கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 6, 2021
பார்வையிட்டோர்: 3,685 
 

வஞ்சனையில்லாத பெரிய உடம்பு அய்யாவுக்கு. மனசும் அப்படித்தேன். வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையோட மீசைய முறுக்கிக்கிட்டு மவராசா கணக்கா அய்யா முன்னால வந்தாகன்னா நாள் முழுக்க வச்ச கண்ணு வாங்காம பாத்துக்கிட்டே இருக்கலாம். உடம்பு குலுங்க அவக சிரிக்கிற சிரிப்ப பாக்கறதுக்கு கோடி கண்ணுதேன் வேணும்! அய்யாவோட வெடிச்சிரிப்பும்.. செவலக்காள கொம்பு சீவின கணக்கா நிமிந்து நிக்க அந்த கொடுவா மீசையும் இன்னும் எனக்குள்ள படமா பதிஞ்சு கெடக்கு.

அவக உசுரோட இருந்தப்ப இந்த வீடு எப்படியெல்லாம் இருந்துச்சு! அவகள பாக்க பேச நெதம் எத்தன பேரு வருவாக போவாக! மொகஞ் சுளிக்காம பெரியம்மாவும் வரவகளுக்கெல்லா காபி தண்ணிய போட்டு கொடுத்துக்கிட்டும் அன்ன ஆகாரத்த அள்ளி படைச்சுக்கிட்டும்ல இருப்பாக! அய்யாவோட சிரிச்சு பேசத்தான் இந்த சனமெல்லா வருதா.. இல்ல அம்மா கையால வக்கனையா சாப்பிட்டு போவலான்னு வருதுகளான்னு தெரியாது. அப்படியே இருந்தாலும் அதுவும் தகுன்னுதா நா சொல்லுதேன். இன்னைக்கு இந்த வூட்டுக்கு மனுச மக்க யாரவது வருதுகளா? அப்படியே வந்தாலும் காபித் தண்ணியெல்லா கொடுக்க வேணாம். வாங்க.. ஒக்காருங்கன்னு அனுசரனையா சிரிச்ச மொகத்தோட பேசவாவது ஆளிருக்கா? கேட்டா அவசர ஒலகம்பாங்க. சுத்தி இருக்கறவககிட்ட நாலு வார்த்த அனுசரனையா பேசதுக்கு கூட நேரமில்லாம அப்படி என்ன அவசரமோ? எத அள்ளிட்டு போவப்போறாகளோ!?

ஆனா, அய்யா அப்படி கெடையாது. நெதம் அஞ்சாறு தடவையாவது எம்முன்னால வந்து நிக்காம என்ன கவனிக்காம இருக்கவே மாட்டாக. தலைய தூக்கி வாரிக்கிட்டு, ரெண்டு சொட்டு எண்ணைய மீசையில நீவிகிட்டு ஒரு பக்க மீசைய முறுக்குன மாதிரி என்னைப்பாத்து அவக கண்ணடிக்க, அவகள பாத்து நா கண்ணடிக்க, “ஒங்களுக்கு வேற சோலியே இல்லயா..”ன்னு பெரியம்மா எங்கள பாத்து செல்லமா மொறைக்க..

ம்ஹும்.. அதெல்லாம் ஒரு காலம்.

நா இந்த வீட்ல இருக்கேன்னா அதுக்கு அய்யாதேன் காரணம். நான்னா அய்யாவுக்கும் அம்மாவுக்கும் அம்புட்டு பிரியம். ரெண்டு பேருமே மனசுல பட்டத மறைக்காம சிரிச்சமாதிரியே சொல்லிடுவாக. என்னோட குணமும் அப்படித்தேன்! அதனாலேதே அய்யாவுக்கு எம்மேல அம்புட்டு பிரியமுன்னு நெனைக்கிதேன்!

“உள் ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” ன்னு ஏதோ பெரியவக சொன்ன வார்த்தைய அவக அடிக்கடி சொல்லுதக் கேட்டு எனக்குள்ளாரயும் அது அப்படியே பதிஞ்சிபோச்சு.

முன்ன மாதிரி இல்ல. எனக்கும் வயசாயிடுச்சு. முன்ன இருந்த பொலிவும் தெம்பும் இப்ப எங்கிட்ட இல்லன்னு எனக்கு நல்லாவே தெரியுது. பெரியய்யா இருந்தப்ப இந்த வீட்ல எனக்கிருந்த மதிப்பும், கவனிப்பும் இப்ப இல்லங்கிறத நெனக்கையில ஒவ்வொரு நொடியும் மணிக்கணக்கா நவுருத மாதிரிதாயிருக்கு. என்ன செய்ய? அவக நெனப்போடவே இந்த வீட்ல ஒரு மூலையில மொடங்கிக் கெடக்குதேன். ஆனா எம்புட்டு வயசானாலும் சரி. என்னோட குணத்த மட்டும் நா யாருக்காகவும் மாத்திக்கெடவு மாட்டேன்! அத அப்பப்ப இந்த வூட்டுல இருக்குற மனுசங்களுக்கும் காமிச்சுக்கிட்டேத்தே இருக்கேன். எங்கிட்ட அன்பு காட்டுனா நானும் அன்பு காட்டுவேன். ஆனா அருவாவ காட்டுனா பதிலுக்கு நானும் அருவாவத்தேன் காட்டுவேன்! யாரு என்னாங்கெறதெல்லாம் நா பாக்க மாட்டேன்..எங்கொணம் அப்படித்தேன்!

அய்யா தவறி கிட்டத் தட்ட ரெண்டு வருசமாச்சு. அதுக்குள்ள இந்த வீட்டுல என்னன்னமோ நடந்து போச்சு. சின்னத்தம்பி செல்வம் தங்கமான புள்ளதான். இருந்தாலும் பெரியவன் ஆறுமுகத்துக்கிட்ட இப்படியா ஏமார்றது. என்ன இருந்தாலும் இந்த வீட்டுல தனக்குன்னு உரிமையான பங்க சும்மா கொஞ்சம் காசுக்கு ஏமாந்து எழுதிக்கொடுத்துட்டு இன்னைக்கு குடும்பம் குட்டிகளோட வெளியில போய் வாடகை வீட்ல சிரமப்படுது. அத சொல்லியும் குத்தமில்ல. வீட்ல இருக்க பொம்பளைங்களுக்குள்ள நெதமும் பிரச்சனைன்னா வேற என்னதான் பண்ண முடியும்?! இதெல்லாத்துக்கும் காரணம் பெரியவ பொண்டாட்டி அலமேலுதான்..

எல்லாருகிட்டயும் எரிஞ்செரிஞ்சு விழுந்தா எவ்வளவு நாள்தான் பொறுத்திட்டிறுக்க முடியும்? ஒரு பொம்பளைக்கு இவ்வளவு ஆங்காரம் இருக்க கூடாதுடியம்மா! அதுவும் என்னப்பாத்தா அவளுக்கு உள்ளுக்குள்ள என்னதான் ஆகுதுன்னு தெரியல.. அப்படி ஒரு முறை முறைப்பா. என்னால செல்வம் மாதிரிலாம் பொறுமையா போவ முடியாது. பதிலுக்கு நானும் அவளை முறைச்சிப் பாப்பேன். “ம்க்கும்”ன்னு முகத்தை ஒரு வெட்டு வெட்டிக்கிட்டு நகந்து போயிடுவா.

இப்பல்லாம் “இத எங்கனயாவது தொலைக்க வேண்டியதுதானே? நடுவீட்ல இருந்துக்கிட்டு வீட்டையே கெடுக்குது..”ன்னு ஆறுமுகத்துகிட்ட வெளிப்படையாவே எரிஞ்சு விழ ஆரம்பிச்சுட்டா. பாவம் ஆறுமுகம்! அவன் என்ன செய்வான்? என்ன அவன் பரிதாபமா பாக்க, இந்த மாதிரி பொண்டாட்டிக்கிட்ட அகப்பட்டு தவிக்கறானேன்னு நானும் அவன பரிதாபமா பாத்தேன். ஒம்பொண்டாட்டியோட நெதமும் மல்லுக்கட்டுதக்குப் பதிலா பேசாம அவ சொல்லுத மாதிரி என்ன எங்கனயாவது கொண்டு விட்டுடுன்னு நா சொல்லுதது அவனுக்கு வெளங்கவே மாட்டேங்குது. நாம இருக்கறது குடிசையா கொட்டாரமாங்கறது முக்கியமில்ல.. நம்மள சுத்தி நம்மகிட்ட அன்பு காட்டுததுக்கு நாலு பேரு இருக்காகளாங்கிறதுதே முக்கியம்.

ஒருவழியா நா சொன்னது ரொம்ப நாளைக்கு அப்பறம் அவனுக்கு வெளங்கிடுச்சோ என்னவோ! ஒருநாளு, “செல்வத்த வர சொல்லிருக்கேன்… அவன்தா அய்யா ஞாபகமா இது எங்க வூட்டுல இருக்கட்டுமேன்னு சொன்னான்..”ன்னு சொல்ல, “அப்பாடா.. ஒரு வழியா இத எங்கெனயாச்சும் தொலச்சா சரி” ன்னு அவ என்னைப்பாத்து பெருமூச்சு விட, நானும் “எங்கெனயாச்சும் தொலச்சா சரி..”ன்னு பதிலுக்கு அவளைப்பாத்து பெருமூச்சு விட்டேன். வழக்கம் போல “ம்க்கும்”ன்னு முகத்தை ஒரு வெட்டு வெட்டிக்கிட்டு நகந்து போய்ட்டா.

சொல்லிவெச்ச மாதிரி செல்வம் தம்பியும் டான்னு காலயில பதினோரு மணிக்கெல்லாம் வந்து “மதனி”ன்னு கதவைத் தட்ட, “வந்துட்டீகளா.. நீங்க வருவீகன்னு ஒங்க அண்ண சொன்னாவ..எதயாவது இந்த வீட்லருந்து எடுத்துட்டு போவதானே வருவீக..”ன்னு சிடுசிடுன்னு சொல்லிக்கிட்டே கதவ திறந்தா. செல்வத்த பாக்க எனக்கு பரிதாபமாத்தேன் இருந்திச்சி. ஆனா செல்வம் தம்பி என்னை வாஞ்சையா பாக்க, ”சரி சரி.. மொதல்ல வந்த சோலிய பாருக.. இத இங்கெனயிருந்து மொதால்ல கெளப்புங்க”ன்னு சொல்லிகிட்டே அடுப்பங்கரைக்குள்ள புகுந்துகிட்டா.

செல்வம் தம்பியும் ஒத்த ஆளா என்ன தூக்க முடியாம தூக்கிட்டு வெளியில கொண்டுவர சிரமப்பட, அவன் சிரமப்பட்றதை பாத்துட்டு வாசல்ல அவன் கூட்டியாந்த தட்டுவண்டிக்காரவக ஓடியாந்து ஒரு கை கொடுக்க ரெண்டு பேருமா சேர்ந்து என்னை அந்த தட்டுவண்டியில பைய ஏத்துனாக. ரொம்ப நாளுக்கப்பறம் சூரிய வெளிச்சத்த பாத்தவுடனே எனக்கு ஒடம்பெல்லாம் கூச ஆரம்பிச்சிடுச்சி. அய்யா வாழ்ந்த வீட்டை விட்டு போவப்போறோங்கறத நெனச்சி கவலைப்பட்றதா? இல்ல நம்மள விரும்பற மனுச மக்கள பாக்க போறத நெனச்சி சந்தோசப்பட்றதா? ஒன்னும் புரியல! இதோ வண்டி கெளம்பிடுச்சி. “நா
வர்றேண்டியம்மா! இல்ல இல்ல! நா போறேண்டியம்மா…”. அடுப்பங்கரை சன்னல் வழியா அவ என்னைப் பாத்து சிரிக்கது தெரியுது. கடைசியா உன் மொகத்துல சிரிப்ப பாத்துட்டேன்டியம்மா” ன்னு பதிலுக்கு நானும் ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு கெளம்பிட்டேன்.

இதோ.. செல்வம் தம்பி வீடு வந்திடுச்சி. தெரு சனமெல்லாம் அவகவங்க வீட்டு வாசல்ல நின்னுகிட்டு என்ன ஏதோ அதிசயமா வேடிக்க பாக்க எனக்கு மறுபடியும் ஒடம்பெல்லாம் கூச ஆரம்பிச்சிடுச்சி. இதோ வர்றா மவராசி! செல்வத்தோட பொண்டாட்டி. அப்படியே பெரியம்மாவோட கொணம் அவளுக்கு! “வந்துட்டீகளா”ன்னு சிரிச்ச மொகத்தோட ஒடியாந்து என்ன பாசமா தொட்டு பாத்தா.. “அய்யாவே நம்ம வூட்டுக்கு வந்த மாதிரி இருக்குல்ல புள்ள..”ன்னு செல்வம் என்னப்பாத்து சொல்லுதெச்ச அவனோட கண் கலங்கத பாத்து எனக்கும் கண் கலங்கிடுச்சு. உசிரோட இருக்க மனுசாளையே மதிக்காத இந்த காலத்துல அய்யா பிரியமா வெச்சிருந்த நெலக்கண்ணாடி நான்! அவக சிரிச்சப்பல்லாம் சிரிச்சி, அவக அழுதப்பல்லாம் அழுது, அந்த வீட்ல நானும் பிரிக்க முடியாத ஒரு உறவா மாறிட்டேன்னு அய்யா அம்மாகிட்ட அடிக்கடி என்னப்பத்தி உசத்தி சொல்லுவாக.. எம்மேல அய்யா மாதிரியே பிரியம் காட்டுதக்கு மறுபடியும் ஒரு குடும்பம் கெடச்சிடுச்சுன்னு நெனைக்கையிலே என்னோட சந்தோசத்த சொல்லுதக்கு வார்த்தையேயில்ல!

செல்வமும், தட்டுவண்டிக்காரவகளும் சேர்ந்து என்னை பைய கீழே இறக்குனதுதேன் தாமதம்..வீட்டுக்குள்ள வெளையாடிக்கிட்டிருந்த செல்வத்தோட கடைக்குட்டி ”அய்யா..”ன்னு ஒடியாந்து அப்படியே என்ன இறுக்க கட்டிபிடிச்சி சிரிக்க, “வாடா என் செல்லக் கன்னுக்குட்டி”ன்னு பதிலுக்கு நானும் அவனைப்பாத்து முகம் மலர்ந்து சிரிச்சேன்..

அவன் முகமா மாறி சிரிச்சேன்!..

குறிப்பு: ஒரு கண்ணாடி பேசுவது போல் கதையை அமைத்துள்ளதால் “வாயாடி”(வாய் + ஆடி) என்ற தலைப்பு இதற்கு கொடுத்துள்ளேன் 🙂

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *