(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“மாப்பிளை வீட்டுக்காரர் வருகினம்!” எனக் குரல் கொடுத்தார் சபாபதி. அதைக் கேட்டுப் பெண்வீட்டுக்காரர் ஏதோ விசித்திரம் நடக்கப் போவதைப்போலப் பரபரப்படைந்தனர்.
“மாப்பிளை வீட்டுக்காரர் வருகினமாம்!” – செய்தி குசினிவரை ஓடியது.
ஒழுங்கையின் செம்மண் புழுதியைக் கிளப்பிவிட்ட வாறு வளவினுள் புகுந்து புளியமரத்து நிழலில் நின்றது அந் தக் கார். அங்கு விளையாடிக் கொண்டு நின்ற ‘குஞ்சுகுருமானு களெல்லாம்’ அதைக் கண்டு குதூகலத்துடன் அண்மையில் ஓடி னார்கள். வண்டியிலிருந்து இறங்குபவர்களைச் சுற்றி நின்று வினோதமாகப் பார்த்தார்கள். ஒருவன், காருக்கு முன்பக்க மாகச் சென்று அதிலிருந்து எழும் பெற்றோல் மணத்தை நுகர்ந்து, அதன் சுவையை மற்றவனுக்குச் சொன்னான். இன்னுமொரு பொடியன் ஆவலுடன் கிட்ட ஓடினான்.
“தம்பி, காறிலை தொடாமல் அங்காலை போங்கோ!” எனச் சினந்தான் கார்ச்சாரதி. “டேய்! அங்காலை போங்கோடா கழுதையள்!…ஒரு மனிசரைத் தெரியாதமாதிரி ஓடி வந்துட்டுதுகள்!” எனச் சிறுவர்களை அதட்டிக்கொண்டே வந்தவர்களை வரவேற்க வந்தார் சபாபதி.
பெண்ணின் தகப்பனார் – இராசதுரை – அடுப்படிக்கு ஓடிச்சென்று மனைவியை அழைத்தார். “இஞ்சரும்! அவைய ளெல்லே, வந்திட்டினம்!”
“எடி பிள்ளை! நானெல்லே சொன்னனான்…இதை விட்டிட்டுப் போய் முன் அலுவல்களைப் பார் எண்டு!” என பவளத்துக்குக் கட்டளையிட்டாள் குஞ்சுப்பிள்ளை – சபாபதியரின் மனைவி.
பவளம் அவசர அவசரமாகக் கைகளை அலம்பிக்கொண்டு இடுப்பிற் செருகியிருந்த சீலைத்தலைப்பை இழுத்துக் கை ஈரத்தைத் துடைத்தவாறே ஓடிவந்தாள். இராசதுரை மனைவி பவளத்து டன் முன்னுக்கு வந்த பொழுது சபாபதி மாப்பிள்ளை வீட்டுக்காரரை அழைத்துக்கொண்டு வந்தார்.
“சபாபதியம்மான் இல்லாட்டி ஒரு கை முறிஞ்ச மாதிரித்தான்!” எனத் தனக்குள்ளே பெருமைப்பட்டுக் கொண் டார் இராசதுரை. “மனுசன்..நல்ல உதவி!”
மணப்பெண்ணின் தம்பிமுறையான பொடியன், புற் பாய்கள் சிலதைக் கொண்டுவந்து விறாந்தையில் விரித்தான்.
‘பொம்பிளை பார்க்க’ வந்த ஒன்பது பேரில் ஒருவர்தான் பெண். அவளுடைய கையை ஆதரவாகப் பற்றி முகத்தில் சிரிப்பை மலரவிட்டு, “வாங்கோ!” என அழைத்துச் சென்றாள் பவளம். “உவ, மாப்பிளைக்குச் சிறிய தாய் முறையாம்” என இந்தப் பகுதியில் யாரோ கிசுகிசுத்தனர்.
“என்ன? பிந்திப்போனீங்கள் போலை ..?” என சம்பிர தாயமாக விசாரித்தார் இராசதுரை.
“ஓம்!…தெரியாதே, எங்கடை ஆக்களின்ரை அலுவ லெல்லாம் உப்பிடித்தானே…சுணங்கிறது” – எல்லாரும் முகஸ்துதியாகச் சிரித்தனர்.
வெற்றிலைத் தட்டங்கள் வந்திறங்கின. புதிய பால்ரின் உடைக்கப்பட்டு, தேநீர் கலக்கும் சத்தம் குசினியிற் கேட்டது.
“அப்ப ஏன் சபாபதியம்மான்… சுணங்குவான்? பேசிறதைப் பேசி முடிக்க வேண்டியது தானே!” என, புக்கர் கந்தையா ஆரம்பித்தார்.
“எப்பன் பொறுமன் புறோக்கர்!…என்ன அவசரம்? இனிச் சாப்பாடும் முடிஞ்சிடும்…சாப்பிட்டிட்டு ஆறுதலாய்க் கதைக்கலாம்.”
கறிகளுக்குத் தாளித்துப் போடுகின்ற சரக்ரின் மணத்தில் நாக்கு ஊறியது.
“உங்கடை கதையைப் பார்த்தால் நாங்கள் இண்டைக்குப் போனபாடில்லைப் போலையிருக்குது!”
“ஆர் போகவேண்டாமெண்டு சொன்னது?…இதென்ன அவசரமாய்க் கதைச்சு முடிக்கிற கருமமே?… வந்தனீங்கள் அறுதி பொறுதியாயிருந்து போறதுக்கு அவசரப்படுகிறீங்கள்?” எனக் கூறிவிட்டுக் காரணமின்றிப் பெலமாகச் சிரித்தார் சபாபதி. மற்றவர்களும் அவருடன் சேர்ந்து கொண்டனர்.
சபாபதி இருப்புக்கொள்ளாமல் எழுந்து அடுப்படிப் பக் கம் போனார். சமையல் தடல்புடலாக நடந்துகொண்டிருந்தது. தனது பெண்சாதி குஞ்சுப்பிள்ளையே சமையல் வேலையை நிர்வகித்துக் கொண்டிருப்பதைக் காண இவருக்குப் பெருமையாக இருந்தது.
“என்னப்பா? இன்னும் முடியயில்லையே?…இப்ப மணி என்ன தெரியுமே?…விடியத் தொடங்கி சமைக்கிறியள்..ஒரு முடிவையும் காணயில்லை?” எனச் சாலக் கோபம் கொண்டார்.
“இல்லை…எங்களாலை சுணக்கமில்லை..நீங்கள் சாப்பாட்டுக்காறரை ஆயுத்தப் படுத்துங்கோ…”எனக் குஞ்சுப்பிள்ளை சொன்னாள்.
சபாபதியின் கால்கள் ஓர் இடத்தில் நிற்காமல் சுழன்றன. அயலட்டையில் நல்ல நாள் பெருநாளென்று வந்தால் அவர்தான் முன்னுக்கு நிற்பார். “வயது போட்டுதெண்டாலும் மனுசன் வலு உசார்!….ஒரு கருமத்தைத் திறமையாய் ஒப் பேற்றுறதெண்டால் அந்தாளைக் கேட்டுத்தான்!’ என்பது அயல ரின் அபிப்பிராயம்.
மாப்பிள்ளையின் தகப்பன் புறோக்கரையும் அழைத்துக் – கொண்டு தனிமையாகப் போனார். இருபக்கத்து இரகசியங்களையும் கேட்டு மறக்க வேண்டியவர் புறோக்கர்!
“கந்தையாண்ணை! நான் சொன்னது நினைவிருக்கே? முந்திச் சொன்னமாதிரி கடும்பிடி பிடிக்கத் தேவையில்லை…இது இடமும் நல்லது போலை இருக்குது…ஒரு மாதிரிப் பார்த்து ஒழுங்குபடுத்திவிடு!”
அவர் சீதன விஷயமாகத்தான் கதைக்கிறார் என்பது புறோக்கருக்குப் புரிந்தது. மென்மையான ஒரு சிரிப்பை வரவழைத்துக் கொண்டே சொன்னார்;
“என்ன கனகு?…வீடுவளவைக் கண்டவுடனை மருண்டிட்டாய் போலை கிடக்கு?….நாங்கள் கேக்கிறதைக் கேப்பம்…அவையள் தரக்கூடியதைத் தரட்டன்.”
“பேந்தும் பாரன்!…கந்தையாண்ணை..படிச்சுப் படிச் சுச் சொல்லியும் நாசங்கட்டின உனக்கு விளங்க மாட்டனெண்டுது!….இப்பிடியே எல்லாத்தையும் தட்டிக் கழிச்சுக்கொண்டு போகேலாது…விசயமெல்லே முத்திப்போச்சுதெண்டனான்.”
“எட நீயேன் பயப்பிடுறாய்?…அவன் ஆம்பிளைப் பிள்ளைதானே? இண்டைக்கில்லையெண்டாலும் எத்தனையோ பேர் கொத்திக் கொண்டு போக நிப்பினம்.”
“கந்தையாண்ணை!…உன்ரை விழல் ஞாயங்களை விடு! மாப்பிளை எடுக்கிறவையள் முகட்டைப் பாத்துக்கொண்டே பொம்பிளை தருவினம்?…அந்த நாசங்கட்டுவான், சிங்களம் படிக்கிற னெண்டு ஒருத்தியிட்டைப் போய்த் திரிஞ்சவனாம், இப்ப சங்கதி பிழைச்சுப்போச்சுது. அவளோடை கன நாளாய்த் தொடுசலாம்!”
”ஓம்! ஓம்! இது முந்தின காலமில்லை….உதுக்குத்தான் சொல்லுறது….காலாகாலத்திலை செய்யவேண்டிய கருமங்களைச் செய்துபோடவேணுமெண்டு!….இனிக் கனகு வயது வந்த பெடியளை…ஊருக்கு வெளியிலை உத்தியோகத்துக்கெண்டு அனுப்புறதும் பயமெண்டுறாய்?”
ஓமெண்டுறன்! அந்தப் பெடியனைப்பற்றி எவ்வளவு நம்பிக்கை வைச்சிருந்தனான்…பூனை மாதிரித் திரிஞ்சவன்…எல்லாம் போச்சு…இப்ப, மற்றதுகளும் பாவிக்கிறானெண்டு கேள்வி.”
“மெய்யே!…உன்ரை குணத்துக்கு, அவன் வந்து வாய்ச்ச மாதிரியைப் பாரன்!”
“கந்தையாண்ணை!..இது எனக்கு வேணும்!…மற்றவை யளைப் பழிச்சுக்கொண்டு திரிஞ்சன்..அந்தப் பலன் தான் இது….அவன் சிங்களத்தியைக் கொண்டு வரப்போறன் எண்டெல்லே நிக்கிறான்!…. நோனாவுக்கு நாலு மாசமாம்!” – கனகு மேற் கொண்டு கதைக்க முடியாமல் விக்கித்தார். அந்த மாப்பிள்ளையை வைத்துக்கொண்டு அவர் எத்தனை கோட்டைகள் தான் கட்டியிருப்பாரோ; ஓர் ஏக்கப் பெருமூச்சு வெளிப்பட்டது. அவரையும் மீறி அந்த வயது போன கண்கள் கலங்கின. இதைக் கந்தையர் அவதானித்து நிலைமையைச் சமாளித்தார்.
“இதென்ன கனகு?…குழந்தைப் பிள்ளைமாதிரி…ஒண் டுக்கும் யோசியாதை….ஆம்பிளைப் பிள்ளைதானே..சேத்தைக் கண்ட இடத்திலை மிதிச்சு…தண்ணியைக்கண்ட இடத்திலை கழுவிப்போட்டுப் போவான்.. நான் இருக்கிறன்….எல்லாம் வெண்டு தாறன். பயப்பிடாதை!”
‘கதைச்சது காணும். வாருங்கோ சாப்பிடலாம் ‘ என்ற வாறே சபாபதி வந்தார். தம்பி! அந்தச் செம்பையும் தண்ணி யையும் கொண்டு வந்து இஞ்சாலை குடு!” செம்புகளில் தண்ணீர் வந்தது. சுவையான விருந்து தான். மாப்பிள்ளை வீட்டுக் காரரின் வருகைக்காகப் பிரத்தியேக கவனிப்பில் ஆக்கப்பட்ட சாப்பாடென்றால் சும்மாவா!
பேச்சுக்கால் ஆரம்பமாகியது. புறோக்கர் தனது புராணத்தைப் பாடினார்;
“தம்பி. இராசதுரை …வடிவாய்க் கேள! இப்பிடி ஒரு மருமேன் உனக்குக் கிடைக்கிறதெண்டால், குடுத்துவைச்சிருக்க வேணும் ….கவுண்மேந்து உத்தியோகக்காறன். இனியில்லையெண் டாலும் அம்பது பவுண் உழைப்பான்…ஆள் உரிச்சுப்படைச்சு ஒப்பனைப் போலைதான்…ஒரு பீடி, சுருட்டோ… தண்ணியோ கிடையாது….ஒரு வயதுக்கு மூத்தவையோடை தன் நிமிர்ந்து கதைக்க மாட்டான்…. தானும் தன்ரை பாடும் தான் …மற்றவயின்ரை சோலி சுறட்டுக்குப் போகாத பெடி….”
றோக்கரின் அளவையை சபாபதி தடுத்தாட்கொண்டார்.
“அதெல்லாம் எங்களுக்குத் திருப்திதான் புறோக்கர். உங்கடை நோக்கம் என்னெண்டு சொல்லுங்கோவன்?”
“ஏதோ…நல்லபடியாய்க் கருமம் ஒப்பேறினால் எனக்கும் சந்தோஷம் தான்…ரெண்டு பகுதியும் சாராம் பாத்திருக்கிறீங்கள்….பொருத்தங்கள் உத்தமம் எண்டு சாவிமார் சொல்லியிருக்கிறாங்கள்…உங்களாலை இயண்டதைக் குடுத்துவிடுங்கோவன்…இனி நீங்கள் ஆருக்கோ குடுத்துவிடப் போறீங்களே…உங்கடை பிள்ளைக்குத்தானே ..அவரும் கடும்பிடி பிடிக்க வேண்டாமாம்…” எனச் சிரித்தவாறே கனகுவைப் பார்த்தார். அவரும் பதிலுக்குச் சிரித்தார். இராசதுரையின் முகம் மலர்ந்தது.
இருக்கிற வீடும், அதோடு சேர்ந்த ஆறு பரப்புக் காணி யும் கொடுத்து ஏதோ தன்னாலியன்றதைப் பிள்ளைக்குக் கையிலை கழுத்திலை போட்டுவிடுவதாக இராசதுரை சொன்னார்.
பேச்சு வளர்ந்தது –
வீடு வளவும் இருபதினாயிரம் காசும், பொம்பிளைக்குப் பதினையாயிரத்திற்கு நகையும் போட்டுவிடவேண்டுமெனக் கேட்கப்பட்டது. இதைவிட, மாப்பிள்ளையின் தகப்பனுபப்பத்தாயிரம்’ டொனேசன்’, கொடுக்க வேண்டுமென்பதும் நிபந்தனை.
இராசதுரைக்கு நாடி விழுந்து விட்டது. என்றாலும் சோர்ந்துபோய் விடவில்லை. இப்படி எத்தனை சம்பந்தங்கள் பேச் சுக்காலிலேயே குழம்பிப் போயிருக்கின்றன. பிள்ளைக்கும் வயது ஏறிக்கொண்டே இருக்கிறது.உத்தியோக மாப்பிள்ளையைக் கை நழுவ விடவும் மனமில்லை.
இறுதியாக; வீடுவளவும், ஐயாயிரம் காசும், பத்தாயிரத்துக்கு நகையும் போட்டு மாமனுக்கு ஐயாயிரம் இனாம் கொடுப்பதென்ற ஒப்பந்தத்துடன் பேரம் பேசுதல் முடிவுற்றது. இராசதுரையைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய தொகை தான். இப்படி இருக்கிறதெல்லாவற்றையும் வித்துச் சுட்டு ஒரு பிள்ளைக்குக் கொடுத்துவிட்டால் மற்றதுகளுக்கு என்ன செய்யிறது என்ற கவலையும் அவருக்குத் தட்டியது. எனினும் தனது மூத்தமகளுடைய திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது என்பதை நினைக்க உச்சி குளிர்ந்தது. இனி வரப்போகின்ற சம்பிரதாயபூர்வமான நல்ல காரியங்களுக்கு நாள் வைக்க வேண்டும். “தம்பி அந்தப் பஞ்சாங்கத்தை எடுத்துக் கொண்டுவா!” என உற்சாகமாகக் குரல் கொடுத்தார்.
இப்பொழுது சபாபதி அதிர்ந்தார்.
“எட! இனி ராசதுரையனைப் பிடிக்கேலாது!”
சுவாரஸ்யமாக நடந்து கொண்டிருந்த நாடகமொன்று துக்கமாக முடிந்துவிட்டதைப் போலிருந்தது அவருக்கு.
மனது பொறுக்கவில்லை. தனது தர்ம பத்தினியாகிய தஞ்சுப்பிள்ளையிடம் ஓடினார். இரகசியமாக விஷயத்தைச் சொன்னார். குண்டு வெடித்தது; குஞ்சுப்பிள்ளை தலையிலே கையை வைத்தாள்.
“அந்தக் குமரி ஆடித்திரிஞ்ச ஆட்டத்துக்கு ….இனி. அவையளைப் பிடிக்கேலாது.” என ஆற்றாமையாகப் புலம்பினாள். இருவருடைய மூளையும் ஒன்றாக ஓடி வேலை செய்தது!
“மெய்யேணை!வந்தவையளுக்கு அந்தக் கதை யொண்டும் தெரியாதே?” எனப் புருசனைப் பார்த்துக் கேட்டாள் குஞ்சுப்பிள்ளை. சபாபதி அந்தக் கதையை நினைத்தார்.
மூன்று வருடங்களுக்கு முன்னர் நடந்தது —
“இஞ்சருங்கோ!…ராசதுரையின்ரை பெடிச்சியின்ரை சங்கதி கேள்விப்பட்டனீங்களே?”- ஊர்ச் சங்கதிகளை நுட்பமாகச் ‘சூந்து’ பிடித்து, இல்லாததையும் பொல்லாததையும் சேர்த்து சபாபதியின் காதிலும், மற்றவர்கள் காதிலும் போடுவது குஞ்சுப்பிள்ளையின் சுவையான பொழுது போக்கு.
“என்ன சங்கதி?”
“உவள் புனிதவதியெல்லே அவன் ரகுநாதனோடை தொடுசலாம்!”
“எந்த ரகுநாதனைச் சொல்லுறாய்?”
“உவன் தான் ஆசையற்றை மூத்தமோனைத் தெரியாதே?”
“ஓம்! ஓம்!…. தெரியும், அவன் அவ்வளவு பிழையான பொடியனில்லைக் குஞ்சுப்பிள்ளை … வலு கெட்டிக்காரன். ஊரிலை ஒரு சனசமூக நிலையம் திறந்து நாலுசனம் வாசிக்கக்கூடியதாய் அண்டண்டாடம் பேப்பர், புத்தகங்கள் வேண்டிப் போடுறவன். இனி… வேலை வில்லட்டி இல்லாமல் திரியிற பொடியளைச் சேர்த்து நாடகம் போடுறது அது இதெண்டு நல்ல புத்தி காட்டு கிறான் எண்டும் கேள்வி…..”
“உங்களிட்டை இப்ப உந்தக் கதையை ஆர் கேட்டது? அப்ப ஊரிலை பொய்யையே கதைக்கினம்?”
“என்ன கதைக்கினம்?”
“ரகுநாதன் அடுகிடை படுகிடையாய் ராசதுரையன் வீட்டிலை தான் கிடக்கிறானாம்….ராசதுரையரும் கண்டும் காணாத மாதிரி விட்டிருக்கிறாராம்.”
“பின்னை அவனும் உத்தியோகக்காறன் தானே … அமத் திற யோசினை போலை.”
“ஓமெண்டுறன்!”
இது இருவருக்குமே பெரிய அநியாயமாகப்பட்டது. பக்கத்து வீட்டு ‘ ராசதுரையின் மகளுக்கு உத்தியோக மாப் பிள்ளையா? சீதனக் கரைச்சலில்லாமல் அந்தக் குமர் காரியம் ஒப் பேறப் போகிறதா? அநீதி! அநீதி!
தூது பறந்தது.
“எடிபிள்ளை ! உன்ரை மனுசன் இந்த ஊர் விண்ணாண மெல்லாம் கதைப்பார். இப்ப என்ன கண் கெட்டுப்போச்சே? உன்ரை குமரி ஆடுற ஆட்டம் சந்தி சிரிக்குது” – குஞ்சுப்பிள்ளை பவளத்திடம் அங்கலாய்த்தாள்.
சபாபதியும் சொல்லிப் பார்த்தார்.
இராசதுரை சற்று முற்போக்கான கொள்கையுடையவர். சபாபதியருக்குச் சுடக்கூடியதாகவே சொல்லிவிட்டார்.
“அம்மான், உதென்ன பேய்க்கதை கதைக்கிறியள்?…. ஆரேன் சொல்லுகினமெண்டால் உங்களுக்கும் மதியில்லையே? சோதினை கிட்டுது ….. பிள்ளைக்கு அந்தப் பாடங்களைக் கொஞ்சம் சொல்லிக் குடுக்கச்சொல்லி நான் தான் அவனைப் பிடிச்சுவிட்ட னான். இனியில்லையெண்டு, நீங்கள் சொல்லுறமாதிரித்தான் அது கள் ரெண்டும் மனமொத்திட்டால், அதுக்கு நான் தான் என்ன செய்யிறது …… நீங்கள் தான் என்ன செய்யிறது?”
சபாபதி குறுகிப் போனார்.
அடுத்த நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
ரகுநாதன் ஒரு நாடகம், கூட்டமென்றால் முன்னுக்கு நிற்பவன்; ‘தமிழ்! தமிழ்!’ என அசையாத மொழிப்பற்றுள்ள இளைஞன்.
நாலு ‘பெட்டிசன்’ வேலை செய்தது;
நாலாம் நாள் பொலிஸ்காரர் ஜீப்பில் வந்து ஏற்றிக் கொண்டு போனார்கள். ஒரு கல்லிலே இரு மாங்காய் கிடைத்த சந்தோஷம் சபாபதி தம்பதியருக்கு.
“அரசாங்கத்துக்கு எதிராய் ஏதோ கூட்டம் போட்டவனாம்….உவங்களுக்கேன் இந்தத் தேவையில்லாத வேலை?” எனச் சபாபதியருடன் சேர்ந்து ஊர் கதைத்துக்கொண்டது.
“இந்த அநியாயத்தைக் கேக்க ஆளில்லையோ?” எனக் கவலையுடன் குமுறின சில நல்ல உள்ளங்கள்.
மூன்று வருடங்களுக்கு மேல் கடந்து விட்டன. ரகுநாதன் வெளியில் வந்தபாடில்லை.
“உதென்ன?….கப்பல் கவுண்டமாதிரி யோசிச்சுக் கொண்டிருக்கிறியள் ..போய்ப் பார்க்க வேண்டிய கருமத்தைப் பாருங்கோவன்” சபாபதியரை உருக்கூட்டிவிட்டாள் குஞ்சுப் பிள்ளை.
சபாபதி வெளியே வந்தார். கருமங்கள் யாவும் இனிது நிறைவேறிக்கொண்டிருந்தன. மாப்பிள்ளை பகுதி, சம்பிரதாயத் திற்குப் பெண்ணைப் பார்க்கப் போகிறார்கள். இராசதுரை குதூகலத்துடன் உள்ளே போனார்.”இஞ்சரும்! பிள்ளையை வெளிக் கிடுத்திக்கொண்டு வாரும்!” என மனைவிக்குக் கட்டளையிட்டார்.
இந்த நேரம் பார்த்து சபாபதி மாப்பிள்ளையின் தகப்பனைத் தனிமையாக அழைத்தார்.
“நல்ல காரியம். குழப்பிறனெண்டு நினைக்கக்கூடாது. உங்களைப் பார்த்தால் நல்ல சனம் மாதிரி இருக்குது …பக்கத்திலை இருக்கிற நாங்கள் சொல்லாமல் விட்டிட்டம் எண்டு பிறகு குறை சொல்லுவியள் ….உந்தப் பெடிச்சி முந்தி ஒருத்தனோடை ஆடித் திரிஞ்சவள்….அவனும் ஒரு உதவாக்கரை….பொலிசிலை பிடிச்சு மூண்டு வருசமாய் அடைச்சு வைச்சிருக்கிறாங்கள்…அவள் கெட்ட கேட்டுக்கு இப்ப கலியாணம் பேசித்திரியினம்…வேறை என்னத்துக்கு ராசதுரை இவ்வளவையும் வித்துச் சுட்டு உந்தச் சீதனம் தாறானெண்டு நினைக்கிறியள்…..இப்படிக் கன்பகுதி எந்து சம்பந்தம் பேசினவையள் தான்…. பிறகு சங்கதியைக் கேள்விப்பட்டாப் போலை விட்டிட்டுப் போட்டினம் ….எனக்குச் சொல்லாமல் இருக்க மனம் கேக்குதில்லை…இனி உங்கடை விருப்பம்.”
இராசதுரை உற்சாகத்துடன் வெளியே வந்தார். “அப்ப பிள்ளையை வரச்சொல்லட்டோ?”
“இல்லை!….வேண்டாம், இப்ப என்ன அவசரம்?…இன்னொரு நாளைக்குப் பாக்கலாம் தானே?”
இரகசியமாக அறையினுள்ளிருந்தவாறே வெளியே நடக்கும் உரையாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்த புனிதவதியின் நெஞ்சில் இடி விழுந்தது,
அவளுக்குத் தெரியும் – ‘பொம்பிளை பார்க்க’ வந்த எத்தனையோ பகுதி இப்படித் திரும்பிப் போகின்ற இரகசியம் அவளுக்குத் தெரியும். சபாபதியம்மான் தனது கருமத்தைத் திறமையாக ஒப்பேற்றியிருப்பார்.
மாப்பிளை வீட்டுக்காரர் போகப் போகினம்.
எத்தனை நாட்களுக்குத்தான் அறையினுள் இருந்து கொண்டு உளச் சோர்வுடன் தனது அலங்கரிப்புகளை அகற்றிக் கொண்டிருக்க முடியும்?
அறையில் ஒரு பகுதியில் தோட்டத்துக்கு வாங்கப்பட்ட களை கொல்லி மருந்து சிரித்துக் கொண்டிருந்தது.
பயிர்களுடன் சேர்ந்து வளர்கின்ற களைகள் அழிக்கப் படாதவரை பயிர்களுக்கு நாசம்தான். ஆற்றாமையினால், பயிரையே அழித்து விட்டால் களைகளின் நாசவேலையைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என இந்தப் பேதை நினைத்து விட்டாளா?
“வயித்திலை பிள்ளையாம்….அது தான் மருந்து குடிச்சவள்!” என சபாபதி தம்பதியருடன் சேர்ந்து ஊர் கதைத்துக் கொண்டது.
– பலாத்காரம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பாதிப்பு: 10-07-1977, ,தமிழ்ப்பணிமனை, யாழ்ப்பாணம்