வானத்தை நேசிக்கும் நட்சத்திரங்கள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 8, 2015
பார்வையிட்டோர்: 13,670 
 
 

“”நல்லா இருக்கீங்களா மாமா?” என்று கரகரப்புடன் ஒலித்த குரல் கேட்டுத் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தேன். என் எதிரில் மூன்று இளவட்ட திருநங்கைகள் நின்றிருந்தது தெரிந்தது. சிட்டுக்குருவிகளைப் போன்ற துள்ளலான உடல்கட்டுகள். ஆனால் அளவுக்கு மீறிய அழுத்தமான ஒப்பனைகள்.

வானத்தை நேசிக்கும் நட்சத்திரங்கள்

எனக்கும் குழப்பமாக இருந்தது. யார் என்னை அழைத்திருப்பார்கள்? கண்டுகொள்ள முடியாமல் பேந்த பேந்த விழித்தேன்.

மூவரில் முன்னுக்கு நின்றிருந்த “பெண்தான்’ என்னைப் பார்த்து தீவிரமாக முறுவலித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. அவளே வாய் திறந்து என்னிடம் வார்த்தையாடவும் துவங்கினாள்.

“”என்னையத் தெரியலையா மாமா?”

“”தெரியலையே, யாரு நீ…?”

“”நாந்தான் மாமா விக்னேஸ்வரன். ஹார்பர் கோட்டர்ஸýக்கு ஒங்க வீட்டுக்கு அடிக்கடி வந்திருக்கேனே”

“”எங்க வீட்டுக்கா?”

“”ஒங்க பக்கத்து வீட்டுலக் குடியிருக்காரே சுந்தரம் மாமா… அவுங்க வீட்டுக்கு வரும்போது கட்டாயம் ஒங்க வீட்டுக்கும் வந்திருக்கேன். நம்ம சங்கர் தம்பி நல்லா இருக்கானா? அடிக்கடி அவன்கூட வந்து வெளையாடிட்டுப் போவேனே. இன்னுமா மாமா என்னைய ஞாபகத்துக்கு வரலங்கிறீங்க?”

இப்போது ஞாபகத்துக்கு வந்தது எனக்கு. அது இரண்டு வருடங்களுக்கு முந்தைய நிகழ்வு. இப்போதும் சுந்தரம் தூத்துக்குடி துறைமுகக் குடியிருப்புப் பகுதியில் என் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில்தான் குடும்பசமேதராய் குடியிருந்து கொண்டிருக்கிறார். அலுவலகத்தில் என்னைப் போலவே உயர்நிலை எழுத்தர் உத்தியோகம் அவருக்கு. எங்கள் இரு குடும்பங்களுக்கும் பரிச்சயம் அதிகமாக இருந்தது. இப்போதும் இருந்துகொண்டுதான் வருகிறது. அவரின் வீட்டுக்கு வருகிற விருந்தாளிகள் என் வீட்டுக்கு வந்து பேசிப் புழங்கிக்கொள்வதும், என் வீட்டுக்கு வந்த விருந்தாளிகள் அவரின் வீட்டுக்குச் சென்று பேசிப் புழங்கிக்கொள்வதும் எங்களின் பரிச்சயத்தை மேலும் இறுக வைத்துக்கொண்டிருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்னால் வரை நகரத்திலிருந்து குடும்ப உறவினர்களுடன் சுந்தரத்தின் அக்கா கல்பனா வந்து கொண்டிருந்தாள். அவளின் மூன்று பையன்களில் இளையவனான விக்னேஸ்வரன் தன் மாமா வீட்டுக்கு வந்ததும் வராததுமாய் உடனே என் வீட்டுக்குத்தான் ஓடி வருவான். வாளிப்பான தேகம் கொண்டிருந்த விடலைப் பையன். பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருப்பதாக என் விசாரிப்புக்குப் பதில் சொல்லியிருக்கிறான். என் மகன் சங்கர் என்றால் அவனுக்குக் கொள்ளைப் பிரியம். இரண்டு வயது பொடிப்பயல் அவன். எதையும் தீர்மானமாகக் கணித்துவிட முடியாத, சொல்லிவிட முடியாத தளிர் பருவம். ரொம்ப நேரம் சங்கருடன் சேர்ந்து விளையாடிவிட்டுத்தான் மாமா வீட்டுக்குப் போவான் விக்னேஸ்வரன். இப்போது இரண்டு வருடங்களாகத்தான் தன் தம்பியின் வீட்டுக்கு கல்பனாவின் வருகை நின்று போயிருந்தது. அரிச்சல் தாளாமல் ஒருநாள் என் மனைவி புனிதாவிடம் சந்தேகம் கேட்டேன். என் மனைவி சொல்லியிருந்த விவரம் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது.

“அந்தக் கூத்த ஏன் கேக்கறீங்க? கல்பனா அக்கா மகன் விக்னேஸ்வரன்னு ஒரு பையன் வருவான்ல? நம்ம வீட்டுக்கும் வந்து நம்ம பயலோட வெளையாடிக்கிட்டிருப்பானே. அவனோட பேச்சும் போக்கும் சரியில்லையாங்க’

“அதுக்கு…?’

“அவன வீட்டவிட்டு வெரட்டிப்புட்டாங்களாம்’

“வீட்ட விட்டு வெரட்டுற அளவுக்கு அவ்வளவு பெரிய தப்பு என்ன பண்ணான்?’

“அவன் பொம்பள மாதிரித்தான் பேசுறானாம். பொம்பளைங்க உடுத்துற துணிமணியத்தான் யாருக்கும் தெரியாம அவன் எடுத்து உடுத்துறானாம். எல்லாருக்கும் கேவலமாயிருக்குன்னு சொல்லி அவன அடிச்சி வெரட்டிப்புட்டாங்களாம்’.

“திருநங்கையா மாறிக்கிட்டிருக்கானா?’

“அது என்ன நங்கையோ… அப்படித்தான் நான் கேள்விப்பட்டேன். அத அவமானமா நெனச்சித்தான் மொத்தக் குடும்பமே எங்கும் போகாம வீட்டிலேயே அடஞ்சி கெடக்குதாம்’.

இப்போது அவனைப் பரிதாபத்துடன் பார்த்தேன் நான். அவன் ஆணாய் இருந்ததைவிட இப்போதுதான் அழகாக இருப்பதாகத் தோன்றியது எனக்கு. கிளி மூக்கைப்போல நீண்டு, சன்னமாய் வளைந்த நாசி. செவ்விதழ் உதடுகள். அவற்றில் அழுத்தமாய் சாயம் பூசிக்கொண்டிருந்ததுகூட அழகாகத்தான் தோன்றியது. மல்கோவா மாம்பழத்தைப்போல உருண்டை முகம். கனிவான பார்வை. புருவங்களிலும் அடர்த்தியாய் மை தீட்டியிருந்தான். குதிரை வாலைப்போல கூந்தலின் பின்பகுதியைக் கொத்தாகக் கட்டித் தொங்கவிட்டிருந்தான். அவனுடன் நின்றிருந்த “பெண்கள்’ இருவரும் ஏகதேசம் அவனைப் போலத்தான் பகட்டான ஒப்பனையில் நின்றிருந்தனர். அவர்களும் அவனைப் போலத்தான் ஆணாயிருந்து…

“”எத்தன நாளாச்சி விக்னேஸ், உன்னையப் பாத்து? இப்ப எங்க இருக்கிற?”

“”இங்க… விழுப்புரத்துலதான்… ஊருக்கு வெளிய குடிசை போட்டு இவுங்களோடத்தான் குடியிருக்கேன்”.

பக்கத்தில் நின்றிருந்தவர்களைப் பார்த்து பெருமை தவழ சிரித்துக்கொண்டான் விக்னேஸ்வரன். அவர்களும் அவனின் சொற்களை ஏற்றுக்கொண்டு இணக்கமாகச் சிரித்துக் கொண்டனர். வெள்ளந்தியான சிரிப்பு.

“”சாப்பாட்டுக்கு என்ன பண்ற விக்னேஸ்? என்ன வேல பாக்குற?”

“”எம் பேரு இப்போ நிர்மலாதேவி மாமா. இவ பேரு சாலினி… இவ பேரு சௌந்தர்யா”

எல்லாமே அவர்களாக வைத்துக்கொண்ட பெயர்கள் என்பது எனக்குப் புரிந்தது. அவர்களை அருவருத்து ஒதுக்கும் சமூகத்தின் முகத்தில் ஓங்கி அறைவதுபோன்று அக்கறையுடன் அமைத்துக்கொண்ட பெயர்கள். அழகான பெயர்கள்.

“”அப்படியா? நல்லா இருக்கு. சரி. சாப்பாட்டுக்கு என்ன பண்ற? எங்கேயாவது வேல பாக்கிறீயா விக்னேஸ்?”

“”எங்களுக்கு யாரு மாமா வேல தர்றாங்க? வேல கேட்டுப் போனா கிண்டல்தான் பண்றாங்க. எங்க பிழைப்பைப் பற்றி ஏன் கேக்கறீங்க? அதெல்லாம் ஈனப் பிழைப்பு”. ரொம்பவும் சடைத்துக்கொண்டான் விக்னேஸ்வரன். முகம் பேதலித்துக் கிடந்தது.

திருநங்கைகளின் தொழில்கள் என்னவாக இருந்தன என்பதை நான் ஏற்கெனவே அரசல்புரசலாகக் கேட்டிருந்ததாலும், அவற்றைப் பற்றிச் சொல்லிக்கொள்ள விக்னேஸ்வரன் தயக்கம் காட்டுவதாலும், மேலும் கிளற விரும்பவில்லை.

“”ஒங்க வீட்லயிருந்து உன்னையப் பாக்க யாரும் வந்திருக்காங்களா விக்னேஸ்? நீயாவது போய்ப் பார்த்ததுண்டா?”

விக்னேஸ்வரனின் முகத்தில் ஏக்கத்தின் பேரலைகள் எம்பித் தாழ்வதாகத் தோன்றியது எனக்கு. தாழ்ந்த “அலைகள்’ இரைச்சலுடன் உதிர்ந்து சிதறின.

பெருமூச்சு விட்டுக்கொண்டான் விக்னேஸ்வரன். “”அது எப்படி மாமா வருவாங்க, என்னையப் பாக்கறதையே அவமானமா நெனைக்கிறவங்க? எனக்கு அவுங்களப் பாக்கறதுக்கு ஆசதான்… அடிக்க வந்திருவாங்களோன்னு பயமாயிருக்கு.”

அவர்கள் மூவரின் முகங்களிலும் அடர்த்தியான வேதனை நிழலைத் தரிசிக்க முடிந்தது எனக்கு. எங்களுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்டு நிறுத்தியிருந்த மேடையில் ஓரிரண்டு வெள்ளை வேட்டி மனிதர்கள் கரங்களில் தடித்த புத்தகங்களுடன் ஏறி வந்து நாற்காலிகளில் அமர்ந்து கொள்வதும் தெரிந்தது. இன்னும் ஓரிரு நிமிடங்களில் விழா துவங்கிவிடலாம் என்று யூகித்துக் கொண்டேன். அவர்களுக்கும் அந்த எண்ணம்தான் மேலோங்கி நின்றிருக்க வேண்டும்.

“”சரி மாமா. மத்தியானம் சாப்பாட்டு வேளையில உங்களப் பாக்கறென். விழா ஆரம்பிக்கப் போவுது”.

“”சரி விக்னேஸ்”.

மேடை களை கட்டியிருந்தது. வெள்ளை வேட்டி, பேண்ட் சட்டை போட்ட மனிதர்கள் வரிசையாக மேடையில் உட்கார்ந்திருந்தனர். அவர்களுக்கு மத்தியில் கிடந்த இருக்கையில் சாந்தகுமார் உட்கார்ந்திருந்தார். வழுக்கைத் தலையும் வாட்டசாட்டமாக உடம்பும்கொண்டு ஓர் ஒட்டகச்சிவிங்கியைப்போல உயரமாகத் தெரிந்தார். அவர்தான் மாநாட்டைக் கூட்டியிருந்தார். தான் நடத்திக்கொண்டு வந்த “சத்தம்’ என்கிற பத்திரிகையின் பொன்விழாவைக் கொண்டாடும் உத்வேகத்தில் திருநங்கைகளின் எழுச்சி விழாவாக மாற்றியிருந்தார். சமூக சிந்தனையுள்ள மனிதர் அவர். அந்த இதழில் தொடர்ச்சியாக நான் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதிக் கொண்டிருந்ததில் எனக்கும் விழாவில் பங்கெடுக்குமாறு அழைப்பிதழ் கிடைத்திருந்தது. விக்னேஸ்வரன் என்முன் வந்து அழைத்துக் கொண்டு நிற்பதற்கு சற்று முன்புவரை “சத்தத்’தில்தான் ஆழ்ந்து மௌனமாகிப் போயிருந்தேன். விக்னேஸ்வரனுக்கும் அழைப்பிதழ் கிடைத்திருக்க வேண்டும். பந்தலின் வடக்குப் பக்கத்தில் பெருந்திரளாக திருநங்கைகளின் இருப்புத் தெரிந்தது. வரிசைக்கிரமமாகப் போட்டிருந்த நாற்காலிகளை அரக்கப் பரக்க ஆக்கிரமித்துக்கொண்டு வாயடிக்கவும், வம்புகள் பண்ணி ஒருவருக்கொருவர் போக்குக் காட்டிக் கொள்ளவுமாக உற்சாகத்தில் அமர்ந்திருந்தனர்.

தெற்குப் பகுதியில் பரவலாக விரித்துப் போட்டிருந்த இருக்கைகளில் ஆண்கள் அமர்ந்திருந்தார்கள். சிலர், இதழில் பங்களிப்புச் செய்கிறவர்களும், சிலர் சாந்தகுமாருக்குப் பரிச்சயமான அறிவு ஜீவிகளாகவும் இருக்கலாம் என்று எனக்கு மேலோட்டமாக நினைக்கத் தோன்றியது. ஆயிரம் பேர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய அளவுக்கு விஸ்தாரமாக இருந்தது பந்தல். விசிறும் வெட்டவெளிக் காற்றில் அதன் ஓலைக் கீற்றுக்கள், சரிகை இழைகள் உரசிக் கொண்டதுபோன்ற ஓசையை எழுப்பிக் கொண்டிருந்தன. ஊரைவிட்டு ஒதுங்கிப் போயிருந்த ஒரு தோட்டத்தின் உள்வெளியில் மாநாடு கூட்டப்பட்டிருந்ததால், சனங்களின் சந்தடியற்று ரொம்பவும் அமைதியாகவும் சுதந்திரமாகவும் தோற்றம் தந்தது. காலை நேர வெயிலின் வெக்கையைத் தணிக்கும் பொருட்டு, வடக்குப் பக்கம் சிப்பாய்க் கூட்டங்களைப்போல திரளாக நின்றிருந்த வாழை மரங்களின் தோகைகள் பரத்திவிட்ட காற்று, பந்தலுக்குள் பரவசத்தை மிதக்க வைத்துக் கொண்டிருந்தது.

முதலில் சாந்தகுமார்தான் வரவேற்புரை நிகழ்த்தினார். திருநங்கைகளின் முன்னேற்றம் குறித்து விலாவாரியாகப் பேசினார். எடுத்திருந்த போராட்டங்கள், இனி எடுக்க வேண்டிய போராட்டங்கள் பற்றிய விளக்கங்கள் அவரின் முன்னுரையில் மூழ்கிக் கிடந்தன. அவருக்கு அடுத்துப் பேச வந்தவர்கள் திருநங்கைகளின் உலகளாவிய நிலைமைகளையும் அதை எல்லாருக்கும் புரிய வைக்க வேண்டிய தலையாய கடமையையும் குறித்து விளக்கமாகச் சொன்னார்கள்.

திருநங்கைகளுக்கும் தங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் அவகாசம் தந்திருந்தார் சாந்தகுமார். காலைப் பகுதி முழுதும் கருத்துரையிலே முடிந்துவிட, மதியம் உணவுக்குப் பிறகுதான் திருநங்கைகளின் கலாசார விழா நடந்தேறும் என்பதை நான் அறிந்திருந்தேன். ஒருசிலர் கூறிய கருத்துகளையே வேறு சிலரும் எடுத்துக் கூறிக்கொண்டிருந்ததில் எல்லோருக்கும் சலிப்புத் தட்டத் துவங்கியது தெரிந்தது. எனக்கும்தான். புதுக் கருத்துகளைக் கூற இவர்களுக்கு விஷயங்கள் கிடைக்கவில்லையா என்று நான் எரிச்சலோடு காத்துக்கொண்டிருந்தபோது என் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு விக்னேஸ்வரன் வீறுகொண்டு பாய்ந்து மேடைக்கு வந்தான். இதுவரை திருநங்கைகளின் கூட்டத்தில் தன்னை மறைத்துக்கொண்டு, இப்போது மேகக் கூட்டத்தைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்து வெளிச்சம் தரும் முழு நிலவாய் மேடையில் அவன் காட்சி தந்தான். மேடையில் தன் கருத்துகளைச் சொல்வதற்கு ஏற்கெனவே சாந்தகுமாரிடம் அனுமதி வாங்கியிருக்க வேண்டும். அவனைப் பார்த்ததும் சாந்தகுமார் தலையாட்டிச் சம்மதம் தெரிவித்துக் கொண்டது தெரிந்தது.

“”அய்யா… எல்லாருக்கும் வணக்கம். உங்களோட சேர்ந்து நாங்க போராடினதுனாலதான் எங்களுக்கு ஓட்டுப் போடுற உரிமையும் குடும்ப அட்டைகளும் கெடச்சது. அடுத்து எங்களுக்குக் கல்வி கற்க உரிமையும், அரசாங்க வேலையில இடஒதுக்கீடும் கிடைக்க இன்னும் போராட வேண்டியதிருக்கு என்பதை நான் அறிவேன். இவை எல்லாவற்றையும்விட எங்களுக்கு எது முக்கியமின்னா… எல்லாரும் எங்களையும் சக மனிதர்களாக ஏற்றுக்கொள்கிற மனநிலைக்கு வரணும்… நாங்களும் எல்லோரையும்போல சகஜமாகப் பழகித் திரியணும். மொதல்ல… இந்த விழாவுக்கு வந்திருக்கிற ஆம்பளைகள் பொம்பளைகள் எல்லாரும் ஒரு சபதம் எடுத்துக்குங்க. ஒங்க ஃபேமிலியில யாராச்சும் எங்கள மாதிரி திருநங்கையாய் மாறினா, அவுங்கள மற்ற குழந்தைகளை மாதிரி சமமா நடத்துவேன்னு சபதம் எடுத்துக்குங்க. அவுங்கள வீட்ட

விட்டு வெரட்டுறதுக்குச் சம்மதிக்க மாட்டோமின்னு உறுதிமொழி எடுத்துக்குங்க. எல்லோருடனும் நாங்க சகஜமா பழகணும்… அவுங்களும் எங்களச் சமமா நடத்தணும். அதுதாங்கய்யா முக்கியமின்னு நாங்க நெனைக்கிறோம். நன்றிங்க”.

திருநங்கைகளின் கூட்டத்திலிருந்து அடுக்கடுக்காகக் கைதட்டல்களும் ஆர்ப்பரிப்பாய் விசில் சத்தங்களும் கேட்கத் துவங்கின. மேடையில் அமர்ந்திருந்தவர்களின் முகங்கள் எல்லாம் இறுகிப்போய்க் கிடந்ததை நான் கண்டேன். சாந்தகுமாருக்குக்கூட அது சங்கடமாகத்தான் போயிருக்க வேண்டுமோ என்னவோ. உட்கார்ந்த இருக்கையில் நெளிந்து கொண்டிருந்தார்.

எல்லோருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு விக்னேஸ்வரன் கீழே இறங்கிவிட்டிருந்தான். அவனின் பெண்மை தரித்தக் கோலத்தில் எத்தனை அவமானங்கள் அடங்கிக் கிடக்கின்றன என்பதை அறிந்துகொண்டேன். அவன் கலங்கிப் போயிருந்தான்.

மதிய சாப்பாட்டு வேளையில் என்னிடம் வந்து பேச்சுக் கொடுக்க அவன் தயங்குவதாகத் தோன்றியது எனக்கு. தன் பேச்சின் மூலம் எல்லா ஆண்களையும் பெண்களையும் காயப்படுத்திவிட்டிருந்ததுபோல என்னையும் காயப்படுத்தி விட்டிருந்ததாய் அவன் நினைத்திருக்கலாம். அவன் பேச்சில் எனக்கொன்றும் வலி ஏற்படவில்லை என்பதை எப்படி அவனுக்குப் புரிய வைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். கூட்ட நெரிசலில் அவன் மறைந்து மறைந்து போய்க் கொண்டிருந்தது தெரிந்தது. எலுமிச்சைச் சோறும், தயிர்ச் சோறுமே மதிய உணவாகப் படைத்திருந்தார்கள். அவற்றைத் தின்பதற்கு அதிக நேரம் எடுக்க வேண்டியதில்லை என்பதால் சீக்கிரமாக விழுங்கிவிட்டு பந்தலுக்குள் வந்து அமர்ந்துகொண்டேன். அவன் அங்கு வந்ததும் பிடித்துக் கொள்ளலாம் என்பது என் திட்டம். அவன் விடாக்கண்டனாக இருந்தான். அவனோடு சேர்ந்த கூட்டாளிகள் எல்லோரும் வந்து உட்கார்ந்த பிறகுதான் அவனும் தன் பரிவாரங்களுடன் வந்து பந்தலுக்குள் இடம்பிடித்தான்.

கலாசார நிகழ்ச்சிகள் துவங்கிவிட்டிருந்தன. திருநங்கைகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்த நிகழ்ச்சிகள். எடுத்த எடுப்பில் அழகிப் போட்டி நடந்தது. விதம்விதமாய் ஒப்பனைகள் பண்ணிக்கொண்டு நெளிந்து குழைந்து நடந்துபோன திருநங்கைகளைக் கண்டபோது அவர்களுக்குள் புதைந்துகிடந்த ஏக்கத்தின் தாக்கம் தெரிந்தது. பிறகு, இசைக்கப்பட்ட சினிமாப் பாட்டுக்கு ஒரு சிலர் துள்ளிக் குதித்து ஆடிவிட்டுப் போனார்கள். அடுத்து ஒரு திருநங்கை வந்து நின்று ஒலிவாங்கியில் பாடிவிட்டுப் போனாள்.

இவற்றில் எதிலுமே விக்னேஸ்வரன் கலந்துகொள்ளாமல் தவிர்த்திருப்பது ஏன் என்று எனக்கு யோசிக்கத் தோன்றியது. பந்தலுக்குள் அவன் உட்கார்ந்திருந்த இடத்தில் தலையைத் தூக்கிப் பார்த்தேன். இருக்கை வெற்றிடமாகக் கிடந்தது தெரிந்ததும் வினாடியில் அதிர்ந்து போனேன்.

கலை நிகழ்ச்சிகள் முடிந்து, விழா நிறைவு பெற்றதும், சாந்தகுமாரிடம் சென்று விடைபெற்றுவிட்டு வெளியே கிளம்பிக் கொண்டிருந்தேன். மாலை மயங்கி, இரவு துவங்கியிருந்தது. பேருந்து பிடித்து தூத்துக்குடி செல்ல வேண்டும். பந்தலின் வாசல் முகப்பில் கையில் ஒரு பார்சலோடு விக்னேஸ்வரன் நின்று கொண்டிருந்தான் அவனின் கூட்டாளிகளுடன். என்னைக் கண்டதும் வெட்கப்பட்டுத் தலைகுனிந்து கொண்டான்.

“”என்ன விக்னேஸ், இங்க வந்து நிக்கற? பந்தல்ல ரொம்ப நேரமா ஆளக் காணல?”

“”அம்மாவுக்கு பூனம் சேலைன்னா ரொம்பப் பிடிக்கும் மாமா. அத வாங்கத்தான் கடைக்குப் போயிருந்தேன். இத அம்மாக்கிட்டக் குடுத்திருங்க.”

ரொம்பவும் வாஞ்சையுடன் நீட்டினான் அவன். தட்ட முடியாமல் வாங்கிக் கொண்டேன் நான்.

“”ஊருக்கு வர்றீயா? அம்மாவையும் அப்பாவையும் பாத்துட்டு வந்திர்றலாம்”

“”இல்ல மாமா. அவுங்க என்னைக்கு என்னை மனசார ஏத்துக்கிறாங்களோ அன்றைக்குத்தான் அங்க வருவேன் மாமா”.

“”அவுங்கள்லாம் மாறதுக்கு ரொம்ப காலம் ஆகும். அதுவரைக்கும் இப்படி இங்கேதான் இருக்கப்போறியா?”

“”வேற வழி? நல்லாப் படிச்சிருக்கிற உங்கள மாதிரி விசயம் தெரிஞ்சவங்களே எங்கள மனப்பூர்வமா ஏத்துக்காதபோது, அவுங்க பாவம், பத்தாம் வகுப்போ பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்குமோ படிச்சவங்க… அவுங்களுக்கு எப்படி ரொம்பச் சீக்கிரத்துல ஏத்துக்க மனசு வரும் மாமா?”

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. இவனென்ன இத்தனை கறாராய் தன் கருத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்துகிறான் என்று கலவரத்துடன் நினைத்துப் பார்த்தேன். எதைச் சாக்காக வைத்து என்னையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிட்டிருக்கிறான்? என் முகம் கருத்துப் போனது.

“”புரியல. எதை வச்சி, என்னையும் உன்னைய ஏத்துக்காத லிஸ்ட்ல சேத்துட்ட விக்னேஸ்?”

“”பின்ன, என்னய நீங்க சகஜமா ஏத்திருந்தா என் மாற்றத்தையும் நீங்க ஏத்திருக்கணும். எம் பேரு நிர்மலா தேவிங்கறதையும் நீங்க ஏத்திருக்கணும். அதை ஏத்துக்க விருப்பமில்லாமத்தான் இன்னும் என்னைய “விக்னேஸ் விக்னேஸ்’ஸூன்னே கூப்பிடுறீங்க?”

“”சாரி நிர்மலாதேவி..” என்று அசடு வழியச் சொல்லிவிட்டு “அவளிடமிருந்து’ விடைபெற்றேன்.

– செப்டம்பர் 2014

தினமணி-நெய்வேலி புத்தகக் கண்காட்சி-2014 சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ.1,250/- பெறும் கதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *