வாகனம் பூக்கும் சாலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 18,496 
 

முரளியை உங்களுக்கு எப்படி அறிமுகப்படுத்துவது என்ற குழப்பத்தில் இருக்கிறேன். அவனே அப்படி குழப்பமானவன்தான். அவன் தற்போது மாறியுள்ள இஸ்லாமிய பள்ளிக்கூடத் தெரு கடைக்குப் போனால் உங்களுக்குத் தெரியும். உங்கள் இரு சக்கர வாகனங்களைப் பழுது பார்க்கும்படி அவனிடம் உருட்டிச் செல்லும்போது முரளியை அப்படியான தருணங்களில் நீங்கள் பார்த்திருக்கக்கூடும்.

சில நேரங்களில் உங்களுக்குப் பெருத்த வரவேற்பு இருக்கும். சில சமயங்களிலோ கண்டுகொள்ளாமல் வேலையில் மூழ்கி இருப்பான். மிகப் பழைய வண்டிகளையும் புதுப் பிறவி எடுக்கச் செய்வதில் முரளி பிரம்மன் என்பது அவன் வாடிக்கையாளர்களுக்குத் தெரியும். எதைச் சொல்லி அவனை அறிமுகப்படுத்துவது என்று தெரியவில்லைதான். என்றாலும் சிலவற்றைச் சொல்ல முடியும்.

முரளிக்கு இப்போது வயது 25. கருகருஎன்று மீசை முடிகள் வளர்கின்றன. இளம் வயது முதலே இயந்திரங்களோடு மல்லுக் கட்டியதில் அவன் உடலும் இயந்திரம் போலவே வார்ப்படமாகியிருக்கிறது. நெடுநெடுவென்ற உயரம். நல்ல சிவப்பு. புல்லட், ராஜ்தூத், யமஹா ஆகியவற்றைஎல்லாம் மூச்சிரைக்காமல் தள்ளிவிடுவான். எந்த வண்டியில் அவன் போனாலும் அவனுக்காகவேதயாரிக் கப்பட்டது போல இருக்கும்.

சிறு வயதில் முரளி ஒழுங்காகத்தான் பள்ளிக்கூடம் போய்க்கொண்டு இருந்தான். அருங்காட்சியகத்தில் வைக்கும் அளவுக்குப் பழமையான ஒரு கிழவனால் அவன் பள்ளிக்கூடப் பை கூடத்து மூலைக்குப் போனது. முரளியின் அப்பாவுக்குத் தூரத்துச் சொந்தமான அந்த கிழவன் மாதத்துக்கு ஒருமுறையாகிலும் தொலைவிலிருக்கிற தன் கிராமத்திலிருந்து நடந்தே வந்துவிடுவான். அவன் வீடுவந்து சேரும்போது அவன் கால்களில் தெரு மண் புழுதி படிந்து தோல் சுருக்கங்களுக்கு ஏற்ப வெடிப்புற்றிருக்கும்.

‘தாத்தைய்யா’ என்றபடி முரளி அவனிடம் போய் ஒட்டிக்கொள்வான்.

”டேய் சாமி, என்னா படிக்கிற?”

”அஞ்சாப்பு.”

” ‘க’னா மேல புள்ளிவெச்சா க்கன்னா. ‘ச’னா மேல புள்ளி வெச்சா ச்சன்னா. ‘அ’னா மேல புள்ளி வெச்சா என்னா?”

”ஐயோ, தாத்தைய்யா நீ மக்கு! ‘அ’னா மேல புள்ளி வராது.”

கிழவன் ஒரு நாள் மாலை திண்ணையில்இருந்த போது முரளியின் கையை இழுத்து ரேகைகளைப்பார்த்து விட்டுச் சொன்னான்.

”டேய் தனகோட்டி! இவன் கல்வி ரேக தடமா இல்லேடா. படிப்பு ஏறாது. இன்னும் என்னா படிக்கப்போட்டுனு? பேசாம எதுனா ஒரு கைத்தொழில்ல கூட்டினு போயி உட்டுரு.”

அதற்குப் பிறகு அப்பன் அதிக நாட்களை எடுத்துக்கொள்ளவில்லை. முரளி ஒரு மெக்கானிக் கடையில் சேர்க்கப்பட்டான். இரு சக்கர வாகனங்களைப்பற்றி அறிமுகமே இல்லாத ஒருவரால் இவ்விதமாக முரளி இருசக்கர மெக்கானிக் ஆனான்.

கிழவனின் தலையைத் திருகும் கோபத்துடன் நட்டு, போல்டுகளைத் திருகிக்கொண்டும் வண்டிகளைத் துடைத்துக்கொண்டும் இருந்த காலங்களில், முரளி சினிமாவுக்குப் போகக் கற்றுக்கொண்டான். தேநீர் குடிக்கப் பழகினான்; ஊர் சுற்றினான். வண்டிகள் பன்ச்சரானால், எங்கிருந்தாலும் போய் சக்கரத்தைக் கழற்றி எடுத்து வர வேண்டும். மூச்சு வாங்க வாங்க வண்டியுடன் போராடி எடுத்து வந்தால், ‘இவ்ளோ நேரம் எங்க புடுங்கினு இருந்த’ என்று முதலாளி அடிப்பான். ஸ்பேனரோ, திருப்புளியோ பறந்து வந்து தாக்கும். முடிந்தால் அவற்றை கேட்ச் பிடிக்க வேண்டும். இல்லையெனில் தலையை ஒதுக்க வேண்டும். அடிபட்டால் வாய்விட்டு அழாதபடி பழக வேண்டும்.

தேநீர் வாங்கி வரப் போன தொடக்கக் காலங்களில் அதன் பழுப்பு நிறம் குமட்டலைத் தந்தது. மழைக் கால வெள்ள நீரின் நினைவைப் பெருக்கியது. மெள்ள அதை ரசித்து ருசித்து குடிக்கப் பழகினான். மெக்கானிக் கடைக்கு அருகில் ஒரு திரைப்படக் கொட்டகை உண்டு. தாஜ் திரையரங்கம். வீட்டிலிருந்து காலையில் வரும்போது அந்த வழியாகத்தான் வர வேண்டும். வரும்போதே என்ன படம் என்று பார்த்துக்கொள்வான் முரளி. முதலாளி பக்கத்து நகரங்களுக்குப் போய்விட்டால் கொண்டாட்டம்தான். ஒரு நாள் அப்படித்தான் பகல் காட்சியில், திரைக்கு வெகு அருகில் மணல் குவித்து அமர்ந்தபடி, ‘அவன்தான் மனிதன்’ பார்த்துக்கொண்டு இருந்தபோது முதுகில் உதை விழுந்தது. படத்தில் சண்டை போட்டால் நமக்கு அடி விழுகிறதே என்று நினைத்தான் முரளி. திரும்பிப் பார்த்தால் முதலாளி. எழுந்து ஓடினான்.

”தா… மகனே. கடையப் பாத்துக்குடான்னா, இங்க வந்து ஒக்காந்துனு கீறியா? குண்டி கிழிக்கிறேன் வா.” அன்று வாங்கிய உதைகளும் சொற்களும் மனதில் தேங்கி நீண்ட நாளாக வலியாய்க் கசிந்தன.

முதலாளியிடமிருந்து பிரிந்து தனியாகக் கடை வைக்க முடிவு செய்தபோது, கடைக்கு முன்னால் இரண்டு பழைய வண்டிகளை வாங்கி நிறுத்த விரும்பினான் முரளி. பங்களா மேட்டில் இருக்கும் ஒரு சேவை நிறுவனத்தில் வேலை செய்த பெரியவர் நினைவுக்கு வந்தார். அவரிடம் செந்நிறக் கட்டெறும்பு போல ஓடாமல் இருந்த ஒரு பழைய லூனா வண்டியை முரளி பார்த்திருக்கிறான். போய் விலை பேசியபோது புது வண்டி விலையைச் சொன்னார் அவர். அந்த வண்டி இன்னும் ஓடுகின்ற நிலையில்தான் இருக்கிறது என்றது அவனுக்கு வியப்பாக இருந்தது. அலுவலகத்தின் உயர்ந்த படிகளுக்கு நடுவில் இருந்த சாய் தளத்தில் அந்த வண்டியை வேகமாகத் தள்ளிக்கொண்டு இறங்கி நிறுத்தினான். அதன் மீது ஏறி உட்கார்ந்து உதைத்ததும் பின்னோக்கி ஓடத் தொடங்கியது அது. முரளி சுதாரித்துக்கொண்டு கீழிறங்கி, விநோதமாக அந்த வண்டியைப் பார்த்தான். அம்மா சொன்ன கதைகளில் பின்னோக்கி ஓடும் கட்டைக் குதிரையைப் பற்றிக் கேட்டதாக ஞாபகம் இருக்கிறது. இப்போது நிஜத்திலேயே அப்படியரு வண்டியைப் பார்த்தபோது ஆச்சர்யம் தாளவில்லை. அதைப் புதிய வண்டி போல ஆக்கி, தன் கடை எதிரில் நிறுத்திவிட்டான் முரளி. அன்றிலிருந்தே வண்டிகளின் மீதான விநோத ஈர்ப்பும், பித்தும் பிடித்துக்கொண்டது அவனை.

அரைகுறை விலைக்கு வந்த வண்டிகளை வாங்கி இணுக்கு இணுக்காகக் கழற்றி மாற்றினான். விருப்பம் போல வண்டிகளின் உருவத்தை மாற்றி ஓட்டினான்.பெட்ரோலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயைப் போட்டு ஓட்டி, சில நேரங்களில் கரும்புகையால் நகரத்தையே மூழ்கடித்தான். சைலன்சர் இல்லாத வண்டியின் பேரொலியால் நகரம் அதிர்ந்தது. ஒற்றைச் சக்கரத்தோடு ஒரு வண்டியை வடிவமைத்து அவன் ஓட்டியதும், பன்ச்சர் ஆன வண்டியின் சக்கர அச்சில் இன்னொரு சிறு சக்கரத்தைப் பொறுத்தி ஓட்டியதும் அப்படித்தான் நடந்தது.

வண்டி சம்பந்தமாகப் போய்தான் சீதா லட்சுமியைப் பார்த்தான் முரளி. ஊரில் திருவிழா களைகட்டியிருந்தது. எல்லார் வீடுகளும் உறவினர்களால் நிரம்பி வழிந்தன. திருவிழாவுக்கே உரித்தான இளம் மஞ்சள் வெயில் கிராமத்தை எப்போதும் சூழ்ந்திருந்தது. எல்லா தெருக்களையும் சாணத்தால் மெழுகியிருந்தார்கள் பெண்கள். தாவரத் தோரணங்கள் ஆடின. அம்மன் கோயில் ரேடியோவில் நடுவாந்தரத்துப் பாடல்களால் மயக்கிக் கொண்டு இருந்தார்கள். கடைக்கு விடுமுறை விட்டு விட்டு, எட்டு மணி வரை தூங்கிக்கொண்டிருந்தான் முரளி. அம்மாதான் எழுப்பினார்.

”டேய் முரளி! நம்ம கோல்காரர் வீட்டு வண்டி ஏதோ ரிப்பேராம்டா. கொஞ்சம் போயி என்னான்னு பாரேன். நாளுங்கெழமையுமா எங்காவது போவாங்க.” சோம்பலுடன் எழுந்து முகம் கழுவிக்கொண்டு வந்திருந்த ஆளுடன் போனான். அந்த வீடு மனிதர்களால் நிரம்பி வழிந்தது. பழுது பார்த்துக்கொண்டு இருந்தபோது முதுகில் குறுகுறுவென ஒரு பார்வை சீண்டுவதை உணர்ந்தான் முரளி. சட்டெனத் திரும்பியபோது மேல் வாசல் திண்ணையில் நின்றபடி இவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள் சீதாலட்சுமி.

கோல்காரர் வீட்டில் அப்படி ஒரு பெண்ணில்லை என்பது அவனுக்குத் தெரியும். துறுதுறுவென தேன்சிட்டு போல இருந்தாள் அவள். இந்தப் பக்கத்தில் அப்படி ஒரு அழகை அவன் பார்த்ததில்லை. திருவிழாவுக்கு வந்திருக்கிறாள் போல. மனம் கணக்குப் போட்டது. மாலையில் அவள் பின்னாலேயே சுற்றினான். திருவிழாவில் உறவுக்காரப் பெண்களோடு சுற்றினாள் சீதாலட்சுமி. அவனைப் பார்க்க நேர்ந்த தருணங்கள் கனிந்து புன்னகைக்கும்படி ஆகியிருந்தது. முரளிக்கு இருப்புக்கொள்ளவில்லை. பெட்டி ராட்டினத்தின் உச்சியில் ஏறிக் குதிக்க விரும்பினான். மாரியம்மன் கோயில் பின்னிருக்கும் வாழைத்தோப்பு ஊடாக கரம்புக்குத் தனியாக ஓடி ஏகாந்தமாகத் தன்போக்குக்கு குதித்துச் சிரித்தான். திருவிழா முடிந்தாலும் விழா களத்திலேயே சில நாட்கள் தங்கியிருந்து மகிழ்வித்துப்போகும் ராட்டினக்காரர்களைப் போல சீதாலட்சுமி அவன் மனதில் சுற்றினாள். அவளைப் பற்றி எப்படி எப்படியோ விசாரித்து அறிந்துகொண்டான் முரளி. அவள் தமிழ்ப் பெண்ணல்ல. ஆந்திரா. ஊர் வழியாகவே மலையை ஏறிக் கடக்கும் சாலையில் வெங்கட்டகிரி கோட்டை வரைக்கும் போய், அங்கிருந்து மேற்காகப் பயணப்பட வேண்டும். கம்ம கிருஷ்ணப்பள்ளிதான் அவளின் ஊர் என்றார்கள். இரண்டு வாரம் கடந்தது. பொறுக்க முடியாத அவஸ்தையில் தன் சிநேகிதன் ஒருவனுடன் இரு சக்கர வாகனத்தில் நெடுந்தூரம் பயணப்பட்டான் முரளி. புதிய மனிதர்களையும், முகத்தில் அறையும் காற்றையும், மிரட்சியூட்டும் நிலப்பரப்பையும் கடந்து வெகுதூரம் போனார்கள். பல நூறு மைல்கள் இருக்குமென நினைத்தான் முரளி. வறண்ட முகத்துடனும் கலைந்த முடியுடனும் கம்ம கிருஷ்ணப்பள்ளியில் நுழைந்தபோது, ஊரே சூழ்ந்துகொண்டது. அப்படியரு விநோத இரு சக்கர வாகனத்துடன் அந்தக் கிராமத்தில் முதன் முதலாக நுழைந்தது அவர்களாகத்தான் இருக்கும். தன் நண்பனின் வண்டி திருடு போனது என்றும், அதை இந்தப் பக்கமாகத்தான் திருடர்கள் கொண்டுவந்திருப்பார்கள் என்றும், அதைத் தேடி வந்தவர்கள்தான் நாங்கள் என்றும் முரளி அவர்களிடம் சொன்னான். அவர்கள் தமிழ்நாடு என்று அறிந்ததும், சீதாலட்சுமியின் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். மிரட்சியோடும், நம்ப முடியாத வியப்போடும் அவனைப் பார்த்தாள் சீதாலட்சுமி. அவளுக்குக் கண்கள் கலங்கிஇருந்தன. அடக்க முடியாத சிரிப்பு வந்தது. அவளும் அவளின் அம்மாவும் ஊர் பற்றியும் உறவினர்கள் பற்றியும் பிரியமுடன் விசாரித்தனர். ஊருக்குத் திரும்பியதும் அவளைப் பெண் பார்த்து வரும்படி தன் அம்மாவை அனுப்பிவைத்தான் முரளி.

இஸ்லாமியப் பள்ளிக்கூடம் இருக்கும் தெருவுக்குக் கடையை மாற்றிக்கொண்டு வந்ததிலிருந்து நாட்களை வேறு மாதிரியாக உணர்கிறான் முரளி. நெடுஞ்சாலையில் மணிக்கூண்டு மசூதிக்கு அருகில்தான் முதலில் கடை இருந்தது. திருமணம் ஆகி, ஒரு குழந்தை பிறக்கும் வரை அந்தக் கடையை மாற்றவில்லை அவன். ராசியான இடம் என்பது அவன் நினைப்பு. கடைக்கு நேரெதிரிலேயே தொழிலாளர் நல மருத்துவமனை. பக்கத்து சந்தில் மசூதியும் கூட்டுறவு வங்கியும். அருகிலேயே நான்கு வழி பிரியும் சாலை. ஒரு மெக்கானிக்குக்கு இதைவிடவும் சிறந்த இடம் வேறில்லை. அவனுக்கு அரிதாகத் தோன்றும் கற்பனையன்றில் மரம்போல நடப்பட்ட சாலை நன்கு கிளை விரித்து வாகனங்களைப் பூத்தி ருக்கும். அது கனவாகக்கூட வந்திருக்கிறது. கடையில் இருக்கும்போது திடீரென்று யோசனை வந்தவனாகச் சொல்வான்,

”இந்த வண்டியைப் பார்றா ராஜி. ஏதோ விசித்திரமான பூச்சிபோலத் தெரியில? ஒத்தக் கண்ணு லைட்டு. ஹேண்டில் மீசைங்க. வட்ட வட்டமா காலுங்க…”

”அடச்சே! என்ன முரளிண்ணா! இப்படிப் பேசற? நீ ஏண்ணா படிக்கப் போகல?”

”அட! அத வுடுடா.”

ஒரு ஏக்கப் பெருமூச்சுடன் உரையாடலை நிறுத்தி, குனிந்து ஒரு நட்டை இறுக்குவான். கடை சொந்தக் காரன் அந்த இடத்தில் அடுக்ககம் கட்டுவதாகச் சொல்லிக் கிளப்பியதில், மாற்றிக்கொண்டு வர வேண்டியதாகப் போனது. பேருந்து நிலையம், நெடுஞ்சாலையின் இருபுறங்கள், என இங்கெல்லாம் கடை பிடிக்க வேண்டும் என்றால், பகடி லட்சங்களில் போகிறது. ரொம்பவும் உள்ளே போய்விடவும் கூடாது. அலையோ அலையென அலைந்து இந்தக் கடை கிடைத்தது.

”மனச விடாம அங்க தொடங்குங்க. நம்ம குட்டி பொறந்த நேரம். அந்தக் கடை நமக்கு ராசியாயிடும் பாத்துக்குங்க” என்றாள் சீதா லட்சுமி. அப்படியே வந்தாயிற்று. கடை திறந்த இரண்டு நாட்களுக்கு மரமரவென்றிருந்தது. பழைய கடையில் வேடிக்கைக்குப் பஞ்சமிருக்காது. சாலையில் வாகனப் போக்குவரத்து நேரத்தைப் பரபரபாக்கிவிடும். இவற்றின் கீழ் சிக்கி சோர்வு நசுங்கும். இங்கு அப்படி எதுவும் இல்லை. நகரத்தில் இத்தனை அமைதியா என்று தோன்றியது.

கடைப் பையன் ராஜீவுக்கு முரளியின் அண்மைக்காலப் போக்கு விநோதமாகத் தோன்றியது. கடைக்கு எதிரிலேயே பிரமாண்டமாக எழுந்து நிற்கும் பழமையான பள்ளிக்கூடம். தெரு நெடுஞ்சாலையைத் தொடும் இடத்திலிருந்து தொடங்கி நீளும் அரண்மனை போன்ற வீடு. பெரிய மதில் சுவர்களைக்கொண்ட விஸ்தாரமான வீடுகள். அங்கிருந்தபடியே சாலையில் போய்க்கொண்டு இருக்கும் மனிதர்களை எட்டிப் பார்க்கும் மரங்கள். முரளி பள்ளியின் வளாகத்தில் இருக்கும் மரங்களையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்துவிடுகிறான். அலை அலையாக அங்குள்ள வகுப்பறைகளிலிருந்து கிளம்பி வரும் வாசிப்பு சத்தங்களைக் கூர்மையாகச் செவிமடுக்கிறான். பள்ளிக்குள்ளிருக்கும் பூவரசுகளும், தென்னையும், வேம்பும் அச் சத்தத்துக்குத் தலையாட்டுகின்றன என நினைத்துக்கொள்கிறான். இல்லையெனில், எழுந்து தெரு முனை வரை நடந்து வருகிறான். அரண்மனை வீட்டின் முன்பாகவே நீண்ட நேரத்துக்குச் சில சமயங்களில் நின்றும் விடுகிறான். முரளி மௌனச் சாமியாரைப்போல பள்ளி வளாகத்தைப் பார்த்துக்கொண்டு நின்றுவிடுவதும், உட்கார்ந்திருப்பதும்தான் கடைப் பையன் ராஜீவுக்குக் கவலை அளிப்பதாக இருந்தது.

கடைக்குப் புதுசாகச் சில சாமான்களை வாங்கிப் போடவேண்டியிருந்தது. சீதாலட்சுமியிடம் கேட்டு ஒரு நகையை வாங்கி வந்திருந்தான் முரளி. ராஜீவைப் பெரிய மனிதனாக நினைத்து எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டு இருப்பான் முரளி. அன்று, அந்த நகையை வைக்கப்போவதாக மெத்தனமாகக் கடந்து கொண்டு இருந்த மத்தியானத்தில் பேசிக்கொண்டு இருந்தபோது, ஒரு பெரியவர் தன் மகனுடன் கடைக்கு வந்து சேர்ந்தார். அவர்களைப் பார்த்ததும் உற்சாகமாகி,

”என்னா பெரியவரே?”

”இந்தப் பையனை வேலைக்கு விட்டுட்டுப் போலாம்னு வந்தம்பா.”

முரளிக்குப் பேச்சு தடைபட்டது. அந்தச் சிறுவனை ஆழ்ந்து பார்த்தான். ”படிக்கப் போடறதுதானே. இவன வேலைக்கு வெச்சிக்கினா நான் கம்பி எண்ண ணும் தெரியுமா?”

”எல்லாந் தெரியுது தம்பி. என்னா செய்யறது. எல்லாமே அவங்க சொல்ற மாதிரியா நடக்குது. இவனுக்குப் படிப்பு ஏறாது. கல்வி தெச இல்லன்னு கையைப் பாக்குறவங்க எல்லாம் சொல்றாங்க. இப்பவே வேலையில வுட்டா தத்திமுத்தி பொளச்சுக்குவான்.”

முரளிக்கு விலுக்கென்று எதுவோ உதைத்ததுபோலத் தோன்றியது.

”பள்ளிக்கூடத்துல கூட்டினுபோயி சேக்கச் சொல்லி எல்லாம் கேட்டந் தம்பி. ஆயிரம் கொடு, ஐந்நூறு குடுன்னு கேக்கறாங்க. பத்தாத்துக்கு இவனுக்கு துணி, நோட்டுனு ஆகுமில்ல. நா எங்க போவேன்.”

ஊர் விவரங்களைக் கேட்டுக்கொண்ட பின், ”சரி விட்டுட்டுப் போ” என்றான் முரளி. முதுகை காட்டி போய்க்கொண்டு இருக்கும் அப்பனை மிரட்சியுடன் பார்த்துக்கொண்டு இருந்தான் சிறுவன். பரிவுடன் அவனை உட்காரவைத்துவிட்டு பெயரைக் கேட்டான் முரளி. சிறுவன் பயந்து சுணங்கியபடி ‘முரளி’ என்றான். முரளியால் எதையும் உறுதியாக நம்ப முடியவில்லை. தன்னிடமே வேலை கேட்டு வந்திருக்கும் தன் சிறு பருவத்தை என்ன செய்வதென்று தெரியவில்லை.

”அட! இவுனுக்கும்கூட உம் பேருதான்னா. அப்போ இவன நான் எப்படிக் கூப்பிடறது?”

பெருஞ் சிரிப்புக்கு இடையில் ராஜீவின் முகம் நீர் சுரக்கும் கண்களில் புகைச் சுருள் போல எழும்பி எழும்பி அமிழ்கிறது. முரளி நிலை கொள்ளாதவனாக எழுந்து இப்படியும் அப்படியுமாகத் திரிந்துவிட்டு, கடையைவிட்டுக் கீழிறங்கினான்.

”டேய் ராஜு! கடையைப் பாத்துக்க. மார்வாடி கடைவரைக்கும் போயிட்டு வந்துடறேன். சாப்பிட ஏதாவது கேட்டான்னா, அந்தத் தம்பிக்கு வாங்கிக் குடு.”

மறு நாள் கடைக்கு வந்ததும் வராததுமாக, சிறுவனைத் தேடினான் முரளி. கடையின் மூலையில் நின்றிருக்கும் வண்டியைத் துடைத்துக்கொண்டு இருந்தான் சிறுவன். ராஜீவிடம் கடையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, சிறுவனைக் கூட்டிக்கொண்டு எதிரிலிருந்த பள்ளிக்கூடத்துக்குள் போனான் முரளி. தலைமையாசிரியரின் அறை முன்னால் கொஞ்சநேரம் நின்றுகொண்டு இருந்தான். அவர் வெளியே வந்ததும் பணிவுடன் வணக்கம் சொன்னான் முரளி.

”என்ன முரளி, எங்க இந்தப் பக்கம்? வண்டிகூட எதுவும் ரிப்பேர் இல்லையே?”

”இல்ல சார். இந்தத் தம்பிய இங்க சேக்கணும்.”

தலைமையாசிரியர், முரளியையும் சிறுவனையும் ஆர்வத்துடன் பார்த்தார். முரளியின் முகத்தில் அழுகையின் உணர்வு பெருக்கெடுத்தது!

– 08th அக்டோபர் 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *