(குறுநாவல்)
“மீனாட்சிபுரத்தில ஒங்களோட எட்டாம் வகுப்பு வரை படிச்சேன்”
இருகை கூப்பினார் ரத்தினவேல்.
எதிர்நின்றவர் விழிகள் மேலேறின; இந்த வயதில் இப்படி ஒருத்தர் நேரில் சந்திப்பு என துளசிநாயகி எதிர்பார்க்கவில்லை.ஞாபகக் கிணற்றின் மேல் தளத்தின் கண்ணாடி அலைகளை அகற்றி ஆழத்துக்குள் பாய்ந்தார்.
“ராமநாதன்… துளசிமணி… ரத்தினவேல்…” பெயர்கள் மனக்கூட்டிலிருந்து மெலிந்து ஒலித்தன.
“ஆ… அந்தக் கூட்டுல தான் நானும்.”
கன்னம் ஊதி, நெற்றி சுருங்கிய ரத்தினவேல் இதழ்களின் நுனியில் சிரிப்பு ஊசலாட்டம் போட்டது.
“ரத்தினவேலு ஜாடைதான் தெரியுது, சரிதான.”
ரத்தினவேலுவைக் கூட்டிவந்த ஆசிரியர் வரதராசன் “நல்லா சித்திரம் எழுதுற ஆளு.இன்னைக்குத் தினத்துல பிரபல ஓவியர்” என்றார்.
“இவர் நல்லாப் படிப்பாருன்னு தெரியும்.வகுப்பில கெட்டிக்காரர்; வகுப்புல என்ன, பள்ளிக்கூடத்திலே இவர்தான். அப்பப்ப இவர்கிட்ட நாங்க சந்தேகங் கேப்போம், இவர் சொல்லிக் கொடுப்பார்.இப்ப பிரபலமான ஓவியர்ன்னு சொல்றது ஆச்சரியமா இருக்கு.”
“சரி, நா வரட்டுங்களா டீச்சர், பள்ளிக்கூடத்துல எட்டாம் வப்புக்குச் சாயங்காலம் ஸ்பெஷல் கிளாஸ் வச்சிருக்கு.”
ஒவ்வொரு சமூகத்துக்கும் தமக்குள் உறவாட ஒரு மொழியுண்டு. ஆசிரியர் சமூகம் ஒருவரை ஒருவர் “டீச்சர்” என்னும் மதிப்புறு சொல்லால் உறவாடியது.
வரதராசன் இரண்டு தூரத்து மேகங்களைச் சந்திக்க வைத்துவிட்ட குதூகலத்துடன் விடைபெற்றுக்கொண்டார்.இனி மின்னல் கீறுவதும், இடி இடிப்பதும், மழை கொட்டுவதும் அவர்கள் பாடு.
“நீங்க சொல்றவங்க எங்க பள்ளிக்கூடத்துல, சத்துணவுத் திட்டத்தில வேலை பாத்தாங்க. இப்போ ஓய்வுபெற்று ஊர்ல இருக்கிறாங்க. போனா பிடிச்சிறலாம்”
வரதராசன் விபரங்களைச் சொல்லிமுடித்தார்.
புறப்பாட்டுக்குத் தயாரானவர்களை வரவேற்க காத்திருந்தது பூதலூர். விசாரிப்புக்கு பதிலளித்தவர் படித்த மீனாட்சிபுரத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவு பூதலூர். இப்போது நடுநிலைப் பள்ளியாக உயர்வு பெற்றதை மாநில அளவில் உச்சத்திற்குக் கொண்டு செல்லும் முனைப்பில் இருக்கிறார் தலைமை ஆசிரியர் வரதராசன்.முன்மாதிரிப் பள்ளியாக உருவாக்குவதில் மாவாட்டத்தின் எல்லாப் பள்ளிகளையும் வந்து பார் என்கிறார். “சுற்றுச்சூழல் பெருங்கேடு செய்யும் நெகிழி (பிளாஸ்டிக்) இல்லாத பள்ளி” – சுற்றுச்சுவரில் பளிச்சிட்ட வாசகம் வெறும் எழுத்து அல்ல; மாவட்ட ஆட்சியரின் “முன்னோடிப் பள்ளி”அங்கீகாரம் பெற்றமைக்கான சிறப்பு விருதும், குடியரசுத் தலைவரின் கையொப்பத்துடன் கூடிய நல்லாசிரியர் விருதுச் சான்றிதழும் பெற்றுத் தந்த எழுத்து. தலைமை ஆசிரியர் அறையின் பக்கம் வருபவர்களுக்கு வலப்புறம் கேடயமும், நடுப்புறம் சான்றிதழும், இடப்புறமாய் வட்ட வடிவிலான மெடல் பதக்கங்களும் புடைநின்று வர்வேற்பளிக்கும்.
கல்விச்சோலை என ஒன்றிருக்குமாயின், அவர் தலைமையாற்றும் பள்ளியை பூந்தோட்டமாய்ச் ஆக்காமல் ஓய்வதில்லை எனத் தெரிந்தது.அவரது சேவை ஓய்வதற்கு எஞ்சியிருந்தன நான்கு ஆண்டுகள்.
பூதலூரில் அவர்கள் காலடிவைத்த வேளை “பொலியடிப்புக் களத்துல கெடக்காங்க” வீட்டெதிரே அமர்ந்திருந்த பாட்டியின் குரல் திசைகாட்டியது.
பொலியடிப்புப் பக்கத்திற்குத் திரும்பிய தேடுமுள் தடுமாறிக் கொண்டே போகையில்,தங்கள் தலைமையாசிரியரைக் கண்டதும் வீதியில் விளையாடிக் கொண்டிருந்த பையன்கள் விரைப்பாய் ‘சல்யூட்’ வைத்தனர்;
“குட்மார்னிங், ஐயா!”
களையெடுப்பு முடிந்து வீடு திரும்புகிற நேரம். பொழுது ஏறுவதெல்லாம் கணக்கில் இல்லை.
“அவ்வா எக்கடரா?”(பாட்டி எங்கே) தெலுகில் வந்தது விசாரிப்பு.
“அக்கட” என்று களத்தைக் கைகாட்டிவிட்டு ஓட்டம் பிடித்தான்.
“அந்தா ஓடுறானே, சேவு ஒசரத்துக்கு. நம்மப் பள்ளிக்கூடத்துல நாலாம் வகுப்பு. அவந்தான் நீங்க தேடி வந்தவங்களோட பேரன்.”
தேடி வந்த துளசிநாயகி களத்துமேட்டில் தென்படவில்லை. தோட்டக் காட்டைச் சுட்டின களத்துமேட்டுப் பார்வையும் சுட்டு விரல்களும்.
தோட்டக் காட்டுப் பாத்திகளின் சால்களில் சாரைப்பாம்புகளாய் நீளநீளமாய்ப் சொட்டுநீர்ப் பாசனத்திற்காகப் பதிக்கப்பட்ட குழாய்கள்; ஒருபக்கம் மிளகாய்ப் பயிர்.இன்னொரு பக்கம் வெள்ளரி; பூச்சியடித்து, சுருண்ட கடைசிப் பருவக் காய்களைக் காட்டியது.
தலையில் வேடுகட்டி குனிந்து களையெடுத்துக் கொண்டிருந்த பெண் இவர்களைப் பார்த்து நிமிர்ந்தாள். வகுப்பில் பார்த்த உசரம், எலுமிச்சை நிறம், வட்டப் பாவாடைச் சட்டை, உடுப்பு அத்தனையுமில்லை.
“வாங்க சார், சௌக்கியங்களா? கூட யாரு.” நிமிந்தவுடன் பேச்சொலி வந்தது.குரலிலும் மாற்றம். ஓவியர் ரத்தினவேலுக்கு புதுக்குரல். பார்த்துக் கொண்டிருப்பவரின் உருவமும் பார்க்கத் தேடும் முதிரிளம் பிராயத்திற்கும், சமரசமில்லாமல் தென்பட்டது. உருவம் மாறினும், சதுரம் குறையினும், உயரம் கரைந்தாலும், கடைசியாய் ஓய்வது பேச்சு என்பார்கள். சன்னமாய் காதில் ஒலித்துப் பழக்கப்பட்ட புறாக்குரல் அல்ல.
“ஐயா உங்களத்தான் பாக்க வந்திருக்கார்.இவரத் தெரியல? பட்டணத்துல சித்திரம் எழுதுறாரு.நம்ம பக்கத்தாளுதான்.ஒங்க கூடப் படிச்சவராம். பாக்க வந்திருக்கார்.”
“எம்பேரு, துளசிநாயகி தான்.ஆனா நானில்ல”
விசாரிப்பாளன் தேடிவந்த துளசிநாயகி இல்லை இவர்.
“பல்குணன் வாத்தியாரு மக தேவியும் நானும் ஒன்னாப் படிச்சோம்.அந்த ‘செட்டா’ நீங்க?”
உங்களைப் பாத்ததில்லையே என்ற மறுதலிப்பு;
“ஒங்க பேரும் துளசிநாயகியா?” வந்தவரின் கண்ணில் தேடல் தத்தளித்தது.
“அவங்க இந்த ஊரிலேருந்துதான் மீனாட்சிபுரம் வந்தாங்க. எட்டாம் வகுப்பு வரை எனக்கு முன்னால படிச்சாங்க. நா ஆறாம் வகுப்பு போகையில் அவங்க எட்டு முடிச்சிப் போயிட்டாங்க”
எதிர்நின்ற பெண், மனசில் அகப்பட்டுவிட்ட ‘உள்ளாஞ் சுருக்கை’ சட்டென்று அவிழ்த்தார்;
“நீங்க தேடுற துளசிநாயகி இப்ப கீழூரில் இருக்காங்க. டீச்சரா இருந்து அவுங்களும் இப்போதான் ஓய்வு பெற்றுட்டாங்க.”
துப்புக் கிடைத்துவிட்டது.
“வாங்க போவம்”
கீழூர்த் திசைக்கு இழுத்தார் வரதராசன். தேடி வந்தவரைச் சரியான இடத்தில் சேர்த்துவிட்டால் எடுத்தகாரியம் சேமமடையும் என்னும் முனைப்பு, வரதராசனைச் சலிப்பில்லாமல் இயக்கிற்று.
“இப்ப அங்க போகவா?” மலைத்துப் போய் நின்றார் தேடல்காரர். வம்பு பிடிச்ச வேலை, கீழூர் அங்கிருந்து பத்து கிலோ மீட்டர்.
“என்ன நடந்தா போகப்போறோம். காரில தான, சரட்டு’ன்னு போயிறலாம்”
ஜீவ சமாதியாக்கப்பட்ட நினைப்பைத் தோண்டி மேலெடுத்துக் கூறாய்வு செய்வது லேசான காரியம் அல்ல. இரண்டு மனக்கிடங்கும் அடையாளச் சொற்களைத் தூசி தட்டி எடுத்துக் கொண்டிருந்தன.
“எவ்வளவு காலம், அம்பது வருசத்துக்கு மேல இருக்குமா?” துளசிநாயகி கேட்டார்.
“சரியா அம்பத்தி நாலு வருசம் டீச்சர் ” ஓவியர் ரத்தினவேல் சொன்னார்.
இருவரையும் மூச்சுவாங்கச் செய்தன ஐம்பத்திநான்கு வருசங்களின் பிரயாணச் சோர்வு.
பதவி, பணம், ஊர்சுற்றல்,வெளிநாடு, மாலை, மரியாதை என மண்டை மயிரிறுதிக் காலம் வரை, எத்தனையைத் துரத்தித் துரத்தி ஓடுவது? புத்தனின் ஞானோதயம் உலகுக்கு வெளிச்சத்தைப் பாய்ச்சியது. ஓவியக் கல்லூரிப் பேராசிரியராகவிருந்து பணி ஓய்வு பெற்றபின், தன் வாழ்விலுண்டான இந்த ஞானோதயம் வரவிருக்கும் பின்னாட்களில் தனக்குள் பாய்ச்சப்படப் போகிற ஒளி என ஓவியப் பிரபலத்துக்குப் பட்டது.
முந்திய தடத்துக்குள் மாட்டுப்படாது வாழ்வில் இனி புதுத்தடம் பதிக்கும் காலம். “என்னைப் பிடிச்சிருவியா பாக்குறேன்” என்று ஓடிக்கொண்டிருக்கும் நாணயத்தின் ஓட்டத்தைத் துரத்தித் துரத்தி ஓடி, வாழ்க்கை ஒருநாள் நம்மிடமிருந்து ஓடிவிடும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பணமும் அங்கீகாரப் புகழும் ஒரே எடையளவானவை தாம். ஓரிடத்தில் நிறுத்தி நின்று நிதானித்து திசை பார்க்கவேண்டும்; அது இந்த இடம் என அடையாளம் பார்த்துப் பிடித்துக் கொண்டார்.
மீதி வாழ்வை எது அர்த்தப் படுத்தும்? பள்ளிப்பருவ நண்பர்கள், தோழியர் சந்திப்பு – ஆடுமேய்ப்புக்கு, மாடுமேய்ப்ப்புக்கு, ஏர்பிடித்தலுக்கு உடனின்ற சேக்காளிகளைக் கண்டு குலாவுதல் – குழந்தைகள், பேரன் பேத்திகள் என குடும்பத்துக்குள் காணாமல் போன உறவுகளைக் தேடிக் கண்டுபிடித்து உறவாடல் – இனி மீதி வாழ்வின் உரையாடல் அதுதான். தேடிப் போன சிலபேர் மண்ணிலிருந்து விடைபெற்றுச் சொந்தஊர் சேர்ந்திருந்தனர். ஆண்டவன் எப்பக் கூப்பிடுறானோ அப்ப போகவேண்டியது தான் எனச் சிலர் காத்துக் கொண்டு நின்றார்கள். எல்லோரையும் தரிசிக்க வேண்டும். 68-நெடிய வருசங்களின் பின் என்பதால், அது தரிசனம்.
சக மனிதர்களின் பங்களிப்பு இல்லாமல், இந்த ஓவியன் வாழ்வு இத்தனை பிரபலமானதாக மாறியிருக்குமா? தாய் தந்தை, தாத்தா பாட்டி, தங்கை அண்ணன், மனைவி பிள்ளைகள், பள்ளிச் சிநேகித சிநேகிதிகள், தெருவாசிகள், ஊர், சனம் அனைவரும் அவர் ஓவியத்தை அர்த்தமுள்ளதாக்கி இருக்கிறார்கள்.
மோசமான மனிதர்கள் கூட, அவருக்குச் சிறப்புள்ள ஓவியத்தைக் கொடையளித்துப் போயிருக்கிறார்கள். வார இதழ் ஒன்றிலிருந்து “சவ ஊர்வலம்” என்ற கதைக்குச் சித்திரம் வரைந்து தரக்கேட்டிருந்தனர்.கதையின் நாயகர் அவர் நண்பன்; குடும்ப நல அலுவலத்தில் அலுவலர். அந்த ஓவியத்துக்கு தான்தான் மூலப்பொருள் என அந்த மோசமான மனிதர் வாழும்வரை அறியார். பிரசித்தி பெற்ற ஒருகதையின் ஓவியப் படைப்பு எங்கிருந்து உருவானது என தூரிகையின் அடிமனம் அறியும். இப்போது அந்த அலுவலரை மேலுலகத்தில் சென்று கண்டு நன்றி சொல்லா இயலாது.
இருப்பவர்களைத் தன் மறைவுக்கு முன் சந்தித்துவிடும் வெறிச்சியில், அந்த யாத்திரையாளர் பயணத்தின் இலக்கை அடைய வாழ்வின் பழைய சந்து பொந்துகளெங்கும் ஓடிக்கொண்டிருக்கிறார்.
“ஒன்பதாம் வகுப்புக்கு நா மதுரை போயிட்டன்; நம்ம ஊர்ல உயர்நிலைப் பள்ளி வந்திருச்சி.நீங்க அதுக்கு மேல படிச்சீங்களா?”
“எங்க படிக்க விட்டாங்க?”
“உங்ககூட படிச்ச அன்னம், ஆதிலட்சுமி, நாகம்மா?”
பெண்டிரைக் குறித்து தெரிந்து கொள்ள ரொம்ப சுதாரிப்பாய் வெளிப்பட்டது ஓவியரின் கேள்வி.
“ஆதிலட்சுமி இல்ல. அவ செத்து ஏழு வருசம் இருக்கும்”.
துக்கக் குறிப்பிலிருந்து மீண்ட துளசி நாயகி சொல்வார் “இங்க பூதலூரிலிருந்து அன்ன லட்சுமி, ஆதிலட்சுமி, நாகம்மா, நாங்க நாலு பேரும் ஒன்னா மீனாட்சிபுரம் ஸ்கூலுக்கு போய் வந்தோம். பெத்தவங்களுக்கும் மத்தவங்களுக்கும் நாங்க படிக்கிறத ஏத்துக்கிற மனசில்ல. பொம்பிளப் பிள்ளக படிக்கனுமா? ‘படிச்சுப் பல கத்தும் பொம்பிளை பொம்பிளதான்’ங்கிற பழங்கயிறு அவங்களுக்குள்ள தொங்கிக் கிட்டிருந்துச்சு. படிப்பு, வாத்தியார் வேலை, மாத வருமானம் – என்பதெல்லாம் அவங்க நெனைச்சுப் பாக்கல.”
”பெறகு அதன் பலனை அனுபவிச்சாங்க தான டீச்சர்?”
“சும்மாவா, வாத்தியார் வேலையில முதல் மாதச்சம்பளம், அதும் அரசாங்கச் சம்பளம், வந்ததும் எங்கம்மாவுக்கு உடம்பெல்லாம் முகமாகீருச்சி”
அதொரு சுனை; வாழ்க்கை எத்தனை காலத்துக்குப் போகுமோ அத்தனை காலமும் அரசாங்கத்தின் ஓய்வூதியம் என்னும் சுனையில் நீராடிப் போகலாம்; பெண் என்றால் கல்யாணம், பிள்ளைகள், குடும்பம் என்ற முக்கோணச் சட்டகம், வாழ்க்கையை விசாலமான அர்த்தத்தில் பார்க்க தெரியாத முட்டங்கியில் கிடத்தியிருந்தது கிராமத்துப் பெண்டுகளை.
நிராசையாகிப் போகிற எத்தனையோ கனவுகளைப் பலிதமாக்கிட வேண்டுமெனும் வைராக்கியத்துடன் அவர்கள் நாலு பெண்களும் சேர்ந்து பயணிப்பு. சேர்ந்து சிந்திப்பு. சேர்ந்து திட்டமிடல்.
”ஒருத்தரக் கண்டா இன்னொருத்தரக் காணவேண்டாங்கிற மாதிரி இருக்கு. ஒண்ணே போல வந்து நிக்கிகளே” ஆச்சரியப்படுவார் சென்னம்மா டீச்சர்.
எட்டாம் வகுப்போடு அவர்களை நிறுத்திவிட்டார்கள்.
“எங்க அய்யாவுக்கு மூணு பெண்டாட்டி.”
ஓவியர் நிமிந்து உட்கார்ந்தார், துளசிநாயகி தூக்கி எறிந்த சொற்குண்டு எதிரே அமர்ந்து உரையாடும் அவரை அதிர்ச்சியில் அலக்காய்த் தூக்கிச் சிதறடித்தது.
முதல் பெண்டாட்டிக்கு இரண்டு பெண் பிள்ளைகள்; இரண்டாவதுக்கு ஒரு ஆண். அவன் அண்ணன். மூணாந்தாரத்துக்கு பிறந்தது இரு பெண்கள்.
முதலிரண்டு தாரமும் நிலபுலம், சொத்து பத்து சுமக்க முடியாமச் சுமந்து வந்து சேர்ந்தவர்கள்; அதுக எல்லாமும் அய்யாவோட சொத்தோடு சொத்தாக குவிமானம் ஆகிற்று.
”பெறகு ஏன் அம்மாவை ?” ஓவியருக்கு சந்தேகம் முண்டியது.
”அவர்ட்டத் தான் கேக்கனும். இரண்டு பெண்டாட்டிகள் இருக்கையிலே, அய்யா எங்க அம்மாவை வளைத்தார். அம்மா சின்னப்பிள்ளை, பதினைஞ்சு அல்லது பதினாறு வயசிருக்கலாம். சிவப்பா குத்துச்செடி மாதிரி இருந்தா. செல்வாக்கு, ஊர் மதிப்பு, தாட்டீகம். கொப்பும் குலையுமாய்ப் பெருகிய பெருமரத்துக்குக் கீழ குத்துச் செடி மாட்டிக்கீருச்சி. ஒருநாள் ராத்திரி கார் எடுத்துவந்து அம்மாவை ஏத்தீட்டு சீரங்கம் கூட்டிப் போனார். கார் எடுத்து வந்ததும் நான் மதிமயங்கிப் போயிட்டேன்’ன்னு அம்மா எங்கிட்டச் சொல்லீருக்கா”. நேரே சீரங்கம் கோயிலுக்கு போய் தாலி கட்டி பத்து நாள் தங்கி ஊருக்கு அழைத்து வந்திருக்கிறார் அய்யா.
மூன்றாம்தாரம் வந்து சேர்ந்தது அண்ணன் நெஞ்சுக்குள் நட்டுக்க கத்தி பாய்ந்து அப்படியே நிற்பது போல் துடித்தான். அது வாரீசுக் கத்தி. அம்மா ஆண்பிள்ளை பெற்றுப் போட்டுவிடுவாளோ என்று அஞ்சிச் செத்தான். ஒவ்வொரு குழந்தையும் நிலம்தொட்ட வேளை, கேட்ட அழுகுரல் ஆணில்லை எனத் தெரிந்த போது “அப்பாடா, இப்பத்தான் உசிரு வந்திச்சி“ என்று பொங்கிக் கூப்பாடு போட்டானாம். இரண்டும் பெண்ணாகப் பிறந்து அவன் கவலை துடைத்தன.
அய்யாவுக்கு மூத்த சம்சாரங்களோடும் பிள்ளைகளோடும் பேச்சு வார்த்தை அத்துப் போனது. அவரது சாவுக்குப் பெறகு, அந்த வீடு தாய்ப்பறவைக்கு, இரு குஞ்சுகளுக்கு சிதைந்த கூடாகியது.
“ஏற்கனவே ரெண்டு பொண்டாட்டிக்காரர்னு தெரியுமில்ல, மூணாவதா எதுக்கு அவனைக் கல்யாணம் செய்திட்டு வந்தே?” அம்மாவிடம் அண்ணன் வம்புச்சண்டை இழுத்தான். அம்மாவையும் இரண்டு பச்சைப்பிள்ளைகளையும் வீட்டை விட்டுத் துரத்தினான். மண்டை மறைஞ்சாச்சி, இனி என்ன வேண்டுமென்றாலும் பேசலாம், இருக்கிற வரை மரியாதை, இனி எதுவும் செய்யலாம்
“அய்யா ஒங்களுக்கு எதுவுமே செய்யலையா?” கேட்டார் ரத்தினவேல்.
“நாங்க வைப்பாட்டி பிள்ளைக தானே?”
“வைப்பாட்டி பிள்ளைகளா?” அதிர்ச்சி அவரைச் சூழ திணறிப் போய் நோக்கினார்.
“தாலி கட்டிக் கொண்டு வந்தாச்சின்னா ஆச்சா, ஒரு பெண்ணுக்கு செய்யவேண்டியதை செஞ்சாத் தானே குடும்பம்.”
இங்கே வாழ்வின் முக்கியமான துயரக் கட்டத்தை எளிதான சில சொற்களில் கடந்து போனார் துளசிநாயகி. “எங்க செஞ்சாரு? ஆயிரம் மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் தேறாங்கிற மாதிரி எதுவுமே ஒதுக்காமப் போயிட்டாரு. அவர் நெனைப்புக்கும், எடுத்த எடுப்புக்கும் சாகுந் தட்டியும் அம்மா வேணும். அவ கொடுத்துக்கிடே இருந்தா”
”அப்ப அவங்களுக்கு என்ன வயசு?”
”அம்மாவுக்கு நாற்பது, அவருக்கு அறுபத்தஞ்சு”
நேரமும் இடமும் அவலத்தின் கனமாயிற்று.தொண்டை அடைத்து நாக்கு வரள, கண்ணில் நீர் வடியும் நிர்க்கதியிலிருந்தார். மருமகள் பார்கவி தண்ணீர் கொண்டு வந்தார். மகன் பார்த்திபன் பரிதவிப்பானார். இனி வார்த்தைகள் வராது.மனம் சமானமாக வேண்டும். இமைக்குடை நுனிகளில் இரு துளிகள் ஆடின.
“அம்மாவைப் பெத்த பாட்டி வீட்டுக்குப் போய் அடைக்கலமாகிட்டோம். பாட்டி ஏத்துக்கிட்டா. பாட்டி இல்லாமப் போயிருந்தா எங்க கதி? எந்தச் சிரீரங்கத்தை நெனைச்சி சீரெங்க நாயகி, துளசிநாயகின்னு பேர் வச்சாரோ, அந்த சீரங்கம் போய்ப் பிச்சை எடுத்திருப்போம்”
ரத்தினவேல் சொல்வார் “எனக்கும் அந்தக் கதிதான். நா கைப்பிள்ளையா இருந்தபோதே அம்மா செத்துப் போனாங்க. எங்கள வளத்து, படிக்க வச்சி, ஆளாக்கி, வேலைக்கு அனுப்பினது எல்லாம் பாட்டி.”
துளசிநாயகி சொல்வார்; “நீங்க பாட்டி பிள்ளைன்னு தெரியும். பாட்டி வீட்டுல தான் வளந்தீங்க, படிச்சீங்க, சிவகாமி வீட்டுக்குப் போகிறபோது மத்தியான சாப்பாட்டு வேளையில் பாத்திருக்கேன். நம்மளை ஆதரிக்க ஒவ்வொரு வீட்டுலயும் ஒரு பாட்டி இருக்கனும் போல.”
அன்னம், ஆதிலட்சுமி, நாகம்மா , துளசிநாயகி நான்கு பேர் பெண்கள், மூன்று பையன்கள்: ஒரு குழுவாக பூதலூரிலிருந்து ஆறாம் வகுப்புக்கு மீனாட்சிபுரம் போனார்கள்.
“என்னைய மீறி அவ பள்ளிக்கூடத்துல கால் வச்சிருவாளா, பாக்கிறேன்”
மீனாட்சிபுரம் போகும்பாதையில் ஊர்க்காரர்கள் பார்த்துக் கொண்டிருக்க அண்ணன் மறித்து நின்றான்.
‘இது நல்லாருக்கா, சீரங்கா’ என்று ஒருத்தராவது அவனுக்கு மூக்கணாங் கயிறு போடலை. அய்யாவுக்குக் கொடுத்து வந்த மரியதையை, மதிப்பை அவனுக்குக் கொடுத்தாங்க”
ஒருகிளையில் பூத்த மலர்கள் ஒன்னாய்ச் சேர்ந்து ஆடும்; கைகோர்த்து கும்மி போடும். சிப்பாணி பூக்கும். இவன் கருநாகப் படம். கருநாகப் படமும் ஒரு பூப் போலத்தான்.
வழிமறித்து நிற்கிறான் என்று தெரிந்த ஊடுகாட்டு வழியில் குறுக்குப் பாதையில் பள்ளிக்கு நடந்தாள்.இவள் போய்ச் சேருகிற இடத்தில் சிநேகிதிகளும் பையன்களும் காத்து நின்றார்கள்.பையன்கள் நல்ல சீருக்கு ஒத்தாசை. அவர்களும் சிநேகிதிகளும் இல்லையென்றால் இவள் பள்ளிக்கூடம் மிதித்திருக்க வாய்த்திருக்காது.
வீட்டிலிருந்து புறப்படுகையில் மதியம் வாங்கித் திங்க ஒரு கூறு பருத்தி அல்லது கம்மம் புல்லு. இல்லை என்றால் பொம்பிளைப் பிள்ளைகளுக்கு எல்லாப் புஞ்சைகளும் தம் புஞ்சைதான். பையன்களிடம் பைக்கூட்டைத் கொடுத்திட்டு அரக்கப் பரக்க பருத்தி எடுத்து தாவணியில் சுருட்டல். ஆளுக்கொரு கூறு பைக்கூட்டில் திணித்துக் கொண்டு, மீனாட்சிபுரம் போய் கடையில் போட்டு பயறு கிழங்கு வாங்கி, வகுப்புப் பிள்ளைகளுக்குப் பகிர்வார்கள்.
“மகிழ்ச்சிக்கு எது மூலம்? மற்றவர்களுக்குக் கொடுப்பதும் வழங்குவதும்தான்; அவ்வளவு சந்தோசமா இருக்கும் அது” என நினைத்து உப்பிப் போனார் ரத்தினவேல்.
தூக்குப் பாத்திரத்தில் கம்பங் கஞ்சியில் பெருவிரல் தண்டி வெல்லக்கட்டி; ஒன்னோ ரெண்டோ மிதக்க விட்டார்கள். மதியத்திற்குள் கரைந்து தித்திப்பு வெந்தயக்களி ஆகியிருக்கும். அபூர்வமாய்க் குதிரைவாலிச் சோறு, வரகுச் சோறுடன் பருப்புக் குழம்பு.
அவர்களுடன் வரும் வெள்ளையன் தூக்குப் பாத்திரத்தில் வெல்லக்கட்டியை ஊறவைத்து வருவது மட்டுமில்லை, டவுசர் பையில் நாலைந்து திணித்துக் கொண்டான். டவுசர் பையும் வாயும் எப்போதும் குரங்குவாய் போல் புடைத்திருக்கும் வெல்லக்கட்டி வெள்ளையன் என்று பேராகிவிட்டிருந்தது. பள்ளிப் படிப்பு முடிந்து வாத்தியார் ஆன பிற்பாடும் அந்தக் பெயர் போகவில்லை. வெல்லக்கட்டி வாத்தியார் என்றார்கள். பிறகு அப்படிக் கூப்பிட்டால்தான் திரும்பிப் பார்த்தார்.
பூப்பெய்தல் பெண்ணுக்கு ஒரு ’பெரு வினை’. எட்டாம் வகுப்பு தொடக்கத்தில் துளசிநாயகி பருவத்துக்கு வந்தாள்; படித்தது போதும் என்று நிறுத்தி விட்டாள் அம்மா. அம்மாவின் சக்களத்திகள் இல்லை; சக்களத்தி பெற்ற மகன் அண்ணணல்ல. படிப்புக்கு மறிப்புப் போட்டது அம்மா.
அன்னம், ஆதி, நாகு பருவத்துக்கு வந்திருந்தாலும் குள்ளக்காளிகள் போல் இருந்ததால் படிப்பைத் தொடர்ந்தனர். துளசி நல்ல வளர்த்தி. வாளிப்பு, மாதுளைச் சிவப்பு.பெரியவளாகத் தெரிந்தாள். எந்த ஆணுடைய கண்களும் தொடரலாம் என்று அம்மா பயம் கொண்டாள்.
“களையெடுப்புக்கு வரமாட்டேன்”
முரண்டு பிடித்து அழுதாள். அழுகையும் வீறிடலுமாய் பிடிவாதம் செய்தவளை, களையெடுப்புக் காட்டுக்கு இழுத்துக்கொண்டு போனாள் அம்மா.
“பேனாக் குச்சி பிடிக்கிற கையில களைக் குச்சியைக் கொடுக்குற? சின்னப் பிள்ளைக்குக் களைக்குச்சி கையில் ஏறுமா? அவளை களைக்குக் கூட்டி வர்றதா இருந்தா, நாளையிலேருந்து நீயும் வர வேண்டாம்.”
வயசு வந்த பெண்ணாக அம்மாவுக்குத் தோன்றியவள், நிலச் சொந்தக்காரர்களுக்கு சிறு பிள்ளையாய்த் தெரிந்தாள். ஒருநாள் துளசி திட்டமாக அறிவித்தாள்.
“நா பள்ளிக்கூடம் போவேன்”
அவளிடமிருந்து இந்த முடிவு வெளியாவதற்குள் மூன்று மாதம் ஓடியிருந்தது. அந்தக்காலப் பள்ளியில் அதொன்றும் பெரிய வித்தையில்லை, கூறு கிள்ளுகிறமாதிரி விலக்கிவைத்து விட மாட்டார்கள். எத்தனை காலம் சென்றாலும் வகுப்பில் உள்ளே போகலாம், வரலாம்.
துளசிநாயகியைப் பொறுத்தவரை மகிழ்வின் மரணம் எப்போதும் அடுத்த அறையின் மூலையில் காத்திருந்தது. துயரத்தின் போர்வையைத் தூக்கி விரித்து கவித்துவிடக் காத்து நின்றது. நம்பமுடியாதபடி பள்ளியில் சிநேகிதங்கள் பட்டொளி வீசும் சூரியன்களாய் காத்திருந்தனர். “வந்திட்டயா தாயி” கொண்டாடித் தீர்த்தனர். சிநேகிதிகள் குலவை போட்டுக் கும்மியடித்து கோலாட்டம் போடாதது பாக்கி. மிச்சம் எல்லாத்தையும் நடத்தி, அந்த வருசம் அவளைப் பள்ளி மாணவ தலைவியாகத் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.
“கூடப் படிச்ச சிநேகிதிகளைப் பாக்கப் பாக்க எனக்கு அழுகை வந்துச்சி, எப்பேர்ப்பட்ட கொடுமையான நரகத்திலிருந்து தப்பிச்சேன். அன்னைக்கு முழுசும் பெஞ்சுக்கடியில் தலை கவிந்து அழுது தீத்திட்டேன்.”
துளசிநாயகி போராடி வகுப்புக்குள் கால்வைக்காமல் போயிருந்தால் துயங்களின் எல்லை தகர்ந்திருக்காது; இன்றைக்கு இந்த சந்திப்பு வாய்த்திருக்காது. வெள்ளம் நிரம்பி கரைபுரண்டு ஓடி ஆளைச் சுழற்றி இழுத்த காலத்திலும் ரத்தின்வேலுக்கு ஈதொன்றும் தெரியவில்லை. இதுபற்றி ஒருதுளியும் அறியும் வாய்ப்பில்லை.
“எனக்குத் தெரியாதே” என்றார் வெள்ளந்தியாக.
சனிக்கிழமை மாணவர் சங்கக் கூட்டம்; அரை நாள் பள்ளிக்கூடம் . அது ஒரு சங்கமம்; தெற்கில் இரண்டு கிலோமீட்டர் பூதலூர், அதே தூரத்தில் கிழக்கில் பூசாரிப்பட்டி, சங்கராபுரம் அத்தனை வெளியூர்களிலிருந்தும் மாணவ மனசுகள் துள்ளாட்டம் போட்டு போட்டுச் சங்கமம் ஆவார்கள். ஐந்து நரகங்கள் முடிவில் அவர்களுக்கு ஒரு ஆறாவது சொர்க்கம்! சனிக்கிழமைச் சொர்க்கத்தில் கூடினர். கட்டிப்போட்ட சங்கிலிகள் அரைநாளில் மாயமாய் மறைய மனசுகள் விடுதலை பெற்றுக் கொள்ளும் வசந்த தரிசனம்.
அது பூமிப் பிரதேசம் அல்ல அவர்களுக்கு. ஒரு பாடல், ஒரு கதை, அழிப்பாங் கதை, கோமாளிப் பேச்சு, சிறு நாடகம், வேடிக்கைப் பாட்டு, ஒயிலாட்டம், கும்மி – விதவிதமான வானவில் கருக்கொள்ளும் வானமாக மாறிப்போகும். இளமனசுகளினது தங்குதடையில்லா கலைநதி பெருக்கெடுத்து ஓடுவதை, ஆச்சரியம் மீதூற ஆசிரியர்கள், பெற்றோர்கள் கவனித்துக் கொண்டிருந்தனர்.
அன்றைக்கு பெற்றோர்களுக்கு அனுமதி.
“ஏ யப்பா, இவ்வளவு தண்ணியா இந்த நதியில்”
வாய்பிளந்து, மனம் அகலித்துக் கைதட்டுவார்கள். சின்னஞ்சிறிய தூக்கணாங் குருவிகள் ஒரு கலைக் கூட்டை எவ்வளவு பிரமாதமாக நெய்கின்றன என பிரமிப்பு. “நம்ம பிள்ளைகளா?” பார்த்தோருக்கு மூச்சடைப்பானது. அது பிள்ளைகளின் நதி; அவர்களின் அணை; அவர்களின் மதகு; காலை பத்தரை முதல் ஒரு மணி வரை அவர்களின் வயல்; மாணவர் சங்கக் கூட்டம் என்ற பெருவயலில் பெருத்த வெள்ளாமை.
எப்பேர்ப்பட்ட வெயிலானாலும் பையன்கள் தாமசிக்க மாட்டார்கள்.கூட்டம் முடிந்தும் கையில் கொண்டுபோனதை சாப்பிட்டு ஊர் திரும்பி விடுவார்கள். பெண் பிள்ளைகளுக்கு சிவகாமி வீடிருந்தது. மீனாட்சிபுரத்தின் பிரசித்தி பெற்ற “ரோட்டுக் கடை” சிவகாமி. அவள் வீட்டில் மதியச் சாப்பாட்டுக்குத் தாமசித்து, வெயில்தாழ ஊர் திரும்புதல்.
ரத்தினவேலின் பாட்டிவீடு கடந்து கடைசியிலிருந்தது சிவகாமி வீடு; மதியப் பின்னேரம் வாசல் வெளிச்சத்தில் முக்காலியில் ‘நோட்புக்’ வைத்து எழுதிக் கொண்டிருந்தான். இப்போது ஒரு கலைஞனாய் முக்காலியை உற்று நோக்குகிறான். மன்னர்காலத்து சப்ர மஞ்சக் கட்டில் கால்கல் போல் முக்காலியின் கால்கள், பலகை அத்தனை நேர்த்தியாய் கடைசல் செய்யப் பாட்டிருந்தன. அது உயிருடன் இருந்தவரை உருவாக்கிய தச்சுக் கலைஞனும் அதில் ரத்தமும் ஜீவனுமாய் வாழ்ந்து கொண்டிருந்தான்.
ரத்தின்வேல் முன் ‘தொப்பென்று’ விழுந்தது ஒரு பை. நிமிர்ந்து பார்க்கையில் “உங்க சித்தப்பா கொடுத்துட்டுப் போனார்” சொல்லியபடி ஐந்தரையடியில் பூத்த சூரியகாந்தி. பின்னால் ஒரு பூக்காடு வெளியில்; மதுரையிலிருந்த சித்தப்பா ஊருக்குப் போகிறபோது, ஏதாவது வாங்கிக் கொண்டு வந்து ரோட்டுக் கடையில் கொடுத்துப் போவார். வழக்கமாய் சிவகாமி கொண்டு வந்து தருவாள். இன்றைக்கு முறை மாறி, எதிரில் ஏற்றிவைத்த சுடரொளியாய் துளசி. ஆச்சரியதுடன் ஏறிட்டான்.
அன்றிரவு முழுதும் அந்த நிலா அவனது வானில் அலைந்துகொண்டிருந்தது. மெதுமெதுவாய் கனவுகளைக் கூசிக் கொண்டு ஊர்ந்தது. பிணக்கும் ஊடலும் பொய்க்கோபமும் கற்பனையில் வலம் வந்தன. அன்றிரவின் அந்த கனவுப் பாதை, அவன் வாசித்த வாரப் பத்திரிக்கையில் ஒரு காதல்கதை போட்டுத்தந்த எல்லை அளவில் முடிந்தது.
“உங்களைப் பார்க்க ஏலாது என்று சொன்னார்கள்”
துளசிநாயகியிடம் நேருக்குநேர் தெரிவித்தார் ரத்தினவேல்.
“என்ன சொன்னாங்க?”
அவர்கள் என்ன சொன்னார்களோ அந்த வார்த்தைகளை வெளிப்படுத்த துணிவில்லை. சொல்லாத சேதி துளசிக்குப் புரிந்தது.
“நா நல்லாத்தான இருக்கேன். கல்லுக் குத்தியாட்டம்”
“இத்தனை காலம் இருந்திருக்கக் கூடாது”என்றார் திடீரென.
68 ஆண்டுகள் ஒரு பெண்ணாய் வாழ்ந்ததின் சூட்டுத் தழும்புகள் பேசியது.
ஓவியர் மென்சிரிப்பில் சொன்னார் “இவ்வளவு காலம் வாழ்ந்ததினாலதான், இப்ப பாத்துக்கிட்டோம்.”
“ஆமா, இல்ல”
தன்னிலை உணர்ந்து மெல்லமாய்ச் சிரித்தார்.
அவனது ஓவிய நடமாட்டம் பள்ளிப் பருவச் சிநேகிதத்துக்குத் தெரியாததில் வியப்பில்லை; அவன் ஒரு ஓவியனாவான் என அவனே நினைத்துப் பார்த்திருக்கமுடியாது. காலம் ஒவ்வொரு உயிரையும் உச்சிக்குடுமியைப் பிடித்துச் சுழற்றி எங்கெங்கோ கொண்டுபோய் ஊன்றி முளைக்க வைக்கிறது.
துளசிநாயகி என்ற குத்துக் கல் என்னைக்கோ இல்லாமல் போய்விட்டது என்று சேதி பகிர்ந்தவன் பள்ளி நண்பன்; ஆசிரியர் பணியாற்றி ஓய்வு பெற்ற கந்தசாமி.
கந்தசாமி வாத்தியார் உத்தியோகம் பார்த்ததில்லை; அவனுக்கு ஆசிரியர் வேலை ஒரு வரம்; வகுப்பில் அதிகம் தங்க மாட்டான். பிள்ளைகள் வருகை குறைந்த தொடக்கப் பள்ளிகளைக் குறிவைத்து வரம் வாங்கிக் கொள்வான். யாரேனும் ஒரு ஆசிரியரை அணைவாக வைத்துக்கொள்வது அவன் பழக்கம், வகுப்பைப் பார்க்கச் சொல்லிவிட்டு சைக்கிளில் கிளம்பி விடுவான். கல்யாணப் புரோக்கர் வேலை.
புரோக்கர் தொழில் பல சம்பளம் கொட்டும் வேலை.பணியிலிருந்த காலத்தில் யார் எங்கெங்கு பணியிலிருக்கிறார்கள் என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாது. தெரிய வேண்டிய அவசியமுமில்லை. ஆசிரிய சமுதாயத்தை விட, தொழில்செய்வதற்கு ஏமாற்றுதலுக்குரிய வெகுமக்கள் கூட்டம் அவசியப்படுகிறது. அதுபற்றி அவனுக்குக் கவலையில்லை.
அவன் நாக்கில் புரளும் எந்தவொரு சொல்லும் உண்மையானது அல்ல.
”யாரு அவரா?” கேட்டுவிட்டு துளசிநாயகி பெலமாகச் சிரித்தார்.
“அவர் சொந்த ஊரில தான நா ஏழு வருசம் வேலை பாத்தேன். அங்க இருந்து தான கடைசியா ஓய்வு வாங்குனேன்”
ஓய்வு பெற்ற அடுத்த வருசம் துளசிநாயகி இறந்து போனதாக கூசாமல் சொன்னான் கந்தசாமி. செத்துப் போய்விட்ட ஒரு ஆத்மாவுடன் ஓவியருடைய உரையாடல் நிகழ்ந்து கொண்டிருந்தது.
கந்தவேல்புரம் தாண்டி மூன்று கிலோ மீட்டரில் கீழூர். கீழூரில் தான் துளசிநாயகியும் ஆதியும் ஆசிரியைகளாக தொடக்கத்தில் பணியாற்றினார்கள். அவர்களைப் பார்த்துப் போகவேண்டுமென்ற நினைப்பு தோன்றினாலும், எடுத்துச் செய்ய முடியாமல் அழிந்தது காலம். இயலாமையை வெளிப்படுத்திய போது, அதுக்கும் ஒரு பதில் டீச்சரிடமிருந்து வெளிப்பட்டது.
“அதான் மொத்தமாச் சேத்துப் பாத்துக் கிட்டமே”
பட்டியல் போட்டு விசாரிக்கலானர் ரத்தினவேல்.
“சிவகாமி இருக்காங்களா?” ரத்தினவேலுக்குத் தெரியவேண்டி இருந்தது.
“சாட்டை அவரைக்காய் மாதிரி வாட்டசாட்டமா நிமிந்து இருப்பா. அப்படி இருக்கிறதே பெண்ணுக்கு கேடுதான. சிவகாமியைப் படிக்கவிடவில்லை.கல்யாணம் பண்ணி வச்சிட்டாரு அவங்க அய்யா.”
”இப்ப வர்றாங்களா?”
”அவ சாத்தூரில் இருக்கா. பேரன் பேத்தின்னு ஏகப்பட்ட குழந்தைக. எப்பவாவது இந்தப்பக்கம் கார் போட்டு வருவா.வர்றபோது ஒரு பேரனோ, பேத்தியோ அவ கையில.”
“துளசிமணியைப் பாத்தீங்களா, எப்படி இருக்கார்?”
“வகுப்பில கடலை மிட்டாய் வியாபாரம் பண்ணுனாரே, அந்தத் துளசிமணிய கேக்குறீங்களா” திருப்பிக் கேட்டார் துளசி.
“ஒளிச்சி ஒளிச்சிப் பண்ணுவாரு.காந்திமதி டீச்சர் கண்டுக்கிட்டு பெரம்புல சாத்துனாங்க இல்லே.” லேசாய்ச் சிரிப்பு.
“இப்ப தூத்துக்குடியில அவன் இருக்கான்னு கேள்வி.”
“ஒன்னே ஒன்னு எனக்கு நல்லா ஞாபகமிருக்கு.”
அவர் காதுகளைத் திறந்துவைத்தார்.பிஸ்கட் போடும் நாய்க்குட்டி போல் தாவிப் பிடிக்கத் தயாரானார் ரத்தினவேல்.
“ஏழாப்பு படிக்கையிலே நீங்க மதுரைக்குப் படிக்கப் போகனும்னு துடிச்சீங்க. ஏழாம் வகுப்பு முடியும் நேரத்தில் அது நடந்தது. ‘நா மதுரைக்குப் படிக்கப் போறேன். டி.சி வேனுன்னு பிடிசாதனையா நின்னீங்க. தேங்காய்ச்சில்லு பல் தெரியச் சிரித்த காந்திமதி நாக்கைத் துருத்திக்கிட்டு அடிக்க வந்தாங்க.
“படவா, ராஸ்கல், நீ போவே, நாங்க விட்டிருவமா.நான் பத்தும் பதினைஞ்சும் எண்ணத்தை வச்சிக்கிட்டு பிள்ளைக இல்லாம குமைஞ்சி போய் நிக்கேன்.”
சத்தம் போட்டார்.
“அப்ப சுந்தரிக்கு மட்டும் கொடுத்தீங்க.”
“அவ சடங்காயிட்டா கொடுத்தேன். நீ சடங்காகு.”
வகுப்பு சிரித்துக் குலுங்கிற்று. டீச்சர் ஆத்திரத்திலிருந்தார்.
“அந்தம்மா சொன்னதைக் கேட்டு பொம்பிள்ளைகளுக்கு வெக்கமாகிருச்சி.நானெல்லாம் பெஞ்சுக்கடியில தலையைக் குனிஞ்சிட்டு சிரிச்சேன். இந்த டீச்சர் இவ்வளவு தெறப்பாப் பேசீட்டாங்களேன்னு”
“அப்படிக் கேட்டப்ப நீங்க இருந்தீங்களா?”
“எல்லாம் இருந்தோம். ரொம்ப நல்லாச் சொன்னாரில்ல டீச்சர்?”
மீண்டும் மெல்லீசாய்ச் சிரிப்புக் கீற்று.
“நா ஒரு ஊசி கூட போட்டுக்கிட்டது கெடையாது”
ஆறு மாசம் முன்பு இடுப்பு எலும்பு தேய்மானம் ஆகிவிட்டது. நடக்கையில், எழுந்திருக்கையில், புரண்டுபடுக்கையில் ’சரட் சரட்டென்று’ வலி. மகன் பார்த்திபன் மதுரையில் எலும்பு மருத்துவரிடம் கூட்டிப் போனார். எக்ஸ்ரே, ஸ்கேன் எல்லாச் சோதனைகளும் பார்த்ததில் இடுப்பில் தண்டுவடம் சேருமிடத்தில் தேய்மானம்.
“அப்பத்தான் முதல் ஊசி போட்டது.”
எல்லாப் பரிசோதனைகளும் செய்து, எலும்பு மருத்துவ நிபுணர் சொன்னார்.
“இடுப்பு எலும்பு தேய்மானம் ஆகிருக்கு. வயசு கூடக்கூட இன்னும் தேய்மானம் கூடிக்கொண்டே போகும்.நிரந்தரமா இடுப்பு பெல்ட் மாட்டிக்கீறனும்.”
“இப்படியே எவ்வளவு காலம் முடியுதோ அவ்வளவு காலம் இருந்துக்குவேன், பெல்ட் மாட்டிக்கீறப் போறதில்ல. மாட்டேன்”
பிடிவாதமாய் இருந்தார். பள்ளிக்கூடம் போயிருவாளா பாத்துறேன் என்று திமிர்கொண்டு விரட்டியடித்த அண்ணனை எதிர்த்து சொந்தமாக நிமிர்ந்து வாழ்ந்தவர். ஒரு பெல்ட் என்னைக் கட்டுப்படுத்தக் கூடுமா என்று நினைத்திருக்கலாம்.
“கேட்கிறதுக்கு நல்லாத்தான் இருக்கு.இப்ப யார் டாக்டர், யார் நோயாளின்னு தீர்மானிக்கனுங்கிறான். இதுகாலமும் நீங்க சொல்றதை நாங்க கேட்டு நடந்து வந்தோம்.இனிமே டாக்டர் சொல்றதை நீங்க செய்யணும்.”
அவர் டாக்டரா நீங்க டாக்டரா என்று மகன் பார்த்திபன் நேருக்குநேராகக் கேட்டான். அதன் பிறகு பெலட் மாட்டிக்கொண்டது.
நடந்து போகையில் ஒருச்சாய்த்து தாங்கித் தாங்கி நடந்தார்.
“இப்பவும் மாட்டிக்கிட்டுதான் நடக்கிறேன்.”
படிக்கிற காலத்தில் தாவணி பாவாடையில் கண்ட ஆலிலை வயிறு, ‘பெல்ட்’ அணிந்ததால் கொஞ்சம் புடைத்துத் தெரிந்தது.இடுப்பு அகலிப்பாகி இருந்தது.மருமகள் பார்கவி ஒரு தட்டில் வேகவைத்த துவரங்காய், மொச்சைக்காய் கொண்டுவந்து வைத்தார்;
“சாப்பிடுங்க” என்றார் துளசி.
“இப்ப ரகசியம் வெளிப்பட்டிருச்சி“ சிரித்தார் ரத்தினவேல்.
”என்ன?” துளைநாயகி ஏறிடல்.
”நீங்க ஏன் ஒரு ஊசி கூடப் போட்டதில்லங்கிற ரகசியம்”
அந்த உடம்பு வயோதிகத்தை எதிர்த்து வளர்ந்தது எதனால் என சூட்சுமம் புரிந்தது. உணவே மருந்து;
அவர் துளசிநாயகியிடம் ஒன்று கேட்க மிச்சமிருந்தது.
“இன்னொரு நாள் நா வந்து ஒங்களப் பாக்கணும்.” என்றார்.
“சரி வாங்க” என்றார் துளசி. ஏன் எதற்கு என ஒருதுளிக் கேள்வியில்லை.
மகன் பார்த்திபன், மருமகள் பார்கவியின் வியப்பான முகங்கள் ஏறிட்டன.
“ஒங்கள ஒரு ஓவியம் வரையனும், இப்ப தற்செயலாப் புறப்பட்டு வந்துட்டேன், எதுவும் எடுத்திட்டு வரல.”
துளசியை சாய்மானமாய் உட்காரவைத்துப் படம் வரைந்து கொடுத்துவிடலாம்.
“நீங்க செய்ங்க, நீங்க ஓவியர்” சொல்லிச் சிரித்தார்.
வீட்டுக்குள் உட்கார்ந்திருந்த போது வேக்காடு, மின்விசிறிகள் ஓடினாலும் வெக்கை. வீதி கடந்து ஊர் முகனைக்குப் போனவேளை ஓவியனுக்கு வேறொரு உலகம் காத்திருந்தது. ஊரைச் சுற்றி ஆதாளி போட்ட இயற்கை; நிறைய வேலை இருக்கிறது வா என கண்சிமிட்டி அழைத்தது.
நீண்ட கூந்தலைத் தட்டி வாரி முடித்த குமரி போல, நெடிய பகல் அந்திப் பொழுதை வாரிச் சூடியிருந்தது.
சுற்றிலும் கொழிக்கும் பச்சையம் ஒரு ஓவியம்; வண்ணங்களை மாயக் கலவை செய்து வீசும் சாயந்தரம் ஒரு ஓவியம்; ’தொர தொரவென்று‘ ஒரே சீராய் துடுப்புகள் அசைய தாளம் அடித்துப் பறக்கும் நாரைகள் ஒரு ஓவியம்; கூடடையும் பறவையினத்தின் இசை ஒரு சொக்கு. பால் குடித்த குழந்தை எதுக்களித்து கொட்டுவது போல் இதயத்தின் கட்டளையை நிறைவேற்ற தலைகீழாய் நிற்கும் தூரிகை உள்ளருந்தியதைக் கொட்டத் துடிக்கிறது.
புல்வெளி சூடிக் கொண்ட பூக்கள் போல் உதிர்ந்திருந்தன பழுத்த வேப்பிலைகள்; வெள்ளை வெள்ளையாய்ப் பூத்துத் தொங்கும் எள்ளுச் செடிகள், விண்மீன்களைச் வீசியடித்ததுபோல் நின்றாடும் கொத்தமல்லிக்காடு, இந்த ஆகாயத்தின் கீழ் நீயாநானா என்று மேலே வானத்துக்கு போட்டிப் போட்டு ஆடியது. சாயந்திரக் காற்றில் ஒரே சீராய் வெண்ணிற அலைகள் போல் அசைவு.
“நீ இதுகாலமும் நகரமயத்தில் கண்டிராத புதிய நிலக்காட்சி. வா மகனே வா” எனக் காத்திருந்தன புஞ்சைக்காடுகள்.
நெற்றிக்குப் போட்டிட்டுக் கொண்டதுபோல் மேற்கில் மஞ்சளும் சிவப்பும் முயங்கிய சூரிய வட்டத்தில் சாலையின் இருமருங்கும் செழித்த தளிர், பயிர், பச்சை எல்லாமும் ருதுவாகிப் பளபளத்தது. கொஞ்சப் பொழுதில் நிலவொளி நீவும் பயிர்கள் மினுமினுப்புக் கொண்டுவிடும்.
ஒரு சூரிய காந்திப்புஞ்சை கருகி தலை கவிழ்ந்திருந்தது.
“ஏந் தம்பி இப்படி இருக்கு?” ஓவியனுக்குத் தெரிய வேண்டியிருந்தது.
ஒருவேளை மனுச வெக்கை பட்டிருக்குமோ? மனுச குணம் பொல்லாதது. மனுச வெக்கையால் நிறையத் தளிரும் குருத்தும் கருகிப் போயிருக்கின்றன. கருகிய சூரியகாந்திப் புஞ்சையிடமிருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய உண்டு என்பதாய் சிறுவனைப் பார்த்தார்.
சாலையின் வலது பக்கம் பெரிய வட்டக்கிணறு. மேலுறை வரை நீரலைகள். பையன்கள் தண்ணீரில் குதித்து ‘சளப்’பென்று வாகரையில் தெறித்தது. துணிகளுக்கு அரணாயிருந்த இருந்த சிறுவன் சொன்னான் “அது விளைஞ்சிருச்சி. விளைஞ்சாச்சின்னா அப்படி கருத்து தலை கவிந்திரும்”
தண்ணீர் தேசத்தின் வயல்வெளிகளை அந்த ஓவியன் வரைந்துள்ளான். தலைகீழாய் வணங்கிக் கொண்டிருக்கும் நெற்கதிர்கள் தீட்டியிருக்கிறான். மானாவாரியில் சூரியகாந்தி இம்மாதிரி கருகிச் சோடை பிடித்துப் போயிருக்கும் என்பது தூரிகை தீட்டாப் புதிய காட்சி.
மஞ்சக் குளியலாய் சாலையின் வலப்பக்கம் பளிச்சிடும் சூரியகாந்திப் புஞ்சைகளைக் காட்டி அதே இளையவன் பேசினான்
“இப்ப பப்பளா பளபளான்னு’ ஆட்டம் போடுதுங்க, அதுக ஆயுசு ஒரே மாசம். ’குமரி ஒரு பிள்ளை, கோடி ஒரு வெள்ளைங்கிற’ மாதிரி பெறகு பாக்கச் சகிக்காது.”
இந்த வயசிலும் மூத்த அனுபவச் சொலவம் குடிகொண்டுள்ள சிறுபயலை வியப்போடு நோக்கினார்.
சாயங்கால நேரம்; மேற்கு மேகம் திறந்து ‘சர்ரென்று’ பாய்ந்த வெயிலில் கொழுத்த புஞ்சைக் காட்டின் பச்சைப் பயிர்கள் மினுக்கம் கொண்டன. பாலியகாலத் தோழி அமர்ந்திருந்த அறை, அந்தச் சிரிப்பு சாயங்கால வெயிலின் புஞ்சையாய் நெஞ்சில் தகதகத்துக் கொண்டிருந்ததது.
“அன்னைக்கு அம்மாகிட்ட பேசினனில்ல ரத்தினவேல். அம்மா இருக்காங்களா?”
”டீச்சர் தூங்குறாங்க“
பிற்பகல் நான்கு மணி. மகன் பார்த்திபனிடம் கைபேசியிருந்தது.
”பள்ளிக் காலத்தின் நினைவுகளைப் பதிவு பண்ணனும்”
“யு டியூப், பேஸ் புக்ல போடுவீங்களா?”
“இல்ல, பதிவு செய்றத சி.டி.போட்டு எனக்கு ஒன்னு, ஒங்களுக்கு ஒன்னு ஞாபகார்த்தமா வச்சிக்கிறது. அம்மாவை ஓவியமும் வரைஞ்சி தரனும்”
“அம்மாவுக்கு வெவரம் சொன்னீங்களா?”
“அன்னைக்கு கேக்குறப்போ நீங்க இருந்தீங்களே.”
புதன்கிழமை வருவதாகச் சொல்லியிருந்தார். அதை உறுதிப் படுத்திக் கொள்ள மகனிடம் கைபேசியில் தொடர்பெடுத்தார்.
“ரெம்ப நேரத்துக்குக் குறுக்குத் தாங்காது. ஓவியம் வரையறுதுன்னா”
“ஓவியத்துக்கு உட்காறது அவங்களுக்கு முடியாதுன்னா வேண்டாம். ஒரு போட்டோ எடுத்துக்கீறலாம்; அதுக்குத்தான் கூடவே படம் எடுக்கிறவரும் வாறாரு. அதை வச்சி அவங்கள வரைஞ்சிடலாம்.
“அம்மா கிட்டச் சொல்றேன்”
அவர் வாயெடுப்பதற்குள் கைபேசி அணைக்கப்பட்டது. உலகமுழுசும் தொட்டுப்பரவும் நவீனத் தகவல் பரிமாற்ற சாதனம் துளசிநாயகி கையில் இன்னும் ஏன் ஏறவில்லை? அவர் கைவசம் ஒரு பேசி வைத்திருந்தால், அவரிடமே உறுதிப் படுத்தியிருக்கலாம். அன்றைக்கு எவ்வளவு வெளிப்படையாகப் பேசினார்; மூன்றுமணிப் பொழுது – மொத்த வாழ்வையும் கொட்டிக் குவித்திருந்தது அந்த மூன்று மணிப் பொழுது. வாழ்க்கை ஏடுகளை பக்கம் பக்கமாய்ப் புரட்டி திறப்பாய் வாசிக்கத் தந்தார் துளசிநாயகி. சரளமாக யாதொரு தடையுமின்றி எந்தக் காற்றின் அலைக்கழிப்புமிலாது மழை அடித்தது. ஒரு சுயமாகப் மனுசியைச் சந்தித்ததில் வியந்துபோய்ப் நின்றார்.
ஒளிப்பதிவுக் கருவியுடன் புறப்பட்டு பூதலூர் போய் காரில் இறங்கியபோது, வீடு பூட்டியிருந்தது. எதிர்வீட்டு அம்மா பதிலோடு காத்திருந்தார்
“அவங்க சின்ன மகன் ஊருக்கு ‘திருநெல்வெலிக்கு’ போயிருக்காங்க, நாளெடுக்கும்.”
“மகன் பார்த்திபன்?”
“அவருதான் கூட்டிட்டுப் போறார்”
ஏன் புறப்பட்டுப் போனார்? அவர் ஒன்றும் சொல்லிவிட்டுப் போகலையா? அதற்கான பதில்கள் எதிர் வீட்டு அம்மாவிடமில்லை. பதிலேதும் தாராத வீடு மவுனம் கொண்டு அவரைப் பார்த்துக் கொண்டிருந்தது.
ஐம்பத்தி நான்கு வருசங்களுக்கு முந்திய நினைவுகளின் குடையை ஏந்தி, ரத்தினவேல் வீட்டுவாசலில் யோசிப்புடன் நின்றார்.
தொடர்ச்சியாய் ஆணின் கீழே அமுக்குப்பட்ட வாழ்க்கை பிதுக்கிக் கொண்டு வெளிப்பட்டிருந்த முக்கியமான பக்கத்தை – வாசிக்கத் தவறிப் போனார் ரத்தினவேல்.
“பள்ளிக்கூடம் போயிருவாளா பாக்குறேன்”.
மீனாட்சிபுரம் போகும் பாதையில் ருத்திரமூர்த்தியாய் மறித்து நின்ற அண்ணன். அண்ணன் மறிப்பிலிருந்து தப்பிக்க தங்கச்சிக்கு அப்போது துணிச்சலிருந்தது.
– கணையாழி (டிசம்பர் 2020)