வாழப் பிறந்தவர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 13, 2024
பார்வையிட்டோர்: 217 
 
 

(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வரவறியாமல் செலவு செய்யும் ஊதாரியின் கையைவிட்டு பணம் கரைவது போல், அந்தச் சிறிய உணவுக் கடையில் கூட்டம் குறைந்து கொண்டே வந்தது. அந்தக் கடையின் ஒரு மூலையில் ஆர்டர் கொடுத்த சாப்பாட்டில் ஒரு பிடி சாதத்தை வாயில் வைத்தாள் கமலம். அது ஏனோ வயிற்றினுள் போக முடியாத அளவுக்கு அவள் தொண்டையிலேயே சிக்கிக்கொண்டது. எப்படியோ ஒருவாறாகத் தண்ணீரைக் குடித்து அந்தச் சாதத்தை உள்ளே தள்ளிவிட்டாள். அதற்கு மேல் மற்றொரு பிடியை வாய்க்குள் அனுப்ப அவள் மனம் இடந்தரவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது.

யாரும் தான் அழுவதைப் பார்த்து விடக் கூடாதே என்ற பயத்தில் வழிந்தோடிய கண்ணீரைத் தன் சேலை முந்தானையால் துடைத்துக் கொண்டாள். துடைத்த வேகத்திலேயே கையைக் கழுவ கழுவக் குழாய்க்கு விரைந்தாள். ‘கையைக் கழுவிவிட்டேன்” என அவள் வாய் மெல்ல முணுமுணுத்தது. முனகல் மென்மையாக இருந்தாலும் அது அழுத்தமாகவே ஒலித்தது. வெறும் கை கழுவியதைத்தான் அவள் அப்படி அழுத்தந்திருத்தமாகச் சொன்னாளா? அல்லது ஏதோ ஒர் உட்கருத்தை மனத்தில் வைத்துக் கொண்டு அப்படிப் பேசினாளா? அது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

மறுபடியும் தான் அமர்ந்த அந்த இடத்திலேயே அமர்ந்தாள் கமலம். இப்பொழுது அவள் பார்வை அந்தக் கடையை வட்டமிட்டது. அந்தப் பெரிய கோப்பிக்கடையின் ஒரு பகுதியை மட்டும் ஆக்கிரமதித்துக் கொண்டிருந்த அந்த உணவுக்கடை மட்டும்தான் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு அடையாளமாக அக்கடையின் நுழைவாயில் மட்டும் திறந்திருக்க ஏனைய பகுதி பலகையினால் மூடப்பட்டிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக எண்ணி வைத்தாற்போல் ஐவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அந்த ஐவரும் தங்கள் வயிற்றை நிரப்பிக்கொண்டு சித்தம் போக்குச் சிவம் போக்கு என நடையைக் கட்டி விட்டால்…?ம் கடையில் மாட்டியிருந்த சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தாள் கமலம். மணி ஒன்பரை எனக்காட்டியது. எப்படியும் பத்துக்குள் கடையை மூடிவிடுவார்கள். பிறகு தன் நிலை…? அதை நினைக்கும் பொழுதே கமலத்திற்கு கமலத்திற்குத் திக்கென்றது….. “பேசாமல் வீட்டிற்குப் போய்விடலாமா?” என அவள் மனம் ஏங்கியது. ஆனால் அவள் தன்மானம் முன் வைத்த காலைப் பின் வைப்பதில்லை என்ற தீர்க்கமான முடிவுடன் செயல்பட்டது.

“என்னப்பா தம்பி பில் எவ்வளவுனு சொல்றீயா?” என அந்த உணவுக்கடையில் வேலை பார்க்கும் பையனைப் பார்த்துக் கேட்டாள். “இரண்டு வெள்ளிம்மா” என்ற பையனின் குரலைக் கேட்டுத் தன் மூட்டையில் வைத்திருந்த பண முடிச்சிலிருந்து இரண்டு வெள்ளியை அவனிடம் கொடுத்துவிட்டு நடை கட்டின கமலம் சந்து முனையைக் கடந்து, இடது பக்கமாகத் திரும்பிக், குறுக்கே மலைப்பாம்பு போல நீண்டு கிடக்கு ஜாலான்பிசார் சாலைக்கு வந்தாள். மேற்கொண்டு எங்கே செல்வது என்று தெரியாமல் அந்த நீண்ட சாலையையே வெறிச்சோடி பார்த்தாள். அவள் எதிரே பேருந்து நிலையம் ஒன்று தென்பட்டது. நேரே பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தாள். அந்தப் பேருந்து நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. தொடர்ந்தாற்போல் பேருந்துகள் வந்து கொண்டே இருந்தன. அதில் சிலர் ஏறுவதும், பலர் இறங்குவதுமாக இருந்தனர்.

“எங்கே செல்வது? எந்த எண் கொண்ட பேருந்தை எடுப்பது?” எனத் தெரியாமல் பேருந்து நிலையத்தில் போடப்பட்டிருந்த இருக்கையில் தொப்பென்று அமர்ந்தாள் கமலம். அவள் நெஞ்சு துன்பச்சுமை தாங்காது கனத்தது. அவள் இதயத்தைத் திடீரென்று இருள் சூழ்வதை உணர்ந்தாள் கமலம். சில்லென்று காற்று அவள் உடலை வருடிச் சென்றது. மழை வருவதற்கான அறிகுறிகள் மிகத் தெளிவாகத் தெரிந்தன. சிறிது நேரத்தில் மழையின் சாரலை அவள் உணர்ந்தாள். பேருந்து நிலையத்திற்கு வெளியே நின்றவர்கள் இப்பொழுது உள்ளே நிற்க முனைந்தனர். ஒரு சிலர் கனத்த மழை கொட்டுவதற்குள் வீட்டை அடைந்துவிட வேண்டும் என்ற ஆவலில் வாடகை உந்து வண்டியை எடுக்கத் தயாராகினர். உங்களுக்கு முன் நான் முந்திவிட்டேன் என்ற பேய்ச் சிரிப்புடன் மழை கொட்டோகொட்டென்று கொட்டியது.

“தாத்தா வீட்டுக்குப் போலாம் வா தாத்தா” என்ற மழலையின் குரல் கேட்டு குரல் வந்த திக்கை நோக்கினாள் கமலம். அங்கே ஐந்து வயது நிரம்பாத சிறுமி தன் தாத்தாவின் அரவணைப்பில் குளிர் தாங்காமல் போராடிக் கொண்டிருந்தாள். “மழை விடட்டும் சுகுணா. நாம போயிடலாம்” என அவளுடைய தாத்தா அவளைச் சமாதானம் செய்து கொண்டிருந்தார். ஆனால் குழந்தை மசிவதாகத் தெரியவில்லை. “பரவாயில்லை போலாம் தாத்தா” என வீட்டிற்குப் போவதிலேயே குறியாக இருந்தாள் சிறுமி. “இங்கே பாரும்மா சுகுணா, கொட்டுற மழையிலே நீ நனைஞ்சா உனக்குச் சீக்கு வரும். அப்புறம் ஆஸ்பத்திரிக்குப் போகணும். டாக்டர் உனக்கு ஊசி போடுவாரு” என்ற தாத்தாவின் பதிலைக் கேட்டு சிறுமி, ”ஊசி வேணாம் ஊசி வேணாம்” என்றபடி கட்டிப்பிடித்தாள். “அப்போ நான் சொல்றபடி கேட்கிறீயா? மழை நின்னுதோட நாம வீட்டுக்குப் போகலாம்’ எனத் தாத்தா பேத்தியிடம் கூறியதும் சிறுமி பெட்டிப் பாம்பாக அடங்கினாள். அவள் கன்னத்தில் செல்லமாக முத்திரை ஒன்றைப் பதித்தார் தாத்தா.

மழை இலேசாக விட்டது. தாத்தா தன் கால் கட்டைப் பையில் வைத்திருந்த கைக்குட்டையை வெளியே எடுத்தார். அதை விரித்து அதன் நான்கு முனைகளில் ஒரு முடிச்சு போட்டார். இப்பொழுது கைக்குட்டை சிறுமியின் தலையில் தொப்பி போல் அலங்கரித்தது. பேருந்து நிலையத்தை விட்டுத் தாத்தா தன் பேத்தியுடன் நடந்தார். இந்தத் தள்ளாத வயதிலும் தான் -மழையில் நனைந்து நோய்க்கு ஆளானாலும் தன் பேத்திக்கு நோய் வந்திடக் கூடாதே என்று நோக்கில் அவர் பேத்தியை அரவணைத்தபடி சென்ற காட்சி கமலத்தின் மனத்தில் அவர்பால் கழிவிரக்கத்தை ஏற்படுத்தியது.

‘அடப்பாவி மனுசா! இப்படிப் பொத்திப் பொத்தி வளக்கிறீயே? நாளைக்கு அவள் உன்னை எடுத்தெறிஞ்சிப் பேசப் போறா? அப்பத்தான் உன் பாசத்தைக் கொட்டினதுக்காக நீ வருத்தப்படப் போறே? ம்…. பொழைக்கத் தெரியாத மனுஷா!’ எனக் கமலம் தனக்குள் சொல்லிக் கொண்டாள். உனக்கெதற்கு இந்த வீண் வேலை? மத்தவங்க எப்படிப் போனால் உனக்கு என்ன என அடுத்த நிமிடம் அவள் தன்னையே சமாதானம் செய்தவளாய் மற்றவர் விஷயத்தில் தலையிடுவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாள்.

அவள் கண்களிலிருந்து கண்ணீர் மட்டும் அந்த மழையின் சாரலை விட மிக வேகமாகப் பொழிந்தது. அந்தக் கண்ணீரைக் கட்டுப்படுத்த படுத்தச் சக்தியற்றவளாய் அவள் வெறிச்சென்று வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பார்வை வானத்தை நோக்கி இருந்ததே தவிர உள்ளமோ தான் கடந்து வந்த பாதையை எண்ணி அசை போட்டுக் கொண்டிருந்தது.

கமலத்திற்கு மணமாகிச் சரியாக ஆறு ஆண்டுகள் தன் கணவனோடு வாழும் பிராப்தம் இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். ஆம்! கார் விபத்து ஒன்றில் அற்ப ஆயுசில் கமலத்தின் கணவன் சந்திரன் காலனுக்குப் பலியானான். அவன் மறைவுக்குப் பிறகு அவன் நினைவாக விட்டுச் சென்ற குலக்கொழுந்தான தியாகுவை வளர்க்க அவள் பட்டபாடு அப்பப்பா! சொல்லில் அடங்காது.

நாலு வீட்டில் பத்துப் பாத்திரம் தேய்த்து வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்து பிழைப்பு நடத்தி, அவள் தன் மகனை வளர்த்து ஆளாக்கினாள். பிள்ளையைப் பெற்று வளர்த்து ஆளாக்குவது பெரிய காரியம் அல்ல. அவனுக்குச் சமுதாயத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும் அளவுக்கு உயர் கல்வி வரை படிக்க வைப்பது பெரிய காரியம் அல்லவா?

“ஏன்டியம்மா கமலம் உனக்கு ஏன் இந்த அகால ஆசை? பஞ்சப் பரதேசியான நமக்கு இந்த வீண் ‘ஆசையெல்லாம் கூடாதும்மா. ஏதோ எழுதப் படிக்க நாலு எழுத்துத் தெரிஞ்சியிருந்தா போதாதா? அதுக்காக வெளி நாடெல்லாம் போய்ப் படிக்க வைக்கணும்னு நீ ஆசைப்படலாமா? முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா? என அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாரும் அவள் படும் பாட்டைக் கண்டு துக்கம் விசாரிக்க வரும்போதெல்லாம், “என் வாழ்க்கையைத் தான் அந்த ஆண்டவன் அற்ப வயசுலேயே பறிச்சிட்டான். என் பையனாவது நல்லா இருக்கட்டும். அந்தச் சாமியோட அருளால் அரசாங்கம் உபகாரச் சம்பளம் கொடுத்து அவனை மேல் நாட்டுல படிக்கச் சந்தர்ப்பம் தருது. இதை தடுக்கலாமா? நீங்களே சொல்லுங்க?” என எதிர் கேள்வி கேட்டு வந்தவர்களை வாயடைக்கச் செய்துவிடுவாள் கமலம்.

பிறகு என்ன? என்ன? கமலத்தின் அயராத உழைப்பும் அரசாங்கத்தின் உபகாரச் சம்பளமும் தியாகுவை மளமளவென்று உயரச் செய்தது. தியாகு பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினான். ‘சாதாரண பத்துப் பாத்திரம் தேய்த்தவள் மகனுக்கு வந்த வாழ்வைப் பாரு…” என்று ஊரார் மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவுக்குத் தியாகுவின் தரம் உயர்ந்தது. இந்த உயர்வு கமலத்தின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

கடல் போல் வீடு, கப்பல் போல் கார், கூப்பிட்ட குரலுக்கு வேலையாள் எனக் கமலம் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தாள். “என்னங்க… நாம அடுத்த வேளை கஞ்சிக்கு வழி இல்லாத போதெல்லாம் நீங்க உயிரோட இருந்தீங்களே? இப்போ நான் சந்தோஷமா இருக்கேன். வசதியா வாழ்றேன். அதை அனுபவிக் நீங்க இல்லாம போயிட்டீங்களே?’ என அடிக்கடித் தன் கணவர் படத்திற்கு முன் கண்ணீர் ததும்ப நிற்கும் போதெல்லாம் தான் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி என எண்ணிப் பூரித்தாள் கமலம்.

காலம் எப்பொழுதும் ஒரே சீராய் அமைவதில்லை. இரவுக்குப் பின் பகலும், இன்பத்திற்குப் பின் துன்பமும், வெண்ணிலவுக்குப் பின் கதிரவனும் தோன்றுவது இயற்கைதானே? கமலத்தின் வாழ்க்கையிலும் தென்றலுக்குப் பின் புயல் வீசத் தொடங்கியது. தியாகுவின் வாழ்க்கை முழுமை பெற வேண்டும் என்ற நோக்கில் அவனுக்கு ஒரு கால்கட்டை போட அந்தத் தாய் உள்ளம் துடித்தது. தன் எண்ணத்தை மகனிடம் சொன்னபோது, “இது விஷயமாக நானே உங்களிடம் பேசலாம் என்றிருந்தேனம்மா… வந்து… வந்து…” எனத் தியாகு தடுமாற்றத்தைப் போக்க “நீ யாரையாவது காதலிக்கிறாயா தியாகு?’ என வினாத் தொடுத்தாள் கமலம். இதைச் சற்றும் எதிர்பார்க்காத தியாகு “ஆமாம்மா நான் எங்கூட வேலை பார்க்கிற சகுந்தலாவை விரும்புறேன். ஆனா உங்க சம்மதத்தோட தான் எங்க கல்யாணம் நடக்கணும்மா. அதுதான் என்னோட ஆசை…” என எண்ணத்தை மறைக்காமல் கூறினான் தியாகு.

பிறகு என்ன? நல்லதொரு நாளில் இரு வீட்டாரின் சம்மதத்தோடு தியாகு சகுந்தலா திருமணம் இனிதே நடந்ததேறியது. சகுந்தலாவைப் பார்த்த மாத்திரத்திலேயே தனக்கும் அவளுக்கும் ஆகாது எனக் கமலம் உணர்ந்திருந்தாலும் மகனின் ஆசைக்குத் தடங்கலாக இருக்கக் கூடாதே என்ற உயர்ந்த நோக்கில் திருமணத்திற்குச் சம்மதித்தாள். அவள் நினைத்தபடியே சகுந்தலாவின் போக்கு அமைந்திருந்தது.

புகுந்த வீட்டிற்கு வந்த கொஞ்ச நாளிலேயே அவள் தன் அதிகாரத்தைக் காட்டத் தொடங்கினாள். முதலில் இதையெல்லாம் ஒரு பெரிய விஷயமாகக் கமலம் எடுக்கவில்லை. கமலத்தின் அமைதியான போக்கு, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, சகிப்புத் தன்மை இவையாவும் சகுந்தலாவின் ஆட்டத்திற்கு மேலும் ஜதி சேர்த்தது. ”வேண்டா பெண்டாட்டியின் கை பட்டாலும் குற்றம். கால் பட்டாலும் குற்றம்” என்பார்களே அதுபோலக் கமலம் என்ன செய்தாலும் அது சகுந்தலாவின் பார்வைக்குக் குற்றமாகப்பட்டது. தவறாகத் தோன்றியது.

தனக்கு இழைக்கப்படும் கொடுமைகளைத் தியாகுவிடம் சொல்ல வேண்டும் என்று தான் கமலமும் ஒவ்வொரு நாளும் நினைப்பாள். ஆனால் வீண் குழப்பமும் சண்டையும் ஏற்படுவதை அவள் விரும்வில்லை. அத்துடன் இப்பொழுது தியாகு இருக்கும் நிலையில் அவள் என்ன சொன்னாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்கிற்கு ஒப்பாகும் என அவள் நன்கு அறிந்திருந்தாள். ஆம்! தியாகு முன்பு போல இல்லை. ‘தாய்க்குப் பின் தாரம்’ என்பதை அவன் அறிந்திருந்தான். அதனால்தான் தாயின் கடமை முடிந்துவிட்டது. இனி, தாரத்தின் பணியே தனக்குத் தேவையானது என்று உணர்ந்தவனாய் எப்போதும் “சகு… சகு…” என அவளையே வலம் வந்தான்.

இவ்வேளையில்தான் சகுந்தலா கருவுற்றிருக்கும் இனிப்பான செய்தியைத் தியாகு கமலத்திடம் கூறினான். தனக்குப் பேரன் பிறக்கப் போகிறான் என்ற பூரிப்பில் சகுந்தலா செய்த அத்தனைக் கொடுமைகளையும் கமலம் மறந்தாள். வேலைக்குச் சென்ற சகுந்தலா கருவுற்ற பிறகு அவளை வேலைக்கு அனுப்ப மறுத்தான் தியாகு. இதனால் சகுந்தலா வீட்டில் முழு நேரமும் இருந்தாள். அத்துடன் அவளுடைய கொடுமைகளும் எல்லை மீறிச் சென்றன. தன் கணவர் ஒருவர் தான் சம்பாதிக்கிறார் என்பதற்காக வீட்டு வேலைக்கு வைத்திருந்த ஆளை நிறுத்திவிட்டு அந்த வேலைகளைக் கமலம் கவனிக்கும்படி கட்டளையிட்டாள். பேரனின் முகத்தைக் காணும் ஆவலில் அதையெல்லாம் ஒரு பெரும் பொருட்டாகக் கமலம் கருதவில்லை.

அவள் ஆவலோடு காத்திருந்த அந்த நாளும் வந்தது. சகுந்தலா ஒரு மகனை ஈன்றெடுத்தாள். தன் பெயர் சொல்ல ஒரு மகன் பிறந்துவிட்டான் என்ற பூரிப்பில் தியாகு தலை கால் தெரியாமல் ஆடினான். சின்ன சின்ன பிஞ்சு விரல்கள், சிவந்த முகம், அகன்ற நெற்றி, தந்தையைப் போன்ற சுருள் சுருளான தலைமயிர். காண்போர் நெஞ்சைக் சுண்டி இழுக்கும் அழகு. மொத்தத்தில் பேரனைப் பார்க்கும் போது சின்னப் பிள்ளையில் தியாகுவைப் பார்ப்பது போல் இருந்தது கமலத்திற்கு, அவனை அப்படியே மார்போடு அள்ளியணைத்து முத்த மழை சிந்த வேண்டும் என அந்தப் பேதை உள்ளம் துடிதுடித்தது.

ஆனால்… ஆனால்… அதற்குக் கொஞ்சம் கூட இடம் கொடுக்காதவளாய்ச் சகுந்தலா பத்ரகாளி போல் தடையாக இருந்தாள். ”பேரனைக் கொஞ்சம் என் கையில் கொடும்மா சகுந்தலா…” என ஏதோ ஓர் அசட்டுத் தைரியத்தில் கமலம் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய மருமகளிடம் கேட்டாள். “ம் கொடு சுகு…” எனத் தியாகு குரல் எழுப்ப, வேண்டா வெறுப்பாக மகனைக் கமலத்திடம் கொடுத்தாள் சகுந்தலா. அப்பொழுதுதான் முதன்முதலாகப் பேரனைக் கையால் தூக்கும் கமலம் அப்படியே அவனை மார்போடு அள்ளி அணைத்துக் கொண்டாள். அவள் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

“ஏனம்மா அழுறீங்க?” என அவளைப் பார்த்துக் கனிவோடு கேட்டபோது இது, தன் பழைய மகனை மீண்டும் பார்ப்பது போல் இருந்தது. ஆம்! எத்தனையோ மாதங்களுக்குப் பின் தன் மகன் தன்னை அன்போடும் பாசத்தோடும் கவனிப்பது போல் அவளுக்குத் தோன்றியது. “ஒன்ணுமில்லைப்பா, பழைய ஞாபகம்: உங்கப்பா உயிரோடு இருந்திருந்தா…” என ஏதோ சொல்லி மழுப்பினாள். “பழையதை நினைச்சி மனசைக் குழப்பிக்காதீங்கம்மா, பேரன் வந்துட்டான்ல. இனி உங்களுக்கு என்ன கவலை?” எனத் தியாகு உற்சாகமூட்டிய விதத்தில் கமலத்திற்குப் பழைய தெம்பு மீண்டும் உண்டான எழுச்சி தோன்றியது.

மற்ற யாருக்காக இல்லாவிட்டாலும் தன் பேரனுக்காக வாழ வேண்டும் என முடிவெடுத்தாள். தன் துயர் பகலவனைக் கண்ட பனிபோல் மறைந்துவிடும் என எதிர்பார்த்தாள். அவள் எதிர்பார்த்த எதிர்பார்ப்புகள் அத்தனையையும் சகுந்தலா ஒரு நொடியில் தவிடுபொடியாக்கினாள். பேரன் பார்த்திபனைக் கமலத்திடம் அண்ட விடாமல் தானே பார்த்துக் கொண்டாள். தியாகு வீட்டில் இருக்கும் போது தான் அவள் தன் பேரனைக் கொஞ்சும் வாய்ப்பு அவளுக்குக் கிட்டும். அவன் தலை மறைந்து விட்டால் சகுந்தலா தன் சுபாவத்தைக் காட்டிவிடுவாள்.

எவ்வளவு நாளைக்குத்தான் கமலம் பொறுமையுடன் இருக்க முடியும். அவள் பொங்கி எழும் காலமும் வந்தது. ஆம்! கமலம் கடும் நோய்க்கு ஆளானாள். வயதானாலே பல வித நோய் உடலில் குடி கொள்வது இயற்கை தானே! வயது மட்டுமல்ல மனத்தில் ஏற்பட்ட கீறல்களும் கமலத்தைப் படுத்த படுக்கையில் தள்ளியது. மருத்துவக் கண்காணிப்புக்குப் பிறகு அவள் மெல்ல மெல்ல உடல் தேறினாள்.

ஆனால் இதையே சாக்காக வைத்துக்கொண்டு சகுந்தலா தன் மகனை அவளிடம் அண்ட விடவே தயங்கினாள். இந்த வேளையில் தான் சகுந்தலாவைத்தேடி அவள் தோழி வீட்டிற்கு விஜயம் செய்தாள். கமலத்தின் நோய் பாதிப்பால் ஏற்பட்ட இருமலும் அவள் தோழிக்கு அருவருப்பை ஏற்படுத்தியது போலும். “ஏன் சகுந்தலா இந்த மாதிரி இருக்கிறவங்களை நீ ஏன் இன்னும் வீட்டிலேயே வைச்சிருக்கே. ஏதாவது ஆஸ்பத்திரியிலே வைச்சி அவங்களைக் கவனிக்கக் கூடாதா ? கைக்குழந்தை இருக்கும் வீட்டில் இப்படியா சுத்தமில்லாமல் இருமி நோய்க்கிருமிகளைப் பரப்புவது?’ எனச் சொன்னாள் என்பதற்காக அவள் போன பிறகு என் தோழி முன் என்னை அவமானப்படுத்தி விட்டீர்கள் எனக் கூறி ஓவென்று அழுது அன்றைய பொழுதைப் போர்க்களமாக்கினாள்.

வீடு திரும்பிய தியாகுவிடம் இல்லாததும் பொல்லாததும் கூறி அவன் மனத்தில் அவள் சொல்வதுதான் நியாயம் என்ற நிலையை உருவாக்கினாள். “ஏனம்மா நீங்களாவது கொஞ்சம் இங்கிதமா நடந்திருக்கக் கூடாதா? அவ தோழி எதுக்க அப்படியா சிக்காளியா நடந்துக்கிறது… சேச்சே! வயசானாலே இப்படித்தான். நல்லது எது? கெட்டது எதுனு தெரிஞ்சிக்க மாட்டேன்குது…” எனத் தியாகு வெறுப்புடன் ஏதேதோ சொல்லக் கமலத்தின் பேதை உள்ளம் சுக்கு நூறாக உடைந்தது.

“அன்றைக்குக் கூடப் பால் சூடா இருக்கிறதா என்கிறதைப் பார்க்க வாயில வைச்சி அதைக் குடிச்சுப் பார்த்துட்டுப் பார்த்திபன் கிட்ட தராங்க. சீக்கா இருக்கிற இந்தச் சமயத்துல இப்படிச் செய்தா பையனுக்கும் சீக்கு ஒட்டிக்கும்ல. கொஞ்சம் கூட நாகரீகம் தெரிய மாட்டேன்குது…” என வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல அடுக்கடுக்காகப் பல குற்றங்களைக் கமலத்தின் மேல் சுமத்தினாள் சகுந்தலா.

“போதும் நிறுத்தும்மா சகுந்தலா. நானும் உன்னைப் போல ஒரு பிள்ளைக்குத் தாய்தான். என் எச்சில் சோற்றில் வளர்ந்து ஆளானவன் தான் உன் புருஷன். இந்தக் கார், பங்களா சொகுசான வாழ்க்கை, உயர்ந்த அந்தஸ்து இதுக்கெல்லாம் வித்திட்டது இந்த நோயாளிதானம்மா. நான் இல்லாட்டா இப்போ நீ வாழ்றீயே அந்த வாழ்க்கை இல்லை; நீ பொத்திப் பொத்தி வளர்க்கிறீயே இந்த மகனும் இல்லை. அதைப் புரிஞ்சிக்காம என்னைச் சீக்காளி, அருவருப்பானவனு வாய்க்கூசாமல் சொல்றீயே? போதும்மா. உன்னோட நான் அணுவணுவா படுற நரக வேதனை எனக்குப் போதும். என் கடைசி காலத்திலேயாவது என்னை நிம்மதியா போக விடு…” எனத் தன் உள்ளக்குமுறலை வார்த்தையால் கொட்டினாள் கமலம்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத சகுந்தலா மலைத்துப் போனாள். தியாகு வாய் பேசாமல் அப்படியே நின்றான். இனியும் அவர்கள் முகத்தில் விழிக்கக் கூடாது என்ற நோக்கில் அவ்விடத்தை விட்டுத் தன் அறைக்குச் சென்றாள் கமலம். அப்படி அவ்விடத்தை விட்டு அகன்றவள்தான் இனி அவர்கள் நிழலிருந்து விலக வேண்டும் என்று தீர்மானித்திருந்தவளாய் வீட்டை விட்டு யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறி இன்று போக்கற்றவளாய் வீதியில் நின்றாள்.

”அம்மா இது உங்களுடைய மூட்டையா?” எனக் குரல் கேட்டுத் தன் கடந்த கால நினைவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாள் கமலம்.

“என்ன தம்பி… என்ன கேட்டீங்க?” எனச் சுயநினைவு திரும்பிய அவள் எதிரில் நின்று கொண்டிருக்கும் உருவத்திடம் கேட்டாள். “இல்லை இந்தத் துணி மூட்டை கீழே கிடந்திருந்தது. அதுக்குப் பக்கத்துல நீங்க இருந்தீங்களா? அதான் கேட்டேன்” என்றபடி ஒரு துணி மூட்டையை நீட்டினான். “ரொம்ப நன்றிப்பா தம்பி” என நன்றிப் பெருக்கோடு அதைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டாள்.

சுற்றும் முற்றும் பார்த்தாள். பேருந்து நிலையம் மயான அமைதி பெற்று விளங்கியது. தன்னைத் தவிர அவ்விடத்தில் ஒரு ஈ காக்கா கூட இல்லை. எங்கே செல்வது? யாரிடம் தஞ்சம் புகுவது? அதுவும் இந்த இருட்டு வேளையில் யார் கதவைத் தட்டுவது? அடுக்கடுக்கா அவள் மனத்திலிருந்து கேள்வி எழுந்ததே தவிர விடை காண வழி தெரியாமல் தவித்தது.

“என்னங்க நான் அதிர்ஷ்டசாலின்னு ஒவ்வொரு நாளும் நினைச்சிப் பூரிச்சியிருக்கேன். உண்மையிலேயே நான் துரதிர்ஷ்டசாலிங்க. இல்லைனா இந்தக் கண்றாவியயெல்லாம் பார்க்கணும்னு என் தலையில் எழுதி இருக்குமா? கை நிறைய சம்பாதிக்கிற மகன், அவனை ஆட்டிப் படைக்கிற மருமகள், என் சந்ததினு சொல்ல பேரன் இவ்வளவு பேரும் இருந்தும் நான் ஒருவரும் இல்லாத அனாதையாய்ப் போக இடம் தெரியாத பேதையாய் இருந்திருப்பேனா? இதையெல்லாம் பார்க்கக் கூடாதுனுதான் நீங்க எனக்கு முன்னாடியே போயிட்டீங்களா?” எனத் தேம்பி தேம்பி அழுதாள்.

“நான் ஏன் அழ வேண்டும்? பெத்தவங்களை வச்சிக் காப்பாத்த முடியாத தொடை நடுங்கிகளும், பெரியவங்களை மதிக்கத் தெரியாத அரக்கிகளும் சந்தோஷமா இருக்கும்போது நான் ஏன் அழுது என் வாழ்க்கையை வீணடிக்கனும்? ஆண்டவன் இந்தக் கையையும் காலையும் நல்லா படைச்சிருக்கான். அதுல வலு இருக்கிற வரைக்கும் நானும் கௌரவமா வாழ முடியும்? அவர் என்னை விட்டுப் போனப்போ நான் இப்படி அழுது மூலையிலே இருந்திருந்தா என் மகனை ஆளாக்கி இருக்க முடியுமா?” எனத் தன்னையே சமாதானம் செய்து கொண்டாள் கமலம்.

அவள் கணவன் சந்திரன் அவளை விட்டுப் போனபோது ஏற்பட்ட அதே தெம்பு – அதே தைரியம் – அதே வைராக்கியம் மீண்டும் அவள் உள்ளத்தில் துளிர்வதைப் போன்றதோர் உணர்வு. ஏதோ ஒரு தீர்மானத்திற்கு வந்தவளாய் அந்தத் தள்ளாத வயதிலும் பீடு நடை போட்டாள் கமலம்.

– தேடிய சொர்க்கம், முதற்பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *