வாடகை வீடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 152 
 
 

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முதல் தேதி வந்த சுவடு தெரியாமல் ஓடிப் போய் நான்கு நாட்களாகிவிட்டன. சொக்கலிங்கம் வரவில்லை. அவர் ஏன் வரவில்லை?

அன்னம்மாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. இன்று வருவார், நாளை வந்து விடுவார் என்று எதிர்பார்த்துக் காத் துக்கிடந்தாள் அன்னம்மாள். ஆனால் நாட்கள் அவளைப் பார்த்து நையாண்டி செய்தனவேயொழிய சொக்கலிங்கம் வந்தபாடில்லை.

ஒல்வொரு மாதத்தின் முதல் தேதி பகலுணவின் போது சொக்கலிங்கம் சொல்லி வைத்தது போல் தவறாமல் வருவார். ஓர் உறைய அன்னம்மாளிடம் கொடுப்பார். அதில் பத்து நூறு வெள்ளி நோட்டுகள் புத்தம் புது மட மடப்போடு இருக்கும். சாப்பிடுவார். ஆறு வயதையடைந் திருந்த தம் மகள் அனிதாவோடு சிறிது நேரம் கொஞ்சி விளையாடுவார். ஈராண்டுகள் முழுநேர தேசிய சேவை யாற்றிக் கொண்டிருக்கும் சுரேந்திரனைப் பற்றி விசாரிப் பார். சற்று நேரம் குடும்ப நடப்புகள் பற்றி அன்னம் மாளிடம் கேட்டறிவார். புறப்பட்டுவிடுவார்.

அடுத்த முப்பது நாட்களுக்குப் பிறகுதான் மீண்டும் அவர் தலைகாட்டுவார். அப்போதுதான் அவர் முகத்தைக் காணும் வாய்ப்பு அவ்வீட்டிலுள்ள மூவருக்கும் கிட்டும்.

விடிந்ததும் விடியாததுமாய் அன்னம்மாள் சொக்க லிங்கத்தைச் சந்திக்கப் புறப்பட்டுவிட்டாள். அவள் பதற்றம் புறப்பட்ட அவசரத்திலேயே தெரிந்தது.

“அம்மா!…” சுரேந்திரன் அழைத்தான். இராணுவப் பயிற்சியின் போது காலில் சிறு காயம் ஏற்பட்டிருந்ததால்,

அவன் இரண்டு நாட்கள் மருத்துவ விடுமுறையில் இருந் தான்.

“ஏண்டா? …” அன்னம்மா கேட்டாள்,

“நீங்க எங்கே புறப்பட்டுட்டீங்கன்னு எனக்குத் தெரி யும். நான் ஒன்னும் அனிதா இல்லை. இது உங்களுக்கே நல்லாயிருக்கா?”…

“ஏன் அப்படிக் கேட்குறே?…”

“மாதா மாதம் செலவுக்குப் பணமாவது தவறாமல் கொடுத்துக் கொண்டிருந்தாரு. இந்த மாதம் அதையும் நிறுத்திடச் சொல்லி “அவள்” உத்தரவு போட்டிட்டாப் போல இருக்கு. வலியப்போயி பணம் கேட்கப் போறீங் களா? …

“பணம் வாங்க இல்லேடா. முதல் தேதி தவறாம வீட்டுக்கு வர்றவங்க வரலையே? உடம்புக்கு ஆகலையோன்னு மனம் பதறுதுடா. அதனால்தான் கிளம்பினேன்…”

“உங்க அருமை அவருக்குப் புரியலையம்மா. புரிஞ்சிருந்தா..”

“டேய் , அவரு உன் அப்பா..”

“அதுக்காகப் பாவம் செய்வதைப் பார்த்துக்கிட்டிருக்க முடியுமா?…”

“பாவமா புண்ணியமான்னு உனக்குப் புரியாதுடா. பதினெட்டு வயது நிரம்பி இப்பத்தானே தேசிய சேவைக்கே போயிருக்கே. உங்கப்ப என்னைவிட்டு ஏன் விலகியிருக் காருன்னு உனக்குத் தெரியாது. அதை உன்னிடம் நான் விளக்கிச் சொல்லுறதும் மரியாதை இல்லே. அதையெல் லாம்விட, நீ எங்க ரெண்டு பேருக்குமே பொதுவானவன். எனக்காக ஏத்துகிட்டு நீ உந்கப்பா மனம் நோகும்படி நடந்து கொள்வது நல்லதில்லேப்பா.”

“அம்மா, நான் சொல்ல வந்ததை நீங்க தவறாப் புரிஞ்சிகிட்டீங்க … நான் வந்து …” அவன் முடிக்கவில்லை அன்னம்மா குறுக்கிட்டாள்.

“உங்கப்பா உங்களுக்கு என்ன குறை வச்சிருக்கார்? சொந்த வீடு. மாதச்செலவுக்கு கைநிறைய பணம், வேறு என்னப்பா வேணும்?…”

“ஆனா நம்ப பக்கத்திலே இல்லையே? உங்களுக்கு அவசியமோ இல்லையோ, எனக்கும் அனிதாவுக்கும் அப்பா அருகில் இருக்கணும் போல இருக்கே…”

“இவ்வளவு நாளா நம்ப கூடத்தானே இருந்தார். இப்பதானே “இப்படி”. வந்திடுவார். வரத்தானே வேணும். உயர எழும்புற பந்து கீழே விழுந்துதானே ஆகணும்…” அன்னம்மாளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. அவள் கண்களும் பனித்தன.

சுரேந்திரனுக்கு ஒன்றும் பேசத் தோன்றவில்லை. பேசாமல் தன் அறைக்குள் புகுந்து கொண்டான். அவனும் உள்ளத்தால் அழுது கொண்டுதானிருந்தான். ஐந்து அறை களைக்கொண்ட அந்த இருபது மாடி அடுக்குமாடித் தொகுதி யின் மூன்று படுக்கை அறைகளில், மற்றொன்றில் அனிதா உறங்கிக் கொண்டிருந்தாள்.

மின் தூக்கியின்வழி கீழே இறங்கிய அன்னம்மாள் ஒரு “டாக்சி” பிடித்து, கப்பல் பழுது பார்க்கும் “ஜூரோப் கப்பல் பட்டறை” நோக்கிச் செல்லுமாறு காரோட்டியிடம் பணித்தாள். வாடகை வண்டி விரைந்தது. அவ்வண்டி குளிர் சாதன வசதி நிரம்பியதாகும் இருந்தாலும் அது அன்னம்மாளின் இதயத்தினுள் கனன்று கொண்டிருந்த வெம்மையைத் தணிக்கப் போதுமானதாயில்லை.

அனிதா அவர்களுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிறந்தாள். சுரேந்திரனுக்குப் பின் இனி குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை வறண்டுவிட்ட நிலையில், நாற்பது வயதில் அவளுக்கு மீண்டும் உண்டான போது, அவளை வெட்கம் பிடுங்கித் தின்றது. தொடக்கத்தில் வெளியில் சொல் வதற்கே கூச்சப்பட்டாள்.

சொக்கலிங்கம் அப்படியில்லை.நாற்பத்தைந்து வயதைத் தாண்டிவிட்டாலும்,. எப்போதும் இருபது வயது வாலிபர் போல் விதவிதமாக உடையணிந்து மிடுக்காக இருந்து வந்தார். அதனால் அனிதா பிறந்தபோது அருவருப்போ அவ்மானமோ அவருக்குத் துளியும் ஏற்படவில்லை. அவர் உற்சாகத்தின் உச்சிக்கே சென்று விட்டார்.

அனிதாவுக்கு இரண்டு வயதிருக்கும். ஒரு நாளிரவு…… தன் அருகில் ஒருக்களித்துப் படுத்திருந்த அன்னம் மாவைத் தன் பக்கமாகத் திருப்பினார் சொக்கலிங்கம். “என்ன தூங்கிட்டியா?…”

“ம்ம் …ஆமா …”

“என்னது இப்போதெல்லாம் சுருண்டு சுருண்டு படுத்துடுறியே? அனிதா பிறந்த பிறகு “எல்லாம்” முடிஞ் சிட்டதா முடிவு பண்ணிட்டியா?

“கொஞ்ச நாள்களாகவே அன்னம்மாள் தன்னைவிட்டு விலகி இருக்க முயற்சி மேற்கொள்வது அவருக்கும் தெரிந்து தான் இருந்தது. அதற்கான காரணத்தை இன்று அறிந்து கொண்டுவிட வேண்டும் என்று அவரும் ஏற்கெனவே திட்டம் போட்டிருந்தார்.

மெளனம்.

“என்ன நான் கேட்கிறேன் பேசாம இருக்கே?”

“அதெல்லாம் ஒன்னுமில்லே. பையனும் வளர்ந்திட் டான். இனிமே கவனமாக இருக்கிறது அவசியமில்லையா? அதோடு அப்படி “என்னதான்” இருக்கு புதுசா?…”

‘ஆர்வமில்லையா அல்லது ஆசையே இல்லையா?…” அவர் குறி பார்த்து வினாவை ஏவினார்.

‘உண்மையைச் சொன்னா கோபித்துக் கொள்ள மாட்டீங்களே?…..”

“சொல்லு….”

“இப்பவெல்லாம் எனக்கு “அந்த” எண்ணமே எழுற தில்லேங்க. அது ஏன் என்று எனக்குத் தெரியல. உங்க தொல்லை பொறுக்க முடியாமதான் நான் இணங்குகிறேனே தவிர, முழு மனசோட இல்லேங்க. அதெல்லாம் இல்லாம லேயேஉங்களோடும் என் பிள்ளைகளோடும் மீதிக் காலத் தைத்தள்ளிட முடியும்னா, நான் ரொம்ப மகிழ்ச்சி அடை வேங்க உங்களுக்கு என் நிலையை விளக்கிட்டேன். என்னை நீங்க் புரிஞ்சிகிட்டா போதும். “அதுதான்” வாழ்க்கையா என்ன?…” அவள் கண்களை நீர் திரையிட்டது. ‘அன்னம்மா, உன் நிலைமை எனக்குப் புரியுது. இனி என்னால உனக்குத் தொந்தரவுகள் ஏற்படாது. நீ கவலைப்படாதே!” சொக்கலிங்க்ம் ஆதரவோடு அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தார்.

கணவர் தன்னை மூற்றாகப் புரிந்து கொண்டுவிட்டார் என்ற நிறைவோடு சொக்கலிங்கத்தின் மார்பில் முகம் புதைத்து, இன்பக் களிப்போடு அன்று உறங்கினாள் அன்னம் மாள். அதுதான் அவரோடு அவள் மனம் ஒன்றி உறங்கிய கடைசி இரவு. அதன் பிறகு

சொக்கலிங்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கினார். பகலில் வீட்டிற்கு வருவார். இரவில் வர மாட்டார். சில நாட்கள் தொடர்ந்தாற் போல் வீட்டுக்கு வராமலிருப்பதும் உண்டு. கேட்டால் எரிந்து விழுவார் காரணம் சொல்ல மாட்டார். சொக்கலிங்கம் வீட்டிற்கு வராமலிருக்கும் நாட்களின் எண்ணிக்கை, கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வாரங்களாகி, இறுதியில் மாத மாக விரிவடைந்தது. ஒரு மாதத்திற்கு ஒரு முறைதான் அதுவும் முதல் தேதி மட்டும் வருவது என்ற வழக்கம் நிலைபட்டது.

ஜூரோங் பட்டறைக்கு அருகில் வசிக்கும் ஒருத்தியை, சொக்கலிங்கம் வைப்பாட்டியாக வைத்திருக்கிறாரென்பதும் அவள் ஒரு கைபெண் என்பதும், அவள் பெயர் குணவதி என்பதும், பல ஆண்களின் கைக்கு மாறி , இறுதியில் சொக்கலிங்கத்தைத் தன் வலையில் சிக்க வைத்துவிட்டாள் என்பதும் தொடக்க காலச் செய்திகளாக அன்னம்மாள் காதுக்கும் எட்டவே செய்தன.

சொக்கலிங்கம் ஜூரோங் பட்டறைக்குத் தொழிலாளி களை அனுப்பும் குத்தகைத் தொழில் நடத்தி வந்தார். அவருக்குத் தம் தொழிலில் கிடைக்கும் ஆதாயம் பெரும் தொகை. அதில் ஆயிரம் வெள்ளி அன்னம்மாளிடம் கொடுப்பது பேக, மீதப்பணம் யாவும் “அவள்” அடைந்து கொள்கிறாள் என்றும் பலர் பேசிக் கொண்டனர்.

வதந்திகளாகப் பிறந்த அத்தகவல்கள், சர்ச்சைகளாக வளர்ந்து, இறுதியில் உண்மைகளாக நிருபணமான போது அன்னம்மாள் கல்ல ய்ச் சமைந்து போனாள். சொக்கலிங்கத் திடம் பேசுவதை அவள் நிறுத்திக் கொண்டாள். அவராகவே ஏதாவது கேட்டால் ஆம், இல்லை என்ற பதில் மட்டுமே கூறுவாள்.

இந்த ஆம்-இல்லையிலேயே, நான்காண்டுகளை ஓட்டி விட்டதை உணர்ந்த போது அன்னம்மாவிற்கு மலைப்பாக இருந்தது.

கப்பல் பட்டறையை அடைந்து அலுவலதத்தில் விசாரித்தாள் . சொக்கலிங்கம் ஒரு வாரமாக வேலைக்கு வர வில்லை என்றும், மருத்துவ விடுமுறையில் இருப்பதாகவும் தெரியவந்தது. அந்த விபரங்களைக் கூறிய சீன அதிகாரிக்கு அன்னம்மளை நன்றாகத் தெரியும். சொக்கலிங்கம் நல்ல சூழ் நிலையில் இருந்த போது, வருடம் தவறாமல் தீபாவளி விருந் துண்ணச் சென்றவராயிற்றே: அதை எளிதில் மறக்க

முடியுமா? அவருக்கு அன்னம்மாளின் தற்போதைய நிலைமை யும் தெரியும். எனவே அவர் எதுவும் கேட்டுக் கொள்ள வில்லை.

அன்னம்மாவிற்கு மனம் பதறியது. அருகில்தான் “அவள்” வீடு இருந்தது. முகவரிகூட அன்னம்மாவுக்குத் தெரியும். போய் அவருக்கு என்னவாயிற்று என்று பார்த்து வரலாமா என்று கூட ஒரு கணம் எண்ணினாள். “அந்தத் தேவடியாள் வாசற்படியை மிதிப்பதா?…என்று அவள் தன்மானம் தடைபோட்டது. தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு வீட்டை அடைந்த போது, அவளுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது.

அவள் காலடியோசையைக் கேட்டு குழந்தை அனிதா ஓடோடி வந்தாள். தாயின் கரங்களைத் தன் பட்டுக் கை களால் பற்றிக் கொண்டு, “அம்மா, அப்பா வந்திருக்காங் கம்மா. ” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினாள்.

அன்னம்மாள் வீட்டிற்குள் நுழைந்து தன் கணவரைப் பார்த்த போது, அவள் கண்கள் வியப்பால் மலர்ந்தன. அவள் இதழ்கள் பேசத் துடித்தன. ஆனாள் வார்த்தைகள் தான் வரவில்லை. கண்களில் திரையிட்ட நீர்த்துளிகளை மறைத்துக்கொண்டு விடு விடென்று சமையலறைக்குள் புகுந்தாள். பகலுணவு தயாரிப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். சொக்கலிங்கமும் தன் இல்லாளின் நிலை கண்டு நெகிழ்ந்து போனார்.

சொக்கலிங்கம் போன மாதம் பார்த்ததற்கு இப்போது மிகவும் மெலிந்திருந்தார். கண்களின் கீழ் கருவளையங் களும் சிறு சுருக்கங்களும்கூடத் தோன்றியிருந்தன தாடியும் மீசையும் மழிக்காமல் விடப்பட்டிருந்தது, அவருக்கு மேலும் பரிதாபமான தோற்றத்தையளித்தது. சோர்வு உடல் பூராவும் படர்ந்திருந்தது.

சுரேந்திரன் தன் அறைக்குள் தான் இருந்தான். ஏற் கெனவே அவன் தன் தகப்பனாரிடம் பேசிக் கொண்டிருந் திருக்க வேண்டும். அவர் தலை மறைந்ததும் அவரைப் பற்றிக் குறை பேசுவான். ஆனால் அவரைக் கண்டுவிட் டாலோ அன்பைப் பொழிவான். இது சுரேந்திரனின் குண வியல்பு.

அனிதா தன் தகப்பனாரோடு வாயாடிக் கொண்டிருந் தாள். அது சமையலறையிலிருந்த அன்னம்மாளுக்கும் கேட்கவே செய்தது.

“அப்பா, சோறு சாப்பிட்டதும் நீ போயிடுவியா?…”

“இல்லேம்மா. நான் போக மாட்டேன். இனிமே அப்பா உங்ககூடத்தாம்மா இருக்கப் போறேன்…”

“பொய்யி…”

“இல்லே உண்மைதாம்மா….”

“சத்தியமா?”

“சத்தியமா…”

“இத்தனை நாளும் நீ எங்கே இருந்தே?….”

“இத்தனை நாளும் அப்பா ஒரு வாடகை வீட்டில இருந் தேம்மா. ஆனா இப்போ அந்த வீட்டில என்னைவிடக் கூடு தலாகப் பணம் கொடுக்கக் கூடிய ஒருத்தன் குடி வந்திட்டான். அதனால் அப்பா வாடகை வீட்டைக் காலி பண்ணிட்டுச் சொந்த வீட்டுக்கு வந்திட்டேன் என்ன இருந்தாலும் வாடகை வீடு, சொந்த வீடாக முடியாதும்மா.” அவர் குரல் கம்மியது, அவரால் தெரடா்நது பேச முடியவில்லை.

அனிதா, “ஹாய், இப்பதான் நீ நல்ல அப்பா” என்று அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டு ஆனந்தக் கூத் தாடத் தொடங்கினாள். தங்கையின் கூச்சல் அறைக்ருள் இ ருந் த சுரேந் திரன் உடலைச் சிலிர்க்கச் செய்தது.

சமையலறையில் வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்த அன்னம்மாளின் கண்களிலிருந்து, மண்டாய் நீர்த்தேக்கமே உடைப்பெடுத்தது போல், கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்து அவள் கன்னங்களில் உருண்டோடியது. அந்த அணைகடந்த நீர்ப்பெருக்குக்கு நிச்சயமாக வெங்காயம் காரணமில்லை.

-1981, புதிய அலைகள், முதற் பதிப்பு: மார்ச் 1984, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

எழுத்தாளரைப் பற்றிய விவரங்கள் தமிழ் நாட்டில் 1947ஆம் ஆண்டு பிறந்து சிங்கப்பூர் வந்த பொன். சுந்தரராசு, வள்ளுவர் தமிழ்ப் பள்ளியில் கல்வியைத் தொடங்கி, பின்னர் செயிண்ட் ஜார்ஜஸ் தொடக்கப் பள்ளியில் தமது படிப்பைத் தொடர்ந்தார். உமறுப் புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த பிறகு, தமிழாசிரியர் பணியில் சேர்ந்து முதன்மை ஆசிரியராக உயர்ந்து ஓய்வு பெற்றார். இதற்கிடையே தொலைக் கல்வி வழி சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலை,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *