள் நினைத்துவிடலாம். ஒரு வேளை சொல்லியும் விடலாம். அப்போது இந்த அரை வயிற்றுக் கஞ்சிக்குக்கூடத் திண்டாட்டம் வந்துவிட்டால்?’ இப்படிப் பலவாறு எண்ணி முடிவு காணாமல் தூங்கிப் போய்விட்டாள். 

மறுநாள் காலை வழக்கம்போல் வானில் பொற் கோழி கூவவே உலகம் விழித்தெழுந்தது. எச்சுமுவும் சின்னம்மா வும் எழுந்தார்கள்.ஆனால் தாயினிடம் பொம்மைகளைப் பற்றிக் குழந்தை மூச்சே விடவில்லை; பகல் முழுவதும் முகத்தை ‘உம்’ என்று தூக்கி வைத்துக்கொண்டிருந்தாள். 

மாலைப் பொழுதில் பெண்ணும் தாயுமாக வக்கீல் வீட்டுக்கு மஞ்சள் குங்குமத்துக்குச் சென்றார்கள். கண்ணிமை கொட்டாமல் ஒவ்வொரு பொம்மையையும் விழுங்கி விடுபவள்போல் எச்சுமு உற்று உற்று நோக்கினாள். பொம்மைகளைப் பார்க்கப் பார்க்க ஒரு புறம் துக்கம்; மற்றொரு புறம் தாயாரிடம் கொலு வைக்கப் பணமில்லையே என்ற ஏக்கம்.. 

இரவு.தாயும் பெண்ணும் இன்னும் சிலரும் கோவி லுக்குக் கிளம்பினார்கள். போகும் வழியெல்லாம் கடை மயம். கடையெல்லாம் பொம்மை மயம். கோவில்! அங்கேயும் அப்படித்தான். தேவேந்திர சபை, துரோ பதை துகிலுரிதல், செட்டிப் பொம்மை, நரித்தொம்பச்சி, கல்லடிமங்கன் இன்னும் எவ்வளவோ பொம்மைகள். 

எச்சுமுவின் கண்கள் சுழன்றன. ஒரு விநாடி பொம் மைகளை யெல்லாம் ஆவலுடன் பார்த்தாள். அடுத்த க்ஷணம் சீயென்று அவைகளை முற்றும் வெறுத்துக் கண்களை மூடிக்கொண்டு, கண்ணில்லாக் கபோதி பிறர் கையைப் பிடித்துச் செல்வதுபோல் தாயின் கையைப் பிடித்துச்சென்றாள். 

கடைசியாகச் சுவாமி சந்நிதிக்கு வந்து சேர்ந்தார் கள். எச்சுமு கண்ணைத் திறந்தாள். யாரோ ஒரு பாட்டி, சுவாமிக்கு அர்ச்சனை செய்துவிட்டுக் குருக்கள் கொடுத்த விபூதி முதலிய பிரசாதங்களை வாங்கிக்கொண் டிருந்தாள். தட்டிலிருந்த பாதித் தேங்காய் மூடியை மட்டும் சிவன் சொத்தென்று சொல்லியபடியே யாரோ ஒரு பிராமணனுக்குக் கொடுத்துவிட்டாள். எச்சுமு இதையெல்லாம் கவனித்து வந்தாள். 

பிறகு எல்லோருமாக அம்மன் சந்நிதிக்குச் சென்றார் கள். சுவாமி சந்நிதியில் அர்ச்சனை நடத்திய கிழவி, அம்மன் சந்நிதியிலும் ஒன்று நடத்தினாள். ஆனால் குருக் கள் கொடுத்த பிரசாதத்தை அப்படியே தேங்காய் மூடி உள்படக் கிழவி எடுத்துக்கொண்டது எச்சுமுவுக்குச் சற்று ஆச்சரியமாக இருந்தது. தாயைப் பார்த்து, “சுவாமி சந்நிதியிலே வாண்டாம்ன்னுட்டு இங்கே அம்மன் சந்நிதியிலே மாத்திரம் தேங்காமூடி வாங்கிக்கலாமா அந்தப் பாட்டி?” என்று கேட்டாள். 

“அம்மன்தான் வரப்பிரசாதி. லோகமெல்லாம் அவளுதுதான். சிவனுக்கு விபூதிதான் சொந்தம். நமக்கு அஷ்ட ஐச்வரியமும் அவள் தான் குடுக்கணும். அதனாலே தான் பாட்டி இங்கே தேங்காமூடி வாங்கிக்கிண்டா” என்று ஏதோ சமாதானம் சொன்னாள். 

எச்சுமுவுக்கு விஷயம் விளங்கிவிட்டதுபோல் தலையை ஆட்டினாள். அப்படியே அம்மன் சந்நிதியில் உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டு பிரார்த்தனை செய்தாள். 

நவராத்திரி மூன்றாவது நாள் மாலை வக்கீல் வேதாந்த மையர் மனைவி ராஜாமணி அம்மாள் வீட்டுக்கு வருவோர் களை யெல்லாம் வரவேற்றுக்கொண் டிருந்தாள். எச்சுமு வந்து ஓர் ஓரமாக உட்கார்ந்துகொண்டாள். 

சிறிது நேரம் சென்றது. ராஜாமணி அம்மாளைப் பார்த்து, “ஏன் அம்மாமி; என்னத்துக்காகக் கொலு வெக்கறது?” என்றாள். 

ராஜாமணியம்மாள் ஸ்ரீவித்யோபாசனை செய்வதாக ஊர் முழுவதும் பேச்சாக இருந்தது. “நல்ல கேள்வி கேக்கறயே, எச்சுமு! அந்த நாளிலே ஒரு போக்கிரி அசுரன் இருந்தான். ஜகத்தெல்லாம் அவனைப் பார்த்து நடுங்கிற்று. எல்லாருமாய்ப் போய் அம்பாளிடத் திலே குறை சொல்லிக்கொண்டா. அம்பாள் மொதல்லே தன் சைனியத்தை அனுப்பி அந்த அசுரன், அவன் சைனியம் எல்லாத்தோடேயும் சண்டை செய்யச் சொன்னா. தான் மாத்திரம் ஒம்பது நாளும் அப்படியே உக்காந்திருந்தா. கடைசியாகத் தெசமி அன்னிக்கு அம்பாளே நேரே போய் மகிஷாசுரனைக் கொன்னூட்டா. அதுக்காகத்தான் கொலு வெக்கறோம். ஜெயிச்சத்துக்காகத்தான் விஜயதெசமி அன்னிக்குச் சுவாமிகளெல்லாம் அம்பு போடப் போறது; தெரிஞ்சுதா?” 

“கொலு வீட்டுலே வெக்காட்டா என்ன, அம்மாமி?”

“கொலு வெக்காட்டா வீட்டிலே தரித்திரம் பிடுங்கித் திங்கும். காரியமெல்லாம் தோத்துப் போகும். அப சகுனமாயிருக்கும்.” 

“அப்படீன்னா எங்காத்துலே கொலு வெக்கல்லியே. என்ன பண்றது?” 

அதற்கு ராஜாமணி அம்மாளுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை; “உம்” என்றாள். எச்சுமு விட்டபாடில்லை.

“அப்பொன்னாக்கே எனக்குக் கொஞ்சம் பொம்மை குடுங்கோ ; நான் கொலு வெக்கறேன்.” 

“ஆகட்டும்” என்று பட்டுக்கொள்ளாமல் சொன்னாள் வக்கீலின் மனைவி. 

அதற்குள் யாரோ பணக்கார ஸ்திரீகள் ஐந்தாறு பேர் வந்தார்கள். ஏதேதோ பேசிக்கொண் டிருந்துவிட்டு ராஜாமணி அம்மாளைத் தங்கள் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள் மஞ்சள் குங்குமத்திற்கு. 

ராஜாமணி அம்மாள் போன பிறகு எச்சுமு கொலு வுக்கு முன் வெகு நேரம்வரையில் கைகட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். வக்கீலின் மனைவி திரும்பி வருவ தாகத் தெரியவில்லை. கூடத்தில் ஒருவரையும் காணவில்லை. அம்பாள் பிரசாதம் கிடைத்தது! எச்சுமு எழுந்திருந்து பொம்மைகளில் ஐந்தாறை எடுத்து மடியில் கட்டிக் கொண்டாள். குனிந்து பொம்மைகளை எடுத்ததில் தலைப் பின்னல் சரிந்து விழுந்து சில பொம்மைகளைத் தள்ளி விட்டது. அந்தச் சப்தத்தைக் கேட்டுப் பயந்துபோய் எச்சுமு வீட்டுக்குக் கிளம்பிவிட்டாள். 

நவராத்திரி நான்காம் நாள் காலை. ராஜாமணி அம்மாள் கொலு வைத்திருக்கும் அங்கணத்துக்கு எதிரே கொலுவை வழக்கம் போல் தன் கையால் மெழுகிக் கோலமிட்டுக் கொண்டிருந்தாள். கோலம் முடிந்ததும் மெதுவாக நிமிர்ந்தாள். நடுத்தட்டிலிருந்த துர்க்கை, லக்ஷ்மி, ஸரஸ்வதி முதலிய விக்கிரகங்கள் உருண்டு கிடந்தது கண்ணில் பட்டது. சமீபத்தில் போய்க் கவனித்தாள். சில பீங்கான் பொம்மைகளைக் காணவில்லை. பின்னும் சோதித் தாள். நெஞ்சு பக்கென்று தீப்பிடித்துக்கொண்டது. லக்ஷ்மி விக்கிரகத்தின் கழுத்தில் போட்டிருந்த தங்கச் சங்கிலியும் பதக்கமும் காணவில்லை! ராஜாமணி அம்மா ளின் உள்ளம் பதறிற்று. நவராத்திரியில் நகை கெட்டுப் போவதென்றால் தன் கணவருக்கு – ஏன் தன் குடும்பத் துக்கே – ஏதாவது மகத்தான ஆபத்து வருவதன் அறி குறியோ என்ற பீதி உண்டாயிற்று. 

சற்று நேரம் சென்றதும் மனக்குழப்பம் தணிந்தது. முதல் நாள் எச்சுமு வந்திருந்ததும் அவளுடைய கேள்வி களும் ஞாபகத்துக்கு வந்தன. அவள் மீது இயல்பாகவே சந்தேகம் பிறந்தது. அன்று காலைக் காரியம் செய்யச் சின்னம்மா வராததால் சந்தேகம் நிச்சயமாகிவிட்டது. 

சின்னம்மா வீட்டுக்கு ராஜாமணி அம்மாள் போன போது சின்னம்மா உடலெங்கும் போர்த்துக்கொண்டு ஒரு கிழிந்த கித்தான் மீது படுத்துக்கொண் டிருந்தாள். எஜமானி வரப் பார்த்ததும் எழுந்து உட்கார்ந்தாள். 

“என்ன உடம்பு திடீரென்று?” 

“அதான் எனக்கும் தெரியல்லே. ராத்திரிப் படுத்துக் கிண்டதே புடுச்சுத் தலை கனத்துக்கிண்டு பொணமாட்டமா இருக்கு. அதோடு ஜொரம் வேறெ ஒடம்பை அனத் தறது. அதான் காலம்பரக் காரியங்கூடச் செய்ய வரல்லே.” 

“சரிதான்.” 

“ஏதாவது விசேஷமுண்டா, காலெ வேளையிலே வந்திருக்கேளே ?” 

“விசேஷம் ஒண்ணும் இல்லே. ஒன் பொண் சாயங் காலமா வீட்டுக்கு வந்திருந்தா. நான் அப்பறம் வெளியே போயிட்டேன். காலம்பரப் பாக்கறப்போ பொம்மையிலே கொஞ்சம் கொறையறது. 

“ஹும். அப்புறம்?” 

“வேறு ஒத்தரும் வல்லே. லக்ஷ்மி விக்கிரகத்தின் கழுத்திலே இருந்த செயினும் பதக்கமும் காணவில்லை. வேணா ஒரு வார்த்தை எச்சுமுவைக் கேட்டுப்பார்க்க லாம்ன்னு வந்தேன். “

“அந்தச் சனியனைக் காணமே இங்கே. மூதேவி எங்கே தொலைஞ்சுதோ?..இருந்தாலும் அவளுக்குக் கை நீளம்னு சொல்றத்துக்கில்லே. என்னமோ?’ 

சின்னம்மாவின் வார்த்தை எஜமானிக்குச் சமாதா னம் அளிக்கவில்லை. பேச்சுப்பராக்கில் அங்கும் இங்கும் சலித்துக்கொண் டிருந்த எஜமானி அம்மாளின் கண் துளசி மடத்துக்குப் பின்னால் போயிற்று. மின்னறதே” என்று இரண்டடி எடுத்து வைத்தாள். “அதென்னவோ துளசி மாடத்துக்குப் பின்னால் ஒரு செங்கல்லுக்கு ஒரு பொம்மையாக ஆறு அடுக்குக் கொலு வைக்கப்பட் டிருந்தது.”சின்னம்மா! எச்சுமு கொலு வெச்சிருக்கற அழகைப் பாரேன்!” என்றாள். சின்னம்மாவின் முகம் அவமானத்தால் பட்டுப்போய்விட்டது. ராஜாமணி அம்மாளோ கல்களை யெல்லாம் புரட்டி நகையைத் தேடினாள். காணவில்லை. 

“சமையலறை மாடத்தில் கீடத்தில் அவள் நகையை வச்சிருக்கப் போறாளே, பாரேன்” என்று சொல்லிவிட்டு எஜமானியும் காரியக்காரியும் அங்கும் இங்கும் தேடினார் கள். பயன்படவில்லை. எஜமானி வீட்டுக்குக் கிளம்பினாள். 

வாசற்படிக்கு வந்த சமயம் எச்சுமு தெருவிலிருந்து வீட்டுக்குள் நுழைந்தாள். அதன்மேல் ராஜாமணி அம் மாள் எச்சுமுவின் பின்னோடு மறுபடி வீட்டுக்குள் சென் றாள். எச்சுமுவைக் கண்டதும் சின்னம்மாவுக்குத் தலை கால் தெரியவில்லை. குழந்தையைப் பிசாசுபோல் அறைந் தாள். குழந்தை அலறிற்று. எஜமானிக்குக்கூட ஏன் சொன்னோம் என்று ஆகிவிட்டது. சற்றுநேரம் அப் படியே நின்று கொண் டிருந்தாள். போகட்டுமென்றால் மனது கேட்கிறதா? “துளசி மாடத்துக்குப் பின்னாலே இருக்கிற பொம்மையை நீயே எடுத்துக்கோ. செயினை யும் பதக்கத்தையும் குடுத்துடு” என்றாள் எஜமானி. எச்சுமு பதில் சொல்லாமல், கதவிடுக்கில்போய்த் தேம்பித் தேம்பி அழுதாள். பின்னொரு சமயம் ஆகட்டும் என்று எஜமானி போய்விட்டாள். 

மறுநாள் மத்தியான்னம் வந்தாள்; “எச்சுமு! பொம் மையை வச்சுக்கோ ; நகையைக் குடுத்துடு” என்றாள். 

“நகையை எடுக்கலே, அம்மாமி. கொலு வக்காட்டா அஷ்ட தரித்திரம் வரும்னேளே. ஒங்களைப் பொம்மை கேட்டேன், ஆகட்டும் இன்னேள். அப்பறம் வெளியே போயிட்டேள். நான் ஒங்களுக்காகக் காத்துண் டிருந்தேன். நீங்க வரல்லெ. நானாப் பொம்மை கொஞ்சம் எடுத்துக் கிண்டேன். நகை எனக்கென்னத்துக்கு? கொலு வெச்சால் அம்பாள் தானே கொடுக்கிறாள்’ என்று எச்சுமு சொன்னதோடு, “இந்தாங்கோ பொம்மை” என்று பொம்மை களைக் காலடியில் கொண்டுவந்து வைத்தாள். 

“ரெண்டுங் கெட்டான்!” என்று சொல்லிக்கொண்டே எஜமானி அம்மாள் திரும்பினாள். 

“அம்மாமி ! எனக்கு ஒடம்பு சரியாயிடுத்து; ஆனால் இனிமேல் ஒங்காத்திலே வேலை செய்ய யோக்கியதை இல்லை. இந்தப் பொண்ணைப் பெத்ததற்கு நாக்கைப் பிடுங்கிக்கிண்டு சாகலாம்” என்றாள் சின்னம்மா. 

“அழகாயிருக்கு உன் பேச்சு” என்று சொல்லிக் கொண்டே ராஜாமணியம்மாள் வீட்டுக்குக் கிளம்பினாள். அத்துடன் சங்கிலி விஷயத்தை விட்டுவிட்டாள். 

விஜய தசமி தினம். வக்கீல் வேதாந்தமையர் வீட்டில் திமிலோகப்பட்டது. விஷயம் என்னவென்றால்; அம்பா ளுக்குப் பிரீதியாக ஐந்து ஸ்திரீகளுக்குப் புடைவையும், ஐந்து கன்னிகளுக்குப் பாவாடையும் பூஜைசெய்து கொடுக்கும் மும்முரம். அன்று முழுதும் ஊரெங்கிலும் ராஜாமணியம்மாளின் பேச்சுத்தான். 

ரவு வந்தது. கொலுவைக் கலைத்துப் பொம்மை களைப் பெட்டியில் அடுக்கும் நேரம். வக்கீலும் அவர் மனைவியும் பொம்மைகளை எடுத்தும் துணிகளை மடித்தும் ருட்டியும் பலகைகளை அடுக்கிக்கொண்டும் இருந்தார். கள். கீல்போட்ட இரட்டைப் பலகை இடுக்கில் ஏதோ பளிச்சென்று மின்னிற்று. இருவரும் பார்த்தார்கள்; செயினும் பதக்கமும்! 

ராஜாமணி அம்மாளின் தலை சுழன்றது. அவள் செவியில் சிம்மத்தின் வெறிகொண்ட கர்ஜனை கேட்டது. காளியின் வாள் வீச்சு வீர்விர்ரென்று விழுந்தது. அகக் கண்முன் மகிஷாசுரனுடைய தலை பனங்காய்போல் உருண்டுவிழும் காட்சி எழுந்தது. உள்ளத்தில் பீதி உண்டாயிற்று. மயிர்க்கூச்செறிந்தது. உடல் முழுதும் நனைந்து போயிற்று. அப்படியே கீழே விழுந்து நமஸ்காரம் செய்தாள். மனது அமைதியுறவில்லை. நேரே சின்னம்மா வீட்டுக்குச் சென்றாள். 

அந்த நேரத்தில் எஜமானியைப் பார்த்ததும் சின்னம் மாவுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. எச்சுமு இடுப் பில் கைவைத்துக் கொண்டு, ‘இன்னும் ஏதாவது அடி வாங்கி வெக்கப்போரேளா என்ன? ஒங்க பொம்மையைத் தான் அன்னிக்கி நீங்க எடுத்துக்கிண்டு போகல்லேன் னூட்டு ஒடனே கொண்டுவந்து நானே வெச்சூட்டேனே!” என்றாள். 

ராஜாமணி அம்மாளின் கண்களில் நீர் கரகரவென்று கிளம்பிற்று. “என் அல்பபுத்தியை என்னன்னு சொல் றது சின்னம்மா! படாப் பழியைக் குழந்தைமேலே சுமத்தினேன். பலகை இடுக்கிலே இருந்து அந்த நகை இப்பொ அம்புட்டுது. என்னை மகிஷாசுரமர்த்தனிதான் காப்பாத்தணும்” என்று சொல்லிக் கைகுவித்தாள். 

சின்னம்மாவுக்கு நா எழவில்லை. குழந்தை எச்சுமு வைக் கட்டி அணைத்துக்கொண்டு மௌனமாகக் கண்ணீர் விட்டாள்.

– மோகினி (சிறு கதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1951, கலைமகள் காரியாலயம், சென்னை.

வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *