கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 13, 2024
பார்வையிட்டோர்: 142 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நான் கணக்கில் ஒரு தடவை இருபத்திநான்கு மார்க் வாங்கியபொழுது எனக்குக் கணக்கு வராதென்றே முடிவு கட்டிவிட்டேன். அதற்கு அடுத்த வருஷம் அறுபத்தி நான்கு மார்க் வாங்கியபோதிலும் என் முடிவை மாற்றிக் கொள்ள முடியவில்லை. காக்கை உட்காரும் பொழுது சில சமயம் பனம்பழம் விழுகிறது. பனம்பழத்தைக் காக்கை தள்ளியதாக ஆகாது. 

ஐன்ஸ்டீனைப் பின்னர் படிக்க முயன்றேன். முயன்ற பொழுதெல்லாம் என் முடிவுதான் ஊர்ஜிதமாயிற்று. ஐன்ஸ்டீன் புத்தகத்தில் உள்ள கணக்குகள் புரியவே இல்லை. அதனால் எனக்கு ஐன்ஸ்டீன் புரியவில்லை என்று மட்டும் நான் சொல்லிவிடமாட்டேன். ஏனென்றால்… 

கலியாண காலம், ஆனி மாதம், முகூர்த்த தினம். வழக்கமான சோம்பேறியின் விழிப்புடன் ரஸ்தா ஓரம் ஆடி வழிந்துகொண்டு போய்க்கொண்டிருந்தேன். அணுகுண்டு வெடித்ததுபோல் கண்ணைக்கூச வைக்கும் ஓளி, தீபாவளி அணுகுண்டுகூட அப்படித்தான்…நான் எண்ணவில்லை. இருந்தாலும் ஐம்பது காஸ்லைட்டுக்குமேல் இருக்கும். கூசிய கண்ணைத் திறந்தபொழுது காஸ்லைட் தூக்குபவர்கள் கண்ணில் பட்டார்கள். காஸ்லைட் தூக்க பட்டணத்தில் என்ன கூலி கொடுப்பார்களோ! தூக்கினவர்கள் பெரும் பாலும் பெண்கள். ஆனால் ஒவ்வொருத்தியும் தலையில் பூ வைத்துக்கொண்டிருந்தாள். கலியாண வீட்டுக்காரர்கள் அன்பளிப்பு. வித்யாசமாகச் சொல்லவில்லை. ஒவ்வொரு வாத்யத்துக்கும் இடம் கொடுத்தால் தானே பெரிய ஆர்செஸ்டிரா ஆகிறது! அழகானவர்கள் கறுப்பாயிருந் தார்கள். அழகற்றவர்கள் சிவப்பாயிருந்தார்கள். ஆனால் அந்த விஷயத்தைப்பற்றி ஊன்றி ஆராயப் பொழுதில்லை. ஊர்வலம் நகர்ந்துகொண்டிருந்தது. லைட் தூக்கிய ஆண் பிள்ளைகளைப் பார்க்கவே பிடிக்கவில்லை-புல்லுருவி விழுந்த மாங்கிளை மாதிரி முண்டும் முடிச்சுமாய், சோளக் கொண் டைத் தலையுமாய் இருந்தார்கள். 

இவற்றை எல்லாம் கண் பதிவு செய்து கொண்டிருந்த பொழுதே காதும் ஒலிகளைப் பதிவு செய்து கொண்டிருந்தது. கிளாரினெட், பாண்ட், சாக்ஸாபோன், துருத்தி, ஜாலர்டிரம் ஆகிய வாத்யங்களின் சந்தை ஒலி. அடுத்தாற்போல் சம்பந்திகள், பிரமுகர்கள், ஆங்கங்கே ஆற்றுமணல் மின்னு வதுபோல், வைரக் கடுக்கன்களின் டால்! மற்றபடி அசைந்தாடி, சிரித்து மகிழ்ந்து செல்லும் ஆரவாரங்கள், பல்லிளிப்புகள்! மலைப்பாம்பைப்போல் ஒவ்வொருவர் கழுத்தி லும் ஜரிகை அங்கவஸ்திரம் தொங்கிக்கொண்டிருந்தது. 

அதற்குப் பிறகு வந்தது அந்த மல்லிகைப் பூ அன்னம்! மல்லிகைப் பூ வாசனை! பன்னீர் வாசனை! 

அன்னம் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. (வேகமாகக் கூடப்போகும் இந்த அன்னம்-வேஷத்தைக் கலைத்தால்) அன்னத்தின் நடுமுதுகில் மாப்பிள்ளை. வைரக் கடுக்கண் நானூறு காரட்டிருக்கும். (கணக்கு தவறாக இருந்தால் மன்னிக்கவும்). மாப்பிள்ளை மாநிறமானாலும் நல்ல முகவெட்டு. வெறும் மாப்பிள்ளை அழைப்புத்தான் என்றாலும் ஏதோ ஒரு பூரிப்பு அன்னத்தைச் சூழ்ந்து கொண்டு மற்ற பகுதிகளை விட்டுப் பிரித்துக் காட்டிற்று. 

மாப்பிள்ளைக்குப் பக்கத்தில் நாளைக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளின் வர்க்கப் பிரதி நிதிகள். 

மற்றொரு பக்கத்தில் ஒரு ஆள் சின்ன விசிறியால் விசிறிக்கொண்டே நடந்துவந்தான். நடுரோடு காற்றும் போதவில்லை. ஆகையால் தான் விசிறீயின் தென்றல் தேவைப்பட்டது. ஒரு யோசனை தெரியாமல் போய்விட்டது; சிவனே என்று மோட்டாருக்குப் பக்கத்தில் மற்றொரு வண்டியில் மேஜை விசிறியை வைத்து ஓட்டிக்கொண்டு வந்திருக்கலாம். 

மாப்பிள்ளையின் வண்டிக்குப்பின் பெண்கள். பெண்களை வர்ணித்து வெற்றி பெற்ற எழுத்தாளர் உலகிலேயே கிடை யாது. ஓவியன், சிற்பியின் விஷயம் வேறு. ஆனால் உண்மையில் என் கண்ணுக்கு முன் வானவில்லும் மின்னலும் மேகமும் வைக்கோல் போரும் நகர்ந்து கொண் டிருந்ததுதான் தெரிந்தது இதுகூடச் சரியன்று. மனசு விசிறிக்குள் புகுந்துகொண்டு விட்டதால் அதற்குப் பின் பக்கம் சரியாகத் தெரியவில்லை. 

விசிறி என்றால் நிகண்டு சொல்கிறது-என்ன சொல் கிறது என்பதை நீங்களேதான் தயவு செய்து நிகண்டைப் புரட்டிப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்களேன்! 

உண்மையில் விசிறியும் ஒரு தர்மாமீடர்தான்! ஒரு இடத்தில் விசிறி ஆடிக்கொண்டிருந்தால் அங்கு புழுக்கம் இருக்கிற தென்றுதானே பொருள்? வாதம் தர்க்கத்துக்குப் பொருந்துகிறது. வாழ்வுக்குப் பொருந்த வேண்டாமா? இங்கு, நடுரோடில், கடல்காற்றும் திறந்தவெளியும் கலந்த நிலையில் ஆடும் விசிறி எப்படி விசிறியாகும்? இங்கு புழுக்கம் ஏது? 

இல்லாத போனால்கூட விசிறி தர்மாமீடர்தான். ஏனென் றால்…ஊர்வலம் நடத்துபவர்களின் அந்தஸ்துக்கு, அதிகாரத் திற்கு, பணபலத்துக்கு அளவுகோலாகத்தானே நடுத்தெரு வில் பயன்பட்டுக் கொண்டிருந்தது? எனக்குப் பகல் தீவட்டி நினைப்பு வந்துவிட்டது. மாப்பிள்ளைக்கு மரியாதை. பெண் வீட்டுக்காரரின் எஜமானத்வம் கட்டும் கப்பம்-தெருவில் நின்று வேடிக்கை பார்க்கும் மக்களின் வியப்பு இவற்றைத் தானே காட்டிக் கொண்டிருந்தது. 

ஆகையால் விசிறியை ஏன் தர்மாமீடர் என்று சொல்லக் கூடாது? 

ஐன்ஸ்டீன் என்ன சொல்லுகிறார்? நிலையான பொருள் என்று எதுவும் இல்லை-பார்ப்பவர்கள் இருக்கும் இடம், காலம் மனநிலை இவற்றைப் பொருத்து மாறும் என்கிறார். மூடிய வண்டிக்குள் இருப்பவர்களுக்கு வண்டி செல்வது தெரியாது: வெளியில் இருப்பவர்களுக்குத்தான் வண்டி செல்லும் உண்மை தெரியும். ஒருவருக்கு அசைவற்றிருப்பது மற்றொருவருக்கு அசைவுள்ளதாகத் தெரிகிறது. விசிறி இப்படித்தான் தர்மாமீடர் ஆகிவிட்டது! வீட்டுவேலை யாளுக்கு விசிறி. மாப்பிள்ளைக்கு மரியாதை. ஊராருக்கு ஆடம்பரம். எனக்கு தர்மாமீடர்… 

விசிறி, தர்மாமீடர் என்று மாறி மாறி எண்ணிக்கொண்டிருந்தேன். யாரோ என்னை இடித்துக்கொண்டு போன பொழுதுதான் சுயநினைவு வந்தது. கண்ணைத் திறந்து பார்த்தேன். ஊர்வலம் என்னைத் தாண்டிப் போய்விட்டது. விசிறி ஆடினது மட்டும் ஆகாயத்துக்கும் பூமிக்குமாகப் பிரும்மாண்டமாக வளர்ந்து விட்டது! 

– மனநிழல் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: மார்ச் 1977, எழுத்து பிரசுரம், சென்னை.

வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *