அழகான அந்திப் பொழுது எப்படி சென்று மறைந்ததென, யாருக்கும் தெரியாதது போல், எனக்கும், விஜயராகவனுக்கும், எப்போது, எப்படி அன்பு ஊடுருவியது என்று, சொல்லத்தெரியவில்லை.
நட்புக்கு வயது வரம்பில்லை என்பதற்கு உதாரணமாய், அவர் அறுபதில் இருந்தார்; நான் இருபதில் இருந்தேன்.
அண்டை வீட்டுக்காரர்களான நாங்கள், மாலைப் பொழுதுகளில், ஈசிசேரில் எதிரெதிரே அமர்ந்து, பேசிக் கொண்டிருப்பதை பார்க்கலாம்.
அவரிடம் நிறைய வித்தியாசமான அணுகுமுறைகள் உண்டு. துளசி, ஜாதி பத்திரி, திண்ணீர் பத்திரி, மரிக்கொழுந்து என, மூலிகைச் செடிகள், அவர் கொல்லைப் புறத்தில் எப்போதும் இருக்கும்.
குளிக்க வெந்நீர் காய வைக்கும் போது, அந்தச் செடிகளிலிருந்து, சிறிது இலைகளை கிள்ளி, தண்ணீருக்குள் போட்டு வைப்பார். நீர், சூடாக சூடாக, அந்த இலைகளின் சாறு கலந்து அந்தத் தண்ணீர், மணமும், மருத்துவ குணமும் மிக்கதாக மாறும். அதில் தான் அவர் குளிப்பார்.
ஞாயிற்று கிழமைகளில், அவர் வீட்டை எட்டிப் பார்த்தால், ஆட்டுக் கால்களை வாங்கி வந்து, தீ மூட்டி வாட்டி, கத்தியால் அதில் இருக்கிற முடிகளை சுரண்டி கொண்டிருப்பார். பின், அதை போட்டு, அவரே சூப் தயாரித்து, சுடச்சுட நீட்டுவார். இதையெல்லாம் வைத்து, அவர் ஆரோக்கியமாகவும், திடகாத்திரமாகவும் இருப்பார் என்று தானே நினைக்கிறீர்கள். அது தான் இல்லை.
எந்த நிமிடம் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும், அவர் மனைவி கைத்தாங்கலாய் பிடித்து, ஆட்டோவில் அமர்த்தி, மருத்துவமனைக்கு கூட்டிச் செல்வார் என்று தெரியாது.
ஒரு நாள் அவரிடமே கேட்டுவிட்டேன்.
“ஆரோக்கியத்திற்காக இவ்வளவு செய்கிறீர்களே… அப்புறம் எப்படி உங்கள் உடம்பு இந்த நிலையில் இருக்கு?’
“எனக்கு வியாதி உடம்புலன்னு நினைக்கிறியா?’ என்று கேட்டுவிட்டு, மறுப்பாய் தலையசைத்தவர், “சின்ன வயசில் இருந்து பழகிய பழக்கத்தில் தான் என்னுடைய அன்றாட வாழ்க்கை நடந்துட்டுருக்கு. அதான் நீ பார்க்கிற மூலிகை குளியல் சமாச்சாரமெல்லாம். என் பையனுக்கு முப்பத்தேழு வயசாகுது. இன்னும், கல்யாணம் பண்ணி வைக்க முடியலை. என் மனசு நோயா போச்சு. மனசு நலிஞ்சா, எல்லாமே நலிஞ்சுருண்டா…’ என்றார்.
அவருக்கு ஒரே மகன். பெயர் கனகராஜ். அவனுக்கு திருமணம் அமையாமல், தள்ளிக் கொண்டே போவது தான், அவர் குடும்பத்தை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது.
அவர் மகன் கனகராஜ், அலையாத அலைச்சல் இல்லை. புரோக்கர்களுக்கு கொடுக்கவே, தனியாக சம்பாதிக்க வேண்டியிருந்தது. சில லோக்கல் புரோக்கர்கள், “சரக்கடிக்க’ காசில்லா விட்டால், ஏதாவதொரு ஜாதக ஜெராக்சை காட்டி, பணம் வாங்கிச் செல்வதை, வழக்கமாய் கொண்டிருந்தனர்.
விஜயராகவன் குடும்பத்திற்கு, ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று தோன்றியது. எனக்கு தெரிந்த கோவிலில், அர்ச்சனை செய்பவரும், ஊரில் மரியாதைக்குரியவருமான ஒரு ஜோதிடரை அணுகி, கனகராஜின் ஜாதகத்தைக் கொடுத்தேன். அதை, ஆராய்ந்து பார்த்தார்.
“தீர்த்த ஸ்தலத்திற்கு போய், ஒரு பரிகாரம் செய்ய வேண்டும். ஒரு வாழைக்கன்றுக்கு தாலிகட்டி, தோஷம் கழித்தால், நல்லதே நடக்கும்…’ என்றார். அவரது வார்த்தைகள், நம்பிக்கையூட்டின.
இந்த விவரத்தை, விஜயராகவன் வீட்டினரிடம் சொன்னதும், தீர்த்த ஸ்தலத்திற்கு சென்று, பரிகாரம் செய்வதென முடிவாகியது. அந்த ஜோதிடரையும் கூட்டிக் கொண்டு, வாழைக் கன்று உட்பட, அவர் சொல்லிய பரிகார உபகரணங்களுடன், ஒரு வாடகைக் காரில் புறப்பட்டோம்.
காவிரி ஆற்றங்கரையில் கார் நின்றது.
எல்லாரும் காவிரியில் குளித்தோம். ஈரத்துணியோடு, சட்டை இல்லாமல், காவிரிக் கரையில் கனகராஜ், அமர வைக்கப்பட்டான். பரிகார நியமங்கள் நடந்தன. ஜோதிடர், சொல்லச் சொல்ல, அவன் மந்திரங்களைச் சொன்னான். கிட்டத்தட்ட, அது ஒரு திருமணம் போலவே நடந்தது. வாழைக்கன்றுக்கு கனகராஜ் தாலிகட்ட, நாங்கள் அட்சதை தூவினோம்.
அதன் பின், ஆற்றங்கரையிலிருந்த கோவிலுக்குப் போய், எல்லா தெய்வங்களையும் வணங்கினோம்.
ஒரு வருடம் ஓடி விட்டது. ஆனால், திருமணம் தான் கூடவில்லை. திருமணம் என்பது, பல வட்டங்களுக்கு உட்பட்டிருந்தது.
ஜாதி என்ற ஒரு வட்டம். ஜாதகம் என்ற வட்டத்திற்கு மேல் ஒரு வட்டம். அந்தஸ்து என்று, மேலும் ஒரு வட்டம். அப்புறம், அழகு வட்டம், நிற வட்டம், தர வட்டம் என, அது விரிந்து கொண்டே போகிறது. வட்டத்திற்கு நடுவில், பரிதாபமாய் நிற்க நேர்கிறது.
கண்முன் உலவும் ஜோடிகளைப் பார்க்கவும், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கேட்கும் கேள்விகளை சந்திக்கவும், சங்கடப்பட்டு, விசேஷங்களுக்கு போகாமல், வீட்டிலேயே முடங்க ஆரம்பித்தான் கனகராஜ்.
ஆனாலும், அர்த்த ராத்திரியில், இயற்கையாய் எழும் அந்தரங்க உணர்வுகள், செல்லாய் அரித்தன. ஒரு குடும்பத்தில், எத்தனை பேர் இருந்தாலும், தனக்கென ஒரு பெண் இல்லாவிட்டால், அது, கொடிய தனிமை தானே. ஒரு பெண்ணை கரம் பிடிப்பதில் தானே, வாழ்க்கை முழுமை நிலையை அடையும். அது இல்லாத வெறுமை, எத்தனை சூனியமானது!
எவ்வளவோ முயன்றும், கனகராஜுக்கு பெண் கிடைக்கவில்லை. விஜயராகவனும், தன் முயற்சியில் சளைக்கவில்லை. தன் சொந்த கிராமத்தில் இருக்கும் கருப்பராயசாமி கோவிலில், சித்திரை ஒன்றாம் தேதி, அன்னதானம் செய்தார். ஆனால், சித்ரவதை தீரவில்லை.
அவர் உடல் நலமும், நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போனது.
ஒரு நாள், வீட்டிற்கு குடித்து விட்டு வந்திருந்தான் கனகராஜ்.
குடித்துவிட்டு வந்த முதல் நாளே, தகராறு வந்து விட்டது. “ஒழுக்கமா இருக்கிற போதே, பொண்ணு கிடைக்க பெரும்பாடு. இப்ப இது வேறயா… அப்புறம் மண்வெட்டி கல்யாணம் தாண்டா செய்யணும்…’ என, விஜயராகவன் சத்தம் போட, பதிலுக்கு அவனும் கத்த, வாய்த்தகராறு முற்றியது.
தந்தையும், மகனுமே அடித்துக் கொள்ள ஆரம்பித்தனர். அவர் மனைவி கத்திய சத்தத்தில், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சண்டையை விலக்கி விட்டனர்.
சம்பவம் கேள்விப்பட்டு, மறுநாள் நான் சென்று அப்பாவையும், மகனையும் சமாதானப்படுத்தினேன். எனினும், இயல்பு நிலைக்கு திரும்ப சிறிது நாள் ஆனது.
“கேரளாவிற்கு போனா, பொண்ணு கிடைக்கும்ன்னு பேசிக்கிறாங்க… நம்ம ஆளுக நிறைய பேர் முயற்சி செய்றாங்க… நாமும் முயற்சி செய்தால் என்ன?’ ஒரு மாலை நேர சந்திப்பில் நான் கேட்க, விரக்தியாய் சிரித்தார் விஜயராகவன்.
“கேரளாகாரன், தண்ணியே கொடுக்க மாட்டேங்கிறான். பொண்ணு கொடுப்பானா… சொல்லு?’ என்றவர், திடீரென நெஞ்சை பிடித்துக் கொண்டார்.
“ஐயோ… வலிக்குதே…’ என்று துடித்தவர், சட்டென நாற்காலியிலிருந்து விழுந்து விட்டார். வாயில் நுரை வர, கைகள் இழுத்துக் கொண்டன. உடனடியாக, ஆம்புலன்ஸ் வரச்சொல்லி, ஏற்றிக் கொண்டு பறந்தோம். அதிகாலையில் விஜயராகவன் உயிர் பிரிந்து விட்டது.
மறுநாள் இரவு, அவர் உடல் மயானத்தில் எரிந்து கொண்டிருந்தது. எல்லா சடங்கும் முடிந்து, அனைவரும் கிளம்பி விட்டனர். நகர மனமின்றி, நான் மட்டும் அந்த தீப்பிழம்பையே பார்த்தபடி நின்றேன்.
மரணத் தருவாயில் அவர் என்னிடம் கூறிய விஷயம், எனக்குள் திரும்ப திரும்ப வலம் வந்து கொண்டிருந்தது.
“யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமல், பாவமற்ற வாழ்க்கைதான் வாழ்ந்தேன். எனினும், நான் இந்த நிம்மதியற்ற வாழ்க்கைக்கு ஆளானதற்கு காரணம், நான் செய்த ஒரே ஒரு பாவம் தான். அதை கடைசியாக யாரிடமாவது, சொல்லி விடத் துடிக்கிறேன். அதை, உன்னிடம் சொல்லி விடுகிறேன்…’ என்று கண்கலங்கினார் விஜயராகவன்.
“சொல்லுங்க…’ என்றேன்.
“என் மகன் கனகராஜ் பிறந்து சில வருடங்களில், என் மனைவி மீண்டும் கருவுற்றாள். “ஸ்கேன்’ செய்து பார்த்ததில், கருவிலிருப்பது பெண் சிசு என்று தெரிய வந்தது. அப்போது, நான் பொறுப்பாக வேலை வெட்டிக்கு போகாமல், ஊர் சுற்றிக் கொண்டிருந்த நேரம்…
“என்னுடைய அக்கா, “நம்ம ஜாதில பெண் குழந்தையை பெத்துட்டா, சீர், சிறப்பு, சடங்கு, கல்யாணம், கிடாக்கறின்னு செலவு செஞ்சு மாளாது. பேசாம இதை கலைச்சுரு. அது தான் புத்திசாலித்தனம். ஒரு பையனே போதும். ராஜாவாட்டம் இருக்கலாம்…’ என்று கூற, நானும் சம்மதித்தேன். அதுவும் ஒரு உயிர். அதுவும் ஒரு ஆன்மா என்பதை, அப்போது நான் எண்ணிப் பார்க்கவில்லை. டாக்டரிடம் சொல்லி, கருவை கலைத்து விட்டோம். இன்று, அதுவே எனக்கு எதிர்வினையாகி நிற்கிறது. பாவம் சுற்றி வளைத்து கொண்டது…
“அதாவது, நான் எப்படி பெண்ணைப் பெற்று, வளர்த்து, செலவு செய்து, அடுத்தவனுக்கு கட்டிக் கொடுக்க விரும்பவில்லையோ, அதே போல், என் மகனுக்கு பெண் கொடுக்க, இன்று ஆள் இல்லை. நான், எப்படி பெண் கருவை கலைத்தேனோ, அதே போல, பலரும் பெண் கருவை கொன்றிருக்கின்றனர். வெளியே தெரியாவிட்டாலும், பெண் சிசுவை கொன்றதற்கு, கணக்கே இல்லை. அவ்வளவு கொடூரம்…
“ஆண்கள் எண்ணிக்கைக்கேற்ப, இன்று பெண்கள் இல்லை. ஊருக்கு ஊர், வீட்டுக்கு வீடு, மணமாகாத ஆண்கள் இருக்கின்றனர். வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது போல், வீட்டிற்கு ஒரு மணமகன் வளர்ப்போம் என வளர்த்து வைத்திருக்கிறோம். மாயமானை தேடிய ராமனை போல, இன்று இல்லாத பெண்களை தேடி, இளைஞர்கள் அலைந்து கொண்டிருக்கின்றனர், என் மகன் உட்பட…’ சொல்லி முடித்துவிட்டு, கண்களை மூடிக்கொண்டார் விஜயராகவன்; பிறகு திறக்கவே இல்லை.
விஜயராகவன் மறைந்து, சில மாதங்களானது. துளசி, திண்ணீர் பத்திரி, மரிக்கொழுந்து செடிகள் இருந்த அவர் வீட்டுக் கொல்லை, கேட்பாரற்று புதர் மண்டிக் கிடந்தது.அந்த வீட்டு கேட்டை திறந்து, வெளிப்பட்டான் கனகராஜ்.
அப்போது எதிர்பட்ட நான், “”அவசரமா கிளம்பிட்டிங்க போல…” என்றேன்.
“”ஆமாம் காட்டுப்பாளையத்தில், புரோக்கர் ஒருத்தர் இருக்காராம்… அவரை பொண்ணு பார்க்க சொல்லணும்…” என்றபடி, நடந்து போனான் கனகராஜ்.
– ஈ.ஜெயமணி (நவம்பர் 2012)
பெயர் : ஈ.ஜெயமணி
வயது : 31
கல்வித் தகுதி : 8ம் வகுப்பு
சிறுகதை எழுதுவதை ஒரு தவம் போல் கருதுகிறார். படிப்பதில் ஆர்வம் உள்ள இவர், நிறைய சிறுகதைகள் எழுத வேண்டும் என்று விரும்புகிறார். இக்கதையே இவரது முதல் படைப்பு.