வானமெல்லாம் ஆசைக் காற்றாடி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 19, 2024
பார்வையிட்டோர்: 4,476 
 
 

(1995ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம்-7

சகஸ்ரம் ஊஞ்சலின் மீது கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்க அவனுடைய மனைவி ராஜி, ஊஞ்சல் சங்கிலியைப்பிடித்து நிற்க, பாரதி இதுவரை பார்த்திராத ஓர் எலுமிச்சம்பழ நிற, இளம்பெண் சோபாவில் அமர்ந்திருப்பதைக் கண்டாள்.

“வா, பாரதி!…ஒனக்காகத்தான் தேவகி காத்துச் கொண்டிருக்கா” என்ற சகஸ்ரம் “தேவு இதாண நான் பறஞ்ச புள்ளி. டில்லி யூனிவர்சிட்டியா, அறியோ… இங்கிலீஷ் லிட்டரேச்சர்ல எம்ஃபில்லாண” என்றான். 

“நமஸ்காரம்!” என்று முகமலர்ச்சியுடன் கைகூப்பிய தேவகி, “நீங்க உங்க ஊர் தமிழ்லேயே பேசலாம், பாரதி. எனக்குத் தமிழ் எழுதப் படிக்கவே தெரியும்” என்றாள்.

“அப்படியா?” 

“கோயமுத்தூர்ல அஞ்சு வருஷம் படிச்சிருக்கேன். அஞ்சாறு திருக்குறள் சொல்லட்டுமா? இல்லே கம்பராமாயணத்தலேந்து…” 

“வேண்டாம் மிஸ் தேவகி… மிஸ் தானே?” என்றாள் பாரதி. 

“இன்னும் கொறஞ்சது மூணு வருஷத்துக்காவது மிஸ்ஸா இருப்பதா உத்தேசம்” என்ற தேவகி தொடர்ந்து. “சகஸ்ரம் சார், நான் வந்திருக்கிற விஷயம் பத்திச் சொல்லுங்க. என்னைப் பத்தியும் ரெண்டுவார்த்தை எடுத்து வீசுங்க…” என்றாள். 

“சரி சொல்றேன்” என்று சகஸ்ரம் ஆரம்பித்தான்.

“பாரகி! இவள் பேரு தேவகின்னா இவளோடஅப்பா பேரு வாசுதேவன் நாயர், கிரேட் ஷிப்பிங் அண்ட் கிளியரிங் கம்பெனின்னு ஒரு கம்பெனி இவளோட முப்பாட்டன் காலத்திலேந்து கொச்சி, பம்பாய் கோழிக்கோடுன்னு கொடிகட்டிப் பறக்கறது! இன்கம்டாக்ஸ் காரனை ஏமாத்தாதைக்கே வருஷத்துக்கு ஒரு கோடி ரூபாய் வரைக்கும் டாக்ஸ் கொடுக்கற கம்பெனி, அதோட சேர்மன் அண்ட் மானேஜிங் டைரக்டர் எல்லாம் இவ அப்பா வாசுதேவன் நாயர் தான்” 

“எங்க அப்பாவோட கம்பெனி ஹிஸ்டரி எதுக்கு சார்…? என்னைப் பத்திச் சொல்லுங்க”. 

“பொறு, தேவு..! நான் ஹிஸ்டரி படிச்சவன் இல்லையோ? இவன் அப்பா என்னைக்கு எந்த ஊர்லே இருப்பார்னு அவருக்கே தெரியாது, உள்நாடு, வெளிநாடு எல்லாம் தண்ணி பட்டபாடு. அதனாலதான் குடும்பமாவது ஓர் இடத்தில் நிரந்தரமா இருக்கட்டும்னு இவ இந்த பாலக்காட்லேயே இருக்கா. சந்திரா நகர்னு ஊருக்குள்ளேயே ஓர் எடம் இருக்கு.” 

“இன்னும் ஹிஸ்டரியிலேயே இருக்கீங்க சார்!”

“வந்துடறேன விஷயத்துக்கு. இவளுக்கு இங்கிலீஷ். சமஸ்கிருதம், தமிழ் மலையாளம், கன்னடம், மராத்தி, தெலுங்கு அவ்வளவுதான் எழுதப் படிக்கத் தெரியும். இப்ப வீட்ல ஜெர்மன் படிச்சிண்டிருக்கா. அதுக்காக அடிக்கடி மதராசுக்கும் போய் மாக்ஸ்முல்லர் பவன் வாசல்லே நிப்பா. இப்ப இவ வந்திருக்கிறது எதுக்குன்னா…” 

“இதைத்தான் நீங்க மொதல்லேயே சொல்லியிருக்கணும்” என்றாள் தேவகி. 

“அஸ்திவாரம் இல்லாதைக் ஆராவது பில்டிங் கட்டுவாளோ? ஒன்னைப் பத்தி பலமாச் சொன்னாத் தானே பாரதிக்கு எல்லாம் மனசிலாகும்? இவ எம்.ஏ. லிட்டரேச்சர். கீட்ஸ், வெல்லியை தலைகீழா ஒப்பிப்பா… ஷேக்ஸ்பியரை அக்குவேறு ஆணவேறா பிய்ச்சுப் பிய்ச்சுப் போடுவா…” 

“இப்ப இவளுக்கு என்ன ப்ரோப்ளம்னா, மேற் கொண்டு என்ன படிக்கிறதுன்னு? நான் சொன்னேன் ஹிஸ்டரியிலே எம்.ஏ படின்னு. மாட்டேன் இங்கிலீஷ் லிட்ரேச்சர்தான்னு பிடிவாதமா நிக்கறா”. 

“எம்.ஏ. எங்கே படிச்சே?” என்று பாரதி கேட்டாள்.

”கோயமுத்தூர் ஆர்ட்ஸ் கோளேஜ்ல பி.ஏ.படிச்சுட்டு கரஸ்பாண்டன்ஸ்லே எம்.ஏ. முடிச்சேன்.” 

“பர்ஸ்ட் கிளாஸா” 

”ஆமாம்.”

“எம். ஃபில் படிக்கலாம்.” 

“அதான் ஆசை”. 

“கிட்டக்கவே கோழிக்கோடும், கொச்சியும் இருக்குங்கறேன்… எம்.ஃபில்லுக்கு சரியில்லைங்கறா தேவகி,” 

“ஏன்?”

“எம்.ஃபில் பண்ணனும்னா நல்ல லைப்ரரி வேணும். இல்லையா பாரதி? மெட்ராஸ்தான் பெஸ்ட் பிரிட்டிஷ் கவுன்சில், அமெரிக்கன் சென்டர், யூனிவர்சிட்டி, கானிமாரான்னு நிறைய லைப்ரரி இருக்கு.” 

“கூடவே ஜெர்மன் படிக்கவும் மாக்ஸ்முல்லர் பவன் வசதியா இருக்கும்” என்றான் சகஸ்ரம். 

“அப்ப கொச்சி, கோழிக்கோடு எம்.ஃபில்லுக்குக்கூட லாயக்கு இல்லியா?” கேள்வி கேட்கும்போதே ஏமாற்றமும் தொடர்ந்து வந்த துக்கமும் பாரதியின் தொண்டையை அடைத்தன. 

“ரிஸர்ச் பண்ணி தீஸிஸ் எழுதணும்னா இங்கிலீஷ் லிட்ரேச்சருக்கு கேரளாவிலே எந்த எடமும் சரியில்லே.”

“எம்.ஃபில்லுக்கே இப்படின்னா பிஎச்டிக்கு?”

தேவகி சிரித்தாள், பிறகு, 

“நீங்க ஏன் டில்லியிலேயே பிஎச்டி பண்ணலே?”

“பண்ண முடியாமப் போச்சு,” 

“நீங்க ஒரு தப்பு செய்ஞ்சுட்டீங்க,” 

“என்ன அது தேவகி”. 

“பிஎச்டி பண்ண முடியாதுன்னா எம்ஃபில்லுக்கே போயிருக்கக் கூடாது. பாதிக் கிணறு தாண்டற மாதிரி இருக்கு”. 

“முடியும்னுதான் ஆரம்பிச்சேன் தேவகி ஆனா..ஆனா…”  

“ஸாரி, பாரதி…உங்க பர்னைல் ப்ரோப்ளம் சொல்லண்டாம்”. 

சகஸ்ரம், “சரி அதெல்லாம் கிடக்கட்டும், தேவு பாரதியைப் பார்க்கணும் நிறையப் பேசணும்னாய்…கம் ஆன், பேசு” என்றான். 

“உங்க வீட்ல வேண்டாம். சார்” என்ற தேவகி, “நீ எப்ப ஃப்ரீயா இருப்பே பாரதி?” என்று கேட்டாள்.

“பாரதி எப்பவும் ஃப்ரீதான்” என்றான் சகஸ்ரம்.

இதுவரையில் கால்கடுப்பை உணராமல் நின்று கொணடிருந்த ராஜி உள்ளே சென்றாள். ஈசுவரன் வீட்டுக்குச் சாப்பாட்டைக் கொண்டு போகணுமே? 

“நான் இங்கே வந்து முழுசா முணுநாள் தான் ஆறது தேவகி, என்னாலே எதுவும் சொல்ல முடியலே.” 

“கோந்தை காலங்கார்த்தாலேயே எஸ்டேட்டுக்குப் போயாச்சு. சாப்பிட வர்றானா இல்லியாங்கறது. பகவானுக்குக் தெரியாது. அண்ணா பெட்ரோல் பங்க்ல இருக்காரோ, மெடிக்கல் ஷாப்வே இருக்காரோ தெரியாது. அப்பா அம்மாவை நாங்க கவனிச்சிக்கிறோம். பின்ன ஆரு பாக்கி? மன்னிதான். அவ ஒனக்கு அத்தையாகவும் போயிட்டா. அவளும் ஆத்துல இல்லை. சரசரன்னு சாப்பிட்டுட்டு நீ இந்தைக்கே தேவுகூட அவ வீட்டுக்குப் போ பாரதி. இசப்பாரு தேவு நீ எங்காத்துப் பொண்ணை ஒன் கார்ல கூட்டிண்டு போனா மாத்திரம் போராது. கார்லேயே திருப்பி அனுப்பணும் கிட்டயா?” என்றான் சகஸ்ரம். 

“இன்னிக்கு வேண்டாம்.” 

“நாளைக்கு” என்றாள் தேவகி. 

“எதுக்கும் என் ஹஸ்பெண்ட் கிட்டே ஒரு வார்த்தை சொல்லிடறேன்”. 

“அது ஆவஸ்யம் இல்லை பாரதி கோந்தை ஒன்னை ஒண்ணும் சொல்லமாட்டான்” என்றான் சகஸ்ரம், 

“அவ இஷ்டப்படியே ஆகட்டும் சார்… நாளைக்கு நான் ஃபோன் பண்றேன், வர்றதானா கார் அனுப்பறேன்” 

“அந்த வீட்டுக்கு ஃபோன் பண்ணு” 

“சரி சார், அப்ப நான் வரேன்-தாங்க் யூ பாரதி” என்ற தேவகி எழுந்தாள். 

“எங்கே சார் உங்க ஒய்ஃப். உள்ளே போயிட்டாங்க இல்லே?” 

இரண்டு பெரிய சாப்பாட்டுக் காரியர்களுடன் ராஜி வந்து, தாண்டிப் போக யத்தனித்தாள். 

“நான் வரேன் மிஸர்ஸ் ராஜி”. 

“போயிட்டு வாம்மா… பாரதி! உள்ளே ஓர் அடுக்கிலே சாதம் இருக்கு. நீ அதை மட்டும் தூக்கிண்டு வா” என்ற ராஜி அவசரமாக வாசலை நோக்கி நடந்தாள். 

தேவகி வெளியேறின பிறகு, “பாரதி நீ இங்கே என் கூடச் சாப்பிடலாம். கிட்டயா?” எனறான் சகஸ்ரம். 

“மொதல்ல சாதத்தைக் கொண்டு போய்க் கொடுக்ககறேன்.” 

“பாத்தரம் சுடும். கை பொள்ளப் போறது. ஜாக்கிரதை அதை அங்க வைச்சுட்டு, நீ இங்க வா”. 

”தாத்தாவுக்கும், பாட்டிக்கும். பரிமாறு வேண்டாமா?” 

“ராஜி பார்த்துப்பள்” 

“அவர் சாப்பிடறதுக்கு முன்னாலே நான் சாப்பிட்டா அது தப்புன்னு சொல்லுவாளே?”

“ஆரு சொல்லுவா? தீர்ச்சையா கோந்தை சொல்ல மாட்டான். ஈச்சா அண்ணா இதை ஒரு பெரிய காரியமாகவே எடுத்துக்கமாட்டான். ஓன் பாட்டா, பாட்டிக்கும் தேக்ஷ்யம் வராது… பின்ன ஆரு இருக்கா? ஒன்னைக் குத்தம் சொல்றதுக்கு?” என்று சகஸ்ரம் கேட்டான். 

“வந்து… வந்து அவரோட அம்மா”. 

“மன்னி உனக்கு அத்தையாச்சே? ஊரெல்லாம் நல்லவள்னு பேர் எடுத்தவள். தன்னோட அண்ணா பொண்ணைக் கோவிச்சுக்க மாட்டா” 

“வேண்டாம் சித்தப்பா … இன்னொரு நாள் இங்கே. சாப்பிட வரேன்.” 

“தேவகி ஃபோன்ல கூப்பிட்டா தீர்ச்சையாப் போகணும் கிட்டயா”. 

“சரி சித்தப்பா…” 

“இப்ப சாதத்தை அங்கே கொண்டு போய் வைச்சுட்டு இங்கே மடங்கி வா… ஒங்கிட்ட ஒண்ணு சொல்லணும்”. 

ராஜி தன் மாமனாருக்குப் பரிமாற ஆரம்பித்ததும் பாரதி மீண்டும் சகஸ்ரத்தின் வீட்டுக்கு வந்தாள். 

“என்னமோ சொல்லணும்னு இருக்கேளே சித்தப்பா என்ன?”

“நேத்தைக்கு ராத்திரி என்ன நடந்தது?” 

“என்ன நடந்தது…? நீங்க என்ன சொல்றீங்க, சித்தப்பா… ஒண்ணும் நடக்கலியே!” 

“நீ பிஎச்டி படிப்பைப் பத்தி கோந்தைட்டே பேசலையா?” 

“ஓ , அதுவா?'”

”அதுதான்,” 

“இதுபத்தி நாங்க பேசிட்டிருந்தோம். அவ்வளவு தான்” 

“நீ எங்கிட்ட சொல்லலைன்னா தோஷமில்லை. கோந்தை காலங்கார்த்தால், எஸ்டேட்டுக்குப் போறதுக்கு மின்னால எங்கிட்ட வந்து எல்லாத்தையும் சொல்லிட்டுத் தான் போனான்”. 

“அப்படியா?” 

“அவனுக்கு ஓன்பேர்ல தேஷ்யம் இல்லை. ஆனா தப்புக்காரியம் தான் சேதுட்ட மாதிரி துச்சுப்படறான் “

“என்ன தப்புக் காரியம், சித்தப்பா?” 

”ஒன் கழுத்தில தாலிகட்டினது தப்பாப் படறது அவனுக்கு. அப்பா, அண்ணா, மன்னி இவங்கள்ளாம் ஒண்ணாச் சேர்ந்து கோந்த்தைட்ட கொஞ்சாத தோஷமா அவனை நிர்ப்பந்தப் படுத்தினா. நான் கூட அவன் பக்கம் பரிஞ்சு பேசினேன். ஆனா எல்லாரும் என் வாயை அடக்கினா…இதெல்லாம் உனக்குத் தெரியாது, பாரதி. தெரிய நியாயமில்லை”

பாரதி ஒரு சில நிமிடங்கள் மெளனமாக, சிலை போல நின்று சகஸ்ரத்தைப் பார்த்தாள். 

“கோந்தைக்கு எத்தனையோ எடங்கள்லேந்து ஜாதகம் சேர்ந்தாச்சுன்னு சொல்லிண்டு வந்தா, கோழிக்கோட்ல நாலாப்புறத்துக்காரன்-மிளகு எக்ஸ்போர்ட் பண்றான்- கோடீசுவரன் அண்ணாவைப் பார்த்துப் பேச அஞ்சாறு பிராவசியம் வந்தான். மன்னிக்குக் கூட ஒரு சபலம் இருந்தது. கோந்தையும் தலையாட்டத் தயாரா இருந்தான். ஆனா அண்ணாதான் பிடிச்ச முசலுக்கு மூணு கால்னு நின்னார்! கூடப் பாட அப்பா” 

“இந்த இரண்டு பேரும் பிடிவாதமா இருக்க, என்ன காரணம் சித்தப்பா?” 

“நங்கவரத்திலேந்து ஒரு பொண்ணு முப்பது வருஷத்துக்கு மின்னால் வந்தா, கோர்ட்ல ஒரு பெரிய கேஸ் ஜெயிச்சு இருபது வருஷமா கை விட்டுப் போயிருந்த நிலமும், வீடும், தோட்டமும், திருப்பிக் கெடைச்சுது, அதனாலே அதே நங்கவரத்திலிருந்துதான் இன்னொரு பொண்ணும் வரணும்னு அப்பாவோட வாதம். அண்ணாவுக்கும் பொண்டாட்டீயோட ஊர்லேந்து பொண் வரனும்னு தன் மச்சினன் அடிநான்ள ரொம்பக் கஷ்டப்பட்டிருக்காளாம். அவனை மாதிரி நல்லவன் இனிமேத்தான் பூமியிலே ஜனிக்கணுமாம், அவனோட சொந்த பந்தம் என்னென்னைக்கும் விட்டுப் போகப் படாதாம். ரெண்டு பக்கத்திலேயும் மனப்பொருத்தம் இருந்துட்டா ஜாதகமே பார்க்கண்டாமாம், வேணும்னா பூப்போட்டுப் பார்க்கலாம்னு அண்ணா சொன்னான். பார்த்தா, நல்ல பூ கெடைச்சுது. அப்றம்தான் பெண் பார்க்கவே பொறப்பட்டா”. 

பாரதி பதில் சொல்லவில்லை.

என்ன சொல்லுவது? 

திடிரென்று சாஸ்ரத்தின் முதல் கேள்வி ஞாபகத்துக்கு வந்தது “நேற்று ராத்திரி என்ன நடந்தது?” 

இந்தக் கேள்விக்கு அவள் திரும்பினாள். 

“நீங்க என்ன சொல்றீங்க, சித்தப்பா?” 

“நீ ஒரு குடும்பப் பொண்ணா இருக்கணும்னு தான் கோந்தை ஆனசப்படறான், பாரதி,. நீ படிச்ச படிப்பை உபயோகப்படுத்தணும்னா, சாயங்காலங்கள்ளே ஒரு மணிக்கூறோ, ரெண்டு மணிக்கூறோ இந்த ஊர்லேயும், அந்தக் கிராமத்திலேயும் – அதுதான் ஆதித்யபுரம் – உள்ள குட்டிகளுக்கு இங்கிலீஷ் சொல்லிக் கொடுக்கலாம்ங்கறான். குட்டிகள்னா பொண் குட்டிகள் மாத்தரம் அல்லா. ஆண் குட்டிகளும்தான்.” 

“உங்க அபிப்பிராயம்?”

“நான் என்ன சொன்னால் என்ன பாரதி? என் வார்த்தை எங்கேயும் செல்லாது”. 

“ஏன் அப்படிச் சொல்றீங்க?” 

“நான் ஹிஸ்டரியிலே எம்.ஏ. பர்ஸ்ட் கிளாஸ், கார் சாமான் கடையைப் பார்த்துக்கோன்னா மாட்டேன் னேன். நேக்கு மேலே மேலே படிச்சு ஒரு நீலகண்ட சாஸ்திரி மாதிரி வரணும்னு தீராத ஆசை. நான் எப்படி ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் ஷாப்பில் ஒக்காருவேன்? 

“அப்றம் மருந்துக் கடையைப் பார்த்துக்கோன்னா… மாட்டேன்னேன். பெட்ரோல் பங்க்கும் கழியா- துன்னேன்…” 

“அப்ப இந்தக் குடும்பத்தின் பிஸினஸில் நீங்க எதிலுமே இல்லியா?” 

“இல்லை. ஆனா கோந்தைக்கு மாத்தரம் ஹெல்ப் பண்ணுவேன்”. 

“எப்படிச் சித்தப்பா!” 

“இந்தக் குடும்பத்திலே அவன் ஒருத்தன் தான் இருபத்து நாலு மணிக்கூறும் சளைக்காம வேலை சேயறவன். நீ ஒரு பிராவசியம் எஸ்டேட்டைப் போய்ப் பார்த்தாத்தான் தெரியும், அவன் எப்படி வைச்சுண்டிருக்கான்னு. ரெண்டு ஏக்கர் நெலத்தை ரிஸர்ச்சுக்குன்னு ஒதுக்கிவைச்சு, நெல், பயறு, கடலை, துவரை எல்லாம் போட்டு ரிசர்ச் பண்றான். இது சம்பந்தமா நெறைய எழுத்துகள் பல எடங்களுக்கு எழுதிப் போஸ்ட் பண்ணன்டி வரும். இதுக்கு அவனுக்கு நேரமிருக்காது. லெட்டர் எழுதி டைப் அடிச்சுப் போஸ்ட் பண்றது என்னோட வேலை. கோந்தை கேரள விவசாயிகள் சங்கத்தின் செக்ரடரி. அவன் எழுதண்ட எழுத்துகளை நான் எழுதுவேன். அவன் கையெழுத்து மாத்தரம் போடுவன்”. 

“நீங்க ஏன் மேலே படிக்க முடியாமல் போச்சு, சித்தப்பா?” 

“ஆவஸ்யம் இல்லைன்னா! அப்பா, ‘நீ இன்னைக்குப் படிச்சு வெளியே போயிட்டா நாளைக்கு இன்னொருத்தனும் ஒன்னை எக்ஸாம்பிளாக் காட்டி வெளியே போவான். அடுத்து தலைமுறையிலே குடும்பத்தையும், சொத்தையும் பார்த்துக்க ஆள் இல்லாமல் போயிடும்’னு சொன்னார். அவர் சொல்றதும் நியாயமாப்பட்டது”. 

“நான் பி.எச்.டி படிக்கப் போனா யாருக்கு என்ன நஷ்டம் சித்தப்பா?” 

“என்ன இப்படிக் கேட்டுட்டாய், பாரதி? ஆருக்கு என்ன நஷ்டமா? நீ படிச்சு முடிக்க தீர்ச்சையா ரெண்டு வருஷமாவது ஆகும். அது குடும்பத்துக்கு மூத்த மாட்டுப் பொண் நஷ்டம். டாக்டர் பாரதின்னு பட்டத்தோட நீ மடங்கி வந்தா ஒரு நா இந்தக் கிராமத்திலே, இந்தப் பாலக்காட்ல இருக்க ஒனக்குப் பிடிக்காது. அப்றம் என்னவாகும்? நீ பொறப்பட்டுப் போறதுன்னு தீர்ச்சையாக்கினா, ஆராலும் ஒன்னைத் தடுத்து நிறுத்தக் கழியாது. அப்ப என்ன? கோந்தை, ஆம்படையாள் குடும்பத்தை விட்டே போயிட்டான்னு கிராமம் பேசும். ஊர் பேசும். இது அவமானமில்லையோ?” 

“அப்ப நான் என்னதான் செய்யறது சித்தப்பா?”

“இப்ப நான் இல்லியா? நீயும் என்னைப் போலக் கழிச்சுக் கூட்டு”. 

“கழிச்சுக் கூட்டறதுன்னா…” 

“காலத்தைத் தள்ளிண்டிரு” சொல்லிவிட்டு சகஸ்ரம் சிரித்தான். பிறகு, அவன் தொடர்ந்து, “நான் வர்றவா? போறவாளோட ஊர் வம்பா பேசறேன்? ஹிஸ்டரி பேசறேன். அதுல ஒரு தனி சுகம் இருக்கு. ஆத்ல நிறைய ஹிஸ்டரி புக்ஸ் இருக்கு. நித்தியம் அஞ்சாறு பேஜாவது பாராயணம் பண்றேன்; நீயும் அது மாதிரி ஒன் இங்கிலீஷ் பசியையோ, தாகத்தையோ தீர்த்துக்க, நித்தியம் ஏதாவது படிச்சுண்டே இரு. இன்னைக்கும் ஈச்சா அண்ணா- ஒன் மாமனார் – ஷேக்ஸ்பியர் படிப்பான், மில்டன் படிப்பான். சீட்ஸ்னா உசிர். டிக்கன்ஸ், ஸ்காட் எதையும் விட்டு வைக்க மாட்டான். இப்ப வர்ற ஹெமிங்வே, ஆர்தர் மில்லர், ஹென்றி மில்லர், ஹக்ஸ்லிகளையும் அப்பப்ப தொட்டுத் பார்ப்பான்… இது ஆருக்காவது தெரியுமோ? அவன் மருந்துக் கடைக்குப் போறதும், பெட்ரோல் பங்க்குக்குப் போறதும் தான் ஊருக்குத் தெரியும்”

“நீங்க என்ன சொல்ல வர்றீங்க, சித்தப்பா?”

“நீ ஒரு டாக்டர் பாரதியானா ஆருக்குப் பெருமை, ஒனக்கு மாத்தரம்தான். ஆனா இந்தப் பெருமை எத்தனை நாளைக்கு? கொஞ்சம் கொஞ்சமா மத்த பிஎச்டி களைப் பார்க்கறப்ப நீயே மறந்து போயிடுவாய். பிஎச்டி பண்ணியாச்சு. இனைமே சாதிக்கறதுக்கு ஒண்ணும் இல்லைன்னு ஒனக்குத் தோணவும் ஆரம்பிக்கலாம், அப்றம் ரெண்டு மூணு வருஷத்திலே நீ படிச்சதை நீயே மறந்து போயிருப்பாய். பி.ஏ எம்.ஏ.ங்கறத்தல்லாம் நம்ம படிப்புக்கு ஓர் அடையாளம் தான், மைல்கல் மாதிரி இதுக்கு அப்றம்தான் நாம நம்ப அறியை வளர்த்துக்கணும், நம்ப மனசுக்கு திருப்தியும், ஆனந்தமும் ஒரு நிறைவும் வேணும்னா நாம காலேஜ் இல்லாமலேயே படுச்சுண்டே இருக்கணும், ஓர் எக்ஸாம்பிள் சொல்றேன், மாஸ்டர் ராமய்யர்னு ஒருத்தர் ஊர்க் கொளத்துக்கு எதிர்க்க இருக்கார். தொண்ணூறு வயசு சோடாபாட்டில் கண்ணாடி. இப்ப நீ அங்கே போய்ப் பாரு, தமிழ்ல சிலப்பதிகாரமோ, திருக்குறளோ, பெரிய புராணமோ, படிச்சுண்டிருப்பார் எதுக்கு இதெல்லாம் சொல்ல வர்றேன்னா, நீ பிஎச்டி படிச்சு தான் மேதை ஆகணும்னு இல்லை”. 

என்னதான் சுவாரசியமாக அர்த்தச் செறிவுடன் சகஸ்ரம் பேசினாலும் அவனுடைய கருத்துகளை பாரதியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவன் கூறும் ஆக்ம திருப்தியையும் ஆனந்தத்தையும் டாக்டர் பட்டம் வாங்கிய பிறகும் ஆரம்பிக்கலாமே? டாக்டர் என்ற ஒரு பெருமைக்காகவா அவள் படிக்க விரும்புகிறாள் அவளுடைய தனித்துவத்தை நிலைநாட்ட அல்லவா?

அவள் தன் வீடு திரும்பினாள். 

பாட்டி சாப்பிட்டு எழுந்தாகி விட்டது. இலையை எடுத்துப் போட்டு விட்டு சாணித் தண்ணீரால் சுத்தம் செய்த ராஜி, “இப்பத்தான் உன்னை உன் சித்தப்பா விட்டாரா, பாரதி? உன் மாமியார் ரெண்டு தடவை உன்னைக் கூப்பிட்டாச்சு” என்றாள்.

பாரதி தொழுவத்தை நோக்கி நடந்தாள். மாமியார் என்ன சொல்ல அழைக்கிறாள்?

அத்தியாயம்-8

பாரதிக்கு நெஞ்சு வெடிக்கக் கோபம் வந்தது. ஆனால் யார் மீது என்று அவளாலேயே நிர்ணயிக்க முடியவில்லை. அத்தை உறவோடு நிறுத்திக் கொள்ளாமல் கணவனுடைய தாயார் என்ற அசைக்கவே முடியாத சொந்தத்தை உருவாக்கிக் கொண்ட தங்கம்மா மீதா? தேனொழுகப் பேசி தாராள மனப்பான்மை இருப்பதாக வெளிச்சம் போட்டுச் சிரித்து அவளைத் தன் பெண்போல சுவீகரித்துக் கொள்ள வந்திருப்பதாக தம்பட்டம் அடித்த ஈசுவரன் மீதா? அவளைப் பலவந்தப்படுத்தி, கசப்பான மாத்திரைக்குச் சர்க்கரை முலாம் போட்டு அவளைப் பாக்கு வெட்டியின் இடையில் அகப்பட்டுக் கொள்ளும் பாக்கைப்போல இந்த வீட்டுக்கு அனுப்பினார்களே, அம்மாவும், அப்பாவும் அவர்கள் மீதா? இல்லை. எதிர் காலம் பற்றி ஆற அமர உட்கார்ந்து சிந்திக்காமல், பலா பலன்களை அறியாமல் ஒரு கல்யாண மேடைமீது குதித்த தன் மீதே தானா? இதிலிருந்து விடுதலை கிடைக்குமா? கிடைக்க வழி இருக்கிறதா? எங்கே, எப்படி வழியைத் தேடுவது. 

தொழுவத்தை அடைந்தபோது அவளுக்கு எல்லா பிரக்ஞைகளுமே அற்றுப் போயிருந்தன. தங்கம்மாவின் குரல்கூட முதலில் கேட்கவில்லை. 

“நான் கூப்பிடறது அந்த மாட்டுக்குக்கூட கேட்டிருக்கும். உன் காதில் விழலையா?” 

இப்போது பாரதி தன் உலசுத்திலிருந்து விடுபட்டிருந்தாள். 

“நான் மாட்டைவிட மோசம்” என்றாள்.

“என்னடீ பதிலா சொல்றே?” 

அத்தை தங்கம்மாவா இப்படிப் பேசுகிறாள்? நங்கவரத்தில் அவனை அணைத்துக் கொண்ட அத்தை எங்கே? 

திடீரென்து டாக்டர் ஜெரில் அண்ட் மிஸ்டர் ஹைட் கதை நினைவில் மோதியது. தங்கம்மா இப்போ அத்தை ஜெஸில் இல்லை! ‘மாமியார் ஹைட்’. 

“இதப்பாருங்க அத்தை ஒண்ணு இப்பவே சொல்லிடறேன். நீங்க எனக்கு மதிப்பும், மரியாதையும் கொடுத்தா, நானும் மதிச்சு மரியாதை கொடுத்து மாமியாரா ஏத்துப்பேன். நான் இங்கே வந்திருப்பது ஒரு மருமகளா. வேலைக்காரிகிட்டகூட இந்தக்காலத்திலே நீங்க இப்பப் பேசின மாதிரி பேச முடியாது.”

“நீ ரொம்பப் படிச்சுட்டே!” 

“இதைப்பத்தி எனக்குச் சந்தேகம் இல்லை.”

“வார்த்தைக்கு வார்த்தை வாயாடத் தெரியறது. உன் அம்மா உன்னை நன்னாவே வளர்த்தி அனுப்பிச்சி இருக்கா…”

“என் அம்மாவைப் பத்திப் பேசறதுக்கு உங்களுக்கு உரிமையும் இல்லை, யோக்கியதையும் இல்லை… இப்ப எதுக்கு என்னை இங்கே வரச் சொன்னீங்க, அதைச் சொல்லுங்க”. 

“நீ இத்தனை நேரமா சகஸ்ரத்தின் வீட்ல அரட்டை அடிச்சுட்டிருந்தே!”

“பேசிட்டிருந்தேன்!”

“தாத்தா பாட்டிக்கு இலை போட்டுப்பரிமாறனும்னு கூட உன் மண்டையிலே எண்ணம் உதிக்கலே” 

“ராஜி இருந்தா”

“ஏன் ராஜி இருந்தா? வேலைமெனக்கெட்டா? பரிமாற நீ இல்லையேன்று அவ அந்தக் காரியத்தைச் செய்ஞ்சா கூடமாட ஒத்தாசை செய்யக்கூட உன்னால முடியலே!”

“ஆமாம் முடியலே…அதுக்கு என்ன இப்ப?”

“நன்னாத் தாண்டீ பேசறே! நங்கவரத்துக்கு என்னால பெருமை வந்தது. உன்னால? நங்கவரத்துக்கு அவமானம் தான் உண்டாகும் போலிருக்கு”. 

“எனக்கு நங்கவரம் இல்லே! டில்லி. டில்லிக்கு ஏற்கனவே நிறைய அவமானங்கள் இருக்கு. இப்ப ஒண்ணு ஏறிப் போனா பூமி பிளந்துடாது”.

“உன் உண்மையான குணம் இப்பத்தான் தெரியறது”

“இதே வார்த்தைகளை நானும் உங்களைப் பத்திச் சொல்ல முடியும்.”

”ஓகோ, என்னப் பொல்லாதவள்னு சொல்றியா…?”

“உங்க மனசிலே உதிக்கிற வார்த்தைகளை என் வாய்லே திணிக்காதீங்க..” 

“இந்தப் பள்ளப் புரத்திலேயும் சரி அந்தக் கிராமம் ஆதித்திய புரத்திலேயும் சரி வீடு வீடா ஏறிப் போய் நான் எப்படிப்பட்டவள்னு விசாரிச்சுப் பாரு, தங்கம்மான்னா இருபத்து நாலுகாரட் தங்கம்னு சொல்லுவா”

“தங்கமா பித்தளையான்னு அவங்க அவங்க உரசல்லே இருக்கு… சரி. இன்னும் ஏதானும் பாக்கியிருக்கா?” 

“நீ போ, நாராயணன் வரட்டும்.” 

“அவர் உங்களுக்குப் புள்ளைன்னா எனக்குப் புருஷன்”. 

“அவனை எங்கிட்டேந்து பிரிச்சு உன் கைக்குள்ள போட்டுக்கத்தான் இப்ப நீ வந்துட்டியே…” 

“ஓ, இப்படிப் போறாதா உங்க மனசு! இந்த மாமியார் பதவி கிடைச்சுட்டா பர்ஸ்ட்கிளாஸ் பி.எஸ்.ஸியும் ஒண்ணுதான் கைநாட்டுப் பேர்வழியும் ஒண்ணுதான்” 

சொல்லிவிட்டுப் பாரதி நகர்ந்தாள். 

“நில்லுடீ” 

நின்றாள். மாமியாரை எரிப்பது போலப் பார்த்தாள். 

“இன்னி ராத்திரியிலிருந்து நீதான் சமையல் வேலையை ஆரம்பிக்கிறே. இனிமே நான் குளிச்சு உள்ள வர்ற வரைக்கும் நாணாவோட சித்தப்பாக்கள் யார் வீட்லேந்தும் சாப்பாடு வராது.” 

“நான் ரெடி. ஆனா நான் சமையல் செய்ததைச் சாப்பிட மத்தவங்க ரெடியான்னு எதுக்கும் கேட்டு வைச்சுடுங்க” 

பாரதி தொழுவத்தை விட்டு வெளியேறினாள்.

கொல்லைத் தாழ்வாரத்தைக் கடந்து முன் தாழ்வாரத்துக்கு வந்தபோது பாட்டி “பொண்ணே!” என்று அழைத்தாள். 

நெஞ்சு நிறைய ஆத்திரமும் ஆவேசமும் இருந்தாலும் பாரதியால் நிற்காமல் இருக்க முடியவில்லை. 

“என்ன பாட்டி?” 

“ஈச்சா ஓர் அவசரச் காரியமா கொல்லங்கோடு போயிருக்கானாம். சாப்பிடறதுக்கு இல்லைன்னான். கோந்தை களத்துக்குப் போனா எப்ப ஊர் மடங்குவன்னு ஆராலேயும் சொல்லக்கழியாது. அதனாலே நீ சாப்பிடு” 

“சரி பாட்டி”. 

“தங்கம்மாவுக்குய் நீ சாப்பிட்டப்புறம் போடு, கிட்டயா?”

“சரி, பாட்டி”. 

“இத்தன நேரமா நீ தொழுத்துப் பெரையிலதானே இருந்தாய்?” 

“ஆமாம் பாட்டி?” 

“தங்கம்மா ஒங்கிட்ட என்ன சொன்னா?” 

“ஒண்ணும் பெரிசா சொல்லலே பாட்டி?” 

“என்னைப் பத்தி சொல்லட்டா அவளுக்குத் தூக்கமே வராதே…நான் பொல்லாதவன்னு அவகிட்ட பேர் வாங்கியிருக்கேன், தெரியுமோ நோக்கு?”

”உங்களைப் பத்தி எதுவும் பேசலை பாட்டி” 

”உங்கிட்ட நெவளிச்சாளா?”

“அப்படீன்னா?” 

“சத்தம் போட்டாளா?” 

“இல்லை”. 

“அதிசயமா இருக்கு. அவ எப்ப, எதுக்கு நெவளிச்சாலும் நீ காதுல போட்டுக்காதே. கிட்டயா? எங்கிட்ட வா. நான் பார்த்துக்கறேன்” 

“இன்னிக்கு ராத்திரி நான் சமையல் ஆரம்பிக்கணும்னா, அத்தை குளிச்சு வர்ற வரைக்கும் நான் தான்…” 

“நோக்குச் சமைக்கத் தெரியுமோ?”. 

“குக்கர்ல சாதம் வடிக்க மட்டும்தான் தெரியும் பாட்டி, உப்பு, மிளகாய்பொடி இதெல்லாம் அளவு தெரியாது. இந்த மிளகூட்டலைப்பத்தி நான் டில்லியலே கேள்விப்பட்டதுகூட இல்லை.” 

“மிக்ஸியில் தேங்காய் அரைப்பாய்; இல்லியா?”

“அரைப்பேன். ஆனா தேங்காய்த் துருவிப் பழக்கம். இல்லே?”

“நீ ஒன்றுக்கும் விசாரப்படாதே பொண்ணே… ராத்திரி வத்தக் கொழம்போ ரசமோதான் வைக்கறது. நான் சொல்லித்தரேன். அப்புறம் வெளிச்செண்ணெயை வைச்சு அதுவ பப்படாம் காய்ச்சலாம். கோந்தைக்கு பப்படாம் எத்தனை போட்டாலும் போராது, சின்ன வயசிலே போக வர தின்னுண்டே இருப்பன்.” 

”சாயங்காலத்து டிஃபனை கமலம் சித்தி, கொண்டு வரப் போறதாச் சொன்னா”. 

“ஆமாம் எங்கிட்டேயும் சொன்னா. கமலம் நல்ல பொண்ணு. ஆனா என்ன சொன்னாலும் வாயைத் தொறக்க மாட்டா. அவளைக் கண்டாலே தங்கம்மாவுக்குப் பிடிக்காது. 

ஏன தெரியுமோ? அவ அப்பா அவளுக்கு நூறுபவுன்ல பண்டம் போட்டார். வைர நெக்லஸ் போட்டார். பெரிய பணக்கார வீட்டுப் பொண்ணாக்கும் கமலம்,” 

பாரதி விஷயங்களைக் காதில் வாங்கிக் கொண்டாள். பதில் சொல்லவில்லை. 

“நீ போய்ச் சாப்பீடு”. 

“ராஜிச் சித்தி வீட்ல நான் சாப்பிடணும்னு சித்தப்பா சொன்னார்” 

“அதான் நல்லது. சகஸ்ரம் கலகலன்னு பேசுவன். அவனுக்கு மனுஷாள் வேணம். வேகத்தில் போய்ச் சாப்பிட்டுட்டு வேகத்தில் மடங்கி வா. தங்கம்மாவைக் காக்க வைச்சா அவள் தேக்ஷியப்படுவள்”. 

“சரி பாட்டி”. 

தாத்தா தரைமேல் தரையில் உடம்பை வளைத்துப் படுத்துக் கொண்டிருந்தார். மெல்லிய குறட்டை ஒலி இழைந்து வந்தது. 


அன்று நாராயணன் வீடு திரும்பும் போது மாலை மணி ஆறு. 

பாட்டி ஊஞ்சலில் உட்கார்ந்திருக்க, பாரதி சுவரோரமாய் ஒரு  நாற்காலியில் இரு கால்களையும் மடக்கி வைத்து அமர்ந்திருந்தாள். 

நாராயணனைக் கண்டதும் பாரதி கால்களைத் தளர்த்திக் கீழே போடவில்லை, எழுந்து நிற்க வேண்டும். என்பதையும் அவள் அறியாள். 

“பாட்டீம்மா அம்மை எங்கே?”

“அவ கார்த்தால ஒக்கார்ந்தா“

“எனக்குப் பசிக்கிறது”. 

“கமலம் கொழுக்கட்டை உண்டாக்கிக் கொண்டு வந்தா. நந்நா உண்டாக்கியிருந்தா. ஒனக்குன்னு அஞ்சாறு எடுத்து வைச்சிருக்கேன். பொண்ணே! கோந்தைக்குப் பலகாரம் வை. கொட்டுக்க கார்த்தால் வைச்ச ரசம் இருக்கு. கடுகு மாங்கா வெள்ளம் இருக்கு”. 

“சரி பாட்டி” என்ற பாரதி நாராயணனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே எழுந்து நகர்ந்தான்.

“நீ உச்சிக்கு எங்க சாப்பிட்டாய் கோத்தே?”

“களத்திலே” 

“நீயே சமைச்சுண்டாய் இல்லியா?”

“வேற என்ன வழி?”

”கோந்தே”. 

“என்ன பாட்டம்மா?” 

“கிட்டக்க வா” 

நாராயணன் அருகே சென்றான், 

“நான் இப்ப சொல்றதைக் கேட்டு எம்பேர்ல தேஷ்யப் படப்படாது. நான் இந்த முணு நாலு நாளாப் பார்த்ததை வைச்சுண்டு சொல்றேன்.” 

“சொல்லு பாட்டீம்மா”. 

“பாரதி நல்ல பொண்” 

“சரி”

‘”ஆனா அவளுக்கு நம்ப ஊர் இன்றும் பரிச்சயமாகலை. இன்னும் நம்பளை யெல்லாம் நந்நா மனசிலாக்கிக்கலை” 

“அதுக்கு இப்ப என்ன பாட்டீம்மா?” 

“ஆம்படையான் வந்தா பொண்டாட்டி உட்கார்ந்திருக்கப்படாது. அவள் எழுந்து நிக்கலை”. 

“‘காலம் மாறிண்டு வர்றது”. 

“அவள் வேணும்னே ஒக்கார்ந்திருக்கலை, எழுந்து நிக்கணும்னு அவளுக்குத் தெரியலை, அம்படுத்தான்” 

“சரி”

“இன்னொன்னுடா கோந்தே!” 

“என்ன பாட்டீம்மா?” 

“தங்கம்மாவுக்குச் சில பேரைக் கண்டா உடனே பிடிச்சுப் போயிடும். அவளோட குத்தங் குறைகள் தெரியாததைக்கு அளவுக்கு மீறிப் பழகுவள். சிலபேரைக் கண்டா, அவா எத்தற நல்லவாளானாலும் பிடிக்காது. இது நான் சொல்லித்தான் ஒனக்குத் தெரியணும்னு இல்லை.” 

“இதை எந்துக்கு இப்ப எங்கிட்டச் சொல்றாய் பாட்டீம்மா?” 

“உன் பெரிய சித்தி கமலம் நல்லவள். அவளைக் கண்டாவே அம்மைக்கு வெறுப்பு, ராஜிட்ட எத்தனையோ குறைகள் உண்டு. ஆனா அவள்ட்ட தங்கம்மாவுக்கு தனி தாத்பர்யம்”. 

“மனசிலாறது” 

“இதெல்லாம் எந்துக்கு சொல்ல வர்றேன்னு மனசிலாறதோ, நோக்கு?” 

நாராயணன் மெளனமாகப் பாட்டியைப் பார்த்தான். 

“மனசிலாகலை அல்லா, ஒன் அம்மைக்கு ஒன் பொண்டாட்டியைக் பிடிக்கலை. நானும் உன் அம்மை புதுசா இங்கு வந்தப்ப அப்படித்தான் இருந்தேன். தொட்டதுக்கெல்லாம் குத்தம் சொல்லுவேன். ஒன் அப்பாவோட பேசறதுக்கு விடமாட்டேன். நான் சேததெல்லாம் தப்புத்தான். இப்ப என்னோட விசாரம் என்ன தெரியுமா. உன் அம்மை அடி நாள்ளே எங்கிட்டக் கஷ்டப்பட்ட மாதிரி ஒன் ஆம்படையாள் படப்படாது”. 

“அதா பாரதி டிபன் கொண்டு வர்றா, பாட்டீம்மா கை கால் அலம்பி தின்னுட்டு வரேன்” 

பாட்டி பதில் சொல்லவில்லை. 

ஊஞ்சல் ஆடியது 

கூடத்தில் சாப்பாட்டு மேஜை இருந்தும் நாராயணன் வழக்கம் போலத் தரையில் உட்கார்ந்தான். 

அவனுடைய பசியில் பிடிக் கொழுக்கட்டை எதிர் பார்த்ததற்கு மேல் ருசியாக இருந்தது. 

“நீ சாப்பிட்டாயா”

“ஒண்ணு தின்னேன்” என்றாள் பாரதி, 

“ஏன் ஒண்ணே ஒண்ணு?” 

“எப்பவோ ஒரு வாட்டி பாம்பேய்ல பாட்டி வீட்ல தின்னிருக்கேன். அப்றம் இப்பத்தான். எக்கச்சக்கமா தேங்காய் இருக்கு. எனக்குப் பிடிக்காது”. 

”மெள்ள மெள்ளத்தான் ருசி பிடிக்கும். என் அம்மாவும் இப்படித்தான். ஆரம்பத்தில் கஷ்டப்பட்டிருக்காள்!”

பதில் சொல்லாமல் பாரதி ஒரு சில கணங்கள் அவனையே பார்த்துவிட்டு “காப்பியா, டீயா?” என்றாள்.

“டீ”

“கொண்டு வரேன்”. பாரதி நகர்ந்தாள்.

“பாரதி” 

“உம்”

“நேத்து நீ கோவில்லேந்து வீடு திரும்பியதும் புடைவையை அவிழ்த்து விட்டு ஹவுஸ்கோட் போட்டுண்டாய்” 

“தப்பா?” 

“எனக்குத் தப்பாப் படலே ஏன்னா டில்லியிலே வாழ்ந்தவள் நீ. எத்தனையோ வருஷங்களா அது உனக்குப் பழக்கமா இருக்கு. என் தங்கை கூட வீட்ல ஹவுஸ்கோட் தான் போட்டுக்கறா. ஆனா இதை அங்கீகரிக்கிற மனப்பான்மை இன்னும் இந்த வீட்ல பொறக்கலே…” 

“அம்மா இங்கே வர்றப்ப நாலு நூல் புடைவை வாங்கித் தந்திருக்கா. இனிமே…”

“நாலுதானா?” 

“ஆமாம்”. 

“அது எப்படிப் போரும்?” 

பாரதி பதில் சொல்லவில்லை. 

“நாளைக்குச் சாயங்காலம் அஞ்சுமணிக்கு ரெடியா இரு. நாம ரெண்டு பேரும் பாலெஸ் ஹவுஸுக்குப் போய் ஏழெட்டுப் புடைவை வாங்குவோம், நீயே செலக்ட் பண்ணிக்கோ, மாட்ச்சிங்கா சோளிக்கும் துணி எடுத்துக்கோ” 

“சரி”

“இன்னும் என்னென்ன வேணுமோ அதெல்லாம் தயங்காம வாங்கிக்கோ.” 

“சரி”

“என் அம்மா ஏதானும் சொன்னாளா?”

“இல்லை!”

“ஒண்ணுமே சொல்லலையா?” 

“ஏன் கேக்கறீங்க?” 

“நம்ம கல்யாணத்துக்கு அம்மாதான் காரணம்னு நீயும், உன் அப்பா அம்மாவும் நினைச்சுண்டிருப்பேள்” 

“அப்ப?” 

“நானும் அப்பாவும் தான். சொல்லப்போனா அப்பா தான்”.  

“இது இப்பத்தான் தெரியும்” 

“ஒரு பெரிய இடத்திலிருந்து பெண் வரணும்னு அவ மனக்கோட்டை கட்டியிருந்தா” 

“அவள் நங்கவரத்துக்கு என்னைப் பெண் பார்க்க வந்தபோது அப்படி அன்பாக் குழைஞ்சு குழைஞ்சு பேசினாளே? என்னனக் கட்டிண்டாளே?” என்றாள் பாரதி. 

‘”அப்பாவைக் கண்டால் அம்மாவுக்கு பயம். அவர் ஒருத்தர்ட்டதான் அவ எதிர்த்துப் பேசமாட்டா, ஒரு முடிவு எடுத்தாச்சுன்னு தெரிஞ்சப்புறம் தனக்கும் பிடிச்சுட்டதாக் காட்டிக்சுத் தோணித்து”. 

பாரதி மௌனமாக தின்றாள். கல்யாணத்தின் பின்னணியில் இவ்வளவு பெரிய கதையா? 

நாராயணன் தொடர்ந்தான். 

”உன்னை எனக்குப் பிடிச்சிருந்தாலும் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க மனசு வரலே, ஏன் தெரியுமா? வாழ்க்கையிலே நீ சுகப்பட மாட்டேன்னு தோணித்து. இதை நீயே நன்னாப் புரிஞ்சுக்கணும்னுதான் நான் அன்னிக்கே சொன்னேன். நாலு பேர் முன்னாடி எனக்கு இந்தக் கல்யாணத்தில் இஷ்டமில்லைன்னு சொன்னது எதுக்குத் தெரியுமா பாரதி? உன்னால உன் அம்மா அப்பா கூட இருக்கறப்ப வெளிப்படையா உன் உண்மையான அபிப்ராயத்தை வெளியிட முடியாமத் தவிக்கறேன்னு தெரிஞ்சுது. அதனாலதான் உன் நெஞ்சோட வார்த்தைகளை என் வாய் வழியாக் கொட்டினேன். ஆனா நீ என்னோட சேர்ந்து பாடாமப் பேசாம இருந்தே.!”

“இனிமே என்ன செய்ய முடியும்?” 

“பல்லைக் கடிச்சுண்டு இருக்கப் பாரு. வேறு வழி எனக்கும் தெரியலே. பிஎச்டி பத்தி நேத்து எங்கிட்டப் பேசின மாதிரி என் அம்மா, அப்பாவிடம் பேசாதே. ரெண்டு பேருக்கும் பிடிக்காது. நேத்து ராத்திரி நான் கொஞ்சம் முரட்டுத்தனமா பேசினேன். அதுக்கு ஸாரி” 

பாரதியால் தன் காதுகளையே நம்ப முடியலே.

அயர்ந்து போய் நின்றாள். 

“இப்பப் போய் சாயை கலந்துண்டு வா” என்றான் நாராயணன். 

அத்தியாயம்-9

பாரதியால் அவன் புகுந்துவிட்ட வீட்டைப்பற்றிப் புரிந்து கொள்ள முடியல்லை. ஆரம்பத்தில் இதமாக இருந்த அத்தை முகத்தில் அறைவதுபோலப் பேசுகிறாள். அவளைப் பற்றி பாட்டி ஆரம்ப காலக் குறைகளை விவரிக்கிறாள். அவளிடம் பாசப் பொங்கப் பழகுகிறாள். இதுவரையில் அவளும், நாராயணனும்  ஒரு சாதாரண தம்பதியைப் போலப் பரிமாறிக் கொள்ளவில்லை. திருமணத்துக்குப் பிறகு, படுக்கை அறையில்கூட சந்திப்பு, யாருக்கும் நிகழ முடியாத விநோதமான சந்திப்பாக வாய்ந்தது. ஓர் இரவு சற்றே முரட்டுத்தனமாக நடந்து கொண்டால் மறுநாளே சுருதி மாறுகிறது. தன் தாயாருக்கு விருப்பு வெறுப்புகள் காரணமின்றி எழும் என்கிறான். அவள் பிஎச்டி படிக்க ஆசைப்படுவதில் அர்த்தமோ நியாயமோ கிடையாது எனகிறான். அதேசமயம் மறுநாள் மாலை துணிக்கடைக்குச் சென்று அவளுக்குப் பிடித்த புடவைகளும், மற்ற துணிமணிகளும் எடுத்துக் கொள்ளலாம் என்கிறான். அவள் இன்னும் மாமனார் ஈசுவரன் ஒருவரிடம்தான் சரியாகப் பேசுவதில்லை. சதா இன்முகம் காட்டி புன்னகை பூக்கும் அவரிடம் என்ன குணாதிசயங்கள் ஒளிந்துகொண்டிருக்கின்றனவோ? 

இதுவரையில் அவள் மனத்தை ஈர்த்தது சகஸ்ரம் மட்டும் தான். எதிலும் ஒளிவு மறைவு இல்லை. மனத்தில் பட்டதைத் தயங்காமல் வெளியிடுகிறார். அவளுக்குச் சமத்துவம் கொடுத்து மதிக்கிறார். அவருடைய மனைவி ராஜியை மேலோட்டமாகப் பார்த்தபோது நல்லவளாக பட்டாலும், அவள் லேசுப்பட்டவள் இல்லையோ என்ற சந்தேகம் வந்தது. தாத்தா, பாட்டிக்கு அவள் சாப்பாடு பரிமாறாத விஷயம் அத்தைக்கு எப்படித் தெரிய வந்தது? தொழுவத்திலிருந்து அவள் நிச்சயமாக வெளியே வந்திருக்க மாட்டாள்! ராஜியைத்தவிர வேறு யாரும் தொழுவத்துக்கு செய்தியைக் கொண்டு போகப் பிரமேயமேயிலமை. ராஜி பாம்பா, பழுதையா? 

அன்று இரவு மாடி அறைக்குச் சென்ற பாரதி, இரட்டைக் கட்டிலை மிகவும் சிரமப்பட்டு இரண்டு அடி தூரத்துக்குத் தள்ளினாள். மூலையில் நான்கைந்து பாய்கள் சுருட்டி வைக்கப்பட்டிருந்தன. இரண்டை எடுத்தாள். விரித்தாள். ஒன்றோடு ஓன்று ஒட்டிக் கொண்டன. மெத்தை மீதிருந்த தன் தலையணையைப் பாயின்மீது போட்டுவிட்டுக் கீழ இறங்கி வந்தாள். 

கீழே நாராயணன் டெலிபோனில் பேசிக்கொண்டிருந்தான். 

“ஓகே; ஐ வில் பி நேர் வித் மாதவன் நாயர்” என்ற வார்த்தைகள் அவள் காதில் விழுத்தன. 

“ஆர்டா கோந்தே?”” என்று தாத்தா கேட்டார். 

“மினிஸ்டர் பாலகிருஷ்னமேனன். ஒத்தப்பாலத்தில் இருக்காறாம். நானும் மாதவன் நாயரும் உடனே பொறப்படனும் பாட்டாப்பா.” 

“கார்ல போறயோ?” 

“ஆமாம். ராத்திரி பந்தரண்டு ஆனாலும் காத்துண்டிருக்கேன்னு மினிஸ்டர் சொல்லச் சொன்னாராம்”.

“இப்ப பிள்ள ஆர்ட்ட பேசினாய்?” 

“மினிஸ்ட்டரோட பி ஏட்ட” 

“நீ ஒண்ணும் எம்.எல்.ஏக்கு நிக்கண்டாம். கிட்டயா? “

“மினிஸ்டர் எந்துக்குக் கூப்பிடறான்று தெரியலையே பாட்டாப்பா?” 

“இந்த மேனோன் கொஞ்ச காலமாக ஒன்னை வட்டம் போட்டுண்டிருக்கான். நீதானே போன பிராவசியம் சொன்னாய், அவன் எம்.எல்.ஏக்கு நிக்கச் சொல்றான்னு?”

“நேக்கு இப்ப நேரமாறது. நான் போயிட்டு வரேன்” சொன்ன நாராயணன் மாடிப்படியை நோக்கி விரைந்தான். 

வழியில் நின்ற பாரதி ஒதுங்கி நிற்க, “நீயும் கொஞ்சம் மச்சு மேலுக்கு வா!” என்றான்.

“மச்சுமேல்” என்றால் மாடி என்பதைப் புரிந்து கொண்ட பாரதி பின் தொடர்ந்தாள்.

இரண்டு பாய்கள் விரிக்கப்பட்டிருப்பதை அவன் கவனித்தாலும் அதுபற்றிப்பேசாமல், “பாரதி நான் இப்ப ஒத்தப்பாலம் போறேன். கார்த்தாலதான் திருப்பி வருவேன். என் அலமாரியிலிருந்து ஒரு வேஷ்டி ஜிப்பா, டவல், கர்ச்சீப் எல்லாம் எடுத்து இந்தப் பெட்டியில் வை. கீழே போய் பிரஷ், பெஸ்ட், அப்றம் சோப் இதெல்லாமும் வை. நீ வர்றதுக்குள்ளே நான் எடுக்கவேண்டிய பேப்பர் களையொலாம் எடுத்து வைச்சுக்கறேன்” என்றான், 

“சரி”

அவள் நகர்ந்தாள். 

“தனியா இங்கே தூங்க பயமாயிருந்தா கீழே பாட்டி அம்மாகிட்டப் படுத்துக்கோ. அர்த்த ராத்திரியில் மரநாய் சத்தம் கேட்கும் பயமா இருக்கும்”. 

அவள் பதில் கூறாமல் மாடிப்படிக்கு விரைந்தாள்.

“எங்கே ஓடறே?” 

“வேஷ்டி, ஜிப்பா, கர்ச்சீப்…” 

ஒன்பதே காலுக்கு அவன் புறப்பட்டான். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு மாமனார் ஈசுவரன் வந்தார்.

“அப்பா, கோந்தே எங்கே கார்ல போறான்?”

தாத்தா விஷயத்தைச் சொன்னார். 

“ஒரு காலத்தில் நீங்க கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்தவன் இப்ப மினிஸ்டர் அவன் என் புள்ளையை வான்னு கூப்படறான் – இவனும் ஓடறான். பொண்ணே நீ சாப்பிட்டாச்சா?” 

“இன்னும் இல்லே அத்திம்பேர் ” 

“சரி, வா ரெண்டு பேருமா சாப்பிடுவோம். நான் டேபிள்ள தான் சாப்பிடுவேன்” 

பாரதி மெளனமாகச் சமையலறைக்குச் சென்றாள். சாப்பிட உட்கார்ந்தார்கள். 

பின் ஈட்டிலிருந்து குரல் கேட்டது.

“பாரதி.” 

“ஓம் மருமாள் என்னோட சாப்பீட்டுண்டிருக்கா. தங்கம் என்ன வேணும்?” 

”உங்களுக்குப் போட்டுட்டு அவ சாப்பிட உட்கார்ந்தாப் போராதோ?” 

“நான்தான் அவளை என்கூட ஒக்கார்ந்து சாப்பிடச் சொன்னேன்.” 

“நீங்களே இப்படி இடம் கொடுத்தா அவ துளுத்துப் போயிடுவா”. 

“நீ பேசாதைக்கு இரு தங்கம்” 

“என் வாயை அடையுங்கோ.” 

“பாரதி நீ ஓம்பாட்டுக்குச் சாப்பிடு. கிட்டயா…என்ன கொஞ்சமா சாதம் போட்டுண்டிருக்காய்? வத்தக் குழம்பு ஏ கிளாஸா இருக்கு. ஆரு வைச்சா? நீயா? தஞ்சாவூர், திருச்சிராப்பள்னிக்காரா இந்த சாம்பார், வத்தக்குழம்பு வைக்கறதில மன்னன்மார்” 

“நான் புனி மாத்திரம் கரைச்சேள் அத்திம்பேர். மத்ததெல்லாம் பாட்டிதான்” 

“ஆறு வைச்சா என்ன, நாக்குக்கு அமிர்தமா இருக்கு. அந்தப் பப்படா டப்பாவைத் தள்ளு”.

தள்ளினாள். 

“இந்தைக்கு என்ன டிபன்?” 

“அத்தை தோசை வார்த்து வைன்னா. ஆனா கமலம் சித்தி வீட்லேந்து கொழுக்கட்டை வந்தது”. 

“ஒனக்கு இங்கே போர் அடிக்கிறது இல்லியா… கொஞ்சநாள் அப்படித்தான் இருக்கும். அப்றம் சரியா விடும். ராஜிட்டே பொண்களை இண்ட்ரடியூஸ் பண்ணி வைக்கச் சொல்லு. உன் அளவு இல்லைன்னாலும் படிச்ச பொண்கள் பொண்கள் நிறையப் பேர் இருக்கா”. 

“அத்திம்பேர்!” 

“என்ன பொண்ணே?” 

“அத்தைக்கு சாதம் போட்டப்புறம் உங்களோட ஓ அஞ்சு நிமிஷம் பேசலாமா?” 

“சொல்லண்டதை இப்பவே சொல்லேன்.” 

”அங்க என்ன பேச்சு? மாமனார் மாட்டுப் பொண்ணுக்கு நடுவே” 

தங்கம்மாளின் குரலுக்கு ஒலிபெருக்கி தேவைப்படவில்லை. 

“ஒன் காதில விழலையா?” 

“குசு குசுன்று பேரினா எப்படி விழும்?”

“நாங்க ஆயிரம் பேசிப்போம், நீ பேசாதைக்கு இரு தங்கம்”. 

“உங்களுக்கு என் வாயை அடைக்கத்தான் தெரியும்”

“இப்ப அந்த வித்தையை நம்ப மாட்டுப் பொண்ணுக்கும் டீச் பண்ணட்டுமா?” 

“நீங்க ஒண்ணும் டீச் பண்ண வேண்டாம்”. 

“சரி”

“அவளுக்கு இப்பவே தெரியும்”. 

ஈசுவரன் வாய்விட்டுச் சிரிக்க, முதன் முறையாக அந்த வீட்டில் பாரதியும் சிரித்தாள். 


முன்னொரு காலத்தில் வீட்டின் ரேழியின் இடப் புறத்தில் பத்து அடிச் சதுரத்தில் நெல்லைக் கொட்டி வைக்க என்று ஓர் அறை இருந்தது. அறுவடை முடிந்ததும் நெல் வரும். பல நாள்கள் வெயிலின் ஓலைப் பாய்களின் மீது பரப்பி வைத்துத தெருவில் காயப்போடுவார்கள். நிலச் சீர்திருத்தம் என்ற பெயரில் பல நிலச்சுவான்தார்கள் நெல்லை இழந்து நிற்க, இந்த நெல் அறைக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. பல வீடுகளில் நெல் அறையை தனி அறையாக மாற்றி மேஜை, நாற்காலி போட்டுக் கொண்டார்கள். 

இப்போது ஈசுவரனுடைய குடும்பத்துக்கு பெரிய பண்ணையிலிருந்து முன்போல் அறுவடை நெல் கிடைத்து வந்தாலும் அதை வீட்டுக்குக் கொண்டு வரவில்லை, அரசு கொள்முதல் செய்துவிட்டு எஞ்சியதை விற்று விட்டு நெல்லூர் பச்சை அரிசியை கடைகளில் வாங்கிக் கொண்டார்கள். 

இததப் பழைய நெல் அறையில் ஈசுவரன் பாரதியின் வருகைக்காகக் காத்திருந்தார். அவரிடம் அவள் என்ன பேச வேண்டும்? ஏதாவது பிரச்னையா? யாரிடம்? நாராயணனிடமா, அல்லது தங்கம்மாவிடமா?

“உள்ளே வரலாமா, அத்திம்பேர்?”

“வா பொண்ணே” 

பாரதி அறையினுள் பிரவேசித்தாள். 

”ஒக்காரு”. 

உட்கார்ந்தாள்.  

“என்ன வெஷயம்? ஐ மீன், ப்ரோப்ளம்?” 

“உங்க பிள்ளை ஒரு விஷயம் பத்திப் பேச வேண்டாம்னுதான் சொன்னார் – அவர் வார்த்தையையும் மீறித்தான் இப்ப வந்திருக்கேன். ஏன்னா, என்னாலே எதையும் என் மனசுக்குள்ளே பூட்டி வைச்சுக்க முடியாது. மனசில் பட்டதைப் படார்னு சொல்றது என் குணமாப் போயிட்டது”. 

“இதுவரையில் உன்னைப் பத்தி நான் அப்படி நெனைக்கலையே பொண்ணே!” 

“காரணம், நாம ரெண்டு பேரும் இன்னும் தனியா பேசிக்காத்தாலே இருக்கலாம். அல்லது நான் மத்தவங்களோட பேசறப்ப அங்கே நீங்க இல்லாம் இருந்ததாயே இருக்கலாம்.” 

“அது  எப்படியோ போகட்டும். நீ என்ன பேச ஆசைப்படறே?” 

“எல்லா மாமனார்களையும் போல நீங்களும் ஒரு மாமனாராக இருந்திருந்தா நிச்சயமா இங்கே பேச வந்திருக்க மாட்டேன். நீங்க என் அப்பாவோட தங்கை புருஷன். என் அத்தையின் ஹஸ்பெண்ட். அத்திம்பேர்.” 

“அதான் தைரியமாப் பேச வந்திருக்கே, அல்லவா?”

“நான் என்னிக்குமே கோழை இல்லை அத்திம்பேர்”.

“சரி சொல்லு.” 

“என்னைப் பெண் பார்த்து சம்பந்தம் பேச நங்கவரம் வந்தப்ப, கோழிக்கோடு, கொச்சி எல்லாம் மூணு மணி நேர ரயில் பிரயாணத்தில போயிடலாம்னு சொன்னீங்க” 

“ஆமாம் சொன்னேன்”

“நாள் தொடர்ந்து படிக்க ஆசைப்பட்டதைத் தெரிஞ்சுக்கிட்டப்புறம்தான் இதைச் சொன்னீங்க.”

“இல்லைன்னு சொல்லலே.” 

“என் மேற்படிப்புக்கு நீங்க அங்கீகாரம் கொடுத்து விட்டதா அப்ப எனக்குப் பட்டது”. 

“அப்படியா?” 

“என்னோட அம்மா என்ன சொன்னா தெரியுமா? ‘நீ சரின்லு சொல்லு, பாரதி, நிச்சயமா உன் ஆசையும் நிறைவேறும். ஒரு கோடீசுவரன் வீட்டுச் சௌகரியங்களும் கிடைக்கும். நாராயணனும் ராஜா மாதிரி இருக்கான்’ இப்படி என் அம்மா சொன்னா” 

“அப்படியா?” 

“ஆமாம். சத்தியமா இப்படித்தான் சொன்னா, அத்திம்பேர் என மேற்படிப்புக்கு நீங்க ஆட்சேபீக்க மாட்டீங்கன்னு உங்க பேச்சைக் கேட்டு அம்மாவும் நம்பியிருக்கா” 

“அதனாலதான நீ…” 

“இல்லே அத்திம்பேர்… இதனான மட்டும் இல்லே… என் அப்பாவோட நிலைமை என் நெஞ்சைப் பொளந்தது. என் அண்ணாவோட அமெரிக்கப் படிப்புக்காக நீங்க ஒரு காசு வட்டி வாங்காம லட்சத்துக்கு மேல கடன் கொடுத்திருக்கிங்க. என் அண்ணா அதை டாலர் டாலரா அனுப்பி ஈடுகட்டுவான்னு அப்பா நம்பினார். நம்பிக்கையில மண் விழுந்தப்ப அவராலே என் லட்சியத்தைத் தீர்த்து வைக்க முடியாமப் போச்சு. அவர் மனசைப் புண்படுத்தக் கூடாது, நீங்களும் என் மேற்படிப்புக்கு ஆதரவு காட்டுவீங்கன்னுதான் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்” 

“உன் மனசு அறிஞ்சுதான் நாணாவும் அன்னிக்கு நீ வேண்டாம்னு சொன்னான். உன் அத்தைக்கு இந்தக் கல்யாணத்தில் இஷ்டமில்லை, நான் அவன் மண்டையில் அடிச்சு அடிச்சு சம்மதிக்க வைச்சேன். ஏன் தெரியுமோ? பொண்ணே! ஒன் அப்பா மௌலி ரொம்ப நல்லவன். 

அவன்கிட்ட பணம் இல்லேன்று நேக்குத் தெரியும். வேற இடத்திலே உன்னைக் கொடுக்கப் போனா நங்கவரம் வீடுகூட இல்லாமப் போகும். ஆனா இது மாத்தறம் காரணம் அல்லா. என் தங்கம் நங்கவரம்! அவள் படி ஏறி வந்தப்புறம் தான் மின்னைக் காட்டிலும் மகாலட்சுமி அதிகமா பிரகாசிச்சாள். என் புள்ளையோட வாழ்க்கையிலும் அப்படி ஒரு பிரகாசம், இன்னொரு நங்கவரத்துப் பெண் மூலமா வரும்னு எனக்குத் தோணித்து. இது முட்டாள்தனமான நம்பிக்கையா உனக்குத் தோணலாம். ஆனா என் நம்பிக்கை அசைக்க முடியாததா இருந்தது. சரி நான் இப்ப என்ன செய்யனும்?” 
 
“நான் பிஎச்டி படிக்க நீங்க ஆதரவு தரணும்”

“படிச்சப்புறம் என்ன சேவாய்?”

“உங்க மருமகளாவே திரும்பி வர்றேன்”. 

ஈசுவரன் சிரித்தார். 

“என்ன அத்திப்பேர் சிரிக்கறிங்க?” 

“டாக்டர் பாரதி நாராயணன்று நம் ஆத்து வாசல்லே வேணம்னா போர்டு போட்டுக்கலாம். மத்தபடி படிச்சதோட பிரயோசனம் என்ன சொல்லு, பொண்ணே?” 

பதில் சொல்லத் தெரியாமல் பாரதி விழித்தாள். 

“நீ இங்கிலீஷ்ல டாக்டரேட் வாங்கியாச்சுன்னா ஒன்னால சும்மா இருக்கக் கழியாது. இந்தாத்தைக் கவனிச்சுக்கறதில இன்ட்ரஸ்ட் இருக்காது. ஒருகோளேஜ்ல ப்ரொபஸராய் போகணும்னு தோணும். அந்தக் கோளேஜ் இந்தப் பாலக்காட்லேயும் இருக்கலாம்… பெங்ளூரிலும் இருக்கலாம்… கல்கத்தாவிலும் இருக்கலாம்” 

மீண்டும் பாரதி விழித்தாள். 

“நீ ஓர் எம்.பி.பி.எஸ். டாக்டர்னா நாது பேருக்குப் பிரயோசனம் உண்டு. நீ ஆசைப்படற டாக்டர் பட்டத்தாலே ஆருக்குப் பிரயோசனம் பொண்ணே? நோக்கு மாத்தறம் தான். இந்தக் குடும்பத்துக்கு இல்லை”. 

“என்னோட லட்சியம்…”

“லட்சியம் இருக்கறதில் தோஷமில்லை. ஆனா அது மூலமா ஆருக்காவது நல்லது வரணும், அப்படி வராதுன்னு தெரியறப்ப, ஒரே ஒரு வழிதான் இருக்கு”.

“அது… அது” 

“பழைய லட்சியமா அதை மதிச்சு மறந்துடணும்”.

“இதுதாள் உங்க முடிவா அத்திம்பேர்?” 

”நீ இந்த ஆத்துக்குள்ளே, இந்தக் குடும்பத்துப் பொண்ணா இருக்கணும். நீ வெளியே இருக்கிறதுன்னு தொடங்கினா அதுக்கு முடிவே இருக்காது. இந்தக் குடும்பத்துப் பொண்ணாவும் ஆகமாட்டாய்…”

“தாங்க்ஸ் அத்திம்பேர், உங்க முடிவு என்னன்னு ஸ்பஷ்டமாத் தெரிஞ்சுட்டுது” 

“அவசரப்படாதே பெண்ணே! என் முடிவை மாத்தி, உன் ஆசைக்கு ஏத்தாப்ல முடிவு எடுக்கற அதிகாரம் இன்னொருத்தருக்கும் உண்டு”. 

“உங்க பிள்ளை.” 

“கரெக்ட்”

“அவர் ஏற்கனவே தன் தீர்மானமான முடிவைச் சொல்லிட்டார்”

“அப்ப அப்பிலே இல்லை!”

“இருக்கு அத்திம்பேர்!”

“என்ன?” 

“அப்பீல்”

“எந்தக் கோர்ட்ல?”

“என்னோட லட்சியம்ங்கற கோர்ட்ல! அதுதான் சுப்ரீம் கோர்ட்” 

“இப்ப என்னால ஒண்ணே ஒண்ணிதான் நிச்சயமாச் சொல்ல முடியும், பொண்ணே!” 

“என்ன அது அத்திம்பேர்?” 

“நீ சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீல் சேயாம இருக்க குருவாயூரப்பன் உனக்கு நல்ல புத்தி கொடுக்கணும்”

அன்று இரவு பாரதி பாயில் படுத்தாள். உடல் உறுத்துவதையும் மறந்து சிந்தித்தாள். 

லட்சியத்தைக் குழிதோண்டிப் புதைப்பதா, அல்லது புத்துயிர் கொடுப்பதா? 

புத்துயிர் கொடுத்தால் நேரக்கூடிய விளைவுகள்? பயங்கரமாகப் படவில்லை யென்றாலும் நெஞ்சின் ஓரத்தில் இடித்தது. 

ஆனால் எப்படித் தன் லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும்?

திடீரென்று சகஸ்ரம் வீட்டில் அன்று காலை சந்தித்த தேவகி கண்முன் நின்றாள். 

– தொடரும்…

– வானமெல்லாம் ஆசைக் காற்றாடி (நாவல்), முதற் பதிப்பு: மார்ச் 1995, கங்கை புத்தகநிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *