கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 21, 2017
பார்வையிட்டோர்: 10,504 
 

இரண்டாவது முறையும் அவருக்கு விசா மறுத்துவிட்டார்கள். எவ்வளவு பெரிய அதிர்ச்சி! இந்தத் தடவை அவர் எவ்வளவோ கவனமாகத்தான் விண்ணப்ப பாரங்களைப் பூர்த்தி செய்தார். சுயசரிதை எழுதுவதுபோல நீண்ட பதில்களைக் கொடுத்திருந்தார். இருந்தும் இப்படி நடந்துவிட்டதே!

முதன்முறை அவர் விண்ணப்பம் அனுப்பியபோது மிகவும் யோக்கியமாகத்தான் நடந்துகொண்டார். அப்போதெல்லாம் இப்படியான கெடுபிடிகள் இல்லை. விண்ணப்பத்தை நீட்டியவுடன் அமெரிக்க விசாவை தட்டிலே வைத்து தந்து விடுவார்கள் என்றுதான் எதிர்பார்த்தார்.

ஆனால் நடந்தது வேறு. எதற்காகப் பயணம் என்ற கேள்விக்கு ‘வண்ணப்பூச்சிகளைப் பார்க்க’ என்று யாராவது எழுதுவார்களா? அங்கேதான் வந்தது வினை. இவருடைய பதிலைப் படித்த அதிகாரிகள் முதலில் திடுக்கிட்டார்கள். பிறகு ஆசை தீர சிரித்துவிட்டு அனுமதி மறுத்துவிட்டார்கள்.

பத்து வருடம் கழித்து இரண்டாவது முறை விண்ணப்பித்தபோது கோணேஸ்வரன் மிகவும் கவனமாக இருந்தார். வண்ணத்துப்பூச்சியின் வாடைகூட வீசாமல் பார்த்துக்கொண்டார். தன்னுடைய மருமகனைப் பார்க்கப் போவதாகவும், உல்லாசப் பயணம் என்றும் கதை விட்டார். கண்ணாடிக் கதவுக்கு இந்தப் பக்கம் இருந்து பயபக்தியுடன் விசா அதிகாரி கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறினார். நெளிய வேண்டிய இடத்தில் நெளிந்து குழைய வேண்டிய இடத்தில் குழைந்தார். கடன் வாங்கி நிரப்பி வங்கிக் கணக்கையும், வீட்டுப் பத்திரத்தையும் காட்டினார். இருந்தும் கல் நெஞ்சுக்காரர்கள், விசா மறுத்துவிட்டார்கள்.

இவருடன் ‘பி’ வகுப்பில் படிப்பிக்கும் சித்திரசேனனுடைய வேலையாயிருக்கும் என்று சிலர் அபிப்பிராயப் பட்டார்கள். கள்ளப் பெட்டிசன் எழுதுவதில் இவர் சூரர். முகஸ்துதியில் முனைவர் பட்டம் பெற்றவர். குதியங்காலில் நடந்துகொண்டே பல குடிகளைக் கெடுத்தவர். என்ன காரணத்தினாலோ கோணேஸ்வரனைத் தன் பிரதம எதிரியாக நியமனம் செய்து கொண்டிருந்தார். ‘அவர் செய்த வேலைதான் இது; மறுபரிசீலனைக்கு எழுதிப்போடுங்கள்’ என்று சிலர் வற்புறுத்தினார்கள்.

கோணேஸ்வரன் மறுத்துவிட்டார். அவரோடு பிறந்து, அவரோடு வளர்ந்து, அவரோடு பரீட்சை எழுதிய கோழைத்தனம் அப்போது அவருக்கு கைகொடுத்தது. அதிகாரிகள் இன்னும் என்ன குடைவார்களோ என்ற பயம். பொறுமையைக் கடைப்பிடிக்கத் தீர்மானித்தார்.

கோணேஸ்வரனுக்கு கம்புயூட்டர் என்றொரு சனியன் இருப்பது அப்போது மறந்துவிட்டது. அமெரிக்க தூதரகத்தில் அவருடைய முதல் விசா விண்ணப்பம் கம்புயூட்டரில் சகல வசதிகளுடனும் குடியிருந்தது. அந்த விண்ணப்பத்துடன் அவருடைய இரண்டாவது விண்ணப்பத்தை, சாதக பொருத்தம் பார்ப்பதுபோல் இந்தக் கம்புயூட்டர் ஆராய்ந்தது. பச்சைக் குழந்தைக்கு கூட சமுசயம் ஏற்படும்படி விவகாரத்தை புட்டுபுட்டு வைத்தது. பிறகு என்ன? விசா நிராகரித்துவிட்டார்கள்.

புராணகாலத்து முனிவர் சாபம் கொடுத்ததும் தலை சுக்குநூறாக வெடிக்குமாம். அப்படித்தான் கோணேஸ்வரனுடைய தலை வெடித்தது. இன்னும் எத்தனை வருடங்கள் பொறுமையாகக் காத்திருக்க வேண்டுமோ?

ஒரு துணிச்சலுடன் மூன்றாவது தடவையாக முயற்சி செய்தார். இந்த முறை அவர் உண்மையான காரணத்தை மறைக்கவில்லை. அமெரிக்காவில் உள்ள ஒரு அபூர்வமான வண்ணத்துப்பூச்சியை பார்க்க விரும்புவதாகக் கூறினார். தான் வண்ணத்துப்பூச்சிகள் பற்றி எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், அமெரிக்க பேராசிரியர் எழுதிய கடிதங்களையும் சமர்ப்பித்தார். அதிகாரிகள் மனம் இளகி விட்டது. இருபது வருட காலமாக ஒருவர் விசா எடுக்க திருப்பித்திருப்பி முயற்சி செய்வதாயிருந்தால் அதில் அவருக்கு எவ்வளவு ஈடுபாடு இருக்க வேண்டும்? இறுதியில் விசா தருவதாகச் சொல்லி விட்டார்கள்.

கோணேஸ்வரனுக்கு விசா எடுப்பது தொழில் அல்ல. உயர் கணிதம் பாடம் சொல்லித் தருவதுதான் வேலை. பள்ளிக்கூடப் பிள்ளைகள் இவரை ‘கொஸ்தீற்றா’ கோணேஸ்வரன் என்றுதான் செல்லமாக அழைப்பார்கள். அந்த வகுப்பில் முப்பது மாணவர்கள் இவரிடம் படித்தார்கள். அத்தனை மாணவரும் கடைந்தெடுத்த மேதாவிகள். இவர் தொண்டை தண்ணி வத்த கத்திக்காண்டிருக்கும் போது அவர்கள் ஒருவித சலனமுமின்றி கேட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்குப் புரிந்ததா, இல்லையா என்பது பரம ரகஸ்யமாகவே காக்கப்பட்டு வந்தது.

அதற்கு முதல் நாள் தான் ‘சைன்தீற்றா’ என்றால் என்னவென்று ஒரு பாட்டம் பிரசங்க மழை பெய்திருந்தார். மறுநாள் வந்து விளக்கம் கேட்டால் எல்லோருமே ஒரு புது வார்த்தையை கேட்பதுபோல திருதிருவென்று முழிக்கிறார்கள். பிறகு இன்னொரு முறை ‘சைன்தீற்றா’ பற்றி அழுதுவிட்டு கொஸ்தீற்றாவின் சூட்சுமங்களை விளக்க ஆரம்பித்தார். பாடம் அரைவாசி ஒப்பேறிக் கொண்டிருக்கும் போதுதான் அந்த அதிசயம் அங்கே நிகழ்ந்தது.

திரௌபதி பாரிஜாதமலரை கண்டு மயங்கினாள் அல்லவா? பொன்மயமான மாயமானிடம் சீதை மனதைப் பறிகொடுக்கவில்லையா? அதுபோல ஒரு வண்ணத்துப்பூச்சி அபூர்வமான நிறம். இதற்கு முன்பு கண்டிராத வண்ணம். தாயிடம் இருந்து பறித்துக்கொண்டு ஓடும் குழந்தையைப்போல நேராக இவருடைய வகுப்பறைக்கு வந்தது. ஓர் அற்புத நர்த்தனம் செய்துவிட்டு திரும்பவும் ஜன்னல் வழியாகப் பறந்துவிட்டது.

கோணேஸ்வரன் நித்திரையில் நடப்பவரைப்போல மிதந்து கொண்டு ஒரு கையில் சோக்கட்டியும், மற்றக் கையில் துடைப்பனுமாக அப்படியே வெளியே போய்விட்டார். போனவர் அன்று வகுப்புக்கு திரும்பி வரவேயில்லை. மாணவர்களுடைய ‘கொஸ்தீற்றா’ தீட்சை இப்படித்தான் அரைவாசியில் அஸ்தமனம் ஆனது.

அடுத்த நாள் இந்தச் செய்தி பள்ளிக்கூடம் முற்றிலும் பரவிவிட்டது. தலைமை ஆசிரியர் விளக்கம் கேட்டார். அவரோ கொடுங்கோல் மன்னர். என்ன நடக்குமோ என்று எல்லோரும் பயந்துபோய் இருந்தார்கள். ஆனால் கோணேஸ்வரனோ அந்த வண்ணத்துப்பூச்சியின் அழகை வர்ணித்ததுமல்லாமல் அதைப் பிடிப்பதற்கு இரண்டு நாள் லீயும் கேட்டாராம். அன்றிலிருந்து தலைமை ஆசிரியர் கோணே ணுவரனுடைய முட்டாள்தனத்தை குறைவாக மதிப்பிடுவதை நிறுத்திவிட்டார். இப்படித்தான் சாதாரண கோணேஸ்வரன், ‘கொஸ்தீற்றா’ கோணேஸ்வரன் ஆனது.

கோணேஸ்வரன் இயற்கை உபாசகர். எங்கேயாவது வாழை குலை தள்ளியிருப்பதைக் கண்டால் அப்படியே லயித்துப்போய் நின்றுவிடுவார். இந்தச் சாதுவான வாழை இப்படிப் பெரிய குலையை எப்படித் தந்தது என்று வியப்பார். வானம் மப்பும் மந்தாரமுமாகி ஒரு துளி தெறித்து விழும்போது பரவசமாகிப் போவார். அதிகாலை நேரங்களில் பெயர் தெரியாத மஞ்சள் குருவி தலையை ஒரு பக்கம் சாய்த்து ஒலி எழும்பும்போது அதில் தன்னை இழந்து விடுவார்.

குழந்தையாய் இருந்தபோது அவருடைய அம்மா வண்ணத்துப்பூச்சியை காட்டித்தான் சோறு ஊட்டினாராம். வண்ணத்துப்பூச்சியில் அப்படி ஒரு மோகம். மூன்று வயதான போதே அவற்றுடன் ஓடியாடி விளையாடத் தொடங்கினார். எட்டு வயதிலே வலைகட்டி அவற்றைப் பிடிக்கவும், தோராக்ஸ் பகுதியில் பத்து செகண்ட் அழுத்தி பாடம் செய்யவும் கற்றுக்கொண்டார். இருபது வயது ஆனபோது விஞ்ஞான முறைப்படி ஆயிரம் வண்ணத்துப்பூச்சிகளை சேகரித்துவிட்டார்.

கோணேஸ்வரனுக்கு ஊரிலே நல்ல பேர் இருந்தது. பார்ப்பதற்கு கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும், வண்ணத்துப்பூச்சிகளின் பின்னால் அலைவதைத் தவிர வேறு ஒரு பாவமும் அறியாதவர். அவரை எப்படியும் மாப்பிள்ளையாக்கி விடவேண்டும் என்று அந்த ஊரில் இரண்டொருவர் மிகவும் பிரயாசைப்பட்டனர்.

யாமினியின் தகப்பனார் கொஞ்சம் வசதி படைத்தவர் தமிழ் பக்தர். அதை நிலைநாட்ட இரவிலே பிறந்த தன் பெண் குழந்தைக்கு யாமினி என்று பெயர் வைத்திருந்தார். படிப்பதைத் தவிர, சமையல், ஆர்மோனியம், தையல் என்று சகல கலைகளிலும் தன் மகளைத் தேற்றியிருந்தார். பெண்ணும் ஒழுங்காக வாரப் பத்திரிகைகளையும், மாத நாவல்களையும் கரைத்துக் குடித்து தன் அறிவை விருத்திசெய்து கல்யாணத்துக்காக கப்புக்காலைப் பிடித்தபடி காத்திருந்தாள்.

கோணேஸ்வரன் உயர் கணிதத்தில் உயர் மதிப்பெண் பெற்றிருந்தாலும், வண்ணத்துப்பூச்சிகளை வகைப்படுத்துவதில் நிபுணராக இருந்தாலும், அன்றாட வாழ்க்கையில் அரிவரியைக்கூட தாண்டவில்லை என்பதற்கு அவருக்கு நடந்த விவாகச் சடங்கை உதாரணம் சொல்வார்கள்.

இந்தச் சடங்கில் மோதிரம் எடுப்பது என்று ஒன்று தண்­ர்க் குடத்தில் ஐயர் மோதிரத்தைப் போடுவார். இது மணமக்கள் கையைத் தடவிப் பார்ப்பதற்காக பண்டுதொட்டு பெரியோரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சதியான வழக்கம். அது மூன்று வயதுப் பிள்ளைக்குக்கூடத் தெரியும். வண்ணத்துப்பூச்சிகளில் மனதைப் பறிகொடுத்திருந்த கோணேஸ்வரனுக்கு இது தெரியாமல் போய்விட்டது. மணப்பெண் இந்தச்சாக்கில் குடத்துக்குள் அவர் கையைத் தடவுவதுபோல் தடவ இவரோ அவசரப்பட்டு மோதிரத்தை எடுத்து வெளியே நீட்டினாராம். யாமினிக்கு அப்பவே நாடி விழுந்து விட்டது.

கல்யாணமான புதிதில் யாமினிக்கு ஒரே ஆச்சிரியம். இப்படிக்கூட வண்ணத்துப்பூச்சியில் மோகம்கொண்ட ஆண்மகன் இருப்பாரா? வீடு முழுக்க வண்ணத்துப்பூச்சி அட்டைப்பெட்டிகளும், புத்தகங்களும்தான். ஆனாலும் அவள் புத்திசாலிப் பெண். வெகு சீக்கிரத்திலேயே கணவனுடைய அன்பை அடைவது எப்படி என்று ஊகித்துக்கொண்டாள்.

யாமினிக்கு வேகம் அதிகம்; இரவு வேளையில் பிறந்தவள் அல்லவா? அந்த வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் கோணேஸ்வரன் திகைத்தார். பெற்றோர்களால் ராசிப்பொருத்தம் மாத்திரம் பார்த்து முடிவு செய்யப்பட்ட பல விவாகங்கள் படும்பாடு இங்கேயும் பட்டது.

அன்று முழுக்க கோணேஸ்வரன் ஒரு முடிச்சை அவிழ்க்க பெரும் பாடு பட்டுக்கொண்டிருந்தார். ஒரு அபூர்வமான வண்ணத்துப்பூச்சியை அவர் பிடித்திருந்தார். இதற்கு முன்பு அவர் கண்டிராதது. பல புத்தகங்களைப் புரட்டியும் அதன் பூர்வீகத்தை அவரால் தெரிந்துகொள்ள முடியவில்லை. அவருடைய சிக்கலுக்கு விடை அவர் மனைவியிடமே இருப்பது தெரியாமல் இப்படியாக இரண்டு நாட்கள் அநியாயமாக வீணாக்கிவிட்டார்.

இரவு மணி பன்னிரண்டைத் தாண்டிவிட்டது. இவருடைய ஆராய்ச்சி இன்னும் முடிந்த பாடில்லை. யாமினியும் தூங்கவில்லை. இவரை எதிர்பார்த்து காத்திருந்தாள். கோணேஸ்வரன் இறுதியில் புத்தகங்களை மூடிவிட்டு படுக்கை அறைக்க திரும்பினார். அங்கே இவருக்காக ஒர் அதிரவைக்கும் காட்சி காத்திருந்தது.

தானாகக் கனிந்த கறுத்தக் கொழும்பான் மாம்பழம்போல யாமினி அன்று ஒரு வித வாசனையுடனும், விரும்பத்தக்காகவும் இருந்தாள். மஞ்சள் வண்ணச்சேலை, நெற்றியிலே அகலமான சிவப்பு பொட்டு வைத்து, மேகம் போல கறுத்த அளக பாரத்தை விரித்துப் போட்டிருந்தாள். இவரைக் கண்டதும் கதகளி ஆடுபவரைப்போல இரு கைகளையும் அகல விரித்தபடி இவரிடம் வந்தாள்.

அந்தக் கணம் இவர் மூளையில் ஒரு சிறு பொறி தட்டியது. மஞ்சள், கரும்சிவப்பு, கறுப்பு வண்ணத்தில் தாய்லாந்தில் ஒரு வண்ணத்துப்பூச்சி பற்றி படித்தது ஞாபகத்துக்கு வந்தது. போட்டது போட்டபடி விட்டுவிட்டு புத்தக அலமாரியை நோக்கி பறந்தார்.

அன்று அவர் படுக்கைக்குத் திரும்பியபோது இரவு மூன்று மணி. சிக்கலான ஒரு விடுகதைக்கு விடை கண்டுபிடித்த குழந்தையின் சந்தோஷம் அவர் முகத்தில் தெரிந்தது. மஞ்சள் சேலை விரிந்துபோய் அவள் அயர்ந்திருந்தாள். ஆனால் கோணேஸ்வரனுக்கு அன்றுதான் செய்த கொடுமையின் உக்கிரம் கடைசிவரை தெரியவே இல்லை.

கோணேஸ்வரனுக்கு வயது ஐம்பதைத் தாண்டியிருந்தாலும் விசா கிடைத்தபோது ஒரு சிறு பிள்ளைபோலத்துள்ளித் குதித்தார். யாமினிக்கு எதற்காகவோ நெஞ்சம் துணுக்குற்றது. வண்ணத்துப்பூச்சி ஆராய்ச்சிக்காக இந்தியா, ஆப்பிரிக்கா என்றெல்லாம் காசை அநியாயமாக செலவழித்துக் கொண்டு போயிருக்கிறார். ஆனால் இது அமெரிக்கா! கொஞ்ச நஞ்ச தூரமா? அவளுக்கு சம்மதமே இல்லை. ஆனாலும் கணவருடைய மகிழ்ச்சியில் தண்­ரை ஊற்ற மனது வரவில்லை. இத்தனை வருடங்கள் அரும்பாடுபட்டு கிடைத்த விசா அல்லவா?

அமெரிக்கா விசா எடுப்திலும் பார்க்க சிரமமான காரியம் ஒன்றிருந்தது. அது அந்தப் பயணத்திற்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்வதுதான். அது குளிர்காலம். குளிர் காலம் முடிவதற்கிடையில் போனால்தான் monarch என்று சொல்லப்படும் அரச வண்ணத்துப்பூச்சிகளைப் பார்க்க முடியும். அந்த வண்ணத்துப்பூச்சிக்காக அல்லவோ இவ்வளவு காலமும் பிரயாசைப்பட்டவர்!

கையுறை, காலுறை என்று எல்லாம் சேகரித்துவிட்டார். ஆனால் மேலங்கிக்கு எங்கே போவது? நண்பர் ஒருவர் சொன்ன யோசனைப்படி ஒரு பழங்காலத்து கனவான் வீட்டுக்கு மேலங்கி யாசிக்க கிளம்பினார். அங்கே அவர் பார்த்த ஓவர்கோட்டை இதற்குமுன் ஆறடி உயரமான ஒரு குஸ்திப் பயில்வான் அணிந்திருக்க வேண்டும். கோணேஸ்வரன் அதை அணிந்து அளவு பார்த்தபோது பூச்சி வாசனை அடித்தது. தொளதொளவென்று இருந்தது; தரையைத் தடவியது. பரவாயில்லை, ‘அம்மணத்துக்கு கோமணம் மேல்’ என்று துணிந்து அதை ஏற்றுக்கொண்டார்.

கோணேஸ்வரன் எங்கே புறப்பட்டாலும் அவருக்கு முன்சீட்டில் சனியன் வந்து உட்கார்ந்து விடுவது வழக்கம். இங்கே அவர் பறக்கும் பிளேனில் அது பக்கத்து சீட்டில் இருந்தது. அந்த அம்மாள் ஜன்னல் ஓரமாயிருந்த இருக்கையில் தாராளமான உடம்போடு, மிகத்தாராளமாக உட்கார்ந்திருந்தாள். அவளுடைய பாரதூரமான மார்புகள் ஜன்னல் காட்சிகளையெல்லாம் முற்றிலும் மறைத்துவிட்டன. தலையிலே வண்ணநிறத் துணியினால் தலைப்பா கட்டியிருந்தாள். அவளுடைய வீட்டுத் தளபாடச் சாமான்கள் எல்லாம் மேலுக்கும், கீழுக்குமாக பரவிக் கிடந்தன. நிரந்தரமாகக் குடி பெயர்ந்து விட்டவள் போல கால்களை நீட்டி, கைகளை அகலித்து கோலோச்சிக் கொண்டிருந்தாள். கோணேஸ்வரன் பக்கத்து இருக்கையில் சுருண்டுபோய் குடங்கிக்கொண்டார்.

பொன்நிறக் கூந்தல் விமானப் பணிப்பெண்கள் மேலுக்கும் கீழுக்குமாக மிதந்துகொண்டிருந்தனர். கோணேஸ்வரனுடைய மனமும் மிதந்து கொண்டிருந்தது. அவர் வாய் இன்னும் சில மணி நேரங்கள் என்று முணுமுணுத்தது.

அவர் வாழ்நாளின் ஆதர்ஸம் வெகுவிரைவில் கைகூடிவிடும். நந்தனார் சிதம்பர தரிசனத்துக்கு தவித்ததுபோல இவரும் எவ்வளவு பாடுபட்டிருப்பார்! தில்லை நடராஜரைத் தரிசிக்கவேண்டும் என்ற பேரவாவில் ‘நாளைப்போவேன்’, ‘நாளைப்போவேன்’ என்று சொல்லித்திரிந்து எத்தனை பழிப்புக்கும், ஏளனத்துக்கும் ஆளானார். சிதம்பரம் போக வேண்டும் என்ற உத்வேகம் அல்லவோ அவரை உயிருடன் வைத்திருந்தது!

குடிவரவில் மூன்றாம் வாய்ப்பாட்டை ஒப்படைப்பதுபோல அவர் பிசகில்லாமல் ஒத்திகை பார்த்தபடியே சொல்லிவிட்டார் என்றாலும் வண்ணத்துப்பூச்சியை பார்க்கவந்த இந்தப் பெரியவரை அந்த அதிகாரி கொஞ்சம் அதிசயத்துடன்தான் பார்த்தார். கடைசியில் குடிவரவு அட்டையை அவருடைய கடவுச்சீட்டின் கடைசி ஒற்றையிலே இணைத்து இவரிடமே திருப்பி தந்துவிட்டார்.

இன்னும் ஒரு தத்து இருந்தது. அதுதான் சுங்க அதிகாரி. இந்த சுங்க அதிகாரிகள் உலகம் முழுவதிலும் ஒரே மாதிரியாகத்தான் இருப்பார்கள் போலும் அந்த அதிகாரியினுடைய முகம் சிரித்து பலவருடங்கள் ஆனதுபோல் தென்பட்டது. இவரிடம் கேள்விமேல் கேள்வியாகக் கேட்டார்; சூட்கேஸை குடைந்தார். கடைசியில் இவர் Lectureக்காக கொண்டுபோயிருந்த ஒரு சாம்பிள் வண்ணத்துப்பூச்சி அவர் கையில் சிக்கிவிட்டது. இந்த சுங்க அதிகாரி செய்த அநியாயத்தை யாரிடம் சொல்லி அழுவது? நியூகினியில் இருந்து கிடைத்த ஓர் அரிதான வண்ணத்துப்பூச்சி, ‘சொர்க்கம்’ என்று பெயர். அபூர்வத்திலும் அபூர்வமானது. முழங்காலில் நின்று மன்றாடிப் பார்த்துவிட்டார். ‘நான் ஒரு Lepidoperist. ஒரு demonstrationக்காக கொண்டுவந்தேன்’ என்று கெஞ்சினார். அந்த அதிகாரி இடது கையினால் அதை நாக்கிளிப்பூச்சியைத் தூக்குவதுபோல தூக்கி குப்பைக் கூடையில் போட்டுவிட்டார்! இது என்ன நியாம்? அவருடைய நெஞ்சு பதைபதைத்தது.

இங்கே கணேசனுக்கும் நெஞ்சு பதைபதைத்தது. சான்பிரான்ஸ’ஸ்கோ விமான நிலையத்தில் வரவேற்பு முனையில் அவன் காத்திருந்தான். யாமினி இருபது பக்கக் கடிதத்தில் கோணேஸ்வரனுடைய அங்க லாவண்யங்களை விவரித்து எழுதியிருந்தாள். ஆனால் அவர் இப்படி மாறுவேடத்தில் வருவார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. மேலங்கியும், தொப்பியும், மப்ளருமாக அவரைக்கண்டு கணேசன் பயந்துவிட்டான். அந்த ஓவர்கோட்டை போட்டுக்கொண்டு நடப்பதற்கு ஒரு தந்திரம் செய்யவேண்டும். அது நாலு சைஸ் மிகை. அதற்குள் ஐந்தாறு அடி வைத்தபின்தான் அதன் எல்லையைக் கடக்கலாம். இப்படி இவர் இந்த ஓவர்கோட்டை அணிந்து அதை ஏமாற்றியவாறு நடந்தும், ஓடியும் வரும் அதிசயத்தை வாய் திறந்து பார்த்துக் கொண்டிருந்தான் கணேசன்.

கணேசன் இவரை அடையாளம் கண்டதும் அவருடைய கஷ்டங்கள் எல்லாம் மாயமாக மறைந்துவிட்டன. இவருடைய தூரத்து சொந்தம். இவர் ‘தம்பி’ என்று அழைத்தாலும் கணேசன் இவரை ‘அங்கிள்’ என்றே கூப்பிட்டான். இருபது மணி நேரம் தொடர்ந்து பயணம் செய்து வந்தாலும் கோணேஸ்வரன் அன்றலர்ந்த செம்பருத்திப்பூ போல உற்சாகமாகத்தான் காணப்பட்டார். தன் மனோரதம் விரைவில் ஈடேறப்போகிறதென்ற மகிழ்ச்சியில் அரச வண்ணத்துப் பூச்சிகளின் நினைவாகவே இருந்தார். கணேசனோ விமான நிலையத்தில் காரை நிறுத்திய இடம் மறந்துபோய் அரை மணி நேரமாக அதைத் தேடிக்கொண்டிருந்தான்.

‘தம்பி, இந்த அரச வண்ணத்துப்பூச்சிகள் 3000 கி.மீட்டர் அலாஸ்காவில் இருந்து பறந்து கலிபோர்னியாவுக்கு குளிர்கால ஆரம்பத்தில் வந்துவிடும். மில்க்வீட் மரங்களின் இலையை சாப்பிட்டு, சுகித்து குளிர்காலத்தை கழித்துவிட்டு வசந்த ஆரம்பத்தில் திரும்பவும் 3000 கி.மீட்டர் பறந்து அலாஸ்கா போய்விடும். அங்கே முட்டையிட்டு, பொரித்து மறுபடியும் இலையுதில் காலத்தின் முடிவில் தன் குடும்பத்துடன் கலிபோர்னியாவுக்கு திரும்ப வந்துவிடும். என்ன அதிசயம்! அதே வனத்தில், அதே மரத்தில்,அதே கிளைக்கு வந்துவிடும். நம்ப முடிகிறதா? இங்கே நாங்கள் சற்றுமுன் காரை எங்கே பார்க் பண்ணினோம் என்பதையே மறந்துவிட்டு தேடுகிறோம்!’

கணேசன் இந்த அதிசய மனிதரைப் பார்த்தான். பத்தாயிரம் மைல் கடந்து ஒரு வண்ணத்துப்பூச்சியைக் காணவந்தவரல்லவா? இவரை கிறுக்கு என்பதா, மேதை என்பதா!

அடுத்த நாள் அவர்கள் புறப்பட்டார்கள். சான்பிரான்சிஸ்கோவிலிருந்து அறுபது மைல் தூரம் தெற்கே போகவேண்டும். ‘இயற்கைப் பாலம்’ என்று அழைக்கப்படும் வண்ணத்துப்பூச்சிகள் வனம் அது. வரையும் கையுமாக அவர் திரிந்து சேகரித்த அத்தனை வண்ணத்துப்பூச்சிகளும் இந்த ஒரு வண்ணத்துப்பூச்சியின் முன்பு தங்கள் மவுசை இழந்துவிடும். இதுவரை ஆறாயிரம் வண்ணத்துப்பூச்சிகளை அவர் சேகரித்திருப்பார். இவையெல்லாவற்றுக்கும் அரசனல்லவோ இந்த monarch வண்ணத்துப்பூச்சி.

அண்ணாந்து பார்த்தபோது முதலில் அவருக்க ஒன்றும் தெரியவில்லை. பிறகுதான் கவனித்தார். அந்த மரங்கள் முழுவதும் வண்ணத்துப்பூச்சிகள் வியாபித்துக் கிடந்தன. மரத்தின் இலைகளே தெரியவில்லை. ஒன்றல்ல, இரண்டல்ல அந்த வனத்தில் இருந்த ஆயிரக்கணக்கான மரங்களிலும் அவை படர்ந்திருந்தன. சிவப்பும், கருமையும் கலந்த பெரிய வடிவமான அரச வண்ணத்துப்பூச்சிகள். ஒரு லட்சம் அல்ல; ஒரு கோடியாகக்கூட இருக்கலாம். ஒரே இடத்தில் ஒரு கோடி வண்ணத்துப்பூச்சிகளைக் காண்பதென்பது நினைத்துக்கூடப் பார்க்கக்கூடிய காரியமா? இதுவல்லவோ அவைகளின் புண்ணிய þக்ஷத்திரம்!

கோணேஸ்வரனுக்கு உடல் சிலிர்த்தது. எவ்வளவுதான் தயாராக வந்திருந்தாலும் அவரால் இவ்வளவு இன்பத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அப்படியே ஒரு பரவசநிலை வந்துவிட்டது. கண்களில் நீர் அரும்பத் தொடங்கியது. சற்றும் சலிக்காமல், கழுத்தை வளைத்து அண்ணாந்து அவற்றின் அழகை அள்ளிப் பருகியபடியே இருந்தார்.

‘தம்பி, தம்பி’ என்று கொண்டே கணேசனின் கைகளைப் பிடித்துக்கொண்டார். கணேசன் மெதுவாக அவரை அழைத்துப்போய் அங்கேயிருந்த மரத்திலான இருக்கை ஒன்றில் அமர்த்தினான். இப்பொழுது இரண்டொரு வெள்ளைக்காரர்கள் இவர்களை அதிசயத்தோடு கவனிக்கத் தொடங்கிவிட்டார்கள். கணேசனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.

கோணேஸ்வரனுக்கு இப்போது மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கியது. ‘தம்பி! இது ஒரு புண்ணிய பூமி. இதில் காலணியுடன் நிற்கக்கூட எனக்கு கூசுகிறது. பத்தாயிரம் மைல் தூரம் நான் பறந்து வந்தது இந்த வண்ணத்துப்பூச்சிகளைப் பார்க்க அல்லவோஸ என்ன அழகு! இதற்காக எத்தனை கஷ்டப்பட்டேன்; எவ்வளவு அவமானம்; எவ்வளவு சிறுமைகள். இந்த கண்கொள்ளாத காட்சியைப் பார்ப்பதற்கு நான் இன்னொரு பிறவி எடுப்பதற்கும் தயார்’ என்றபடி மெதுவாக விம்மத் தொடங்கினார்.

‘அங்கிள், கொஞ்சம் இருங்கோ. நான் ஒரு கோக் வாங்கி வாறன்’ என்றுவிட்டு கணேசன் புறப்பட்டான். அவன் உண்மையில் போன காரணம் அவர் பக்கத்தில் நிற்க அவனுக்கு என்னவோ மாதிரி இருந்ததுது‘ன்.

‘இந்த விசாவுக்கு என்ன பாடு படுத்திவிட்டார்கள். எவ்வளவு கேள்விகள்? எத்தனை அலைச்சல்கள்? எத்தனை வருடங்கள் காத்திருக்க வைத்தார்கள்? இந்த வண்ணத்துப் பூச்சிகள் அலாஸ்காவில் இருந்து புறப்பட்டு மெக்ஸ’கோ வரை பறக்கின்றனவே! இவைக்கெல்லாம் விசா யார் கேட்கிறார்கள்? இவைக்குள்ள சுதந்திரம் கூட இந்த மனிதனுக்கு கிடையாதா? வாஸ்கொட காமாவுக்கும், கொலம்பஸ”க்கும் யார் விசா கொடுத்தார்கள்? அவர் உலகை விரித்தது இப்படி நாட்டுக்கு நாடு இரும்பு வலை போடுவதற்கா? இயற்சை அளித்த இந்த மகா அற்புதத்தைப் பார்ப்பதற்கு விசா கேட்பது எவ்வளவு அநியாயம்? இமயமலையும், சகாரா பாலைவனமும், நயகாரா வீழ்ச்சியும், அமேசன் காடுகளும் உலகத்து சொத்தல்லவா? இந்தப் புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்க விசா கேட்பது எவ்வளவு கொடுமை?

இவர் அண்ணாந்து அந்த வண்ணத்துப்பூச்சிகளின் வண்ண மாயங்களில் ஆழ்ந்துபோய் இருந்தபோது ஓர் அதிசயம் நிகழ்ந்தது.

உச்சியில் இருந்த வண்ணத்துப்பூச்சி ஒன்று இவரை நோக்கி செங்குத்தாக கீழே இறங்கியது. படபடவென்று தன் சிறிய ‘இறகுகளை அடித்து வந்து அவருடைய இடது கண் நுதலில் மெள்ளத் தொட்டுவிட்டு மீண்டும் பறந்துபோய் மறைந்தது.

கோணேஸ்வரனுடைய உடம்பு புல்லரித்தது. ‘ஆஹா! என்ன ஒரு ஸ்பரிசம் என்னைத்தேடி வந்து முத்தம் கொடுத்து விட்டுப் போகிறதே! ஐயோ! யாருக்கும் தலை வணங்காத அரச வண்ணத்துப்பூச்சியல்லவா! என்னைத்தேடி வந்ததா? என்று நினைந்து நினைந்து உருகினார்.

இந்தப் பரவசத்தில், அந்தக் குளிரிலும், அவர் உள்ளாடைகள் எல்லாம் ஈரமாகி உடம்போடு ஒட்டிக்கொண்டன. இப்படி அவர் மகிழ்ச்சியிலும், வேர்வையிலும் நனைந்து போய் இருக்கும்போது கணேசன் தூரத்தில் குளிர்பானத்துடன் வந்து கொண்டிருந்தான்

இவர் ஒரு மிடறு பானம் அருந்திவிட்டு சொன்னார். ‘தம்பி, 180 நாடுகளுக்கும் போக விசா வேண்டும். ஆனால் ஒரு இடத்துக்கு மட்டும் விசா தேவையில்லை. அது என்ன தெரியுமா?

கணேசன் பதில் கூறாமல் அவரையே பார்த்தான். அவர் கைகளை மேலே தூக்கிக் காட்டினார். பின்பு சொன்னார். அங்கே போவதற்கு மட்டும் விசா தேவையில்லை; அதுவரையில் பெரிய ஆறுதல்.’

கையெழுத்து மறையும் நேரமாகிவிட்டது. ஆனால் நேரம் நாலு மணிதான். இந்தக் குளிர் காலங்களில் சூரியன்கூட அவசரப்படுவான். கோணேஸ்வரன் யோகத்தில் இருந்து சிறிது கலைந்தார்.

‘அங்கிள், போவமா? இவ்வளவு தூரம் இதைப் பார்க்க வந்திருக்கிறீங்கள். ஆனால் உங்கள் collection க்கு ஒரு butterfly ம் பிடிக்காமல் போறீங்களே!’

கோணேஸ்வரன் சிறிது ஆழ்ந்த யோசனையில் இருந்தார். ‘தம்பி, உலகத்திலேயுள்ள விதவிதமான வண்ணத்துப்பூச்சிகளை எல்லாம் நான் சேகரித்து விட்டேன். அவையெல்லாவற்றுக்கும் இதுதான் அரசன். எப்படி நான் இதைப் பிடிப்பேன். கோயிலிலே வந்து இந்தக் காரியத்தை செய்ய முடியுமா? இது பெரிய அபசாரமல்லவோ! என்னுடைய சேகரிப்பு இதைப் பிடிக்காமல் விடுவதனால்தான் பூர்த்தியடையும்’ என்றவாறு தள்ளாடியபடியே எழுந்தார்.

அவருக்கு அந்த இடத்தைவிட்டு நகர விருப்பமேயில்லை. கணேசன் அவர் கைகளைப் பிடித்து வந்து மெல்ல காரிலே ஏற்றினான். காரில் ஏறும்போது அவருக்கு பழையபடி நந்தனாரின் சரித்திரம் கண்முன்னே தோன்றியது. அவ்வளவு கஷ்டங்களுக்கிடையிலும் பிடிவாதமாக நடந்துவந்து தில்லை நடராஜரைத் தரிசித்த நந்தனாரின் உணர்ச்சி எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்த்தார். அந்தக் கணத்தில் அவர் தேகம் இன்னொரு முறை கட்டுமீறி நடுங்கியது.

நடுப்பகலில் மின்னலடிப்பதுபோல அவர் நினைவில் அவருடைய தமிழ் பண்டிதர் வந்தார். ஒளியால் இறப்பது விட்டில். ஓசையால் இறப்பது அசுணப் பறவை. சுவையால் இறப்பது மீன்; நாற்றத்தால் வண்டு. ஸ்பரிசத்தால் இறப்பது? ஸ்பரிசம், ஸ்பரிசம்? எவ்வளவோ ஞாபகப்படுத்திப் பார்த்தார், அவருக்கு மறந்துபோய்விட்டது.

கார் இப்போது வேகமாக அந்த நெடுஞ்சாலையில் போய்க்கொண்டிருந்தது. வயிறு முட்ட பால் குடித்த கண் திறக்காத நாய்க்குட்டி போல பரிபூரண நிம்மதியோடு இவர் அயர்ந்துபோய் கிடந்தார். தொளதொளவென்ற ஓவர்கோட்டைச் சுற்றி காருடைய சீட் பெல்ட் அவரை இறுக்கிக் கட்டிப் போட்டிருந்தது. மானம்பூ திருவிழாவில் வெட்டப்பட்ட வாழைமரம் போல கைகால்களை விசிறி அலங்கோலமாகக் கிடந்தார்.

கணேசனுக்கு என்னவோ போல இருந்தது. அந்தக் காருக்குள்ளே பெரிய மௌனம் ஒன்று அவன் நெஞ்சிலே ஏறி உட்கார்ந்து அமுக்கியது. அந்த மௌனத்தை கீறிக்கொண்டு அவன் பேசியபோது வார்த்தைகள் அரைவாசி காற்றிலே கரைந்துவிட்டன.

‘அங்கிள், நாளைக்கு lecture இருக்கு, slides எல்லாம தயாராக வைத்திருக்கிறீங்களா?’ அவரிடம் பதில் இல்லை.

‘அங்கிள்! அங்கிள்!’

மௌனம்.

விசா இல்லாத ஓர் உலகத்துக்கு அவர் போய்விட்டது தெரியாமல் கணேசன் திருப்பித் திருப்பி அவரை அழைத்துக் கொண்டிருந்தான்.

– 1996-97, வடக்கு வீதி (சிறுகதைத் தொகுப்பு), மணிமேகலைப் பிரசுரம், நவம்பர் 1997

நன்றி: http://www.projectmadurai.org

Print Friendly, PDF & Email

ஆதர்ச மனைவி(?)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

அச்சமில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *