வானம் எங்களுக்கும் வசப்படும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 6, 2015
பார்வையிட்டோர்: 6,221 
 

ஒச்சாயி கண்களை சுருக்கி கண்களுக்கு மேல் கை வைத்துக்கொண்டு தெருவையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கணவன் சடையாண்டியை இன்னும் காணவில்லை.

காலையில் ஒரு வாய் கஞ்சித்தண்ணியை வாயில் ஊற்றிக்கொண்டு போசியில் கொஞ்சம் பழையதயும் போட்டுக்கொண்டு தன்னுடைய ஆடுகளை மேய்ச்சலுக்கு விட கிளம்பியவந்தான் பசுமைகள் மறைந்து காண்கிரீட் மரங்களால் வளர்ந்து கொண்டிருக்கும் இந்த பிரதேசத்தில் புல் பூண்டுகளுக்கு வழியில்லாமல் தூர..தூர இடத்துக்கு நடக்க ஆரம்பித்துவிடுவான்.

மதியம் கொண்டு போன பழையதை சாப்பிட்டுவிட்டு ஏதாவது ஒரு மர நிழலில் படுத்து தூக்கம் கண்களைச்சுழற்ற அவ்வப்போது ட்ரா..ட்ரா.. என்று சத்தம் கொடுத்துக்கொண்ட இருப்பான் ஆடுகள் மேச்சல் உற்சாகத்தில் தன்னை விட்டு போய்விடாமல் இருக்க.

சடையாண்டிக்கு ஒச்சாயி வாழ்க்கை படும்போது அவனுக்கு இரண்டு ஏக்கரா வானம் பார்த்த பூமி பரம்பரை சொத்தாக இருந்தது. அதில் ஏதோ பயிர் செய்ததோடு மட்டுமல்லாமல்,ஒச்சாயி நான்கைந்து ஆடுகளையும்,கோழிகளையும் வளர்த்து உருப்படியாக்கி விற்றுத்தான் இவர்களின் மக்கமார்களான ராசுவையும், மயிலாத்தாளையும் வளர்த்து,அசலூரில் பெண்ணயும் பையனை பொள்ளாச்சியில் ஒரு ஆட்டோ ஓட்டுனராக்கி அங்கேயே குடித்தனத்தையும் வைக்க உதவியது. அந்த வாயில்லா ஜீவன்களும், வானம் பார்த்த பூமியும், இவர்கள் வாழ்க்கையை ஓட்டுவதற்கு உதவிக்கொண்டே இருந்த்து.

பொள்ளாச்சிக்கு குடிபோனவனிடம் இவன் உறவுக்காரர்கள் என்ன சொன்னார்களோ தெரியாது, ஊருக்கு வந்து நிலத்தை விற்றால்தான் ஆச்சு என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்துவிட்டான். இவன் நிலத்தை விற்க அடி போட ஆரம்பித்துவிட்டான் என்பதை இவன் அக்கா வீட்டுக்காரன் அவள் காதில் ஓத அவளும் கையிலொன்றும், இடுப்பில் ஒன்றையும் இழுத்துக்கொண்டு வீட்டுக்குள் வந்து உட்கார்ந்துகொண்டாள்.அக்காக்காரி அம்மாவிடம் ஏதாவது பேசி கெடுத்துவிடுவாள் என்று தம்பிக்காரனும் உடனே வந்து உட்கார்ந்து கொண்டு இருவரும் வாக்குவாதத்தில் இறங்கினர். இவர்கள் வாக்குவாதத்தை கேட்கப்பிடிக்காமல் தான் ஒச்சாயி தன் கணவனின் வருகைக்காக கண்களின் மேல் கைவைத்துக்கொண்டு உற்று நோக்கிக்கொண்டிருந்தாள்.

தன் கணவன் வந்துவிட்டாலும் இந்த பிரச்னைக்கு என்ன பதில் வைத்திருக்கப்போகிறான். அவனை பொறுத்தவரை ஒச்சாயி என்ன சொல்கிறாளோ அதை செய்வான். நல்ல உடல் பலம் இருந்தபொழுது இருவரும் பக்கத்து தோட்டத்தில் வேலை செய்ய செல்வார்கள். அதில் அவனுக்கு எவ்வளவு வரும்படி வந்தாலும் ஒச்சாயிடம் கொடுத்துவிட்டு பீடிக்கும் அவ்வப்பொழுது ஊற்றிக்கொள்ள சிறிது பணமும் பெற்றுக்கொள்வான். அப்படி ஒன்றும் சடையாண்டி பெரிய குடிகாரனும் அல்ல, சில நேரங்களில் காட்டில் வேலை அதிகமாக இருந்தபொழுதோ, அல்லது விளைந்த காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைத்தபொழுதோ ஒச்சாயிடம் வந்து தலையை சொறிவான்.அவளும் புரிந்துகொண்டு இந்தா..போய் கம்முனு ஊத்திக்கிட்டு வீடு வந்து சேரு, அங்க இங்க நின்னுகிட்டு திரியாத ! கண்டிப்புடன் சொல்லுவது போல் இருந்தாலும் உள்ளில் பாசம் இருக்கும், அதே போல் அவன் வீடு வரும்போது கோழி அடித்து குழம்பு வைத்திருப்பாள்.

தூரத்தில் அவன் நடந்து வருவது தெரிந்தது, தளர்ந்து போன நடை, ஆடுகள் அவன் முன்னால் வர இவன் குரல் கொடுத்துக்கொண்டே வருவது தெரிந்தது.எப்பொழுதும் ஆடுகள் வந்தவுடன் ஒச்சாயிடம் உரசிக்கொண்டே நிற்கும், இவள் தனித்தனியே இவைகளை தடவிக்கொடுத்து கொஞ்சுவாள், அதன் பின் மரத்தில் கட்டி தொங்க விட்டிருக்கும் தலைக்கொத்தை எடுத்து வாயில் ஊட்டுவாள், அவைகளும் வாயில் வாங்கிக்கொண்டு பட்டிக்குள் நுழையும். சடையாண்டி வந்துவிட்டான், வழக்கம்போல ஆடுகள் அவளை உரச அவள் இருந்த மனநிலையில் அவைகளைக்கொஞ்ச மனமில்லாமல் வெறுமனே தடவிக்கொடுத்து நான்கைந்து தலைக்கொத்துக்களை மட்டும் வாயில் ஊட்டிவிட்டாள், அவைகளும் அவள் மன நிலை புரிந்துகொண்டனவோ என்னவோ தெரியாது வேகமாக பட்டிக்குள் சென்றுவிட்டன.

கை கால்களை கழுவிகிட்டு வா என்று இவள் உள்ளே போக சடையாண்டி அங்கே தொட்டியில் இருந்த தண்ணீரில் கை கால்களை கழுவிக்கொண்டு உள்ளே வந்தான்.

இறுகிய முகத்துடன் பெண்ணும், பையனும், உட்கார்ந்திருப்பதை பார்த்த சடையாண்டி கேள்விக்கணையுடன் இவளை பார்க்க நீ முதல்ல உட்காரு என்று உட்காரவைத்து பழைய சாப்பாட்டுடன் சுண்டைக்காய் குழம்பை ஊற்றினாள். இவங்க இரண்டு பேரும் சாப்பிட்டாச்சா என்று கேட்டவனிடம் எல்லாம் சாப்பிட்டாச்சு நீ சாப்பிடு, அதற்கு மேல் எதுவும் பேசாமல் சாப்பிட ஆரம்பித்தான்.

பெண் ஆரம்பித்தாள், அம்மா நீ என் குழந்தைகளுக்கு ஆளுக்கு ஒரு பவுன் போடறேன்னு சொன்ன, இது வா¢க்கும் போடல, எங்க ஊட்ல இதுக்கு பதில் சொல்லியே நான் ஓஞ்சு போயிட்டேன். இப்ப இவன் காட்டை விக்கறங்கறான், கடைசியிலே என் குடும்பத்தை அம்போன்னு விட்டுடவேண்டாம்னு சொல்லு.

நீ என்ன மனசுல நினைச்சுகிட்டிருக்க, உன கல்யாணத்தப்பவே எல்லா செலவும் பண்ணியாச்சு, அது போக உன் குழந்தைகளுக்கு மாமன் சீரும் நல்லாத்தானே செஞ்சேன்,அப்புறம் என்ன மல்லுகட்டிகிட்டு நிக்க்றே !.

ஏ ராசு கொஞ்சம் கம்முனு இரு! இந்தா மயிலாத்தா நீயும் கொஞ்சம் வாயை மூடிகிட்டு இரு, ஒச்சாயி உரத்த குரலில் சொல்லவும் அங்கு மெளனம் நிலவியது. சூழ்நிலைகள் சடையாண்டிக்கு புரிந்தாலும் தனது மனைவி சமாளித்துக்கொள்வாள் என முடிவு செய்தவன் போல் நிதானமாக சாப்பிட்டு எழுந்து வந்து திண்ணையில்
சாய்ந்து கொண்டான்.

ராசு நீ என்னதான் சொல்லுற! மகனிடம் கூடிய வரையில் கோபத்தை காட்டாமல் கேட்டாள்.அந்த நிலத்துல நாம இப்ப பயிர் பண்ணல்ல, சும்மா வச்சு இப்ப என்ன பண்ணுது, இப்ப நிலத்துக்கு நல்ல மார்க்கெட், பேசாம வித்துட்டு காசை பாங்கியில போட்டா என் குடும்பத்துக்கோசரமாவது பிரயோசனமாயிருக்கும்.

அப்ப நாங்க எல்லாம் காவடி தூக்கிட்டு போறதா? மயிலாத்தாள் எழுந்து கத்தினாள். இந்தா மயிலாத்தா பேசாம இரு நாந்தான் பேசிக்கிட்டிருக்கேன்ல, அடக்கினாள் ஒச்சாயி.

ஏண்டா ராசு அந்த நிலம் இப்ப உன்னைய என்ன பண்ணுது? உங்க பிற்காலத்துக்கு அது ஒண்ணுதாண்டா உதவியாயிருக்கும், அம்மா இப்ப கிடைக்கற விலை அப்ப உனக்கு கிடைக்குமா? நானே ஆட்டோ ஓட்டித்தான் எங்குடும்பத்தை காப்பாத்திகிட்டு இருக்கேன், இந்த நிலத்தை வித்து ஏதாவது வந்தாத்தான் நான் சொந்தமா ஒரு ஆட்டோ வாங்கவாவது முடியும், நான் நல்லா இருக்கனும்னு உனக்கு தோணாதா?

அவன் முடிவிலிருந்து மாறப்போவதுமில்லை, அதுபோல மயிலாத்தாளும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை, இவர்கள் இருவருக்குமே ஒச்சாயியைப்பற்றியும், சடையாண்டியைப்பற்றியும் கவலையில்லை என்பதை உணர்ந்துகொண்டாள் ஒச்சாயி.

சா¢ நிலத்தை வித்தா உங்க அக்காவுக்கு என்ன செய்யப்போற்? கேட்டவுடன் சீறினான் எதுக்கு கொடுக்கணும்? அவளுக்குத்தான் எல்லாம் செஞ்சாச்சே, உடனே மயிலாத்தாள், ராசு சட்டமே சொல்லுது எங்களுக்கு பங்கு கொடுக்கணும்னு புரியுதா?

சட்டம் என்ன சட்டம் ! வேகமாக சொன்னாலும் மனதுக்குள் கண்டிப்பாக சிக்கல் வரும் என புரிந்து கொண்டான், சா¢ உனக்கும் கொஞ்சம் தர்றேன், இந்த பதிலில் ஓரளவு சமாதானமானாள் மயிலாத்தாள்.

அப்ப உங்கப்பனுக்கும் ஆத்தாளுக்கும் என்ன கொடுப்பே? கேட்ட ஒச்சாயிடம் அக்காளும் தம்பியும் ஒரு சேர பாய்ந்தனர், உனக்கெதுக்கு பணம்?

பணம், பங்கு என்றவுடன் அக்காளும், தம்பியும் ஒன்று சேர்ந்துகொண்டதை கவனித்த ஒச்சாயி நிலம் பரம்பரை சொத்தாயிருந்தாலும் அதுல உங்களை பெத்தவங்களுக்கும் பங்கு கொடுக்கணும்னு தெரியுமா?

அக்காளும் தம்பியும் தங்களுக்குள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வர்ற பணத்துல கொஞ்சம் கொடுத்துடறோம், அப்புறம் இந்த வீட்டுல கடைசிவரைக்கும் இருங்க, உங்களுக்கு பின்னாடி யாருக்கு கொடுக்கனும்னு நினைக்கிறீங்களோ அவங்களுக்கு கொடுத்துடுங்க.

அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம், எப்ப சொத்தை விக்கறதுண்ணு முடிவு பண்ணிட்டீங்களோ

அப்பவே உங்க சம்பந்தப்பட்டது எல்லாத்தயும் வித்துடுங்க, உங்க தயவுல நாங்க இருக்ககூடாது, இந்த வீட்டையும் சேர்த்து வித்துட்டு எங்களுக்கும் ஒரு பங்கு கொடுத்துடு, அதுக்கப்புறம் உங்க பாடு வேற எங்க பாடு வேற

இந்த பேச்சு அக்காளையும், தம்பியையும் சிறிது உலுக்கியது, இருந்தாலும் பணம் என்னும் மந்திரம் அவர்களின் சலனத்தை ஒதுக்கித்தள்ளியது. நான் கிளம்பறேன் அக்காவையும் அவ வீட்டுல விட்டுட்டு நான் பொள்ளாச்சி கிளம்பறேன், விடைபெற்றனர்.

அவர்கள் சென்று அரை மணி நேரம் கழிந்து தன் கணவணை பார்க்க, அவன் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தான். இவள் மெல்ல அருகில் சென்று கவலைப்படாதேயா ஊருக்குள்ள ஒரு வீட்டை ஒத்திக்கு பேசி வச்சிட்டேன், இவன் எப்ப இடத்தை விக்கறதுன்னு ஆரம்பிச்சுட்டான்னோ அப்புறம் இந்த வீட்டுல இருந்தா ஏதோ இவங்க தயவுலதான் நாம இருக்கோம்னு நினைச்சுக்குவாங்க, கவனிச்சியில்ல காசுன்ன உடனே அக்காளும், தம்பியும் ஒண்ணாயிட்டாங்க, எங்கிட்ட கொஞ்சம் சிறுவாடு காசு வச்சிருக்கன், இன்னும் இரண்டு மூணு ஆட்டுக்குட்டி வாங்கிப்போடுவோம், அவங்க பங்கு பணம் கொடுத்தாக்கா குத்தகைக்கு தோப்பை எடுப்போம், நம்மால முடியறவரைக்கும் பாடுபடுவம்யா!.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *