வார இறுதி நாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 1, 2024
பார்வையிட்டோர்: 564 
 
 

அலுவலகம் முடிந்து வெளியே வந்த பார்கவிக்கு மனம் முழுக்க ஒரு வித சந்தோஷமான மன நிலை இருந்தது. காரணம் அவளுக்கே தெரியவில்லை. ஒரு வேளை நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் இருக்கலாம். கொஞ்சம் மெதுவாக எழுந்திருக்கலாம், குழந்தைகளுக்கும் விடுமுறைதான். அவருக்கும் லீவு. அரக்க பரக்க சமையல் செய்ய வேண்டியதில்லை. இதை நினைத்தவுடன் சனிக்கிழமை மாலை என்பது மனதுக்குள் ஒரு மகிழ்ச்சியே தரும் விஷயமாகத்தான் படுகிறது.

இருந்தாலும் பார்கவிக்கு ஒரு வருத்தமும் கூடவே வந்தது. அவளது படிக்கும் காலத்தில் எல்லாம் சனிக்கிழமை சோகமாகத்தான் இருக்கும். காரணம் தோழிகளை ஒரு நாள் பார்க்காமல் போய்விடுகிறதே !

எத்தனை எத்தனை விஷயங்கள் ! வாய் ஓயாத பேச்சுத்தான், பள்ளி ஆகட்டும், கல்லூரி ஆகட்டும் வாய் ஓயாமல் பேசுவதற்கு தோழிகள், தோழிகள், இன்று அத்தனையும் போய் இந்த குடும்பம் என்ற வலைக்குள் மாட்டிக்கொண்டு, ஒவ்வொரு நாளும் அடித்து பிடித்து ஓடி….இனிமேல் அந்த மகிழ்ச்சிகரமான வாழ்க்கை கிடைக்கவே கிடைக்காதா? மனதுக்குள் இந்த ஏக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. இப்படியே போனால் என்னாவோம் என்ற இலேசான பயமும் அவள் மனதில் எழுந்தது.

பேருந்து நிறுத்தத்திற்கு வந்தவள் சிறிது யோசித்தாள். மணி ஆறுக்கு மேல் இருக்கலாம், மெதுவாக நடந்தாலும் ஏழு மணிக்குள் வீட்டுக்கு போய் விடலாம். அப்படி ஒன்றும் அவசரமில்லை. அவரும் மாலை வீட்டுக்கு வந்தவுடன் காப்பி போட்டு குழந்தைகளுடன் குடித்திருப்பார். மெல்ல நடக்கலாம் மனம் நினைப்பதற்குள் கால்கள் அவளை இழுத்துக்கொண்டு வீடு நோக்கி நடந்தன.

பத்து நிமிடம் நடப்பதற்குள் அவளுடைய மகிழ்ச்சியான மனநிலையையும் மீறி எரிச்சல் படும்படி ஒரு சில இடங்களில் வழியை மறைத்துக்கொண்டு ஆண்கள் பேசிக்கொண்டும், முறைத்துக்கொண்டும் நின்றனர். அல்லது இளைஞர்கள் வண்டியை சத்தமாய் முறுக்கிக்கொண்டு நடப்பவர்களுக்கும், முதியவர்களுக்கும் மனதில் திகிலை கிளப்பிக்கொண்டு அங்கும் இங்கும் பறந்ததையும் பார்த்தாள்.

இன்னும் அரை மணி நேரம் நடக்க வேண்டும், மெல்ல நடையை துரிதப்படுத்தினாள். யாரோ அவள் பின்புறத்தை தொட்டது போல் உணர்ந்தவள் சட்டென திரும்பினாள். எதிரில் ஒரு சிறு பெண், வயது பத்திலிருந்து பனிரெண்டுக்குள் இருக்கலாம், அக்கா சூடா வடை, பஜ்ஜி இருக்குதுக்கா, வாங்கிக்குங்கக்கா, அவளின் பார்வை வாங்க சொல்லி கெஞ்சியது.

முதலில் தன்னை தொட்டு அழைத்தற்கு கோபப்படபோனவள் அந்த பெண்ணின் தோற்றமும், அவளின் வியாபார கெஞ்சலையும் பார்த்து சட்டென மனநிலையை மாற்றினாள். வேண்டாம்மா. அவளுக்கு வெளியில் விற்கும் திண்பண்டங்களை குழந்தைகள் வாங்குவதற்கும் அனுமதிக்கமாட்டாள். அப்படி இருக்கும்போது இவளே இதை வாங்கிக்கொண்டு போனால்?

இவள் வேண்டாம் என்று சொல்லவும் அந்த பெண்ணின் கண்களில் தெரிந்த நம்பிக்கை கலைந்தது அவள் கண்களில் தெரிந்தது. அக்கா சூடா இருக்கும்கா, பாருங்க, நான் எங்க சில்வர் தூக்கு போசிலதான் கொண்டு வந்திருக்கேன். அவள் கையில் வைத்திருந்த இரண்டு மூடியிட்ட சில்வர் தூக்குகளை கீழே வைத்து திறந்து காட்டினாள்.

ஆவி பறக்க பஜ்ஜியும், போண்டாவும் இருந்தன. இருந்தாலும் வேண்டாம் என்று புத்தி சொன்னாலும் மனசு அவளை விட அந்த பெரிய தூக்கு வாளியும், அவள் வாங்க சொல்லி கெஞ்சிய பார்வையும் இவள் மனதை அசைத்தன. தன்னுடைய குழந்தைகளின் வயதுதான் இதற்கு இருக்கும், அதற்குள் என்ன கஷ்டமோ?

மனம் இறுதியாக ஜெயிக்க சரி பத்து கட்டி கொடும்மா, இதுல அஞ்சு, அதுல அஞ்சு, தன் கைப்பையின் பக்க அறைக்குள் அப்படியே கை வைத்து ஜிப்பை திறந்து பணம் தட்டுப்படுகிறதா என்று துழாவினாள். காலையில் கிளம்பும்போது அந்த அறைக்குள் ஒரு ஐம்பது ரூபாய் வைத்த ஞாபகம் இருக்கிறது.

நீ படிக்கிறயா? ஆமாக்கா, ஏழாம் கிளாஸ் படிக்கிறேன், அந்த பெண் பெருமையுடன் பேசிக்கொண்டே இரண்டையும் தனித்தனியாக வைத்து பொட்டலாமாக்கி கொடுத்தாள்.

இவள் பணம் எடுத்து அவள் கையில் கொடுக்க அவள் அதை வாங்கிக் கொண்டு இருங்கக்கா, என்று அவள் வைத்திருந்த பைக்குள் துழாவி ஒரு நோட்டை எடுத்து இந்த பொட்டலங்களுடன் சேர்த்து கொடுத்தாள். அதற்குள் அவளை கை தட்டி யாரோ அழைக்க, அவள் வர்றேங்க்கா..சொல்லிக்கொன்டே அழைத்தவளை நோக்கி விரைந்தாள்.

இப்பொழுது அந்த இரண்டு பொட்டலங்களையும் வாங்கியவள் அதை எங்கு வைப்பது என்று தடுமாறினாள். இப்பொழுது அவளுக்கு அந்த பெண்ணின் மீது கோபம் வந்தது. இதுதான் இந்த மாதிரி தெருவுல வாங்க கூடாது, பாரு ஒரு பை கூட வச்சு கொடுத்திருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் மனதுக்குள் நினைத்துக்கொண்டே எல்லோரும் பார்க்கிறார்களே என்ற சங்கோஜத்துடன் அந்த பொட்டலங்களை கையில் ஏந்திக்கொண்டு நடந்தாள்.

அக்கா..அக்கா..சத்தம் வர அந்த பெண் கையில் ஒரு சிறிய பையுடன் அந்த இரு போசிகளையும் தூக்கிக்கொண்டு ஓடி வந்தாள். மன்னிச்சுக்குங்க, அக்கா, அதுக்குள்ள அந்த அக்கா கூப்பிட்டுட்டாங்க, இந்தாங்க, இதுக்குள்ள போட்டு கொண்டு போங்க, கையில் பையை கொடுத்து விட்டு அடுத்தவரை நோக்கி பறந்தாள்.

சே பாவம் அந்த பெண்ணை கொஞ்ச நேரத்தில் திட்டி விட்டோம். ஐந்து விநாடி சிரமத்துக்கே நமக்கு இவ்வளவு கோபம் வருகிறது, பாவம் இந்த குழந்தை தூக்க முடியாமல் இரண்டு தூக்கு போசிகளையும் தூக்கிக்கொண்டு ஒவ்வொருவரிடமும் கெஞ்சிக்கொண்டு..மனதில் துயரம் சூழ கையில் இருந்த பொட்டலங்களை அந்த பைக்குள் போட்டு நடக்க ஆரம்பித்தாள்.

அம்மா கையில் கொண்டு போயிருந்த பலகாரங்களை கண்டு குழந்தைகளுக்கு ஒரே ஆச்சர்யம், ஹை..என்று துள்ளி குதித்து பொட்டலங்களை எடுத்து பிரிக்க, இவள் மெதுவா..மெதுவா..போய் ஆளுக்கு ஒரு தட்டை எடுத்து பிரிச்சு வையுங்க, அப்பாவுக்கு இரண்டு எடுத்து கொடுங்க, சொல்லி விட்டு முகம் கை கால் கழுவ பின்புறம் சென்றாள்.

எல்லா வேலைகளும் முடித்து அந்த பையை எடுத்து துவைக்க போடலாம் என்று எடுத்தவள் அதை எடுத்து கவிழ்க்க அதிலிருந்து ஒரு பேப்பர் விழுந்தது. அதை எடுத்து பார்க்க..ஒரு ஐம்பது ரூபாய்த்தாள்..

அட அந்த பெண் இந்த பலகாரங்களுக்கு நான் கொடுத்த பணத்துக்கு மிச்சம் கொடுத்தது. நான் கொடுத்தது ஐம்பது ரூபாய், அவள் எனக்கு மிச்சமாய் கொடுத்தது வேறோரு ஐம்பது ரூபாய். போச்சு..அவளுக்கு மிகப்பெரிய நட்டம் ஏமாந்து போய் கொடுத்திருக்கிறாள். நாமும் அதை பார்க்காமல் வாங்கி வந்து விட்டோம். மனசு முழுக்க குற்ற உணர்ச்சி பெருகிறது. சே..பாவம் அவளுக்கு கிடைக்க இருந்த ஐம்பது ரூபாய் லாபம் இப்பொழுது என்னிடம். என்னை பற்றி என்ன நினைத்திருப்பாள்? நினைக்க நினைக்க அவளுக்கு மனசு முழுக்க குற்ற உணர்ச்சி.

அன்று இரவு அவளுடைய மகிழ்ச்சி குற்ற உணர்ச்சியாகவே இருந்தது. மறு நாள் ஞாயிறு வரைக்கும் அப்படியே இருந்தது. எப்படியோ திங்கள் வழக்கம்போல அடித்து பிடித்து குழந்தைகளை அனுப்பி விட்டு கணவனிடம் சொல்லிக்கொண்டு கிளம்பியவளிடம் ஏம்மா சனிக்கிழமை ஐம்பது ரூபாய் கேட்டியேன்னு, சில்லறையா இல்லாம நூறு ரூபாய் நோட்டு ஒண்ணை கொடுத்தேன். அதை அவசரமா வாங்கி பேக்குல செருகிட்டு போனே. அது இருக்கா இல்லை செலவாயிடுச்சா? கேட்டவன் மனைவியின் கோபத்தையும், அதனால் அவள் “வள்” என்று எரிந்து விழுவாள் என்று எதிர்ப்பார்த்தே மெல்ல கேட்டான்.

இந்த கேள்வி உண்மையில் அவளுக்கு ஆத்திரமூட்டும் வகையில் இருந்தாலும், அவளுக்கு கோபம் வரவில்லை. அப்படியானால் அந்த பெண்ணுக்கு நான் நூறு ரூபாய் கொடுத்திருக்கிறேன், பாக்கி ஐம்பதைத்தான் அவள் கொடுத்திருக்கிறாள். அப்பாடி அவள் மனதில் இருந்த குற்ற உணர்ச்சி இருந்த இடம் தெரியாமல் மறைந்திருந்தது.

கணவனிடம் சிரித்துக்கொண்டே ஐம்பது ரூபாயை நீட்டினாள். அவன் தன் மனைவியின் மாறியிருந்த இயல்பை ஆச்சர்யத்துடன் பார்த்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *