வானொலியில் வாகனப் போக்கு சரியாக உள்ளது என்றே அறிவித்தனர். அலுவலகம் செல்லத் தாமதமாகி விட்டது. வேகப் பாதையில் இறங்கலாமா, அல்லது சாதாரணச் சாலையிலேயே போகலாமா என்று யோசித்தபடி, ஒரு முடிவுக்கு வராமலேயே நெடுஞ்சாலையில் இறங்கினேன். அதிர்ஷ்டம் இருந்தால் இருபது நிமிடங்களில் சென்றடைந்து விடலாம்.
இணைபாதையில் நுழைந்து விசையை அதிகமாக்கினேன். என் எண்ணங்கள் அதனையும் விட அதிவேகமாக முன்னேறிச் சென்றன. “என்னை மீறும் எண்ணங்களே…” எங்கேயோ கேட்ட அழுத்தமான வரி இது!
நேற்றிரவின் சம்பவங்கள். சூடு பறந்த சூழ்நிலை. விவாதங்கள், சண்டை! இப்படித் தனியாக வண்டி ஓட்டிக்கொண்டு போகும்போது மட்டுமே நிம்மதி. எந்தக் கடமையில் தவறினேன்? உத்தியோகமும், நேரம் தவறாமல் உணவு பரிமாறுவதும், வீட்டைச் சுத்தம் செய்வதும், தோட்டத்தைக் கவனிப்பதும், குழந்தைகளின் பள்ளி வேலைகளில் உதவுவதும், கடைகளுக்குப் போவதும், வருவதும். இப்படியாக இயந்திரச் சுழற்சி! எதில் குறை வைத்தேன்?
சுவர்க் கடிகாரமாவது ஒரு நொடிக்கும் அடுத்த நொடிக்கும் நடுவில் மூச்சு விடும் போலிருக்கிறது! என் நடை நிற்பதே இல்லையே! இருந்தும் குறைகளா? நேற்று வேலன்டைன் தினம். ஒரே ஒரு மலர் கொடுத்து முகம்பூக்க மனமில்லையே. பொழுதில்லையே இவருக்கு!
கல்யாணம் என்றதும் காதல் தொலைவது தான் எங்கே?
“மல்லிகா – இந்தப் பெயருக்காகவே உன்னை அடுத்த பிறவியிலும் விரும்புவேன்” என்பார்.
நெஞ்சினித்த நினைவுகள் வெயிலிடுக்கில் நிழலாடின…
“ஏன் மல்லிகா, உனக்கு மல்லிப்பூ பிடிக்குமா?”
“ரொம்பப் பிடிக்கும். வேறு மலர்களை நான் சூடுவதே இல்லை.”
“ம்ம்ம்… கவனித்தேன்…”
எனக்கும் மல்லிகை ரொம்பப் பிடிக்கும். அதன் தூய்மையான நிறம், கிறங்கடிக்கும் வாசம், செண்டுச் செண்டாய் மாதரின் கூந்தலில் அமர்ந்து கொண்டு காளைகளைச் செயலிழக்கச் செய்வதல்லவா இந்த மல்லிகை.
அம்மாடியோ… மல்லிகைப்பூவுக்கு முதல் ரசிகரா நீங்கள்?
“எங்கள் தெருவில் வரும் பூக்காரத் தாத்தா அதனை முழம் போடுவதே தனி அழகு. என்றாவது ஒரு நாள் ‘இன்னைக்கு மல்லி கிடைக்கல பாப்பா, முல்லை தரவா?’ என்பார். வேண்டாம் என்று சொல்லி விடுவேன்.”
“அப்படியா பாப்பா, உனக்கு எத்தனை முழம் வேண்டும் பாப்பா, என் கையளவு போடவா, உன் கையளவு முழம் போடவா?” அவள் கன்னம் சிலிர்ப்பில் சிவந்தது.
“மல்லி என்றால் எனக்கு உயிர் மல்லிகா.” மனதில் இருந்ததைச் சொல்லிவிட்டான்.
“அப்படியா! என்றால் எனக்கு முழுசா வேண்டும், கூடையோட.” மனம் திறந்து அவளும் கேட்டுவிட்டாள்.
“சரி, தர்றேன், அதை வைத்துக்கொண்டு என்ன செய்வாய்?”
“என் இதய மஞ்சத்தில் பரப்பி, ஆயுள் முழுக்க உருண்டு புரளுவேன்.”
“தனியாகவா…?” கண் சிமிட்டினான்.
“அதுதான் மல்லிகையைப் பரப்பின்னு சொன்னேனே.” அவள் மட்டும் சளைத் தவளா?
கவலையிலும் இனிய நினைவுகளில் தன்னை மறந்து சிரித்தாள்.
என்ன ஆயிற்று இவருக்கு? என் பெயருக்கே உயிர் விட்டவர். இன்று இத்தனை மரத்துப் போனது ஏன்? கடவுள் புண்ணியத்தில் எதற்கும் குறைவில்லை. இருவருக்கும் நல்ல வேலை. அழகான குழந்தைகள். வீடு, வாகனம். எதிலும் ஆண்டவன் குறை வைக்கவ்¢ல்லை.
நேற்று நடந்தது புதிதல்ல. வேலைப் பளுவில், அழுத்தத்தில் வீசும் அனல் வார்த்தைகள்தாம். ஆனாலும், இப்போ தெல்லாம் மனது ரொம்பவும் அங்கலாய்க் கிறது. இனிமையான பொழுதுகள் இல்லாமலே போய்விட்டன. நேரமின்மை! ஓட்டம் ஓட்டம், அப்படி ஓர் ஓட்டம்.
ஒருவருக்கொருவர் அன்பாகப் பேசி. ஒருவரின் நலனில் அடுத்தவர் கவனம் செலுத்தி, விரல்கள் கோர்த்து, கூந்தல் கோதிவிட்டு… எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன! இந்த தினச் சுழற்சிகளில் வாழ்க்கையின் இனிமைகள் கீழே கீழே எங்கோ புதைந்து போய்விட்டன.
இதென்ன… எங்கே வந்துவிட்டேன், நினைவுகளில் இருந்து மீண்டு சுற்றும் முற்றும் பார்க்கிறேன்.
வெளிப்படுபாதை (எக்ஸிட்) பெயர் ஒன்றுகூடப் பரிச்சயமானதாகத் தெரியவில்லை. சுற்றும் இடிந்த கட்டிடங்களும், குறுகிய சந்துகளுமாக இருந்தது. சரிதான், எடுக்க வேண்டிய வெளிப்படுபாதை எண்ணைத் தவற விட்டுவிட்டேன் போலும். நகர மையத்தின் (டெளன் டவுன்) அருகே வந்து விட்டேன் போலும்.
மேலும் போனால் தொலைந்தேன். அடுத்த வெளிப்பாதையில் வண்டியைச் செலுத்தினேன். ஒன்றும் விளங்கவில்லை. ஆங்காங்கே புகைபிடித்தபடி அமர்ந்திருந்த ஆண்களைப் பார்க்கவே பயமாக இருந்தது. யாரிடம் வழி கேட்பது?
செய்வதறியாது மீண்டும் எதிர்ப்புறமாகத் திரும்பி வேகப் பாதையில் இணைய வேண்டியதுதான்.
சரியாகப் போவது போலத் தோன்றினாலும், மீண்டும் மீண்டும் துவங்கிய இடத்திலேயே வந்து நின்றது வண்டி.
செய்வதறியாது, செய்வதறியாது, பாழடைந்த மசூதி போன்றதொரு கட்டிடத்தின் தரிப்பிடத்தில் (பார்க்கிங்கில்) நின்றேன். செல்பேசியை எடுத்துப் பார்த்தால் அது செயலிழந்து கிடந்தது.
மெல்ல இன்னொரு கார் வந்து பக்கத்தில் நின்றது. யாரோ என்னவோ என்ற நடுக்கம். துப்பாக்கியைக் காண்பித்துக் காரிலிருந்து இறங்கு என்றால் என்ன செய்வது?
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கண்ணாடி வழியே பார்த்தேன். ஒரு நடுவயது கறுப்பு இனப் பெண். என்னைக் கண்டதும் சிரித்தாள். சரி, வழி கேட்கலாம் என்று கண்ணாடியை இறக்கி,
“ஹாய், எப்படி வேகப் பாதையில் இறங்குவது” என்று ஆங்கிலத்தில் கேட்டேன். “ஓ, நீயும் என் நிலையில் தானா! எனக்கும் வழி தெரியவில்லை, உன்னிடம் கேட்கலாம் என்றிருந்தேன்” என்றாள்.
“சரி, இருவருக்கும் வழி தெரியாது. இங்கே விசாரிக்கவும் யாருமில்லை. என்னைத் தொடர்ந்து வா… எங்கே போய்விடப் போகிறது பாதை? தேடிப் பிடிக்கலாம் வா” என்றாள்.
யோசித்தேன். “சரி கிளம்பு” என்றேன். சுற்றினோம், இங்கும் அங்குமாய், அதே தெருவை ஆறு முறை பிரகார வலம் வந்தோம். பிறகு வேறொரு சிறிய சந்துக்குள் நுழைந்தாள். பக்கக் கண்ணாடியில் நான் வருகிறேனா என்று அவ்வப்போது அக்கறையாகச் சரி பார்த்துக்கொண்டாள்.
திக்குத் தெரியாமல் நின்றிருந்த எனக்கு வழி காட்ட வந்திருக்கிறாளே… யாரிந்த தேவதை?!
தன் கதவின் கண்ணாடியைக் கீழே இறக்கி வேகமாக கையசைத்தாள். தெரிகிறது, அதோ தெரிகிறது வேகப் பாதை…. கண்டுபிடித்துவிட்டோம் என்று குதூகலித்தாள்.
தாயே.. நான் எங்கே கண்டுபிடித்தேன், நீதானே சுற்றிச் சுற்றி கண்டறிந்தாய். கண்ணாடியில் அவள் முகம் தெரிகிறது. சந்தோஷமாகச் சிரிக்கின்றாள். அந்தச் சந்தோஷம் வண்டியின் வேகத்தில் தெரிகின்றது.
முன்னேறிக்கொண்டே என்னைக் கண்காணிக்கின்றாள். இணைபாதையில் இறங்கி வண்டிகளை வேகமாகச் செலுத்துகிறோம். நான் எங்கே செல்ல வேண்டும் என்று சொன்னேனோ, அந்த பிரிவுப் பாதை வந்ததும் வேகமாகக் கையசைக்கிறாள். ‘அதுதான் நீ செல்லுமிடத்துக்கான வெளிப்பாதை, போ போ’ என்று தெரிவிக்கிறாள்.
பெயர்ப்பலகைகள் தெளிவாக இருக்கவே, நானும் அறிந்துகொண்டு சரியான சாலையில் இணைகிறேன். தூரத்தில் மறைந்துவிட்ட அந்தத் தேவதையின் வண்டி கண்களிலிருந்து விலகினாலும், அவளது முகம் விலகவில்லை. நேரமாகிவிட்டது, அலுவலகத்தில் ஏதாவது காரணம் சொல்ல வேண்டும்.
ஆனால், கவலைவிட்டது, மனம் இறகு போல லேசானது. யாரோ ஒருத்தி, வழியில் கிடைத்த தேவதை. எத்தனை அக்கறையாக வழி காட்டினாள். நானிருக்கிறேன், என்னை நம்பு, என்னைத் தொடர்ந்து வா என்றாளே!
சாலையில் இறக்கிவிட்டதோடு நில்லாமல், சரியான பிரிவுப்பாதையிலும் இணைகிறேனா என்று கவனமாகச் சேர்த்தாளே. யாரிவள், யாரிவள்? தைரியமாக அவளைப் பின்தொடர்ந்தேனே, எங்காவது குண்டர்கள் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றிருந்தால், நடக்காததா என்ன?
அய்யோ நினைத்துப் பார்க்கவே குடல் நடுங்கியது. ஆனாலும், அவளை நம்பினேனே. அவளுக்கு நன்றி செலுத்தினேனே.
யோசித்து ஆராய்ந்ததில் தெளிவு பிறந்தது. வழி மறந்து, எங்கோ திக்குத் தெரியாத இடத்தில் நின்று கொண்டு முகம் தெரியாத பெண்ணை நம்பினேனே. இவள் காப்பாற்றுவாள் என்று நம்பிக்கை கொண்டு, உறுதியாகப் பின்னால் சென்றேனே. ஆனால்..
என் துணை! என்னை நேசித்து என்னுடன் வாழ்க்கை முழுதும் கைகோர்த்து நடக்க வந்த துணை! அந்தத் துணையின் மீது நான் நம்பிக்கை கொள்ளாமல் இருப்பது சரியா? வழி தேடி அலைந்தபோது அந்தத் தேவதையின் முகத்திலும் கொஞ்சம் வருத்தம், கொஞ்சம் கடுகடுப்பு இருக்கத் தானே செய்தது. ஆயுள் முழுவதும் உடன் நடக்க வேண்டும், சரியாக வழி நடத்த வேண்டும் என்ற பெரிய பொறுப்பு என் அன்புத்துணைக்கும் இருக்கிறதே. இந்த தேவதையை நம்பிக்கையோடு பின்பற்றிய நான், என் தெய்வத்தையும் பின்பற்றினால் என்ன?
நீ முன்னே போ, நான் உன்னுடன் இருக்கிறேன் என்று அவள் சோர்ந்த போது தைரியமூட்டி, புன்னகை புரிந்தேனே. அதே கடமையை நான் என் அன்புத் துணைக்காகவும் செய்ய வேண்டாமா? வழி மாறிப் போகும்பொழுது ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை கொண்டு, தைரியமூட்டி, முன்னேறி நடைபோட வேண்டாமா?
பூக்கள் பரிமாறிக்கொள்வதில் மட்டும் இல்லை உண்மையான காதலர்தினம் என்பது புரிந்தது. தவறவிட்ட வழி மீண்டும் கிடைத்தது.
– பிப்ரவரி 2004