கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 12, 2024
பார்வையிட்டோர்: 756 
 
 

“நம்பிக்கையில்லேன்னா இதுங்கெல்லாம் ஏன் இங்க வருதுங்க?”

மூர்த்தி அந்த கட்டடத்தின் உள்ளே நுழையும்போது, யாரோ யாரையோ சொல்லிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. மூன்று நான்கு குடும்பங்கள் ஏற்கெனவே காத்திருந்தார்கள். வரிசையில் அடுத்திருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார். என்ன ஏதென்று விசாரித்தார். கொஞ்சம் முன்னால் வந்து போன ஒருவன் இடக்கு மடக்காக குறுக்கு கேள்விகள் கேட்டதால் பிரச்சினை என்று தெரிய வந்தது. அப்படி என்ன பிரச்சினைக்குரிய கேள்விகளை அவன் கேட்டிருப்பான் என்று தெரியவில்லை. எது எப்படியோ எல்ல்லாவற்றுக்கும் அடிப்படை ஒரு நம்பிக்கைதானே.

மூர்த்திக்கும் நம்பிக்கை கொஞ்சம்தான் இருந்தது. மூர்த்தியின் மனைவி சுமதிக்கோ கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. நம்பிக்கையை விட பயம். வரமாட்டேன் என்று சொல்லி விட்டாள். முப்பது வருடத் தாம்பத்யத்தில் மூர்த்தி சுமதியிடம் சொல்லாததே இல்லை. மாலதி விஷயம் உட்பட. இத்தனை வருடங்களுக்கு பிறகும் எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்கிறாள்.

மூர்த்தியும் கூட அங்கு வருவதாய் இல்லை. திருப்பித் திருப்பி கண்ணன் சொன்னதுதான் அவரை இங்கு வர வைத்திருக்கிறது.

கண்ணன் மூர்த்தியின் நெருங்கிய நண்பர். கண்ணன் குறித்து வந்திருந்தவர் சொன்ன நிறைய விஷயங்கள் மூர்த்திக்கு தெரியுமாதலால் அவருக்குமே போய்ப் பார்த்தாலென்ன என்று தோன்றியது.

அபுதாபியின் பனிக்காலம் ஒன்றில், ஆபீஸில் எல்லோரும் போய்விட்ட இரவு நேரத்தில் மூர்த்தி மட்டும் அன்றைக்கே போயாக வேண்டிய கடிதங்களை ஒவ்வொன்றாக ஈமெயிலில் அனுப்பிக் கொண்டிருந்தார். அவர்களுடையது மேன் பவர் சோர்ஸிங் கம்பெனி. பெரிய பெரிய ஆயில் கம்பெனிகள் கேட்கும் வேலைக்கு ஆட்களை தேடித் தருவது அவர்களின் பணி. தேர்ந்தெடுத்து தரும் ஒவ்வொரு நபருக்கும் ஒரு கமிசன் தொகை ஆயில் கம்பெனி கொடுக்கும். கடைசி ஈமெயிலை அனுப்பிவிட்டு, நாற்காலியில் நன்றாகச் சாய்ந்து  சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தபோது அலைபேசி ஒலித்தது. கண்ணன்.

கண்ணனும் மூர்த்தியும் ஒரு காலம் வரை, ஒரே ப்ளாட்டில் தங்கள் வசிப்பை பகிர்ந்து கொண்டவர்கள். அந்த ஒரு காலம், கண்ணன் திருமணம் முடித்த கையோடு, மனைவியை அழைத்து வந்த போது, முடிவுக்கு வந்தது. தனியே ஒரு பிளாட் எடுத்து கண்ணன் போன பின்னும், வாரம் ஒரு முறையாவது போனில் பேசிக் கொள்வார்கள்.

அன்றைக்கு தொலைபேசியில் பேசிய கண்ணனின் குரலில், வழக்கத்தை விட சற்று படபடப்பு.

தொலைபேசியில்  கண்ணன் சொன்ன  விஷயம் இதுதான். முருகவேள் என்று ஒருவர் அபுதாபிக்கு வந்திருக்கிறார். அணுக்கிரகம் பெற்றவர். எதிரில் வந்து அமர்பவர் பற்றிய விவரங்கள், அவர்களின் பிரச்சனைகளையும் சேர்த்து, புட்டுப் புட்டு வைக்கிறார். கண்ணன் நேற்றே போய் பார்த்து விட்டு வந்தாயிற்று. மூர்த்தியும் கண்டிப்பாகப் போய்ப் பார்க்க வேண்டும்.

மூர்த்தி எதுவும் சொல்லாமல் இந்தப் பக்கம் ‘ம்’ ‘ம்’ என்று மட்டும் சொல்லிக் கொண்டு கேட்டுக்கொண்டிருந்தார். போய்ப் பார்க்கலாமா என்று ஒரு சின்ன சலனம் தோன்றியது.

அதை வெளிக் காட்டாமல், “எல்லாம் சரி, கண்ணன்.. எந்த அளவுக்கு அவர் சொல்றதை நம்பறது, கூட, இவ்வளவு தூரம் பயணப்பட்டு வந்து, இப்படியெல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? தட்சணையா எவ்ளோ வாங்கறார்? அதை சொல்லு முதல்ல” என்றார்.

“தட்சணை ன்னு அவரா எதுவும் கேட்கறது இல்ல மூர்த்தி. வர்றவங்களா பார்த்து ஏதாவது குடுத்தா அதையும் கைநீட்டி வாங்கறதில்ல. எதிர்ல இருக்கற தட்டுல வச்சுட்டு போறாங்க”

“சரி கண்ணன். இதெல்லாம் வெறும் பம்மாத்துனு சொல்லிட்டிருப்ப நீ எப்படி அங்க போன?”

“சும்மா, பார்க்கலாம்னுதான் போனேன் மூர்த்தி, ஆனா, போய் எதிர்ல உட்கார்ந்த உடனே, ஊர்ல இப்ப நடந்துட்டுருக்கிற சொத்துத் தகராறு பத்தி அவர் சொன்னதுல அப்படியே ஆடிப் போயிட்டேன்”

மூர்த்திக்கு அந்த சொத்துத் தகராறு விஷயம் தெரியும். போன வாரம்தான் போனில் அதைப் பற்றி விரிவாகப் பேசியிருந்தார்கள்.

“சரி, போய்ப் பார்க்கிறேன். இன்னும் எத்தனை நாள் இருப்பாராம்” என்று அவர் தங்கியிருக்கிற இடம், பார்க்கும் நேரம் எல்லாவற்றையும் கேட்டுக் குறித்துக் கொண்டார்.

மூர்த்திக்கு கேட்கவென்று இருக்கும் ஒரே விஷயம், மகள் கீதா. ஊரில் பொறியியல் படித்து முடித்தவளை அபுதாபிக்கு அழைத்து வந்து, ஒரு தனியார் கம்பெனியில் வேலையில் சேர்த்திருந்தார். இரண்டு வருடங்களாக வேலைக்குப் போய்க்கொண்டிருக்கிறாள்.

ஆபிசீலிருந்து திரும்பிய அவரைப் பார்த்தவுடன், யாரோடோ அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவள், குரலைச் சற்று தாழ்த்தி பேச ஆரம்பித்தாள். இயல்பாகவே அப்படி நடந்திருக்கும் என்று நினைத்துக்கொண்ட மூர்த்தி, உள் அறையில் இருந்த சுமதியை நோக்கிப் போனார். கண்ணன் சொன்ன விஷயங்களை எல்லாம் சொல்லி, “நாளைக்கு போய்ப் பார்க்கலாமா?” என்றார்.

“இன்னும் இதெல்லாம் விடலியா நீங்க? மாலதி மேட்டர்லாம் மறந்து போச்சா?”

சுமதி என்னவோ சாதாரணமாகத்தான் அதைச் சொன்னாள். மூர்த்திக்குத்தான் அதைக் கேட்டவுடன் இத்தனை வருஷங்கள் ஆன பின்னும் இன்னமும் அதையெல்லாம் ஞாபகம் வைத்திருப்பவளை பார்க்க முடியாமல், வேறு பக்கம் திரும்பி பழசையெல்லாம் யோசிக்க ஆரம்பித்தார்.

மாலதி மூர்த்திக்கு ஒரு வகையில் முறைப்பெண். உறவினர்கள் எல்லார் மத்தியிலும் அவர்கள் இருவரும் திருமணம் பண்ணிக் கொள்ளப் போகிறார்கள் என்ற அளவில் பேச்சுகள் அடிபட்டுக்கொண்டிருந்தது. அப்படியே தான் நடந்தும் இருக்கும்.

வேண்டுதல் என்று இருவர் குடும்பத்தாரும், அந்தச் சிதம்பரம் கோவில் பயணம் போகாமல் இருந்திருந்தால். வெறும் சுவாமி தரிசனத்தோடு திரும்பியிருந்தால் கூட எதுவும் நடந்திருக்காது.

கோயிலை ஒட்டியிருந்த ஒரு இடத்தில், நாடி ஜோசியம் பார்க்கலாம் என்று முதலில் அபிப்பிராயப் பட்டது மாலதிதான். மூர்த்தி இருந்த மனநிலையில் அவளுக்காக எதையும் செய்ய தயாராக இருந்தான்(ர்).

“இந்த இரண்டு பேருக்கும் மணவாழ்க்கை பொருந்தி வராது. வேறு வேறு நபருடன் என்றால் எந்தக் குறைவும் வராது”

நாடி இப்படி சொல்லும் என்று சற்றும் எதிர்பார்த்திராத மூர்த்தி, மாலதியின் முகத்தைப் பார்த்தார். அவளும் ஒன்றும் பெரிதாய் பாதிக்கப்பட்ட மாதிரி தெரியவில்லை.

வீடு திரும்பும் வரை மாலதியிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை. வழக்கம்போலத் தான் இருந்தாள்.

அதற்குப் பிறகு நடந்ததெல்லாம், இப்போது நடந்தது போல, ஒவ்வொன்றாக நினைவில் வந்து போனது. மாலதிக்கு வேறு இடத்தில் அவசரம் அவசரமாக மாப்பிளை பார்த்து  திருமணம் முடிந்து அமெரிக்கா பறந்து போனது, மூர்த்தி கொஞ்ச நாட்கள் வாழ்க்கை வெறுத்துப்போய் திரிந்து கொண்டிருந்தது, பின் குடும்ப சூழ்நிலை நிர்பந்திக்க ஏஜென்ட் ஒருவனுக்கு பணம் கொடுத்து, அபுதாபி வந்தது, இரண்டு மூன்று வருடங்களில் சுமதியோடு நடந்த திருமணம், திருமண வயதை நெருங்கும் ஒரு மகளோடு தற்போதைய அபுதாபி வாசம் எல்லாம்.

மறுநாள் சாயந்திரம் “போலாமா” என்று கேட்ட மூர்த்தியிடம் “எனக்குத் தலை வலிக்கிறது, நீங்க போய்ட்டு வாங்க” என்றாள் சுமதி.

அவள் வந்திருக்கலாம் என்ற நினைப்போடு பழைய நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருந்த மூர்த்தியின் தோளில் விழுந்த கை, “போங்க” என்றது. எழுந்து உள்ளே போனார்.

அது ஓர் பூஜை அறை. மெல்லிய விளக்கொளி. நிறைய சுவாமி படங்கள் இருந்த மாடத்திற்குப் பக்கத்தில், தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தார் அவர்.

கைகளை குவித்து “வணக்கம்” என்றபடி எதிரில் அமர்ந்தார் மூர்த்தி. கைகளை நீட்ட வேண்டுமா அவர் பார்க்க என்று நினைத்துக் கொண்டிருந்தவரிடம்,

“என்ன வீட்ல தலைவலின்னு சொல்லி வரலன்ட்டாங்களா” என்றார் அவர்.

மூர்த்தி நிலை தடுமாறிப் போனவராய், “ஆமாம்” என்றார். கேட்க வந்த விஷயம் நினைவுக்கு வராமல் மௌனமாய் இருந்தார்.

“நடக்க வேண்டிய கல்யாண காரியம் பத்தி எந்த கவலையும் வேண்டாம். எல்லாம் மனசு போல நடக்கும்” என்றது அவரின் அடுத்த வாக்கு.

அதற்கு மேல் கேட்க எதுவும் இல்லை மூர்த்தியிடம்.

மேல் பாக்கெட்டில் இருந்து கையில் வந்ததை, எதிரில் இருந்த தட்டில் வைத்து விட்டு, வெளியே வந்தார் மூர்த்தி.

– சொல்வனம் சிறுகதை சிறப்பிதழ் ஜூன் 2014.

செல்வராஜ் ஜெகதீசன் 1969 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். தற்சமயம் பணிநிமித்தம் (மின்பொறியாளர்) அபுதாபியில் (ஐக்கிய அரபு குடியரசு) வசித்து வருகிறார். இதுவரை வெளியாகி உள்ள நூல்கள்: "அந்தரங்கம்" (2008), அகரம் வெளியீடு "இன்னபிறவும்" (2009), அகரம் வெளியீடு “ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்” (2010), அகநாழிகை வெளியீடு நான்காவது சிங்கம் (2012), காலச்சுவடு வெளியீடு ‘கவிதையின் கால்தடங்கள்’ - 50 கவிஞர்களின் 400 கவிதைகள் (தொகுப்பு : செல்வராஜ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *