வாழ்க்கைத் துணை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 5, 2024
பார்வையிட்டோர்: 271 
 

(1962ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1 

தன்னம்பிக்கையின் உச்ச நிலை. நல்ல இளம் பருவம். வாலிபத்தின் மிடுக்கு, சக்திப் பெருக்கத்தின் துடிப்பு, வலிமையின் புகலிடம்- இவை யாவும் களிநடம் புரிகின்ற கட்டுடல். இளமையும், வலிமையும் ஒருங்கே பிணைந்துள்ள என் வாழ்க்கையில் தன்னம்பிக்கை தோன்றியதில் வியப்புக்கு இடம் ஏது? 

தளர்ந்து தள்ளாடி, கூனிக் குறுகி, கோலும் கொம்பும் துணையாகப் பலர் என் முன்னே – நெடுந் தொலைவிலே போவதைப் பார்க்கிறேன். சீச்சீ என்ன கேவலம்! மனிதத் தன்மையின் மாசு தாம் அந்த வடிவங்கள். தன்னம்பிக்கையை இழந்துவிட்டால் அந்தக் கதிதான் ! 

என்னை நானே ஒரு முறை பார்த்துக் கொண்டேன். இரங்கத் தக்க அந்த ஜீவன்களை மீண்டும் ஒரு முறை பார்த்தேன். என்னைத் திரும்பவும் ஒரு தடவை பெருமிதமாகப் பார்த் துக்கொண்டேன். 

பரம திருப்தி, எல்லையில்லாத தற்பெருமை, தன்னம்பிக்கை—இவை என் உடம்பின் நாடி நரம்பு ஒவ்வொன்றிலும் நிறைந்திருந்தன. ஒவ் வோர் உறுப்பின் துடிப்பும் இயக்கமும் தன்னம்பிக்கையைத்தான் விளக்கம் செய்துகொண்டிருந்தன. 

அந்தக் காலத்தில் என் வாயுரைக ளெல் லாம் தன்னம்பிக்கை என்ற ஒரு சொல்லாலாகிய சூத்திரத்துக்கு விரிவுரை செய்யவே பிறந்தன. 

மற்றவர்கள் தன்னம்பிக்கையை இழந்து, பிறர் உதவியையும் நாடித் தம் மானத்தை இழந்து — ஐயோ அதை விவரிப்பானேன்? பாவம், இரங்கத் தக்க ஜீவன்கள். 

ஆண்மை! அதன் வலிமைதான் எவ்வளவு! தன்னம்பிக்கை என்பதற்கு வேறு சொல்தான் ஆண்மை என்பது. தன்னம்பிக்கைக்கு ஓர் உருவம் கொடுத்தால் அது ஆணாகத்தான் அமையும். 

வாழ்க்கைப் பயணம். அது என்ன, பெரிய காரியம்! என்னென்னவோ பயங்கரமாக விவரித் திருக்கிறார்களே! சுத்த அசட்டுத்தனம். கவிகளும் இந்த அசட்டுத்தனத்துக்கு இரையானவர்கள் தாமே! தன்னம்பிக்கை இல்லாவிட்டால் கவி ஞர்களும் எனக்கு வேண்டாம் ! 

வாழ்க்கைப் பயணத்தை நினைத்து நான் ஏன் பயப்படவேண்டும்? வாழ்க்கை உல்லாசம் நிறைந்தது. கவலை யற்றது; நேரே நெடிதாகச் செல்லும் ஒரே வழிதான். 

துள்ளலாம், குதிக்கலாம்; ஆடலாம், பாட லாம்; ஆக்க வேலைகள் நிறையச் செய்யலாம்; ஆகாத காரியங்களை அடியோடு அழிக்கலாம். எதற்கும் தன்னம்பிக்கை வேண்டும். அது இல்லாமல்தான் அதோ அந்த ஜீவன்கள் தளர்ந்துவிட்டன ! ஐயோ பாவம். 

நான் இளைஞன் ; வலிமை இருக்கிறது. தன்னம்பிக்கை நிறைய இருக்கிறது – ஏன் – தன் னம்பிக்கைதான் நான். என்ன செய்யவேண்டு மானாலும் செய்வேன். எனக்கு ஒருவர் தயவும் வேண்டாம். வாழ்க்கை என்ற இந்தக் குளிர் பூஞ் சோலையில் நான் தனியரசு செலுத்துவேன். எனக்கு ஒருவர் தயவும் வேண்டாம். 

இளமை, என் அமைச்சு; வலிமை என் தோழன். தன்னம்பிக்கை என் அழியாப்படை; அமரப்படை. நான் மன்னன். 

2 

இளமை என் அமைச்சு. ஆம். உண்மை தான். ஆனால்…. 

அவன் புதுப்புது ஆலோசனைகள் சொல்ல ஆரம்பித்துவிட்டான். 

மன்னர் மன்னனாக நான் இருந்தும் என்ன பயன் என்று கேட்கவும் துணிந்துவிட்டான். 

தோழன் – என் இனிய பாங்கன் – வலிமை – அவனும் தளர்ச்சி யடைந்துவிட்டான். 

“ஏனடா இப்படி” என்று கேட்டால், “என்ன செய்யட்டும்” என்று கையை அகல விரித்து உதட்டை நீளமாகப் பிதுக்குகிறான். 

அந்த அமரப் படை, அழியாப் படை—அது எங்கே போயிற்றோ? தெரியவில்லை. தன்னம்பிக்கை எங்கே? 

இடஇருக்கிறது, இருக்கிறது. எங்கும் போய் விடவில்லை. என்னிடம்தான் இருக்கிறது. ஆனால் என்ன செய்ய? 

முடங்கிக் கிடக்கும் சிங்கம், கூரிழந்த ஈட்டி, மையற்ற பேனாவாக என் படை செயலற்றுக் கிடக்கிறது. 

வேலைசெய்ய முடியாத எழுத்தாளனுக்கே காப்பி வேண்டும். எழுச்சி இருந்தால் தன்னம்பிக்கை வேலை செய்யும். 

ஆனால், எழுச்சிக்கு மருந்து எங்கே? அது தான் தெரியவில்லை. 

என்னவோ ஒன்று….அது என்ன….அது தான் தெரியவில்லை. ஆனால்…. 

அது இல்லாமல் என் வாழ்க்கை இல்லை. ஒரு பெருங்குறை, வெட்ட வெளி- இருக்கிறது. வெளியை நிரப்ப ஒன்று-குறையை நீக்க ஒரு நிறை-வேண்டும். 

அது எது? எங்கே கிடைக்கும் ? 

அமைச்சா! என்ன பதில் ? அரசு நடக்க வேண்டுமே! என் வலிமை பாழாகிறதே! தூசு படிந்து துருப்பிடிக்கவா என் படைகள்? 

மற்றவர் துணை எனக்கு எதற்கு என்ற என் பழைய கேள்வி என்னை இப்போது அரிக்கிறது. என்னால் ஒன்றுமே முடியவில்லை. 

ஐயோ, இன்னும் நெடுந்தொலை போக வேண்டுமே! 

3 

குறை இருக்கிறது என்ற உணர்ச்சி ஏக்க மாக மாறிவிட்டது. ஏக்கம், தவிப்பு, பரித விப்பு-இதுதான் என் வாழ்க்கைத் திட்டமாகப் போயிற்று. 

உடலிலே சோர்வு, உள்ளத்திலே சோர்வு. என்னுள் இருந்த சோர்வு பெருகியது. எங்கே பார்த்தாலும், எதைப் பார்த்தாலும் ஒரே சலிப்புத்தான். 

எனக்கு இனிய கம்பனில் சலிப்புத் தட்டிற்று. வள்ளுவரும்கூட என் பக்கம் நெருங்கவில்லை; நான் அவரை நெருங்க விரும்ப வில்லை ; விரும்பவில்லை என்பதென்ன, விரும்ப முடிய வில்லை…. என்னையே நான் விரும்பவில்லை. 

உள்ளத் தளர்ச்சிக்கு என் உடல் பணிந்தது. பழைய காட்சி என்முன் வந்தது. அந்தப் பழைய தளர்ந்து தள்ளாடும் ஜீவன் களைக் கண்டேன். எனக்கு ஒரே குழப்பமா யிருந்தது. அன்று பழித்தேன்; இன்று, ஏன் பழித்தேன் என்பது தெரியாமல் விழித்தேன். அவர்களுக்குத் தன்னம்பிக்கை இல்லையென்று அன்று பழித்தேன். இன்று என்னுடைய நிலைமை என்ன? 

நான் வாழ்வேனா? 

இந்தச் சந்தேகத்தை நீக்க யாரால் முடியும்? என்னால் முடியவில்லை. வாழவேண்டும் என்று அன்று விரும்பினேன். நினைத்ததை முடிப்பேன் என்று கோட்டை கட்டினேன். 

கோட்டை இடிந்து விழுந்து பாழ்பட்டுக் கிடக்கிறது. பாழடைந்த சுவர்களி லிருந்து என் னுடைய பழைய ஒலிகள் தன்னம்பிக்கைச் சூத்திரத்தின் வியாக்கியானங்கள்- -எதிரொலி யாக வந்து என் செவிகளில் மோதி மோதி விழுகின்றன. நாதத்துக்கு இனிமையுண்டு, எதிரொலியில் நயமுண்டு என்றெல்லாம் சொல்லுகிறார்கள். ஈமக்காட்டில் எரிந்துகொண்டிருக்கும் கொள்ளிக ளிடையே நள்ளிரவி லெழுகின்ற நரி களின் ஊளை ஓலத்திலே இனிமை காணும் ‘கலைஞர்’கள் தாம் என் வியாக்கியான எதிரொலிகளிலும் இனிமை கண்டிருக்க முடியும். 

சிற்பி ஒருவன் தன் கற்பனைத் திறத்தினை யெல்லாம் சேகரித்துத் திரட்டி, ஒரே வார்ப்பட மாகச் செய்து இயற்றிய சிலை சிதைந்து விழுந்து, சிதைந்த பிறகும் தன்னைப் படைத்த சிற்பியைப் பார்த்து எள்ளி நகையாடவும் செய் தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் நான் கட்டிய வாழ்க்கைக் கோட்டையின் பாழ் வெளி யும் என்னைப் பரிகசித்தது. 

முடிவுதான் என்ன? எல்லையில்லாத் துன்பமே என் வாழ்க்கையா? 

ஐயோ! தளர்ச்சி மேலீட்டால் தண்டூன்றி நடந்தவர்களைக் கேலி செய்தேனே ! என் கதி! . 

ஒரே முடிவு-சாவு என்னை ஆரத் தழுவாதா! 

கூடாது! கூடாது! நான் ஏன் சாக வேண்டும்? தன்னம்பிக்கை இன்னும் இருக் கிறது. சாகவில்லை. வாழ வேண்டும், பணிகள் ஆற்ற நான் வாழ வேண்டும்! 

ஆனால்….! அப்படியானால் எனக்கு ஒன்று வேண்டுமே! 

ஒரு துணை! என்னைப்போலவே தவிக்கும் ஒரு துணை ! என்னோடு சேர்ந்து தவிக்க, வாழ, வளர ஒரு துணைவேண்டும். ஆம்! அதுதான் எனக்கு வேண்டும். என் வாழ்க்கை அரசு செலுத்த ஒரு வாழ்க்கைத் துணை வேண்டும். 

ஆண்மை! ஹும்…. ஆண்மை ! ஐயோ ! பாவம்! தன்னம்பிக்கை-எவ்வளவு பெற்றும் என்ன? 

இளமை-அது எவ்வளவு துடிப்பும் உல்லா சமும் பெற்றதாயிருந்தால்தான் என்ன? 

வலிமை-அது தளர்ந்து மறையும் நேரமும் இருக்கிறது. அதுமட்டும் இருந்தென்ன? 

துணை—அரசனுக்கு அரசி–ஆண்மைக்குப் பெண்மை-வேண்டும். 

துடிப்பிலே பிணைந்து கிடக்க – தவிப்பிலே சேர்ந்து தவிக்க-இதய ஒலியிலே கலந்து இசைக்க-ஓரொலியாய் இரண்டொலி இழைய ஒரு துணை வேண்டும். 

மருந்து கண்டேன். பிணிக்கு அவிழ்தம் தெரிந்துவிட்டது. 

எங்கே எனக்குத் துணை ? 

என் அமைச்சன் தன் துடிப்புடன் சேர்ந்து தேடினான். என் வலிமைத் தோழன் தன் வனப் புடன் சேர்ந்து தேடினான். 

ஒரே பரபரப்பு. துணை ! அரசுக்குத் துணை ! ஆண்மைக்குத் துணை ! 

தன்னம்பிக்கை கொஞ்சம் தலை தூக்கிற்று. நான் கண்ட மருந்து சரிதான் என்ற துணிவு பிறந்தது. 

எனக்கொரு துணை வேண்டும். என் உடல் வாழ, உள்ளம் சிலிர்க்க, உயிர் மலர ஒரு துணை வேண்டும். 

என் துணை-பெண்மையின் அவதாரம், அது எங்கே இருந்தாலும் கண்டுவிடுவேன் ? பிறகென்ன, எனக்கு ஏது குறை! 

என் துடிப்பின் வேகத்தில்-விரைந்து சுழலும் சூறாவளியில்என் இளமை வீசும் வலையில்-என் துணையைக் கண்டுவிடுவேன். 

பிறகென்ன, எனக்கு ஏது குறை ? 

காதல்!-இந்தச் சொல்லே எவ்வளவு அழகாக இருக்கிறது! படித்திருக்கிறேன், நிறையப் படித்திருக்கிறேன். 

படித்ததெல்லாம் புரிந்தா படித்தேன் ? எத்தனையோ விளங்காத செய்திகள் ! அர்த்தம் தெரிந்துவிட்டால் பொருளும் தெரிந்துவிட்ட தாகவா ஆகும் ! இல்லையே! காதலும் அப்படித் தான். 

இப்போதுதான் காதல் இப்படித்தானிருக் கும் என்று தெரிகிறது. அமைதி நிறைந்த ஓடையிலே ஒரு வெள்ளம். அமைதி நிறைந்த சோலையிலே ஒரு சூறாவளி. அமைதி நிறைந்த மனத்திலே ஒரு பெரிய கலக்கம்- இத்தனை கோலாகலங்களுக் கிடையே பிறக்கிறது அந்த எழிற்காதல். 

துணைவேண்டு மென்ற ஒரு வேட்கை, வாழ்க்கை தனித்திருப்பதற் கல்ல என்ற ஒரு ஞானோதயம்–இவை காதலின் வருகையை அறிவிக்கும் தொண்டர்கள். 

என் வாழ்க்கையிலே காட்டாற்று வெள்ளம் வந்தது. சூறாவளி சுழித்தடித்தது. வேட்கை முருகி எழுந்தது. ஞானம் உதயமாயிற்று. 

அதோ, அடுத்து அவளும் வந்துவிட்டாள். என் அரசி, என் துணைவி. என் ஆண்மை வேட் டெழுந்து, தவித்ததெல்லாம் இந்தப் பெண்மைக்குத்தானே! 

என் அமைச்சன், ‘அரசி இவளே ‘ என்று அடையாளம் கண்டு சொன்னான். என் தோழன் இவள் உனக்கு ஏற்றவள்’ என்று கூறினான். 

துடிப்பு, விரைந்து ‘ இவள்தான்’ என்றது. வாலிப உடல், இவள் தான் உன்னவள் என்றது. 

அவள் கண்கள் பேசின. ஆமென்றுதான் பேசின. நானும் ஆமென்று நினைத்தேன். 

துணை கண்டுவிட்டேன். வாழ்க்கை வழி; பழையபடி உல்லாசம் நிறைந்ததாகக் காட்சி யளித்தது. துள்ளலாம், குதிக்கலாம்; ஆடலாம்; பாடலாம்; ஆக்க வேலைகள் நிறையச் செய்ய லாம். ஆகாத காரியங்களை அடியோடு அழிக் கலாம். 

தன்னம்பிக்கை தலையெடுத்தெழுந்து, மூரி நிமிர்ந்தது. எழுந்து வளைந்து ஒரு துள்ளுத் துள்ளிற்று. 

என் துணை வந்துவிட்டாள். வாழ்க்கைப் பாதையில் உல்லாசப் பயணந்தான். இனி எனக்கென்ன குறை? 

பயணம் தொடங்கிவிட்டது. என் துணையும் நானும் கைகோத்துப் புறப்பட்டோம். மனமும் மனமும், உயிரும் உயிரும் இணைந்து கை கோத்துப் புறப்பட்டுவிட்டதாக ஓர் உணர்ச்சி என் மனத்திலே எழுந்தது. 

தென்றல் எமக்கு உபசாரம் செய்ய, தேன் குடித்து இனிய இசை எழுப்பிக் காதலின் புகழை வண்டுகள் பாட…. வாழ்க்கை ஒரே இன்ப மயம்! வாழ்க்கை ஒரே இணை இன்பம் என்ற வேதகீதத்தைக் குயில்கள் மிழற்ற, எங்கள் வாழ்க்கைப் பயணம் கவிதை இன்பவெறி போலத் தொடங்கி மேலே சென்றது. 

துணை கிடைத்த எக்களிப்பிலே நான் என்னை மறந்தேன். ‘பக்கத்தில் என் அரசி ‘ என்ற நினைப்பிலே என்னைப் பறிகொடுத்தேன். 

வழிநெடுகிலும் நடந்துகொண்டே யிருந் தேன். இன்பமாக இருந்தது. நான் இன்பமாக, இன்பம் நானாக இருந்த நிலை என்பதுதவிர வேறொன்றுமே நினைவில்லை. 

அந்த நிலையினைத் துருவித் துருவி ஆராய்ந் தால்-அந்த நிலையினைக் கற்பனை செய்து பார்த் தால் அந்த இன்ப நிலைக்கெல்லாம் காரணம் அவள்தான்—என் துணை தான் என்பது தெரிந் திருக்கும். 

என் துணைவி-நான்; நான்—அவள்- இருவராலாகிய இன்ப உலகுதான் எங்கெங்கும் பரவி- விண்ணும் மண்ணும் பரந்து–பரவெளி, நிலமகழ்ந்த பாதாளம்-எங்கெங்கும் பரவிக் கிடந்தது. 

மண் சுருங்க விண் சுருங்க விரிந்து பரந்து யாவற்றையும் என்னுள் அடக்கிக்கொண்டு நான் காதற் செங்கோல் செலுத்திக்கொண்டிருந்தேன். 

அமைச்சன் மகிழ்ந்தான்; துணைவன் திளைத்தான்; அரசு செழித்தது. 

5 

நீல வானத்தின் மேற்பரப்பிலே மேலும் மேலும் ஆழ்ந்து செல்லும் வெளியை நோக்கி விர்ரென்று உற்சாகமாக ஒரு புள் பாடிப் பறந்து செல்லும்போது திடீரென்று இரு சிறகும் அற்றுவிட்டால் எப்படி இருக்கும் ! 

பயணத்தில் லயித்துஇன்ப வெறியிலே திளைத்துச் சென்றுகொண் டிருந்தபோது- ஏதோ கருத்துக் கண்ணுக்குப் புலப்படும் ஒரு மின்னல் என்னை ஊடுருவிச் சென்றது. இருதயம் திடீரென்று மறைந்துவிட்டது போன்ற உணர்ச்சி என்னைக் கவ்விற்று. 

என்னவோ என்று ஒன்றும் புரியாமல்- ஆனால், ஏதோ துன்பம் என்ற உணர்ச்சி மட்டுமே என்னை ஈர்க்கப் பழைய உணர்வை அடைந் தேன். 

ஐயோ! எங்கே என் துணைவி? புயலிலே, சூறாவளியிலே, காட்டாற்று வெள்ளத்திலே அசைந்து அலைமோதி மூச்சடக்கித் தேர்ந் தெடுத்த மருந்தல்லவா அவள் ! 

அவள் எங்கே? இளமைத் துடிப்பின் வேகத்திலே சிக்கிய விண்மருந்து அவள். வனப் பின் வலையிலே அகப்பட்ட பிணைமான் அவள். 

அவள் எங்கே ? மனம் இருளில் தோய்ந்தது. மனம் கனம் தாங்காமல் துயர்க் கடலிலே ஆழ்ந்தது. 

புற்றரவம் ஒன்று வெளியே வந்து படம் விரித்தாடியது. அட்டா! அந்தப் படந்தான் எவ்வளவு எழில் நிறைந்திருக்கிறது! என் துணைவியின் எழில் இந்த அராவின் படத்திலே இருக்கிறது. 

எழில்! அது எங்கே இருந்தால் என்ன! என் துணைவி. என்னைவிட்டுப் பிரிக்கப்பட்டு என்னை நினைந்து எங்கோ ஒரு தன்னந்தனிப் பாறையிலமர்ந்து உருகிக்கொண்டிருக்கும் என் அழகின் ஓவியம்-அவளுடைய எழில்தான் எந்த இடத்திலும் இருக்கும் ! 

ஆனால்…….அவள் இப்போது எங்கே ? எங்கே என் பெண்மைச் செல்வம்? 

கண்ணைத் துடைத்துப் பார்த்தேன். கண் களைச் செலுத்தித் தூரமாகப் பார்த்தேன். கண் ணுக்கெட்டிய தூரமெல்லாம் அவள் இல்லாத தால் பாழ் வெளியாக இருந்ததே யல்லாமல் ஒரு துளி அழகாவது, வாழ்வாவது காணப்படவில்லை. 

என் வாழ்க்கையும் பாழ் வெளியாகிவிடுமா? ஐயோ, கண்ணிழந்தான் பெற்றுப் பின்னும் இழந்தான் என்ற கதியா என் கதி? 

இன்னும் நெடுந்தொலை போகவேண்டுமே! 

மீண்டும் என் நோக்கம் செல்லும் தொலை வுக்குக் கண்ணைச் செலுத்திப் பார்த்தேன். சிரிப்புக் கலகலவென்று கேட்டது. என்ன சிரிப்பு ! அந்தப் பாழான கோட்டையின் எதிரொலி போலவே அந்தச் சிரிப்பும் என்னைக் கேலி செய்தது. 

யாரது? அவளா ?………. இது என்ன? இதையும் நம்பவா ? 

என் துணைவி, என்னுடைய செல்வி- அவளா என்னைக் கேலி செய்கிறாள்? 

ஆம், அதோ அவள்தான். சாலைக்கு வரம்பு கட்டிய வேலிக்கு அப்பால்-தொலை விலே நின்றுகொண்டிருக்கிறாள். 

துயரக் கடலில் ஆழ்ந்த என் மனம் சிரமப் பட்டு மேலே எட்டிப் பார்த்து, அவள் கண்ணின் பார்வையைத் துருவி ஆராய்ந்தது. 

காதல்! இளமைத்துடிப்பின் வேகத்திலே அது சிக்காது. வலிமையின் வனப்பில் மட்டுமே அது அகப்படாது. உண்மைக் காதல் – சூறா வளியிலே மூச்சடக்கிப் பிடித்துவிடுவ தல்ல. காட்டாற்று வெள்ளத்திலே ஒதுங்கி ஏறுவதற்கு அகப்பட்டதெல்லாம் கரையல்ல. 

ஆபத்திலே-வெள்ளப்பெருக்கிலே உயிர் தப்ப நடுவில் ஒரு பாறையில் ஏறியிருக்கலாம். ஆனால், அதுவே கரையா? 

அது கரையாக இல்லாவிட்டால் போகிறது; அங்கேயே வாழக்கூடாதா? 

இப்படி யெல்லாம் மனம் கிடந்து திண்டா டிற்று. என்ன திண்டாடி என்ன செய்ய? 

அவளுக்கு இரக்கமில்லை. மீண்டும் என் னைப் பார்த்துச் சிரிக்கிறாள். நான் பேதை என்று அவள் கண்கள் என்னைப் பழிக்கின்றன. அவள் இதழ்க்கடையோரங்கள் என்னை ஏளனம் செய்யவே மலர்கின்றன. இதழ்கள் ஒரு சாய லாகச் சாய்ந்து என்னை நையாண்டி செய்கின்றன. 

புற்றரவின் வெறியாட்டம் முடிந்தது. பாவம்! ஒரு முயல் நீலநிறமெய்தி உலக வாழ்வை நீத்தது. 

எழில்! அதுமட்டும் இருந்தால் போதுமா? பாம்பின் எழில் மிகுந்த படத்தை அனுபவித்த நான், முயலைக் கொல்லும் நச்சும் அங்கே இருந்ததை உண ரவில்லையே ! 

பாம்பு தன் படத்தைச் சுருக்கித் தன் புற்றுக்குள் மறைந்தது. அங்கிருந்து கண்ணை மட்டும் வெளியே செலுத்திக்கொண் டிருந்தது. அவள் பரிகசித்தாள். என்னைப் பரி கசித்தாள். ஏழை நான், என்ன செய்ய முடியும் ? 

தளர்ந்த நடைபோட்டு மேலே போக லானேன். கால்கள் பின்னின. கருத்துக்கள் பின்னின. ஒரே கொடிகளின் பின்னலும் சிக்கலுமாக இருந்த வேலியோரத்தில் பொத் தென்று விழுந்தேன். 

6 

கிழக்கு வெளுத்தது. புட்கள் இசை பாடி யிருக்கலாம். யார் கண்டார்கள் ? 

தண்மதி போன்ற முகம்; குளிர்ந்த பார்வை; அமைந்த சாயல்; அழகிய முறுவல் – இவை கொண்ட ஒரு பெண்ணுருவம் வேலிக்கப்பால் – நான் சுருண்டு கிடந்த வேலிக்கப்பால் – என் முன் வந்து நின்றது. பெண்ணுருவம் கொண்டதோர் கூற்றம் என நினைந்தது என் உள்ளம். சூடு கண்ட பூனை ! 

கண்ணை மூடினேன். ஆனால், அகக் கண் முன் அவள் – இல்லை-இவள் வந்து நின்றாள். 

என்ன இது, தர்ம சங்கடம்! 

கண்ணைத் திறந்தேன். அவள் என்னை நோக்கினாள். நானும் பார்த்தேன். 

கவர்ச்சி இல்லாமல் இல்லை. ஆனால், பழைய தளர்ச்சியின் வேகம் இன்னும் என்னைத் தாக்கிற்று. 

என்னதான் என்னை அடக்கியும் மீண்டும் மீண்டும் அவளைப் பார்க்கவே என் உள்ளம் தூண்டிற்று. 

‘முன்போலில்லை; அமைதி பிறந்துவிட்டது; சூறாவளி அடங்கிவிட்டது. வெள்ளம் வடிந்து விட்டது. கரை ஏறலாம். தயக்கம் வேண்டாம்’ -என்று என் மனம் உபதேசித்தது. 

என் அமைச்சன் முன் தான் கூறிய ஆலோசனை பாழ்பட்டது கண்டு என்னை நெருங்க அஞ்சினான். தன்னால் தன் நண்பனுக்கு அவமானம் நேர்ந்ததே என்று என் பாங்கன் என்னை அணுகவில்லை. 

என் அறிவும் உடலும் தயங்கின. முன்னே துடியாய்த் துடித்த அவை இப்போது அடங்கி ஒடுங்கி, இருக்கும் இடம் தெரியாமல் கிடந்தன. 

ஆனால், என் உயிரின் துடிப்பு இப்போது தான் எழுச்சி பெற்றது: 

“இவள்தான் என் துணைவி” என்றது உயிர். “உன் துணைவி” என்று உடலும் அறிவும் முன் கூறியது நினைவு வந்தது. உயிர் மட்டுமே “என் துணைவி ” என்று கூறிற்று………. 

இந்த ஆராய்ச்சி நடந்து முடியும்வரை அவள் காத்திருக்கவில்லை. தயங்கித் தயங்கி எட்டி எட்டிப் பார்த்தவள் என் ஆன்மத் துடிப்பை அறிந்துவிட்டாள். 

அவள் ஆன்மாவும் துணை நாடித் தவித் திருக்கவேண்டும். 

உடனே எனக்குக் கரம் தந்தாள். ஆன்மாவும் ஆன்மாவும் கலந்தன. 


கைகோத்து இரண்டு உயிர்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கின. 

எனக்கும் உனக்கும் 
இசைந்த பொருத்தம் 
என்ன பொருத்தமோ 
இந்தப் பொருத்தம் 
உலகில் பிறர்க்கு 
எய்தும் பொருத்தமே 

என்று ஆண்மையும் பெண்மையும் கலந்து பாடிய குயிலிசை தென்றலில் மிதந்துவந்தது.

– இடமதிப்பு, முதற் பதிப்பு: 1962, மல்லிகா வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *