வானமெல்லாம் ஆசைக் காற்றாடி

1
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 29, 2024
பார்வையிட்டோர்: 2,905 
 
 

(1995ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-25

அத்தியாயம்-22

பாரதி வீட்டை அடைந்தபோது மணி மூன்றரை. குளியல் அறைக்குச் சென்று கை கால்களைக் கழுவி விட்டு சமையலறைக்கு வந்தாள்! 

காஸ் அடுப்பு எரிந்து கொண்டிருக்கவில்லை. பிற்பகல் போட வேண்டிய காப்பி டிகாக்ஷன் போட்டாகவில்லை. மனத்தில் ஒரு கடுமையான புயல் வீசிக்கொண்டிருந்தாலும் அவள் தடுமாறவில்லை. இதுவரை பிறந்து அறியாத நெஞ்சுறுதி தன்னிடம் ஏற்பட்டிருப்பதை உணர்நதாள். விஷயம் முற்றிவிட்டது. இரண்டு கட்சிகளில் ஒரு கட்சி தீர்மானமான முடிவை எடுத்து எதிர்க்கட்சியிடம் வெளியிட்டாகி வீட்டது. ஒருவர் தம்மைத் தாமே ஆலோசகராக நியமித்துக் கொண்டு இந்த இரண்டாவது கட்சிக்கு உபதேசம் செய்ய முன் வந்திருக்கிறார். ஆனால் இக்கட்சிக்கு என்று ஒரு தனித்தன்மை இருக்கிறதே! அந்தத் தன்மையை எந்த ஆலோசகராலும் தகர்த்து எறிய முடியாதே? 

“இத்தனை நேரமா நீ எங்கே இருந்தே?” 

பாரதி கொதிக்கும் நீரை காப்பி ஃபில்டரில் நிதானமாக மெல்ல மெல்ல ஊற்றிக்கொண்டிருக்கையில் தங்கம்மாவின் கேள்வி வெடித்தது. பாரதி உடனே பதில் சொல்லவில்வை. நீரையெல்லாம் ஊற்றிய பிறகு, ஃபில்டரை மூடியபின், பால் பாத்திரத்தை மேடையின் மீது வைத்து விட்டுத் திரும்பினாள். 

“என்னடீ பார்க்கறே? காதுல விழலையா?”

“விழுந்தது. அவசரமாப் பதில் சொல்ல வேண்டிய கேள்வியாப் படலே. சகஸ்ரம் சித்தப்பா வீட்டுக்குப் போயிருந்தேன்”. 

“அங்கே என்ன வேலை உனக்கு? சகஸ்ரம் என் புள்ளைக்குத்தான் சித்தப்பா. உனக்கு இல்லை.” 

“நீங்க சொல்றதும் சரிதான் அத்தே! சின்ன மாமனார் வீட்டுக்குப் போயிருந்தேன்” 

”அங்க என்ன வேலைன்னு கேட்டேன்?” 

“என் அப்பா அங்கே இருந்தார் எங்கிட்டப் பேசணும்னார்”. 

“என்ன சொன்னான்?” 

“எங்க பேச்சு, அப்பா-பெண்ணுக்கு இடையே நடந்த பேச்சு” 

“எங்கிட்டச் சொல்லப்படாதோ?”

“படாதுன்னு படறது.” 

“நீ எப்பப் புறப்படறே?”

“எங்கே?” 

“தெரியாதா” 

“தெரியாது! அதான் கேட்கிறேன்”.

“நங்கவரத்துக்கு”. 

“இன்னிக்கு ராத்திரி.”

“இன்னிக்கு ராத்திரியா?”

“அப்பா புறப்படறார்.” 

“நீ?”

“ஏன்?” 

“உன் அப்பா சொல்லலையா?”

“என்னன்னு?” 

“என்னடி, எங்கிட்ட ஜாலவித்தை காட்றியா?”

“ஜாலவித்தைன்னா?” 

“இரு, உன்னைக் கவனிக்கிற விதத்தில் கவனிச்சுக்கறேன்”. 

தங்கம்மா வெளியேறத் திரும்பினாள். 

“ஒரு நிமிஷம் அத்தே”. 

“என்னடி?” . 

“இது எப்படி உங்க வீடோ அதே மாதிரி என் வீடும்தான். இதை உதறி எறிஞ்சுட்டுப் போறதும் போகாததும் என் முடிவிலே அடங்கியிருக்கு. பாட்டி உங்களைத் துரத்தினா நீங்க போக மாட்டீங்க, இல்லியா? அது மாதிரித்தான் நானும். இதை நன்னா ஞாபகம் வைச்சுக்குங்க. அனாவசியமா என்கிட்டக் கத்திக் கத்தி உங்க பிளட்பிரஷரை ஏத்திக்காதீங்க”

மௌனச் சீற்றத்துடன் அவளை விறைத்துப் பார்த்து விட்டு தங்கம்மா வெளியேறினாள்.

டிகாக்ஷன் இறங்கிக் கொண்டிருக்கையில் பால் பாத்திரத்தை வைத்தாள். இரண்டு லிட்டர் பால் கொதிக்கச் சில நிமிடங்களாவது ஆகும். 

என்ன டிபன் செய்ய? 

இட்லி அல்லது தோசை மாவு இல்லை. உப்புமா பாதிப் பேருக்குப் பிடிக்காது. 

திடீரென்று மீனாட்சி அம்மாளின் சமையல் புத்தகம் நினைவுக்கு வந்தது. எவ்வளவு அரிசிக்கு எவ்வளவு பயத்தம் பருப்புப் போட வேண்டும். பார்க்க வேண்டும். அலமாரியில் சீராக வைக்கப்பட்டிருக்கும் ஹார்லிக்ஸ் பாட்டில்களைப் பார்த்தாள். முக்கால் பாட்டில் முந்திரிப் பகுப்பு இருப்பது திருப்தி அளித்தது. 

பாலைப் பார்த்தாள். காய்ந்து கொண்டிருந்தது. இன்னும் ஓரிரு நிமிடங்களில் கொதிக்க ஆரம்பித்துவிடும். பொங்கிவரும் போது காஸை நிறுத்திவிட வேண்டும். 

பாலும் கொதித்தது. 

ஃபில்டரின் அடிப்பாத்திரத்தில் அப்போதைக்குத் தேவையான டிகாக்ஷன் இறங்கியிருந்தது.

ஒன்று ஸ்ட்ராங், சர்க்கரை கம்மி. 

இரண்டாவது மீடியம், சர்க்கரை வேண்டாம். 

மூன்றாவது ஸ்ட்ராங், சர்க்கரைக் கொஞ்சம் அதிகம். 

ஒரு பெரிய தட்டில் டபரா தம்ளர்களை வைத்துக் கொண்டு முன் தாழ்வாரத்துக்கு வந்தாள். “இந்தாங்க பாட்டப்பா காப்பி, கொஞ்சம் லேட்டாயிடுத்து”

“தோஷமில்லை பொண்ணே!” 

“பாட்டம்மா காபி” 

”பஞ்சாரை இல்லையே?”

“இல்லை.” 

“நீ குடிச்சியா?”

“இனிமேத்தான்.”

“பின்னே இது ஆருக்கு?” 

“அத்தைக்கு” 

சொல்லிவிட்டு தங்கம்மா அருகே பாரதி வந்து அவள் முன்னால் காப்பியை வைத்தாள், தங்கம்மா வாய் திறக்க வில்லை. 

“பொண்ணே!” 

“என்ன பாட்டாப்பா?”

“காப்பி அமிர்தமா இருக்கு. எச்சுமி நீ என்ன சொல்றாய்?”

“நீங்க சர்ட்டிபிகேட் கொடுத்தாச்சே? நானும் கொடுக்கணுமா? பாரதி! வாஸ்தவத்திலேயே காப்பி ருசியா இருக்கு” 

“இந்தைக்கு என்ன பலகாரம்?” 

“அரைமணி நேரத்திலே ரெடியாயிடும் பாட்டப்பா”

சமையவறைக்குத் திரும்பி, அவசர அவசரமாகப் புத்தகத்தைப் புரட்டினான். அத்தியாயமும் கிடைத்தது. அளவும் கிடைத்தது. 

குக்கரை ஏற்கனவே பால் பொங்கினதும் இன்னொரு அடுப்பில் வைத்திருந்தாள். 

சரசரவென்று காரியத்தில் ஈடுபட்டாள். 

குக்கர் சத்தம் கேட்ட ஓரிரு நிமிடங்களுக்குப் பின் ஜுவாலையைத் தாழவிட்டுத் தேங்காயை எடுத்தாள். உடைத்தாள். பூவாக்கினாள். 

அவள் பொங்கள் சட்னியுடன் மீண்டும் மீண்டும் முன் தாழ்வாரத்துக்கு வந்தபோது கடிகாரத்தைப் பார்த்தாள். நாலரை, சொன்ன நேரத்துக்கு மேல் கால்மணி தாமதமாகியிருக்கிறது என்று மனம் கணக்குப் போட்டது. 

“இது என்ன பொங்கலாட்டம் இருக்கு?” என்றார் தாத்தா. 

“பொங்கலேதான் பாட்டப்பா.” 

“நெய் மணம் மூக்கைத் துளைக்கறது; அண்டிப் பருப்பை அள்ளிப் போட்டிருக்காய்”. 

தாத்தா சாப்பிடத் தொடங்கினார். 

“ஏ கிளாஸா இருக்கு, பொண்ணே! உண்டாக்க ஆர் சொல்லித் தந்தா? உன்னோட அம்மைதானே?”

“ஆமாம்.” 

“எச்சுமி நீயும் எடுத்துக்கோடி. ஆத்ல பொங்கல் உண்டாக்கி வர்ஷம் ஒண்ணாறது”. 

“நங்கவரம் கல்யாணத்தில்தான் கல்கண்டு சாதத்தையும், பொங்கலையும் வயிறு தெரியாமல் தின்னேனே” என்றாள் பாட்டி. 

பாரதி சிரித்தாள். 

“உங்களுக்கும் கொண்டு வரேன், பாட்டம்மா,”

“வேண்டாம்டீ, நான் அங்கே வரேன்.” 

”அங்கே போனாத்தான் மூக்கொத்தம் திங்கலாம்” என்றார் தாத்தா. 

“உங்க மூக்கிலேர்ந்து பொங்கல் வழியாமப்பார்த்துக்குங்கோ!” 

பாரதிக்கு உள்ளூரச் சிரிப்பு வந்தது. இந்த வயதிலும் தாம்பத்யத்தை எப்படி ஒருவருக்கொருவர் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்? 

தங்கம்மா முற்றத்துக்கு அப்பால் சுவரோரமாய் உட்கார்ந்திருந்தாள். காலியாகிவிட்ட டபரா, டம்ளர் இன்னும் அவள் அருகேயே இருந்தன. 

”அத்தே உங்களுக்கும் டிபன் கொண்டு வரட்டுமா?” என்று கேட்டாள். 

“இப்ப வேண்டாம்” 

எங்கேயோ பார்த்தவாறு தங்கம்மா பதில் அளித்தாள். 

தான் பண்ணிய பொங்கல் எப்படித்தான் இருக்கிறது என்று ருசி பார்க்கத்தான் தோன்றியதே தவிர, தட்டு நிறையப் போட்டுக் கொண்டு சாப்பிட வயிறு இடம் கொடுக்கவில்லை. 

சமையலறையில் மீண்டும் மெளனம் நிலவியது.

அவளுடைய மனமும் சிந்திக்கத் தொடங்கியது. 

அப்பா பேசிய பேச்சின் பாதிப்பைக் காட்டிலும், அதற்குக் காரணமான ஈசுவரன் மீது தான் மீது தான் கோபம் வந்தது. அவர் எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வரலாம்? கடந்த நான்கைந்து நாள்களாக இருவரும் சுமுகமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்! அப்படிப் பேசிக் கொண்டிருக்கையில்தான் ஈசுவரன் அப்பாவுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். இதை ஏமாற்று வேலை என்பதா? வஞ்சகம் என்பதா? அவர் கடிதம் எழுதிய விஷயம் நாராயணனுக்குத் தெரியுமா? தெரிந்திருந்தால் அவனாவது கோழிக்கோடு போவதற்கு முன் அவளிடம் சொல்லியிருக்க வேண்டாமோ? 

அன்று இரவு மாமனாரை அன்மையில் சந்தித்துப் பேசியாக வேண்டும். அவளுடைய தனிப்பட்ட பிரச்சனையில் அப்பாவை அவர் ஏன் இழுக்க வேண்டும்? 

இரண்டில் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாயிருந்தாள். ஆனாள் அவள் அதுவரை தன் இயல்பிலேயே நடந்து கொள்வாள். 

ஐந்தே காலுக்கு ஈசுவரன், அப்பா பின் தொடர வீட்டுக்குள் பிரவேசித்தார். இருவரும் டிபன் சாப்பிட்டார்கள். காப்பி குடித்தார்கள் அவளுடைய அப்பாவின் தொடர்ந்த மௌனத்தில் அவருடைய நெஞ்சுக் குமுறல் எதிரொலிப்பதாகப் பாரதிக்குத் தோன்றியது. ஆனால் எதுவுமே நடக்காததுபோல ஈசுவரன் அவளிடம் சரளமாகப் பேசினார். 

“பொண்ணே, உன் அப்பாவோட வண்டி ராத்திரி பந்நிரண்டே முக்காலுக்குத்தான். ஒன் பினான் என்னென்னு நேக்குத் தெரியாது. நீ படிச்ச பொண். எல்லாம தெரிஞ்ச பொண். ஒன் ஆசை நிறைவேற நீ சந்தோஷமா இருந்தா எனக்கும் சந்தோஷம்தான். இதை யெல்லாம் ஏன் நான் சொல்றேன்னா. நான் ஓர் அவசர காரியமா எர்ணாகுளம் போறேன். வர்றதுக்கு ரெண்டு நாளாகும்” என்று கூறிய ஈசுவரன். 

“மௌலி நான் சொன்னது எல்லாம் ஒறமை இருக்கு இல்லியா?” என்று கேட்டார். 

மௌலி மௌனமாகத் தலையாட்டினார். 

“இப்ப நான் என் ரூமுக்குப் போய் பொட்டியிலே துணிமணிகளை எடுத்து வைச்சுக்கறேன். ஆறு, ஆறே காலுக்கு நான் பொறப்படனும்”. 

பாரதி இடிந்து போய் நின்றாள். 

அன்று இரவு ஈசுவரனிடம் பேச வேண்டும் என்று திட்டம். போட்டிருந்தாள். அதில் மண் விழுந்தது. ஆனால், அவள் விடவில்லை, அவருடைய அறைக்குச் சென்றாள். ஈசுவரன் அலமாரிகளைத் திறந்து வேஷ்டி களை எடுத்துக் கொண்டிருந்தார் 

“ஒரு நிமிஷம் அத்திம்பேர்” 

“நேக்கு நேரமாறது, பொண்ணே!” 

“இன்னமும் பொண்ணேன்னு என்னைக் கூப்பிடறது அசம்பாவிதமா இருக்கு”. 

“பின்னே?” 

”நாயேன்னு கூப்பிடுங்கோ, கழுதேன்னு கூப்பிடுங்கோ”.

“நீ என்ன சொல்றாய்?” 

”என்னை என் அப்பா நங்கவரத்துக்குக் கூட்டிட்டுப் போயிடணும் இல்லே? இங்கு உள்ள எல்லார்க்கும் நான் குட்பை சொல்லணும் இல்லே?” 

“நேக்கு டயமாறது”. 

“எனக்கு டயம் நிறைய இருக்கு. நான் இந்த வீட்டை வீட்டு ஒரே அடியாப் போறதானாலும் உங்ககிட்டேயும் உங்க பிள்ளைகிட்டேயும் ரெண்டு வார்த்தை பேசிட்டுத் தான் போவேன். நீங்க இப்ப எர்ணாகுளம் போயிட்டு வாங்கோ. அவர் கோழிக்கோட்லேர்ந்து எப்ப வரணுமோ வரட்டும். அதுவரையில் நான் இங்குதான் இருப்பேன். அதுவரையில் இந்த வீட்ல இருக்க எனக்கு உரிமைகளும் இருக்கு. இதைச் சொல்லத்தான் வந்தேன். குட் நைட் அத்திம்பேர்! குட்பை இல்லே” 

ஈசுவரன் அவளை ஏறெடுத்துப் பார்க்கவும் இல்லை, ஒரு வார்த்தை பேசவும் இல்லை. 

அவர் பெட்டியுடன் புறப்படுவதற்கு முன் அப்பா, அம்மா மற்றும் தங்கம்மாவிடம் விடை பெற்றுக் கொண்டார் பாரதியைப் பார்க்க முயற்சியே செய்யவில்லை. 

ஈசுவரன் வெளியேற, மௌலி பின் தொடர்ந்தார். அவர் யாரிடமும் விடைபெற்றுக் கொள்ளவில்லை. இரவு பன்னிரண்டே முக்காலுக்குத்தானே ரெயில்? அதல் செல்ல இப்போதே ஏன் யாத்திரை செல்ல வேண்டும்? 

தரைமேல் தரை அருகே கண்கள் கனக்க நின்ற பாரதி, இருவரும் சகஸ்ரம் வீட்டுக்குள் பிரவேசிப்பதைக் கண்டாள். சிரித்துப் பேசி ஆட்களையே மயக்கும் சகஸ்ரம் தான் இதற்கெல்லாம் காரணமோ? அவன் ஹீரோ அல்ல. கீழ்த்தரமான வில்லன். இனிமேல் அவன் வீட்டுப்படியை மிதிக்கக் கூடாது. 

சகஸ்ரம் வீட்டில் அவன் மட்டும் இருந்தான். ராஜி கமலம் வீட்டுக்குப் போயிருந்தாள். 

“என்ன, அண்ணா பொறப்பட்டாச்சா?“

“ஆச்சு. ஆர்ட்டேயும் மூச்சு விடாதே. நான் எஸ்டேட் ஹவுஸில் இருப்பது கோந்தைக்கு மாத்திரம் தெரிஞ்சாப் போரும். சிவராமன், கோவிந்தன் ஆருக்கும் தெரியண்டாம், ஆராவது அவசரமாகப் பேசணும்னா என்னன்னு கேட்டுக்கோ போரும்” 

“நான் சொன்ன பிளான் தானே அண்ணா இது?”

“மௌலி பேசின பேச்சில் பாரதிகிட்ட ஆட்டம் கண்டிருக்கு” என்ற ஈசுவரன், “நானும் அவளுக்கு மனசிலாகற மாதிரி வார்த்தைகளைப் பிரயோகிச்சேன். இனிமே பொண்ணேன்னு, கூப்பிடண்டாம். நாயே, கழுதேன்னு கூப்பிட்டாப் போறும்னா,” 

“ஆட்டம் இப்பதானே அண்ணா தொடங்கியிருக்கு போகப் போகத்தான் சூடு பிடிக்கும்” என்றான் மெளலி.

“மௌலி! ஒண்ணு மாத்திரம் எனக்குத் தெளிவாப் புரிஞ்சுது. அவளுக்கு டிவோர்ஸிலும் இஷ்டம் இல்லை, ரெண்டாவது கல்யாணத்திலும் ஆசை இல்லை” என்றார். 

“நாம சொல்லிக் கொடுத்ததுக்கு மேலே மெளலி ஜமாய்ச்சிருக்கான். கட்டிலுக்கு அடியில் டேப்ரிகார்டர் இருந்தது. அவளுக்குத் தெரியாது. ஆனா ரெண்டு மூணு நிமிஷம் டேப் வேஸ்டாயிருக்கு” என்றான், சாஸ்ரம். பிறகு, “அதை எஸ்டேட்ல எங்கேயாலது வைச்சுத் தொலைச்சுடாதே. கோந்தையும் கேக்கணும்” என்று சொல்லி முடித்தான். 

“தெரியும்டா. அப்ப நான் வரேன்… மௌலி நம்ம பிரயத்தனம் எப்படி முடியும்னு என்னால் தீர்ச்சையா சொல்லக் கழியலை. எல்லாம் நல்லபடியா முடியணும்னு வேண்டிக்கோ, அது போறும்” 

”ஈச்சா இன்னும் ஒண்ணு”

“என்ன மௌலி?”

அன்று தங்கம்மா தம்மிடம் பேசியதையெல்லாம் மெளலி விவரித்தார். 

“தங்கத்தை நான் பார்த்துக்கறேன். நீ விசாரப்படாதே… நான் பொறப்படறேன். அவசரம்னு பாரதிட்ட சொல்லியிருக்கேன். ரொம்ப நேரம் இங்கேயே இருந்தேன்னா இங்கே ஏதோ துரியோதனன் சூழ்ச்சி  நடக்கரதுன்னு அவ எண்ணத் தொடங்குவள்” 

“சரி அண்ணா, நீ போயிட்டு வா. நான் பார்த்துக்கறேன்.. ஆனா ஒண்ணை நீ ஒறமை வைச்சுக்கணம்…”

“என்னடா அது சகஸ்ரம்?” 

“பாரதிக்கு இப்ப ஒரு சின்ன ஆட்டம் தான் கண்டிருக்கு. அவளோட பிஎச்.டி. ஆசை குறைஞ்சுட்டில்லை” 

“தெரியும்”

பாரதி ரேழியில் நின்றபடி எதிர்வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள். 

மணி ஆறு முப்பத்தைந்து.

அவளிடம் அவசரம் காட்டிய அவர் இருபது நிமிடங்கள் சகஸ்ரத்தின் வீட்டில் தங்கியிருக்கிறார்! 

ஏன்? 

அவருக்கும் அவளுடைய அப்பா மௌனிக்குமிடையே ஏதாவது தர்க்கமா? ஒருவரை ஒருவர் வாய் வார்த்தைகளால் தாக்கிக் கொண்டார்களா? ஈசுவரனை வழி அனுப்ப அப்பா வாசல் வரை வரவில்லை. இதற்கு என்ன அர்த்தம்? 

இருவருக்கும் சிண்டு முடிக்கிறவன் நிச்சயமாக சகஸ்ரமாகத்தான் இருக்கும். 

சிந்தனையில் மனம் வலிக்க பாரதி உள்ளே சென்றாள். 

அன்று இரவு படுக்கச் சென்றபோது. நடந்ததையெல்லாம். எண்ணிப் பார்த்தாள் அப்பா பேசிய வார்ததைகள் எல்லாம் காதில் மோதி ஒலித்தன?

எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணம் யார்? சகஸ்ரம் அல்லன். ஈசுவரன் அல்லன். அப்பா, அம்மா அல்ல. நிச்சயமா நாராயணனும் அல்லன். 

பின் யார்? 

யார்?

அவள் தான்.

அவளுடைய பி.எச்.டி., வெறிதான். இந்த வெறியை இவ்வளவு முற்றிய பிறகு எப்படி அடக்குவது? அடக்கா விட்டால் என்ன ஆகும்? வெறி தீரும். ஆசை நிறை வேறும். 

ஆனால் இந்த பிஎச்.டி.யைவிடப் பல்லாயிர மடங்குப் பெரிதாக ஒன்று இருக்கிறதே? 

அது என்ன? 

என்ன என்பதை பாரதி கண நேரத்தில் புரிந்து கொண்டாள். 

அவள்தான் புத்திசாலிப் பெண்ணாயிற்றே! 

அத்தியாயம்-23

கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக அதிகாலையில் எழுந்திருப்பதும், குளித்துவிட்டுச் சமையலறையினுள் பிரவேசித்து வேலையை ஆரம்பிப்பதும் பாரதிக்குப் பழக்கமாகிவிட்டது. சின்னவயதிலிருந்து சூரிய உதயத்தையே பார்த்திராத பாரதி எங்கே போனாள்? மற்றவர்கள் பவாந்தப்படுத்தி இருந்தால் நிச்சயமாக அவள் அவர்களுக்குப் பணிந்து போயிருக்க மாட்டாள். ஈசுவரன், தாத்தா மற்றும் பட்டி அவளை அன்பால் கட்டிப்போட்டார்கள். அதிகம் பழகியே இராத கமலம் அவளிடம் நெகிழ்ச்சியுடன் நடந்து கொண்டாள். ஒரு நாள் காலை மிகவும் தாமதமாகப் படுக்கையிலிருந்து எழுந்ததைத் தங்கம்மா தவிர வேறு யாரும் கண்டிக்க வில்லை. உடம்பு சரியில்லையோ என்று கனிவாகத்தான் விசாரித்தார்கள். பாரதியே வெட்கிப் போனாள். அதன் பிறகு மிகவும் சிரமப்பட்டு நாலு, நாலே காலுக்கு தூக்கத்தை உதறி எறியத் துவங்கினாள். 

நேற்று நடந்த சம்பவம் அவருடைய இந்தப் பழக்கத்தைச் சிறிதும் பாதிக்கவில்லை. இன்றும் அவள் நான்கு மணிக்குக் கண் விழித்தாள். 

தாத்தா மற்றும் பாட்டிக்கு காப்பி உபசாரம் செய்து விட்டு சமையலறைக்குத் திரும்பியபோது தேவகியின் நினைவு திடீரென்று அவளைத் தாக்கியது. ஏன் என்ற காரணம் தெரியவில்லை. தேவகி அவளுடைய உள்மனத்தில் ஒரு சிறு புள்ளியாக ஒளிந்து கொண்டிருந்தாள் போலும். அவளைப் பார்த்தாக வேண்டும். அவளுடன் பேச வேண்டும். அவள் வாழ்க்கையில் முன் அறிவிப்புஇல்லாமல் ஒரு பரீட்சை நடக்கிறது. அக்னிப் பரீட்சை. இதற்கு தன்னைத்தானே தயாராக்கிக் கொண்டதில்லை. அவள் எப்படித் தயார் செய்வது என்றும் புரியவில்லை. ஒரே குழப்பம். தேவகி அவளைவிட ஓரிரு வயது சிறியவள்தான். ஆனால் அவளைப் போலப் படித்தவள். அவளைவிட நன்றாக எதையும் அலசி ஆராய்ந்து பார்த்துப் பேசத் தெரிந்தவள். அவளுடைய சில கருத்துகளின் பாரதிக்கு உடன்பாடு இல்லாமற் போனாலும் தன் கருத்துகளை விருப்பு வெறுப்பின்றி தேவகி வெளியிடுகிறாள் என்ற எண்ணம் தோன்றியது. இந்த ஊரில் யாரிடம் அவள் தன் பரீட்சையில் தேற யோசனை கேட்பாள்? தாத்தா பாட்டிக்கு விஷயமே தெரியாது. தங்கம்மாவை நினைத்துப் பார்க்கவே கூடாது. 

சகஸ்ரம் நிஜமா போலியா என்றே தெரியவில்லை. நாராயணனோ. அல்லது ஈசுவரனோ வீட்டில் இல்லை. அப்படியே இருந்திருந்தாலும் தம்முடைய கண்ணோட்டத்தில்தான் அவளுடைய பிரச்சினையை அணுகுவார்கள். சித்தியிடம் கேட்கலாம். ஆனால் அந்தரங்கங்கள் பேசும் அளவுக்கு அவளைத் தெரியாது. அப்பா சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். விவாகரத்து என்று ஒரு பெரிய வார்த்தையைக் காட்டி அவளைப் பயமுறுத்தப் பார்த்தார். 

அவள் விவாகரத்தைப் பற்றிப் பயப்படவில்லை. ரத்து ஏற்படுவதும் ஏற்படாததும் அவள் கையில் மட்டும் இல்லை. இரு தரப்பினர் எதிர் எதிரே நின்று நடத்தி முடிக்க வேண்டிய சடங்கு. விவாகரத்தில் அவளுடைய வாழ்க்கை ஓரளவுக்குப் பாதிக்கப்படலாம். அவ்வளவு தான். அது குலைந்தோ அழிந்தோ போய்விடாது. இப்போது இருக்கும் ஓர் ஆண் துணை இல்லாமல் போகும். இதற்காக அவள் வாடி வதங்கிச் சீரழித்து போய்விட மாட்டாள். லட்சக்கணக்கான விவாகரத்துகள் ஆண்டு தோறும் நாட்டில் நடக்கின்றன. அவர்களில் அவளும் ஒருத்தி ஆவாள். அவ்வளவுதான். அதன் பின்னர் இனனோர் ஆண் துணையைத் தேடி அலைவதோ தனிமரமாக மொட்டை மரமாக நிற்பதோ எதிர்காலம் நிர்ணயிச்சு வேண்டிய விஷயம். 

அவள் முன் எழுந்துள்ள கேள்வி ஒன்றுதான். குழந்தைகள் விளையாடும்போது காயா பழமா என்று ஒரு கேள்வி கேட்டுக் கொள்வார்கள். காய் என்றால் தோல்வி பழம் என்றால் வெற்றி.

அவளுடை பரீட்சையில் காய் கிடைக்கப் போகிறதா, பழம் கிடைக்கப் போகிறதா என்பது அன்று பிரச்சினை பரீட்சையை மேலும் நடக்கவிடாது தடுப்பதா இல்லையா என்பதுதான். பிரச்சினை எதிர்க்கட்சியினர் ஆரம்பித்ததை முளைப்லேயே கிள்ளி எறிய லேண்டியதுதானா? அல்லது வளரவிட வேண்டுமா? 

அவள் அன்று தேவகியைப் பார்த்தே தீர்வாள்.

சமையல் வேலையை ஆரம்பித்தாள். நேற்று சாம்பார் அதனால் இன்று அது இருக்கக் கூடாது. நேற்று ரசம் இல்லை. அது இன்று இருக்க வேண்டும். அந்த வீட்டுப் பழக்க வழக்கத்துக்கு ஏற்றவாறு சமையல் செய்ய வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றபடி காய்கறிகளைத் தேர்ந்தெடுத்தாள். கடிகாரத்தைப் பார்த்தாள் ஐந்தே முக்கால். ஆச்சரியப்பட்டாள். கடிகாரத்தின் முள் தாவித்தாவி ஓடவில்லை. நேரம்தான் ஓடுகிறது. 

ஒன்பதரைக்குள் நிச்சயமாகச் சமையல் வேலைமுடிந்து விடும். காலை உணவில் தாத்தா பாட்டி இருவருக்குமே நாட்டமில்லாதது சௌகரியமாகப் போயிற்று. 

இன்று தங்கம்மா பரிமாறிக் கொள்ளட்டும். பத்து அல்லது பத்தரைக்குள் தேவகியின் வீட்டில் இருக்க வேண்டும். 

இடை இடையே அத்தை மாமியாராக, ராட்சச வேகத்தில் வந்து கோஷித்தாள். பாரதி லட்சியமே செய்யவில்லை. இரு கைகளும் சேர்ந்தால்தானே சத்தம் பிறக்கும். அவள் தன் கையைக் கட்டிப் போட்டுக் கொண்டு, வேலையில் கவனத்தைச் செலுத்தினாள். 

நினைத்ததற்கு முன்பாகவே அவளுடை வேலை முடிந்துவிட்டது. கடிகாரத்தில் இப்போது மணி ஒன்பது ஆகச் சில நிமிடங்கள். 

டெலிபோன். 

“குட்மார்னிங் தேவகி, பாரதி பேசறேன்”. 

“ஹாய் பாரதி எப்படி இருக்கே? நானே உனக்கு. போன் பண்ணனும்னு ரெண்டு நாளா நினைச்சுட்டிருந்தேன்” 

“நீ ஃப்ரீயா?” 

“ஃப்ரீ இல்லேன்னாலும் உனக்காக ஃபரீ பண்ணிப்பேன், எப்ப வர்றே? நான் கார் எடுத்துட்டு வரட்டுமா?” 

“நோ வேண்டாம். நான் ர் ஆட்டோ பிடிச்சு வர்றேன். உன் வீடு இருக்கிற இடம்தான் சரியா பிடிபடலே.” 

“வொர்ரி பண்ணிக்காதே.சந்திரா நகர்னு சொல்லு. அல்லது வசந்தம் ஷிப்பிங் நாயர் வீடுன்னு சொல்லு”.

“ஓகே! தேவகி” 

“லஞ்ச் என் கூடத்தான் ” 

“சரி”

“உன் மதர்-இன்-லாவைப் பாம்பு கடிச்சுதாமே?”

“உனக்கு எப்படித் தெரியும்?” 

“உங்க ஊர்ல இருக்கிற அம்பாஸிடர் போன் பண்ணிச் சொன்னார். உன் புடைவை  தலைப்பிலே இப்பக் கொஞ்சம் காணோம் இல்லே?”

“நேர்ல பேசுவோம்” டெலிபோன் ரீசீவரை லைத்து விட்டு அவள் மாடியை நோக்கி நடக்க, 

“எங்கே போறே?” என்ற கேள்விக் குரல் கேட்டது.

பார்த்தால் தங்கம்மா.

“தேவகி வீட்டுக்கு.” 

“எதுக்கு?”

“பார்க்க, பேச” 

“என்ன பேச?” 

“அது சொந்த விஷயம்”. 

“இப்ப என்ன பேசினா?”

“உங்களைப் பாம்பு கடிச்சதைப் பத்தி!”

பாரதி நகர்ந்தாள். 

“பாட்டா பாட்டிக்கு யார் பரிமாறுவா?”

”ஆபீஸ்ல ஒருத்தர் லீவ்ல போனா அஸர் வேலையை இன்னொருத்தர் கவனிக்கிறதில்லையா? நான் லீவு!”

அடுத்த கணம் மாடிக்கு ஓடினாள் 

அலமாரியைத் திறந்தாள். நாராயணன் வாங்கித் கொடுத்திருந்த ஆறு புடைவைகள் கண்ணில் பட்டன. அவற்றில் ஒன்றை எடுத்துக் கட்டிக்கொள்ளத் தோன்றியது. இணையான நிறத்தில் சோளி வேணுமே? தையற்காரனிடமிருந்து இன்னும் வரவில்லை. இரத்தச் சிவப்பிற்கு இணையாக அவளிடம் ஒரு சோளி இருக்கிறது. 

வெளியே வந்தாள் 

இருபுறமும் பாராமல் நடந்தாள். கிராமவாசிகள் முதன் முறையாக அவள் தனியாக நடந்து போவதைப் பார்க்கிறார்கள். பார்க்கட்டுமே? விமரிசனங்கள் செய்கிறார்கள்! கவலை இல்லை. 

ஆதித்ய புரத்தைத் தாண்டிச் சென்று நான்கு பாதைகளின் சந்திப்பை அடைந்தாள். 

ஐந்தாறு ஆட்டோக்கள் நின்று கொண்டிருந்தன.

‘சந்திரா நகர்’ என்று சொல்லிவிட்டு ஏறினாள்….

‘ஷிப்பிங் நாயர் வீடு எங்கே இருக்கிறது?’ என்று ஆட்டோ டிரைவருக்குத் தெரிந்திருந்தது. 

பணத்தைக் கொடுக்கக் கைப்பையைத் திறந்தபோது தான், தன்னிடம் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ரூபாய் இருப்பதை அவன் உணர்ந்தாள். ஊருக்குப் புறப்படு முன் அம்மா அவளுடைய கைச் செலவுக்கென்று ஆயிரம் ரூபாய் கொடுத்திருந்தாள். கிரஹப் பிரவேசத்தின்போது நமஸ்காரம் பண்ணி எழுந்ததற்குப் பரிசாக நூறு ரூபாய், ஐம்பது ரூபாய் நோட்டுகள் சில கிடைத்திருந்தன. ரெடிமேட் ஆடைகள் வாங்கச் சென்றபோது நாராயணன் ஆயிரம் ரூபாய் கொடுத்திருந்தான். மிச்ச பணத்தை அவன் வாங்கிக் கொள்ளவில்லை. 

ஆட்டோ நின்ற இடத்தில் அவள்தான் பெரும் பணக்காரி, டிரைவர் கேட்டதைக் கொடுத்து விட்டு காம்பவுண்டுக் கதவைத் தள்ளினாள். வாயிற் காப்போன் சலாம் அடித்தான். புன்னகையால் சலாத்துக்கு நன்றி தெரிவித்து விட்டு அவள் தேவகியின் வீட்டை நோக்கி நடந்தாள். 

ஆட்டோவை வீட்டு வாசல் வரை ஓட்டச் சொல்லி இருக்கவேண்டும் என்று பாரதி தன்னுள் நினைத்துக் கொண்டாள். 

அவளைக் கண்டதும் தேவகி ஆரவாரமாய் வரவேற்றாள். ஹாலுக்குள் வந்ததும், “தேவகி, முதலில் தண்ணி தா. கூல் வாட்டர்!” என்றாள். ஐஸ் வாட்டராக இல்லாமல் அவள் கேட்டபடி மிகவும் தண்மையாகத் தண்ணீர் வந்தது. மடக் மடக்கென்று இரண்டு தம்ளர் குடித்தாள்.

“டிபன் சாப்பிட்டது நெஞ்சைக் கரிச்சுதா?” 

“கார்த்தாலே காப்பி குடிச்சதுதான்”. 

“அப்பப் பசிக்கிறதா?” 

“பசி அடைச்சுப் போச்சு” என்ற பாரதி “தேவகி, புதுசா ஒரு ப்ராப்ளம்!” என்றாள்.

“என்ன பிராப்ளம்?” 

“டிவோர்ஸாகும் போலிருக்கு”. 

”வாட்? என்ன பேத்தறே, பாரதி?”

“இன்னும் ஆகலே. ஆகும்போல இருக்குன்னுதான் சொல்றேன்.” 

”விவரமாகச் சொல்லு”. 

சொன்னாள். 

“எல்லாரும் விரோதிகளா நடந்து கொள்றாங்களா?”

“இல்லை”. 

“சொல்லப் போனா எல்லாருமே-மாமியாரைத் தவிர-ரொம்ப அன்பாகத்தான் நடத்தறங்கு” 

“அப்ப என்ன காரணம்?” என்ற தேவகி சற்று யோசித்துவிட்டு, 

“உன்னுடைய பிஎச்.டி…பிளான்தானே?” என்று கேட்டாள். 

“அப்படித்தான் படறது” என்ற பாரதி தொடர்ந்து, “நான் ரெண்டு ரெண்டரை வருஷத்துக்கு வெளியூர்ல இருப்பேன் இல்லியா? நான் திரும்பி வர்ற வரைக்கும் அவங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது” என்றாள்.

”நீ சொல்ற ரெண்டு ரெண்டரை வர்ஷத்துக்கு அப்புறம் – நீ டாக்டரேட் வாங்கினத்துக்கு அப்புறம் – உன் மனோபாவமும் மாறும் இல்லியா?” 

“அதை இப்போ – எப்படிச் சொல்ல முடியும் தேவகி? திரும்பி வரணும்ங்கற எண்ணத்தோடுதான் புறப்படுவேன்”. 

“எண்ணம் மாறாதுன்னு உனனால் உறுதியாச் சொல்ல முடியாது”. 

“ஒத்துக்கறேன்” 

“உன் எண்ணமும் மனோபாவமும் மார்றதுன்னு வைச்சுப்போம், அப்ப உனக்கு இந்தப் பள்ளிப்புரத்துக்கு திரும்பி வரவே பிடிக்காது”. 

“பிடிக்காமல் போகலாம்.” 

“நாராயணன் நீ இழுக்கிற இடத்துக்கு வந்து உன்னோடு வாழ்க்கை நடத்தத் தயாராக இருக்கமாட்டான்.”

“நிச்சயமாக மாட்டார்.” 

“இதையெல்வாம் இப்பவே தீவிரமா நினைச்சுப் பார்த்துத்தான் அவங்க இப்படி ஒரு முடிவை எடுத்து உன் மடிமேல போட்டிருக்காங்க. நிச்சயமா உன்னை பிடிக்கலேன்னோ, உன்னை வெறுத்துப் போயோ முடிவு செய்யலே.” 

“ஓகே, ஒத்துக்கறேன். ஆனா இப்ப என்ன செய்யறது?” 

“ஹாப்ஸன்ஸ்-சாய்ஸ்…” 

“நான் எம்.ஃபில்தான். இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்னு இன்னும் நான் தெரிஞ்சுக்கலே தேவகி” 

“ரெண்டில் ஏதாவது ஒண்ணை நீ எடுத்துக்கலாம். இரண்டாவது என்ன தெரியுமா? ஒண்ணுமில்லை. அதாவது தத்தை வாங்கிக்கோ. இல்லேன்னா ஒண்ணை வாங்கிக்கோ.” 

“புரியறது”. 

“பதினாறாவது நூற்றாண்டிலே இங்கிலண்ட்ல தாமன் ஹாப்ஸன்னு ஒருத்தன் இருந்தான். அவன் என்ன செய்தான் தெரியுமா? தன் குதிரைகளை வாடகைக்கு விடறப்ப, லாயத்துக் கதவுக்குப் பக்கத்திலே இருக்கிற குதிரையைத்தான் எடுத்துக்கலாம்பான். முடியாதுன்னா கிடையாதும்பான்.” 

“அது மாதிரி?” 

”ஒன்று வாழ்க்கை! இல்லாமப் போனா ஒண்ணு ல்லை. நீ வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கப் போறியா? இல்லே ஒண்ணுமில்லாததை ஏத்துக்கப் போறியா?” 

“ஒண்ணுமில்லேன்று எப்படிச் சொல்ல முடியும் தேவகி.” 

“ரெண்டுல ஒண்ணு. ஃபர்ஸ்ட் வாழ்க்கை! இன்னொன்னு பிஎச்.டின்னு உன் மனசு கணிக்கு போடறது. ஆனா அவங்க ஒண்ணு குடும்பத்தில் இடம். இரண்டு ஒண்ணுமில்லே, நத்திங். இப்படீன்னா ஈசுவரன் நினைக்கிறார்?” 

“நிச்சயமாக இப்படிப்பட்ட குயுக்தியான யோசனை அவர் மண்டையிலிருந்து உதிச்சிருக்காது. நீ கார்த்தால் சொன்ன அம்பாஸிடராகத்தான் இருக்கும்”. 

“இப்ப யார் மண்டைங்கறதா முக்கியம் பாரதி? முடிவு செய்ய வேண்டியவன் நீ”.

“குழப்பமா இருக்கு தேவகி.” 

“இதில் குழம்ப ஒண்ணுமே இல்லை. அன்னிக்குச் சொன்னதைத்தான் இப்பவும் சொல்றேன். நீ பிஎச்.டிக்கு போகணும்ங்கறது மனத்தோட ஆசை. ஆனா ஆசை இருக்கிற அதே மனசிலே, நல்ல வாழ்க்கை வாழணும்ங்கற லட்சியமும் இருக்கு, இதை உணரலே, அதான் குழப்பமா இருக்குன்னு பேத்தறே!” 

“நீ வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாப் பேசறே, தேவகி”. 

“அதுக்குக் காரணம் மத்தவங்க திருப்திக்காக நான் பேசறதில்லே.”

“நீ உன் எம்ஃபில்லைப்பத்தி என்ன முடிவு எடுத்தே?”

“என் முடிவைத் தெரிஞ்சுக்கவா பாரதி நீ இப்ப இங்கே வந்திருக்கே? உன் ப்ரோப்ளத்தைப் பார்ப்போம்” என்ற தேவகி.

“நாராயணன்ட்ட இதுபத்திப் பேசினாயா?” என்றாள். 

“கோழிக்கோடு போனவர் இன்னும் திரும்பலே. அவர் முந்தாநாள் போனார். இது நேத்து முளைச்சுது.”

“ஈசுவரன்ட்டே?” 

”அக்கு வேறு, ஆணி வேராப் பிரிச்சு அலசி அவர்ட்ட பேசிடந்துன்னு நேத்து சாயங்காலம் திட்டம் போட்டேன். ஆனா அவர் கிடைக்கலே. எர்ணாகுளம் போயிட்டார்.”

“வேறு யார்ட்டேயும்…?”

“யார் இருக்கா?” 

“அத்தை-கம்-மாமியார்.” 

“இப்ப மாமியார் மட்டும்தான். அவ ரெடியா இருக்கா! என்னைத் துரத்தறதுக்கு” 

“ஏன்?” 

“ஏதோ காம்ப்ளக்ஸ்” 

“பிள்ளைக்கு மனைவி வந்தாலே சில அம்மாக்களுக்கு பொறுக்கறதில்லே. காம்ப்ளக்ஸ் வந்துடறது. பொஸஸிவ் ஃபிலீங்ஸ். ஆனா இது மெல்ல மெல்ல அடங்கிப் போயிடும்”. 

“நான் அவளைப் பத்திக் கவலைப்படலே, தேவகி!”

“நீ எதைப்பத்திக் கவலைப்படறேன்னே எனக்கு இன்னும் புரியலையே பாரதி” 

“என் நிலைமையைச் சொல்லிட்டேன்.” 

“இதப்பார் பாரதி, ஒரு கர்ப்பப் பையிலே இரண்டு குழந்தைகள் உருவாகலாம். ஆனா ஒரு மனசுக்குள்ள ஒண்ணை ஒண்ணு மோதிக்கிற ரெண்டு எண்ணங்கள் இருக்கப்படாது. சஞ்சலமும், குழப்பமும் அதனாலதான் உண்டாறது. திரும்பவும் சொல்றேன். உனக்கு இப்பத் தான் கல்யாணமாகியிருக்கு. பொல்லாத புருஷனா இல்லாம நல்லவன் ஒருவன் வாய்ச்சிருக்கான். அவனுக்கு நல்ல மனைவியா வாழ்றது லட்சியம். நீ எம்ஃபில் படிச்சவ. பிஎச்.டி. போக மனசு துடிக்கிறது. ஒண்ணு ஆசையைத் துரத்தி அடிச்சுட்டு மனைவியா இரு. இல்லே புருஷனைத் தூக்கி எறிஞ்சுட்டு ஆசையை நிறைவேத்திக்க ஓடு”.

“கேக்கும், பிஸ்கட்டும் தரேன். லஞ்ச் ஒரு மணிக்குத் தான். அதுவும் ஓட்டல்லே.” என்றாள் தேவகி. 

“ஓட்டலா?” 

“ஒரு ஏ கிளாஸ் ராஜஸ்தானி ஓட்டல் இருக்கு. பூரி சப்ஜி பிரமாதமா இருக்கும்”. 

“சரி” என்ற பாரதி, “மிஸ்டர் கைலாசம் வீட்ல இருப்பாரா” என்றாள். 

“பார்க்கணுமா?” 

“தோண்றது”. 

“அப்ப பன்னண்டு மணிக்கே சாப்பிடப் போவோம். உனக்கு கேக் பிஸ்கட் கிடையாது. காப்பி மட்டும்தான்.” 

“அதுவும் வேண்டாம் தேவகி” என்ற பாரதி டீப்பாயின்மேல் இருந்த கண்ணாடிக் கூஜாவிலிருந்து தண்ணீரை எடுத்து தம்ளர் தம்ளராசுக் குடித்தாள். 

என்ன தாகம் இவளை இப்படி வாட்டுகிறது?

தேவகி யோசித்தாள். 

அத்தியாயம்-24

தேவகியின் மாருதி என்பது கிலோ மீட்டர் வேகத்தில் கோயமுத்தூர் சாலையில் ஓடியது. 

வண்டி கஞ்சிக்கோடு என்னும் சிறிய ஊரைக் கடந்து வாளையாருக்குள் பிரவேசித்தது, லாரிகளின் போக்குவரத்து அதிகமாகிக்கொண்டு வரவே, மாருதியின் வேகம் குறைந்தது. 

“அம்பது வர்ஷம், அறுபது வர்ஷம் முன்னால இங்கே யெல்லாம் காடு ரொம்ப அடர்த்தியாக இருந்ததாம். யானை, புலி, சிறுத்தை, ஓநாய்னு எல்லா மிருகங்களும் சகஜமாத் திரியுமாம். வாளையார் ரெயில்வே ஸ்டேஷன்ல ஸ்டேஷன் மாஸ்டர் முப்பது அடி உயரத்தில்தான் இருப்பார்: அவருடைய அறையை அப்படி உயரமாகக் கட்டியிருந்தாங்க. திடீர் திடீர்னு யானைக் கூட்டம் வரும். ரெயில் போக விடாம தண்டவாளத்தில் நிக்கும். உம், அதெல்லாம் பொற்காலம். ஆனா காடு இன்னும் முழுசா அழியலே. போகப் போக உனக்கே தெரியும்” எனறாள் தேவகி. 

காடும், மிருகங்களும் பாரதியின் மனத்தில் ஒட்டவில்லை. அவளுடைய மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது. பிஎச்.டியா? நாராயணனா? 

கார் வாளையார் ரெயில்வே ஸ்டேஷன் அருகே வந்து நின்றது. 

“நீ ரெண்டு கிலோ மீட்டர் நடக்கணும்” என்றாள் தேவகி. 

பாரதி இறங்கினாள். 

ஒரு ஒற்றையடிப் பாதையில் இருவரும் நடந்தார்கள், பாரதிக்குக் கால் வலிக்க ஆரம்பித்தது. இரண்டு கிலோ மீட்டர் என்று தேவகி கூறினாள். ஏற்கனவே அரைமணி நேரம் நடந்தாகிவிட்டது. 

திடீரென்று ஒரு சிறு வெட்டவெளியும், பனை ஓலை வேய்ந்த மண் சுவர்க் கட்டடங்களும் தெரிந்தன. 

“கைலாசத்துக்கு வந்து விட்டோம்” என்று கூறி தேவி சிரித்தாள். 

அவர்கள் சென்றபோது கைலாசம் ஒரு பெரிய அறையில் தரையில் உட்கார்ந்து பாடம் நடத்திக் கொண்டிருந்தார். மாணவ மாணவிகளைப் பார்த்தாள். எட்டு வயதிலிருந்து முப்பது வயது வரை, ஏறக்குறைய இருபது பேர் இருந்தனர். 

அறைக்கு வெளியே நின்ற இருவரையும் கைலாசம் பார்த்துப் புரிந்து கொண்டாலும், தம் வேலையை நிறுத்தவில்லை. கண்களாலும் சமிக்ஞை செய்யவில்லை. 

“வா, பாரதி” என்று தேவகி கூற, இருவரும் நகர்ந்தார்கள். 

இப்போது வெட்டவெளியில் பல பெண்கள் கீழே உட்கார்ந்து பற்பல வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். ஓரிருவர் பிரம்பு நாற்காலி வேலையில் மூழ்கி இருந்தனர். இரண்டு சிறுவர்களும், சிறுமிகளும் மரத்துண்டுகளைச் செதுக்கிக் கொண்டிருந்தார்கள். ஒருவன் அருகே பம்பரம். ஒருத்தி அருகே முருகன். இன்னொருத்தியின் கையில் யானை. எல்லாம் பொம்மைகள். 

“மிஸஸ் மீனாட்சி அங்கே இருப்பா” என்ற தேவதி இன்னோர் அறையை தோக்கி நடந்தாள். 

நான்கு பெண்கள் தையல் மிஷின்களில் வேலை செய்து கொண்டிருக்க மீனாட்சி ஒவ்வொருவர் அருகேயும் சென்று மேற்பார்வை செய்தாள். 

அவர்களைக் கண்டதும், “இன்னும் பத்து நிமிஷம் நங்க காத்திருக்கணும். இரண்டரை மணிக்கு வகுப்பு முடியும்” என்றாள். ‘சரி’ என்ற தேவகி, பாரதியிடம், “கார்த்தால எட்டரை மணிக்கு ஸ்கூல் ஆரம்பிக்கும். தேசிய கீதத்தோட ரெண்டரைக்கு முடியும். சில பேர் காட்டுக்குள்ளே ரொம்ப தூரத்திலே மலை அடிவாரத்தில் இருக்காங்க. அவங்க மட்டும் பத்து மணிக்கு வரலாம்” என்றாள். 

“அப்ப கைலாசத்தைச் சந்திக்க இன்னும் பத்து நிமிஷம் இருக்குன்னு சொல்லு” 

“ஆமாம்”. 

பாரதி பொறுமை இழந்தாள். அவளுடைய பிரச்னையை கைலாசம் ஒரே நிமிஷத்தல் தீர்த்துவிடப் போவதில்லை என்பதை அவள் உணர்த்திருந்தாலும் மனத்தின் அவசரத்தை அவளால் சுட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஒரு வழியாக கைலாசமும் வெளி வந்தார். மாணவ மாணவிகள் விரைவாக இடத்தைக் காலி செய்தார்கள். 

“இங்கேயே உட்கார்ந்து பேசலாம்” என்று கைலாசம் அழைக்க இருவரும் அங்கே வந்தார்கள். 

”செருப்பு, வெளியே ப்ளீஸ்”. 

பாரதி சுழற்றி வைத்துவிட்டு உள்ளே சென்றாள்.

”உட்காருங்க.’ 

சொல்வதற்கு முன்பாகவே தேவகி கோரைப் பாயில் உட்கார்ந்தாகிவிட்டது. தரையில் உட்கார்ந்து பழக்கப் படாத பாரதி புடைவையைச் சரி செய்துவிட்டு சிரமத்துடன் உட்கார்ந்தாள். 

“அன்னிக்கு நாராயணன் வந்தான். திடீர்னு அவன் தாயாரைப் பாம்பு கடிச்ச செய்தி வந்தது. சங்குண்ணி சிகிச்சையைச் செய்து முடித்து அவனுடைய அம்மா வீட்டுக்குப் புறப்பட்டுப் போன பிறகு மறுபடியும் வந்து சொல்லிவிட்டுப் போனான்” என்றார் கைலாசம். 

“அதான் கொஞ்ச லேட்டா வந்தார் வீட்டுக்கு!” என்றாள் பாரதி 

“கைவாசம் சார், நாங்க இப்ப எதுக்கு வந்திருக்கோம் தெரியுமா?” என்றாள் தேவகி. 

“சொன்னாத்தான் தெரியும்.” 

“பாரதிக்கு ஒரு ப்ரோப்ளம்” 

“என்ன பிரச்சினை பாரதி”

“தேவகி நீயே சொல்லு” 

“அதுக்கென்ன சுருக்கமாச் சொல்லிடறேன்” 

தேவகி ரத்னச்சுருக்கமாகப் பிரச்சினையைக் கூறினாள்.

“இது ஒரு பிரச்சினையாகவே படவில்லை எனக்கு” என்றார் கைலாசம். 

“இவ மண்டையைப் போட்டு உடைச்சுக்கறா, சார்” என்றாள் தேவகி. 

“அதுக்கு காரணம் பாரதிக்கு எது அத்தியாவசியம், எது அவசியம், எது அனாவசியம்ங்கற பாகுபாடு தெரியலே” 

“கொஞ்சம் விவரமாச் சொல்லுங்க சார்!” என்றாள் தேவகி. 

“ஆணானாலும் சரி, பொண்ணானாலும் சரி, சின்ன வயசில் துறவியாப் போகலேன்னா மணவாழ்க்கை அத்தியாவசியம். யாராயிருந்தாலும் அறிவை வளர்க்கிற கல்வி அவசியம். ஒரு நிலையைத் தாண்டி வர்றப்ப வாழ்க்கையின் தேவைக்காக மேற்படிப்பு அவசியம். அப்படி வாழ்க்கைக்குத் தேவைப்படாதுன்னா அது அனாவசியம்”. 

“அப்ப நான் ஆசைப்படற பிஎச்.டி,?”

“பிஎச்.டி., படிச்சுட்டு என்ன செய்வே? ஏதானும் வேலையில் சேருவியா? வேலையிஸ சேர்ந்தாத்தான் வசதியா வாழ முடியும நினைக்கிறாயா? ஒரு தொண்டும் செய்யற எண்ணம் இல்லாம, வசதியா வாழ சௌகரியம் இருக்குன்னா, அந்த மேற்படிப்பால யாருக்கு என்ன லாபம்? நீ எம்.ஃபில! அன்னிக்கே சொன்னே! இப்ப எல்லாம் ஞாபகத்தில இருக்கா?” 

“இல்லே” 

“எப்படி மறந்து போச்சு?” 

படிச்சதைப் பிரயோகம் பண்ணாததாலே பிஎச்.டி. படிச்சுட்டு மறுபடியும் சமையலறை மட்டுமே போதும்னு நீ முடிவு எடுத்தா, ஒண்ணு ரெண்டு வர்ஷத்திலே என்ன படிச்சோம்ங்கற நினைப்பே வராமப் போகும். ஆதாரமான கல்வி ஞானமும், அறியும் உனக்கு இருக்கு. அறிவு வளர்ச்சியிலும், உனக்குப் பிடிச்சிருக்கிற ஆங்கில இலக்கியத்திலும் உனக்கு உண்மையான நாட்டம் இருக்குன்னா அதை நீ வீட்ல உட்கார்ந்துக்கிட்டே வளர்த்துக்கலாம். அதில ஒரு தனி சுகமும், மகிழ்ச்சியும் கிடைக்கும். எந்த விதி முறைகளுக்குள்ளேயும் நீ அடங்கிப் போக மாட்டாய் என்ன? பிஎச்.டின்னோ, டாக்டர்னோ பெயருக்குப் பின்னாலேயும் முன்னாலேயும் போட்டுக்க முடியாது. அவ்வளவுதான். 

நான் ஃபாரஸ்ட்ரியில் டாக்டர் பட்டம் வாங்கினேன். இன்னிக்கும், காடுகள் சம்பந்தமா படிச்சுட்டிருக்கேன். படிக்கிற காலத்திலே படிப்பு ஒரு சுமையா இருந்தது. தீஸிஸ் சரியா இருக்குமோ இருக்காதோன்ற கவலையும், பயமும் வந்தது. ஏதானும் விட்டுப் போய் விட்டதோங்கற கிலேசமும் உண்டாச்சு. ஆனா இப்ப ‘ஐம் எ ப்ரிமேன்…’ இன்னிக்குப் புதுசா ஒண்ணுக் கத்துக்கறப்ப நேத்து வரை முட்டாளா இருந்தோங்சுற வெட்கம் வர்றது. வெட்கம்தான் நம்ப அறிவு வளர்ச்சியை ஊக்குவிக்கிறது” 

“இவ்வளவு தூரம் சொனை நீங்க என் பிரச்சினைக்குத் தீர்வு சொல்லலே சார்!” என்றாள் பாரதி. 

கைலாசம் சிரித்தார். 

“நான் பொதுவாத்தான் பேச முடியும் பாரதி. மதக் குருக்களாலகூடத் தனி மனிதனோட பிரச்னையைத் தீர்த்து வைக்க முடியாது. ஒரு சமூகத்துக்குத்தான் அவங்களால புத்தி சொல்ல முடியும். உன் பிஎச்.டி, உன் சொந்த விஷயம். உன் மணவாழ்க்கை உன் சொந்த விஷயம். தராதரம் பார்த்து விளைவுகளைப் பத்திச் சிந்திச்சு, இந்த சமூகத்திலே எப்படிப்பட்ட ஸ்தானத்தை அல்லது இடத்தை நீ விரும்பறேங்கறதைத் தீர்மானம் செய்ஞ்சு முடிவு எடுக்க வேண்டியவளும் நீயே. நான் அல்ல” 

இதற்கு மேல் அவரிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை என்று பட்டது பாரதிக்கு.

“ரொம்ப தாங்க்ஸ் சார்… உங்க மிஸஸ் எங்கே காணோம்?” 

“அதோ உட்கார்ந்திருக்கா. பின்னாலே பாரு!”

“நான் அவா உள்ளே வந்ததை அப்பவே கவனிச்சுட்டேன்” என்றாள் தேவகி. 

திரும்பி வரும்போது தேவகி, பாரதியின் பிரச்சினையைப் பற்றி எதுவுமே பேசவில்லை. மாறாகத் தன்னைப் பற்றி கூறத் தொடங்கினாள். 

”நீ, கார்த்தால கேட்ட கேள்விக்கு இப்ப பதில் சொல்லப் போறேன் பாரதி” 

“நான் என்ன கேட்டேன்?”

“எம்.ஃபில் பத்தி முடிவு எடுத்தாச்சான்னு கேட்டே!”

“ஆமாம்..” 

“நான் எம்.ஏ.மட்டும்தான். நோ. எம்.ஃபில்.”

“அப்பா வேண்டாம்னு சொன்னாரா?” 

“என் படிப்பு விஷயத்தில் அப்பா தலையிடறது இல்லை. நானாக யோசனை செய்த முடிவு.” 

“என்ன செய்யப் போறே? கல்யாணம் பண்ணிக்கலாம்னு…” 

“அது நடக்கறப்ப நடக்கட்டும். இப்ப ஒரு ஸ்கூல் ஆரம்பிக்கப் போறேன். அதில் இரண்டு பகுதி. ஒண்ணு ஏழைகளுக்கு. இன்னொன்னு…”

“வசதி உள்ளவர்களுக்கு!” 

“அதான் இல்லே. ஹாண்டிகாப்ட் சில்ட்ரனுக்கு. டெஃப் அண்ட் டம், ப்ளைன்ட், மென்ட்டலி ரிடார்டர்ட் இது மாதிரி” 

“நல்ல திட்டம்.” 

“என் வீட்டுக்குப் பக்கத்து வீடு விலைக்கு வந்தது. ரெண்டு ஏக்கர். பெரிய பில்டிங் வேற. இருபத்திரண்டு லட்சம் கேட்டாங்க. நான் என் திட்டத்தைச் சொன்னேன். அஞ்சு லட்சத்தைக் குறைச்சாங்க. ஒரு லட்சம் டொனேஷனும் தர்றதா சொன்னாங்க” 

“எப்ப ஆரம்பம்?” 

“பிராஜக்ட் ரிபோர்ட் ரெடி. செயலாக்க திறமையான ஈடுபாடு உள்ள மனுஷங்கதான் தேவை அவங்களைத் தேடிக் கண்டு பிடிச்சு அமர்த்தணும். ஸ்கூலுக்கு தேவையான டெஸ்க், நாற்காலி, மேஜைகள் இதெல்லாம் வாங்கணும். சொல்லப் போனா வரப்போற மாசங்கள்லே எனக்கு மூச்சுவிடக்கூட நேரமிருக்காது”. 

“இது ஆசையா, லட்சியமா?” என்று கேட்டாள் பாரதி.

தேவகி சிரித்தாள். 

“ரெண்டுமில்லே. மனசு துருப்பிடிக்காம் இருக்கணும்னா ஏதானும் செய்யணும். அப்படிச் செய்யற காரியத்தில் உற்சாகம், மனநிறைவு இருக்கணும்! நாலு பேருக்குப் பிரயோசனப் படற காரியமா இருக்கணும். அப்பா கோடி கோடியா சம்பாதிக்கிறார். அதில் ஒரு துளிதானே இதுக்குச் செலவாகும்?” 

”ஸ்டேஷன் பக்கத்தில் என்னை ட்ராப் பண்ணு”.

“வீட்லேயே ட்ராப் செய்யறேன்”. 

“பரவாயில்லை தேவகி.” 

“நத்திங் டூயிங்.” 

கார் ஊரை நெருங்கிக் கொண்டிருக்கையில் எதிர்த்திசையில் ஒருவர் வந்து கொண்டிருந்தார். 

தேவகி காரை நிறுத்தினாள். 

“பணிக்கர் சார்! எங்கே இவ்வளவு தூரம்?” 

“நாராயணனைக் காணான் வந்து தேவகி!” 

“காருண்ய ஆசிரமம் எங்ஙனயா உள்ளது? நீங்கள்டே ஆசிரமம் அல்லே?” 

“நந்நாய் ஓடுன்னு. நாராயணன் சார் வீட்ல இல்லா”. 

“நீங்கள் இப்ப செக்ரடரி அல்லே பணிக்கர்?”

“அதே”. 

“இத்தற தூரம் செக்ரடரி தன்னே வருந்தது கண்டா எதைங்கிலும் வெஷமம் உண்டாயிருக்கணும், இல்லே பணிக்கர்?” 

”அதே தேவகி, ஒரு தள்ளை இந்து வச்சி யார்த்த மரிச்சுப் போய், எஸ்டேட்ல ஆரும் இல்லா. வீட்லேக்கு போன் செய்து உத்தரம் கிட்டியில்லா. அது கொண்டான தேரிட்டு இவ்வட வந்து. புள்ள கோழிக்கோட்லேர்ந்து இன்னம் மடங்கிட்டில்லான்னு ஸ்திரீ பறைஞ்சு”. 

ஒரு மாதிரியாக இருவர் பேசிக் கொண்டதும் பாரதிக்குப் புரிந்தது. தள்ளை என்றால் என்ன என்றுதான் புரியவில்லை. 

“தள்ளைன்னா என்ன அர்த்தம், தேவகி?”

”கிழவி” 

திடீரென்று ஒரு சிவப்பு மாருதி, பஸ்ஸுக்கு வழி விட்டு முன்னேறி வருவதைக் கண்டாள் பாரதி. 

“அதோ அவரே வந்துட்டார், தேவகி, நான் இறங்கிக்கறேன்.” 

“ஓகே நாராயணன் சார் வந்து பணிக்கரே! நான் அப்ப வரட்டே?” 

பாரதி மற்றும் பணிக்கரையும் தேவகியின் காரையும்  பார்த்த நாராயணன் தன் வண்டியைச் சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி வந்தான்.

“தேவகி கார்ல நீதான் இருந்தியா?”

“ஆமாம். அவ வீட்டுக்குப் போயிருந்தேன். அவளோடு கைலாசத்தைப் பார்க்கப் போனேன். நீங்க இப்பத்தான் வர்றீங்களா?” 

“ஆமாம்”. 

“பணிக்கர் நம்ப வீட்டுக்குப் போயிட்டுத்தான் திரும்பறார். ஆசிரமத்தில் ஒரு கிழவி செத்துப் போய் விட்டாளாம்.” 

“பணிக்கர், வண்டியில கேறணும்… உன்னை ட்ராப் பண்ணிட்டு நான் பணிக்கரோட போயிட்டு வரேன். ஒரு முக்கியமான காரியம் இருக்கு ” 

“நானும் உங்ககூட வரேன்,” 

“நான் போற இடத்துக்கெல்லாம் நீ வரப்படாது, பாரதி” 

“வருவேன்.”

“உன்னால் தாங்கிக்க முடியாது”. 

“எதை? 

“எல்லாத்தையும்”. 

“முடியும்”. 

“சரி வா, ஆத்துக்குப் போய் பணம் எடுத்துண்டு வரேன்.” 

“எங்கிட்ட இருக்கு.” 

“எத்தறை?”

“கிட்டத்தட்ட ரெண்டாயிரம்.” 

“ராத்திரி வர்றதுக்கு ரொமப நேரமாகும்”.

“பரவாயில்லை.” 

”அப்பா தேடுவார். விசாரப்படுவார்.” 

“அப்பா நேத்து எர்ணாகுளம் போனார். திரும்பி வர ரெண்டு நாளாகும்னார்.” 

“இருந்தாலும் நீ லேட்டா வருவேன்னு ஆத்துக்குத். தகவல் கொடுக்கணும்”

“போன்ல கொடுக்கலாம்”. 

பணிக்கர் காரில் ஏறிக் கொண்டார். 

“நீ ரொம்பப் பிடிவாதக்காரி.”

“பிடிவாதம் என் கூடப் பிறந்த வியாதி.” 

“நீ பாக்கப் போற காட்சி உன்னை ஜென்மம் பூரா வாட்டி வதைக்கும்”.

“மானசீகமா நான் பார்த்தாச்சு. இப்ப இந்தக் கண்ணாலே பாக்கறேன்” என்றாள் பாரதி. 

கார் வேகமெடுத்தது. 

காருண்ய ஆசிரமத்தில் நாராயணன் மற்றும் காரியதரிசிக்காக மற்ற அங்கத்தினர்கள் காத்திருந்தார்கள். 

திடீரென்று சகஸ்ரத்தின் உருவம் தெரியவே, பாரதி திகைப்பில் ஆழ்ந்து போனாள். 

“குஞ்சப்பா நீ எப்படி இங்கே?” 

நாலரைக்குப் போன் வந்தது. மன்னி சொல்றப்ப மணி அஞ்சு! நீ ஊர்ல இல்லை. அதுக்காக காரியத்தை நிறுத்தக் கழியுமா? அதான் வந்தேன்” 

சகஸ்ரம் பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு மேல் வேட்டியை இடுப்பில் சுற்றியவனாய் நின்றான். நெற்றி நிறைய நாமம் 

மூங்கில் படுக்கையில் ஒருத்தி படுத்துக் கொண்டிருந்தாள். 

“நீங்ஙள் ஆர் சாரே? நான் கண்டிட் டில் வல்லோ.”

“நாராயணன்டே அச்சன்டே அனியன். சகஸ்ரநாமம்னு பேரு”. 

“நாராயணனே எல்லாம் சேயும்.”

“அறியும்!” என்ற சகஸ்ரம், “ஆப்பணியை இந்து ஞான் சேயான் போணு” என்றான். 

சகஸ்ரம் தீச்சட்டியுடன் முன் செல்ல, ஆசிரமத்தில் இன்னும் உயிரோடு இருப்பவர்கள் கூடவர ‘தள்ளை’யை நாராயணன், பணிக்கர் மற்றும் பெயர் தெரியாத இருவர் சுமந்து நடக்க, 

பாரதி வியப்பு மேலிட கார் அருகே ஆணி அடித்தாற் போல நின்றாள். 

குழந்தை பிறக்கும்போது அதன் உலகப் பிரவேசத்தை எவ்வளவு உற்சாகமாகத் கொண்டாடுகிறார்கள்? எத்தகைய வரவேற்பு அதற்குக் கிடைக்கிறது?

ஆனால் போகும்போது? 

பெரிய மனிதனாக இருந்தால் ஒரு கூட்டம். நீலிக் கண்ணீர்க் கூட்டம். பொய்ம்மையான மாலை உபசாரம். இவர்களால் பெரிய மனிதனுடைய ஆத்மா சாந்தி அடையுமா? நிச்சயமாக அடையாது. ஆனால் இந்தக் கிழவியின் ஆத்மா? உள்ளார்ந்த உண்மையான கனிவும், பரிவும் அவளுக்குச் சிலரிடமிருந்து கிடைக்கின்றன. அவளை மரியாதையுடன் வழி அனுப்புகிறார்கள். நிச்சயமாக இந்த ஆத்மா சாந்தி அடையும்! 

இந்த நாராயணனும், பணிக்கரும், சகஸ்ரமும் மற்றவர்களும் ஏன் இப்படிப்பட்ட தொண்டில் ஈடுபட்டிருக்கிறார்கள்? 

ஆசையா? 

லட்சியமா? 

என்ன லட்சியம்? 

மனித உடலுக்கும் மரியாதை செலுத்துகிறார்கள் என்றால் உடலுக்குள் இருந்து வந்த உயிருக்கு எவ்வளவு மரியாதை கொடுத்திருக்க வேண்டும்? 

அவள் இதை எந்த ஆராய்ச்சிக் கட்டுரையில் எழுதி டாக்டர் பட்டம் வாங்குவாள்? 

நாராயணன் திரும்பி வரும் வரை அவள் கார் மீது சாய்ந்தவளாக நின்றாள் 

அவளுக்குக் கால் வலிக்கவில்லை. 

அத்தியாயம்-25

நாராயணன் மற்றும் சித்தப்பா சகஸ்ரத்துடன் ஆசிரமத்துக்குத் திரும்பும்போது இரவு மணி எட்டு.

“போலாமா பாரதி?” 

“போலாம்.” 

“ராஜி கார் எடுத்துண்டு போனதால குஞ்சப்பா ஆட்டோவிலேயும் பஸ்லேயும் வரண்டதாப் போச்சு, குஞ்சப்பா நீ ஓட்டறியா இல்லே நானே ஓட்டட்டுமா?” என்று நாராயணன் கேட்டான் 

“நீ பார்த்தன். நான் சாரதி, கோழிக்கோட்லேர்ந்து ஒத்தைக்கு ஒட்டிண்டு வந்திருக்காய். இங்க தோள்ள சொமந்து ஒரு மைல் நடந்திருக்காய். பேக் ஸீட்ல பாரதியோட ஒக்காரு, கோந்தே” என்றான் சகஸ்ரம். 

”நான் இந்த ஆசிரமத்தோட சம்பந்தப்பட்டிருக்கேன்னு ஒனக்கு எப்படித் தெரிஞ்சுது, குஞ்சப்பா?” என்று காரினுள் ஏறும்போது நாராயணன் கேட்டான். 

“இந்த சோத்தியதை நீ எத்தற பிராவசியம் கேப்பாய் கோந்தே?” 

”சொல்லேன்” 

வண்டி புறப்பட்டது. 

“நேக்கு நாலு கொல்லமாத் தெரியும்”

“ஆர் சொன்னா? அப்பாவா?”

“அண்ணா மூச்சு விட்டுட்டில்லை.” 

“பாரதிகிட்ட அப்பா சொல்லியிருக்கார். இவ பேச்சிலேர்ந்து தெரிஞ்சுது”. 

“மாதவ ராஜா கிளப்ல கேசவ நம்பூத்ரி என்னைச் கூப்பிட்டுச் சொன்னான். நீ இதில ஈடுபடறது அவனுக்குப் பிடிக்கலை, ஓங்கிட்ட நேர்ல சொல்றதுக்கும் பயம்”. 

“நல்ல காரியம்னு நேக்குத் தோணித்து. சேயறேன்”

“பாரதி என்ன சொல்றா?” 

“நான் சேயறது தெரிஞ்சும் வந்திருக்கான்னா என்ன அர்த்தம்?” 

“பிடிச்சிருக்குன்னு”

“நீ ரொம்ப மொள்ளமா ஒட்டறாய் குஞ்சப்பா. ரோடு ஃப்ரியாத்தானே இருக்கு. ஸ்பீடாப் போயேன்”

“அம்பதில போறேன். அது போரும். இப்ப என்ன அவசரம்?”

வண்டி ஓடிக் கொண்டிருந்தது. எல்லாரும் மௌனமாக இருந்தார்கள். 

திடீரென்று சகஸ்ரம் பேசினான். 

“ஒன் மாமனார் நேத்தைக்குக் கார்த்தால வந்து ராத்திரி போனார்.” 

”அப்படியா? என்ன பாரதி, நீ சொல்லவே இல்லை?”

“பெரிய நியூஸாப் படலே?” 

“எந்துக்கு வந்தார். குஞ்சப்பா?” 

“ஆருக்குத் தெரியும்? அண்ணாவுக்குத் தெரிஞ்சிருக்கும். பாரதிக்கும் தெரிஞ்சிருக்கலாம்”. 

”ஒனக்குத் தெரியுமா பாரதி?” என்று கேட்ட நாராயணன் தொடர்ந்து, “எந்துக்கு?” என்றான். 

“என்னைக் கூட்டிண்டு போக.” 

“எங்கே?”

“பொறந்தாத்துக்கு”

“எந்துக்கு?” 

“பிஎச்.டி., படிக்க வைக்க”. 

“அதுக்கு அவர் தயவு எந்துக்கு? நான் இருக்கேனே?”

“இங்கதான் ஆருக்கும் இஷ்டமில்லையாமே?” 

“உன் அப்பா சொன்னாரா?”

“ஆமாம்” 

“எப்பக் கூட்டிண்டு போக வர்றார்?”

“இனிமே வரமாட்டார்”

“ஏன்?”

“நேத்தே தன்கூடப் புறப்படணும்னார். மாட்டேன்னேன்”

“ஏன்?”

“உங்களை கேட்காம நான் எப்படி முடிவு எடுக்கறது? அதுவும் ரெண்டு வருஷம் பிரிஞ்சு இருக்கணும்னு வர்றப்போ?”

“இப்ப நான்தான் வந்தாச்சே!”

“நானும் ஒரு முடிவு எடுக்கலாம்” என்றாள் பாரதி. 

வீட்டை அடைந்தபோது இரவு ஒன்பதேகால். 

களை அரு 

“என்னடீ பொண்ணே எங்களை கதிகலங்க வைச்சுட்டியே?” என்றாள் பாட்டி. 

“டில்லியில் ராத்திரி நேரம் கழிச்சு ஆத்துக்கு மடங்கி வரப் பழகி இருப்பாய். பொண்ணே, இந்தப் பாலக்காடு ஒனக்குப் புதுசு அவ்லலா? தங்கம்மா அஞ்சாறு பிராவஸ்யம் அந்தப் பொண்ணாத்துக்கு போன் பண்ணினா. மணி அடிச்சுண்டே இருந்ததாம்” 

“இனிமே அப்படி நடக்காது பாட்டப்பா”

“பொறந்த வீடல ரொம்ப எடம் கொடுத்தா எப்படி இருப்பா? இப்படித்தான?” என்றாள் தங்கம்மா.

“பாரதி சாயங்காலமே தேவகி கார்ல வந்தாச்சும்மா. நான்தான் அவளைக் கூட்டிண்டு போனேன்”- நாராயணன் 

“அப்ப ஆத்துக்கு எங்கேயிருந்தாவது போன்ல் சொல்லியிருக்கனும்” 

“விட்டுப் போச்சு அம்மா” 

“உனக்கு வீட்டுப் போச்சு. அவ சொல்லியிருக்கலாமே? கார்த்தாலே ஒம்பதரை மணிக்குப் போனவள்”  

“போருமே அம்மா”

”ஒன்னோட அப்பா ரூம்ல தன்னந்தனியா ஒக்கார்ந்துண்டிருக்கார் தெரியுமா?”

“அப்பா எர்ணாகுளத்திலேர்ந்து அதுக்குள்ளே வந்தாச்சா?” என்றாள் பாரதி. 

அவள் சொல்லி முடிக்கவும் ஈசுவரன் அறையில் இருந்து வெளிவரவும் சரியாக இருந்தது. 

“நானும் கோந்தையும் ஒரு நான் ஆத்ல இல்லேன்னா நீ ஓன் போகிற போக்கில போயிடறதா, பொண்ணே?” என்றார் ஈசுவரன். 

“இதுக்கு நான் அப்புறமா பதில் சொல்லலாமா அத்திம்பேர்?” என்று பாரதி கேட்டாள். 

கைகால்களைக் கழுவி விட்டு பாரதி புடைவை மாற்ற மாடிக்குக் சென்றாள். 

“இந்தா பாரதி!” என்று ஒரு நீண்ட உறையை நாராயணன் நீட்டினான். 

“நீயே படிச்சுப் பாரேன்” 

உறையின் வெளியே ஏதும் எழுதப்படவில்லை. உடைத்து, உள்ளேயிருக்கும் தாள்களை எடுத்தாள். 

மூன்று சர்வ சுலாசாலைகளிலிருந்து பிஎச்.டிக்கான விண்ணப்பத்தாள்கள். 

சென்னை சர்வ கலாசாலை. 

டில்லி சர்வ கலாசாலை. 

கல்கத்தா சர்வ கலாசாலை. 

நாராயணனை ஏறிட்டுப் பார்த்தாள். 

”கோழிக்கோட்டுக்குப் போயிருந்தப்ப நேக்குத் தெரிஞ்ச புரொபசர் ஒருத்தரை மீட் பண்ணினேன். அவர் இங்கிலீஷ்  ப்ரொபசர். எல்லா யூனிவர்சிட்டியிலேர்ந்தும் வர்ஷா வர்ஷம் சிநேகிதாள் மூலமா இதெல்லாம் வருமாம். ரூபாய் கொடுத்து வாங்கினேன். அவர் சொன்னார்: கல்சுத்தா டில்லியை விட பெட்டராம் மெட்ராஸ்ல ஸீட். கெடைக்கிறது கஷ்டமாம்” 

“ரொம்ப தாங்க்ஸ்” 

”எல்லாத்துக்கும் அப்ளை பண்ணு…ஒண்ல கெடைக்கட்டுமே” 

“அன்னிக்கு அப்படிப் பேசினேளே?” 

“அந்த அபிப்பிராயத்தை நான் மாத்திக்கலையே?”

“அப்ப?” 

“நீ உன் ஆசையைச் சொன்னாய், நான் என் மனசு என்னாங்கறதைச் சொன்னேன், அம்படத்தான்” 

“நீங்க உங்க அம்மா, அப்பா பேச்சைத் தட்ட மாட்டேள் இல்லியா?”

“ஏன் கேட்கறாய்?” 

“பதில் சொல்லுங்களேன்” 

“அவர் சொல்றது நியாயமாப் பட்டாக் கேட்பேன்”

“நான் படிக்கப் போலா திரும்பி வர்றதுக்கு குறைஞ்சது ரெண்டு வர்ஷமாவது ஆகும்” 

“தெரியும்”

“அதுவரையில் உங்களுக்கு மனைவி இல்லை”

“ஒனக்கு ஆம்படையானும் இல்லை”.

“என்னை விடுங்கோ. இப்ப நான் உங்களைப் பத்தித்தான் பேசறேன். நான் பிஎச்டி படிக்கப் போனா நான் வர்ற வரை நீங்க காத்துண்டிருக்கலாம். ஆனா உங்க அம்மாவும், அப்பாவும் காத்துண்டிருப்பான்னு நிச்சயம் இல்லே. நான் வராமயே இருந்தாலும் இருந்துடுவேன்னு அவா நினைக்கலாம்”. 

“சரி அவா அப்படி நினைக்கட்டும், அதுக்கென்ன?”

“என்னை டிவோர்ஸ் பண்ண வைச்சுட்டு உங்களுக்கு ரெண்டாம் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுவா.” 

“சேயலாம்.” 

“அப்ப நீங்க என்ன செய்வீங்க?” 

“அதை இப்ப எப்படிச் சொன்றது பாரதி? காத்துண்டிருப்பேன்னு எழுதித் தரக் கழியுமா?” 

“நான் உங்களுக்கு வேணுமா, வேண்டாமா?”

“இந்தக் கேள்வியை நானும் திருப்பிக் கேட்கலாம். இல்லியா?”

“கேட்டுப் பாருங்களேன்”. 

“வேணுமா, வேண்டாமா?” 

“வேணும்” 

“நேக்கும் அப்படித்தான்! வேணும்.” 

“அப்ப இந்த அப்ளிகேஷன்களை அனுப்பறது நியாயமா இருக்காதே?” 

“அதை நீதான் சொல்லணும்”. 

“நீங்க போய்ச் சாப்பிடுங்கோ. நான் அத்திம்பேர்ட்ட ஓர் அஞ்சு நிமிஷம் பேசிட்டு வரேன்”. 

“என்ன பேசப் போறாய்?” 

“அது எங்களுக்குள்ள மட்டும்தான்.” மூன்று விண்ணப்பத் தாள்களுடன் அலள் மாடிப்படிகளில் நிதானமாக இறங்கி ஈசுவரன் அறைக்குள் பிரவேசித்தாள். 

“வா, பொண்ணே” என்ற அவர், “ஒன்னைக் கழுதே, நாயேன்று கூப்பிட நேக்கு மனசு வரலே!” என்றார். 

“மொதல்ல நீங்க கேட்ட கேள்விக்குப்பதில் சொல்லிடறேன். நீங்களும் அவரும் ஊர்ல இல்லாதப்ப நான் என் மனசு போல அலையறதா சொன்னீங்க. நான் அலையலே, அத்திம்பேர்! நீங்க அப்படி அலைய விட்டீங்க.” 

“நான் சொன்னதைப் பெரிசா எடுத்துண்டுட்டியா?”

“உங்க கருத்துப்படி இது சாதாரண சின்ன விஷயமாவே இருக்கட்டும், ஆனா பெரிசா ஒரு காரியம் செய்துட்டீங்களே?” 

“என்ன சேதேன், பொண்ணே?”

“என் அப்பாவுக்கு லெட்டர் போட்டு அவரை இங்கே வரவழைச்சீங்களே.” 

ஈசுவரன் சிரித்தார். 

“சிரிப்பா இருக்கா?” 

“நீ இந்தாத்துக்கு வேணும் பொண்ணே. என் புள்ளைக்கு ஒன்னைவிட நல்ல பொண், புத்திசாலிப்பெண் இந்த ஜன்மத்திலே கிடைக்கமாட்டா, இது சத்தியமான வார்த்தை”. 

“அப்ப எதுக்கு நங்கவரத்துக்கு லெட்டர் போட்டீங்க?” 

“ஓன் மனசை எப்படி மாத்தறதுன்னே தெரியலே பொண்ணே! நீ ரொம்பப் பிடிவாதம் பிடிச்சாய், நீ இந்த குடும்பத்தை விட்டுப் போயிடுவியோன்னு நான் பயந்தேன்.’ 

“அத்திம்பேர் ஏழெட்டு நாளா நான் இந்த வீட்லே எப்படி நடந்துக்கறேன்? பாட்டப்பா பாட்டீம்மா குறை சொல்லும்படியா நடந்து கொண்டிருக்கேனா?” 

“இல்லை.”

“இதிலேந்து உங்களுக்கு என்ன புரிஞ்சுது?”

“இப்படிப்பட்ட ஒரு பொண்ணு ஒரே ஒரு விஷயத்திலே மட்டும் பிடிவாதமா இருக்காளேன்னு விசாரமா இருந்தது.” 

“என் ஆசையை நான் நிறைவேத்திக்க நான் புறப்படத்தான் போறேன்னு வந்தா, அப்ப நான் விளைவுகளையும் விபரிதங்களையும் பத்தி துளிக்கூடக் கவலைப் பட்டிருக்க மாட்டேன். டிவோர்ஸ், ரெண்டாங் கல்யாணம் னெல்லாம். சொல்லி என்னை பயமுறுத்த முடியாது அத்திம்பேர்! நான் பிடிவாதக்காரிதான்! மெல்ல மெல்ல என் பிடிவாதத்தில் நியாயமில்லைன்னு பட்டுது. அதைப் பத்தி அதிகம் நினைக்கப்படாதுன்னு எனக்குள்ளேயே ஒரு தீர்மானம் செய்ஞ்சேன். ஆனா அதுக்குள்ளேயே நீங்க அவசரப்பட்டுட்டீங்க. உங்க மிரட்டலைக் கண்டு பயந்தோ, என் அப்பாவின் நீலிக் கண்ணீரைப் பார்த்துக் கசிந்தோ என் முடிவை நான் மாத்திக்கலே. 

“கைலாசம், தேவகி, என் ஹஸ்பெண்ட் இவர்களைப் பார்த்தேன். பழகினேன். நீங்க காருணயாஸ்ரமம் பத்திப் பேசினப்ப நிலத்தை தானமாக் கொடுத்தவாளும் கண் முன்னால் வந்தா, சங்குண்ணி எந்த டாக்டர் பட்டமும் வாங்காமத்தான் மனுஷ உயிர்களைக் காப்பாத்தறான் என்கிற உண்மை என் நெத்திப் பொட்டிலே அறைஞ்சது. இவர்கள் மத்தியில் நான் யார்ங்கிற கேள்வி பொதுந்தது. நான் அற்பம். ஆயிரக்கணக்கான எம்.ஃபில்கள்லே ஒரு எம்.ஃபில்! பிஎச்.டி… ஒரு சாதனை இல்லைங்க ஞானோதயம் கொஞ்சம் கொஞ்சமா ஒவ்வொருத்தரைப் பார்த்துப் பார்த்துப்பிறவி எடுத்தது” என்று கேவலுடன் கூறிய பாரதி, 

முத்தாய்ப்பாக, “நான் இந்தாத்துப் பொண். என் இடம் இங்கதான். நான் வரேன்” என்றாள். 

கண்கள் கனக்க ஈசுவரன் உட்கார்ந்தார். கை அமர்த்தி மீண்டும் அவளை அமரச் செய்தார். மெல்ல மெல்ல அவரிடமிருந்து சேவல் ஒலி கேட்கலாயிற்று. 

ஒரு சிங்கம் அழுகிறதா? 

பாரதியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 

“இன்னொரு சமாசாரம்! ரொம்ப முக்கியம்!” குரலைச் சற்றே உயர்த்திப் பேசினாள். 

அவர் கேவல் நின்றது. 

தீனமான குரலில், “என்ன பொண்ணே?” என்றார்.

“நீங்களும் லிட்ரேச்சர்ல எம்.ஏ.” 

“ஆமாம் பொண்ணே!”

”லயோலா.. பர்ஸ்ட் க்ளாஸ்,” 

“ஆமாம்.” 

“பிஎச்.டி. பண்ண உங்களுக்கு ஆசையோ உத்தேசமோ இருந்தா அப்ளிகேஷன் ஃபாரத்துக்காக அலைய வேண்டியதில்லை. மூணு யூனிலர்சிட்டி ஃபார்ம்ஸ் இதோ இருக்கு!” 

திடீரென்று ஈசுவரன் சிரித்தார். 

“என்னப்பா சிரிப்பு?” என்று கேட்டுக் கொண்டே நாராயணன் வந்தான். 

”அது எங்க ரெண்டு பேருக்குள்ளே!” என்றார் ஈசுவரன். 

“சாப்பிட வா பாரதி, மணி பத்தரை.” 

“நீங்க சாப்பிடலையா?”

“இல்லை, ஒனக்காகக் காத்துக் கொண்டிருக்கேன்”. 

“அத்திம்பேர்ட்ட நீங்க கொடுத்த பாரங்களைக் கொடுத்தேன். அவரும் பிஎச்.டிக்குப் போகலையாம்.” 

“இந்த வயசிலே எவன் அவருக்கு ஸீட் கொடுப்பான்?” என்றான் நாராயணன். 

“அப்படி என்னடா எனக்குப் பெரிசா வயசாயிடுத்து? இந்நைக்கெல்லாம் இருந்தா….” 

“என்ன, இன்னம் ஆத்ல விளக்கு எரிஞ்சுண்டிருக்கு! அண்ணா நீ எப்ப எர்ணாகுளத்திலேர்ந்து வந்தாய்?” என்று கேட்டுக்கொண்டே சகஸ்ரம் வந்தான். 

“சாயங்காலம்”

”எர்ணாகுளத்திலே மழை இருக்கா?”

“நான் கவனிக்கலேடா, சகஸ்ரம்.”

“அது இருக்கட்டும். இங்கே என்ன களிப்பும், சிரிப்பும்!” 

“இந்தைக்குத்தானேடா நம்ப ஆத்துக்கு ஒரு மாட்டுப் பொண் வத்திருக்கா! அதான் சிரிப்பும் களிப்பும்!” 

“குஞ்சப்பா!” என்றாள் பாரதி திடீரென்று.

ஆச்சரியமாய்ப் பார்த்த சகஸ்ரம், “சரியாச் சொல்லு பாரதி! சித்தப்பாவா, குஞ்சப்பாவா?” என்றான்.

“உங்க அண்ணாவோட புள்ளைக்கு நீங்க ஆரு?”

“குஞ்சப்பாவா!”

“அப்ப எனக்கும்அதுதான்.. ஹாங். எதுக்குக் கூப்பிட்டேன்னா…”

“சொல்லு.” 

“இந்தப் பாலக்காட்டு ஹிஸ்டரியை வைச்சுக்கிட்டு நீங்க ஏன் ஒரு தீஸிஸ் எழுதப்படாது? டாக்டர் சகஸ்ரநாமம்னா நன்னா இருக்கும்”. 

“நந்நா இருக்கும். இல்லேன்னு சொல்லலே. வைத்தியம் பண்ற டாக்டர்னு நினைச்சுப் பாதிப்பேர் ஒதுங்கிப் போயிடுவா!” 

“குஞ்சப்பா நியும் வா, சாப்பிடலாம்” என்றான் நாராயணன். 

“பசிக்கத்தான் பசிச்சறது. மாட்டேன்னா ஒனக்கு மனசு சங்கடப்படும். அது எதுக்கு அனாவசியமா? சாப்பிட்டு வைக்கிறேன்.” 

“சரி ஒக்காரு. ஒரு நாள் டேபிள்லே ஒக்காந்துதான் சாப்பிடறேன். நீயும் ஒக்காரு பாரதி” 

“வேண்டாம். அத்தை கோவிச்சுப்பா”

“இனிமே இந்த வீட்ல என் கோபம் செல்லாது. பாரதி! நீ உன் இஷ்டத்துக்கு உட்கார்ந்து சாப்பிடு” என்ற குரல் வெகு சமீபத்திலிருந்து வந்தது. 

“அம்மா, நீ இங்கதான் இருக்கியா, நான் பார்க்கலையே?” என்றான் நாராயணன். 

“இனிமே உன் கண்ல நான் எப்படிப் படுவேன்? கண்ணை பொத்தத்தான் ஒருத்தி வந்தாச்சே!” 

“மன்னி நந்தாவே ஜோக் அடிக்கறா!” 

“நங்கவரமா கொக்கா!” என்றாள் பாரதி.

சாப்பாடு அமர்க்களமாக ஆரம்பித்தது. 

அன்று இரவு மணவாழ்க்கையும் மௌனமாய்த் தொடங்கியது. 

-முற்றும்-

– வானமெல்லாம் ஆசைக் காற்றாடி (நாவல்), முதற் பதிப்பு: மார்ச் 1995, கங்கை புத்தகநிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

1 thought on “வானமெல்லாம் ஆசைக் காற்றாடி

  1. பிவிஆர் அவர்களுடைய மனதை வருடும் கதைகளில் இதுவும் ஒன்று. குடும்ப உறவுகளின் அருமையை வெகு இயல்பாக வெளிப்படுத்தி பாரதி தானாகவே தன் பிடிவாதத்தை விட்டு கணவன் வீட்டில் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வைக்கிறார். இன்றைய இளம் தலைமுறையினர் படிக்க வேண்டிய கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *