விச்சுவுக்குக் கடிதங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 11, 2014
பார்வையிட்டோர்: 8,386 
 

என் அன்பார்ந்த விச்சு,

உன் அருமையான கடிதம் கிடைத்தது. ‘அருமை’ என்ற பதத்தை நான் ரொம்ப ரொம்ப யோசனை செய்து உபயோகிக்கிறேன். குழந்தாய்! ‘என் உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளும்படி’ நீ அந்தக் கடிதத்தில் ஐந்து தடவைகள் திரும்பத் திரும்ப ‘அருமை’யாக எழுதியிருப்பது ஒன்று. இரண்டாவது, நீ மதுரையில் உன் தகப்பனார் வீட்டுக்கு விடுமுறை தினங்களை ஆனந்தமாகக் கழிப்பதற்குச் சென்று, அங்கிருந்து கோடைக்கானலுக்குப் போய் மாசம் ஒன்றரை ஆகியும் கூட, மாமாவுக்கு அருமையாக எழுதும் முதல் காகிதம் ஆயிற்றே இது!

உன் கடிதத்தை நான் மூன்று முறை திரும்பத் திரும்பப் படித்தேன். அதன் பலனாக நான் முதலில் கண்டது ஒன்பது இடங்களில் எழுத்துத் தப்புகள்; ஆறு இடங்களில் இலக்கணப் பிழைகள், ஏழு வருஷத்துக்கு முன்பு “கையெழுத்தைத் திருத்திக் கொள் ளாவிட்டால் ஒன்றும் உபயோகமில்லை” என்று நான் உன்னிடமும் உன் அம்மாளிட மும் பல முறைகள் சொல்லியிருக்கிறேன். இன்றைக்கு, நீ இண்டர்மீடியட் பரீட்சை பாஸ் செய்யப் போகும் தறுவாயிலும், அதையே நான் திருப்பிச் சொல்லுவது என்றால் எனக்கு வெட்கமாக இருக்கிறதடா அப்பா! என் மருமான் போட்ட கடிதம் இது என்று சொல்லிக் கொள்ள சங்கோசமாக இருக்கிறதடா, பையா? நிற்க.

பரீட்சை ‘ரிஸல்ட்’கள் வந்து கொண்டும் வரப்போவதுமாக இருக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே, மேற்கொண்டு என்ன செய்யலாம், என்ன படிப்புப் படிக்கலாம் என்று என்னைக் கெளரவித்து நீ யோசனை கேட்டிருக்கிறாய். இந்தக் கடிதம் இன்று வராமல் இருந்தால், நானே உன் அப்பாவுக்கு இதே விஷயமாக எழுதிக் கேட்டிருப்பேன். இதே கேள்வியை உன்னைப் போல் பதினெட்டு வயசு ‘விச்சு’க் களைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தகப்பனாரும் கேட்டுக்
கொண்டும் யோசனை செய்து கொண்டுமிருப்பார்களாதலால், நான் உனக்கு எழுதுவதை, சரியோ தப்போ, பகிரங்கமாகவே எழுதி விடலாம் என்று முடிவு செய் தேன். ஆனால் ஒன்று : உனக்கு யோசனை சொல்ல எனக்கு என்ன யோக்யதாம்சம் இருக்கிறது என்று நான் முதலில் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். நான் அறிய எனக்கு இருக்கும் யோக்யதாம்சம், உன்னைவிட நான் வயதில்
பெரியவன் என்பதுதான்.

பழங்காலத்திலே படித்தவர்கள் என்று பார்த்து வேலை கொடுத்தார்கள்; அப்புறம் வேலைக்கென்று படிக்கும் காலம் வந்தது; அதற்கு அடுத்தபடியாகப் படித்துவிட்டு வேலைக்கு அலைந்து திண்டாடும் காலத்தையும் கண்டோம். இப்போது படிக்கிறதற்கு இடம் தேடிப் பரிதவிக்கும் காலம் தம்பி! ‘இணடர் வகுப்பில் முதல் கிளாஸில் பாஸ் செய்து விடுவேன்’ என்று நீ எழுதியிருக்கிறாய். நீ படிக்கும் காலேஜில் இரண்டாவது வகுப்பில் பாஸ் செய்கிறவர்கள் தான் அபூர்வமாம்; கேளு கதையை! இன்று வரையில் நான் உன் படிப்பைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை. உன் அப்பா சொல்கிற மாதிரி, தெய்வ சங்கல்பத்தால் அது நடந்து கொண்டே வந்தது. ‘இண்டர்’ என்கிற ஜங்ஷனுக்கு வந்ததும் அந்த வண்டியைச் சற்று நிறுத்தி நிதானமாக யோசனை செய்து, உனக்கு உகந்ததும் சரியானதுமான பிராஞ்ச் லைனில் திருப்ப வேண்டும். உன்னுடைய மனதுக்கு ஏற்றது எது என்பதை நாங்கள் அறிய, நீ உதவி செய்ய வேண்டும். ஒருவனுக்குப் பயில்வானாகப் போக யோக்யதை இருக்கும்; இன்னொருவனுக்கு ஆசிரியராகப் போகச் சக்தி இருக்கும். ஆசிரியரை விட்டு யானையைத் தூக்கச் சொல்லி பயில்வானைக் கொண்டு கட்டுரை எழுதச் சொல்லுவது சரியல்லவே!

நீ சிறு பயலாக இருந்தபோது வீடா முயற்சியுடன் – வாத்தியார் அடிப்பதையும் பாட்டி கோபிப்பதையும் லட்சியம் செய்யாமல் செய்திருக்கும் ஒரே காரியம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அது கோலியாட்டம். தூண்களையெல்லாம் வைத்துக் கொண்டு பள்ளிக்கூடம் போட்டிருக்கிறாய். பல்லி சாஸ்திரத்தைப் பஞ்சாங்கத் திலிருந்து தனியாக எழுதி வைத்துக் கொண்டு ஜோஸ்யம் சொல்லியிருக்கிறாய். யாரோ நாவல் எழுதுவதைப் பார்த்துவிட்டு நீயும் ஒரு பக்கம் நாவல் எழுதி யிருக்கிறாள். எலலாருக்கும் வைத்தியம் செய்கிறேனென்று, பெப்பர் மிண்ட்களை விநியோகம் செய்திருக்கிறாய். உன் சகாக்களைச் சேர்த்துக் கொண்டு நாடகம் போட்டிருக்கிறாய். உன் மாமியிடமும் என்னிடமும் குறைந்தது ஒரு லட்சம் பொய் கள் சொல்லியிருக்கிறாள். பல பேனாக்களை முறித்திருக்கிறாய். உன் கண்ணில் படக் கூடாதென்று அவள் கதைப் புஸ்தகங்களை மறைத்து வைத்தும்கூட நீ அவை களைத் துப்பறியும் சாமர்த்தியத்துடன் எப்படியோ தேடி எடுத்துக் கண் காணா இடத்தில் உட்கார்ந்து படித்திருக்கிறாய் – இந்த மாதிரியான உன் பழைய விளையாட்டுக்களையும் விஷமங்களையும் ஞாபகப்படுத்திக் கொண்டு, எதில் உனக்கு ஆர்வம் ஜாஸ்தி என்று கண்டுபிடிக்க முயன்றேன்; கண்டுபிடிக்க முடியவில்லை. ரேகைகளைப் பார்த்து இதைச் சொல்லலாம் என்றார்கள் சிலர். அதில் எனக்கு நம்பிக்கையில்லை. ஏனென்றால், என் கைரேகைப்படி நான் செய்ய வேண்டிய தொழில் ஒன்று இப்போது செய்வது வேறொன்று. வேறொன்று. ஜோஸ்யர்கள் உதவியையும் நான் உன் விஷயமாக நாடினேன். ஒரு ஜோஸ்யர், “பையனுக்கு ஜூலை பூராவும் போகணும், அப்புறம்தான் நல்ல காலம்” என்றார். ஜூலை போய் விட்டால் ‘அட்மிஷன்’களும் தீர்ந்து விடுமே! இன்னொரு ஜோஸ்யர் ‘பையனுக்குப் படிப்பு பேஷா நடக்கும். பிரஹஸ்பதி கேந்தி ஸ்தானத்திலே இருக்கான்; லக்னத்தில் சூரியன், புதன்… பேஷ் பேஷ்!… நீங்கள் பார்த்துக் கவனிக்கிறபோது ஒரு குறை வராது” என்றார். சூரியனையும் புதனையும் பிரஹஸ்பதியையும் விட இந்த ஜோதிட ருக்கு, கேவலம் என்னுடைய கவனிப்பு பெரிசாகப் பட்டுவிட்டது. பேஷ், பேஷ்!

நீ சின்னப் பையன்! இருந்தாலும் உனக்கு ஒரு பெரிய உண்மையைச் சொல்லப் போகிறேன். இந்த லோகத்திலே நிஜமான யோக்யதைக்குத் தகுந்த நிஜமான மதிப்பு அநாயாசமாகவும் சாதாரணமாகவும் கிடைத்து விடும் என்று நீ நினைத்துக் கொண்டிருக்காதே! நீ மகா மேதாவியாக இருக்கலாம். நூற்றுக்கு நூறு மார்க் வாங்கலாம். உனக்கு அகப்படாதது, உன்னைக் காபி அடித்து நூற்றுக்கு நூறு மார்க் வாங்கலாம். உனக்கு அகப்படாதது, உன்னைக் காபி அடித்து நூற்றுக்கு முப்பது வாங்கத் திணறும் ஒரு சோணாசலத்துக்குப் போய்ச் சேரும். இதற்காக உலகத்தின் பேரிலே நான் அபவாதம் சொல்லப் போவதில்லை.

பெரியவாள் இதைப் ‘பூர்வ புண்யம்’ என்பார்கள். பூர்வ புண்ணியம் உள்ளவனுக்குப் பல விஷயங்களில் பலன்கள் ஸ்வதாவாக வந்து சேருகிறது. மஹா மேதாவியாக இருப்பான். அவனே சகல வேலைகளையும் செய்வான். இத்தனையையும் அவன் செய்து, கையெழுத்துப் போடும் இடத்தை மட்டும் அடியில் காலியாக வைப்பான். அதைப் பாக்கியசாலியான ஒரு மானேஜர் பூர்த்தி செய்து, எஜமானனிடம் சகல பெருமையையும் அள்ளிக்கொண்டு போவான்.

ஆகையினாலே, யோக்யதாம்சம் இல்லாத ஒரு பையன் லகுவாக ஒரு மெடிகல் காலேஜிலோ இன்ஜீனீரிங் காலேஜிலோ இடம் பெற்றுக் கொள்ள, உன்னை நான் என் ஓட்டை ஸைக்கிளில் ஊரெல்லாம் சுற்ற வைத்தும் நீ இடம் பெறாவிட்டாலும் நான் என் மனசைக் கலக்கிக் கொள்ளப் போகிறதில்லை. ‘விதி’ என்பது இருந்தால் இருக்கட்டும்; அதற்காக என் முயற்சியை நிறுத்தப் போகிறதில்லை; ஏமாற்றம் ஏற்பட்டாலும் மனம் தளரப் போகிறதில்லை. கடவுளே உபகாரம் செய்கிறார் என்றால் என்ன அர்த்தம்? ஒரு நல்ல மாடு இருக்கிறது; நல்ல மடி இருக்கிறது; ஆனால் காப்பிக்குப் பால் வேண்டுமானால், நாம் தானே போய் மாட்டைக் கறக்க வேண்டும்? கடவுள் நமக்கு மாட்டைக் கொடுக்கலாமே ஒழிய, கறக்கும் வேலையையும் அவரே செய்வார் என்று நாம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது நியாயமா? நமது முயற்சியும் நம்பிக்கையும் இங்கேதான் அவசியமாகிறது. ஒரு சமயம் மாடு சாதுவாகக் கறக்கலாம்; ஒரு சமயம் பக்கத்தில் போனவுடன் ‘விண்’ என்று உதைக்கலாம். இரண்டு பலனுக்கும் தயாராகவே நீ போக வேண்டும்.

நீ எவ்வளவோ சிரமப்பட்டுத்தான் வாசித்திருக்கிறாய். அதன் பலனாக நல்ல உத்தி யோக வழியில் முன்னேற வேண்டுமென்ற ஆசை இருப்பதும் சகஜம்தான். நீ பெரிய பணக்காரன் இல்லை. அதாவது, உன்னிடம் பணமே இல்லை என்று நான் சொல்ல வில்லை. வேண்டியது உன் படிப்புக்காக உன் அப்பாவும் சரி, நானும் சரி, கொடுக் கக் காத்திருக்கிறோம். நீ எங்கள் வீட்டுக்கு ராஜாவாகவும் மணியாகவும் இருக்கிறாய். படிப்பை முடித்துக் கொண்டு பாங்கில் போட்ட பணத்தின் வட்டியை வைத்துக் கொண்டு குஷியாக இருக்க முடியாது. உத்தியோகம் பார்த்து, நன்றாகச் சம்பாதித்து, உன் பாட்டனார் பெயரை நீ எடுக்க வேண்டும். ‘பேரன்’ என்ற பட்டம் அப்போது தான் சித்திப்பதாகும்.

மேல்படிப்பு என்றால் சேர்க்கவே சிபாரிசுகள் வேண்டும் என்று நண்பர்கள் பயமுறுத்துகிறார்கள். எனக்குப் பெரிய மனுஷர்கள் பல பேரைத் தெரியும்; ஆனால் அவர்களுக்கு என்னைத் தெரியுமா என்பது சந்தேகம்தான்! எனக்கு அவர்களை முழுதும் நம்புவதிலும் நம்பிக்கையில்லை. பெரிய மனுஷர் நமகக் உதவி செய்வ தானால், நாம் அவர்களுக்கு என்ன உதவி செய்யப் போகிறோம்? அல்லது, நான் கேட்டு அவர்கள் என்னை நிராகரித்தாலும், என்னால் அவர்களைப் பதிலுக்கு என்ன செய்து விட முடியும்?

இதே ஊரில் உன் சொந்தக்காரர் ஒருவர் இருக்கிறார், வருஷா வருஷா குறைந்த பட்சம் பதினைந்து பிள்ளைகளையாவது பள்ளிக் கூடங்களில் சேர்த்திருப்பதாகப் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார். நேற்று அவரிடம் உன்னைப் பற்றி நான் பிரஸ்தாபித்தபோது, வேண்டப்பட்டவர்களாக இருந்தவர்கள் இப்போ வெளியூர்களில் இருப்பதாகச் சொல்லிவிட்டார். இன்னொருவர், “ஆனானப் பட்ட பெரிய உத்தியோகஸ்தர்களே ‘ட்ரை’ பண்ணிவிட்டு விட்டார்கள்…. அப்படியே பாஸ் பண்ணி விட்டாலும் ஒண்ணும் இல்லை. பையனைப் பேசாமல் ‘பிஸினஸ்’களில் தள்ளுங்கள். அதில்தான் பணம்” என்றார். என்னைப் பற்றிப் பெரிதாக நினைத்திருக்கும் நண்பர்கள், “எலெக்ட்ரிகல் இஞ்ஜினீரிங்! இல்லாவிட்டால், மெடிகல் – இரண்டில் ஒன்றைப் பார்த்துப் போடுங்கள்” என்றார்கள். “வெறும் பி.ஏ.யில் மட்டும் சேர்க்க வேண்டாம்” என்று பல பேர் சொன்னார்கள். வேறொருவர், “டெல்லியில் பரீட்சைகள் அடிக்கடி வைக்கிறார்கள். போகட்டும் ஸார்! நல்ல ஸ்டார்ட்டிங்!” என்று புத்திமதி சொன்னார். “கழுதையை ஓட்டிச் சென்ற கிழவனும் மகனும்” என்ற கதையில் கொண்டு வந்து விடும் போலிருக்கிறது பலருடைய யோசனைகளும்.

ஒரே ஒரு அருமை மருமானை எல்லா உத்தியோகங் களிலும் விட்டுப் பார்ப்பது முடியாததாகையால், நான் வரும் கடிதங்களில் ஒவ்வொரு தொழிலையும் பற்றி எனக்குத் தெரிந்ததை எழுதுகிறேன். இன்னும் கொஞ்சம் சாவகாசம் இருப்பதாலும், சென்னையைவிட நீ இப்போது போய் இருக்கும் கோடைக்கானல் குளிர்ச்சியாக இருப்பதாலும், பொழுது போகாத வேளைகளில் என் கடிதங்களைப் படித்து யோசனை செய்து பார்த்துச் சொல்லு.

உன் பிரியமுள்ள

அம்பி மாமா

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *