கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 16, 2016
பார்வையிட்டோர்: 12,679 
 
 

நான் சொந்த வீட்டில் வருடக்கணக்கில் இருந்தேன். அல்லல்பட்டு,கடன்பட்டு ஒரு வழியாக கட்டிய வீடு, கடன் பட்டதில் மனைவியின் பங்கும் கணிசமானது.

வீட்டைப் பராமரிப்பதில் உள்ள சிரமங்கள் வீடு கட்டிய பின் நன்றாகவே தெரிந்தது. வீட்டின் வெளியே நீரின்றி அசுர வேகத்தில் வளரும் வேலிக் கருவேலம், எருக்கன் செடிகளை அகற்றுவதிலேயே சோர்ந்து போய் விடுவேன். அடுத்த ப்ராப்ளம் மழை பெய்தால் வீட்டினுள் எப்போது தண்ணீர் எட்டிப்

வாடகை வீடுபார்க்கும் என்பதுதான். ஒருநாள் மழையிலேயே தவளைகள் ” கெக்கபிக்கே’ என்று கச்சேரியை ஆரம்பித்துவிடும். ஒரு வாரம் கழித்து எங்கு பார்த்தாலும் ஆட்டுப் புழுக்கை சைசில் தவளைக் குஞ்கள் தத்தித் தத்தி உலா வரும்.

இரண்டு சீசனுக்குப் பிறகு சுவரில் நீர் வழிந்த இடமெல்லாம் பாசி பிடித்து அழுக்கு வரிகள் அழகைக் கெடுக்கும். கலர் கோட்டிங் கொடுத்தே ஆக வேண்டும். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வெளியேறும் சாக்கடை நீர் நிம்மதியைப் போக்கிவிடும். கொசுக்களின் உற்பத்திக் கேந்திரம் அதுதான். “சோப் பிட்’ போட்டு நீரை உறிஞ்ச விடுங்கள் என்று குடியிருப்போர் நலசங்கம் பரிந்துரை செய்யும். செப்டிக் டாங்க் நிரம்பி வழியும். அதை எடுக்க ஆயிரம் ரூபாய்க்கு மேல் வைக்க வேண்டும். சொந்த வீட்டுப் பிரச்னைகள் சொல்லி மாளாது.

“”சொந்த வீட்டைக் கட்டினதால் தான் இத்தனை பிரச்னை. அவ்வளவு செலவு. போசாம வாடகை வீட்டில் பணத்தைக் கொடுத்துவிட்டு அக்காடான்னு நிம்மதியாக இருக்கலாம்” ஒரு சமயத்தில் இப்படிச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.

வாடகை வீடு பிடிக்கும் யோகம் எனக்கு எதிர்பாராது வந்தது. திடீரென்று என்னை தமிழகத்தின் தெற்கே பணி மாற்றம் செய்துவிட்டார்கள்.

“” நான், மனைவி, சின்னக் குழந்தை மூன்று பேர்களுக்கும் வசதியான வீடு வேண்டும்” என்று அலுவலக நண்பர்களிடம் சொல்லி வைத்தேன்.

வீட்டை ஃபிக்ஸ் செய்துவிட்டு அவர்களை அழைத்து வரத் திட்டமிட்டேன்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. வாடகை வீடு விளம்பரங்களையெல்லாம் அலசினேன். என் ரேஞ்சுக்கு நெருங்கி வந்தவை ஒன்றிரண்டு வீடுகள்தான்.

டிபனை முடித்துக் கொண்டு வண்டியில் புறப்பட்டேன். முதலில் பார்க்கலாமென தீர்மானித்த வீடு அலுவலகத்திற்கு ஓரளவு அருகாமையில்தான்.

வாசல் இரும்புக் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே சென்றேன். கீழும் மேலுமாக மாடி வீடு. பார்ப்பதற்குப் பிடித்திருந்தது.

வராந்தாவில் பனியனோடு ஏறக்குறைய அறுபது வயதுக்காரர் உட்கார்ந்திருந்தார். கைகளோடு கூடிய பிளாஸ்டிக் நாற்காலியில் முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார். கட்டை குட்டையான ஆசாமி.

“” வணக்கம்”

உள்ளே அழைத்து அருகிலிருந்த மற்றொரு நாற்காலியில் அமரச் சொன்னார்.

“” வீடு வாடகைக்கு என்ற விளம்பரம் பார்த்தேன்… மாடியா, கீழா?”

“”எது உங்களுக்குச் சௌகரியம்”

“”மாடி”

“”மாடிதான் காலி”

“”பார்க்கலாமா”?

“”பேஷாப் பார்க்கலாம்… அதற்கு முன்னாடி சில தகவல்களைப் பேசித் தெரிந்து கொள்ளலாம் இல்லையா?”

“”ஓ, தாராளமாக… என் பெயர் கிருஷ்ணன். மத்திய அரசு அலுவலகத்தில் வேலை. மாற்றலாகி இந்த ஊருக்கு வந்து ஆறே ஆறு நாட்கள்தான் ஆகின்றன.”

“”சந்தோஷம்… நீங்கள் எத்தனை பேர்?”

“” நான், மனைவி, சின்னக்குழந்தை”

“”மனைவி வேலைக்குப் போகிறாரா… இல்லை ஹவுஸ் ஒய்ஃபா?”

“”தற்போது வீட்டில்தான் இருக்கிறாள். குழந்தையை ஸ்கூல்ல சேர்த்த பிறகு வேலைக்குப் போகிற பிளான் இருக்கு”.

“” நீங்க எதுல டிகிரி”

“” நான் பி.ஏ. எக்னாமிக்ஸ்… அவ பி.எஸ்.சி. மாத்ஸ்… அதோடு பி.எட். வேறு”

“”குழந்தையை ஸ்கூல்ல சேர்த்துட்டு வேலைக்குப் போனா வீட்டுக்கு வருகிற குழந்தையை யார் பார்த்துப்பா?”

“”அப்பா, அம்மா வருவார்கள்”

“”யாரோட அப்பா அம்மா?”

“”அவளோட அப்பா அம்மாதான்”

“”அப்போ முதல்ல மூணுபேர்ன்னு சொன்னது தப்பு… ஐந்து பேர்கள், இல்லையா?”

“” அது அவளுக்கு வேலை கிடைத்து அவர்கள் வரும்போதுதானே?”

“” கிடைப்பதாக வைத்துக் கொண்டு பேசுவோமே”

“”சரி”

“”உங்க அப்பா அம்மா வரமாட்டார்களா?”

“” அவர்கள் என் அண்ணாவோடு இருகிறார்கள். அவனுக்கு இரண்டு குழந்தைகள். அதைச் சமாளிக்கறதே பெரிய விஷயம். எப்போதாவதுதான் இங்கு வருவார்கள்”

“”பிள்ளைகள் வீட்டிற்கு பெத்தவா வருவது என்பது நடக்கிறதுதானே?”

நான் பதில் எதுவும் சொல்லவில்லை.

“”மாமனார் மாமியாருக்கு என்ன வயசிருக்கும்… வியாதி வெக்கை இல்லாமல் நல்ல திடமா இருப்பாதானே?”

“” மாமனார்தான் கொஞ்சம் அசக்தம்”

“”புரியல”

“” வலது கை நடுங்கும்”

“” அப்போ எப்படிச் சாப்பிடுவார்?”

“”மாமியார்தான் ஊட்டி விடுவா”

“”அடப்பாவமே… வந்துட்டா இங்கேயேதான் இருப்பாளாக்கும்”

“” அவாளுக்கும் வேறெ யாரும் கிடையாது”

“” உங்களுக்குப் பூர்விகம்”

“” தஞ்சாவூர்ன்னு அப்பா சொல்லக் கேள்வி. ஆனா அரசூர் கிராமத்திற்கு ஒரு தடவை கூடப் போனது இல்லே”

“” ஏன்?”

“”அப்பா காலத்திலேயே சொன்னை வந்துட்டார். கிராமத்திலேயும் பெரிசா ஒண்ணும் நிலபுலன்கள் வீடுன்னும் எதுவும் கிடையாது”

“”குலதெய்வம் கோயில்”

“”அதற்கு வருஷத்திற்கு ஒருதரமோ இரண்டு தரமோ போய்விட்டு வந்துவிடுவோம்”

“” காலையில் எத்தனை மணிக்கு ஆபீஸ்?”

“”ஒன்பது மணி… முடியுறது மாலை ஐந்தரை மணி”

“”சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துட்டுப் போவீர்களா”?

“”கிட்ட இருந்தால்… வெயில் தகிக்க வில்லை என்றால்… மழை இல்லை என்றால் வந்து போவேன்.”

“”சாயந்திரம் சீக்கிரம் வந்துவிடுவீர்கள் இல்லையா?”

“”வேலையைப் பொறுத்துதான் எல்லாம்… சமயத்தில் இரவு ஒன்பது மணி கூட ஆயிடலாம்”

“” காலையில் சீக்கிரமா எழுந்து விடுவீர்களா?”

“”நான் ஆறரை மணி… ஆனால் ஒய்ஃப் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துடுவா”

“” வாசல் தெளித்துக் கோலம் போடுவீர்களா?”

“”என்ன இப்படிக் கேட்கிறீர்கள்?”

“” இல்லை சில பேர் அதுக்குக் கூட வேலைக்காரியை வைத்து விடுகிறார்கள்… அதான் கேட்டேன்”

“”வாசல் தெளித்து கோலம் போட்டு மார்கழி கோலப் போட்டியில் பரிசு வாங்கினவ”

“”பேஷ்…பேஷ்… அப்போ கொலுவும் வைப்பீர்களோ?”

“” ஆமாம்”

“”கொலுவிற்கு நிறையப் பேர்களை அழைப்பீர்கள் இல்லையா?”

“”புதுசா வந்துள்ள இடம்… போகப் போகத்தானே பழக்கமாகும்”

“” நாள்கிழமை என்றால் இங்கே இருப்பீர்களா… இல்லை கதவைப் பூட்டிக் கொண்டு ஊருக்குப் போய்விடுவீர்களா?”

“” தீபாவளி, பொங்கல் தவிர மற்ற எல்லாப் பண்டிகையும் இங்குதான்”

“”சொந்தக்காரர்கள் இந்தப் பக்கம் இருக்கிறார்களா?”

“” இரண்டு மூன்று குடும்பம் இருக்கு”

“” அப்போ அவர்களும் இங்கு வந்து போவார்கள்”

“”நாங்களும் போய் வருவோம்”

“” வாஷிங் மெஷின் உபயோகப்படுத்துவீர்கள் இல்லையா?”

“” ஆமாம்”

“” என்ன பேப்பர் வாங்குவீர்கள்?”

“” தமிழ்ல ஒண்ணு… ஆங்கிலத்தில் ஒண்ணு”

“” அப்போ பழைய பேப்பர்க்காரன் வருவான்”

“” பக்கத்திலிருந்தா நானே கொண்டு போய் போட்டுவிடுவேன்”

“” காய்கறி”

“”கடைக்குப் போய்தான் வாங்குவேன்… இல்லை இங்கு வாசலிலேயே வருமா?”

“” வரும்… ஆனால் நான் வாங்குறது இல்லை”

“” ஏன்?”

“” கூடிய மட்டும் வெளி மனிதர்களை உள்ளே சேர்ப்பதில்லை”

“” அப்படியா?”

“”வாட்டர் ஹீட்டர், ஃபிரிட்ஜ், அயர்ன்பாக்ஸ், மிக்சி, கிரைண்டர், டி.வி., ஏ.சி. எல்லாம் உண்டுதானே?”

“”இதெல்லாம் இல்லாத மாடர்ன் லிவிங் இருக்கா என்ன”?

“”எலக்ட்ரிக்கல்.. எலக்ட்ரானிக் அயிட்டத்தையெல்லாம் வைத்துக் கொள்வது அவரவர்கள் சொந்த சௌகர்யம். விருப்பத்தைப் பொறுத்தது… ஆனா ஏகத்திற்கு கரண்ட் பில் ஏறிடும்… இ.பிக்கு டெபாசிட் தொகை அதிகரித்து வீட்டுக்காரர்ன்னா கட்டணும்”

“” டெபாசிட்டுக்கு வட்டி தருகிறார்களே”

“” யாருக்கு வேண்டும் அந்தப் பிசாத்து வட்டி”

“” அது உங்களுடைய இஷ்டம்”

“” நாய் வளர்க்கறது உண்டா?”

“” இல்லை”

“”பூனை”

“”இல்லை”

“” வீட்டிற்குள்ளேயே கிளி… வண்ணச் சிட்டுக் குருவிகள்… தொட்டியில் மீன்கள் வளர்ப்பா சிலபேர்”

“” எதுவும் இல்லை”

“”ரொம்ப நல்லதாப் போச்சு… மணி பிளான்ட் வளர்ப்பீர்களா?”

“”ஆமாம்… வீட்டுக்கு என்ன வாடகை… எவ்வளவு அட்வான்ஸ்.. என்பதைப் பற்றியெல்லாம் இன்னும் சொல்லவில்லையே”

“”கட்டாயம் சொல்லத்தான் போகிறேன்… அதற்கு முன்னாடி வருகிறவர்களைப் பற்றி முழுசாத் தெரிந்து கொள்ள வேண்டாமா?… ஏற்கெனவே தண்ணீர் தட்டுப்பாடு… வரப்போகிறது சம்மர் வேற…. கரண்ட் அடிக்கடி கட் ஆகிறது… அதனாலதான்… அப்புறம்…” என்று ஆரம்பித்தார்.

என் பொறுமை எல்லை மீறிவிட்டது.

“”நான் கிளம்புகிறேன்… சாப்பிட்ட டிபன் ஜீரணமாகிவிட்டது. மாலையில் வருகிறேன்… ஒண்ணே ஒண்ணு தெரிஞ்சுக்கலாமா… இந்த வீடு எப்பொழுது முதல் காலியாக இருக்கு?”

“”கிட்டதட்ட ஒரு வருடமாகப் போகிறது… தோதா எவரும் அமையலே”

“”எப்படி அமையும்?… மனுஷன் வருவதற்கு முன்பே இப்படி ரம்பம் போட்டா… வந்த பிறகு என்ன பாடு படணுமோ? என்று கொஞ்சம் யோசித்தாலே போதும். எவனும் வரமாட்டான்… காலியாகவே இருக்க வேண்டியதுதான்?”

வாடகை வீட்டின் மீதிருந்த ஆசை தவிடுபொடி!

போகும்போது ” பளிச்’ சென்று மின்னியது. “எனக்கு வீடு கிடைத்து குடியேறிய பின் என்னுடைய சொந்த வீட்டை வாடகைக்கு விடும்போது நானும் இப்படியெல்லாம் கேட்கணுமா?’

சரியாப் போச்சு!

– ஜூலை 2015

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *