விசுவாசம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 8,264 
 
 

சிமெண்ட் தரையில் பெருக்குமாறால் பெருக்கும் சத்தம் வாசலைத் தாண்டி காதில் ஒலித்தது. அதைத் தொடர்ந்து சுபா வாசல் தெளிக்கும் சத்தமும் வந்தது. இன்னும் இரண்டு நிமிடங்களில் சரட் சரட்டென்று பேருக்கு கோலமென்று ஒன்றை இழுத்துவிட்டு, என்னை எழுப்ப வந்துவிடுவாள். பெரும்பாலும் நான்கு புள்ளி நான்கு வரிசைக்கு மேல் அவள் கோலம் வரைந்ததாய் நினைவில்லை. தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் மட்டும் கலர் கோலங்கள் காணக்கிடைக்கும். இத்தனை காட்சிகளும் நான் கண்களை மூடிய நிலையிலும் என் கண்ணுக்குள் வந்து போயின. போன பொங்களன்று அவள் போட்டு வைத்த பச்சைக்கலர் கரும்பும், சாய்ந்திருந்த பொங்கல் பானையும் கூட கனவு போல வந்து போனது. அதோடு அன்றைக்கு அவள் போட்ட சண்டையும், காட்டுக் கூச்சலும்.

” இன்னைக்கு இன்னும் பால் வரல. கடைக்குப் போயி நீங்கதான் காபி வாங்கியாரணும் “- இது என்னை எழுப்ப உபயோகப்படுத்தப்படும் உத்திகளில் ஒன்று.

எங்கள் கோவிந்தன் மாஸ்டரின் ஃபில்டர் காபி ஏனோ நினைவுக்கு வந்தது. விழுங்கும் ஒவ்வொரு துளியும் நுனி நாக்கில் தித்திப்பையும், அடி நாக்கில் மென்கசப்பையும் தந்து போகும். மாலையில் கிடைக்கும் அந்த ஒரு காபிக்காகவே எவ்வளவு மணி நேரம் வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம். அது நேற்று ஆனது போல, இரவு ஒரு மணி ஆன போதும் கூட.

உள்ளே பாத்திரங்கள் உருட்டும் சத்தம் கேட்டது. இதற்கு மேலும் தூங்கினால், எப்போது வேண்டுமானாலும் வீட்டின் வானிலை மாறக்கூடும்.

” இன்னிக்கு தேதி மூணாயிடுச்சு. ஏற்கனவே போன மாச சீட்டுக்கும் சேத்து இந்த மாசம் தர்றதா சத்திரப்பட்டியாளுக்கிட்ட சொல்லியிருக்கோம். நேத்தே பூ கொடுக்கப் போகும் போது ஒரு தடவ ஞாபகப்படுத்திடாக. நாம என்ன பேங்குலயா வேல பாக்குறோம். ஒண்ணாம் தேதியானா டாண்ணு வந்து கொட்டுறதுக்கு. ம்..” – சமயம் கிடைக்கும் போதெல்லாம் என் சர்வர் வேலையை குத்திக்காட்டுவதில் அவளுக்குக்கொரு சிற்றின்பம்.

” ஓனரு இன்னைக்கு வேலை முடிஞ்சதும் எடுத்துத் தந்துருவாரு. இரண்டு மாசத்துக்கும் சேர்த்துக் கொடுத்துடலாம் ” தூக்கக் கலக்கத்தில் ஒலித்த என் குரல் எனக்கே அன்னியமாய் பட்டது.

” ஓ.. இரண்டு மாசத்துக்கும் சேத்து கொடுத்துட்டா இந்த மாசம் புவ்வாவுக்கு என்ன பண்றதாமாம் ? ” மேகங்கள் என்னைச் சூழ்வதை என்னால் உணர முடிந்தது.

” அத போன மாசம் தீவாளிக்கு நீ போத்தீசுக்கு போறதுக்கு முன்னாடி யோசிச்சுருக்கணும் ” இப்போது என் குரல் தெளிவானது போலிருந்தது.

” வருசத்துக்கொரு தடவ எடுக்குற ஒரு புடவயும் ஒங்க கண்ணுக்குப் பொறுக்கலயா.. அவ அவ மாசத்துக்கு ஒண்ணா போட்டு மினுக்குறா. நா என்ன உங்ககிட்ட கட்டி கட்டியா தங்கமா கேட்டேன். கட்டுறத்துக்கு ஒரு புடவைக்கும் வக்கில்லனா இத நா எங்க போயி சொல்றது. ” எதிர் பார்த்தது போலவே சட்டென்று மாறியது வானிலை. இனிமேல் இடியும், மழையும் நிச்சயம். எப்போதாவது பெய்தால் இனிக்கும் அதே மழை, எப்போதும் பெய்தால் எரிச்சலே மிச்சமாகும்.

” வர்ற 7 ஆயிரத்துல வட்டிக்கும், சீட்டுக்கும் 4 ஆயிரம் போச்சுனா மீதில எப்படி குடும்பம் நடத்துறதாம் ஒவ்வொண்ணும் விக்கிற விலையில. இதுல இவனுங்க வேற தெனந்தெனம் பெட்ரோலு வெல யேத்துறோய்ங்க. அதத் தொட்டுத் தொட்டு ஒவ்வொண்ணா ஏத்துறாய்ங்க. இவுக சம்பளம் மட்டும் வருசத்துக்கு ஐநூறு ரூபாய் ஏத்துவாக. இத்தனையையும் கட்டி மேய்க்கிறதுக்குள்ள மனுசிக்கு போதும் போதும்ன்னு ஆயிடுது. சம்பளத்த கொஞ்சம் கூட்டித் தந்தாதான் என்னவாம். ராப்பகலா உழைச்சாலும் காக்காசு மிஞ்சுறதில்ல. அப்புறம் என்னத்துக்கு இப்படி கஷ்டப்படனும். உங்க ஓட்டல்ல ரேட்டு மட்டும் மாறாமலேயேவா இருக்கு? இதெல்லாம் நா கெடந்து புலம்பி என்ன பயன்? அதுக்கு மொதல்ல இந்த மவராசன் வாயத்தொறந்து பேசணும். அப்புறந்தானே ஏத்திக் கேட்கிறதுக்கு. வாயைத் திறந்தா முத்தா உதிர்ந்திடும். எல்லாத்துக்கும் கோவில் மாடு மாதிரி தலையை ஆட்டிட்டு வந்தா என்னதான் பண்றதோ ” மழை இன்றைக்கு கொஞ்சம் அதிகமாவே பெய்தது. சம்பளம் வரும் வரை இது ஓய்வதற்கான வாய்ப்பேபில்லை.

அவளைச் சொல்லியும் குற்றமில்லை. நான் பார்க்கிற சர்வர் வேலையில் வருகிற சம்பளத்தில் ஒரு குடும்பத்தை ஓட்டுவதும் அவ்வளவு சுலபமில்லை.

” தம்பி, வியாபாரமெல்லாம் முன்னப்போல இல்ல. இப்ப எல்லா ஓட்டல்காரனும் குளு குளு ஏ.சி-யும், பள பள தரையும் வச்சு விதவிதமா செஞ்சு ஜமாய்க்கிறாங்க. இங்க வர்றவங்கெல்லாம் பழக்கத்துக்கும், நம்ம கோவிந்தனோட கை மணத்துக்குந்தான் வர்றாய்ங்க. அதுவும் ஒரு நாள் போல ஒரு நாள் இருக்கிறது இல்ல. இத நான் சொல்லிதான் உனக்குத் தெரியனுமில்ல. நீயும் பத்துப் பதினஞ்சு வருசமா இங்கதான் இருக்க. உனக்கே தெரியாதா? ” இதெல்லாம், நான் போன தடவை ஆயிரம் ரூபாய் ஏற்றிக் கேட்ட போது, ஐநூறு மட்டுமே ஏற்றிவிட்டு அதற்கு சின்னவர் சொன்ன காரணங்கள். சிறு பாராபட்சமுமின்றி என் தோள் மீது கை போட்டு ஒரு உற்ற நண்பனிடம் பகிரும் பாவனையுடன் அவர் இதைச் சொல்லும் போது என்னால் என்ன எதிர்த்துப் பேச இயலும்?

எங்கள் ஒட்டலின் பெயர் சாந்தி விஹார். அந்த சாந்தி இப்போதைய ஒனரின் சகோதரி. இவரது அப்பா தன் ஆசை மகள் பெயரில் தொடங்கிய ஒட்டல் இது. நான் வேலைக்குச் சேர்ந்த புதிதில் மூன்று வேளையும் இயங்கி வந்த ஓட்டல் இப்போது மதியம், இரவு என்று இரண்டே வேளையாகிப் போனது. எங்கள் ஓட்டலின் சாம்பார் வடையும், சேமியா கேசரியும் முப்பது வருடங்களாக இவ்வூர் மக்களின் நா நரம்புகளை உயிர்ப்புடன் வைத்திருந்தன. சின்னவர் கல்லாப் பெட்டியில் உட்கார்ந்த அதே நேரத்தில்தான் நானும் இங்கு வேலைக்குச் சேர்ந்தேன். பெரியவரின் ஆட்களாக இருந்த ஓட்டலில் நான் மட்டுமே சின்னவரின் ஆளாய் அடையாளம் காணப்பெற்றேன். எங்கள் சின்னவரிடத்தில் எனக்கு எப்போதும் நற்பெயர் உண்டு. சொல் பேச்சு தட்டாத குணமும், கோபமே வராத என் இயல்பும் செய்வதைத் திருந்த செய்யும் பழக்கமும் வாடிக்கையாளரிடத்தும், சின்னவரிடத்தும் எனக்கு நல்ல மதிப்பை ஏற்படுத்தியிருந்தன.

* * *

எங்கள் வீட்டு வானிலை எப்படித்தான் தெரியுமோ இந்த சந்திரனுக்கு. எப்படியும் கண்டுபிடித்து விடுவான். அன்றைக்கும் அப்படியே, ” என்னண்ணே.. வீட்டுல விசேசமா ? ” கழுவி வைக்கப்பட்ட தட்டுகளை அடுக்கியவாறே கேட்டான்.

” அட ஏம்பா நீ வேற ” சட்டையை மாற்றிக் கொண்டே நான் பதில் கூறத் தலைப்பட்டேன்.

” அதான் ஆளப் பாத்தாலே தெரியுதே.. என்னாச்சுண்ணே? வழக்கம் போலத்தானா ?? ” அடுத்தவர் விசயத்தில் மூக்கை நுழைக்கும் நம் குணம் நாம் விலங்குகளாக சுற்றியழைந்த காலத்திலிருந்தே வந்த பரிணாமத் தொடர்ச்சி என்று ஒரு தடவை கஸ்டமர் ஒருவர் பேசியதை கேட்ட நினைவு. இப்போது சந்திரனுக்கு வால் முளைத்தது போல கற்பனை செய்து கொண்டேன்.

” ஆமாம் சந்திரா.. தினமும் பொழுது விடிஞ்சு பொழுது சாயுறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுது.. ஸ்ஸ்ப்பா.. ஒரே இடி மின்னல் மழைதான் ” அவன் எதிர்பார்த்த பதில் கிடைத்திருக்கும்.

” அது சரிதாண்ணே வாங்குற சம்பளத்துல பேச்சிலர் எங்களுக்கே காலம் தள்ள முடியல.. குடும்பஸ்தன் நீங்கெல்லாம் எப்படித்தான் சமாளிக்கிறீங்களோ ” ஆதங்கத்துடன் வெளிப்பட்ட அவன் பேச்சு ஏனோ கொஞ்சம் ஆறுதலாய்க் கூட இருந்தது. ஆனால் அன்றைக்கு எப்படியோ சொல்லி வைத்தாற் போல அவனும் சம்பளத்தைப் பற்றியே ஆரம்பித்தான்.

சாம்பாரில் ஊறாத வடை போன்று ஒட்டாத என் சிரிப்பு அவனை மேலும் தூண்டிவிட்டிருக்க வேண்டும்.

அவனே தொடர்ந்தான். ” நீங்க ஏன் அண்ணே சின்னவருக்குகிட்ட சம்பளத்தக் கொஞ்சம் கூட்டிக் கேட்கக் கூடாது. ? ” என் சம்பளத்தை மட்டும் சின்னவர் தனியாக உயர்த்திவிட முடியாது என்பது அவனுக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.

” அதான் போன தடவ கேட்டப்ப அவர் எல்லார் முன்னாடியும் தானே காரணம் சொன்னார்? ”

” ஆனா.. அவர் சொன்ன அத்தன காரணமும் உண்மையா என்ன ? நாளுக்கு நாள் ஓட்டலுக்கு வர்றவங்க எண்ணிக்கை கூடிகிட்டு தானே போகுது. நேத்தைக்கு கடைசி கேசரி கட்டும் போது கூட சூடு குறையலயே ? நீங்களே சொல்லுங்க. இப்போ உடனடியா கூட ஒண்ணும் கூட்ட வேண்டாம் இதோ அடுத்த மாசம் பொங்கலோட சேர்த்து கூட்டலாமே ”

” ஏய் சந்திரா.. நடக்கிற காரியமா பேசுப்பா.. அவரு ஐநூறு கூட்டி முழுசா ஆறு மாசம் கூட ஆகல.. ஒவ்வொரு தடவையும் சித்திர ஒண்ணுக்கு தானே கூட்டுறது வழக்கம். இதென்ன நீயும் வருஷப் பொறப்ப மாத்தச் சொல்றியா ? அந்தக் காலம் முடிஞ்சுடுச்சு தெரியுமுள்ள ? ” என்று கொத்துமல்லி போல கொஞ்சம் அரசியல் தூவினேன்.

” இதெல்லாம் கூட வேண்டாம்ண்ணே.. இதோ நம்ம ஊர்ல பால் டிப்போகிட்ட புட் பார்க் தொறந்துருக்காங்க.. புதுசா வேலைக்கு வர்றவங்களுக்கே ஐயாயிரம் தர்றாங்களாம். நீங்கெல்லாம் போனா குறைஞ்சது எட்டாயிரம் நிச்சயம்னே.. ஒழுங்கா பாத்தா அப்படியிப்படி கல்லா காவலுக்கு கூட உட்காரலாம். ”

” ஏலேய்… நீ என்ன சொல்ற.. இருக்கிற வேலைய விட்டுட்டு அங்க போகச் சொல்றியா… காசுக்கு மட்டும் தான் வேலை இந்த வேலையப் பாக்குறேன் நினைக்கிறியா நீயி? பசியோட வர்வனுகளுக்கு ருசியோட பலகாரம் கொடுக்கும் போது அவுக முகம் மாறும் பாரு.. வரும் போதெல்லாம் என்னை தேடிப்பார்த்து ஆர்டர் சொல்ற பரமசிவம் அண்ணாச்சிய அங்க பார்க்க முடியுமா ? இல்ல அப்பப்ப வந்தாலும் ஒவ்வொரு தடவயும் எம் வீட்டைப்பத்தி அக்கறையா விசாரிக்கும் பெரியவூட்டுக்காரர் மாதிரி வருமா. ஒரு வேளைச் சாப்பாடு கூட முழுசா கிடைக்காத காலத்துல மூணு வேளை சோறும் போட்டு சம்பளமும் கொடுத்தது யாரு அந்த புது ஓட்டல்காரனா? மழைக்கு ஒழுகுற ஓட்டு வீட்டுல இருந்தப்ப எத்தனை தடவ இந்த ஓட்டல் மேசையில இழுத்துப் போட்டு தூங்கியிருப்பேன் தெரியுமா? இவ்வளவு ஏண்டா.. என் கல்யாணத்த நடத்தி வச்சதே நம்ம சின்னவருதாண்டா.. அவரு ஒரு வார்த்த சொல்லலன்னா எனக்கெல்லாம் எவன் பொண்ணு கொடுத்திருப்பான்ற ? இதெல்லாம் உனக்குத் தெரியாது விடு ”

” அண்ணே நீங்க சொல்றது வாஸ்தவந்தான்.. சரி இப்படி பண்ணுங்கண்ணே.. வேலைய விட்டு அங்கெல்லாம் போக வேண்டாம். அங்க போகப் போறேன்னு நம்ம சின்னவருகிட்ட ஒரு வார்த்த சொல்லுங்க.. பதறியடிச்சுட்டு உங்களுக்கு வேண்டியதப் பண்ணுவாருண்ணே.. உங்களுக்குண்ணே இங்க ஒரு கூட்டமிருக்குண்ணே.. ”

” ஏய்.. இதெல்லாம் நல்லாவாயிருக்கும்? அட போப்பா.. நான் என்ன நம்ம கோவிந்தன் மாஸ்டரா ? போறேன்னு சொன்னதும் கேட்டதுக்கும் ஒரு மடங்கு கூட கொடுக்கிறதுக்கு.. போ.. போயி வேலய கவனிப்பா.. கஸ்டமர் வர்ற நேரமாச்சு ”

” நம்ம கோவிந்தன் அண்ணாச்சிக்கு தரும் போது உங்களுக்குத் தரமாட்டாரா ? அப்படிப் பார்த்தா அவரவிட நீங்க இங்க சீனியர். சின்னவருக்கு எல்லாரவிட க்ளோசும் கூட.. உங்கள நம்பித்தானே அப்பப்போ அவரு கல்லாவ கூட விட்டுட்டுப் போறாரு.. நீங்களே சொல்லுங்க.. ”

” அதென்னவோ உண்மைதான்.. சரி இன்னைக்கு சம்பளம் தரும் போது பாக்கலாம். உங்கண்ணிய வேற என்னால சமாளிக்க முடியல.. ”

அன்றைக்கு வெள்ளிக்கிழமையாதலால் இரவு நேரக் கூட்டம் அதிகமாக இருந்தது. வேலை மும்முரத்தில் சந்திரனுடன் பேசிய அத்தனையும் கற்பூரமாய் கரைந்து போனாலும், சின்னவர் சம்பளம் பிரித்துத் தரும் போது, மீண்டும் தீயாய் பற்றிக் கொண்டது.

எல்லாருக்கும் சம்பளம் கொடுத்துவிட்டு, கணக்கு பார்த்துவிட்டு கடைசியாக எனக்கு கொடுப்பதே அவர் வழக்கம். அப்போது அவர் சாவதனமாக வீடு, ஓட்டல், சினிமா என்று ஏதாவது பேசிக் கொண்டிருப்பார். சில சமயங்களில் இருவரும் இணைந்து இரவுக்காட்சிக்கு செல்வதும் உண்டு. அன்றும் அத்தகைய தனிமை வாய்த்தது.

நானே ஆரம்பித்தேன். ” அண்ணாச்சி உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும் ”

” சொல்லுங்க தலைவரே என்ன விசயம் அல்லது விசேஷம் ? ” அவர் சற்று குதுகலாமாயிருந்தாரென்றால் ஆள் வித்தியாசம் பார்க்காமல் தலைவரே என்றெலைப்பது அவரது வழக்கம். அதைச் சொல்லும் போது, அவரது கன்னக்குழி சிரிப்பும், அசைந்தாடும் சிறு தொப்பையும் என் கவனத்தைக் கலைத்தன.

” அதொண்ணுமில்ல அண்ணாச்சி… நான் இந்த மாசத்தோட வேலைய விட்டுராமுன்னு இருக்கேன் ”

இதைச் சற்றும் அவர் எதிர்ப்பார்க்கவில்லை என்பதை அதுவரையிருந்த புன்னகை மாறிய முகம் காட்டிக் கொடுத்தது. அழியாத விபூதி பூசப்பட்ட அகன்ற நெற்றி ஒரு நொடி சுருங்கிப் பின் விரிந்தது. ” வேலைய விட்டுட்டு சோத்துக்கு என்ன பண்ணப் போறீக ? ” கடைசி வார்த்தையை அவர் உதிர்க்கும் போது அவரது முகம் மறுபடியும் இயல்பு நிலையை அடைந்திருந்தது. புன்னகை மீண்டும் வந்து தொற்றிக் கொண்டது. ஆனாலும் அது வலிந்து புகுத்தப்பட்டதைப் போலிருந்தது.

” அதெல்லாம் சமாளிச்சுதானே ஆகணும் அண்ணாச்சி .. ”

” அப்போ சமாளிக்க முடிவெடுத்தாச்சு போலிருக்கு.. யாராச்சும் ஏதாவது உங்கள சொன்னாகளா ? கஸ்டமர் யாராச்சும் சத்தம் போட்டாகளா ? ” பணத்தை ஒரு பொருட்டாக சொல்லி நான் வந்து நிற்க மாட்டேன் என்று அவருக்குத்தான் என் மேல் எவ்வளவு நம்பிக்கை. ச்சே என் மேல் எனக்கே வெட்கமாக வந்தது.

” அப்படியில்ல அண்ணாச்சி.. வாங்குற சம்பளம் கைக்கும் வாய்க்கும் கூட பத்தமாட்டிக்கு.. போன தடவயே அண்ணாச்சிகிட்ட சொன்னதா ஞாபகம் ”

” ஞாபகமெல்லாம் இருக்குது தலைவரே.. நானும் காரணமெல்லாம் எடுத்துச் சொன்னதா எனக்கு ஞாபகம். சரி விடுங்க.. இப்போ எங்க போறதா உத்தேசம் ?? ”

” உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன அண்ணாச்சி ? பக்கத்துல.. புட்பார்க் ஒண்ணு தொறந்திருக்காகல அங்கதான்.. ”

” அவுக எவ்வளவு தர்றதா சொல்லியிருக்காக ? ”

” எட்டு வரைக்கும் தர்றேங்குறாங்க ”

” ஓ.. ரொம்ப சந்தோஷம். சரி அப்போ போயிட்டு வாங்க. நல்லபடியா இருங்க. வீட்டுல கேட்டதா சொல்லுங்க. வாழ்த்துக்கள் ” என்று சொல்லிவிட்டு இந்த மாத சம்பளத்தை கையில் திணித்தார். அதை வாங்கி எண்ணாமல் பையில் திணித்துக் கொண்டு கண்ணீர் கண்களை மறைக்கத் திரும்பிப் பார்க்காமல் வெளியேறினேன். இப்போதும் என்மேல் எனக்கு வெட்கமாக வந்தது.

– 14 நவம்பர் 2011

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *