(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அன்றொரு நாள் ஆபிசிலிருந்து வீடு திரும்பிய பாலகிருஷ்ணன் சோபாவில் சாய்ந்தான். என்றுமில்லாதபடி அன்று அவ்விடத்தில் மரண அமைதி குடி கொண்டிருந்தது. தன் அறைக்குள் நுழைவதற்கு முன்னே தன் கால்களைக் கட்டிக்கொண்டு, “அப்பா! எனக்கு சாக்லேட் வாங்கி வந்தாயா?” என்று கேட்கும் அவனுடைய ஐந்தாவது மகள் அம்புஜம் கூட, ஒரு மூலையில் திகிலுடன் உட்கார்ந்திருந்தாள். சிறியதும் பெரியதுமான மற்ற இரண்டு ஆண் குழந்தைகளும், இரண்டு பெண் குழந்தைகளும், ‘இந்தப் பூனையும் இந்தப் பாலைக் குடிக்குமா?’ வென்னும் பாவனையில் ‘கம்’மென்றிருந்தனர். அப்போதுதான் கைக் குழந்தையுடன் அந்த அறைக்குள் நுழைந்த பாலகிருஷ்ணனின் மனைவி கெளரி அம்மாள், மளமளவென்று கண்ணீர் வடித்துக்கொண்டு வார்த்தைகளைக் கொட்டத் தொடங்கி விட்டாள்.
“இதைப் பாருங்கோ, இனிமே அரை நிமிடமும் இந்த வீட்டில் இருக்க முடியாது. ஒரு நாளா, இரண்டு நாளா, எத்தனை நாளைக்குத்தான் இந்தத் துன்பத்தைச் சகித்துக் கொண்டிருப்பது? வேறு வீடு பாருங்கோ, பாருங்கோன்னு நானும் உங்க கிட்டகிளிப்பிள்ளை பாடம் படிச்சாச்சு. நீங்க காதிலே வாங்கினால்தானே! உங்களுக்கு என்ன, காலையில் எழுந்திருச்சு வேலைக்குப் போய் விடுகிறீர்கள். பிறகு இரவு ஏழு மணிக்கு வீடு திரும்புகிறீர்கள். நாள் முழுவதும் இங்கிருந்து கண்ட கண்ட வம்பிகளிடத்திலென்பதும் ஏச்சு வாங்குவது நானா, நீங்களா?” என்று முற்றுப் புள்ளியில்லாமல் மேலும், மேலும் பேசிக் கொண்டு போவதைக் கண்ட பாலகிருஷ்ணன், “சரிதான். இன்றும் ஏதோ கலகந்தான் போலிருக்கிறது” என்று ஊகித்துக்கொண்டு, “ம் இன்னைக்கு என்ன நடந்தது?” என்று முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக்கொண்டு சிறிது கடுமையாகவே கேட்டான்.
“தினசரி என்னதான் பிடுங்கிக்கிட்டு வாள் வாள்னு. சே! என்ன கர்ணகடுரம்?” என்று கூச்சல் போட ஆரம்பித்து விட்டாள். “எனக்கு வந்த ஆத்திரத்தில் பிள்ளைகள் எல்லோருக்கும் ஆளுக்கு ரெண்டு என் கை வலிக்க வைத்துவிட்டு, என் விதியை நினைத்துக்கொண்டு அழுது கொண்டிருந்தேன்’ என்றாள்.
பாலகிருஷ்ணன் தம்பதிகள் நகரத்தில் ஒரு ஒதுக்குப்புறச் சந்தில் இருந்த சிறிய வீட்டின் அறையொன்றில் குடியிருந்தனர். பாலகிருஷ்ணன் ஒரு கம்பெனியில் குமாஸ்தா வேலை பார்த்து வந்தான். சொற்ப சம்பளத்தில் ஆறு பிள்ளைகளை வைத்துக்கொண்டு அவன் பட்ட துன்பம் சொல்லத் தரமல்ல. இல்லாவிட்டால் இந்த சின்னஞ் சிறு சந்தில் சுகாதார வசதியற்ற சிறிய அறையில் எட்டுப் பேர் கொண்ட அந்தப் பெரிய குடும்பம் வாழ்க்கை நடத்துமா?
பாலகிருஷ்ணன் வேறு ஜாகை பார்க்கப் பகீரதப் பிரயத்தனங் களெல்லாம் செய்துகொண்டு தான் இருந்தான். ஆனால், வசதியான அறை பிடிக்க அவனால் முடியவில்லை. பல்லைக் கடித்துக்கொண்டு, தன் மனைவி கூறியவைகளை உள்ளுக்குள் பொங்கியெழுந்த ஆத்திரத்துடன் கேட்டுக்கொண்டு மௌனமாயிருந்தான்.
“நானும் ஒரு வீட்டுக்காரியாகனும். இப்படிப்பட்ட ஓரிகளுக்கு எல்லா புத்தி படிச்சுக் கொடுப்பேன். வேணுமென்றே யாரையாவது ஏழெட்டுப் பிள்ளைகுட்டி உடையவர்களைக் குடிவைத்து, அவர்களுக்குச் செய்கிற உதவி ஒத்தாசைகளையும் அன்பையும் இப்படிப்பட்டவர்கள் பார்த்து வெட்கத்தால் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும்படிச் செய்வேன்.. ம். கடவுள் நம் போன்றவர்களைத் தானே சோதிக்கிறார்!” என்று பெரு மூச்செறிந்தாள் கௌரி.
கௌரியின் ஆசையும் வீணாகவில்லை. பாலகிருஷ்ணன் குடியிருந்த வீட்டுக்கு எதிர் வீட்டிலிருந்த நண்பர் ஒருவர் ஆறுமாத லீவில் இந்தியா போனார். அவர் ஒரு வீடு பிடித்திருந்தார். பாலகிருஷ்ணன் அவரைச் சதா நச்சரித்ததைக் கொண்டு, தாம் வரும் வரையில் அவர்களை அந்த வீட்டிலேயே குடியிருக்க வைத்துவிட்டுச் சென்றார்.
நண்பர் சென்ற சில தினங்களுக்குள்ளேயே பாலகிருஷ்ணன் ஒரு குடித்தனத்தை அழைத்துக்கொண்டு வந்துவிட்டான். பார்வதியும் அவர் கணவர் பரமேஸ்வரனும் தங்கள் நாலு பிள்ளைகளுடன் அவ்வீட்டுக்குக் குடி வந்துவிட்டார்கள். தான் முன்பு குடியிருந்த எதிர்த்த வீட்டுக்காரி பார்க்கும்படி அவர்களை ராஜோபசாரத்துடன் வரவேற்று, அந்த வீட்டின் மேல்தளத்தில் இருந்த ஒரு பெரிய அறையை ஒழித்துக் கொடுத்தாள் கௌரியம்மாள்.
பார்வதியம்மாள் குடி வந்த மூன்று வாரங்களுக்குள்ளே தனது ‘சொரூபத்தை’க் காண்பித்துவிட்டாள். “அப்பப்பா! நானும் எத்தனையோ வல்லடிவம்பிகளைப் பார்த்திருக்கிறேன். இத்தகைய ராஷஸியைக் கண்டதேயில்லை” என்று கௌரியம்மாள் தன் கணவரிடம் ஒரு நாளிரவில் காதைக் கடித்தாள். “என்ன சங்கதி?” என்று பாலகிருஷ்ணன் திகிலுடனே விசாரித்தான், ‘நீங்களேதான் பார்க்கிறீர்களே! இரவு முழுவதும் விளக்கு எரிகிறது. ஒரு விளக்கு போதாதென்று தனக்கு ஒன்று, தன் மனைவிக்கு ஒன்று, தன் கைக் குழந்தைக்கு ஒன்று என்று மூன்று விளக்குகள் போட்டு விட்டார் அந்த மனிதர். அதுதான் போகட்டுமென்றால், அந்த அம்மாள், சலவைத் தொழிலே செய்கிறார்கள் போலிருக்கிறது. அம்பாரம், அம்பாரமாய் துணிகளைத் துவைக்கிறதும், தண்ணீர் குழாயைச் சதா சர்வ காலமும் திறந்து வைத்து தண்ணியை வீணாக்குவதும் காணச் சகிக்கலே. தண்ணி காசு இந்த மாசம் உங்களால் கட்ட முடியுமோ என்னவோ? இதைக் கேட்டதற்குத்தான் அவள் இன்று அம்மாதிரி சண்டை பிடித்தாள்” என்று ஒரே மூச்சில் பொரிந்து தள்ளினாள் கௌரி.
பாலகிருஷ்ணனும், பரமேஸ்வரியின் ‘திருவிளையாடல்களைச்’ சொல்ல ஆரம்பித்துவிட்டான். ‘இந்த மனிதர் தண்ணி போட்டு விட்டால், இப்படியா தலைகால் தெரியாமல் ஆட வேண்டும்? இரவு நேரங்களில் அவருடைய பிள்ளைகள் போடும் கூச்சலும், கீழே படுத்திருக்கும் நம்மேல் ‘அபிஷேகம்’ செய்வதும் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த மனிதன் குடிவெறியில் சத்தம் போட்டு புலம்புவதல்லவா கோரமாயிருக்கிறது. நேற்று ராத்திரி ரோந்து சுற்றும் போலீசார் அவன் போட்ட கூச்சலைக் கேட்டுவிட்டு என்னை எழுப்பி என்ன காரணம்? என்று விசாரித்தார்கள். நான் என்னத்தைச் சொல்ல ‘வயிற்றுவலி; அதனால் தான் அப்படி ஓலமிடுகிறார்’ என்று மழுப்பிவிட்டேன்’ என்றான்.
“அவர்களை உடனே காலி பண்ணச் சொல்லுங்கள்” என்றாள் அவன் சகதர்மிணி.
“எப்படி அவர்களைப் போகச் சொல்வது? அவர்கள் வந்து இன்னும் ஒரு மாதமாகலியே!”
“வீட்டுக்காரர் இந்தக் கப்பலுக்கே திரும்பி வருகிறாரென்றும், வீட்டை ஒளித்துக் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லுங்கள்” என்றாள் கௌரி,
“ஊஹூம்,அவர்கள் போவார்களென்று எனக்குத் தோன்றவில்லை. ஒரு வருஷ நோட்டீஸ் கேட்பான். அன்றைக்குப் பார்த்தாயா அவன் சட்டம் பேசியதை! லாயர்களெல்லாம் இவனிடம் பிச்சை வாங்கணும்” என்று அலுத்துக்கொண்டான் பாலகிருஷ்ணன்.
“அட ஈஸ்வரா! நல்ல குடி கொண்டு வந்தீர்கள்! நாம் குடியிருக்க வீட்டுக்கே திரும்பிப் போய்விடுவோம். இவர்கள் இங்கேயே தனி ஆட்சி செய்யட்டும். அந்த வீட்டுக்கார அம்மாள் இந்த அடங்காபிடாரியை விட எவ்வளவோ நல்லவர்கள்” என்றாள் கௌரி.
அப்புறம் என்ன? ‘ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை வெரட்டி. அடிச்ச’ கதை போல, பார்வதி – பரமேஸ்வர தம்பதிகள் பாலகிருஷ்ணன் தம்பதிகளைத் துரத்திவிட்டனர். பாலகிருஷ்ணன் தம்பதிகளின் வரலாற்றைக் கேட்ட பின்னர், அவர்களைக் குடி வைத்த வீட்டுக்கார அம்மாள், ‘தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும். இப்போதுதான் இவர்களுக்குப் புத்தி வந்தது போலும்’ என்று எண்ணிக் கொண்டு அவர்களுக்கு ‘அடைக்கலம்’ கொடுத்து அன்புடன் நடத்தினார்.
– கவிஞர் ந.பழநிவேலுவின் படைப்புக் களஞ்சியம் (தொகுதி 2), முதற் பதிப்பு: பெப்ரவரி 1999, ப.பாலகிருட்டிணன், சிங்கப்பூர்.