வாசம் இழந்த மலர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 11, 2015
பார்வையிட்டோர்: 7,271 
 
 

அன்று என் கையைப்பிடித்து என்ன அழகான கைகள் உனக்கு என்று சொன்ன நீங்களா, என் கையைப்பிடித்து இழுத்து கீழே தள்ளினீர்கள், விழுந்து தலையில் அடிபட்டு மயங்கி கிடந்த என்னை சிறிதும் லட்சியம் செய்யாமல் வேகமாக சென்றுவிட்டீர்களே, கொஞ்சம் கூட படிப்பறிவு இல்லாமல் கிராமத்தில் இருந்து உங்களை நம்பி வந்த எனக்கு நீங்கள் கொடுத்த தண்டனை மிக பயங்கரமல்லவா? உங்களுடன் இருபது வருடங்கள் வாழ்ந்து நீங்களே தெய்வம் என நினைத்துக்கொண்டிருக்கும் எனக்கு இப்பேர்ப்பட்ட தண்டனை தேவையா?

அதன் பின் நீங்கள் என்னிடம் வந்து எத்தனை முறை மன்னிப்பு கேட்டும் என் மனம் மட்டும் மாறவே இல்லை தொ¢யுமா? அப்பொழுது கூட நீங்கள் என்னை பார்த்து கண் கலங்கி என்னை மன்னித்து விடு என்று அழுதபோது பாழாய்ப்போன இந்த மனம் கரைந்ததாலேயே நான் ஒரு சிரிப்பு சிரித்தேன், என் சிரிப்பை உற்று பார்த்திருந்தீர்கள் என்றால் அந்த சிரிப்பிலே உயிர் இருந்திருக்காது என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். இனி என்ன சொல்லி என்ன பயன் எனக்கு உங்களை விட்டால் வேறு கதி! ஒரு வேளை இதனால் கூட என் மனம் அன்று நீங்கள் கெஞ்சியபோது இளகியிருக்கலாம்.ஆனால் என் மனதின் மதிப்பிலிருந்து அன்று சரிந்தீர்களே, அதன் பின்னால் உங்களை என்னால் மனதுக்குள் வைத்து பூஜிக்க முடியாமல் போய்விட்டதே.

எது அன்று உங்களை மிருகமாக்கியது, உங்களது பணத்தை நான் கை மறதியாய் விட்டுவிட்டு வந்துவிட்டதாலா? கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், நாம் இருவரும்தானே அன்று பாங்குக்கு போனோம், சேர்ந்தே அக்கவுண்ட்ஸ் ஆரம்பிக்கலாம் என்று என்னையும் படிப்பறிவு இல்லாதவளாய் இருந்தாலும் சேர்த்து ஆரம்பித்தீர்கள். சிறிது காலம் ஓடியதும் அதுவெல்லாம் வேண்டாம் வா என்னோடு என்று கூட்டிக்கொண்டு போய் அந்தபணத்தை இருவரும் கையெழுத்து போட்டு எடுத்து ரொம்ப நம்பிக்கையாய் என் கையில் கொடுத்து கமலா இந்த பணத்தை உன் கையிலே வச்சிரு என்று தந்து, என்னை கூட்டிக்கொண்டு ஓட்டலுக்கெல்லாம் சென்று நான் கேட்டதெல்லாம் வாங்கிக்கொடுத்து சந்தோசப்படுத்தினீர்கள், மாலை வீடு வந்தவுடன் அந்த பேக் எங்கே? என்று கேட்டவுடன் உங்களுடன் இருந்த சந்தோசத்தில் இருந்த நான் அந்த கைப்பையை எங்கே வைத்தேன் என்பதை மறந்துவிட்டேன் என்பதை சொன்னவுடன், அப்பா ..அன்றுதான் உங்களின் அந்த கோபத்தை கண்டேன். அப்படி ஒரு கோபம், பணம் தொலைந்துவிட்டது என்றவுடன் என் கையை பிடித்து ஒரே இழுப்பு, அப்படியே சென்று விழுந்தேன். அப்பா என் ஆயுளுக்கும் மறக்க மாட்டேன்.

ஒரு லட்சத்தை தொலத்துவிட்டாயடி நாயே ! என்ன பேச்சு, அந்த ஒரு லட்சம் நம் பணமா? இதைப்போலத்தானே அன்று தொலைத்த அந்த பெரியவருக்கும் இருந்திருக்கும். அந்தப்பணம் நமக்கு வேண்டாம் என்று சொன்னவுடன் என்ன சொன்னீர்கள், கமலா அந்தப்பணம் நமக்கு வேண்டாம், இப்பொழுதே கொடுத்தால் அவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள் கொஞ்ச காலம் போகட்டும் இப்பொழுதே பாங்கியில் போட்டு விடலாம், என் மீது உனக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் நம் இருவரின் பேரிலேயே போடலாம் என்றுதானே சொல்லி அந்த பாங்கில் போட்டோம். அதற்குள் உங்கள் மனம் மாறிவிட்டதா? வா என்று பாங்கியில் அந்த பணத்தை எடுக்க என்ன அவசரம் வந்துவிட்டது

“என்ன கொண்டு வந்தாய் இழப்பதற்கு” இது கீதையின் உபதேசமல்லவா? நம் பணம் போயிருந்தாலும் உங்களின் கோபத்தை நான் மனதார ஏற்று கொண்டிருப்பேன். அந்த பெரியவர் தன் மகளின் கல்யாணத்துக்கு சிறுக சிறுக சேர்த்து வைத்து உங்களை பெரிய மனிதன் என்று நம்பி கையில் கொடுத்து வைக்க, நீங்கள் அவர் கணக்கில் சேர்த்து வைத்திருப்பதாக சொல்லி, பின் அந்த பணத்தை எடுத்து, அவரிடம் கொடுத்து அதிக வட்டி ஆசையை தூண்டி ஒரு ஏலச்சீட்டுக்காரனிடம் போடச்சொல்லி அவனை நீங்களே ஒடிப்போக வைத்து அந்தப்பணத்தை நீங்கள் வைத்துக்கொள்ளப்பார்த்தீர்களே, இதே போலத்தானே உங்களை நம்பி வந்த நானும் நீங்கள் செய்யும் தவறுகளை சகித்துக்கொண்டிருந்தேன். இந்த பெரியவ்ருக்கு நான் பரிந்து பேசியவுடன் என்னையும் இணைத்து நாடகத்தை நடத்த பார்த்தீர்கள், அது ஆண்டவனால் மாற்றி வைக்கப்பட்டுவிட்டது.

அதற்குப்பின் நான் சமாதானம் ஆகிவிட்டேன் என்று எண்ணி அதன் பின் என்னோடு ஆறு மாதம் இருந்திருப்பீர்களா 1, திடீரென்று வெளியே சென்றவர் அதன் பின் வரவேயில்லை, நீங்கள் என்னை கை விட்டு விட்டு போய்விட்டீர்கள் என்பதை உணர கூட என் மனம் மறுத்ததே, இத்தனை வருடங்கள் உங்களோடு வாழ்ந்தும் உங்கள் நடவடிக்கைக்களைக் கொண்டாவது நான் பாடம் கற்றுக்கொண்டிருக்ககூடாதா? உங்களையே நம்பி இத்தனை காலம் வாழ்ந்துவிட்டேன், என் வயிற்றிலாவது ஒரு ஜீவன் எனக்காக பிறந்திருக்கக்கூடாதா? இறைவன் அதற்கும் எனக்கு கொடுப்பினை இல்லாமல் பண்ணிவிட்டானே.

வீட்டுக்கு சொந்தகாரர் வாடகை பாக்கிக்காக என்னை வெளியே தள்ளி கதவை சாத்தினாரே, அதுவரை ஒரு நேரம் சாப்பிட்டு என் வாழ்க்கையை கையில் பிடித்து எப்படியும் நீங்கள் என்னை தேடி வருவீர்கள் என நம்பிக்கொண்டிருந்த எனக்கு அந்த நேரம் எப்படி இருந்திருக்கும், கையில் காசும் இல்லாமல்,பசி மயக்கத்தில் இருந்த வேளையில் நான் வாழ்ந்த வீட்டு வாசல்படியில் சுருண்டு படுத்து கிடந்தேனே.

“தெய்வம் யாரையும் கைவிடுவதில்லை”நாம் அவன் மீது நம்பிக்கை வைப்பது மட்டுமே நம் கடமை. என்னால் மறைமுகமாக திருப்பி கொடுக்கப்பட்ட லட்ச ரூபாயை பெற்றிருந்த அந்தப்பெரியவர் அன்று தான் எனக்கு நன்றி சொல்ல வந்தவர் நான் படியில் சுருண்டு கிடப்பதை பார்த்து மனம் பதை பதைத்து என்னை இந்த மடத்தில் கொண்டு வந்து சேர்த்துவிட்டாரே !.

ஆறு வருடங்கள் நான் இந்த மடத்துக்கு வரும் ஏழைகளுக்கு தொண்டு செய்து இருபது வருடம் உங்கள் பணத்தில் வாழ்ந்த பாவத்தை போக்கிக்கொண்டேன். இனி நிம்மதியாய் உறங்குவேன்.

“பெரியம்மா” பெரியம்மா” தட்டி எழுப்ப முயற்சித்த குழந்தைகள், பெரியம்மா அசைவில்லாமல் இருந்ததால் மடத்தின் சாமியாரை கூட்டி வந்தனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *